19. கலஞ்செய் நீர்க்களம் வலிய எயினன் அப்போதிருந்த சூழ்நிலையில் அவனிடம் விரிவாக உரையாட முடியாமலிருந்தது. யானை, யானையாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்த பூதாகாரமான மல்லர்கள் இருவரை மற்போரிடச் செய்து கண்டு இரசித்துக் கொண்டிருந்தான் எயினர் தலைவன். "இந்தத் தீவில் தனித்து வாழும் எங்களுக்கு உடல் வலிமையைத் தவிர வேறெந்தச் செல்வங்களும் இல்லை. எங்களைச் சுற்றியிருக்கும் கடலுக்கு அப்பாலுள்ள பெரிய பெரிய தேசங்களில் நால்வகைப் படைகளும், வேறு சாதுரியங்களும் உண்டு. எங்களுக்கு அவையொன்றும் கிடையாது" என்று கூறிவிட்டு மற்போரை இரசித்துக் காணுமாறு விருந்தினர்கள் இருவரையும் வேண்டிக் கொண்டான் எயினர் தலைவன். அவனுடைய வேண்டுதலாலும் யாவர் கவனமும் மற்போரையே சார்ந்திருந்ததாலும் அப்போது அதிகம் பேச்சுக் கொடுத்து எயினர் தலைவனுடைய மனத்தை அவர்களால் ஆழம் பார்க்க முடியவில்லை. எயினர்களிடம் கபடு சூதுவாது இல்லையென்றாலும் அவர்கள் முரடர்களாயிருந்தார்கள். அதனால் அவர்களுடைய மனப்போக்குப்படியே போய் அதன் பின்பே எதையும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. "தேச தேசாந்திரங்களையும் கடலிடைத் தீவுகளையும் சுற்றிப் பார்க்கும் எண்ணத்தோடு யாத்திரிகர்களாக வந்திருக்கிறோம்" என்று வந்தவுடனே எயினர் தலைவனிடம் கூறிய கூற்றுக்கு மாறுதலின்றி நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருந்தது. மற்போர் முடிந்த பின்னர் - போரில் வெற்றி பெற்ற எயின மல்லனுக்கு அவர்கள் தலைவன் பரிசளித்தான். அதன்பின் மற்போர் நடந்த இடத்திற்குச் சிறிது தொலைவில் அடர்த்தியான மரக் கூட்டங்களுக்கு மேலே மற்றவற்றை விடச் சற்று விசாலமாகவும், பெரிதாகவும் அமைக்கப்பட்டிருந்த எயினர் தலைவனின் பரணிற்கு அவனோடு அழைக்கப்பட்டுச் சென்றார்கள் முடிநாகனும், சாரகுமாரனும். அரண்மனையைப் போன்று செழுமையாகவும், வளமாகவும், அமைக்கப்பட்டிருந்தது அந்தப் பரண். விருந்துண்ட பின்னர் எயினர் தலைவன் பொதுவான பேச்சுக்களைத் தொடங்கினான். "வைரம் பாய்ந்த இந்தத் தீவின் மரங்களை எல்லாம் பாண்டி நாட்டுக்கு விற்று முத்துக்களைப் பெறுகிறோம் நாங்கள். அந்த மரங்களை அவர்கள் தேர்களாகவும், கப்பல்களாகவும் அறுத்துக் கட்டுகிறார்கள். அதன் மூலம் அவர்களுடைய படைவலிமையும் பெருகுகிறது. தேர்களை அவர்கள் எவ்வளவு கட்டினாலும் - தேர்ப்படையை எவ்வளவு பெரியதாக வளர்த்தாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் எங்களுடைய மரங்களை அறுத்துக் கலங்கள் கட்டுவதை மட்டும் நாங்கள் விரும்பமாட்டோம். தேர்களால் கடல்கடந்து வந்து எங்களோடு போரிட முடியாது. ஆனால் கலங்களைச் செலுத்திக் கடல் கடந்து வந்து எங்களோடு போரிட முடியும். பாண்டிய நாட்டு அரச குடும்பத்தினர் தேர்ப் படையைப் பெருக்குவதற்காகவே மரங்கள் பெற்றுச் செல்வதாகக் கூறுகிறார்கள். ஆனால் பிறர் அறியாத வண்ணம் பொருநை முகத்துவாரத்தில் ஆற்றை ஆழமாக்கிக் கொண்டு பல்வேறு கலங்களை அவர்கள் கட்டி வருவதாக எங்களுக்குத் தெரிகிறது" - என்று எயினர் தலைவன் அவர்கள் இருவர் முகத்தையும் கூர்ந்து நோக்கிக் கொண்டே கூறியபோது, "அப்படி இருக்க நியாயமில்லை ஐயா! பாண்டிய மன்னர்கள் எதைச் செய்தாலும் பிறருக்கு வஞ்சனை புரியமாட்டார்கள்" என முடிநாகன் மறுத்துப் பார்த்தான். "உங்களுடைய தேசத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் நன்றியையும், நம்பிக்கையையும் பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் கூறியதை நான் அப்படியே ஒப்புக் கொண்டுவிட வேண்டுமென்று எதிர்பார்ப்பது தான் தவறு" - என்று தீர்க்கமான குரலில் எயினர் தலைவனிடமிருந்து முடிநாகனுக்கு மறுமொழி கிடைத்தது. இந்த மறுமொழியைச் செவிமடுத்தபின் முடிநாகனால் சிறிதுநேரம் எதுவுமே பேசமுடியவில்லை. சாரகுமாரனோ எயினர் தலைவனுடைய கடுமையான முகத்தையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அடுத்து எயினர் தலைவனே மீண்டும் பேசத் தொடங்கினான். "இப்போதெல்லாம் நாங்களும் விழித்துக் கொண்டு விட்டோம். அவர்களைப் போல் பாதுகாப்பு நலன்கள் நிறைந்த விசாலமான பூமியை நாங்கள் ஆளவில்லை. எங்களுடைய சிறிய தீவை நாங்கள் பாதுகாத்துக் கொள்வதற்கு உரிய ஒரே வழி கடல் வழி தான். தேர்களையோ, சகடங்களையோ செய்து நாங்கள் பயனடைய முடியாது. எனவே, 'நாத கம்பீரம்' அருவியாக வீழ்ந்து ஆறாகப் பெருகிக் கடலுள் கலக்கும் இடத்தில் உள்முகமாக வனத்தின் அடர்ந்த பகுதியில் ஆற்றை ஆழப்படுத்தி நாங்களே கப்பல் கட்டும் தளம் ஒன்று அமைத்திருக்கிறோம். அந்தக் கலஞ்செய் நீர்க்களத்தில் இது காறும் சில நல்ல மரக்கலங்களைக் கட்டி முடித்திருக்கிறோம். இந்தத் தீவின் கடற்காவலர்கள் அவற்றை வெள்ளோட்டமாக எடுத்துக் கொண்டு கடலின் பல பகுதிகளுக்குப் போயிருக்கிறார்கள். இனிமேல் இந்தத் தீவில் கிடைக்கும் வைரம் பாய்ந்த நல்ல மரங்கள் எல்லாம் முதலில் எங்கள் கலஞ்செய் நீர்க்களத்தை நாடித்தான் போகும்." அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. |
| இலக்கிய தகவல்கள் |
| தரவிறக்கம் |
பிற செய்திகள் |
ஆன்மீகம் |