![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா ... தொடர்ச்சி - 2 ... 3. திருவிடைக்கழி
பண் - பஞ்சமம்
மாலுலா மனம்தந்(து) என்கையில் சங்கம் வவ்வினான் மலைமகள் மதலை மேலுலாந் தேவர் குலமுழு தாளும் குமரவேள் வள்ளிதன் மணாளன் சேலுலாங் கழனித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற வேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன் என்னும் என் மெல்லியள் இவளே. 1 இவளைவா ரிளமென் கொங்கையீர் பொங்க எழில் கவர்ந் தான்இளங் காளை கவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க் கனகக்குன் றெனவரும் கள்வன் திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற குவளைமா மலர்க்கண் நங்கையானைக்கும் குழகன்நல் அழகன்நங் கோவே. 2 கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள் சூழ்கோழிவெல் கொடியோன் காவல்நற் சேனையென் னக்காப் பவன்என் பொன்னை மேகலை கவர்வானே? தேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தூவிநற் பீலி மாமயில் ஊரும் சுப்பிர மண்ணியன் தானே. 3 தானமர் பொருது வானவர் சேனை மடியச்சூர் மார்பினைத் தடிந்தோன் மானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை மறைநிறை சட்டறம் வளரத் தேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கோனமர் கூத்தன் குலவிளங் களிறென் கொடிக்கிடர் பயப்பதுங் குணமே! 4 குணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை படுமிடர் குறிக்கொளா(து) அழகோ? மணமணி மறையோர் வானவர் வையம் உய்யமற்(று) அடியனேன் வாழத் திணமணி மாடத் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன் கணபதி பின்னிளங் கிளையே. 5 கிளையிளஞ் சேயக் கிரிதனைக் கீண்ட ஆண்டகை கேடில்வேற் செல்வன் வளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை கார்நிற மால்திரு மருகன் திளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற முளையிளங் களி(று)என் மொய்குழற் சிறுமிக்(கு) அருளுங்கொல் முருகவேள் பரிந்தே. 6 பரிந்தசெஞ் சுடரோ? பரிதியோ? மின்னோ? பவளத்தின் குழவியோ? பசும்பொன் சொரிந்தசிந் தூரமோ? தூமணித் திரளோ? சுந்தரத்(து) அரசிது என்னத் தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல் மையல்கொண்(டு) ஐயுறும் வகையே. 7 வகைமிகும் அசுரர் மாளவந்(து) உழிஞை வானமர் விளைத்ததா ளாளன் புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த பொன்மலை வில்லிதன் புதல்வன் திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்(கு)என் துடியிடை மடல்தொடங் கினளே. 8 தொடங்கினள் மடவென்(று) அணிமுடித் தொங்கல் புறஇதழ் ஆகிலும் அருளான் இடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன் மறத்தொழில் வார்த்தையும் உடையன் திடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற மடங்கலை மலரும் பன்னிரு நயனத்(து) அறுமுகத்(து) அமுதினை மருண்டே. 9 மருண்டுறை கோயில் மல்குநன் குன்றப் பொழில்வளர் மகிழ்திருப் பிடவூர் வெருண்டமான் விழியார்க்(கு) அருள்செயா விடுமே? விடலையே எவர்க்கும் மெய் அன்பர் தெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற குருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக் கண்ணுடைக் கோமளக் கொழுந்தே. 10 கொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத் தூய்மொழி அமரர்கோ மகனைச் செழுந்திரள் சோதிச் செப்புறைச் சேந்தன் வாய்ந்தசொல் இவைசுவா மியையே செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர்கெடும்; மாலுலா மனமே! 11 3. கருவூர்த் தேவர் அருளியது
1. கோயில்
பண் - புறநீர்மை
கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக் கறையணல் கட்செவிப் பகுவாய்ப் பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப் பாம்பணி பரமர்தம் கோயில் மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில் மழைதவழ் வளரிளம் கமுகம் திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. 1 இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும் ஏழையேற்(கு) என்னுடன் பிறந்த ஐவரும் பகையே யார்துணை என்றால் அஞ்சல்என் றருள்செய்வான் கோயில் கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக் கடைசியர் களைதரு நீலம் செய்வரம்(பு) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. 2 தாயின்நேர் இரங்கும் தலைவ!ஓ என்றும் தமியனேன் துணைவ!ஓ என்றும் நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம்புரி பரமர்தம் கோயில் வாயில்நேர் அரும்பு மணிமுருக்(கு) அலர வளரிளம் சோலைமாந் தளிர்செந் தீயின்நேர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. 3 துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத் தொடர்ந்(து)இரு டியர்கணம் துதிப்ப நந்திகை முழவம் முகிலென முழங்க நடம்புரி பரமர்தம் கோயில் அந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்த அரும்பெறல் மறைப்பொருள் மறையோர் சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. 4 கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என் களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து) என்னையும் புணர்ப்பவன் கோயில் பண்பல தெளிதென் பாடிநின் றாடப் பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில் செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. 5 நெஞ்சிடர் அகல அகம்புகுந்(து) ஒடுங்கும் நிலைமையோ(டு) இருள்கிழித்(து) எழுந்த வெஞ்சுடர் சுடர்வ போன்(று)ஒளி துளும்பும் விரிசடை அடிகள்தங் கோயில் அஞ்சுடர் புரிசை ஆழிசூழ் வட்டத்(து) அகம்படி மணிநிரை பரந்த செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. 6 பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப் புந்தியில் வந்தமால் விடையோன் தூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம் தோன்றநின் றவன்வளர் கோயில் நாத்திரள் மறையோர்ந்(து) ஓமகுண் டத்து நறுநெயால் மறையவர் வளர்த்த தீத்திரள் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. 7 சீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத் திசைகளோ(டு) அண்டங்கள் அனைத்தும் போர்த்ததம் பெருமை சிறுமைபுக்(கு) ஒடுங்கும் புணர்ப்படை அடிகள்தம் கோயில் ஆர்த்துவந்(து) அமரித்(து) அமரரும் பிறரும் அலைகடல் இடுதிரைப் புனிதத் தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. 8 பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும் பெரியதங் கருணையும் காட்டி அன்னைதேன் கலந்(து)இன் அமு(து)உகந்(து) அளித்தாங்(கு) அருள்புரி பரமர்தம் கோயில் புன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து பொறிவரி வண்டினம் பாடும் தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. 9 உம்பர்நா(டு) இம்பர் விளங்கியாங்(கு) எங்கும் ஒளிவளர் திருமணிச் சுடர்கான்(று) எம்பிரான் நடஞ்செய் சூழல்அங் கெல்லாம் இருட் பிழம்(பு) அறஎறி கோயில் வம்புலாம் கோயில் கோபுரம் கூடம் வளர்நிலை மாடமா ளிகைகள் செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. 10 இருந்திரைத் தரளப் பரவைசூழ் அகலத்(து) எண்ணிலங் கண்ணில்புன் மாக்கள் திருந்துயிர்ப் பருவத்(து) அறிவுறு கருவூர்த் துறைவளர் தீந்தமிழ் மாலை பொருந்தருங் கருணைப் பரமர்தம் கோயில் பொழிலகங் குடைந்துவண்(டு) உறங்கச் செருந்திநின்(று) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. 11 2. திருக்களந்தை ஆதித்தேச்சரம்
பண் - புறநீர்மை
கலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினிற் பெற்றெடுத்(து) எனக்கே முலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும்; மலைகுடைந் தனைய நெடுநிலை மாட மருங்கெலாம் மறையவர் முறையோத்(து) அலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 1 சந்தன களபம் துதைந்தநன் மேனித் தவளவெண் பொடிமுழு தாடும் செந்தழல் உருவில் பொலிந்துநோக் குடைய திருநுதல் அவர்க்கிடம் போலும் இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்(டு) எரிவதொத்(து) எழுநிலை மாடம் அந்தணர் அழலோம்(பு) அலைபுனற் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 2 கரியரே இடந்தான் செய்யரே ஒருபால் கழுத்திலோர் தனிவடஞ் சேர்த்தி முரிவரே முனிவர் தம்மொ(டு)ஆல் நிழற்கீழ் முறைதெரிந்(து) ஓருடம் பினராம் இருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள் இறைவரே மறைகளும் தேட அரியரே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 3 பழையராம் தொண்டர்க்(கு) எளியரே மிண்டர்க்(கு) அரியரே பாவியேன் செய்யும் பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுந் தருளாப் பிச்சரே நச்சரா மிளிரும் குழையராய் வந்தெந் குடிமுழு தாளும் குழகரே ஒழுகுநீர்க் கங்கை அழகரே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 4 பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்(பு) அதனில் தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல்ஆ டரவம் துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடியிடை இடமருங்(கு) ஒருத்தி அவளுமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 5 நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்திலங் கினவே போலுமே முறுவல் நிறையஆ னந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர் கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்டது ஆலமே ஆகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே! 6 திக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகும் திறத்தவர் புறத்திருந்(து) அலச மைக்கடா அனைய என்னையாள் விரும்பி மற்றொரு பிறவியிற் பிறந்து பொய்க்கடா வண்ணம் காத்தெனக்(கு) அருளே புரியவம் வல்லரே எல்லே அக்கடா ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 7 மெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வான விளக்கரே எழுதுகோல் வளையாண் மையரே வையம் பலிதிரிந்(து) உறையும் மயானரே உளங்கலந் திருந்தும் பொய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின் பொருள்வழி இருள்கிழித் தெழுந்த ஐயரே யாகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 8 குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இருசெவி ஒருபால் விமலமே கலையும் உடையரே சடைமேல் மிளிருமே பொறிவரி நாகம் கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலைநீர் அமலமே ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. 9 நீரணங்(கு) அசும்பு கழனிசூழ் களந்தை நிறைபுகழ் ஆதித்தேச் சரத்து நாரணன் பரவும் திருவடி நிலைமேல் நலமலி கலைபயில் கருவூர் ஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த அமுதம்ஊ றியதமிழ் மாலை ஏரணங்(கு) இருநான்(கு) இரண்டிவை வல்லோர் இருள்கிழித்(து) எழுந்தசிந் தையரே. 10 3. திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம்
பண் - பஞ்சமம்
தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச் சடைவிரித்(து) அலையெறி கங்கைத் தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித் திருமுகம் மலர்ந்துசொட்(டு) அட்டக் கிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டுர் வளரொளி மணியம் பலத்துள்நின்றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே. 1 துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல கண்டமும் குழையும் பவளவாய் இதழும் கண்ணுதல் திலகமும் காட்டிக் கெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வண்டறை மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே. 2 திருநுதல் விழியும் பவளவாய் இதழும் திலகமும் உடையவன் சடைமேல் புரிதரு மலரின் தாதுநின்(று) ஊதப் போய்வருந் தும்பிகாள்! இங்கே கிரிதவழ் முகலின் கீழ்த்தவழ் மாடம் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வருதிறல் மணியம் பலவனைக் கண்(டு)என் மனத்தையும் கொண்டுபோ துமினே. 3 தெள்ளுநீ றவன்நீ(று) என்னுடல் விரும்பும்; செவியவன் அறிவுநூல் கேட்கும்; மெள்ளவே அவன்பேர் விளம்புவாய்; கண்கள் விமானமேநோக்கி வெவ் வுயிர்க்கும்; கிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வள்ளலே மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தனே!என்னும்என் மனனே. 4 தோழி! யாம்செய்த தொழில்என்? எம்பெருமான் துணைமலர்ச் சேவடி காண்பான் ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து நெக்குநைந்(து) உளங்கரைந்(து) உருகும் கேழலும் புள்ளும் ஆகிநின்றி ருவர் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வாழிய மணியம் பலவனைக் காண்பான் மயங்கவும் மாலொழி யோமே. 5 என்செய்கோம்! தோழி! தோழி! நீ துணையாய் இரவுபோம்; பகல்வரு மாகில் அஞ்சலோ என்னான்; ஆழியும் திரையும் அலமரு மாறுகண்(டு) அயர்வன்; கிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவில் கெழுகவும் பலைசெய்கீழ்க் கோட்டூர் மஞ்சணி மணியம் பலவ!ஓ என்று மயங்குவன் மாலையம் பொழுதே. 6 தழைதவழ் மொழுப்பும் தவளநீற்(று) ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும் குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனம் கெழுகவும் பலைசெய்கீழ்க் கோட்டூர் மழைதவழ் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தர்தம் வாழ்வுபோன் றனவே. 7 தன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு இன்னகை மழலை கங்கைகோங்(கு) இதழி இளம்பிறை குழைவளர் இளமான் கின்னரம் முழவம் மழலையாழ் வீணை கெழுகவும் பலைசெய்கீழ்க் கோட்டூர் மன்னவன் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனத்துள்வைத் தனனே. 8 யாதுநீ நினைவ(து)? எவரையாம் உடையது? எவர்களும் யாவையும் தானாய்ப் பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென் பனிமலர்க் கண்ணுள்நின் றகலான் கேதகை நிழலைக் குருகென மருவிக் கெண்டைகள் வெருவுகீழ்க் கோட்டூர் மாதவன் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தன்என் மனம்புகுந் தனனே. 9 அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர் அழகிய சடையும்வெண் ணீறும் சிந்தையால் நினையிற் சிந்தையும் காணேன்; செய்வதென்? தெளிபுனல் அலங்கல் கெந்தியா வுகளும் கொண்டைபுண் டரீகம் கிழிக்கும்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர் வந்தநாள் மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தனே அறியும்என் மனமே. 10 கித்திநின் றாடும் அரிவையர் தெருவில் கெழுவுகம் பலைசெய்க்கீழ்க் கோட்டூர் மத்தனை மணியம் பலத்துள்நின் றாடும் மைந்தனை ஆரணம் பிதற்றும் பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை பெரியவர்க்(கு) அகலிரு விசும்பில் முத்தியாம் என்றே உலகர்ஏத்து வரேல் முகமலர்ந்(து) எதிர்கொளும் திருவே. 11 4. திருமுகத் தலை
பண் - பஞ்சமம்
புவனநா யகனே! அகவுயிர்க்(கு) அமுதே! பூரணா! ஆரணம் பொழியும் பவளவாய் மணியே! பணிசெய்வார்க்(கு) இரங்கும் பசுபதீ! பன்னகா பரணா! அவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர்த் தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய் தனியனேன் தனிமைநீங் குதற்கே. 1 புழுங்குதீ வினையேன் விடைகெடப் புகுந்து புணர்பொருள் உணர்வுநூல் வகையால் வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண் வளரொளி மணிநெடுங் குன்றே முழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும் முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன் விழுங்குதீம் கனியாய் இனியஆ னந்த வெள்ளமாய் உள்ளமா யினையே. 2 கன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண் கசிவிலேன் கண்ணில்நீர் சொரியேன்; முன்னகா ஒழியேன்; ஆயினும் செழுநீர் முகத்தலை அகத்தமர்ந்(து) உறையும் பன்னகா பரணா! பவளவாய் மணியே! பாவியேன் ஆவியுள் புகுந்த(து) என்னகா ரணம்? நீ ஏழைநாய் அடியேற்கு எளிமையோ பெருமையா வதுவே. 3 கேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க் கிடையனா ருடையஎன் நெஞ்சில் பாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும் பரமனே! பன்னகா பரணா! மேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து மிகத்திகழ் முகத்தலை மூதூர் நீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன் நெஞ்செலாம் நிறைந்துநின் றாயே! 4 அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து) ஐவரோ(டு) என்னொடும் விளைந்த இக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு) என்னைஆள் ஆண்டநாய கனே! முக்கண்நா யகனே! முழுதுல(கு) இறைஞ்ச முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன் பக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவளவாய் மொழிந்தே. 5 புனல்பட உருகி மண்டழல் வெதும்பிப் பூம்புனல் பொதிந்துயிர் அளிக்கும் வினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென் மனம்நெக மகிழ்ந்தபே ரொளியே! முனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே! முகத்தலை அகத்தமர்ந்(து) அடியேன் வினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால் விழுமிய விமானமா யினதே. 6 விரியுநீர் ஆலக் கருமையும் சாந்தின் வெண்மையும் செந்நிறத் தொளியும் கரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும் ழுத்திலோர் தனிவடங் கட்டி முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய் முகத்தலை அகத்தமர்ந் தாயைப் பிரியுமா றுளதே பேய்களாம் செய்த பிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே. 7 என்னையுன் பாத பங்கயம் பணிவித்(து) என்பெலாம் உருகநீ எளிவந்(து) உன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும் ஒழிவற நிறைந்தஒண் சுடரே! முன்னைஎன் பாசம் முழுவதும் அகல முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும் கனியுமாய் இனிமையாய் இனையே. 8 அம்பரா! அனலா! அனிலமே! புவிநீ அம்புவே! இந்துவே! இரவி! உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்தஒண் சுடரே! மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர் முகத்தலை அகத்தமர்ந்(து) எனக்கே எம்பிரானாகி ஆண்டநீ மீண்டே எந்தையும் தாயுமா யினையே. 9 மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தவை அகத்தமர்ந்(து) இனிய பாலுமாய், அமுதம் பன்னகா பரணன் பனிமலர்த் திருவடி இணைமேல் ஆலயம் பாகின் அனையசொற் கருவூர் அமுதுறழ் தீந்தமிழ் மாலை சீலமாப் பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகிநின் றாரே. 10 5. திரைலோக்கிய சுந்தரம்
பண் - காந்தாரம்
நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாந் தன்மையன்றே; ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) அருவினையேன் திறம்மறந்தின்(று) ஊரோங்கும் பழிபாரா(து) உன்பாலே விழுந்தொழிந்தேன் சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே! 1 நையாத மனத்தினனை நைவிப்பான் இத்தெருவே ஐயா!நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுது அருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ? அருள்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே! 2 அம்பளிங்கு பகலோன்போல் அடைப்பற்றாய் இவள்மனத்தில் முன்பளிந்த காதலும்நின் முகந்தோன்ற விளங்கிற்றால்; வம்பளிந்த கனியே! என் மருந்தே! நல் வளர்முக்கண் செம்பளிங்கே! பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே! 3 மைஞ்ஞின்ற குழலாள்தன் மனந்தரவும் வளைதாராது இஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்தது யார்செய்தார்? மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு செய்ஞ்ஞன்றி யிலன்; கோடைத் திரைலோக்கிய சுந்தரனே! 4 நீவாரா(து) ஒழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால்; ஆவா!என்று அருள் புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும் தேவா!தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே! 5 முழுவதும்நீ ஆயினும் இம் மொய்குழலாள் மெய்ம்முழுதும் பழுதெனவே நினைந்தோராள் பயில்வதும்நின் ஒரு நாமம் அழுவதும்நின் திறம்நினைந்தே அதுவன்றோ பெறும்பேறு; செழுமதில்சூழ் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 6 தன்சோதி எழுமேனித் தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்; உன்சோதி எழில்காண்பான் ஒலிடவும் உருக்காட்டாய்; துஞ்சாகண் இவளுடைய துயர்தீரு மாறுரையாய் செஞ்சாலி வயற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 7 அரும்பேதைக்(கு) அருள்புரியா(து) ஒழிந்தாய்; நின் அவிர்சடைமேல் நிரம்பாத பிறைதூவும் நெருப்பொடுநின் கையிலியாழ் நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய் நளிர்புரிசைக் குளிர்வனம்பா திரம்போது சொரிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 8 ஆறாத பேரன்பின் அவருள்ளம் குடிகொண்டு வேறாகப் பலர்சூழ வீற்றிருத்தி அதுகொண்டு வீறாடி இவள்உன்னைப் பொதுநீப்பான் விரைந்தின்னம் தேறாள்;தென் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 9 சரிந்ததுகில் தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு) இரங்காஎம் பெருமானே! முரிந்தநடை மடந்தையர் தம் முழங்கொலியும் வழங்கொலியும் திருந்துவிழ(வு) அணிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 10 ஆரணத்தேன் பருகிஅருந் தமிழ்மாலை கமழவரும் காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ்மாலை பூரணத்தால் ஈரைந்தும் போற்றிசைப்பார் காந்தாரம் சீரணைத்த பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 11 6. கங்கைகொண்ட சோளேச்சரம்
பண் - பஞ்சமம்
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட அங்ஙனே பெரியநீ சிறிய என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும்நான் மறக்கேன்; முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா! முக்கணா! நாற்பெருந் தடந்தோள் கன்னலே! தேனே! அமுதமே! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே! 1 உண்ணெகிழ்ந்(து) உடலம் நெக்குமுக் கண்ணா! ஓலமென்(று) ஓலமிட்(டு) ஒருநாள் மண்ணினின்று அலறேன்; வழிமொழி மாலை மழலையஞ் சிலம்படி முடிமேல் பண்ணிநின்(று) உருகேன்; பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்தென் கண்ணினின்று அகலான்; என்கொலோ? கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே. 2 அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே? அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின் சொற்பதத் துள்வைத்(து) உள்ளம்அள் ளூறும் தொண்டருக்(கு) எண்டிசைக் கனகம் பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும் பவளவா யவர்பணை முலையும் கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே. 3 ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும் அழகிய விழியும்வெண்ணீறும் சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர் முகமலர்ந்து இருகணீர் அரும்பக் கைகள்மொட் டிக்கும் என்கொலோ? கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே! 4 கருதிவா னவனாம்; திருநெடு மாலாம் சுந்தர விசும்பின்இந் திரனாம்; பருதிவா னவனாம் படர்சடை முக்கண் பகவனாம்; அகஉயிர்க்கு அமுதாம்; எருதுவா கனனாம்; எயில்கள் மூன்(று) எரித்த ஏறுசே வகனுமாம்; பின்னும் கருதுவார் கருதும் உருவமாம்; கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே. 5 அண்டமோர் அணுவாம் பெருமைகொண்(டு) அணுவோர் அண்டமாம் சிறுமைகொண்(டு) அடியேன் உண்டவூண் உனக்காம் வகைஎன துள்ளம் உள்கலந்(து) எழுபரஞ் சோதி கொண்டநாண் பாம்பாம் பெருவரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்(று) எரித்த கண்டனே! நீல கண்டனே! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே! 6 மோதலைப் பட்ட கடல்வயி(று) உதித்த முழுமணித் திரள்அமு(து) ஆங்கே தாய்தலைப் பட்டங்(கு) உருகிஒன் றாய தன்மையில் என்னைமுன் ஈன்ற நீதலைப் பட்டால் யானும் அவ்வகையே; நிசிசரர் இருவரோடு ஒருவர் காதலிற் பட்ட கருணையாய்! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே. 7 தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த தயாவைநூ றாயிரங் கூறிட்(டு) அத்திலங்(கு) ஒருகூ(று) உன்கண்வைத் தவருக்(கு) அமருல(கு) அளிக்கும்நின் பெருமை பித்தனென்(று) ஒருகால் பேசுவ ரேனும் பிழைத்தவை பொறுத்தருள் செய்யும் கைத்தலம் அடியேன் சென்னிவைத்த கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே. 8 |