13 தட்சிணாமூர்த்திக் குருக்கள் வீட்டில் இளைய ராணிக்கு வாக்குக் கொடுத்து விட்டாலும் தனிப்பட்ட முறையில் அவள் ஒருத்திக்கு மட்டும் சலுகை காட்டியதாகத் தன்மேல் கெட்ட பேர் வந்துவிடுமோ என்ற தயக்கம் தனசேகரனுக்கு மனத்தில் இருந்தது. அந்த இளையராணியின் கோரிக்கை நியாயமானதாக அவனுக்குப் புரிந்த போதிலும் இந்தத் தயக்கத்தையும் முன்னெச்சரிக்கையையும் அவனால் விட்டுவிட முடியவில்லை. பல காரணங்களை முன்னிட்டு அவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்தது. இதற்கு மறுநாள் காலைத் தபாலில் தந்தை உயிரோடிருந்தபோது அங்கம் வகித்த சென்னை ஜாலிஜில் கிளப், கால்ஃப் கிளப், உறுப்பினர் கட்டணம் ஆண்டுக் கணக்கில் பாக்கி இருந்ததைக் கேட்டு அவர்கள் எழுதி இருந்த கடிதங்கள் வந்திருந்தன. பழைய பாக்கிகளைக் கட்டி விட்டு உறுப்பினர் உரிமையைத் தனசேகரன் பெயருக்கு மாற்றிக்கொள்ளும்படியும் அவர்கள் கோரியிருந்தார்கள். தந்தை பாக்கி வைத்திருந்த சில பட்டுப் புடவைக் கடைகள் நகைக் கடைகளின் உரிமையாளர்களிடமிருந்தும் அவனுக்கு வக்கீல் தோட்டீஸ்கள் வந்திருந்தன. தந்தையின் பொறுப்பின்மையால் தனசேகரன் அந்த அரண்மனையின் கோட்டைச் சுவர்களுக்கிடையே சிறை வைக்கப்பட்டதைப் போன்ற உணர்வை அடைந்திருந்தான், அவனால் நிம்மதியாயிருக்க முடியவில்லை. தனக்கு மட்டுமின்றிப் பெரிய கருப்பன் சேர்வை போன்றவர்களுக்கும் இனி அந்த அரண்மனையில் பணி புரிவதில் நிம்மதியோ நிறைவோ இல்லை என்பது அவனுக்குப் புரிந்தது. இரண்டு மூன்று தடவை தனியே சந்தித்துத் தன்னை அரண்மனைக் காரியஸ்தர் வேலையிலிருந்து விலகிக் கொள்ள அனுமதிக்குமாறு அவனை அவர் கேட்டிருந்தார். வியாபாரம், வரவு, செலவு, லாப நஷ்டங்களில் நல்ல தேர்ச்சியுள்ள மாமா தங்கபாண்டியனோ அரண்மனைச் செலவுகளைச் சிக்கனமாக்க வேண்டும் என்பதில் அளவு கடந்த வேகம் காட்டினார். தனசேகரன் சற்றே நிதானமாக இருந்தான். மாமாவின் வேகத்துக்கும் தனசேகரனின் நிதானத்துக்கும் நடுவே சிக்கிக் கொண்டு காரியஸ்தர்தான் அங்கே அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது. இந்த வேகத்துக்கும், நிதானத்துக்கும் நடுவே சிக்கிக் கொண்டு பல விஷயங்களில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் அவர் சிரமப்பட நேர்ந்திருக்கிறது என்பதை நேரடியாக இல்லாவிட்டாலும் ஜாடைமாடையாகத் தனசேகரன் புரிந்து கொண்டிருந்தான். உண்மையிலேயே இன்னும் சிறிது காலத்தில் இந்தச் சமஸ்தானத்துக்குக் காரியஸ்தர் என்று ஒருவர் தேவையில்லாமலே போய்விடலாம். ஆனால், தந்தை காலமான பின் அரைகுறையாக இருக்கும் பல பிரச்னைகள் முடிவதற்கு முன் பெரிய கருப்பன் சேர்வை, பொறுப்பிலிருந்து விலகுவதை அவன் விரும்பவில்லை. தாங்கள் ஓர் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்கள், அரண்மனையில் வாழ்ந்தவர்கள், அரச போகத்தை அநுபவித்தவர்கள், என்பதை எல்லாம் எவ்வளவு விரைவில் மறக்க முடியுமோ அவ்வளவு விரைவில் மறக்கவேண்டும் என்று எண்ணினான் அவன். புதிய சமூக அமைப்பில் ஒரு கால வழுவாக நீடிக்க அவன் விரும்பவில்லை. சாதாரண மக்களையும் தங்களையும் வேறுபடுத்திக் காட்டும் இடைவெளியாக அரண்மனையில் கற்சுவர்கள் உயர்ந்து நிற்பதை அவன் அடிக்கடி சிந்தித்தான். அந்தச் சுவர்களும் மதில்களும் ஆதிக்க உணர்வின் அடையாளங்களாக அவனுக்குத் தோன்றின. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களிடையே இருந்து தங்களைத் தனியே பிரித்தும், உயர்த்தியும் காட்டிக் கொள்ளவே அந்த மதிற்சுவர்கள் எழுப்பப்பட்டிருப்பதாக அவனுக்குப்பட்டது. சொப்பனம் முடிந்த பிறகும் கடன்பட்டாவது அதைத் தொடர்ந்து காண விரும்பினார் அவன் தந்தை, அவனோ அரச வாழ்வு, அரண்மனைச் சுகங்கள் என்ற சொப்பனங்களையே வெறுத்தான். அதிலிருந்து விடுபட விரைந்து விரும்பினான்.
“தம்பி! உங்கப்பாவுக்கு முத்தின தலைமுறையிலே பெரியவங்க கலைகள், புலவர்களையாவது வளர்த்தாங்க. உங்கப்பா அதைக்கூடச் செய்யலே. வெறும் ரேஸ் குதிரைகளைத்தான் வளர்த்தாரு. சினிமா எடுக்கறேன்கிற பேரிலே, பொம்பிளைங்கள்னு அலைஞ்சாரு. காசை வாரி இறைச்சாரு. இப்படிப்பட்ட சமஸ்தானாதிபதிகளையும், சமஸ்தானங்களையும் விட்டு வைக்கிறதை விட ஒழிச்சதே நல்லதுதான். ஒரு பணக்காரச் சோம்பேறிக் கூட்டம் யாருக்கும் பயன்படாமே நாட்டிலே வீணா வாழறதுலே என்ன பிரயோசனம்?” என்று மாமாவே ஒரு நாள் அவனிடம் ஆத்திரமாகப் பேசியிருந்தார்.
தொழில் செய்து உழைத்து லாபம் சம்பாதிப்பது மாமாவுக்குப் பிடிக்கும். ஆனால் பணம் முடக்கப்பட்டுச் சோம்பிக் கிடப்பதோ அவருக்கு அறவே பிடிக்காது. பணமோ, முதலீடோ மூலதனமோ பயனின்றித் துருப்பிடிக்கக் கூடாது என்ற கருத்து உடையவர் அவர். அவருடைய இந்த எண்ணம் தனசேகரனுக்கும் உடன்பாடுதான். இதில் மாமாவோடு அவனுக்கு இரண்டு அபிப்பிராயமில்லை. அரண்மனையையும் சமஸ்தானத்தையும் உடனே கலைத்து விடுவதால் யார் யார் பாதிக்கப்படுவார்கள் என்று சிந்தித்தபோது அதிலும் சில மனிதாபிமானப் பிரச்னைகள் குறுக்கிட்டன. தயவு தாட்சண்யங்கள் வந்தன. அங்கிருந்து வேலையை விட்டுக் கணக்குத் தீர்த்து அனுப்புகிறவர்களைப் பற்றிய பிரச்னை வந்தபோதுதான் மாமாவுக்கும் தனசேகரனுக்கும் பலத்த வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. சொத்து மதிப்பீட்டையும், கடன் மதிப்பீட்டையும் தனித்தனியே கணக்கெடுக்குமாறு இருவருமே காரியஸ்தரிடம் தெரிவித்தார்கள். “ராஜமான்யம் நிறுத்தப்பட்ட தினத்திலிருந்தே அவர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கவேண்டும் என்பதால் அரண்மனையோடு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பலர் இதுவரை அவர்களை வேலைகளில் தொடர்ந்து தங்கவிட்டதற்காகவே நன்றி செலுத்தவேண்டும்” என்றார் மாமா. அவர்கள் பிரச்னையை அவ்வளவு கறாராகவும் நிர்த்தாட்சண்யமாகவும் அணுகுவது சரியில்லை என்றான் தனசேகரன். சட்டப்படி அவர்களில் பலருக்கு நாம் காம்பென்சேஷன் தருவதற்குக் கடமைப்பட்டிருக்கவில்லை என்றார் மாமா. இதைச் சட்டப்படி அணுகுவதை விட மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் அணுகுவதுதான் சரியாயிருக்கும் என்றான் தனசேகரன். மாமாவின் நோக்கங்களில் தனக்கோ தன் குடும்பத்தினருக்கோ பாதகமான எதுவும் இருக்க முடியாது என்பது தனசேகரனுக்குப் புரிந்திருந்தாலும் சமஸ்தானப் பணிகளில் இருந்த அப்பாவிகள் யாரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான், தந்தையின் ஊதாரிக் குணங்கள் அவனுக்கு அறவே இல்லை என்றாலும், குடும்பத்தின் பரம்பரையான பெருந்தன்மைக் குணம் வேண்டிய மட்டும் இருந்தது. இளையராணிகளைத் தவிரச் சம்பளத்துக்கும் மானியத்துக்கும் வேலை பார்க்கிற அனைவரையும் தனித்தனியே வரச் சொல்லி அவரவர் அபிப்ராயங்களை நேரிலேயே கேட்டு முடிவு செய்து விடவேண்டும் என்பது தனசேகரனின் அபிப்பிராயமாக இருந்தது. “இதேல்லாம் காதும் காதும் வச்சாப்போல இரகசியமாக முடிய வேண்டிய விஷயம். பேச்சு வார்த்தைகள்னு தொடங்கிட்டா நாள் கணக்கிலே மட்டுமில்லே, மாதக் கணக்கிலே எல்லாம் ஜவ்வு மாதிரி இழுபடும்” என்றார் மாமா. “சரியோ, தப்போ, இந்த அரண்மனையையும் சமஸ் தானத்தையுமே நம்பிப் பரம்பரை பரம்பரையா இங்கே இருந்திட்டவங்களைத் திடீர்னு கணக்குத் தீர்த்து வீட்டுக்கு அனுப்பறது நல்லதில்லை. அவங்க எதிர்கால வாழ்க்கையைப்பற்றி நாம் கொஞ்சம் கவலைப்பட்டுத்தான் ஆகணும் என்று தனசேகரன் வற்புறுத்தினான். “அவசியமில்லாத தயவுகளும் கருணைகளும் பல சமயங்களில் நிர்வாகத்துக்கு இடைஞ்சலான விஷயங்கள் தனசேகரன்! நீ ரப்பர் எஸ்டேட் மானேஜரா இருந்த போதும் உன்னோட தயவுகள், கருணைகள் எல்லாம் உனக்கு அங்கே நிர்வாக இடையூறுகளாக இருந்ததை நான் கவனிச்சிருக்கேன். இப்போ அரண்மனை விஷயத்திலேயும் அதே கஷ்டம்தான். நிர்வாகம்கிறது கூரான தராசு முள் மாதிரி. நேராக நிமிர்ந்து நிற்கும் கூரான தராசு முள் மேலே வேறே எதுவும் தங்கி நிற்க முடியாது. நிறுக்கப்பட வேண்டிய விஷயங்கள் கீழே தட்டில்தான் இருக்கவேண்டும். நீயோ நிறுக்கிற முள் மேலேயே பாரத்தை ஏற்றிக் கொண்டு நிறுப்பதற்கே சிரமப்படுகிறாய். நிர்வாகி என்பவன் கறாராக இருக்க வேண்டும். இளகிய உள்ளமும், தயங்கிய எண்ணமும் நிர்வாகத்திற்குப் பெரிய இடையூறுகள். இதை நீ திருத்திக் கொள்ளாவிட்டால் வாழ்க்கையில் பின்னால் ரொம்பக் கஷ்டப்பட வேண்டியிருக்கும்” என்று மாமா விசனப்பட்டார். தனசேகரன் மனப்பான்மையினால் மிக மிக முற்போக்காகவும் அரண்மனை விஷயங்களில் படு செண்டிமெண்டலாகவும் இருந்தான். காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையும் அதே மன நிலையில்தான் இருந்தார். மாமா தங்க பாண்டியனோ அரண்மனை விவகாரங்களை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக முடித்துவிட்டுத் தனசேகரனின் கல்யாண ஏற்பாடுகளை உடனே தொடர்ந்து செய்ய விரும்பினார். அரண்மனை வரவு செலவுகள், விவகாரங்கள் முடிந்ததும் மலேசியாவுக்குக் கேபிள் கொடுத்துக் குடும்பத்தினரையும் மகளையும் வரவழைத்துத் திருமணத்தை இந்தியா விலேயே முடித்து விட்டு ஒரு வரவேற்பு வைபவத்தை மட்டும் மலேயாவில் போய் வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தார். நாட்கள் தள்ளிப்போய் வீண் கால தாமதம் ஏற்படாமல் எல்லாவற்றையும் விரைந்து முடிக்க எண்ணினார் அவர். மாமாவின் அவசரத்தினால் அந்த அரண்மனையில் முகம் தெரிந்து நன்கு பழகிய பலருக்கு விரோதியாகி விடுவோமோ என்றுதான் காரியஸ்தர் பயந்தார். அவர் அங்கிருந்து விலகிவிட விரும்பிய காரணமே அதுதான். தனசேகரனுக்கும் அது ஒரளவு புரிந்திருந்தது. இதற்கு நடுவே தங்கள் எதிர்கால நலனைப் பாதுகாக்க விரும்பிய விவரம் தெரிந்த சிலர் ‘பாலஸ் வொர்க்கர்ஸ் யூனியன் பீமநாதபுரம்’ என்ற பெயரில் ஒரு டிரேட் யூனியன் அமைப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் அவர்களுக்குத் தெரிந்தது. இதைக் கேட்டதும், மாமா காரியஸ்தர் இருவருமே யூனியன் அமைத்திருப்பவர்கள் மேல் கோபப்பட்டார்கள். “விசுவாசம்கிறதே போயிட்டுது. உப்பைத் தின்னுருக்கோம்கிற எண்ணமே இல்லையே?” என்றார் மாமா. “நீங்க சொல்றது தப்பு மாமா! விசுவாசமாயிருக்கணும்கிறது வேலை செய்யறவனுக்கு மட்டுமே வேணும்னு நீங்க நினைக்கிறீங்க. அது வேலைக்கு அமர்த்திக்கிறவனுக்கும் கூட அவசியம் வேணும். உப்பைத் தின்னதாலே என்ன கஷ்டம்னாலும் பொறுத்துக்கிட்டு மாடா உழைச்சிக்கிட்டே இருக்கணும்கிறது சுத்த மூட நம்பிக்கை. பரம்பரையாச் சுரண்டிச் சுரண்டிப் பழக்கப்பட்டவங்க ஏற்படுத்தின வாதம் அது. இனிமே அதெல்லாம் செல்லுபடி ஆகாது” என்று சிரித்தபடியே அவருக்குப் பதில் சொன்னான் தனசேகரன். “அவர்களைச் சொல்வானேன்? நீயே புதுசு புதுசா என்னென்னமோ தர்க்கம்லாம் பேசறே. சுரண்டல் அது இதுன்னெல்லாம் கூடப் புதுசு புதுசாப் பேசறியே?” “ஒண்ணும் புதுசு இல்லே. எல்லாம் உள்ளதைத்தான் சொல்றேன்.” அங்கே பீமநாதபுரத்துக்கு வந்த புதிதில் அரண்மனையின் அநாவசியச் செலவுகளையும் ஊதாரித்தனமான வழக்கங்களையும் ஒழிக்க வேண்டும் என்பதில் தன்னைவிடத் தீவிரங் காட்டிய தனசேகரன் இப்போது புதியவிதமாகப் பேசுவதேன் என்று மாமா உள்ளுர யோசித்தார். ஆவிதானிப்பட்டி பி.டபிள்யூ.டி. இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் அந்தச் சிறுகதையைப் படித்ததாக அவன் பிரஸ்தாபித்ததிலிருந்து இந்த மாறுதல் அவனிடம் இருப்பதை மாமா கவனித்திருந்தார், பெரிய ராஜாவின் டைரிகளைப் படிக்கத் தொடங்கிய பின்பும் இந்த மாறுதல் அவனிடம் வந்திருக்கலாமோ என்று தோன்றியது. பெரிய ராஜாவுடைய எரியூட்டு முடிந்ததும் தேவாரி மடத்தில் சாப்பிடுகிறவர்களுடைய எண்ணிக்கை கூடச் சிக்கனமாக இருக்கவேண்டும் என்று வாதாடிய அதே தனசேகரன் தானா இன்று இப்படிப் பேசுகிறான் என்று யோசித்தார் அவர். தன்னிடம் எதைப் பற்றியும் எதிர்த்துப் பேசாத வாதாடாத அளவு பயமும் தயக்கமும் கொண்டிருந்த தனசேகரன் இப்போது ஒரளவு துணிந்து முன் நின்று விஷயங்களைப் பேசுவதுபோல் அவருக்குத்தோன்றியது. ஆனால் அதே சமயத்தில் மாமாவும் தனசேகரனைக் கலந்து கொள்ளாமல் கூடத் தாமாகவே பல சிக்கன நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அரண்மனை எல்லைக்குள் மொத்தம் ஆறு டெலிபோன்கள் இருந்தன. அவற்றில் நாலு ஃபோன்களை எடுக்கச் சொல்லி விட்டு இரண்டு மட்டுமே போதும் என்றிருந்தார். அரண்மனை அலுவலகத்தில் குமாஸ்தாக்களின் எண்ணிக்கையைக் குறைத்திருந்தார். தேவாரப் பாடசாலை வேத பாடசாலைகள் தனித்தனியே நடப்பதைத் தவிர்த்து இரண்டையும் இணைத்து இரண்டிற்குமாச் சேர்த்து ஒரே பொது ஹாஸ்டலோடு ஓரிடத்தில் நடத்த ஏற்பாடு பண்ணியிருந்தார். இப்படி எல்லாம் நடப்பதை எதிர்பார்த்துத்தான் அரண்மனை ஒர்க்கர்ஸ் யூனியனும் தோன்றியிருந்தது. இதற்கிடையே ஒவ்வொரு மாத நாலாவது வாரத்திலும் அரண்மனை வாரிசு வகையறாக்கள் என்ற பெயரில் வெளியே சென்று படிக்கிற பிள்ளைகளுக்குப் போகிற மணியார்டர், டிராஃப்ட் வகையறாக்கள் அம்மாதம் திருத்தத்துக்கு ஆளாகியிருப்பதுபோல் தனசேகரனிடம் குறிப்பாகத் தெரிவித்தார் காரியஸ்தர். பர்மிங்ஹாம், மிக்ஸிகன், ஹைடில்பர்க் என்று எங்கெங்கோ தொலைதூர தேசத்து ஊர்களில் போய்ப் படித்துக் கொண்டிருந்த இளையராணிகளின் புதல்வர்களுக்குப் பணம் அனுப்புவதை நிறுத்தினால் கூடப் பரவாயில்லை. ஆனால் மாமா தனது வாக்குறுதியைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் கொடைக்கானலில் படிக்கிற சிறுவனுக்கும் பணத்தை நிறுத்திவிடப் போகிறாரே என்று பயந்தான் தனசேகரன். இந்தப் பயத்தினால் அரண்மனை அலுவலகத்துக்கு அவனே சிரத்தையாக நேரிலே புறப்பட்டுச் சென்று தலைமைக் குமாஸ்தாவையும் கேஷியரையும் விசாரித்தான். பணம் அனுப்புவது அறவே நிறுத்தப்பட்டிருந்தது. எந்த வித வித்தியாசமும் இன்றி வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் எல்லாருக்கும் இப்போதுள்ள பணக் கஷ்டத்தில் பெரிய ராஜா இறந்த பின் இனிமேல் யாருக்கும் எதுவும் அனுப்ப இயலாது. அவரவர்கள் அங்கங்கே ஓய்வு நேரத்தில் முடிந்த மட்டும் உழைத்துச் சம்பாதித்து அதைக் கொண்டு மேற்படிப்பை முடித்துக்கொள்ள வேண்டியது தான். வேறு வழி இல்லை-என்பது போல் தலைமைக் குமாஸ்தாவின் கையொப்பத்துடன் சுற்றறிக்கையைப் போல் ஒரு கடிதமும் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டிருந்தார் மாமா. கொடைக்கானலில் ரெஸிடென்ஷியல் பள்ளியில் படிக்கும் அந்தச் சிறுவனின் பெயரை மட்டும் சுட்டிக் காட்டி, “இந்தப் பையனுக்கு மட்டும் இப்படிக் கடிதம் அனுப்பவேண்டாம்! வழக்கம் போல் பணத்தை அனுப்பி விடுங்கள். மாமா கேட்டால் நான் வந்து சொன்ன விவரத்தைக் கூறுங்கள்” என்று தனசேகரன் தலைமைக் குமாஸ்தாவிடம் தெரிவித்தான். “உத்தரவுங்க! நீங்க சொன்னபடியே செய்கிறேன்” என்று குமாஸ்தா அதை ஒப்புக்கொண்டார். தனது இந்தச் செய்கையின் மூலம் மாமாவின் சிக்கன நடவடிக்கை களில் குறுக்கிட்டுத் தான் ஒரு சர்ச்சைக்கு வழி வகுக்கிறோம் என்று தனசேகரனுக்குத் தோன்றினாலும், சம்மந்தப்பட்ட இளையராணியிடமும் தட்சிணாமூர்த்திக் குருக்களிடமும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டோம் என்று அவனுக்குத் திருப்தியாயிருந்தது. தலைமைக் குமாஸ்தாவோ அரண்மனை அலுவலகத்தினரோ தனசேகரன் அந்த ஒரு தனிக் காரியத்தில் மட்டும் அக்கறை காட்டி அங்கே தேடி வந்ததைத் தவறாக நினைக்கவோ சந்தேகப்படவோ இல்லை. சின்ன ராஜாவே பொறுப்போடு தேடி வந்திருக்கிறார் என்று பெருமையாகத்தான் நினைத்தார்கள். மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள். அவன் கேட்காமலே வேறு சில ஃபைல்களையும் அவனிடம் காண்பித்து அவை சம்பந்தமாக என்ன முடிவு எடுப்பது என்றும் விசாரித்தார்கள். அவனும் தான் தேடி வந்தது பொதுப்படையாக இருக்கட்டும் என்று காண்பித்துக் கொள்ள விரும்புகிறவனைப் போல அந்த ஃபைல்களையும் பார்த்தான். அரை மணி நேரத்துக்கு மேல் அரண்மனை அலுவலகத்தில் செலவழித்துவிட்டு வந்தான். தன் தாய்க்கு உதவியாகவும் அனுசரணையாகவும் இருந்த இளையராணிக்குத் தான் இப்படிப் பதிலுக்கு உதவ முடிந்ததில் அவனுக்குப் பெருமையாக இருந்தது. தூண்டித் துளைத்து ஆதியோடு அந்தமாக விசாரிக்காவிட் டாலும் மாமா பின்னால் இந்தக் கொடைக்கானவில் படிக்கும் பையனுக்கு மட்டும் தான் விதிவிலக்கு அளித்திருப்பதைப் பற்றி விசாரிப்பார் என்று தனசேகரன் எண்ணினான். அவன் நினைத்தது சரியாக இருந்தது. அவன் அரண்மனைக் காரியாலயத்துக்குப் போய் விட்டுத் திரும்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் மாமா அங்கே போயிருப்பார் போலிருக்கிறது. அரண்மனை அலுவலகத்தினரிடமும் தலைமைக் குமாஸ்தாவிடமும் அவர் விசாரித்தபோது தனசேகரன் வந்ததையும் கொடைக்கானல் ரெஸிடென்ஷியல் ஸ்கூலில் படிக்கும் ஒரு பையனுக்கு மட்டும் வழக்கம்போல் மணியார்டரை அனுப்பி விடச் சொல்லி அவன் உத்திர விட்டதையும் அவர்கள் சொல்லி இருக்கவேண்டும். மாமா அடுத்த சிலமணி நேரங்களில் அவனைச் சந்தித்தபோது நேரடியாக உடனே இதைப் பற்றிக் கேட்கவில்லை என்றாலும் பெரிய ராஜாவின் இன்ஷூரன்ஸ் தொகையைக் கேட்டுப் பெறவேண்டும் என்பதைக் கூறிவிட்டு வேறு பல விஷயங்களைப் பற்றியும் விசாரித்த பின் சுற்றி வளைத்து இந்த விஷயத்துக்கு வந்தார். இறுதியில் தனசேகரனிடம் நேரிடையாகவே அவர் கேட்டார். “ஆமாம்! அதென்ன யாரோ ஒரே ஒரு பையனுக்கு மட்டும் கண்டிப்பாகப் பணம் அனுப்பனும்னு அரண்மனை. ஆபீஸ்லே சொல்லிவிட்டு வந்தியாமே! கடன் தீர்க்க வேண்டிய பாக்கிகள் நிறைய இருக்கு. பணக் கஷ்டமோ சொல்லி முடியாது. வந்து இறங்கின நிமிஷத்திலிருந்து எல்லாச் செலவுக்கும் என் கைப் பணத்தைச் செலவு பண்றேங்கிறது உனக்கே தெரியும். நீயும் நானும் நமக்குள்ளே கணக்குப் பார்க்கிறவங்க இல்லை. நீ செலவழிச்சாலும் ஒண்ணுதான். ஆனாலும் இந்த அரண்மனை நிலவரங்களைக் கட்டுப்படுத்தணும்னா உடனடியாகப் பல செலவுகளைக் குறைச்சே ஆகணும்! கருணையோ, தயவு தாட்சண்யமோ காட்டிப் பிரயோசனம் இல்லை!” “நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான் மாமா! ஆனா இந்தப் பையன் விஷயம் ஜெனியுன் கேஸ். அப்பாவோட டைரிகளைப் படிச்சதிலேயிருந்து இவன் ஒருவனுடைய படிப்புக்கான செலவை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தக் கூடாதுன்னு பட்டுது! அதனாலே தான் அதை மட்டும் அனுப்பச் சொன்னேன். இந்தப் பையனோட அம்மா ஒருத்தி மாத்திரம்தான் உங்க சிஸ்டர் அதாவது எங்கம்மா உயிரோட இருந்தவரை, அவளுக்கு ரொம்ப ஒத்தாசையா இருந்திருக்காங்க. மத்த இளைய ராணிக்ளெல்லாம் அம்மாகிட்ட அசல் சக்களத்திமார்கள் மாதிரியே பழகியிருக்காங்க. இவங்க மட்டும் ரொம்ப மரியாதையாகவும் கருணையாகவும் பழகியிருக்காங்க.” “நினைச்சேன்... ஏதாவது சரியான காரணம் இருந்தாலொழிய நீ இதை இவ்வளவு அவசரம் அவசரமாகச் செஞ்சிருக்க மாட்டேன்னு பட்டுது! உனக்கு நியாயம்னு தோணி நீ செய்திருந்தால் சரிதான். அதைப்பற்றி நான் மேலே பேசலே!” என்று ஒப்புக் கொண்டு விட்டார் மாமா. சிறிது நேரம் மாமாவும் அவனும் தங்களுக்குள்ளே பேச விஷயம் எதுவும் இல்லாததுபோல மெளனமாக அமர்ந்திருந்தார்கள். அப்புறம் மாமாதான் முதலில் அந்த மெளனத்தைக் கலைத்தார். “தனசேகரன்! என்னால் இனி மேலும் காலதாமதம் செய்ய முடியாது. முந்தா நாள் சிலாங்கூர் சுல்தான் பிறந்த நாள் விருந்துக்கு நான் கோலாலம்பூரிலே இருந்திருக்கணும்! உனக்காகத்தான் நான் இங்கே தங்க நேர்ந்திடுச்சு. ஒண்ணு, நீயே இருந்து தனியா எல்லாம் செட்டில் பண்ணிக் கொண்டு வந்து சேரணும். அல்லது நான் கூட இருக்கணும்னா ஒரு பத்துப் பதினஞ்சு நாளிலே எல்லாம் முடியணும், அதுக்கப்பறம் எனக்கு உங்க கல்யாண ஏற்பாடுகள் வேற இருக்கு” என்று கண்டிப்பாகப் பேசினார் மாமா. “நீங்க சொல்றது சரிதான். நாளையிலே இருந்து எல்லாம் வேகமாகப் பண்ணிடலாம்” என்றான் தனசேகரன். |