9 தனசேகரனின் மனத்தில் அப்போதிருந்த விஷயத்திற்கும், மாமா தங்கபாண்டின் பேசத் தொடங்கிய விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. அவன் அப்போ திருந்த இனிய உன்னதமான மனநிலையை அவர் பேச்சு ஒரளவு கலைத்து விட்டது என்று கூடச் சொல்ல வேண்டும். அவன் சமஸ்தானத்தின் கலாசாரப் பெருமைகளை யும் புலமைச் செல்வங்களையும் பற்றி நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த போது அவர் அவனுடைய கல்யாணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். “இனிமேல் நீ உன் குடும்பப் பொறுப்புக்களையும், சமஸ்தானப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெரிய ராஜா, அதான் உங்கப்பாவோட உனக்கு ஒத்து வரலேன்னுதான் நீ மலேசியாவுக்கு வந்து என்னோட இருக்கும்படியாச்சு. இனிமேல் அந்தப் பிரச்னை இல்லை. கல்யாணத்தை முடிச்சுக்கிட்டு நீ ஊரோட வாசலோட இருந்திட வேண்டியதுதான். ஏற்கனவே நீயும் நானும் காலஞ்சென்ற உங்கம்மாவுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறபடி நீ என்னோட மூத்த மகளைக் கட்டிக்கிறே” - திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவர் போல் அவர் இந்தப் பேச்சை ஆரம்பித்திருந்தார். “அதுக்கெல்லாம் இப்ப என்ன மாமா அவசரம்? ஏற்கெனவே பேசி முடிச்ச விஷயம்தானே?” என்று சற்றே தலைகுனிந்து சிரித்தபடி முகம் சிவக்கப் பதில் சொன்னான் தனசேகரன். சற்று முன் தான் படித்திருந்த சிறுகதையின் விளைவாகத் தன் தந்தையை மாமா பெரிய ராஜா என்று கூப்பிட்டதைக் கூட அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஏதோ காலங்கடத்து போன ஒரு வார்த்தையை அவர் உபயோகப்படுத்தியது போல அவன் உணர்ந்தான். அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது கிராமத்தின் கர்ணம், கிராம முன்சீஃப் ஆகியோருடன் அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை வந்து சேர்ந்தார். நிலங்கள் பற்றிப் பேச அவர்களை அவர் அழைத்து அந்திருக்கவேண்டும். காரியஸ்தர் வந்ததும் வராததுமாகக் காலையில் கொடுக்கப்பட்ட காபி டிஃபன் மிகவும் மட்டமாக இருந்த தென்று மாமா புகார் செய்தார். ஒரு சின்ன கிராமத்தின் பி.டபிள்யூ.டி. இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் இதைவிட நல்ல காபியையும், டிஃபனையும் எதிர்பார்க்க முடியாது என்பதைத் தனசேகரன் உணர்ந்திருந்தான். அதற்காகக் காரியஸ்தரைக் கண்டித்துப் பயனில்லை என்பதையும் அவன் அறிவான். பொதுவில் நகரங்களைவிடக் கிராமங்களில் தான் காபி, சிற்றுண்டி உணவுப் பண்டங்கள் எல்லாம் சுத்தமாகவும் சுவையாகவும், கலப்படமில்லாமலும் இருக் கும் என்கிற காலம் மலையேறிக் கிராமங்களும் லாபம் சம்பாதிக்கக் கற்றுக் கொண்டிருப்பது புரிந்தது. நகரங்களின் சூதுவாதுகள், வஞ்சகங்கள் எல்லாம் கிராமங்களுக்கும் மெல்ல மெல்லப் பரவிக் கொண்டிருந்தது. பல வருடங்களாக மலேசியாவில் எஸ்டேட் உரிமையாளராகச் செல்வச் செழிப்பிலும், சுகபோகங்களிலும் மிதந்து கொண்டிருந்த மாமாவினால் ஒரு சாதாரண தென்னிந்திய கிராமத்தின் மூன்றாந்தரச் சிற்றுண்டி விடுதி ஒன்றின் மட்டரக உணவைப் பொறுத்துக் கொள்ள முடியாததில் வியப்பில்லை. அவருக்கு வழக்கப்படி காலையில் சுடசுடப் பாலும் ‘கார்ன் ஃப்ளேக்கும்’ வேண்டும். ஆவிதானிப்பட்டியில் உள்ளவர்களுக்குக் ‘கார்ன்ஃப்ளேக்’ என்றால் என்னவென்றே தெரியாது.
காரியஸ்தரை மாமாவின் கோபத்திலிருந்து மீட்பதற்காகத் தனசேகரன் உடனடியாக ஒரு தந்திரம் செய்தான். உடனே பேச்சை நிலபுலங்களைப் பற்றித் திருப்பிவிட்டான். நிறைய நிலங்களை ஏற்கெனவே தன் தந்தை விற்றிருந்தார் என்பதை அவன் அறிவான். எனினும் பட்டா மாறுதல் பற்றிய விவரங்களோடு கிராம அதிகாரிகள் வாயிலிருந்தே அது வரட்டும் என்று காத்திருந்தான். தன்னுடைய தந்தை குடி, கூத்து, குதிரைப்பந்தயம், வைப்பாட்டி முதலிய ஊதாரிச் செலவுகளின் உடனடித் தேவைக்காகச் சமஸ்தானத்துச் சொத்துக்களை அப்போதைக்கப்போது வாரி இறைத்திருந்தாலும் ஜனங்களுக்கு என்னவோ அதன் காரணமாக இன்னும் அவர் மேல் கோபம் எதுவும் வரவில்லை என்பது தனசேகரனுக்குப் புரிந்தது. ராஜா என்கிற மரியாதை மக்களுக்கு இருந்தது. ‘யானை இருந் தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது போல்தான் மக்கள் இன்னும் பேசிக் கொண்டிருந்தனர். மாமாவும் தானும் மட்டுமே காலஞ்சென்ற தன் தந்தையின் குறைகளை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதாக அவனுக்குப் பட்டது.
மக்களுக்கு ஏதாவது ஒருவர் மேல் அல்லது ஒன்றின் மேல் பக்தியோ பிரமையோ ஏற்பட்டு விட்டால் அதை இலேசில் போக்கிவிட முடியாது என்றும் தோன்றியது தனசேகரனுக்கு. ‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற கதையைப் படித்ததன் காரணமாகத் தன் தந்தையின் மேலும், சமஸ்தானத்தின் ஊழல்கள் மேலும் தனக்கு ஏற்பட்டிருக்கும் உணர்வுகள் மற்றவர்களுக்கு ஏற்பட்டிருக்க நியாயமில்லை என்பது அப்போது அவனுக்கே தெரிந்தது. மாமா நிலங்கரைகளையும் கரைந்து போனவை தவிர எஞ்சிய சமஸ்தானத்துச் சொத்துச் சுகங்களையும் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். அவனோ ஏட்டுச் சுவடி களையும், ஓவியங்களையும், புத்தகங்களையும் சிற்பங்களையும் காப்பாற்றுவதற்கு அதிக அக்கறை எடுத்தவனாகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். காலஞ்சென்ற அவன் தந்தை பரிமேய்ந்த நல்லூரில் செய்தது போல்தான் இங்கும் செய்திருந்தார். நிலங்களை அடமானமாக வைத்துக் குத்தகைக்காரர்களிடமிருந்து அதிகப் பணம் வாங்கியிருந்தார். கணக்குகள் எல்லாம் ஒரே குழப்பமாயிருந்தன. எதுவும் தெளிவாக இல்லை. “நீங்கதானே காரியஸ்தராக இருந்தீங்க மிஸ்டர் சேர்வை? உங்களுக்குக் கூடத் தெரியாமல் எதுவும் நடந் திருக்க முடியாதே! ஒண்ணுமே இல்லாமே துடைச்சி ஒழிச்சி வச்சிட்டுப் போயிருக்கணும். அல்லது நிறையச் சேர்த்து வச்சிட்டுப் போயிருக்கணும், இப்படி ரெண்டுங் கெட்டானா வச்சுக் கழுத்தறுக்கப்பிடாது” என்று காரியஸ் தரை நோக்கிச் சத்தம் போட்டார் மாமா. தனசேகரனுக்கு அந்தக் கோபம் அநாவசியமாகப்பட்டது. “பண விஷயங்களிலே பெரிய ராஜா தாறுமாறாகத் தோணினபடி எல்லாம் வரவு செலவு பண்ணியிருக்கார். ரசீது கிடையாது. வவுச்சர் கிடையாது. கணக்குக் கிடையாது. எங்கே எதற்காக வாங்கினோம் என்றும் விவரம் கிடையாது. தப்பு என்மேலே இல்லை. பெரிய ராஜா செய்ததை எல்லாம் பார்த்துப் பல சமயங்களிலே நான் என் வேலையையே விட்டுவிட்டுப் போயிடலாம்னு நினைத்தது உண்டு. காரியஸ்தனா இருந்த என்னைக் கலந்து கொள்ளாமலும் எனக்குத் தெரிவிக்காமலுமே மகாராஜா எத்தனையோ வரவு செலவு பண்ணினதை நான் தடுக்க முயன்றும் முடிஞ்சதில்லை, நான் சொல்லாமலே பெரிய ராஜா குணம் உங்களுக்குத் தெரியும். என் நிலைமையிலே நீங்க இருந்திருந்தா என்ன செய்ய முடியும்னு யோசனைப் பண்ணிப் பாருங்க... போதும்” என்று கோபப்படாமல் நிதானமாகப் பதில் கூறினார் பெரிய கருப்பன் சேர்வை. மாமாவால் பதில் பேச முடியவில்லை. ஆவிதானிப்பட்டி நிலங்கள் சம்பந்தமான கணக்கு வழக்குகளை ஒழுங்கு செய்ய மேலும் இரண்டு நாட்கள் பிடித்தன. அந்த இரண்டு நாட்களில் சில பரம்பரைப் புலவர்களின் வீட்டுக்குச் சென்று பரண்களில் இருந்த அரிய ஏட்டுச் சுவடிகளையும் பழம் பிரபந்தங்களையும் பார்த்தான் தனசேகரன். அந்த ஊரில் பழஞ்சுவடிகள், பிரபந்தங்கள், புலவர்களின் படங்கள், அவர்கள் வாழ்நாளில் உபயோகித்த பண்டங்கள் அடங்கிய பொருட்காட்சி ஒன்றை ஏற்படுத்துவது சம்பந்தமாகவும் சிலரைக் கலந்து பேசினான். கணக்கு வழக்கு, கடன், பற்று வரவு விவகாரங்களில் சிறிதும் பட்டுக் கொள்ளாதவன் போல் ஒதுங்கி அவன் சுவடிகளையும் புலவர்களையும் காணப் போனது மாமாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அதற்காக அவரால் அன்னைக் கடிந்து கொள்ளவோ கண்டிக்கவோ முடியவில்லை. பிரியத்திற்குரிய செல்ல மருமகன் என்ற உறவு ஒரு புறமும், வருங்காலத்தில் தன் சொந்த மகளை மணந்து கொள்ளப் போகிற மரியாதைக்குரிய மாப்பிள்ளை என்ற வருங்கால உறவு ஒரு புறமுமாக அவரைப் பற்றிக்கொண்டு தனசேகரனை ஒரு சிறிதும் கண்டிக்க முடியாமல் அவரைத் தடுத்து விட்டன. ஆவிதானிப்பட்டி வேலைகள் முடிந்ததும் அவர்கள் மூவரும் சமஸ்தானத்தின் தலைநகருக்குத் திரும்பி விட் டார்கள். தலைநகரில் நிறைய வேலைகள் அரைகுறையாக இருந்தன. அரண்மனைக் கருவூலத்தைத் திறந்து என்னென்ன இருக்கிறது, என்னென்ன இல்லை என்று பார்க்க வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தார்கள். கருவூலத்தின் பட்டியல் அடங்கிய புராதனமான நோட்டுப் புத்தகத்தைத் திவான்கள் பதவி வகித்த பழங்காலத்தில் அவர்கள் வைத்திருப்பது வழக்கம். திவான்களிடம் இருக்கும் அதே பட்டியலின் நகல் ஒன்று ராஜாவிடமும் இருக்கும். ராஜாவிடம் இருக்கும் பட்டியல் தொடர்ந்து வாரிசுப்படி கை மாறிக் கொண்டிருப்பதும், திவான்களிடம் இருக்கும் பட்டியல் அடுத்தடுத்துப் பதவிக்கு வருகிற திவானிடம் கைமாறிக் கொண்டிருப்பதும் வழக்கம். திவான்களின் காலம் முடிந்து அந்தப் பதவி ஒழிக்கப்பட்ட பின்னர் இரண்டு பட்டியலுமே மகாராஜாவின் கைக்குப் போய்விட்டதாகவும் தன்னிடம் அந்த மாதிரிப் பட்டியல் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதாகவும் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை கூறினார். பழைய ஏற்பாட்டின்படி திவானுக்குத் தெரியாமல் ராஜா எதுவும் செய்ய முடியாது. பணத்தட்டுப்பாடு காரணமாகத் திவான் பதவி போனதும் காலஞ்சென்ற பெரிய ராஜாவுக்குத் தட்டிக் கேட்க ஆளில்லாத நிலைமை ஏற்பட்டது. இஷ்டம் போல் எதையும் வாங்கினார். தோன்றியபடி அரண்மனைச் சொத்துக்களை விற்றார் அவர். “எதற்கும் காலஞ்சென்ற பெரிய ராஜாவின் அந்தரங்க அறையில் தேடிப்பார்க்கலாமே? ஒருவேளை அந்தப் பட்டியல் அங்கே அகப்பட்டாலும் அகப்படலாம். பட்டியல், கிடைத்தால் எதெது மீதமிருக்கிறது எதெது பறிபோயிருக்கிறது என்றாவது கண்டு பிடிக்கலாம். இல்லாவிட்டால் எதெது எல்லாம் முன்பு இருந்தன, எதெது எல்லாம் இப்போது இல்லை என்பதைப் பிரித்துக் கண்டுபிடிக்கவே முடியாது. என்ன? நான் சொல்வது புரிகிறதா மிஸ்டர் சேர்வை?...” பெரிய கருப்பன் சேர்வை புரிகிறது என்பதற்கு அடையாளமாக மாமாவை நோக்கித் தலையை ஆட்டினார். “அரண்மனை லைப்ரரி, ஐம்பொன் சிலைகள் அடங்கிய விக்ரக சாலை, வாகனங்கள் உள்ள வாகன சாலை எல்லாம் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது. அதைப்பற்றி ஏதாவது சொல்லுங்களேன் காரியஸ்தரே?” என்றான் தனசேகரன். “மன்னிக்க வேண்டும்! பெரியவர் இந்த அரண்மனையை விட்டுவிட்டுப் போயிருக்கிற நிலையில் எதைப் பற்றியும் இப்போது எதுவும் சொல்லுகிறாற் போல், இல்லை. எங்கே எதை எந்த அவசரத் தேவைக்காக விற்றிருப்பாங்கன்னு ஒண்ணும் சொல்ல முடியாது. இந்தக் கால கட்டத்திலே ஒரு சமஸ்தானத்தோட காரியஸ்தரா, மாட்டிக்கிட்டிருக்கக் கூடாதுன்னு நானே பல தடவை என் வேலையை விட்டுட நினைச்சிருக்கேன். பெரிய ராஜா எதையாவது எனக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ யாருக் காவது விற்றால் அதை நான் ஏன்னும் எதற்குன்னும் தட்டிக் கேட்க முடியாது” என்று குறைப்பட்டுக் கொண்டார் காரியஸ்தர். அவர் அதைச் சொல்லிய விதம், ‘என்னைப்போய்த் தொந்தரவு செய்கிறீர்களே? நான் என்ன செய்வேன்?’ என்பது போல இருந்தது. தனசேகரன் மேற்கொண்டு அப்போது அவரை எதுவும் கேட்க விரும்பவில்லை. இரண்டு நாள் ஒரு வேலையுமின்றி மெளனத்தில் கழிந்து போயின. இதற்கிடையில் ஒரு நாள் காலைத் தபாலில் சென்னையிலிருந்து நடிகை ஜெயநளினி தனசேகரனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தாள். அந்த ரிஜிஸ்தரைக் கையெழுத்திட்டு வாங்கிய சுவட்டோடு அதைக் கொண்டு வந்து மாமாவிடமும் தனசேகரனிடமும் படித்துக் காண்பித்தார் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை. “அவளுக்கு ஒரு எழவும் தெரியாது. இதெல்லாம் செய்யச் சொல்லி அந்தக் காலிப்பயல் கோமளீஸ்வரன்தான் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும். முடிந்த மட்டில் பணம் பறித்துவிட வேண்டும் என்று பார்க்கிறார்கள். ஏற்கனவே இந்தச் சமஸ்தானச் சொத்தில் முக்கால்வாசி பிடுங்கித் தின்றாயிற்று. இன்னும் கொள்ளையடிக்க என்ன குறையிருக்கிறதோ?” என்று கடுமையான குரலில் இரைந்தார் மாமா தங்கபாண்டியன். காலஞ்சென்ற பட்டத்து ராணிக்குப் பின் தானே பீமநாத ராஜசேகரபூபதியின் முறையான மனைவி ஸ்தானத்தில் இருந்து வந்ததாகவும் அதற்குச் சான்றாக் மகாராஜாவின் பல கடிதங்கள் தன்னிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டு அவருடைய சொத்தில் தனக்கு சேர வேண்டிய பகுதியைத் தன்னிடம் ஒப்படைக்கக் கோர்ட்டாரவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடுத்திருந்தாள் அந்த நடிகை. “திவாலாகிப்போன இந்தச் சமஸ்தானத்தில் என்ன என்ன மீதமிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இப்படி எல்லாம் அதைப் பிரித்துக் கொடு, இதைப் பிரித்துக்கொடு, என்று நோட்டீஸ் விட்டுக் கொண்டிருக்கிறார்களோ? எங்கப்பா வைத்து விட்டுப் போயிருக்கிற கடன் பளுவை வேண்டுமானால் அந்தப் பணக்கார நடிகையிடம் கொஞ்சம் பிரித்து கொடுக்கலாம்” என்று சிரித்துக்கொண்டே கூறினான் தனசேகரன். “இப்போ யாரு சமஸ்தான வக்கீல்? அவரைக் கூப்பிட்டு யோசனை கேட்கலாமே? அப்பத்தான் இந்த நோட்டீஸுக்கு என்ன பதில் எழுதறதுன்னு தெரியும்?” “வக்கீல் முன்னே இருந்தாங்க! அவங்களுக்கு மாசச் சம்பளம் கூடக் கொடுக்கிறதா அரண்மனை ரெக்கார்ட்ஸிலே இருக்கு. இப்போ அப்படியெல்லாம் அந்தப் பெயரிலே யாரும் கிடையாது. இந்த ஊர்லே பழைய திவான் ஒருத்தரோட பேரன் வக்கீலா ப்ராக்டிஸ் பண்றார். அவசர ஆத்திரத்திற்கு அவரைத்தான் கூப்பிட்டனுப்பறது வழக்கம். முக்கியமான ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் விஷயம்னா மெட்ராஸ்லே அடையார்லே ஒரு வக்கீல் இருக்கார். அவரிட்டப் போவோம்...” “சரி! இப்போ இந்த திவானோட பேரனைத்தான் கூப்பிட்டனுப்பு மேன். சும்மா ஒரு யோசனை கேட்கத் தானே?” என்று மாமா சொன்னார். உடனே காரியஸ்தர் டெலிஃபோன் நம்பரைத் தேடிக் கூப்பிட்டார். வக்கீல் ஊரில் இல்லை என்றும் சென்னை சென்றிருக்கிறார் என்பதாகவும் பதில் வந்தது. உடனே அவர்கள் மூவருமாக வக்கீல் சம்பந்தப்பட்ட வேலையை அப்புறமாகக் கவனித்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைத்துவிட்டு ஸீல் வைத்துப் பூட்டப்பட்டிருத்த மகாராஜாவின் அந்தரங்க அறையைத் திறப்பதற்குச் சென்றார்கள். பெரிய ராஜா இறந்த தினத்தன்று சில பொருள்கள் திருடு போகத் தொடங்கியதை முன்னிட்டு அவருடைய சடலத்தை வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றதுமே இந்த அறையைப் பூட்டிச் சீல் வைத்திருந்தார்கள். இப்போது கடன்கள், வரவு செலவு நிலவரங்கள், அரண்மனைக் கருவூலம் பற்றிய பட்டியல்கள் இவற்றைத் தேடுவதற்காக அந்த அறையை மறுபடியும் அவர்களே திறக்க நேர்ந்தது. பல உண்மைகளை அறிந்து கொள்வதற்குக் காலஞ் சென்ற பெரிய ராஜா, அவர் கைப்படவே எழுதிய டைரிகள் தேவைப்பட்டன. தனசேகரன் மட்டுமே அந்த டைரிகளைப் படிக்கும் உரிமையுடையவன் என்றும் கணக்கு வழக்குகளைச் சரி செய்வதற்கும் வரவு செலவு பற்றிய நிலவரங்களை அறிவதற்கும், அந்த டைரிகளிலிருந்து தனசேகரன் ஏதாவது விவரங்களைக் கூற முடியுமானால் உபகாரமாக இருக்குமென்றும் மாமாவும் காரியஸ்தரும் அபிப்பிராயப் பட்டார்கள். தனசேகரனும் அதற்கு இணங்கியிருந்தான். அவர்கள் பெரிய ராஜாவின் அந்தரங்க அறையைத் திறந்தபோது பிற்பகல் மூன்றேகால் மணி. பகலுணவுக்குப் பின் சிறிது நேரம் ஒய்வு கொண்ட பிறகு ஆளுக்கு ஒரு கப் காபியும் அருந்திவிட்டு அவர்கள் அந்த வேலையைத் தொடங்கியிருந்தார்கள். அங்கே இரண்டு மூன்று அலமாரிகள் நிறையக் காலியான ஸ்காட்ச் பாட்டில்களும், ஜின் பாட்டில்களும், ரம் பாட்டில்களும் அடைத்துக் கொண்டு கிடந்தன. ஓர் அலமாரியில் இன்னும் ஸீல் உடைக்காத அந்நிய நாட்டு விஸ்கி பாட்டில்களும் பிறவும் இருந்தன. இன்னோர் அலமாரி நிறையப் பழைய ப்ளேபாய் மேகஸின்களும் வேறு சில நிர்வாணப் படப் பத்திரிகைகளும் நிரம்பிக் கிடந்தன. அப்பாவின் குணச்சித்திரத்தை விளக்கும் உருவங்களாக இவை தனசேகரனுக்குத் தோன்றின. ஒரு வேளை தம்முடைய அந்தரங்க அறையில் அவர் மீதம் வைத்துவிட்டுப் போயிருக்கும் சொத்துக்களே இந்தக் காலி பாட்டில்களும், பழைய பத்திரிகைகளும் மட்டும் தானோ என்றுகூடத் தனசேகரனுக்குச் சந்தேகமாயிருந்தது. “ராஜா இறந்து போன இரண்டு மூன்று மணி நேரத்திலேயே அருகே வந்து அழுது ஒப்பாரி வைக்கிற சாக்கில் இளைய ராணிகள் அகப்பட்டதைச் சுருட்டியாச்சு சார்!” என்றார் காரியஸ்தர். “அப்படியே சுருட்டியிருந்தாலும் எங்கே கொண்டு போயிருக்கப் போறாங்க? இங்கே அரண்மனைக்குள்ளாரத் தானே வச்சிக்கிட்டிருக்கணும். ஒரு சோதனை போட்டா எல்லாம் தானே வெளியே வருது” என்றார் மாமா. “அதெல்லாம் எங்கே தேடினாலும் உங்களுக்கு ஒரு துரும்பு கூடக் கிடைக்காது. எல்லாம் இதுக்குள்ளார நூறு மைல் இருநூறு மைல் கூடத் தாண்டிப்போயிருக்கும்” என்று சிரித்துக் கொண்டே நிதானமாக மாமாவுக்குப் பதில் சொன்னார் காரியஸ்தர். பெட்டிகள், சூட்கேஸ்கள் கைப்பைகள் எல்லாவற்றையும் குடைந்து பார்த்துக் கடைசியில் அரண்மனைக் கருவூலத்தில் உள்ள பண்டங்களின் பட்டியல் அடங்கிய ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பல டைரிகளையும் எடுத்து விட்டார் மாமா. கருவூலப் பட்டியல் புத்தகத்தில் நடுவே பல பக்கங்கள் அங்கங்கே கிழிக்கப் பட்டிருந்தன. சில பக்கங்கள் பயங்கரமான முறையில் மையால் அடிக்கப்பட்டும் திருத்தப்பட்டும் இருந்தன. எல்லாம் அப்பாவின் வேலை யாகத்தான் இருக்க வேண்டும் என்பது யாரும் சொல்லாமலே தனசேகரனுக்குப் புரிந்தது. மாமா மிகவும் கோபமாகக் காணப்பட்டார், அரண்மனைச் சொத்துக்களின் எந்தப் பகுதியையும், எந்தப் பிரிவையும் அப்பா சீரழிக்காமல் விட்டு வைக்கவில்லை என்பது இப்போதும் தெரிந்தது. “நீர் என்னய்யா காரியஸ்தர்? வேலை பார்த்த இடத்தின் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைப் பார்த்த பின்பும் சும்மா இருந்திருக்கிறீரே? இதை எல்லாம் உமது உத்தியோகக் கடமையாக நீர் செய்திருக்க வேண்டாமா?” என்று காரியஸ்தரைக் கேட்டார் மாமா. “வேலியே பயிரை மேயத் தொடங்கினால் யார் தான் சார் அதைத் தடுத்துக் கட்டிக்காக்க முடியும் என் நிலைமையிலே நீங்க இருந்திருந்தால்தான் இதை எல்லாம் நீங்க புரிஞ்சுக்க முடியும்? நான் சம்பளம் வாங்குகிற உத்தியோகஸ்தன். எனக்குச் சம்பளம் கொடுக்கிற மகாராஜா ஒரு பொருளைத் திருட்டுத்தனமாக விற்கிறப்பவோ, சீரழிக்கிறப்பவோ, அவரு எங்கிட்டச் சொல்லிட்டுத்தான் அதை செய்யணும்னு என்ன அவசியம்? அப்படி மகாராஜாவே அதை எல்லாம் துணிஞ்சு செய்யறப்போ அதைத் தட்டிக் கேட்க எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? இதை எல்லாம் கொஞ்சங்கூட யோசிச்சுப் பார்க்காமே நீங்கத் திரும்பத் திரும்ப என்னைக் கேள்விக் கேட்டுப் பிரயோஜனம் இல்லை” என்று சேர்வைகாரரும் கொஞ்சம் அழுத்தமாகவே மாமாவுக்குப் பதில் சொன்னார். வைரங்களும், வைடூரியங்களும், ரத்தினங்களும், மரகதங்களும், தங்கம் வெள்ளிப் பண்டங்களும் நிறைந்ததென்று ஊரறிய உலகறியப் புகழப்பட்டிருந்த பீமநாதபுரம் கருவூலத்தை அநேகமாகக் காலி செய்து துடைத்து வைத்திருந்தார் காலஞ்சென்ற மகாராஜா. சில விலையுயர்ந்த வைர நகைகளுக்குப் பதில் கில்ட் நகைகள் பேருக்கு அதனதன் இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. அரண்மனை எல்லைக்குள்ளேயே இருந்த குலதெய்வத்தின் கோயில் நகைகள் கூடக் களவாடப்பட்டிருந்தன. காவலாளியே திருடிய திருட்டை யாரிடம் போய் முறையிடுவது என்று அவர்களுக்குப் புரியவில்லை. சில பெரிய பெரிய வெள்ளிப் பாத்திரங்கள், கோவிலுக்குச் சொந்தமான ஒரு பெரிய தங்கக்குடம், சில சிறிய தங்கப் பாத்திரங்கள் ஆகியவை தான் மீதமிருந்தன. அப்பா இவற்றை மட்டும் எப்படி மீதம் விட்டார் என்று தனசேகரனுக்கே ஆச்சரியமாக இருந்தது. “நிலவரம் ஒண்ணும் திருப்தியா இல்லே தனசேகரன்! மேலே மேலே தேடிப் பார்த்தோம்னாக் குழப்பம் தான் மிஞ்சும் போல இருக்கு. எப்படியும் இந்த அரண்மனை விவகாரங்களை, இன்னும் ஒரு வாரத்திலேயோ பத்து நாளிலேயோ செட்டில் பண்ணி, உங்கிட்ட விட்டுட்டு நான் ஊருக்கு ப்ளேன் ஏறலாம்னு பார்க்கிறேன். நீ இந்த டைரிகளைச் சீக்கிரம் படிச்சுப் பார்த்து உங்கப்பாவோட வரவு செலவுகளைச் சரி பாரு. அவர் வாங்கின கடனையும் டைரியிலே எழுதி இருக்கணும். திருப்பிக் கொடுத்த கடனையும் கொடுக்க வேண்டிய கடனையும் டைரியிலே எழுதியிருக்கணும்” மாமா தாம் கண்டுபிடித்த டைரிகளைத் திரட்டி எடுத்துத் தனசேகரனிடம் நீட்டினார். “நான்தான் படிக்கணும்கிறது இல்லே மாமா! நீங்களே இதையெல்லாம் படிச்சுக் கண்டுபிடிச்சு எழுதினாலும் பரவாயில்லே. மாமா இதைப் பார்த்தால் எனக்கும் தருப்திதான்.” “அது முறையில்லே தனசேகரன்! ஒரு தகப்பனோட அந்தரங்கக் குறிப்புக்களை மகன் பார்க்கிறதே கூடச் சரி இல்லை. ஆனால் காரியம் ஆகணுமேங்கறதுக்காகத்தான் இதை உன்னைப் பார்க்கச் சொல்றேன் நான். நீயே பாரு! நான் பார்க்க வேண்டாம்” என்று மாமா மறுத்துவிட்டார். தனசேகரன் அப்பாவின் டைரிகளை எல்லாம் வாங்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்றான். ஏற்கெனவே ஆவிதானிப்பட்டி பி.டபிள்யூ.டி. இன்ஸ்பெக்ஷன் பங்களாவிலிருந்து எடுத்து வந்த அந்தச் சிறுகதை அடங்கிய பழைய வாரப் பத்திரிகையும் அவன் அறையில் பத்திரமாக இருந்தது. |