14 மாமாவும் தனசேகரனும் கலந்து பேசி முடிவாக ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தார்கள். தந்தைக்கு இருந்தது போல் ராஜபரம்பரை என்ற ஜம்பமும் டாம்பீகமும் இல்லாத காரணத்தால் தனசேகரன் இந்த விஷயத்தில் உடனே ஒரு முடிவுக்கு வர வசதியாயிருந்தது. சட்டங்களின் படியும் சமூக மாறுதலின்படியும் சமஸ்தானம், அரண்மனை எல்லாம் இனி இல்லை என்று ஆகிவிட்டாலும் வீண் பெருமையடித்துக் கொள்வதற்காகத் தந்தை அந்தப் பழம் பெயர்களை வைத்துக் கொண்டு செய்த எதையும் தொடர்ந்து செய்யத் தனசேகரன் தயாராயில்லை. அரண்மனை சமஸ்தானம் என்ற ஏற்பாடுகளை உடனே கலைத்து விட முடிவு செய்திருந்தார்கள் அவர்கள். தனசேகரன் அதற்குச் சம்மதித்திருந்தான் என்பதை விட அதிகமாக அதில் மிகவும் தீவிரமாக இருந்தான் என்று சொல்லலாம் போலிருந்தது. தந்தையின் இன்ஷூரன்ஸ் கிளெய்ம் தொடங்கி வரவு வகைகளுக்கு ஒரு கணக்கு எடுத்தார்கள். அதன் பின்னர் தர வேண்டிய கடன், அரண்மனைப் பணியாளர்களின் காம்பன்சேஷன் முதலிய செலவு வகைகளுக்கு ஒரு கணக்கு எடுத்தார்கள், அரண்மனை சமஸ்தான சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பு ஊழியர்களையும் சந்தித்துப் பேசுவதற்கும் உரிய நாட்களைக் குறித்தார்கள். இளையராணிகளைச் சந்தித்துப் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டது, சிலவற்றில் மாமாவுக்கும் தனசேகரனுக்குமே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மாமா பல விஷயங்களில் அசல் வியாபாரக் கண்ணோட்டம் மட்டுமே உடையவராக இருந்தார், தனசேகரன் கலை, கலாசாரம், மனிதாபிமான விஷயங்களில் சற்றே அதிக அக்கறை காட்டினான். அப்படி விஷயங்களில் நஷ்டம் வந்தால் கூட. அதைப் பொறுத்துக் கொள்ள அவன் தயாராக இருந்தான் கருத்து வேறுபட்டாலும் தன்னுடைய செல்ல மருமகன் என்ற காரணத்தாலும், தன் வருங்கால மாப்பிள்ளை என்ற காரணத்தாலும் மாமா பலவற்றை அவனுக்கு விட்டுக் கொடுத்து நடந்துகொண்டார். இந்த உறவு எல்லையில் மாமா தங்கபாண்டியனின் பிடிவாத குணம் கூடத் தளர்ந்து போயிற்று. அரண்மனை ஊழியர்கள் சம்பந்தமான செல்வுகளைக் குறைப்பது பற்றிப் பேச்சு வந்த போது மாமா தனசேகரன் இருவர் முன்னிலையிலுமே, “இப்பவே நான் அவசரப்பட்டுச் சொல்றதுக்காக மன்னிக்கணுங்க! இந்த ஏற்பாடுகளைக் கவனிக்கறதுக்காகத் தான் நான் கூட இருக்கேன். இதெல்லாம் முடிஞ்சதுமே என்னைகூட நீங்க ரிலீவ் பண்ணிடனும், பழைய நிலவரத்தைப் பற்றிய விவரங்கள் உங்க ரெண்டு பேருக்குமே தெரியாது. திடீர்னு நான் விலகிட்டா உங்களுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்ட மாதிரி இருக்குமேன்னுதான் நான் உடனே விலகலே. இல்லாட்டி நான் உடனே விலகிக்கத் தான் விரும்புவேன்” என்று காரியஸ்தரும் தாம் பலமுறை இருவரிடம் தனித்தனியே சொல்லி வந்ததை இப்போது இருவரிடமும் சேர்ந்தே நேருக்கு நேர் சொல்லிவிட்டார்.
“அவசரப்படாதீங்க சேர்வைக்காரரே! எப்போ போகணும்கிறது உங்களுக்கும் தெரியும். உங்களை எப்போ அனுப்பணும்கிறது எங்களுக்கும் தெரியும். யோசிச்சு நிதானமா செய்யலாம் பொறுத்துக்குங்க” என்று மாமா, பெரிய கருப்பன் சேர்வைக்கு மறுமொழி கூறினார்.
கோவில்கள், அறக்கட்டளைகள் என்ற பெயரில் இருந்த சமஸ்தானத்துக்குரிய தர்ம ஸ்தாபனங்களைத் தொடர்ந்து நிர்வகிப்பதா அல்லது பொதுவில் விட்டு விடுவதா என்ற பிரச்னை எழுந்தது. எச்.ஆர்.இ.வி.யிலிருந்து இரண்டு மூன்று முறை விசாரணை வந்திருப்பதாகவும் அவற்றை அவர்களிடமே (இந்து அற நிலையப் பாதுகாப்புத்துறை.) விட்டுவிடலாம் என்றும் காரியஸ்தர் தம் கருத்தைக் கூறினார். ஆனால் அப்படி விட்டுவிடுவதற்கு முன் பழைய ராஜா கோவில் நகைகள் விஷயத்திலும், நிலங்களின் விஷயத்திலும் செய்திருக்கும் ஊழல்களை நேர் செய்து விட வேண்டும் என்றும் வற்புறுத்தினார் காரியஸ்தர். அரண்மனையின் கருவூலத்தில் அங்கும் இங்குமாகத் திரட்டிய தங்கத்தைக் கொண்டு பெரிய ராஜா திருடியிருந்த கோயில் நகைகள் மறுபடி ஒழுங்காகச் செய்து கொடுக்கப் பெற்றன. தம்முடைய உல்லாசச் செலவுகளுக்காகப் பெரிய ராஜா கண்ட கண்ட மனிதர்களிடம் அடகு வைத்திருந்த கோயில் நிலங்களை எல்லாம் மீட்டுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மாமாவும் தனசேகரனும் செய்தார்கள். வேலைகள் துரிதமாக நடந்தன. மிகவும் வசதி படைத்த ஒரு பெரிய பணக்கார மிராசுதாரிடம் தந்தை அடகு வைத்திருந்த கோவில் நிலங்களை மட்டும் அவர் திருப்பித்தர தயங்கினார். “கல்லும் முள்ளுமாகக் கிடந்த மேட்டாங்காட்டை அவரு எங்கிட்ட அடமானம் வச்சாரு. அடமானப் பத்திரத்திலே குறிச்ச வருஷம்லாம் கூடக் கடந்து போச்சு. நான் என் சொந்தச் செலவிலே மேட்டைத் திருத்திச் செப்பனிட்டுச் சமமாக்கிக் கிணறுகள் வெட்டி - மின்சார மோட்டார் போட்டுப் பாசன வசதி பண்ணி முன்னே கிடைச்சதை விட நாலு மடங்கு மகசூல் கிடைக்கிற அசல் நஞ்சை நிலமா அதை இப்போ மாத்தியிருக்கேன். இப்போ போயி நீங்க அதைத் திருப்பிக் கேட்டா எப்படி?” மாமா விட்டு விடவில்லை. “சரி! நீங்க சொல்றபடியே செஞ்சிருக்கீங்கன்னு வச்சுக்கலாம். ‘டெவலப் மெண்டுக்காக’ நீங்க கையிலேருந்து செலவழிச்சிருக்கிற தொகைக்கும் ஒரு கணக்குக் கொடுங்க. அடமானத் தொகை, வட்டி, உங்க சொந்தச் செலவு எல்லாத்துக்குமா நாங்க பணம் திருப்பிக் கொடுத்துடறோம். நிலத்துக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்துடுங்க.” “அதெப்படிங்க? இத்தினி வருஷம் கழிச்சு?” என்று இழுத்தார் மிராசுதார். “ஒழுங்காத் திருப்பிக் கொடுக்கிறதா இருந்தால் உங்களுக்குச் சேர வேண்டியதை வாங்கிக்கிட்டுக் கொடுங்க. இல்லாட்டி கோர்ட் மூலமாச் செய்ய வேண்டியதைச் செய்துக்கும். நானும் விவகாரஸ்தன். சுலபமா விட்டுட மாட்டேன்” என்றார் மாமா. கடைசியில் அந்த மிராசுதார் வழிக்கு வந்தார். கோவில் நிலங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. பெரிய ராஜாவின் இன்ஷ்யூரன்ஸ் தொகை மொத்தம் பத்து லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் வந்தது. மாமாவைப் பொறுத்த வரை பத்து லட்சத்து எழுபதாயிரம் என்பது ஒரு பெரிய தொகையே இல்லை. சொந்த முயற்சியால் உழைத்து முன்னேறிப் பல லட்சங்களைச் சம்பாதிக்கவும் செலவழிக்கவும் சகஜமாக பழகியிருந்தார் அவர். பத்து லட்சத்து எழுபதாயிரம் ரூபாயில் கொஞ்சம்கூட மீதப்படுத்த வேண்டும் என்ற ஆசையே இல்லாமல் தந்தையின் கடன்களை அடைப்பதிலும் ஊழல்களை ஒழுங்கு செய்வதிலும் அக்கறையாக இருந்த தனசேகரனின் கடமையுணர்வு காரியஸ்தருக்கே வியப்பை அளித்தது. பெரிய ராஜாவையும், அவர் மகனான தனசேகரனையும் தனக்குள் ஒப்பிட்டுப் பார்த்தார் காரியஸ்தர். இவ்வளவு பெருந்தொதை ஒரே சமயத்தில் கிடைத்தால் காலஞ்சென்ற பெரிய ராஜா உடனடியாக என்னென்ன ஊதாரித்தனமான செலவுகளை எல்லாம் செய்வார் என்பதைச் சிந்தித்தார் அவர். இப்போது தனசேகரன் அந்தத் தொகையை எவ்வளவு பொறுப்பாகவும் கட்டுப்பாடாகவும் செலவு செய்கிறான் என்பதையும் அவரே பார்த்தார். இளைய ராணிகள் பிரச்னை விவாதத்துக்கு வந்த போதும் தனசேகரன் தாராளமாக நடந்து கொண்டான். கணக்கு வழக்குப் பார்க்கவில்லை. முன்னால் தயங்கியது போலத் தயங்கிக் கூசிக் கொண்டிருக்காமல் தனசேகரனும் மாமாவும், காரியஸ்தரும் இளைய ராணிகளின் சகோதரர்கள், பெற்றோர், உறவினர்கள் என்ற வகையில் வெளியே இருந்து கடிதம் எழுதி வரவழைக்கப்பட்டிருந்த சிலருமாக அரண்மனை அந்தப்புரத்திற்கே சென்று விஷயங்களைப் பேசி முடித்தார்கள். வயதில் இளையவர்களும், மூத்தவர்களும், நடுத்தரப் பருவத்தினருமாகப் பல பெண்களை ஒரு சேர உட்கார்த்தி வைத்து அவர்களிடையே பேசி முடிவு செய்வது பெரும்பாடாக இருந்தது. காரியஸ்தர் ஓர் அதிகாரிபோல மட்டுமே நடந்து கொண்டார். அதற்கு மேல் அதிகமாக தனசேகரனின், குடும்ப விஷயங்களிலோ, அரண்மனை அந்தப்புரத்துப் பெண்கள் விஷயத்திலோ அவர் நெருங்கி வந்து தலையிடத் தயாராயில்லை. அந்தப் பேச்சு வார்த்தைகளில் எல்லாருடைய அபிப்ராயமும் விட்டுப் போகாமல் குறிப்பெடுத்துக் கொள்வதற்காக ஸ்டெனோகிராபர் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருந்தார், அரண்மனை நிர்வாகத்தினரின் சார்பில் தொகுத்துச் சொல்ல வேண்டியவற்றை அவர்களிடம் தான் சொல்லுவதா அல்லது மாமாவைச் சோல்ல விடுவதா என்று யோசித்தான் தனசேகரன். மாமாவைப் பேசவிட்டால் அங்கிருப்பவர்களின் மனம் புண்படும்படி அவர் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசி விடுவாரோ என்ற தயக்கமும் அவனுள் இருந்தது. முடிவில் மாமாவிடம் கேட்காமல் அவனே அந்த விஷயத்தை அவர்களிடம் கோர்வையாகவும், நிதானமாகவும் தொகுத்துச் சொல்லலானான். “புகழ் பெற்ற இந்தச் சமஸ்தானம் இன்றும் இனி மேலும் சமஸ்தானமாக இயங்க வசதிகளற்றதாகி விட்டது. இனி அப்படி இயங்க வேண்டிய அவசியமும் இல்லை. சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப மாறுவதற்கு நாம் தான் தயாராக வேண்டும். அரண்மனை, அந்தஸ்து, ராஜயோகம் இவைகளை எல்லாம் மறந்து சமூகத்தில் மக்களோடு மக்களாகக் கலந்து விடுவதற்கு இனி நீங்களோ நானோ தயங்கினால் நாம் இருக்குமிடத்திலேயே நம்மை மியூஸியமாக்கி விடுவார்கள் ஜனங்கள். என்னைப் பொறுத்தவரை நான் இனிமேல் இந்தச் சமஸ்தானத்தைக் கட்டி ஆளுகிற உத்தேசமில்லை. கட்டி ஆள்வதற்கும் எதுவும் இங்கு இல்லை, நாளையோ அல்லது வெகு விரைவிலோ இந்தப் பெரிய மாளிகை என்பது ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாகி விடலாம். அப்படி நினைவுச் சின்னமாகிற போது உங்களையும் என்னையும் போன்ற உயிருள்ள மனிதர்களும் இதற்குள்ளே இருக்க முடியாது ஏனெனில் நாம் நினைவுச் சின்னங்களாகவே இருந்துவிட முடியாது. வாழவேண்டும். உங்களை எல்லாம் அப்படி அப்படியே புறப்பட்டுப் போய் விடும்படி நான் சொல்லி விடவில்லை. எங்களால் முடிந்த ஒரு தொகையை நஷ்ட ஈடாகவோ உதவித் தொகையாகவோ உங்களுக்குத் தந்து விட எண்ணியிருக்கிறோம். அதைப் பெற்றபின் உங்கள் எதிர்காலத்தை நீங்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். இதுவரை அவசியமாகவோ, அல்லது அவசியமின்றியோ இந்த அரண்மனையின் ஓர் அங்கமாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள். என்னுடைய குடும்பத்தின் சார்பில் இதற்காக மனப்பூர்வமாக உங்களுக்கு நான் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். எங்கள் முடிவை நான் சொல்லிவிட்டேன். இனி நீங்களோ உங்களுக்கு வேண்டியவர்களோ ஏதாவது சொல்ல விரும்பினால் தாராளமாகச் சொல்லலாம்.” இப்படித் தனசேகரன் சொல்லி முடித்த சில விநாடிகளிலேயே பல்வேறு விதமான கேள்விக்கணைகள் அவனை நோக்கிக் கிளம்பின. “ஏதோ நஷ்ட ஈடுன்னிங்களே? அது எவ்வளவுன்னு, சொல்லலியே? அதை முதல்லே சொல்லுங்கோ?” “வெறும் நஷ்ட ஈட்டுத்தொகை மட்டும் போதாது. எங்களிலே பலருக்கு ஒண்டக்கூட இடம் கிடையாது. அரண்மனைக்கு அக்கம் பக்கத்திலேயேயும் இந்த ஊரைச் சுத்தியும் நிறையக் காலி மனைகள் இருக்கு. எங்களுக்கு, வீடு கட்டிக்க ஏதாவது மனை கொடுத்தால்தான் உதவியா இருக்கும்.” தனசேகரன் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான். மாமா முகத்தைச் சுளிக்கலானார். காரியஸ்தர் பட்டுக் கொள்ளாமல் நின்றார். ‘காலஞ்சென்ற பெரிய ராஜாவுக்கு இருந்த பலவீனம் காரணமாக அரண்மனையில் சேர்ந்துவிட்ட ஒரு கூட்டம், இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கப் பார்க்கிறதே?’ என்று எரிச்சல் எரிச்சலாக வந்தது மாமாவுக்கு. நாட்டியம், பாட்டு என்று தொழில்களில் இருந்து பின்னால் பெரிய ராஜாவின் ஆசைக்கிழத்திகளாக வந்து அந்த அரண்மனையில் தங்கிவிட்ட சில பெண்கள். “நாங்க நாலு காசு சம்பாதிக்க முடிஞ்ச காலத்திலே இங்கே வந்து இவங்களுக்குத் தலையை நீட்டிட்டோம். இப்போ வயசாச்சு; வெளியேறிப் போனாலும் ஆடியோ பாடியோ சம்பாதிக்க முடியாது. நீங்களா எங்க நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு நல்லவிதமா மரியாதை பண்ணி அனுப்பினாத்தான் உண்டு” என்று ஆதங்கப்பட்டுக் கொண்டார்கள். அப்போது அவர்களது குறைகள், முறையீடுகள், வேண்டுதல்கள் எல்லாவற்றையும் கேட்டு முடித்த பின் தனசேகரன் ஒவ்வொருவருக்கும் தாங்கள் கொடுக்க முடிவு செய்திருக்கும் தொகையின் அளவை வெளியிட்டான். இரண்டொருவர் அந்தத் தொகையைப் போதாது என்று காரசாரமாக வாதிட்டார்கள். “இவ்வளவுதான் நீங்கள் பெற முடியும் என்று நாங்கள் உங்களைப் பற்றிக் கணித்துவிட்டதாக நினைக்காதீர்கள். இதைவிட அதிகமாக உங்களுக்குக் கொடுத்தனுப்ப வேண்டும் என்று நினைத்தும் இந்த அரண்மனையில் இன்று அதற்கேற்ற வசதியில்லை. வீடுகட்டிக் கொள்ள மனை வேண்டும் என்று கேட்கிறீர்கள். அதைப் பற்றி யோசித்து விரைவில் ஒரு சாதகமான முடிவு சொல்ல முயலுகிறேன்” என்றான் தனசேகரன். தனசேகரன் கூறியதுபோல் நிதானமாக ஆற அமர எதையும் சொல்லுகிற மனநிலையில் மாமா இல்லை. மிகவும் சூடாக இருந்தார் அவர். என்றாலும் அது தனசேகரனின் குடும்ப விஷயம் என்பது அவரைப் பேசுவதிலிருந்து தடுத்தது. இருந்தாலும் அவர் அறவே ஒதுங்கி இருந்துவிட விரும்பவில்லை. தனசேகரனின் காதருகே நெருங்கி, “பணம் கொடுக்கிறது போதாதா? காலி மனை வேறு எதற்கு? மனை விஷயமா இப்பவே அவங்களுக்கு இடம் கொடுத்தாப்பிலே பதில் சொல்றியே? கொஞ்சம் ‘கெத்தாவே’ பேசு இல்லாட்டி ஆளை முழுங்கிப் புடுவாங்க” என்றார். தனசேகரன் வயது மூத்தவரான அவர் சொல்லியதை மறுக்காமல் கேட்டுக்கொண்டான். இளைய ராணிகள் சார்பில் இன்னொரு கோரிக்கையும் விடப்பட்டது. “நஷ்டத் தொகையைக் கொடுத்த மறுநாளே எங்களையெல்லாம் உடனே அரண்மனையைவிட்டு வெளியேறுங்கன்னு விரட்டக் கூடாது. கொஞ்சம் டயம் குடுக்கணும்.” “டயம் குடுக்கிறதைப் பற்றி எங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை. ஆனா இங்கே உங்களையெல்லாம் தங்கவச்சுக் காப்பாற்ற வழி இல்லேன்னுதானே இந்த ஏற்பாடெல்லாம் செய்யிறோம். அப்புறமும் நீங்க இங்கேயே இருப்போம்னா எப்பிடி முடியும்? தவசிப்பிள்ளைங்க, ஸ்டோர் வேலை மணியம், களஞ்சியக் கணக்கப்பிள்ளை எல்லோரையுமே ஒவ்வொருத்தரா வேலையைவிட்டு அனுப்பப் போறோம். நீங்க மட்டும் தனியா ரெண்டு மாசம், மூணு மாசம்னு இங்கே இருந்து என்ன பண்ணப் போறீங்க?" “அதெப்படி..? சின்ன ராஜா சொல்றதைப் பார்த்தா அரண்மனையையே காலி பண்ணி ஒழிச்சு விட்டுடப்போற மாதிரியில்ல தெரியுது?” “மாதிரி என்ன உண்மையே இதுதான். அப்படி எல்லாம் செய்யப் போறதுக்கு முன்னே நீங்க சிரமப் படாமே வெளியேறிடணும்கிறதைத்தான் இவ்வளவு நேரம் சொன்னேன். ஒரு வாரம், ரெண்டு வாரம் இங்கே தாமசிக்கலாம். அதுக்கு மேலேயானாச் சிரமப்படும்.” உடனே இந்தப் பிரச்னையை விட்டுவிட்டு வெளிநாடுகளிலும், உள் நாடுகளிலுமாகப் படிக்கும் தங்கள் மக்களுக்குப் படிப்பு முடிகிறவரையாவது அரண்மனையிலிருந்து கிடைத்துவரும் உதவித் தொகை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதைச் சிலர் வற்புறுத்தத் தொடங்கினார்கள். இன்னும் சிலர் மிகத் துணிச்சலோடு “அவர்களும் நீங்க எப்படியோ அப்படியே பெரிய ராஜாவோட மக்கள். தானே? அவங்களை மட்டும் ஏன் வித்தியாசமா நடத்தணும்?” என்றே தனசேகரனிடம் நேருக்கு நேர் கேட்டார்கள். “எங்கப்பா சொத்திலே ஒரு பைசா எனக்கு மீதம் கிடையாது. அதுக்கு நான் ஆசைப்படவுமில்லை. சொல்லப் போனால் உங்களை எல்லாம் வெறுங்கையோட அனுப்பக் கூடாதேன்னு எங்க மாமாகிட்டப் பணம் வாங்கிச் செலவழிக்கிறேன். இது உங்களுக்குத் தெரியணும்கிறதுக்காகத் தான் சொல்றேன். பட்டத்து ராணிக்குப் பிறந்த மகன்கிறத்துக்காக நான் எந்தத் தனி வசதியையும் அநுபவிக்கலே” என்று அவன் அவர்களுக்கு உடனே விரைந்து மறுமொழி கூறினான். காலத்துக்குப் பொருந்தாமல், சோம்பேறித்தனமாகக் கட்டி வளர்க்கப்பட்ட ஓர் அரண்மனையைத் திடீரென்று இழுத்து மூடிக் காலி செய்வது எவ்வளவு சிரமமான காரியம் என்பது அப்போதுதான் தனசேகரனுக்குப் பிரத்யட்சமாகப் புரிந்தது. |