![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
குலசேகரப்பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி பெருமாள் திருமொழி என்னும் நூல் வைணவ ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகர ஆழ்வாரால் பாடப்பட்டது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதியாகிய இந்நூல், அத்தொகுப்பில் 647 தொடக்கம் 751 வரையான 105 பாடல்களைக் கொண்டது. முதல் பதினோரு பாடல்களில் அரங்கப்பெருமானை கண்டு மகிழும் நாள் எந்நாளென வேட்டல். இரண்டாம் பத்து பாடல்களில், அரங்கநாதனது அடியார்க்கு அடியேன் என்கிறார். மூன்றாம் பத்து பாடல்களில், அரங்கனை கண்டு அவன்பால் கொண்ட பற்றின் மிகுதியால் உலக இன்பங்கள் வேண்டாம் என்றும், தான் அழகிய மணவாளனுக்கே பித்தன் என்கிறார். நான்காம் பதினோரு பாடல்களில், திருவேங்கடமுடையான் மீது கொண்ட பக்தியின் மிகுதியால், வானுலக இன்பத்தினைக் காட்டிலும் திருவேங்கட மலையில் வாழும் குருவாகவோ, மீனாகவோ, திருவேங்கடத்தான் உமிழ்கின்ற பொன் வட்டாகவோ, செண்பக மலராகவோ, தன்பக மரமாகவோ, அழகிய மலையாகவோ, மலை மீது பாயும் ஆறாகவோ, கோயிலின் நிலைக்கதவாகவோ, வாசற்படியாகவோ அல்லது எம்பெருமான் மலை மீது வேறு ஏதேனும் பொருளாகவோ இருந்து திருவேங்கடமுடையான் அடிகளைக் காண்பேன் என்கிறார். ஐந்தாம் பத்து பாடல்களில் வித்துவக்கோட்டு அம்மானையே வேண்டுதல். பெருமாள் திருமொழி தனியன்கள் உடயவர் அருளிச் செய்தது நேரிசை வெண்பா இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் குலசே கரனென்றே கூறு. மணக்கால் நம்பி அருளிச் செய்தது கட்டளைக் கலித்துறை ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன் சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே. குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம். குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 647 இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே. 1 648 வாயோரீ ரைஞ்நுறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ் காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே. 2 649 எம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும் எடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு எம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும் தொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன் அம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் அம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங் கடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே. 3 650 மாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை வண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி ஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை அமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப் பாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் கோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள் கொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே. 4 651 இணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத் தும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த துணியில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால் தொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ மதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் மணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென் மலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே. 5 652 அளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை அமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும் தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித் திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும் களிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக் கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும் ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென் உள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே. 6 653 மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம் துறந்து,இருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும் நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே. 7 654 கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள் காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே. 8 655 தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும் சீரார்ந்த முழுவோசை பரவை காட்டும் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே. 9 656 வன்பெருவா னகமுய்ய அமர ருய்ய மண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய துன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச் சுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ அன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே. 10 657 திடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும் கடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக் கண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால் குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள் கூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற் செய்த நடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே. 11 சந்தக் கலி விருத்தம் 658 தேட்டரும்திறல் தேனினைத்தென் னரங்கனைத்திரு மாதுவாழ் வாட்டமில்வன மாலைமார்வனை வாழ்த்திமால்கொள்சிந் தையராய் ஆட்டமேவி யலந்தழைத்தயர் வெய்தும்மெய்யடி யார்கள்தம் ஈட்டம்கண்டிடக் கூடுமேலது காணும்கண்பய னாவதே. 1 659 தோடுலாமலர் மங்கைதோளிணை தேய்ந்ததும்சுடர் வாளியால் நீடுமாமரம் செற்றதும்நிரை மேய்த்துமிவை யேநினைந்து ஆடிப்பாடி அரங்கவோஎன்ற ழைக்கும்தொண்ட ரடிப்பொடி ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந் தாடும்வேட்கையென் னாவதே. 2 660 ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய் மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம் சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே. 3 661 தோய்த்ததண்தயிர் வெண்ணெய்பாலுடன் உண்டலும்உடன் றாய்ச்சிகண்டு ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன ரங்கனுக்கடி யார்களாய் நாத்தழும்பெழ நாரணாவென்ற ழைத்துமெய்தழும் பத்தொழு தேத்தி,இன்புறும் தொண்டர்சேவடி ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே. 4 662 பொய்சிலைக்குர லேற்றெருத்தமி றுத்துபோரர வீர்த்தகோன் செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண மாமதிள்தென்ன ரங்கனாம் மெய்சிலைக்கரு மேகமொன்றுதம் நெஞ்சில்நின்று திகழப்போய் மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந் தென்மனம்மெய்சி லிர்க்குமே. 5 663 ஆதியந்தம னந்தமற்புதம் ஆனவானவர் தம்பிரான் பாதமாமலர் சூடும்பத்தியி லாதபாவிக ளுய்ந்திட தீதில்நன்னெரி காட்டியெங்கும் திரிந்தரங்கனெம் மானுக்கே காதல்செய்தொண்டர்க் கெப்பிறப்பிலும் காதல்செய்யுமென் னெஞ்சமே. 6 664 காரினம்புரை மேனிநல்கதிர் முத்தவெண்ணகைச் செய்யவாய் ஆரமார்வ னரங்கனென்னும் அரும்பெருஞ்சுட ரொன்றினை சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக சிந்திழிந்தகண் ணீர்களால் வாரநிற்பவர் தாளிணைக்கொரு வாரமாகுமென் னெஞ்சமே. 7 665 மாலையுற்றக டல்கிடந்தவன் வண்டுகிண்டுந றுந்துழாய் மாலையுற்றவ ரைப்பெருந்திரு மார்வனைமலர்க் கண்ணனை மாலையுற்றெழுந் தடிப்பாடித்தி ரிந்தரங்கனெம் மானுக்கே மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றதென் நெஞ்சமே. 8 666 மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந் தாடிப்பாடியி றைஞ்சி,என் அத்தனச்ச னரங்கனுக்கடி யார்களாகி அவனுக்கே பித்தராமவர் பித்தரல்லர்கள் மற்றையார்முற்றும் பித்தரே. 9 667 அல்லிமாமலர் மங்கைநாதன் அரங்கன்மெய்யடி யார்கள்தம் எல்லையிலடி மைத்திறத்தினில் என்றுமேவு மனத்தனாம் கொல்லிகாவலன் கூடல்நாயகன் கோழிக்கோன்குல சேகரன் சொல்லினின்தமிழ் மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்க ளாவரே. 10 கலி விருத்தம் 668 மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்இவ் வையந் தன்னொடும் கூடுவ தில்லையான் ஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் மையல் கொண்டாழிந் தேனென்றன் மாலுக்கே. 1 669 நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும் ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான் ஆலியா அழையா அரங்கா வென்று மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே. 2 670 மார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும் பாரி னாரொடும் கூடுவ தில்லையான் ஆர மார்வ னரங்க னனந்தன்நல் நார ணன்நர காந்தகன் பித்தனே. 3 671 உண்டி யேயுடை யேயுகந் தோடும், இம் மண்ட லத்தொடும் கூடுவ தில்லையான் அண்ட வாண னரங்கன்வன் பேய்முலை உண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே. 4 672 தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய் நீதி யாரொடும் கூடுவ தில்லையான் ஆதி ஆய னரங்கன்,அந் தாமரைப் பேதை மாமண வாளன்றன் பித்தனே. 5 673 எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன் உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன் தம்பி ரானம ரர்க்கு,அரங் கநகர் எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே. 6 674 எத்தி றத்திலும் யாரொடும் கூடும், அச் சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால் அத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் பித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே. 7 675 பேய ரேயெனக் கியாவரும் யானுமோர் பேய னேயெவர்க் கும்இது பேசியென் ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன் பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே. 8 676 அங்கை யாழி யரங்க னடியிணை தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய் கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல் இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே. 9 தரவு கொச்சகக் கலிப்பா 677 ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன் ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால் கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே. 1 678 ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே. 2 679 பின்னிட்ட சடையானும் பிரமனு மந்திரனும் துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல் மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும் பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே. 3 680 ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள் கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே. 4 681 கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன் எம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே. 5 682 மின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும் அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன் தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள் அன்னனைய பொற்குடவா மருந்தவத்த னானவனே. 6 683 வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம் கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன் தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல் கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே. 7 684 பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும் முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான் வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே. 8 685 செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே. 9 686 உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன் அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன் செம்பவள வாயான் திருவேங் கடமென்னும் எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே. 10 687 மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன் பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே. 11 தரவு கொச்சகக் கலிப்பா 688 தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே. 1 689 கண்டா ரிகழ்வனவே காதலன்றான் செய்திடினும் கொண்டானை யல்லா லறியாக் குலமகள்போல் விண்டோ ய் மதிள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ கொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே. 2 690 மீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன் பால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன் தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன் கோல்நோக்கி வாழும் குடிபோன்றி ருந்தேனே. 3 691 வாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால் மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால் மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ ஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே. 4 692 வெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே எங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால் எங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும் வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே. 5 693 செந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம் அந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால் வெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன் அந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே. 6 694 எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல் மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஎன் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே. 7 695 தொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே புக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல் மிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன் புக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே. 8 696 நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் மின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே நின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே. 9 697 விற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும் மற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த கொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன நற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே. 10 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 698 ஏர்மலர்ப் பூங்குழ லாயர்மாதர் எனைப்பல் ருள்ளவிவ் வூரில், உன்றன் மார்வு தழுவுதற் காசையின்மை அறிந்தறிந் தேயுன்றன் பொய்யைக்கேட்டு கூர்மழை போல்பனிக் கூதலெய்திக் கூசி நடுங்கி யமுனையாற்றில் வார்மணற் குன்றில் புலரநின்றேன் வாசுதே வாஉன் வரவுபார்த்தே. 1 699 கொண்டையொண் கண்மட வாளொருத்தி கீழை யகத்துத் தயிர்கடையக் கண்டுஒல்லை நானும் கடைவனென்று கள்ள விழிவிழித் துப்புக்கு வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்த்துடிப்ப தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம் தாமோத ராமெய் யறிவன்நானே. 2 700 கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக் கடைக்கணித்து ஆங்கே யொருத்திதன்பால் மருவி மனம்வைத்து மற்றொருத்திக் குரைத்தொரு பேதைக்குப் பொய்குறித்து புரிகுழல் மங்கை யொருத்திதன்னைப் புணர்தி யவளுக்கும் மெய்யனல்லை மருதிறுத் தாய்உன் வளர்த்தியூடே வளர்கின்ற தாலுன்றன் மாயைதானே. 3 701 தாய்முலைப் பாலி லமுதிருக்கத் தவழ்ந்து தளர்நடை யிட்டுச்சென்று பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தனென் றேபிற ரேசநின்றாய் ஆய்மிகு காதலோடு யானிருப்ப யான்விட வந்தவென் தூதியோடே நீமிகு போகத்தை நன்குகந்தாய் அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே. 4 702 மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு வீங்கிருள் வாயென்றன் வீதியூடே பொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப் போகின்ற போதுநான் கண்டுநின்றேன் கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டுக் கைவிளிக் கின்றதும் கண்டேநின்றேன் என்னுக் கவளைவிட் டிங்குவந்தாய் இன்னமங் கேநட நம்பிநீயே. 5 703 மற்பொரு தோளுடை வாசுதேவா வல்வினை யேன்துயில் கொண்டவாறே இற்றை யிரவிடை யேமத்தென்னை இன்னணை மேலிட்ட கன்றுநீபோய் அற்றை யிரவுமோர் பிற்றைநாளும் அரிவைய ரோடும் அணைந்துவந்தாய் எற்றுக்கு நீயென் மருங்கில்வந்தாய் எம்பெரு மான்நீ யெழுந்தருளே. 6 704 பையர வின்னணைப் பள்ளியினாய் பண்டையோ மல்லோம்நாம் நீயுகக்கும் மையரி யொண்கண்ணி னாருமல்லோம் வைகியெம் சேரி வரவோழிநீ செய்ய வுடையும் திருமுகமும் செங்கனி வாயும் குழலும்கண்டு பொய்யொரு நாள்பட்ட தேயமையும் புள்ளுவம் பேசாதே போகுநம்பீ. 7 705 என்னை வருக வெனக்குறித்திட் டினமலர் முல்லையின் பந்தர்நீழல் மன்னி யவளைப் புணரப்புக்கு மற்றென்னைக் கண்டுழ றாநெகிழ்ந்தாய் பொன்னிற வாடையைக் கையில்தாங்கிப் பொய்யச்சங் காட்டிநீ போதியேலும் இன்னமென் கையகத் தீங்கொருநாள் வருதியே லெஞ்சினம் தீர்வன்நானே. 8 706 மங்கல நல்வன மாலைமார்வில் இலங்க மயில்தழைப் பீலிசூடி பொங்கிள வாடை யரையில்சாத்திப் பூங்கொத்துக் காதிற் புணரப்பெய்து கொங்கு நறுங்குழ லார்களோடு குழைந்து குழலினி தூதிவந்தாய் எங்களுக் கேயொரு நாள்வந்தூத உன்குழ லின்னிசை போதராதே. 9 707 அல்லி மலர்த்திரு மங்கைகேள்வன் றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள் எல்லிப் பொழுதினி லேமத்தூடி எள்கி யுரைத்த வுரையதனை கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான் குலசே கரனின் னிசையில்மேவி சொல்லிய இன்தமிழ் மாலைபத்தும் சொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே. 10 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 708 ஆலை நீள்கரும் பன்னவன் தாலோ அம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ வேலை நீர்நிறத் தன்னவன் தாலோ வேழப் போதக மன்னவன் தாலோ ஏல வார்குழ லென்மகன் தாலோ என்றென் றுன்னைஎன் வாயிடை நிறைய தாலொ லித்திடும் திருவினை யில்லாத் தாய ரில்கடை யாயின தாயே. 1 709 வடிக்கொ ளஞ்சன மெழுதுசெம் மலர்க்கண் மருவி மேலினி தொன்றினை நோக்கி முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள் பொலியு நீர்முகில் குழவியே போல அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும் அங்கை யோடணைந் தானையிற் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ கேச வாகெடு வேன்கெடு வேனே. 2 710 முந்தை நன்முறை யுன்புடை மகளிர் முறைமு றைந்தம் குறங்கிடை யிருத்தி எந்தை யேஎன்றன் குலப்பெருஞ் சுடரே எழுமு கில்கணத் தெழில்கவ ரேறே உந்தை யாவன்என் றுரைப்பநின் செங்கேழ் விரலி னும்கடைக் கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா நங்கள் கோன்வசு தேவன்பெற் றிலனே. 3 711 களிநி லாவெழில் மதிபுரை முகமும் கண்ண னேதிண்கை மார்வும்திண் டோளும் தளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும் தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த இளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால் பருகு வேற்கிவள் தாயென நினைந்த அளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த பாவி யேனென தாவிநில் லாதே. 4 712 மருவு நின்திரு நெற்றியில் சுட்டி அசைத ரமணி வாயிடை முத்தம் தருத லும்,உன்றன் தாதையைப் போலும் வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து வெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும் திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற் றாளே. 5 713 தண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா தவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையால் மண்ணில் செம்பொடி யாடிவந் தென்றன் மார்வில் மன்னிடப் பெற்றிலே னந்தோ வண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சல் உண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன் என்னை எஞ்செய்யப் பெற்றதெம் மோயே. 6 714 குழக னேஎன்றன் கோமளப் பிள்ளாய் கோவிந் தாஎன் குடங்கையில் மன்னி ஒழுகு பேரெழி லிளஞ்சிறு தளிர்போல் ஒருகை யாலொரு முலைமுகம் நெருடா மழலை மென்னகை யிடையிடை யருளா வாயி லேமுலை யிருக்கவென் முகத்தே எழில்கொள் நின்திருக் கண்ணிணை நோக்கந் தன்னை யுமிழந் தேனிழந் தேனே. 7 715 முழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும் முகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும் எழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும் நிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும் அழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும் அணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும் தொழுகை யுமிவை கண்ட அசோதை தொல்லை யின்பத் திறுதிகண் டாளே. 8 716 குன்றி னால்குடை கவித்ததும் கோலக் குரவை கோத்த தும்குட மாட்டும் கன்றி னால்விள வெறிந்ததும் காலால் காளி யன்தலை மிதித்தது முதலா வென்றி சேர்பிள்ளை நல்விளை யாட்டம் அனைத்தி லுமங்கென் னுள்ளமுள் குளிர ஒன்றும் கண்டிடப் பெற்றிலே னடியேன் காணு மாறினி யுண்டெனி லருளே. 9 717 வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு நார்நரம் பெழக்கரிந் துக்க நஞ்ச மார்தரு சுழிமுலை யந்தோ சுவைத்து நீயருள் செய்து வளர்ந்தாய் கஞ்சன் நாள்கவர் கருமுகி லெந்தாய் கடைப்பட் டேன்வெறி தேமுலை சுமந்து தஞ்ச மேலொன்றி லேனுய்ந்தி ருந்தேன் தக்க தேநல்ல தாயைப்பெற் றாயே. 10 718 மல்லை மாநகர்க் கிறையவன் றன்னை வாஞ்செ லுத்திவந் தீங்கணை மாயத்து எல்லை யில்பிள்ளை செய்வன காணாத் தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் கொல்லி காவலன் மாலடி முடிமேல் கோல மாம்குல சேகரன் சொன்ன நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள் நண்ணு வாரொல்லை நாரண னுலகே. 11 தரவு கொச்சகக் கலிப்பா 719 மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர் கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ. 1 720 புண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே திண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தய் கண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே எண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ. 2 721 கொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய் தங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ கங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே எங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ. 3 722 தாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன் மாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள் காமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே ஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ. 4 723 பாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி ஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே சீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே தாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ. 5 724 சுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே அற்றவர்கட் கருமருந்தே அயோத்திநகர்க் கதிபதியே கற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே சிற்றவைதன் சொல்கொண்ட சீராமா தாலேலோ. 6 725 ஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே வாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே காலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே ஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ. 7 726 மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ. 8 727 தளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய் வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே களைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே இளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ. 9 728 தேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே யாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே ஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ. 10 729 கன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன் தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை கொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன பன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே. 11 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 730 வன்தாளி னிணைவணங்கி வளநகரம் தொழுதேத்த மன்ன னாவான் நின்றாயை அரியணைமே லிருந்தாயை நெடுங்கானம் படரப் போகு என்றாள்,எம் இராமாவோ உனைப்பயந்த கைகேசி தஞ்சொற் கேட்டு நன்றாக நானிலத்தை யாள்வித்தேன் நன்மகனே உன்னை நானே. 1 731 வெவ்வாயேன் வெவ்வுரைகேட் டிருநிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி மைவாய களிறொழிந்து தேரொழிந்து மாவொழிந்து வனமே மேவி நெய்வாய வேல்நெடுங்கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக எவ்வாறு நடந்தனையெம் இரமாவோ எம்பெருமான் எஞ்செய் கேனே. 2 732 கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன் குலமதலாய் குனிவில் லேந்தும் மல்லணைந்த வரைத்தோளா வல்வினையேன் மனமுருக்கும் வகையே கற்றாய் மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் நீழல் கல்லணைமேல் கண்டுயிலக் கற்றனையோ காகுத்தா கரிய கோவே. 3 733 வாபோகு வாஇன்னம் வந்தொருகால் கண்டுபோ மலராள் கூந்தல் வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா விடையோன்றன் வில்லைச் செற்றாய் மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும் மகனே இன்று நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப் போகாதே நிற்கு மாறே. 4 734 பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய மெல்லடிகள் குருதி சோர விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப வெம்பசிநோய் கூர இன்று பெரும்பாவி யேன்மகனே போகின்றாய் கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன் எஞ்செய்கேன் அந்தோ யானே. 5 735 அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் கேளாதே அணிசேர் மார்வம் என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே முழுசாதே மோவா துச்சி கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம்போல் முகமும் காணாது எம்மானை யென்மகனை யிழந்திட்ட இழிதகையே னிருக்கின் றேனே. 6 736 பூமருவு நறுங்குஞ்சி புஞ்சடையாய்ப் புனைந்துபூந் துகில்சே ரல்குல் காமரெழில் விழலுடுத்துக் கலனணியா தங்கங்க ளழகு மாறி ஏமருதோ ளென்புதல்வன் யானின்று செலத்தக்க வனந்தான் சேர்தல் தூமறையீர் இதுதகவோ சுமந்திரனே விசிட்டனே சொல்லீர் நீரே. 7 737 பொன்பெற்றா ரெழில்வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியலென் மருகிகையும் வனத்தில் போக்கி நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்திட் டென்னையும்நீள் வானில் போக்க என்பெற்றாய் கைகேசீ இருநிலத்தில் இனிதாக விருக்கின் றாயே. 8 738 முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி அவன்தவத்தை முற்றும் செற்றாய் உன்னையுமுன் னருமையையு முன்மோயின் வருத்தமுமொன் றாகக் கொள்ளாது என்னையும்என் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டுவனம் புக்க எந்தாய் நின்னையே மகனாகப் பெறப்பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே. 9 739 தேன்நகுமா மலர்க்கூந்தல் கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கொடியவள்தன் சொற்கொண்டு இன்று கானகமே மிகவிரும்பி நீதுறந்த வளநகரைத் துறந்து நானும் வானகமே மிகவிரும்பிப் போகின்றேன் மனுகுலத்தார் தங்கள் கோவே. 10 740 ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய் வனம்புக்க அதனுக் காற்றா தாரர்ந்த தடவரைத்தோள் தயரதன்றான் புலம்பியஅப் புலம்பல் தன்னை கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார் தீநெறிக்கண் செல்லார் தாமே. 11 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 741 அங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும் அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை, செங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே. 1 742 வந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி வருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி மந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து வல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின் செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் அந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த அணிமணியா சனத்திருந்த வம்மான் றானே. 2 743 செல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச் சினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி வெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை தெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் எவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை இறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே. 3 744 தொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால் தென்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை பத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப் பரதனுக்கு பாதுகமு மரசு மீந்து சித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற இருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே. 4 745 வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக் கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார் திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே. 5 746 தனமருவு வைதேகி பிரிய லுற்றுத் தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி வனமருவு கவியரசன் காதல் கொண்டு வாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான் சினமடங்க மாருதியால் சுடுவித் தானைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் இனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை ஏத்துவா ரிணையடியே யேத்தி னெனெ. 6 747 குரைகடலை யடலம்பால் மறுக வெய்து குலைகட்டி மறுகரையை யதனா லேரி எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன் இன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து திருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் அரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால் அரசாக வெண்ணேன்மற் றரசு தானே. 7 748 அம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி அரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான் றன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள் செம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் எம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால் பருகுவோ மின்னமுதை மதியோ மின்றே. 8 749 செறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று செழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோ னீந்த நிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னைத் தம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட திறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் உறைவானை மறவாத வுள்ளந் தன்னை உடையோம்மற் றுறுதுயர மடையோ மின்றே. 9 750 அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி அடலரவப் பகையேறி யசுரர் தம்மை வென்று,இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும் இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே. 10 751 தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே. 11 குலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம். |