7

     அந்தச் சிறுகதையை விட்ட இடத்திலிருந்து தனசேகரன் மேலே படித்தான்.

     வந்து எதிரே உட்கார்ந்திருந்த சாமிநாதனிடம் இளையராஜா பூபதி மேலும் மேலும் கூறத் தொடங்கினான்:

     “எங்க ஃபாதர் உண்மையிலேயே ஒரு பெரிய மனுஷன் மாதிரியா நடந்துக்கிறாரு? இப்பத்தான் திடீர்ப் பணக்காரன் ஆன மாதிரி எதிலேயும் ஜம்பம் கொண்டாடறாரு . இங்கேருந்து மெட்ராசுக்கு முதல் வகுப்பு ரெயில் டிக்கட் வாங்கினாலும் ரிஸர்வேஷன் சார்ட்லேயும் முதல் வகுப்புலே பெட்டியின் வெளிப்புறம் ஒட்டற ஸ்லிப்பிலேயும் இடச் சுருக்கத்துக்காக வி.ஆர்.பி.பூபதின்னு போட்டாக் கூட எங்கப்பா கோபிக்கிறாரு. ‘ராஜா விஜய ராஜேந்திர சீமநாத பூபதி’ன்னு கெஜ நீளத்துக்கு முழுப் பெயரையும் போடணும்னு வற்புறுத்தறாரு. அப்படிப் போடாட்டி அந்த ரெயிலில் ஏறிப் போக மாட்டேங்கறாரு. ரயில்வே புக்கிங் கிளார்க் மேலே புகார் செய்து கடிதம் அனுப்பச் சொல்றாரு.

     ஆனால் அதே சமயத்திலே அவருக்காக வாங்கற அந்த முதல் வகுப்பு இரயில்வே டிக்கட்டை நான் எப்படி வாங்கறேன். எதை விலைக்கு விற்று வாங்கறேன்னு தெரிஞ்சாலாவது அவருக்குத் தன்னுடைய உண்மைப் பொருளாதார நிலைமை ஓரளவு புரியும். நல்ல வேளையா இந்த அரண் மனையிலே பழைய விலைக்கு எடை பேசிப் போடவும், விற்கவும் இன்னும் நிறையத் தட்டுமுட்டுச் சாமான்களும், கண்டான் முண்டான் பண்டங்களும், பாத்திரங்களும் ஏராளமாக மீதமிருக்கின்றன. அந்தக் காலத்திலே நவராத்திரி சதஸ், மன்னர் பிறந்த நாள் அன்னதானம், வனபோஜனம் என்று பல விசேஷ வைபவங்களில் ஆயிரம் பேர் இரண்டாயிரம் பேருக்கு ஒரே சமயத்தில் சோறு வடிக்க சாம்பார் வைக்க என்கிற உபயோகங்களுக்காக ஏராளமான அண்டாக்கள், குண்டாக்கள், தூக்கு வாளிகள், பாத்திரங்கள் எல்லாம் இங்கே ஒரு கட்டிடம் நிறைய அடைஞ்சு கிடைக்குது. இப்போதெல்லாம் இந்த விட்டின் மாதாந்திர வரவு - செலவுகளே அப்படிப் பாத்திரம் பண்டங் கள், பழைய தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுத்தான் நடக்கிறது. கீழவெளி வீதியிலே உள்ள சோமநாத நாடார் பாத்திரக் கடையிலே பின் பக்கமாப் போய் நீங்க நுழைஞ்சா அங்கே எங்க பாத்திரங்களை அடிச்சு உடைச்சு நொறுக்கிப் புதுப்புதுப் பாத்திரமா மாத்தறதுக்காக உருக்கிக் கொண்டிருப்பாங்க. அந்தப் பழைய காலத்துப் பெரிய பாத்திரங்களிலே ரெண்டு மூணு ஆள் கூட உள்ளாரப் புகுந்து உட்காரலாம். எல்லாம் அந்தக் காலத்துப் வார்ப்படம். இப்ப விற்கிற காப்பர் விலை, பித்தளை விலையிலே அதை எல்லாம் நல்லா விற்க முடியுது. பழைய பாத்திரங்களிலே கண் பார்வைக்கு நல்லாப் படறாப்பிலே, ‘பாலஸ் சீமநாதபுரம்’னு பேர் வெட்டியிருக்காங்க. கடைக்காரரு அந்தப் பாத்திரங்களை எங்ககிட்டேருந்து பழைய விலைக்கு வாங்கி அடிச்சு உடைச்சு நொறுக்கி உருக்கறப்போ எப்படி அந்தப் பேர்கள் அழிஞ்சு போயிடுமோ அப்பிடியே எங்களைக் குறித்த காலத்துக்கும், மணிபர்ஸுக்கும் ஒத்து வராத டம்பங்களும், ஆடம்பரங்களும், இன்றும் இனி மேலும் என்றும் அழிந்துவிட வேண்டும் என்று தான் நானே ஆசைப்படுகிறேன்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.