6 மாமாவும் தனசேகரனும் ‘ஸ்டாக் டேக்கிங்’கோ ‘ஆடிட்டோ’ செய்யவில்லை என்றாலும் அதை விடக் கடுமையாக எல்லாவற்றையும் பரிசோதனை செய்து விட்டார்கள். காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை, இந்தப் பரிமேய்ந்த நல்லூர்த் தேவஸ்தான விஷயமாய்ப் பெரியராஜா எல்லாமே கவனிச்சதாலே இங்கே இந்தப் ஃபைல்களிலே எதையும் அவர் அரண்மனை ஆபீஸுக்கு அனுப்பிச்சதில்லே. அதுனாலே இங்கே என்ன என்ன சரியா இருக்கு. என்னென்ன தப்பா இருக்குங்கறதைக் கூட எங்களாலே பிரிச்சுக் கண்டு பிடிக்க முடியாது என்று முதலிலேயே அந்தத் தேவஸ்தானக் கணக்குகளிலிருந்து தம்மை விலக்கிக் கொண்டு விட்டார். அவர் சொல்லியது நியாயமாகப் படவே அவரிடமிருந்து மேற்கொண்டு எதுவும் விசாரிக்க வழி இல்லாமல் போய்விட்டது. தனசேகரன் அலுத்துக் கொண்டான். “பாழாய்ப் போன சமஸ்தானமும் சொத்துக்களும் எக்கேடும் கெட்டுப் போகட்டும்னு பேசாமே இப்படியே விட்டுட்டுப் போயிடறதுதான் நிம்மதியா இருக்கும் போல இருக்கு மாமா! ஒரே தலைவேதனையாப் போச்சு. எங்கே போனாலும் ஊழலா இருக்கு. கணக்கு வழக்கு சரியா இல்லே. எதிலேயும் தலையும் புரியலே. வாலும் புரியலே.” “அதுக்குள்ளாரப் பதறாதே! அப்படித்தான் இருக்கும். போகப் போக எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா ஒழுங்கு படுத்திடலாம்” என்றார் மாமா. தனசேகரனுக்குக் காலஞ்சென்ற தன் தந்தையைப் பற்றி நினைக்கும் போதே அருவருப்பாகவும் தலைகுனிவாகவும் இருந்தது. பள்ளிக்கூடம் தொடங்கிக் கோயில் சொத்து வரை எல்லாவற்றிலும் கையாடல் செய்து செலவழிக்கும் அளவுக்குத் தந்தை ஊதாரியாக இருந்திருக்கிறார் என்பதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. குடும்பப் பெருமை, எல்லாவற்றையும் முட்டை கட்டி வைத்து விட்டுத் தன் தந்தையின் ஊழல்களைப் பற்றித் தானே பட்டியல் போட்டுக் கணக்கு எடுத்துத் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு வெளியிட்டு விடலாம் போல அவ்வளவு ஆத்திரம் ஆத்திரமாக இருந்தது. தனசேகரனுக்கு வந்த கோபத்தில் என்னென்னவோ செய்யத் தோன்றியது. மாமா அருகிலிருந்து சமாதானப் படுத்தியிருக்கா விட்டால் அவன் எப்பொழுதோ பொறுமையிழந்து போயிருப்பான். மறுநாள் கோவில் நிலத்தைக் கவனித்து வந்த குத்தகைதாரர்களைக் கூப்பிட்டுப் பேசியபோதும் அவர்களில் பலரிடம் காலஞ்சென்ற மகாராஜா ரசீதுகளே கொடுக்காமல் தனித் தனியாகப் பெருந்தொகை ரொக்கமாகப் பணம் வாங்கியிருப்பது தெரியவந்தது. சிலரிடம் நிறையப் பணம் வாங்கிக் கொண்டு பெறுமானத்தை விடக் குறைந்த தொகைக்கு நிலங்களைக் குத்தகை பேசி விட்டிருந்தார். தனசேகரன் இந்த ஊழல்களையெல்லாம் பார்த்துக் குழம்பினாலும் மாமா பொறுமையாகவும் நிதானமாகவும் ஒவ்வொன்றையும் எப்படிச் சரிப்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
கோவில் நிலக் குத்தகைதாரர்களைச் சந்தித்துப் பேசி முடித்ததும் பரிமேய்ந்த நல்லூர்த் தேவஸ்தானத்து நகைகளைப் பழைய நிலையில் உருவாக்கி வைப்பதாக மாமாவும், தனசேகரனும், குருக்களுக்கும், தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கும் வாக்குறுதி அளித்தார்கள். அடுத்து ஆவிதானிப்பட்டி என்ற ஊருக்கு அவர்கள் சென்றார்கள். அந்த ஆவிதானிப்பட்டி சமஸ்தானத்தின் பழம் புலவர்கள் நிறைந்திருந்த ஊர். பழைய ராஜாக்கள் நாளிலேயே அந்த ஊருக்கு ‘இண்டலெக்சுவல் டவுன் ஆஃப் தி ஸ்டேட்’ என்று ஒரு பேரே உண்டு. அந்த ஊரில் ஒரு புராதனமான மாரியம்மன் கோயிலும், ஒரு பெரிய வாசகசாலையும், அந்த வாசகசாலையின் மற்றோர் அங்கமாகிய ‘மானுஸ் கிரிப்ட்ஸ் லைப்ரர்’ எனப்படும் ஏட்டுச் சுவடிகள் நூல் நிலைய நிர்வாகமும், மாரியம்மன் கோவில் நிர்வாகமும் கூட ஓரளவு ஊழல் மயமாக ஆக்கப்பட்டிருக்கும் போலத் தெரிந்தது. இந்த ஆவிதானிப்பட்டியில் அரண்மனைக்குச் சொந்தமான விருந்தினர் விடுதி எதுவும் இல்லையாகையால் பி.டபிள்யூ.டி, இன்ஸ்பெக்ஷன் பங்களாவில் மாமாவும். தனசேகரனும் தங்கிக் கொண்டார்கள். பெரிய கருப்பன் சேர்வை யாரோ உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டார். புலவர்கள் பரம்பரையில் சமஸ்தான மானியத்தை அனுபவித்துக் கொண்டிருந்த சிலரும் அப்போது அந்த ஊரில் இருந்தார்கள். இந்த ஊரில் உள்ள பிரபந்தங்களையும், பழைய ஏட்டுச் சுவடிகளையும் சமஸ்தான செலவில் அச்சிட்டு நூலாக வெளியிட வேண்டும் என்று தனசேகரன் ஆசைப்பட்டதுண்டு. அரண்மனை உட் கோட்டையிலுள்ள அச்சகத்தையும் இதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று தனசேகரன் முன்பு விரும்பியிருந்தான். ஆனால் காலஞ்சென்ற மகாராஜாவும் அவன் தத்தையு மான பீமநாத ராஜசேகர பூபதியுடன் அவனுக்கு ஒத்து வராததால் அவன் ஆசைப்பட்டபடி அப்போது எதையும் செய்ய முடியவில்லை. இதனால் தனசேகரன் இப்போது ஆவிதானிப்பட்டிக்கு வரும்போது சிறப்பான அக்கறையும் மகிழ்ச்சியும் கொண்டு வந்திருந்தான். சமஸ்தானத்துக்குப் பெருமை தேடித் தரக்கூடிய தமிழ்க் கவிதைகளும் பிரபந் தங்களும், காவியங்களும், உருவாகிய ஊர் என்ற பெருமிதத்தோடுதான் அவன் அந்த ஊருக்குள் நுழைந்திருந்தான். மாமா தங்கபாண்டியனுக்கு இவற்றுள் எல்லாம் பெரிய ஈடுபாடு எதுவும் கிடையாது. தொழில்கள், லாபங்கள் வர்த்தக பேரங்களை வெற்றிகரமாக நடத்துவதில் மட்டுமே அவர் நிபுணர். இலக்கியம், கலைகள், பொழுது போக்கு அம்சங்களில் பிரமாதமான ஈடுபாடும் அவருக்குக் கிடையாது, எதிர்ப்பும் கிடையாது.
இந்த ஆவிதானிப்பட்டியில் சமஸ்தானமாக இருந்த காலத்துப் புலவர்கள் சிலர் இன்னும் உயிரோடு இருந்தார்கள். அவர்களில் சமஸ்தானத்து மானியமாக நிலம் பெற்றவர்களும் இருந்தார்கள். சிலேடை பாடுவதில் வல்லவராகிய சிலேடைப் புலி சின்னச்சாமிப் பாவலர் என்ற ஒருவர் ஆவிதானிப்பட்டியில் தோன்றித் தமிழ்நாடு முழுவதும் பெயர் சொல்லிய அளவில் தெரியும்படி புகழ் பெற்றிருந்தார். அவருடைய சிலேடை வெண்பாக்கள் புத்தகங்களாக வந்து சிறப்புப் பெற்றிருந்தன. மாம்பழத்துக்கும், மங்கைப் பருவத்துப் பெண்ணுக்கும் சிலேடை, வெண்ணெய்க்கும் மகாவிஷ்ணுவுக்கும் சிலேடை என்று விதவிதமாகப் பாடித் தள்ளியிருந்தார் சிலேடைப் புலி சின்னசாமிப் பாவலர். சமஸ்தானத்து நவராத்திரி விழாவும் அதில் வித்வத் சதஸ் என்ற புலவர்களைச் சன்மானம் அளித்துக் கெளரவித்தல் போன்ற வழக்கமும் நின்று போனபின் மேற்படி புலவர்களில் பலர் ஆவிதானிப்பட்டியிலிருந்து பீமநாதபுரத்துக்கு வந்து போவது கூட நின்று போயிருந்தது. வித்வத் சதஸ் செலவுகள் என்று கணக்கு எழுதி விட்டுப் பின்னாளில் தன் தந்தை மனம் போன படி அந்தத் தொகையை வேறு காரியங்களுக்குச் செலவிடத் தொடங்கியது, தனசேகரனுக்கே தெரியும். சொத்து சுகம் ராஜமான்யம் எல்லாம் போய் விட்டாலும் பீமநாதபுரம் கலாசாரத்தையும் வரலாற்று இலக்கியப் பெருமைகளையும் கட்டிக்காத்து நற்பெயர் வாங்கவேண்டும் என்ற ஆசை தனசேகரனுக்கு இன்னும் இருந்தது. மாமா தங்கபாண்டியனுக்கோ மருமகனைச் சமஸ்தான விவகாரங்களிலிருந்து கட்டிக்காத்து நீலகிரியிலோ ஏற்க்காட்டிலோ ஏதாவது எஸ்டேட் வாங்கி விடச் செய்தால்தான் எதிர்கால நலனுக்கு உகந்தது என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் இருவரும் ஆவிதானிப்பட்டியில் வந்து தங்கிய தினத்தன்று இரவில் துரங்கப் போகுமுன் இதுபற்றி இருவருக்கும் ஒரு சர்ச்சையேகூட ஏற்பட்டுவிட்டது. ஆனால் சர்ச்சை சண்டையாக மாறிவிடவில்லை. “இந்தாப்பா தனசேகரன்! இந்த இலக்கியம், கவிதை புஸ்தகம் அச்சுப்போடறது இதெல்லாம் எதுவும் நடை முறையிலே லாபம் தர்ற காரியமில்லே. இந்த ஆவிதானிப்பட்டிப் புலவனுக பாடினதை எல்லாம் அச்சுப்போட்டு முடிக்கிறதுன்னா இப்போ விற்கிற பேப்பர் விலை மை விலையிலே இது மாதிரி ரெண்டு சமஸ்தானத்துச் சொத்தை வித்தாக் கூடப் போதாது” என்று அவனைக் கேலி செய்தார் மாமா. இப்படியே கேலியாக ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்துவிட்டு மாமா சிறிது நேரத்தில் உறங்கப்போய் விட்டார். தனசேகரனுக்கு உறக்கம் வரவில்லை. படிப்பதற்கு ஏதாவது புத்தகம் கிடைத்தால் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்து விட்டுத் தூங்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. தங்கியிருந்த இடத்தில் ஒரு ஜன்னலோரமாகச் சில பழைய வாரப் பத்திரிகைகளும் அவற்றின் சிறப்பு மலர்களும் கிடந்தன. அவற்றில் தூசி படிந்திருந்தது. அவற்றில் ஒன்றை எடுத்துத் தூசியைத் தட்டிப் படிக்கத் தொடங்கினான் தனசேகரன். அந்தப் பத்திரிகையில் வெளிவந்திருந்த ஒரு சிறுகதை அவனை வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுகின்றி வெகுவாக அவனுடைய கவனத்தையும் உடனே கவர்ந்தது. தன்னுடைய சமஸ்தானத்தையும் குடும்பத்தையுமே கூர்ந்து கவனித்து யாரோ அதை எழுதியிருப்பதுபோல் அவனுக்குப்பட்டது. கதையின் தலைப்பே அவன் கவனத்தை உடனே கவர்ந்து இழுப்பதாக அமைந்திருந்தது. “ஒர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது!” “இளைய ராஜாவை மெட்ராஸ்லேருந்து யாரோ பார்க்கணும்னு வந்திருக்காங்க” என்ற குரலைக் கேட்டு ஆத்திரத்தோடு தலைநிமிர்ந்து திரும்பிய ரகுநாதபாண்டிய ராஜபூபதி என்ற ஆர்.பி. பூபதி, “இந்தா. மருதமுத்து உனக்கு எத்தினிவாட்டி சொல்லியிருக்கேன்? இளையராஜா அந்த ராஜா இந்த ராஜா எல்லாம் கூடாது. சும்மா ‘ஐயா’ன்னு கூப்பிட்டாப் போதும்னு” என்று வேலைக்காரனைக் கண்டித்து இரைந்தான். அப்படி இரைந்தபோது அவனுடைய முகத்தில் கடுங் கோபம் தெரிந்தது. வேலைக்காரன் மருதமுத்து ‘விலிட்டிங் கார்டு’ ஒன்றைப் பூபதியிடம் நீட்டிக் கொண்டே கூறினான்: “நீங்க வேண்டாம்னாலும் வளமுறையை எப்பிடி விட்டுட முடியும் இளையராஜா?” “பார்த்தியா, பார்த்தியா? மறுபடியும் இளையராஜா தானா? அதானே வேணாம்னு இவ்வளவு நேரமாத் தொண்டைத் தண்ணி வத்தினேன்? ஆயிரத்தித் தொளாயிரத்தி எழுபத்து மூணாம் வருஷத்திலே... போயி... இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம்? நம்மை நாமே ஏமாத்திக்கலாம்னா இப்பிடி எல்லாம் ராஜா சக்ரவர்த்தி அது இதுன்னு பொய்யாக் கூப்பிட்டுச் சந்தோஷப் பட்டுக்கலாம்.” “அப்பிடியில்லீங்க!... வந்து...?” “வந்தாவது, போயாவது இங்கே, இந்த அரண்மனைக் கோட்டை மதில் சுவருங்க இருக்கே. இதை வெளி உலகமே நம்ம கண்ணுக்குத் தெரியாதபடி அந்தக் காலத்திலே ரொம்ப உயரமாத் தூக்கிக் கட்டிப்பிட்டாங்க, அதான் உங்களுக்கெல்லாம் வெளி உலகமே தெரியலே. காலம் வேகமா ஓடிக்கிட்டுருக்குங்கறதும் தெரியலே. நீங்கள்ளாம் இன்னும் நூறு வருசத்துக்குப் பின்னாடி கடந்த காலத்திலேயே வாழ்ந்துக்கிட்டு இருக்கீங்க. சொப்பனத்துலேயே கூட வாழறீங்க. சமஸ்தானமும் ராஜாப் பட்டமும் அஸ்தமிச்சு எத்தினியோ வருஷம் ஆகப்போகுது. அதெல்லாம் ஏற்கெனவே அஸ்தமிச்சுப் போச்சுங்கறது அரண்மனை வெளிப்புறத்து மதில்களைத் தாண்டி இன்னும் இங்கே உள்ளே உங்களுக்கெல்லாம் தெரியலே. அதான் கோளாறு. முதல்லே இந்த மதில் சுவர்களை இடிச்சு தள்ளணும். அப்பத்தான் வெளி உலகத்திலே என்ன நடக்குதுன்னு இங்கே உள்ளார இருக்கிறவங்களுக்குத் தெரியும்.” “வந்திருக்கிறவரு ரொம்ப நேரமா வெளியே காத்துக் கிட்டிருக்காரு...” “சரி உள்ளே வரச் சொல்லு.” வேலைக்காரன், தேடி வந்திருப்பவரை உள்ளே அழைத்து வருவதற்காகச் சென்றான். சிறிது நேரத்திற்கெல்லாம் எடுப்பாகவும் மிடுக்காகவும் உடையணிந்த நடுத்தர வயது மனிதர் ஒருவர் உள்ளே வந்து முகமலர்ந்து கைகூப்பினார். “ஹைனெஸ்ஸை இவ்வளவு சீக்கிரமாச் சந்திக்கிற பாக்கியம் கிடைக்கும்னு இந்த ஏழை நினைக்கலே...” என்று பவ்யமாக வணங்கிய அந்த நடுத்தர வயது மனிதர் நாலைந்து ஹைனெஸ், இரண்டு மூன்று யுவர் எக்ஸ்லென்ஸி எல்லாம் போட்டுப் பேசவே அதைக் கேட்டுப் பூபதி எரிச்சலடைந்தான். “ஐயாம் பூபதி! ப்ளீஸ் ஸே மிஸ்டர் பூபதி. தட் இஸ் எனஃப்” என்று அவரைப் பதிலுக்கு மடக்கிக் கோபத்தோடு இரைந்தான் பூபதி. “நான் ஒரு வாரத்துக்கு முன்னே பெரிய ராஜாவைப் பெங்களூர் ரேஸிலே சந்திச்சுப் பேசற பாக்கியம் கிடைச்சுது.” “மிஸ்டர்!... உங்க பேரென்ன? சாமிநாதனா? சாமிநாதன்! இதோ பாருங்க. சுற்றி வளைக்காமே வந்த காரியத்தை ஸ்ட்ரெயிட்டா சிம்பிளா எங்கிட்டச் சொல்லுங்க... போதும். இப்ப இந்த இடம் சமஸ்தானமும் இல்லே. எங்கப்பா பெரிய ராஜாவும் இல்லே. நான் சின்ன ராஜா வும் இல்லே. எல்லோரையும் போல நாங்களும் சாதாரண ஜனங்கதான். இதில் மதில் சுவர், கோட்டை, நந்தவனம் இதை எல்லாம் விட்டுவிட்டு வேறே வீடு புதுசாக் கட்டறத் துக்கு வசதி இல்லாததாலேதான் இன்னும் நாங்க இதிலேயே குடி இருக்கோம். இதிலேயே தொடர்ந்து இருக்கிறதுனாலே நாங்க ராஜாக்கள் ஆயிடமாட்டோம். நாங்க ராஜாவா இருந்ததை நாங்களே மறக்க ஆசைப்படறப்போ நீங்க அதை நினைப்பு மூட்டிவிடறீங்களே, அதிலே உங்களுக்கு என்ன அத்தினி சந்தோஷம்...?” “தப்பா நான் ஏதாவது பேசியிருந்தால் இளையராஜா இந்த ஏழையை மன்னிக்கணும்.” “இன்னமும் இளையராஜா இளையராஜான்னு தப்பா தானே நீங்க பேசிக்கிட்டிருக்கீங்க மிஸ்டர் சாமிநாதன்? போகட்டும். வந்த காரியத்தையாவது சிம்பிளா சொல்லுங்க...” “அந்த மோகினி பெயிண்டிங்க்ஸ் விஷயமா பெரிய ராஜாகிட்டப் பேசினேன்.” “என்ன பேசினீங்க...?” “அந்த பிரஞ்சுக்காரன் இந்த ‘சீரிஸ்’ முழுவதையும் பதினையாயிரம் ரூபாய்க்குக் கேட்கிறான்...” “மிஸ்டர் சாமிநாதன்! முதலில் உங்களுக்கு நான் சில உண்மைகளைச் சொல்லுகிறேன். எங்க ஃபாதரோட நீங்க ரொம்ப நாளாப் பழகறீங்க. அதனாலே, அவரோட எல்லா ‘வீக்னஸ்ஸும்’ உங்களுக்குத் தெரியும், அவருடைய புத்திர பாக்கியங்களிலே என்னைத் தவிர மீதி மூணு பேரும் காலேஜிலே, ஸ்கூல்லே படிச்சிக்கிட்டிருக்காங்க. ஒவ்வொ ருத்தனுக்கும் மாசம் பிறந்தா எழுநூறு ரூபாய்க்குக் குறையாமே ‘பேங்க் டிராஃப்ட்’ எடுத்து மெட்ராஸுக்கு அனுப்பியாக வேண்டியிருக்கு. சாதாரணமா மத்தக் குடியானவங்க வீட்டுப் பையன் இதே படிப்பை மாதா மாதம் முந்நூறு ரூபாய்க்கும் குறைவாகச் செலவழித்துப் படித்து விடுவான். ‘சமஸ்தானத்து யுவராஜா’ என்கிற பொய்யான பிரமையினாலே என் தம்பிகள் டம்பத்துக்காகவும், ஜம்பத்துக்காக வும் அதிகமாகச் செலவழிக்கிறாங்க. எத்தனையோ வீண் செலவுகளைத் தாறுமாறாப் பண்றாங்க! அரண்மனைங்கிற இந்தப் பெரிய மாளிகைக்குள்ளே இன்னும் கலியாணங் கட்டிக் கொடுக்க வேண்டிய பெண்கள் ஒரு டஜன் எண்ணிக்கைக்குக் குறையாம இருக்காங்க. எங்க ஃபாதரோ அன்னிக்குப் பிரிட்டிஷ்காரன் காலத்திலே எப்படி ஜபர்தஸ்தா இருந்தாரோ அப்படியே இன்னும் ஜபர்தஸ்தா இருக்காரு. அவரோட பழகறவங்களும் சிநேகிதங்களும் கூட அதே மாதிரிதான் இருக்காங்க. ஃபாதரோட கிளப் மெம்பர்ஷிப் பில்களே மாசம் மூவாயிரம் ரூபாய்க்கு மேலே வந்திடுது. ஸ்பென்சர் சுருட்டு, ஸ்காட்ச் விஸ்கி, ரேஸ், சீட்டாட்டம் எதையுமே விடமாட்டேங்கறாரு, இந்த வீட்டு வரவு செலவு நிர்வாகம் இப்போ என் தலையிலே விழுந்திருக்கு. மாசா மாசம் பணக் கஷ்டம் தாங்க முடியலே! சமஸ்தானத்துக்கோ வருமானமே இல்லை. எதையெதையோ விற்று எப்படியெப்படியோ நான் சமாளிக்கிறேன். அப்படியும் பட்ஜட் துண்டு விழுது. எங்கப்பாவிலேயிருந்து இந்த மாளிகையிலே சின்னராணிகள் என்ற பேரிலும், இளைய ராணிகள் என்ற பேரிலும், ராஜகுமாரிகள் என்ற பேரிலும், ராஜகுமாரர்கள் என்ற பேரிலும், சின்ன ராஜாக்கள் என்ற பேரிலும் அடைந்து கிடக்கிற யாருக்கும் இங்கே உள்ள அசல் வறுமைகள், சிரமங்கள் எதுவுமே தெரியாது. இன்னும் பழைய சமஸ்தான காலத்து மிதப்பிலேயே இருக்காங்க. யாருமே ரியாலிட்டியை ஃபேஸ் பண்ண எப்பவுமே தயாராயில்லை. வாழ்க்கைச் சிரமங்கள் தெரியாமல் எங்க வீட்டிலே இருக்கிற ஒவ்வொருத்தரும், சீமநாதபுரம் ராஜா, சீமநாதபுரம் யுவராஜா, சீமநாதபுரம் ராணி, சீமநாதபுரம் சின்னராணிங்களெல்லாம் தாங்களே கூப்பிட்டுக் கொண்டும், பிறரைக் கூப்பிடச் சொல்லியும், எழுதியும், எழுதச் சொல்லியும், போலியாகப் பெருமைப்பட்டுக் கிட்டிருக்காங்க. சுதந்திர இந்தியாவில் ஜமீன்களும், சமஸ்தானங்களும் இல்லாத புதிய இந்தியாவில் நாம் வாழ்கிறோம் என்ற ஞாபகமோ பிரக்ஞையோ அவர்களுக்கு இன்று ஒரு சிறிதும் இல்லை.” “அதெல்லாம் சரி இளையராஜா! இப்போ நான் சொல்ல வந்தது என்னன்னு கேட்டா...” “பார்த்தீங்களா? பார்த்தீங்களா? மறுபடியும் இளையராஜா தானா? நான் தான் என்னை அப்படிக் கூப்பிடாதீங்கன்னு முதல்லேயே சொல்லிவிட்டேனே! கொஞ்சம் நான் சொல்லப் போறதை நீங்க பொறுமையாகக் கேட்டால் தான் அப்புறம் நீங்க சொல்லப் போறதை பொறுமையாகக் கேட்க முடியும் மிஸ்டர் சாமிநாதன்!” ***** ஆவிதானிப்பட்டியில் தங்கியிருந்த இடத்தில் கிடைத்த பழைய வாரப் பத்திரிகையில் தற்செயலாக அகப்பட்ட ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது என்ற இந்தச் சிறு கதையில் மேலே கண்ட பகுதி வரை படித்த தனசேகரனுக்கு மனத்தில் தீவிரமாகச் சந்தேகம் தட்டத் தொடங்கியது. அந்தச் சிறுகதை தங்களையும் தங்கள் சமஸ்தானத்தையும் நன்றாக அறிந்த யாரோ ஒருவரால்தான் எழுதப் பட்டிருக்கிறது என்று புரிந்தது. தந்தையோடு கருத்து வேறுபாடு கொண்டு முரண்பட்டுத் தான் மாமாவின் தயவை நாடி மலேசியாவுக்குப் புறப்பட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டு அந்தச் சிறுகதை உருவாக்கப்பட்டிருப்பது தனசேகரனுக்கு நன்கு புரிந்தது. சும்மா ஒரு கண் துடைப்புக்காகவோ மாறுதலுக்காகவோ ‘பீமநாதபுரம்’ என்ற பெயரைச் ‘சீமநாதபுரம்’ என்று மாற்றி விட்டால் போதுமென்று அந்தச் சிறுகதையின் எழுத்தாளர் எண்ணியிருக்கவேண்டும். அல்லது சட்டப்படி தம் எழுத்தின் மேல் நடவடிக்கை எதுவும் எடுத்து விடாமல் தடுத்துத் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அந்தப் பெயர் மாற்றத்தை அவர் மேற்கொண்டிருக்க வேண்டும். பீமநாதபுரம் பெரிய ராஜாவான காலஞ்சென்ற தன் தந்தையையும், தன்னையும். தங்கள் சமஸ்தான நிலைமைகளையும் அந்தச் சிறுகதையின் எழுத்தாளர் எப்படி அவ்வளவு துல்லியமாகப் படம் பிடித்தார் என்பதை நினைக்க ஆச்சரியமாக இருந்தது தனசேகரனுக்கு. அப்போதே மாமா தங்கபாண்டியனைத். தூக்கத்திலிருந்து எழுப்பி அந்தக் கதையை உடனே அவரிடம் படிக்கச் சொல்லவேண்டும் என்று தனசேகரனுக்கு ஆவலாயிருந்தும் மாமாவின் இயல்பை அறிந்து தன் ஆவலை அவன் அப்போது அடக்கிக் கொள்ள வேண்டிய தாயிற்று. நல்ல தூக்கத்தில் எழுப்பினால் மாமாவுக்குப் பேய்க் கோபம் வரும் என்பது தனசேகரனுக்கு நன்கு தெரியும். எனவே மாமாவைத் தூக்கத்திலிருந்து எழுப்புகிற அசாத்தியமான எண்ணத்தைக் கைவிட்டு விட்டுக் கதையை மேலே படிக்கத் தொடங்கினான். தனசேகரன்: “கேட்கிறேன், சொல்லுங்கோ, பெரிய ராஜாவைப் பெங்களூர் ரேஸிலே சந்திச்சதைப்பத்தி நான் சொன்னேன்” என்று ஞாபக மூட்டினார் சாமிநாதன். “பெங்களூர் ரேஸ்லே மட்டுமென்ன? எங்கே ரேஸ் நடத்தாலும் எங்க ஃபாதரை நீங்க அங்கே சந்திக்கலாம் மிஸ்டர் சாமிநாதன்! அதாவது தமிழிலே ஏதோ ஒரு வசனம் சொல்லுவாங்களே, ‘கழுதை கெட்டால் குட்டிச் சுவர்னு’....” “நோ நோ... பெரியவங்களை அப்படியெல்லாம் சொல்லப்படாது...” “பெரியவங்க உண்மையிலேயே பெரியவங்களா நடந்துக்கிட்டாவில்லே அதெல்லாம் பார்க்கணும்...” இந்த இடத்தைப் படிக்கிறபோது தனசேகரனுக்கு மறுபடியும் அடக்க முடியாத சிரிப்பு மூண்டது. தனக்குத் தானே எங்கே பைத்தியம் போல இரைந்து சிரித்து விடுவோமோ என்று அவனுக்குப் பயமாயிருந்தது. நடுராத்திரியில் அவன் தனக்குத் தானே சிரித்துக்கொள்வதை மாமா எங்கே எழுந்து பார்த்துவிட நேருமோ என்று வேறு தயக்கமாயிருந்தது. பீமநாதபுரம் சமஸ்தானத்து நிலைமைகளை அப்படி அப்படியே படம் தீட்டி வைத்ததுபோல இருந்த அந்தச் சிறுகதையின் ஆசிரியனைத் தேடித் துப்பற்றிய விரும்பினான் தனசேகரன். |