முன்னுரை 1960-க்கும் 75-க்கும் இடைப்பட்ட காலத்தில் சமஸ்தானங்களாக முன்பு இருந்த பழைமையான ஊர்கள், பழைமையான குடும்பங்கள் பிரதேசங்களைக் கவனித்த போது இந்தக் கதை என் மனதில் உருவாகத் தொடங்கியது. ‘கற்சுவர்கள்’ என்ற தலைப்பை ‘ஸிம்பாலிக்’ ஆகக் கொடுத்திருக்கின்றேன். முதலில் இதை ஒரு சிறுகதையாக எழுதினேன். கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ராஜமான்யம், சமஸ்தான அந்தஸ்து, எல்லாம் பறி போன பிறகு ‘அரச குடும்பம்’ - என்ற அர்த்தமில்லாத - ஆனால் வெறும் வழக்கமாகிப் போய்விட்ட ஒரு பழைய பெயரை வைத்துக் கொண்டு இப்படிக் குடும்பங்கள் பெரிய கால வழுவாகச் (Anachronism) சிரமப்பட்டிருக்கின்றன. இந்த நாவலில் மேற்படி பிரச்னைகள் அனைத்தையும் இணைத்துக் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். கதை நிகழ்கிறது. டம்பத்துக்கும் ஜம்பங்களுக்கும் ஊழலுக்கும், ஊதாரித்தனத்துக்கும் இருப்பிடமான ஒரு பழந் தலைமுறைக் கதாபாத்திரமும் வருகிறது. பரந்த நல்லெண்ணமும் முற்போக்குச் சிந்தனையும் உள்ள புதிய தலைமுறைக் கதாபாத்திரமும் வருகிறது. சமஸ்தானமாக இருந்த குடும்பங்களிலேயே ‘ஜெனரேஷன் கேப்’ எப்படி எல்லாம் இருந்தது என்பதைக் காண்பிக்கிற நிகழ்ச்சிகள் கதையில் இடம் பெறுகின்றன.
கதையின் தொடக்கத்திலேயே இறந்து போகிற பெரிய ராஜா தாம் செய்துவிட்டுச் சென்ற செயல்கள் மூலமாகக் கதை முடிவு வரை ஒரு கதாபாத்திரமாக நினைவுக்கு வருகிறார். ஒரு தலைமுறையில் அழிவும் மற்றொரு தலைமுறையின் ஆரம்பமும் நாவலில் வருகிறது. மனப்பான்மை மாறுதல்கள் கதாபாத்திரங்கள் மூலமாகவே புலப்படுத்தப்பட்டுள்ளன. மனப்பான்மை முரண்டுகளையும் கதாபாத்திரங்களே காட்டுகிறார்கள்.
ஒவ்வொரு சமஸ்தானமும் ஒரு பெரிய ‘எஸ்டாபிளிஷ்மெண்ட்’ ஆக இருந்திருக்கிறது. ‘எஸ்டாபிளிஷ்மெண்ட்’ - அழியும் போது - அல்லது சிதறும் போது ஏற்படும் குழப்பங்கள் - மனிதர்கள் சம்பந்தமான பிரச்னைகள், புலம்பல்கள், கழிவிரக்கங்கள் எல்லாம் இந்தக் கதையில் வருகின்றன. இந்நாவல் புதிய இந்திய சமூக அமைப்பில் - ராஜமான்ய ஒழிப்பு அவசியமே என்று நியாயப்படுத்தும் ஒரு கதையை வழங்குகிறது. ஒரு கதையோடு சேர்த்து நிரூபணமாகிற தத்துவங்கள் வலுப்படும் என்பது உறுதி. சமஸ்தான ஒழிப்பு, ராஜமான்ய நிறுத்தம் ஆகிய கடந்த பத்துப் பதினைந்தாண்டுக்காலப் பிரச்னைகள் - முற்போக்கான சமூக அமைப்புக்குத் தேவையான விதத்தில் இதில் பார்க்கப்படுகிறது என்பதுதான் முக்கியம். கதையில் வரும் ‘பீமநாதபுரம் சமஸ்தானம்’ - இதை விளக்குவதற்கான ஒரு கற்பனைக் களமே. இதை முதலில் நாவலாக வேண்டி வெளியிட்ட மலேயா தமிழ் நேசன் தினசரியின் வாரப் பதிப்பிற்கும் இப்போது சிறந்த முறையில் புத்தக வடிவில் வெளியிடும் சென்னை தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நா.பார்த்தசாரதி தீபம், 21-9-76 |