2

     சுமதியின் கனத்த நெஞ்சகங்கள் மேலெழுந்து விம்மித் தணிந்தன. ‘நான் இவ்வளவு பிரபலமாகும் போது எனக்கு வரும் கடிதங்களைக் கவனித்துப் பதில் போட வேண்டியிருக்கும்’ என்று தனக்குத் தானே சொல்லி - அப்படிச் செயற்கையாகச் சொல்லிக் கொள்வதில் கிடைக்கும் கற்பனைச் சந்தோஷத்தில் பூரித்தாள் அவள். பத்திரிகையில் வந்திருந்த அந்த நடிகையின் அழகையும் தன் அழகையும் ஒப்பிட்டு, தான் பல மடங்கு மேலானவள் என்று முடிவு செய்து கொண்டாள் அவள். சமீபகாலமாக இப்படி எல்லாம் பைத்தியக்காரத்தனமாக ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் ஓர் இயல்பு அவளுக்கு வந்திருந்தது. ஹாஸ்டல் விழாவின் போது அவளை வானளாவத் தூக்கி வைத்துப் புகழ்ந்துவிட்டுப் போன அந்தப் பிரபல நடிகர் அவளுள் இந்த இயல்பை வளர்த்து விட்டுப் போயிருந்தார்.

     பல ஏக்கப் பெருமூச்சுகளுக்குப் பின் மேஜை மேலிருந்த அலாரம் டைம்பீஸில் மணி பார்த்தாள் சுமதி. மணி பத்தரை. சில அறைகளில் விளக்கொளி... சில அறைகளில் படிக்கும் முணுமுணுப்பு சப்தம், தவிர ஹாஸ்டல் வராந்தாவும், லவுஞ்சும் ஆளரவமற்று அமைதியாயிருந்தன. மாணவிகளில் ஒவ்வொருத்தியும் ஒரு கேரக்டர். சின்ன வயசிலிருந்து இரைந்து படித்தே பழக்கமுள்ள சிலருக்கு வாய்விட்டுப் படித்தால் தான் படித்தது போலிருக்கும். ‘ரெண்டோண் ரெண்டு’ என்று வாய்ப்பாடு மனப்பாடம் பண்ணிய ஆரம்பப்பள்ளி நாட்களின் பழக்கமே கல்லூரி விடுதிக்கு வந்த நாளிலும் சில பெண்களிடம் நீடித்தது. லவுஞ்சிலுள்ள மேஜையில் தான் மாலைத் தினசரிகளும் பேப்பர்களும் கிடக்கும் என்பது சுமதிக்கு நன்றாகத் தெரியும்.

     மாணவிகளில் பலர் ‘மாலைப் பேப்பர் வாங்கப் போகிறேன்’ என்று விடுதியை விட்டு வெளியேறியதைத் தடுக்கவும், விடுதி கேட்டில் காவல் காக்கும் வாட்ச்மேன், பியூன் மூலம் காசு கொடுத்துப் பேப்பர் வாங்கச் சொல்லி அதனால் மூளும் தகராறுகளைத் தவிர்க்கவும் வார்டன் அம்மாள் விடுதி லவுஞ்சிலேயே காலை, மாலைப் பேப்பர்களை மாணவிகள் படிப்பதற்கு நேரம் வரையறுக்கப்பட்டிருந்தது. பேப்பர்களை யாரும் அறைகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்ற நிபந்தனையும், எல்லா நேரமும் படிப்பை விட்டுவிட்டு அங்கேயே சுற்றக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தன.

     அங்கு சிறிது நேரத்திற்கு முன் சக மாணவிகள் கூட்டமாகக் கூடி அந்தப் ‘புதுமுகம் தேவை’ என்ற விளம்பரத்தைப் படித்த போது அதில் தனக்கு அக்கறையே இல்லாதது போல் ஒதுங்கி விலகி உட்கார்ந்திருந்த சுமதி இப்போது பூனை போல் ஓசைப்படாமல் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தால். வார்டனின் விதியையும் மீறி அங்கே லவுஞ்சில் கிடந்த அந்தத் தினசரியை மங்கலான வெளிச்சத்திலும் தவறாமல் அடையாளம் கண்டு எடுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பச் சென்று கதவைத் தாழிட்டாள். தான் வெளியே சென்றது, பேப்பரை லவுஞ்சிலிருந்து எடுத்தது, அறைக்குத் திரும்பியது எதுவும் யாராலும் பார்க்கப் படவில்லை என்று உறுதி செய்து கொண்டு அறையின் விளக்கைப் போட்டாள். பின்பு நிதானமாக அந்தத் தினசரியில் அந்தப் பக்கத்தைத் தேடிப் பிடித்துப் ‘புது முகங்கள் தேவை’ என்ற விளம்பரத்தைப் படிக்கத் தொடங்கினாள்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.