17 தனசேகரனிடம் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்ட போது அவன் எந்தவிதமான பரபரப்பும் அடையவில்லை. மாவட்டக் கலெக்டருக்கு அதைப் பற்றித் தகவல் தெரிவிக்குமாறு காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையை வேண்டிக் கொண்டான் அவன். சேர்வைகாரர் கொஞ்சம் தயங்கியது போலத் தோன்றியது. “காண்ட்ராக்ட்காரங்க கிட்டப் பேசி அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே...? இதைப் போயி கவர்மென்ட்கிட்டச் சொல்லணுமா?” என்று வாய் திறந்தே அவனைக் கேட்கவும் செய்தார் அவர். தனசேகரன் சொன்னான்: “முறைப்படி அவங்களுக்குத் தகவல் சொல்லிவிட்டு அப்புறம் புதையலை நம்ம மியூசியத்திலே வச்சிக்க அனுமதி கேட்கலாம்.” “கவர்மெண்டிலே ஒண்ணை நீங்களாப் போயி வலுவிலே சொல்லிட்டீங்கன்னா அப்புறம் எல்லாத்துக்குமே அவங்க வந்து நின்னுடுவாங்க. எதையும் அவங்ககிட்டவே ஒப்படைச்சாகணும்.” “வரட்டுமே? அதனாலே என்ன தப்பு? நல்லதுதானே? அவங்களுக்குத் தெரியாமே நாம எதுவும் பண்ணணும்னு நெனைக்கலியே? நமக்கு எதுக்குப் பொதுச் சொத்து?" காரியஸ்தர் கலெக்டருக்குத் தகவல் தெரிவிக்கச் சென்றார். அரண்மனை எல்லைக்குள்ளே கிடைத்த ஒரு புதையலைப் போப் இளையராஜா அரசாங்கத்துக்குத் தெரிவிக்கச் சொல்கிறாரே என்று காரியஸ்தருக்குச் சடைவாகத்தான் இருந்தது. அணைக்கட்டுக்காகக் கல் எடுத்துக் கொள்ளும் இன்ஜீனியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியுடன் செய்து கொண்ட உடன்படிக்கையில் சுவரை அழித்துக் கற்களை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று தான் தெளிவாக இருந்தது. உடன்படிக்கையின்படி புதையலை அவர்கள் எடுத்துக் கொள்வது என்பது சாத்தியமே இல்லை. அது தனசேகரனுக்கும் தெரியும். அரசாங்கத்துக்குத் தெரிவித்துவிட்டு மியூசியத்தில் அந்தப் புதையலில் அடங்கிய பொருள்களை வைக்கலாம் என்று தனசேகரன் கூறியதுதான் காரியஸ்தருக்குப் புரியவில்லை.
மியூஸியத்தில் வைப்பதால் தனசேகரனுக்கு ஒரு பிரயோசனமும் இல்லையே என்றுதான் அவர் யோசித்தார். மியூஸியத்தில் வைத்து விடுகின்ற தங்கத்தை மறுபடி எடுக்க முடியாதே என்று தயங்கினார் அவர். கற்சுவர் ஓரிடத்தில் தகர்க்கப்பட்டு அந்த இடைவெளியின் வழியாக ஊர் தெரிந்ததும் எதையோ வேண்டாததைத் தகர்த்து வேண்டியதைப் பார்த்து விட்டதுபோல் தனசேகரனுக்குத் திருப்தியாக இருந்தது. மதிற்சுவர்களை ஒட்டியிருக்கும் கட்டிடத்தோடு கூடிய கோவில்களையும் திறந்த வெளிக் கோவில்களையும் எந்தச் சேதத்துக்கும் இடமின்றி அப்படியே பத்திரமாக விட்டுவிட வேண்டும் என்று அணைக்கட்டுக் குத்தகைதாரர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களும் அதற்கு இசைந்திருந்தார்கள். அந்த விஷயத்தில் உள்ளூர்ப் பொது மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்க விரும்பினான் தனசேகரன்.
அந்த அரண்மனையின் கற்சுவர்கள் நூற்றுக்கணக்கான வேலையாட்கள் மூலம் நாலாபுறமும் இடிக்கப்படுகிற அவசரத்தைப் பற்றிப் பொதுமக்கள் பலரும் பலவிதமாகப் பேசத் தொடங்கியிருந்தார்கள். சுவர்களை இடித்துவிட்டு அந்த இடத்தை அப்படியே ஒரு பெரிய ஹோட்டலாக மாற்றிவிடப் போவதாகச் சிலர் பேசிக் கொண்டார்கள். கட்டிடங்களையும் மாளிகைகளையும் தகர்த்துவிட்டு ‘பீமநாதநகர்’ என்ற பெயரில் ஒரு வீடு கட்டும் திட்டத்தை இளையராஜா தொடங்கப் போவதாக மற்றும் சிலர் பேசிக் கொண்டார்கள். விவரம் தெரிந்து தனசேகரனின் மனப் போக்கையும் நன்கு புரிந்து கொண்ட சிலர்தான் அங்கே ஒரு பெரிய மியூஸியமும் நூல் நிலையமும் வர இருக்கின்றன என்பதை உண்மையாகவே உணர்ந்திருந்தனர். வதந்திகள் செழித்துப் படர்வதற்கு இந்திய நாட்டு நடுத்தர ஊர்களில் எந்த உரமும் போட வேண்டியதில்லை. அவை தாமாகவே வளர முடியும். தாமாகவே பரவ முடியும். பீமநாதபுரமும் இதற்கு விதிவிலக்காக இல்லை. சிலருடைய கற்பனை ஓர் எல்லையே இல்லாத அளவிற்கு வளர்ந்து படர்ந்திருந்தது. பெரிய ராஜா பட்டனத்தில் நடத்தத் தொடங்கித் தோற்றுப் போயிருந்த சினிமாக் கம்பெனியை அரண்மனைக் கட்டிடத்துக்குக் கொண்டு வந்து அதையே சினிமா ஸ்டூடியோவாகவும், புரொடக்ஷன் செண்டராகவும் தனசேகரன் மாற்றப் போகிறான் என்று கூட ஒரு செய்தி ஊர் மக்களிடையே பரவி இருந்தது. அதற்காகத்தான் மதிற்சுவர்கள் இடிக்கப் படுகின்றன என்றும் அப்படிப்பட்டவர்கள் காரணம் கற்பித்தார்கள். மாமா தங்கபாண்டியனுக்கும், காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கும், தனசேகரனின் சில செய்திகள் பற்றித் தயக்கங்கள் இருந்த போதிலும் வெளிப்படையாக முரண்பட்டு அவர்கள் அவனை மறுக்கவில்லை. அரண்மனையைப் பற்றிய எந்த விவகாரத்திலும் முடிவெடுக்கத் தனசேகரனுக்கு முழு உரிமையும் இருக்கிறது என்பதை அவர்கள் நம்பினார்கள். தனசேகரன் செய்த காரியங்கள் சிலவற்றில் அவர்களுக்கு உடன்பாடில்லை என்றாலும் அவன் நியாயமாகவும், ஒளிவு மறைவின்றியும் இருக்கிறான் என்பது அவர்களுக்குப் பிடித்திருந்தது. புதையலை அரசாங்கத்திடம் சொல்ல வேண்டியதுதான் முறை என்று தனசேகரன் பிடிவாதமாக இருந்ததைக் கூட அவர்கள் விரும்பவில்லை! எனினும் சொத்துச் சேர்க்க வேண்டும் என்ற ஆசையோ, பேராசையோ அவனுக்கு இல்லாதது அவர்களுக்கு அவன் மேல் மிகுந்த நன்மதிப்பை உண்டாக்கியது. மறுநாள் அரசாங்கப் புதைபொருள் இலாகா இயக்குநரும், அதிகாரிகளும் பீமநாதபுரம் வந்து சேர்ந்தார்கள். புதையலில் அடங்கிய தங்க நாணயங்களில் பீமநாதபுரம் அரண்மனை முத்திரை இருந்தது. புதையல் பானை திறக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையிலும் தனசேகரன் முன்னிலையிலுமாகப் பரிசோதிக்கப்பட்டது. அதிகாரிகள் புதையல்களைப் பற்றிய நடைமுறைகளைத் தெரிவித்தார்கள். “எல்லாப் புதையல்களும் அரசாங்கத்துக்குத்தான் சொந்தம்! இதில் விதிவிலக்கு எதுவும் கிடையாது.” “எனக்கு ஆட்சேபணை இல்லை. தங்கத்துக்கு ஆசைப்பட்டோ, ‘எங்கள் அரண்மனை எல்லையில் கிடைத்த சொத்து’ என்று உரிமை கோரியோ நான் இந்தப் புதையலைக் கேட்கவில்லை. பீமநாதபுரம் அரண்மனையையே நான் ஒரு மியூஸியமாக மாற்றப் போகிறேன். இந்தத் தங்கக் காசுகளை அப்படியே அந்த மியூஸியத்தில் வைக்கலாம் என்பதுதான் என் நோக்கம். எங்கே எப்போது கிடைத்த காசுகள் என்ற விவரத்தை எழுதி வைத்துவிட்டால் இது வரலாற்றின் ஒரு சின்னமாக இருக்கும்” என்றான் தனசேகரன். அதிகாரிகள் கொள்கை அளவில் அதை ஏற்றுக் கொண்டார்கள். அதோடு ஒரு சிறிய ஆட்சேபணையையும் தெரிவித்தார்கள். “மியூஸியத்தில் வைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை ஏற்கிறோம். ஆனால் ஒரே மாதிரி உருவ அமைப்புள்ள ஒரு குடம் தங்கக் காசுகளையும் எதற்காக மியூஸியத்தில் வைக்க வேண்டும் மாதிரிக்கு ஒன்றோ இரண்டோ வைத்தால் போதுமே? முழுக் குடத்தையுமே வைப்பதற்கு அரசாங்க அநுமதி கிடைப்பது கஷ்டம். ஒரு காசு இரண்டு காசுகளை வைப்பதற்கு வேண்டுமானால் மேலே இலாகாவுக்கு எழுதி அநுமதி வாங்கித் தருகிறேன்” என்றார் அதிகாரி. தனசேகரன் அதற்கு இசைந்தான். புதையல் காசுகள் வைக்கப்பட்டு இருந்த குடத்தையும் மாதிரிக்கு ஒன்றிரண்டு தங்கக் காசுகளையும் கொடுத்தால் போதுமானது என்று தனசேகரன் இசைந்தது அதிகாரிக்கு ஆச்சரியத்தை அளித்தது. வீண் முரண்டும், டாம்பீகமும், எதற்கும் விட்டுக் கொடுக்காத இயல்பும் உள்ள மன்னர் குடும்பங்களில் இப்படிச் சுபாவமான மனிதர்களும் இருக்கிறார்களே என்பதுதான் அதிகாரியினுடைய ஆச்சரியத்துக்குக் காரணமாயிருந்தது. அரசாங்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டபடி பீமநாதபுரம் அரண்மனைக்கும், அரச குடும்பத்துக்கும் வாரிசு என்ற முறையில் தனசேகரன் புதையலின் மாதிரிகள் சிலவற்றை மியூஸியத்தில் வைப்பதற்காகத் திருப்பித் தர வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிற மனு ஒன்றை எழுதிக் கொடுத்தான். மேலேயிருந்து உத்தரவு கிடைத்ததும் சில காசுகளையும் பிறவற்றையும் உடனே திரும்பக் கிடைக்கச் செய்வதாகக் கூறிவிட்டுப் புதையலை ஸீல் செய்து எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள் அதிகாரிகள். புதையல் சம்மந்தமான அதிகாரிகள் அரண்மனைக்கு வந்து விட்டுத் திரும்பிப்போன மறுநாள் காலையில் யாரும் எதிர்பாராத விதமாகக் கோமளீஸ்வரன் சென்னையிலிருந்து புறப்பட்டு வந்து சேர்ந்தான். அவன் வந்த தினத்தன்று மாமாவும், காரியஸ்தருமாகப் பரிமேய்ந்த நல்லூர்க் கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும். புதிதாகச் செய்த ஒரிஜினல் தங்க நகைகளைச் சார்த்துவதற்காகப் புறப்பட்டுப் போயிருந்தார்கள். அதிகாலை ஐந்து மணிக்கே காரில் இருவரும் பரிமேய்ந்த நல்லூருக்கு நல்லநேரம் பார்த்துப் பயணப்பட்டிருந்ததால் பீமநாதபுரம் அரண்மனையில் தனசேகரன் மட்டும்தான் இருந்தான். புதிய மியூஸியத்தையும் அதன் இண்டீரியர் டெகரேஷன் ஏற்பாடுகளையும் அன்று பகலில் சுற்றிப் பார்ப்பதற்குத் திட்டமிட்டிருந்ததால் தனசேகரன் பரிமேய்ந்த நல்லூருக்குப் போகவில்லை. கோவில் விஷயம் என்பதனால் வயதும் அநுபவமும் மிக்க மாமாவும், காரியஸ்தரும் போனாலே போதும் என்று தனசேகரன் நினைத்திருந்தான். இந்த நிலையில்தான் சென்னையிலிருந்து கோமாளிஸ்வரன் என்று மாமா கேலியாக அழைக்கும் கோமளீஸ்வரன் அன்று காலை விடிந்ததும் விடியாததுமாக வந்து சேர்ந்திருந்தான். கப்பலைப் போல, நீளமான ஒரு பெரிய காரில் தனி ஆளாக வந்து இறங்கியதனால் அரண்மனை ஊழியர்கள் மருண்டு போய் அவனை உள்ளே விட்டு விடத் தயங்கவில்லை. கோமளிஸ்வரனும் அரண்மனையில் உள்ளவர்களைத் தந்திரமாக அணுகினான்: “சென்னையிலிருந்து சினிமா டைரக்டர் கோமளிஸ்வரன் சந்திக்க வந்திருக்கிறார்” என்று சொல்லி அனுப்பினால் தனசேகரன் எங்கே சத்திக்க மறுத்து விடுவானோ என்று பயந்து, “மெட்ராஸ்லே இருந்து பெரிய ராஜாவின் பழைய நண்பர் ஒருத்தர் தேடி வந்திருக்கார்னு சொல்லுங்க” என்பதாகத்தான் உள்ளே தனசேகரனுக்குத் தகவல் சொல்லி அனுப்பினான் அவன். ‘மாமாவும் காரியஸ்தரும் ஊரில் இல்லை. பரிமேய்ந்த நல்லூர் போயிருக்கிறார்கள்’ என்பதை வந்தவுடன் விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்த கோமளிஸ்வரன், அபாரமான துணிச்சலை அடைத்திருந்தான். பெரியகாரில் வந்திறங்குகிறவர்கள் பெரிய மனிதர்களாகத் தான் இருக்க வேண்டும் என்கிற பாமர எண்ணம் அரண்மனை ஆட்களுக்கு இருந்ததால் அவர்கள் சில உள் விஷயங்களை, மிகவும் நம்பிக்கையோடும் மதிப்போடும் கோமளிஸ்வரனிடம் சொல்லியிருந்தார்கள். நடிகை ஜெயநளினியிடம் சொல்லிப் பீமநாதபுரம் அரச குடும்பத்து வாரிசான தனசேகரனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டு அவனை நேரில் பார்த்துப் பேரம் பேசவும் வந்திருந்தான் கோமளிஸ்வரன். வக்கீல் நோட்டீஸ் அனுப்பச் செய்ததுமே தனசேகரன் மிரண்டு போய் ராசி பேசுவதற்கு வந்து தாங்கள் கேட்கிற பணத்தைக் கொடுத்து விட்டுப் போய் விடுவான் என்று கோமளிஸ்வரன் எதிர்பார்த்ததற்கு மாறாக அரண்மனைத் தரப்பில் பதில் வக்கீல் ஏற்பாடு செய்யப்பட்டு வழக்கை எதிர்கொண்டது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனவேதான் மறுபடியும் நேரில் வந்து நயமாகவும் பயமாகவும் பேசி எதையாவது பணம் பறிக்கலாம் என்று நினைத்திருந்தான் அவன், உண்மையில் தேடி வந்திருப்பது அவன்தான் என்று தெரிந்திருந்தால் தனசேகரன் அவனைச் சந்தித்திருக்கவே மாட்டான். சாமர்த்தியமாக உள்ளே நுழைந்து தனசேகரனுக்குப் பெரிய கும்பிடாக ஒரு கும்பிடு போட்டான் கோமளிஸ்வரன். “அடடே! நீங்கதானா? வேறே யாரோன்னில்லே நினைச்சேன்” என்று தனசேகரன் சுவாரஸ்யமற்றுப் போன குரலில் சொன்னான். “சின்னராஜாவை எப்படியாவது தனியாகப் பார்க்கணும்னு மெட்ராஸ்லேருந்து கார்லியே புறப்பட்டு வந்திருக்கேனுங்க. நான் ஆசைப்பட்டாப்லியே உங்க தரிசனம் கிடைச்சிரிச்சு. ரொம்ப சந்தோஷம். எப்பவும் போல இந்த அரண்மனையோட கிருபை எங்களுக்கு இருக்கணும். நாங்கள்ளாம் இந்த அரண்மனை உப்பைத் தின்னு வளர்ந்தவங்க. சின்னராஜாகிட்டத் தனியா இதைச் சொல்லி விட்டுப் போகணும்னுதான் வந்தேன்.” “அப்படியா இதுக்காகவா இத்தனை சிரமப்பட்டு இவ்வளவு தூரம் வந்தீங்க? இப்போ இனிமேல் இங்கே அரண்மனையும் கிடையாது, ராஜாவும் இல்லே. உங்க விசுவாசத்துக்கும் அவசியம் இல்லே. அதுக்கப்புறம் சொத்திலே உரிமை கோரி வக்கீல் நோட்டிஸ் விடவேண்டிய அவசியமும் இருக்காது” என்று தனசேகரன் பதில் சொல்லியதும் அவன் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறான் என்பது கோமளிஸ்வரனுக்குப் புரிந்தது. “உங்க கோபத்துக்குக் காரணம் இப்போ புரியுது சின்னராஜா! ஜெயநளினி யாரோ தூண்டிவிட்டு நோட்டீஸை அனுப்பிவிட்டு அப்புறம் தவியாக்கெடந்து தவிக்குது. மனசு கேட்கலே. சின்னராஜா அத்தனை தங்கமான மனசு உள்ளவரு. அவருக்கா நோட்டீஸ் அனுப்பினோம்னு வேதனைப்படுது. அது விஷயமாகத்தான் நானே இப்போ இங்கே புறப்பட்டு வந்தேன்.” “வக்கில் நோட்டீஸ் அனுப்பினப்புறம் எதுக்காக வேதனைப்படனும்? எல்லாம் கோர்ட்டிலே வந்து பார்த்துக்க வேண்டியதுதானே?” “அப்படிச் சொல்லிடப்படாது. தயவு பண்ணிச் சின்னராஜா கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கணும். நளினிக்குக் குழந்தை மாதிரி மனசு. அது உங்க மேலேயும் ராஜா குடுமபத்து மேலேயும் கொள்ளைப் பிரியம் வச்சிருக்கு.” “இங்கே யாரும் யாரோட பிரியத்துக்காகவும் தவிச்சுக் கிடக்கலே. இந்த மாதிரிப் பிரியங்களுக்கு எல்லாம் விலை கொடுக்கிற வசதியும் இப்போ எங்களுக்கு இல்லே.” “சின்னராஜா இப்படி எடுத்தெறிஞ்சுப் பேசிடப்படாது. ராஜா குடும்பத்தார் ஜெயநளினி மேலேயும் ஜெய நளினி ராஜா குடும்பத்தார் மேலேயும் எவ்வளவு பிரியமா இருந்திருக்காங்கன்னு இந்த ஆல்பத்தைப் பார்த்தீங்கன்னாத் தெரியும். பெரிய மகாராஜா இந்த ஜெயநளினி மேலே உயிரையே வச்சிருந்தாங்க” என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரிய ஆல்பத்தை எடுத்து நீட்டினான் கோமளீஸ்வரன். தனசேகரன் முதலில் அதை வாங்குவதற்கே தயங்கினான். அப்புறம் வழக்குக்குத் தேவையான எதுவும் அதில் இருக்குமோ என்ற யோசனை வரவே வேண்டா வெறுப்பாக அதை வாங்கினான். கோமளீஸ்வரன் வாயெல்லாம் பல்லாக அருகே நின்று ஆல்பத்திலிருந்து ஒவ்வொரு படத்துக்கும் விளக்கம் கூறத் தொடங்கி விட்டான். படங்களைப் பார்க்கப் பார்க்கத் தனசேகரனுக்கு வயிற்றெரிச்சலாக இருந்தது. ஆல்பத்தில் பல படங்கள் பிளாக்மெயில் செய்ய முயல்வது போலிருந்தன. பெரிய ராஜா நடிகை ஜெயநளினியின் கழுத்தில் முத்துமாலை அணிவது போல் ஒரு படம். அது பெரிய ராஜா அவளுக்குப் பின்புறமாக நின்று அவளைத் தழுவினாற்போல முத்துமாலையை அவள் கழுத்தில் பூட்டுகிறாற் போல எடுக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் நெருக்கமாகவே இருந்தது. ஆல்பத்தை மேற்கொண்டு பார்ப்பதை அப்படியே நிறுத்திக் கொண்டு, “என்னய்யா கோமளீஸ்வரன்! இந்தப் படங்களையெல்லாம் காண்பிச்சு என்னை மிரட்டிப் பார்க்கலாம்னு புறப்பட்டு வந்தீரா?” என்று தனசேகரன் கோமளிஸ்வரனைக் கேட்டான். இப்போது அவன் குரலில் சூடேறி இருந்தது. “சிவசிவா! நீங்களே இப்படிச் சொல்லலாமா? சின்ன ராஜா தயவு வேணும்னு நான் புறப்பட்டு வந்திருக்கேன். நீங்கதான் தயவு பண்ணனும்.” தனசேகரன் கோமளீஸ்வரனை நிமிர்ந்து பார்த்தான். இந்த வார்த்தைகளை அவன் உண்மையிலேயே விநயமாகத்தான் சொல்கிறானா அல்லது வஞ்சமாகச் சொல்கிறானா என்பதை ஊடுருவி அறிய முயன்றான் தனசேகரன். கோமளீஸ்வரனோ கெஞ்சினான். அந்த ஆல்பத்தை மேற்கொண்டு பார்க்கப் பார்க்கத் தனசேகரனுக்கு அருவருப்பு ஏற்பட்டது. தன் தந்தையோடு கூட இருந்த படங்கள் முடிந்து ஜெயநளினி தனியே ஜாக்கெட்டோடு, அரை டிராயரோடு, பனியனோடு, ப்ராவோடு எடுக்கப்பட்ட கவர்ச்சிப் படங்களே அதில் நிறைய இருந்தன. அந்தப் படங்களைப் பார்த்துத் தனசேகரன் முகம் சுளிப்பதைக் கண்டு, “தப்பா நினைக்காதிங்க. உங்க அம்மா மாதிரி நல்ல மனசு அவங்களுக்கு” என்றான் கோமளிஸ்வரன். “தப்பா நினைக்காமே பின்னே எப்படி ஐயா நினைக்கிறது? எங்கம்மா மாதிரீன்னு சொல்லி எங்கம்மாவை நீர் அவமானப்படுத்தக் கூடாது. எங்கம்மா தெய்வம் ஐயா! இப்படிக் கோலத்திலே எல்லாம் எங்கம்மா மட்டுமில்லே உலகத்திலேயே எந்த அம்மாவும் தோன்ற மாட்டாங்க.” “கலை அம்சத்தை மட்டும் பார்த்தா எதுவும் தப்பாத் தெரியாதுங்க.” “ஒகோ! கலை அம்சத்தைப் பற்றி நீர் பாடம் சொல்லிக் கொடுத்துத்தான் நான் இனிமேல் தெரிஞ்சுக்கணுமாக்கும்.” “இல்லீங்க. ஜெயநளினி தங்கமான பொண்ணு. பெரியவரு மாதிரியே எப்பவும் போல நீங்களும் அங்கே வந்து போயிட்டிருக்கணும்னு ஆசைப்படுதுங்க. உங்க கிருபை வேணும்னு நினைக்குதுங்க.” கோமளிஸ்வரன் இதைச் சொல்லிய வீதம் மிகவும் கொச்சையாயிருந்தது. எப்போதோ எங்கோ மிகவும் அரட்டைக்காரனாக சம வயது இளைஞன் ஒருவனிடம் கேட்டிருந்த, ‘அப்பன் வருவான் அதன் பின் மகன் வருவான், தப்பென்று கொள்ளாதே’ என்ற பழம் பிரபந்தப் பாடல் வரிகள் இப்போது தனசேகரனுக்கு மீண்டும் நினைவு வந்தன. உடல் அருவருப்பு உணர்ச்சியால் சிலிர்த்து நடுங்கி ஓய்ந்தது. சினிமா உலகத்தின் பை-புராடெக்ட் ஆக விபசாரம் வளர்ந்து வருவது தனசேகரனுக்குப் புரிந்தது. விபசாரத்திற்காக தரகர்கள் எங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். கொஞ்சம் கூட வெட்கமின்றி நாகரிகமான உரையாடலுடன் ஆடம்பரமான கார்களில் வந்து இறங்கி ஒரே பெண்ணைத் தந்தைக்கென்றும், மகனுக்கு என்றும் அடுத்தடுத்துப் பேரம் பேசுகிற தரகர்கள் நாட்டில் பெருகி விட்டது கண்டு தனசேகரனுக்கு வருத்தமாக இருந்தது. கடைசியில், “சின்னராஜாவாப் பார்த்து ஏதாச்சும் போட்டுக் குடுத் தீங்கன்னாக் கேஸை வாபஸ் வாங்கச் சொல்லிடலாம். வீண் மனஸ்தாபம் வேண்டியதில்லே” என்று ஆரம்பித்தான் கோமளிஸ்வரன். “யாருக்கு யார் என்ன கொடுப்பதற்கு இருக்கிறது? நீரு உம்ம வேலையைப் பார்த்திட்டுப் போய்ச் சேரும். எதை எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்” என்று தனசேகரன் கடுமையாகப் பதில் கூறிய பின்னும் கோமளீஸ்வரன் போகவில்லை. சொல்லத் தொடங்கினான்: “நீங்க அப்படிச் சொல்லிடப்படாது. பணமா பெரிசு? அவங்களுக்கும் உங்களுக்கும் சிநேகிதம் நீடிக்கணும். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறதை எங்கண்ணாலே பார்க்கணும்.” “அடச்சீ! போய்யா... அசிங்கம் பிடிச்சாப்ல உளறிக்கிட்டிருக்கே. யாரிட்ட என்ன பேசறதுன்னே மரியாதை இல்லாமப் போயிரிச்சு” என்று தனசேகரன் இரைந்தபோது கோமளீஸ்வரனை அந்த வினாடி வரை அழைத்துக் கொண்டிருந்த பன்மை மரியாதை கூட நழுவி விட்டது. “தயவு பண்ணுங்க” என்று மறுபடி கோமளிஸ்வரன் குழைந்த போது “ஒரு தயவும் இல்லே! நீ பார்க்க வேண்டியதைக் கோர்ட்டிலே பார்த்துக்க” என்று கூறிவிட்டு ஆல்பத்தை அவன் மேல் வீசி எறிந்தான் தனசேகரன். அந்த அவமானத்தையும் தாங்கிக் கொண்டு மேலே ஏதோ சொல்ல முயன்றான் கோமளீஸ்வரன், ஆனால் தனசேகரன் அதற்குள் எழுந்து போய் விட்டான். வேறு வழி இல்லாத காரணத்தால் ஆல்பத்தை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பினான் கோமளீஸ்வரன். |