4 தனசேகரனையும் அரண்மனைக் காரியஸ்தரையும் மிரட்டி ஏதாவது பணம் பறித்துக் கொண்டு போகலாம் என்று எண்ணிய சினிமா டைரக்டர் கோமளீஸ்வரன் விவகாரஸ்தரும், கறாரானவரும் ஆகிய தனசேகரனின் தாய் மாமன் தங்கபாண்டியன் உடனிருந்த காரணத்தால் பயந்து ஒடுங்கிப் பேசாமல் சென்னைக்குத் திரும்ப வேண்டி யதாயிற்று. பீமநாதபுரம் அரண்மனை எல்லைக்குள்ளிருந்த ஒரு பெரிய விருந்தினர் விடுதியை முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நட்சத்திரக் கும்பல் வெளியேறி ஊர் திரும்பியதுமே, அரண்மனையில் வெளியிலிருந்து வேடிக்கை பார்க்க வரும் அநாவசியமான கூட்டம் குறைந்து விட்டது. பெரிய மகாராஜாவை எரியூட்டிய தினத்தன்று இரவே நெருங்கிய உறவினர்களையும் அரண்மனைக் காரியஸ்தரையும் கலந்து கொண்டு தனசேகரனை அருகில் வைத்துப் பல பிரச்னைகளுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டார் மாமா. அடித்துப் பேசி வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக விஷயங்களை அவரால் முடிக்க முடிந்தது. சுபாவத்திலேயே இளகிய மனமும் எளிமையும், பிறர் முகம் வாடப் பேசிப், பழக்கப்படாத இயல்பும் உள்ளவனாக இருந்த தனசேகரன், மாமா பிரச்னைகளை ஒவ்வொன்றாகத் தீர்த்து வைத்த, வேகத்தைப் பார்த்து வியந்தான். மாமாவின் விவகார ஞானம் அதிசயிக்கத்தக்கதாயிருந்தது. கடைசியாக மாமா இளையராணிகள் பிரச்னையைப் பற்றி ஆரம்பித்த போது காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை தம் மனத்திலிருந்த சில விஷயங்களை வெளிப்படையாகச் சொன்னார். அவை மிக மிகக் கசப்பானவையாக இருந்தன. “நீங்க இந்தப் பிரச்னையை எப்படித் தீர்த்துக்கட்டிக் சண்டை சச்சரவு இல்லாமே சுமுகமா அவங்களை வெளியே அனுப்பப் போறீங்கன்னு எனக்குப் புரியவே இல்லை. அவங்க விஷயம் வரவரப் பெரிய நியூஸன்ஸாப் போச்சு. அரண்மனைப் பாத்திரங்களிலே இருந்து தோட்டத்து விறகுக்கட்டை வரை எதை எடுத்தும் விலைக்கு வித்துப் புடறாங்க, வாசனைச் சோப்பு, ஃபேஸ்பவுடர், ஷாம்பூன்னு அவங்க அத்தனை பேருக்கும் பொழுது விடிஞ்சாப் பொழுது போனா எத்தினி எத்தினியோ செலவுக்குப் பணம் தேவைப்படுது. கைக்கு அகப்பட்டதை எடுத்து வித்துடறாங்க. பஜார்லே அரண்மனை முத்திரையோட கூடின பண்டங்கள் ‘ஸெகண்ட்ஹேண்ட்’ விற்பனைக்குப் போறதுங்கிறது இப்பல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாப் போச்சு. அந்த மாதிரி வெளியிலே விற்பனைக்குப் போற பண்டங்களிலே சிலது போலீஸ் ஸ்டேஷன் வரைச் சிரிப்பாய்ச் சிரிச்சுக் காரியஸ்தர்ங்கிற முறையிலே என்னைக் கூப்பிட்டு வேறே, ‘இது உங்க அரண்மனைப் பண்டம்தானான்னு’ கேள்வி கேட்கிறாங்க.” “இவ்வளவு குறை சொல்றீங்களே, அரண்மனைப் பண்டங்கள் ஒரு துரும்பு கூட வெளியிலே போக விடாமத் தடுக்கிறதுக்கு வாட்ச்மேன், கூர்க்கா மூலமா ஏற்பாடு பண்ணலாமே! அதை நீங்க ஏன் செய்யலே சேர்வைகாரரே?”
“அரண்மனை மதில் சுவர்லே மொத்தம் நாலு வாசல் இருக்கு. அதைத் தவிர அங்கங்கே கல்லைப் பேத்து ஒரு நாலைஞ்சு வாசல் இவங்களாகப் புதுசா உண்டாக்கியிருக்காங்க. அது போதாதுன்னு மதில்சுவருக்கு வெளியிலே ஆட்களை நிறுத்தி வச்சு உள்ளேயிருந்து சாமான்களை வெளியே வீசி எறிஞ்சு கடத்திட்டுப் போற பழக்கமும் இருக்கு. இதிலே எதுக்குன்னு வாட்ச்மேனும் கூர்க்காவும் போட்டுக் கட்டிக் காக்க முடியும்? வெளியே போக உள்ளே வர ஒரே ஒரு வாசலா இருந்தாலாவது வாட்சிமேனோ கூர்க்காவோ போட்டு ஏதாவது கட்டுக் காவல் ஏற்பாடு செய்யலாம்.”
“நீங்க சொல்றதும் ஒரு விதத்திலே சரிதான் சேர்வைகாரரே! இனிமேலாவது எல்லா வாசலையும் கல்லை வச்சு அடைச்சிட்டு உள்ளே வர - வெளியே போக எல்லாத்துக்குமா ஒரே ஒரு வாசலாப் பண்ணிடுங்களேன்.” “கார்கள் வரப்போக ‘இன் கேட்’ ‘அவுட் கேட்’னு ரெண்டு கேட்டாவது வேணுமே?” “வேண்டியதில்லே! மதிலைக் கொஞ்சம் இடிச்சாவது ஒரே கேட்டை ரெண்டு மடங்கு அகலமாக்கி அதையே உள்ளே வரதுக்கும், வெளியே போகறத்துக்குமாப் பிரிச்சு விடலாமே?” என்று பதில் சொன்னார் மாமா. மாமா தங்க பாண்டியன் கூறிய யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டு, “நாளைக்கே ஏற்பாடு பண்ணிடறேங்க” என்று மறுமொழி கூறினார் காரியஸ்தர் பெரியகருப்பன் சேர்வை. “அரண்மனையிலேருந்து வெளியே கொண்டு போற சாமான்களுக்கு அனுமதிச் சீட்டுக் கொடுத்தால் தான் வெளியே கொண்டு போக முடியும்னு கேட்டிலே இருக்கிற கூர்க்காவுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கலாம்” என்றான் தனசேகரன், இளையராணிகள் பிரச்னை வந்த போது “அவங்கள்ளாம் பெரிய சண்டைக்காரிங்களா இருப்பாங்கபோல் இருக்கு. ‘வெளியிலே போறது தான் போறோம். எவ்வளவு அதிகமாப் பணம் கறக்க முடியுமோ அவ்வளவு அதிகமாப் பணம் கறக்கணும்’னு தான் பார்ப்பாங்க. நீங்க வேணும்னா யாராவது ரெண்டு பேரைக் கூப்பிட்டுப் பேசிப் பாருங்களேன். ஒருவேளை உங்க வார்த்தைக்குக் கட்டுப்பட்டாலும் கட்டுப்படுவாங்க” என்று தனசேகரனையும் மாமாவையும் பார்த்துக் கூறினார் பெரியகருப்பன் சேர்வை. “நியாயமா என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுக்கலாம். நாம் யார் வயிற்றுலேயும் அடிக்கக் கூடாது. ஆனா அதே சமயத்திலே இன்னிக்கி இந்த சமஸ்தான நிதி நிலைமையையும் யோசிச்சுத்தான் எதையும் செய்ய முடியும்” என்றான் தனசேகரன். “இவ்வளவு பெரிய வைப்பாட்டிப் பட்டாளத்தைக் கூட்டி வச்சிட்டுப் போறவரு அவங்களுக்குத் தலைக்குக் கொஞ்சமாப் பிரிச்சுக் கொடுக்கிறத்துக்குன்னாவது ஏதாச்சும் சொத்து மீதம் வச்சிருக்கணும். சொத்தை எல்லாம் தாறுமாறா வித்தும் அடமானம் வச்சும் தாம் தூம்னு செலவழிச்சிட்டாரு” என்று தங்கபாண்டியன் பெரிய ராஜாவைப்பற்றி வருத்தப்பட்டார். பெரிய கருப்பன் சேர்வை சொன்னார்: “எனக்கு நினைவு தெரிஞ்சி பெரிய ராஜாவோட இன்ஷுரன்ஸ் பணம்தான் அப்பிடியே வரும். அதுக்கு எல்லா ஃபார்மாலிட்டீஸும் டாக்டர் சர்ட்டிஃபிகேட்டும் கொடுத்தா உருப்படியாப் பத்துலட்ச ரூபாய் வரை கிடைக்கலாம். ஆனா கொடுக்க வேண்டிய கடன் அதுக்கு மேலேயும் இருக்கும் போலத் தெரியுது.” “கடனாளின்னு பேரெடுக்கிறதைப் போல அவமானம் வேற இல்லே காரியஸ்தரே! எங்கப்பா சொத்தோ அரண்மனைக் காசோ எனக்கு ஒரு சல்லி வேண்டாம். கடனைத் தீர்த்தால் போதும். நான் படிச்சிருக்கேன். என்னாலே ஏதோ உத்தியோகம் பார்த்துச் சம்பாதிச்சுக்க முடியும். எனக்கு மீத்துத் தரணும்னு இங்கே யாரும் கவலைப்பட வேண்டியதில்லே” என்றான் தனசேகரன். அவன் திடீரென்று அவசரப்பட்டு அப்படிச் சொல்லியது மாமாவுக்குப் பிடிக்கவில்லை. “கொஞ்சம் பொறு தம்பி! அவசரப்படாதே! நீ பாட்டுக்கு அவசரப்பட்டு எதையாவது சொல்லி வச்சேன்னா அதுக்குக் கையும் காலும் வச்சு, ‘இளையராஜா அரண்மனைச் சொத்துலே ஒரு துரும்பு கூடத் தனக்கு வேண்டாம்னுட்டாராம்’னு சேதியைப் பரப்பிடுவாங்க. நீ இப்போ இங்கே சொன்னதிலே தப்பில்லே. நம்ம காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை ரொம்ப தன்மையான மனுஷர். அவர் கிட்டேருந்து சமாசாரம் எதுவும் வெளியிலே போகாது. பொது இடங்களிலே பெருந்தன்மையா இருக்கிறதைக் கூட மறைச்சு இரகசியமா வச்சுக்கணும். நமது பெருந்தன்மையோ தியாகமோ அளவுக்கதிகமாக விளம்பரமாகி விட்டால் அப்புறம் நம்ம தான் அதனாலே ரொம்ப சிரமப்பட வேண்டியிருக்கும்!” “கடைசி நாலஞ்சு மாசங்கள்ளே மகாராஜா செஞ்ச சில காரியங்கள் எனக்கே பிடிக்கலீங்க. ‘ப்ரீவி பர்ஸ்’ நின்னப்புறம் அவரு கரஸ்பாண்டண்டா இருந்த பீமநாதபுரம் மகாராஜாஸ் ஹைஸ்கூல், கல்லூரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் சம்பளத்திலே கூடத் தலைக்கு இருபது இருபத்தஞ்சுன்னு பிடிச்சு முழுச் சம்பளத்துக்கும் கையெழுத்துப் போடச் சொல்வி அவங்களை நிர்ப்பந்தப் படுத்தி வாங்கி எடுத்துக்கிட்டாரு. முழுத் தொகைக்கும் அவங்க கையெழுத்துப் போட்டு முடிச்சப்புறம் பணத்தைக் குடுக்கிறப்போ இப்படி எடுத்துக்கிட்டுக் கொடுத்ததிலே பல வாத்தியாருங்களுக்கு ஒரே கோபம். ‘எதுக்காக இந்தப் பிடித்தம்’னு சில பேர் ஸ்கூல் ரைட்டரிட்டவே கோபமாக் கேட்டிருக்காங்க. ஏதோ ஸ்கூல் வெல்பேர் ஃபண்டு அது இதுன்னு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமாப் பதில் சொல்லிச் சமாளிச்சிருக்காரு ரைட்டர்.” “ஒண்ணும் கேக்கறதுக்கே நல்லா இல்லையே சேர்வை காரரே! படிப்புச் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாருங்க வாயிலே மண்ணைப் போட்டுப் பணம் தண்டினா நல்லாவா இருக்கு? மகாராஜாவுக்கு ஏன் தான் இப்படிப் புத்தி கெட்டுப் போச்சோ? ரொம்ப அசிங்கமாவில்லே நடந்திருக்கு?” என்று மாமா தங்கபாண்டியன் துயரம் தோய்ந்த குரலில் பதில் சொன்னார். “பீமநாதபுரம் அரண்மனையிலே பணத்துக்குத் தட்டுப்பாடு வரலாம் ஆனால் பெருந்தன்மைக்கும் தாராள மனப்பான்மைக்கும் தட்டுப்பாடு வரக்கூடாது. நீங்க சொல்றதெல்லாம் கேக்கறப்போ ரொம்பத் தலைகுனிவா இருக்குது சேர்வைகாரரே!” என்றான் தனசேகரன். “அடுத்த மாசம் ஸ்கூல்லே, காலேஜ்லே சம்பளம் போடறப்போ அவங்கவங்க எந்தெந்தத் தொகைக்குக் கையெழுத்துப் போடறாங்களோ அந்தந்தத் தொகையிலே ஒரு தம்பிடி கூடக் குறையாமே ஒழுங்காகக் கொடுத்துடணும்னு ரைட்டரிட்டச் சொல்லிடுங்க. அது மட்டுமல்ல. ஏற் கெனவே பிடிச்சிருக்கிற தொகையைக் கூடப் படிப்படியாக திருப்பிக் கொடுத்துடணும்னு சின்னராஜா உத்தரவு போட்டிருக்காருன்னும் ஒரலா. அவங்ககிட்டச் சொல்லிடச் சொல்லுங்க” என்றார் மாமா. அப்போது தனசேகரன் குறுக்கிட்டு. மாமா! நீங்க சொன்னதெல் லாம் சரிதான். ஆனால் இந்தச் ‘சின்னராஜா உத்தரவு, கட்டளை’ இது மாதிரி வார்த்தைங்களைக் கேட்டாலே எனக்குப் பத்திக்கிட்டு வருது. சும்மா ‘தனசேகரன் சொல்லுறான்’னு சொல்லுங்களேன் போதும், எதுக்கு இந்த அரண்மனை ஜம்பமெல்லாம்? இந்த ஜம்பங்களிலேயும், ஜபர்தஸ்துக்களிலேயும் அப்பா ஒருத்தர் சீரழிஞ்சது போதாதா? என் பெயரையும் ஏன் கெடுக்கறீங்க?” தனசேகரனின் இந்தக் கோபமும் கழிவிரக்கமும் நியாயமானவை என்றே மாமாவுக்குத் தோன்றின. ஆனாலும் “அட சும்மா இரு தம்பீ! உனக்கு ‘சின்னராஜா’ அது இதுன்னு மரியாதை குடுத்துக் கூப்பிடறது எல்லாம் பிடிக்க லேன்னாலும் மத்தவங்க உன்னை அப்படிக் கூப்பிடறதையோ பேசறதையோ நீ எப்பிடி வேண்டாம்னு சொல்ல முடியும்? அதெல்லாம் வழக்கத்தை அத்தினி சுலபமா நீ மாத்திப்பிட முடியாது' என்று அவனுடைய அதி தீவிர வேகத்தைக் கட்டுப்படுத்தினார் அவர். அன்றிரவு காரியஸ்தரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு மாமா தங்கபாண்டியனும் தனசேகரனும் விளக்கை அணைத்துப் படுக்கச் சென்றபோது இரவு இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. காரியஸ்தர் சென்றபின் மாமா தனிமையில் தனசேகரனுக்குப் பல அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் செய்தார். “சமஸ்தானங்களுக்கு இனிமே இந்த நாட்டிலே மதிப்பு இல்லை. அதை ஆண்டவங்களோட பழம் பெருமை எல்லாம் பெருங்காயம் வச்சிருந்த டப்பா மாதிரி ஆகிப் போச்சுங்கிறதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், நீ இவ்வளவு வெளிப்படையாகவும் எளிமையாகவும் உன் மனசிலே நினைக்கிறதை எல்லாம் வாய்விட்டு திறந்து வைக்கிறாப் போலப் பேசிடப்படாது தம்பி! சில நல்ல காரியங்களைச் செய்யறத்துக்குக் கூட கொஞ்சம் ரிஸர்வேஷனும் அடக்கமும் வேண்டியிருக்கும்! பெரிய கருப்பன் சேர்வை ஒண்ணும் கெட்ட மனுஷன் இல்லே. அதனாலே அவரை வச்சுக் கிட்டு எதுவும் பேசலாம்; ஆனால் பொது விலே நீ அப்பிடிப் பேசிடப்படாது.” “நீங்க சொல்றீங்க மாமா! ஆனா இங்கே உள்ள பல நிலைமைகளை மாத்தறதோ திருத்தறதோ ரொம்பக் கஷ்டம்னு தெளிவாத் தெரிஞ்சிக்கிட்டதாலேதான் அப்பா காலம் வரை இங்கே இருக்கப் பிடிக்காமே நான் உங்க கூட மலேசியாவுக்குப் புறப்பட்டு வந்தேன். இனிமேலும் மெத்தனமா இருந்தால் அப்பாவை விட நாம மோசம்னு ஆயிடும். பல விஷயங்களை உடனே மாத்தியாகணும். நாம் ஒரு பழம் பெருமை உள்ள சோம்பேறிக் கூட்டத்தின் வாரிசு இல்லே. நமக்கு உழைக்கத் தெரியும்னு காட்டணும். வீண் ஆடம்பரங்களை உடனே ஒழிக்கணும். இந்த அரண்மனைக்குள்ளே ஆறு, நந்தவனம் இருக்கு. ஆறிலேயும் வெறும் ஆடம்பரப் பூந்தொட்டிகள் குரோட்டன்ஸ், மல்லிகை, ரோஜாப்பூன்னு வெச்சிருக்காங்க. பூவுக்காக ஒரே ஒரு நந்தவனத்தை மட்டும் ஒதுக்கிட்டு மத்த அஞ்சு நந்தவனத்திலேயும் காய்கறி பயிரிட்டால் அரண்மனை உபயோகத்துக்குப் போக நாளொண்ணுக்கு நூறு ரூபாய்க்குக் காய்கறி விற்கலாம்னு நான் மலேசியா வர்றத்துக்கு முன்னாடி ஒரு நாள் அப்பாவுக்கு உருப்படியா யோசனை சொன்னேன். அதைக் கேட்டு அப்பாவுக்கு என் மேலே தாங்க முடியாத கோபம் வந்திடிச்சி. ‘நீ உருப்படவே போறதில்லே. இங்கே சாமி படங்களுக்கும் இளைய ராணிமார்களுக்கும் பூ வேணுமே? அங்கெல்லாம் காய்கறி போட்டால் அப்புறம் பூவுக்கு எங்கேடா போறது?’ன்னு என்னைக் கோபமாக் கேட்டாரு. ‘பூவுக்குத்தான் தனியா ஒரு நந்தவனத்தை ஒதுக்கிடப் போறோமே’ன்னேன். ‘நீ சின்னப் பையன். உனக்கு ஒண்னும் தெரியாது போ’ன்னுட்டாரு. இன்னொரு சமயம், ‘ஓர் அரண்மனைன்னா பூ, சந்தனம், வாசனை செண்ட் எல்லாம் கமகமக்கணும்டா அதுதான் அரண்மனைக்கு அடையாளம்!’னு வறட்டுக் கர்வத்தோட எங்கிட்ட வாதம் பண்ணினாரு. அவரு சொன்ன தத்துவப்படி பார்த்தா சோறு இல்லாமே காஞ்சாக் கூடப் பரவாயில்லே -பூவும், சத்தனமும் இல்லாமே அரண்மனை காயக்கூடாது. இது தான் அவரோட ஆசை மாமா?” “நடந்ததை விட்டுத்தள்ளு. இனிமே உன் திட்டப்படி நீ ஆறு நந்தவனத்திலேயும் கூடக் காய்கறி போடலாம். கவலைப்படாதே. அதோட இன்னும் ஒரு வார காலத்துக்குள்ளே இந்த அரண்மனையிலே ‘எகானமி டிரைவ்’ங்கற நிலைமையை விளக்கி ஒரு சிக்கன உணர்வை அமுல் நடத்திப்பிடணும். ஒரு காசு கூட அர்த்தம் இல்லாத வீண் செலவுக்கு விடக்கூடாது. அரண்மனையிலேயும் ஊருக்குள்ளேவும் இருக்கிற சமஸ்தானத்து இடங்களை நியாயமான விலைக்குப் ‘பிளாட் பிளாட்டா’ப் பிரிச்சு வித்துடணும். பழைய நவராத்திரி தசரா ஸெலபரேஷன்ஸ்லே ஆயிரம் பேர் ஐநூறு பேருக்குச் சோறு வடிச்சுக் கொட்ட சாம்பார் வைக்கன்னு பூதம் பூதமாப் பித்தளைப் பாத்திரங்களும் செம்பு அண்டாக்களுமா, ரெண்டு பெரிய கொட்டாரம் நிறைய இங்கே அரண்மனையிலே அடைஞ்சு கிடக்கே அதை எல்லாம் விற்று டிஸ்போஸ் பண்ணிடனும். ஜூவல்ஸ், கோல்ட். அது இதெல்லாம் கூடக் குறைந்த பட்சம் கையிலே வச்சுக்கிட்டு மீதியைக் கொடுத்துட வேண்டியதுதான். பொதி சுமக்கிற மாதிரிக் கனத்திலே தங்கக் காசு மாலை, இடியாக் கணக்கிற ஒட்டியாணம், அரைக் கிலோகிராம் கனத்துக்குப் பாம்படம், இதெல்லாம் இனிமே வருங்காலத்திலே யார் போட்டுக்கப் போறாங்க?" என்று மாமாவே சில யோசனைகளை மேலும் சொன்னார். “இங்கே நீங்க சொன்ன யோசனைகளோட இன்னும் சிலதையும் சேர்த்துக்கணும் மாமா. ஒரு வேலையும் இல்லாம தண்ட சோற்றுத் தடிராமனாப் பல பேரு அரண்மனைச் சம்பளத்தை வாங்கிக்கிட்டுச் சோம்பேறியாத் தூங்கிக் கிட்டிருக்காங்க. அப்படி ஆளுங்களை உடனே ‘ரெட் ரெஞ்ச் பண்ணி அனுப்பணும். எங்கப்பாரு மட்டும் இப்பச் சாகாமே இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு போயிருந்தார்னா இன்னும் ரெண்டு 'இளையராணி'ங்களைக் கட்டிக் கிட்டிருப்பாரு, இன்னும் கொஞ்சம் விளையாடியிருப்பாரு. இன்னும் நிறையச் சீரழிச்சிருப்பாரு. நல்ல வேளையா இப்பப் போய்ச் சேர்ந்தாரு.” “தம்பீ! உன் கோபம் எனக்குத் தெரியுது. ஆனா இனிமே இப்பிடி வேற யாரிட்டவும் மறந்து போய்க் கூடச் சொல்லிடாதே. எங்கிட்டச் சொன்னதிலே தப்பு இல்லே. ஆனா வேற எவனாவது வெளிமனுஷன் கேட்டான்னா, ‘அப்பா போனது நல்லது. இன்னும் கொஞ்ச நாள் இருந்தாருன்னா அரண்மனைச் சொத்தை நிறையச் சீரழிச்சுக் கெடுத்திருப்பாரு’ன்னு தனசேகரனே சொல்றாருன்னு வெளியிலே கண்டமானைக்கித் துஷ்பிரச்சாரம் பண்ணிடுவாங்க...” “இப்ப நீங்க சொல்றது சரிதான் மாமா! இங்கே இந்த அர்த்த ராத்திரியிலே வேற யாரு இருக்காங்க? நீங்களும் நானும் தானே தனியாப் பேசிக்கிட்டிருக்கோம்; அதான் மனசிலே பட்டதைச் சொன்னேன்.” “ஏன் தம்பீ? இன்னொரு விஷயம் மறந்தே போச்சே; இங்கே அரண்மனைக்குள்ளே ‘பீமவிலாசம் பிரிண்டிங் பிரஸ்’னு ஒரு பிரஸ் இருந்திச்சே? அது என்னாச்சு?” “இருக்கு மாமா! ஆனா பிரஸ் ஓடலைன்னு நினைக்கிறேன். சும்மா இழுத்துப்பூட்டி அடைச்சுப் போட்டிருக் காங்க போல்ருக்கு?” “ரொம்ப நாளைக்கு முன்னாடி அந்தப் பிரஸ்லேருத்து பெரும் புலவர் பீமநகர், நாகநாதனார்னு ஒருத்தரு ‘ராஜ குல திலகம்’னு ‘அரண்மனை கெஸட்’ மாதிரி ஒரு பத்திரிகை வேற நடத்திக்கிட்டிருந்தாரில்லே?” “ஆமாம்! ராஜமான்யம் நின்னுபோனதும் அப்பாவே அதை நிறுத்திப்பிட்டாரு. ராஜமான்யம் வந்தவரை செலவுக் கணக்கு எழுத அதெல்லாம் வேண்டியிருந்துச்சு. ‘ராஜகுல திலகம்’ என்கிற பத்திரிகைப் பெயரை விட கெளரவ ஆசிரியர், ஹிஸ் ஹைனெஸ் பீமநாத ராஜசேகர பூபதி மகாராஜா என்கிற பேர்தான் பெரிய எழுத்துக்களிலே அச்சிடப்பட்டிருக்கும். அதுக்குக் கீழே சிறப்பாசிரியர் பெரும்புலவர் பீமநகர் நாகநாதனார்னு போட்டிருக்கும். அந்தப் பத்திரிகைப் போட்ட முப்பத்திரண்டு பக்கத்திலே முப்பத்தொரு பக்கம் வரை அப்பாவோட வீர தீரப் பிரதாபங்கள்தான் இருக்கும். அவருடைய வெளியூர்ப் பிரயாணங்கள், திரும்பி வந்த தேதி, அரண்மனைக்கு வந்து போகும் முக்கியஸ்தர்களோடு நின்று அப்பா எடுத்துக் கொண்ட போட்டோ எல்லாம் அதில் வரும்.” “சரி தம்பி! நீ அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்ப்பா. இப்போ அந்தப் பிரஸ் ரன்னிங் கன்டிஷன்லே இருக்கா, இல்லியான்னு மட்டும் காரியஸ்தரை நாளைக்கே விசாரிக்கணும். ரன்னிங் கன்டிஷன்லே இருந்தா ஊர்லே ‘ஜாப் ஒர்க்ஸ்’ எடுத்து நாமே நல்ல ஆளுங்களா போட்டு அதைத் தொடர்ந்து நடத்தலாம். ரன்னிங் கண்டிஷன்லே இல்லேன்னா நல்ல பார்ட்டியாய் பார்த்து உடனே விலை பேசி வித்துப்பிடலாம்.” “ஊரிலேயிருந்து ரொம்பத் தள்ளியிருக்கிற இந்த இடத்துக்குள்ளே இவ்வளவு பெரிய தோட்டத்தைக் கடந்து அரண்மனைக்குத் தேடிவந்து பிரஸ்ஸுக்குக் கஸ்டமர்ஸை எதிர்பார்க்க முடியாது மாமா. அப்படி நாம பிரஸ்ஸைத் தொடர்ந்து நடத்தறதா இருந்தா டவுனுக்குள்ளே ஷிப்ட் பண்ணிடனும். இல்லாட்டிக் கஷ்டம் மாமா. “முதல்லே பிரஸ் இருக்கான்னு தெரிஞ்சுக்கப்பா! அப்புறம் மத்ததை யோசனை பண்ணுவோம்” என்றார் மாமா. முதல் நான் இரவு தாமதமாகத் தூங்கச் சென்றதால் மறு நாள் காலை மாமாவும் தனசேகரனும் எழுந்திருப்பதற்கே விடிந்து எட்டரை மணிக்கு மேலாகி விட்டது. ஏழு மணிக்கே காரியஸ்தர் பெரியகருப்பன் சேர்வை வந்துவிட்டார். அவர்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து எழுந்திருக்கிற வரை வேறு காரியத்தைக் கவனிக்கலாம் என்றால் அரண்மனை ஆபீஸிலும் இப்போது யாரும் வரவில்லை. எல்லா அறைகளிலும் மின்விசிறி இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு முன்பாக முதல் திவான் காலத்தில் பொருத்திய பழைய பங்கா ஒன்று இன்றும் அப்படியே தொங்கிக்கொண்டிருந்தது. மூன்று நான்கு தினங்களுக்குள் சமஸ்தானத்தின் ‘அஸட்ஸ் அண்ட் லயபிலிட்டீஸுக்கு’ ஒரு பட்டியல் தயாரித்தாக வேண்டும் என்று மேஜை மேல் ஒரு நோட் எழுதி வைத்தார் காரியஸ்தர். மறுபடி அவர் வசந்த மண்டபத்து விருந்தினர் மாளிகைக்குத் திரும்பி வந்தபோது மாமாவும் தனசேகரனும் தூக்கம் கலைந்து விழித்திருந்தார்கள். காபி குடித்துக் கொண்டிருந்த மாமா வெள்ளித் தம்ளரில் பாதிக் காப்பியைக் குடித்த பின் மீதிக் காபியோடு அப்படியே தம்ளரில் வைத்துவிட்டு, “ஏன் சேர்வைக்காரரே! பிரிண்டிங் பிரஸ் ஒண்ணு இருந்திச்சே, அது இருக்கா? இல்லே வித்தாச்சா?” என்று காரியஸ்தரை வினவினார். |