15 மறுநாள் அரண்மனை உட்கோட்டை ஊழியர்கள், சமையற்காரர்கள், எடுபிடி ஆட்கள், குதிரைப்பாகர்கள், யானைப் பாகர்கள், ஆகியோர்களிடம் பேசிக் கணக்கு வழக்குத் தீர்க்க வேண்டியிருந்தது. தனசேகரனும், காரியஸ்தரும் ஒவ்வொன்றாய் நிதானமாக ஆராய்ந்த போதிலும் மாமா பக்கத்தில் நின்று தூண்டுதல் போட்டு வேகப்படுத்தினார். பணம் எல்லாருக்கும் ‘செக்’ ஆகவே கொடுக்கப்பட்டது. செக் கொடுத்ததும் ஏற்கெனவே தயாராக டைப் செய்து வைக்கப்பட்டிருந்த தாள்களில் கையெழுத்தும் வாங்கிக் கொள்ளப்பட்டது. அங்கே அரண்மனையிலிருந்த யானைகள் இரண்டையும், குதிரைகள் பன்னிரண்டையும், கிளிகள், புறாக்கள், மயில்கள், பல்வேறு வகைப் பறவைகள் இருபது முப்பது, மான் வகைகள் ஐம்பது, ஒட்டகங்கள் இரண்டு எல்லாவற்றையும் கோவில்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடலாம் அல்லது ஏலம் போட்டு விடலாம் என்றார் மாமா. ஆனால் தனசேகரன் அதற்கு இணங்கவில்லை. குழந்தைகளுக்கான ஒரு சிறிய மிருகக்காட்சிசாலையாக அவற்றை அமைத்துப் பீமநாதபுரம் நகர நிர்வாகத்தின் கீழ், ஒரு பூங்காவோடு சேர்த்து வைப்பதற்கு ஒப்படைத்து விடலாம் என்றான். ஊர் நலனில் அவனுக்கு அக்கறை இருந்தது புலப்பட்டது. அரண்மனையில் கடத்த சில ஆண்டுகளில் படிப்படியாகச் சமையற்காரர்களும், தவசிப்பிள்ளைகளும் குறைக்கப்பட்டிருந்தாலும் இப்போதுகூட அவர்களின் எண்ணிக்கை ஒரு டஜனுக்கு மேல் இருந்தது. அவர்களில் பலர் கணக்குத் தீர்த்துக்கொண்டு போக மனமின்றி ஸெண்டிமெண்டலாகத் தயங்கி நின்றார்கள். “சின்னராஜா மெட்ராஸ்லே படிச்சுக்கிட்டிருந்தப்போ லீவுக்கு வருவீங்க. மல்லிகைப்பூ மல்லிகைப்பூவா இட்லியும் வெங்காயச் சட்னியும் வேணும்னு ஆசைப்படுவீங்க. இந்தக் கையாலேதான் அதை எல்லாம் படைச்சிருக்கேன். அதுக் குள்ளே அதெல்லாம் மறந்திடிச்சா?” என்றான் தலைமைத் தவசிப்பிள்ளை மாரியப்பன். “எதுவும் மறந்துடலே மாரியப்பன்! இப்போ கூட நாங்க கணக்குத் தீர்த்து உனக்குக் கொடுக்கப்போற பணத்தை வச்சு நீ கீழ ரத விதியிலேயோ மேலரத வீதியிலேயோ ஒரு இட்லிக்கடை போட்டா அதுக்கு நானும் ஒரு நிரந்தர வாடிக்கைக்காரனா இருப்பேன். உன்னைப் போலத் தரமான உழைப்பாளிக்கு என் ஆதரவு நிக்சயமா உண்டு” என்று மலர்ந்த முகத்தோடு பதில் கூறினான் தனசேகரன்.
“பெரிய ராஜாவைப் போல நீங்களும் சீரும் சிறப்புமா இந்தச் சமஸ்தானத்தைத் தொடர்ந்து ஆளுவீங்கன்னு நினைச்சோம்” என்றார் மற்றொரு முதியவர். தனசேகரனுக்குச் சிரிப்பு வந்தது, அதே சமயத்தில் அத்தனை பேருக்கும் முன்னிலையில் தந்தையை விட்டுக் கொடுத்துப் பேசுவது மாமாவுக்குப் பிடிக்காது என்றும் தோன்றியது. பொதுவாக மறுமொழி கூறினான் அவன்.
“நீங்கள்ளாம் நியூஸ்பேப்பர் படிக்கிறீங்களா இல்லியான்னே தெரியலே. உங்களுக்கு எல்லா விஷயமும் நானே அனா ஆவன்னாவிலேருந்து தொடங்கிச் சொல்ல வேண்டியிருக்கு. இப்போ மட்டும் இல்லே, இதுக்கு ரொம்ப வருஷங்களுக்கு முன்னாலேயே சமஸ்தானம்னு எதுவும் கிடையாது. அரசாங்கம் சமஸ்தானங்களை நீக்கிச் சட்டம் போட்டாச்சு. கவர்மெண்ட் கொடுத்த உதவித் தொகையை வச்சுக்கிட்டு எங்கப்பா தானாகச் சமஸ்தானம்கிற வெள்ளை யானையை இத்தனை நாள் கட்டி மேச்சுக்கிட்டிருந்தாரு காஷ்மீரத்திலே இருந்து கன்யாகுமாரி வரைக்கும் இந்த தேசத்தை இப்போ அரசாங்கம்தான் ஆட்சி செய்யிது. எந்தச் சமஸ்தானமும், ஜமீனும், தனி ராஜாங்கமும் இதிலே கிடையாது. இதை நீங்க முதல்லே புரிஞ்சுக்கணும். கடன் வாங்கி ராஜா வேஷம் போடறதை விடத் தொழில் செய்து ஏழையா மானமாப் பிழைக்கலாம். இனிமே நாங்க உங்களையும் ஏமாத்தப்பிடாது எங்களையும் ஏமாத்திக்கக் கூடாது” இவ்வாறு தனசேகரன் கூறிய விளக்கத்தைச் சிலர் மிகவும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் “சின்னராஜா ரொம்பத்தான் சிக்கனமா எல்லாத்தையும் மிச்சம் பிடிக்கப் பார்க்கிறாரு. செலவு செய்ய மனசு ஆகலே” என்று புது விதமாகத் தங்களுக்குள்ளே வியாக்கியானம் செய்யத் தலைப்பட்டார்கள். வேறு சிலர், “சின்னராஜா தங்கமானவர். அவருக்கு இளகின மனசு. இதற்கெல்லாம் அந்த மலேயாக்காரருதான் துண்டுதல். அவரு பக்கா வியாபாரி. அரண்மனையையே காலி பண்ணி வித்துடச் சொல்லி அவருதான் யோசனை சொல்லிக், கொடுத்திருக்காரு” என்று பேசிக் கொண்டார்கள். குதிரைக்கார ரஹிமத்துல்லா கையெழுத்துப் போட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு, அதோடு திருப்தி அடைந்து விடாமல், “நம்பளுக்கு இரண்டு குதிரை கொடுங்க. ஜட்கா வண்டி விட்டாவது பிழைச்சுக்கலாம்னு பார்க்கிறேனுங்க” என்று வேண்டியபோது தனசேகரனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. முதல் முறையாக மாமா குறுக்கிட்டார். “ஏம்ப்பா? இப்படியே ஒவ்வொருத்தரும் கேட்டா என்ன ஆகும்? தவசிப்பிள்ளை எனக்குப் பத்துப் பன்னிரண்டு பாத்திரம் கொடுங்க. சமைச்சுப் பிழைக்கறோம்பாரு. ஹெட்கிளார்க் டைப் டைரட்டிங் மிஷினைக் குடும்பாரு. யானையைக் குடுத்திடணும்பான். நீ கேட்கிறது உனக்கே நல்லா இருக்கா?” குதிரைக்காரன் சிரித்துக்கொண்டே போய்ச் சேர்ந்தான். அரண்மனை ஊழியர் யூனியன் தனசேகரனை எதிர்க்கவில்லை. ஏனெனில் தனசேகரனே நியாயமான நஷ்டஈட்டுத் தொகையைக் கொடுக்க முடிவு செய்திருந்தான். அவனுடைய பெருந்தன்மையும் பரந்த மனப்பான்மையும் அவர்கள் தகராறுக்கு வழி இல்லாமல் செய்து விட்டது. நஷ்டஈட்டுத் தொகையைத் தவிர இரண்டு மாதச் சம்பளத்தையும் கையில் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான் தனசேகரன். மாமாவுக்கும் அவனுக்குமே இதில் கருத்து வேறுபாடு இருந்தது. மாமா சொன்னது இதுதான். “தம்பீ! சட்டப்படி கணக்குத் தீர்த்து அனுப்பறதுக்கு இது ஒண்ணும் ஹோட்டலோ, லிமிடெட் கம்பெனியோ இல்லை. ஒரு பெரிய வீட்டிலே வேலைக்கு வச்சிருந்தவங்களை நீக்கி அனுப்பறோம். அவ்வளவுதானே? இரண்டு மாசச் சம்பளம் மட்டுமே கொடுத்தால் கூடப் போதுமே?” “பணத்தைத் தலையிலேயா சுமந்திட்டுப் போகப் போறோம் மாமா? இத்தினி வருஷமா இங்கே வேலைக்கு இருந்தவங்க வெளியிலே போறப்ப வயிறெரிஞ்சுக்கிட்டுப் போகறது நல்லா இருக்காது.” “சரி! நீ நினைக்கிறபடிதான் செய்யேன். நான் ஒண்ணும் இதில் தலையிடலே” என்று அதை அவன் போக்கில் விட்டு விட்டார் மாமா. ஆனால் அவன் போக்கில் முற்றிலும் விட்டு விடாமல் தாமே பொறுப்பு எடுத்துக்கொண்டு அவர் வேறோர் ஏற்பாட்டைச் செவ்வனே செய்து வந்தார். அது தான் தனசேகரனின் திருமண ஏற்பாடு. அந்த அரண்மனை எல்லையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மங்கல வைபவமாக அது இருக்கட்டும் என்று நினைத்தார் அவர். இனி எதிர்காலத்தில் அந்த அரண்மனை எல்லையில் இப்படிப் பெரிய ராஜா வைபவங்கள் என்று எதுவும் நடைபெறுவதற்கில்லை என்பது அவருக்குப் புரிந்துதான் இருந்தது. தன் சகோதரிக்கும் காலஞ்சென்ற மகாராஜாவுக்கும் திருமணம் நிகழ்ந்த காலத்தில் இந்த அரண்மனையும். இந்த ஊரும் இதன் சுற்றுப்புறங்களும் திருவிழாக்கோலம் பூண்டிருந்ததையும் அதை ஒட்டிய கோலாகலங்களையும் மாமா நினைவு கூர்ந்தார். கலகலவென்று இருந்த ஓர் அரண்மனை நாளா வட்டத்தில் எப்படி ஆகி விட்டது என்பதை எண்ணிய போது பல உணர்வுகள் மனத்தைப் பிசைந்தன. அவர் ஓரளவு முந்திய தலைமுறையைச் சேர்ந்தவராக இருந்தமையால் வைபவங்கள், விழாக்கள். கோலாகலங்கள் இவற்றைப் பற்றிய அவருடைய எண்ணங்கள், எதிர்பார்த்தல்கள் எல்லாமே அந்தப் பழைய தலைமுறைக்கு ஏற்றபடி இருந்தன. பழைய இனிய நினைவுகளில் ஆழ்வதையும் கழிவிரக்கப்படுவதையும் தவிர்க்க முடியாமல் சிரமப்பட்டார் அவர். பணக்கஷ்டமும் தந்தை வைத்துவிட்டுப் போன கடன்களுமாகத் தனசேகரன் சிரமப்படுவது பொறுக்க முடியாமல் தான் அவர் அரண்மனையையும் சமஸ்தானத்தையும் கலைத்துவிட உடன்பட்டாரே ஒழிய மனப்பூர்வமாக இசைந்திருக்கவில்லை. தன் மகளுக்கும் அவனுக்கும் திருமணம் நடக்கிறவரையாவது அரண்மனை சமஸ்தானம் என்ற அலங்கார ஏற்பாடுகள் தொடரவேண்டும் என்ற நினைவு அந்தரங்கமாக அவருக்குள்ளே இருந்தது. ஆனால் தனசேகரனுக்காக அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. பாங்கில் அடமானம் வைத்திருந்த பீமவிலாசம் பிரிண்டிங் பிரஸ் விஷயம் அடுத்து அவர்கள் கவனத்துக்கு வந்தது. பாங்குகாரர்களையே பிரஸ்ஸை ஏலத்துக்கு விடச் சொல்லி அவர்களுக்குச் சேரவேண்டியதை எடுத்துக் கொண்டு மீதத்தைத் தரச் சொல்லிக் கேட்கலாம் என்றார். “பிரஸ் எனக்குத் தேவையாயிருக்கும் என்று தோன்றுகிறது மாமா? நாமே கடனையும் வட்டியையும் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பிரஸ்ஸை மீட்டுவிடலாமென்று நினைக்கிறேன், அருமையான மிஷின்களும். அச்சகச் சாதனங்களும் அதில் அடங்கியிருக்கின்றன. அவற்றை இறக்குமதி செய்ய நினைத்தால்கூட இனிமேல் முடியாது” என்றான் தனசேகரன். மாமா வேறு மாதிரி நினைத்தாலும் அவன் அப்போது சொன்னதைத் தட்டி அவர் சொல்லவில்லை. முதலும் வட்டியும் கொடுத்துப் பிரஸ் மீட்கப்பட்டது. பீமநாதபுரம் கலாசார வரலாற்றை முறைப்படி எழுதுவதற்காக எல்லா விவரங்களையும் நன்றாக அறிந்த ஆவிதானிப்பட்டிப் புலவர் ஒருவரை அழைத்து ஏற்பாடு செய்தான் தனசேகரன். பீமநாதபுரத்திலும், சுற்றுப் புறங்களிலும் டூரிஸ்டுகள் பார்க்க வேண்டியவற்றை விவரித்தும் விளக்கியும் நவீனமுறை கைடு ஒன்று அச்சிட ஏற்பாடு செய்யப்பட்டது. சமயற்காரர்களையும், தவசிப்பிள்ளைகளையும் போகச் சொல்லி விட்டதால் கடைசியில் மாமாவும் தனசேகரனுமே வெளிக்கோட்டையில் ராஜா வீதியிலிருந்து ஹோட்டல் எடுப்புச் சாப்பாடு வரவழைத்தார்கள். இளைய ராணிகள் விஷயத்தில் அவர்களது இரண்டாவது கோரிக்கையையும் அவன் ஏற்றுக் கொண்டு சாதகமாகவே முடிவு எடுத்தான். நகரின் ஒரு பகுதியில் அரண்மனைச் சொத்தாக இருந்த மனையில் தலைக்கு ஒரு கிரவுண்டு வீதம் வருமாறு பிரித்து வீடு கட்டிக் கொள்ள அவர்களுக்கு இடமும் கொடுத்துவிட்டான். அரண்மனையில் சமையல், சாப்பாடு ஏற்பாடுகள் நின்று போகவே இளையராணிகள் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டு போய்விட்டார்கள். அந்த கோடைக்கானல் பையனின் தாய் மட்டும் உட்கோட்டையில் தட்சிணாமூர்த்திக் குருக்கள் வீட்டில் தங்கிக் கொண்டு தனசேகரனைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி அனுப்பினாள். தனசேகரன் அவள் சொல்லி அனுப்பிய பின்புகூட இரண்டு நாள் வரை அவளைச் சந்திக்கச் செல்ல முடியாமல் போய்விட்டது. எல்லா இளைய ராணிகளுக்கும் கொடுத்ததைப் போல் அவளுக்கும் ஒரு செக் கொடுத்தாகி விட்டது. காலி மனைக்குப் பத்திரமும் எழுதிக் கொடுத்தாகி விட்டது. மற்றவர்களுக்குச் செய்யாத அதிகப்படி உதவியாக அவள் பையனின் படிப்புச் செலவுகளையும் தொடர்ந்து ஏற்பதற்கு இணங்கியாயிற்று. இவ்வளவுக்குப் பிறகும் தன்னைச் சந்தித்துப் பேச என்ன மீதமிருக்கும் என்று தனசேகரனுக்குப் புரியவில்லை. ஆனால் அவளைச் சந்திக்காமல் விட்டுவிடவும் துணிய முடியவில்லை. மாமாவும் காரியஸ்தரும் வெளியே அனுப்பியது போக எஞ்சிய அரண்மனை அலுவலர்களும், பிறரும் சிலைகள், கலைப் பொருள்கள், அபூர்வப் பண்டங்கள் ஆகியவற்றுக்கு பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அரண்மனை மியூஸியம், நூல் நிலையம், ஏட்டுச் சுவடிகள், நவராத்திரி விழா அலங்கார ஊர்வலத்துக்கான வாகனங்கள், இவை எல்லாவற்றையும் பற்றி விரிவான பட்டியல் வேண்டும் என்று தனசேகரன் கேட்டிருந்தான். மாமா இந்த பட்டியல் அவற்றின் விற்பனைக்காக என்று நினைத்துக் கொண்டிருந்தார். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட இந்தியப் பழம் பொருள்களுக்கு மதிப்பு மிகுதி; விலையும் அதிகம் என்று அவருக்குத் தெரியும். உதக மண்டலத்திலோ மூணாறிலோ, மைசூரருகே சிக்மகளூரிலோ பெரிய எஸ்டேட்டுகள் வாங்கிப் போடுவதற்குரிய பெருந்தொகை இவற்றை விற்பதன் மூலமாகக் கிடைக்கும் என்று முடிவு செய்துகொண்டு தமக்குத் தெரிந்த இரண்டொரு எஸ்டேட் புரோக்கர்களிடமும் கூட இரகசியமாகச் சொல்லி வைத்திருந்தார் மாமா. மலேயாவில் தாம் தோட்டத் தொழிலில் வளர்ந்து செழித்ததைப் போலத் தனசேகரன் தமிழ் நாட்டில் தோட்டத் தொழிலில் இறங்கி வளர்ந்து செழிக்க வேண்டும் என்று நினைத்தார் அவர். அதற்காக மேற் செலவு செய்ய வேண்டும் என்றாலும் அதைத் தன் கையிலிருந்து செலவழிக்க அவர் தயாராக இருந்தார், தட்சிணா மூர்த்திக் குருக்களைத் தேடிச் சென்று கலியாணத்திற்கு நாள் பார்த்து வைத்துக் கொண்டு மலேயாவிலிருந்து குடும்பத்தினரைப் புறப்பட்டு வருமாறு கடிதம் எழுதினார். மற்ற உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார். திருப்பூட்டு நாள் முடிவானதும் குருக்களோடு அப்படியே நேரே கோவிலுக்குச் சென்று ஓர் அர்ச்சனை செய்து பிரசாதத்தை வாங்கிக் கொண்டார். “நிம்மதியா இருங்கோ? அம்மன் வரப்பிரசாதி எல்லாம் நல்லபடி முடியும். சின்னராஜா கொடுத்து வச்சவர்” என்று குருக்கள் முன் கூட்டியே ஆசீர்வாதம் செய்தார். அந்த நிமிஷத்திலிருந்து கலியாணச் சமையலுக்கு யாரை ஏற்பாடு செய்வது, கச்சேரிக்கும் நாதஸ்வரத்திற்கும் யார் யாரை ஏற்பாடு செய்வது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினார் மாமா. அவருடைய மனம் கனவுகளில் மிதக்கத் தொடங்கியது, தன் சகோதரியும் இறந்துபோன மகாராணியுமான தனசேகரனின் அன்னை என்ன வாக்கு வாங்கிக் கொண்டாளோ அது நிறைவேறப் போகும் காலம் நெருங்குகிறது என்று மகிழ்ச்சியடைந்தார் அவர். கலைப் பொருட்கள், வாகனங்கள், சிலைகள் எல்லாம் பட்டியல் போட்டு முடிந்ததும் அரண்மனை என்ற பிரம்மாண்டமான மரளிகையில் அவற்றை ஒரு பெரிய பொருட்காட்சியாக வைப்பதற்குத் தனசேகரன் முயற்சி மேற்கொண்டபோது தான் அவன் அவற்றை விற்கப் போவதில்லை என்பது மாமாவுக்குப் புரிந்தது. இரண்டே மாதங்களில் அவற்றை ஒழுங்குபடுத்தி வைப்பதற்குப் புதைபொருள் இலாகாவில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற ஒருவரையும், இண்டீரியர் டெகரேஷனில் கெட்டிக்காரியான பட்டதாரிப் பெண்மணி ஒருத்தியையும் அவன் நியமித்த போது தான் அவசர அவசரமாக அவன் அரண்மனையைக் காலி செய்த வேகத்திற்கான காரணத்தைத் தாமாகவே புரிந்து தொண்டார். மியூசியம், ஆர்ட் காலரி, நூல் நிலையம் என்று அரண்மனைப் புொருள்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மாளிகையின் முதல் பகுதியில் மியூஸியத்தையும் இரண்டாவது மாடியில் ஓவியங்களையும், மூன்றாவது மாடியில் சுவடிகள், அச்சிட்ட புத்தகங்கள் என்று இரு பிரிவுகள் அடங்கிய நூல் நிலையத்தையும் குடியேற்றுவது என்று திட்டமிடப்பட்டிருந்தது. “நூல் நிலையமும், சுவடிகளும் வேண்டுமானால் இருக்கட்டும், மற்றவற்றை நல்ல விலைக்கு விற்றால் ஏதாவது தொழிலில் முதலீடு செய்ய வசதியாயிருக்கும். மியூஸியத்துக்கு டிக்கெட் வைத்தால் கூட உன்னுடைய முதலீட்டுக்கு வட்டியே கட்டாது. நான் சொல்றதைச் சொல்லியாச்சு... அப்புறம் உன் இஷ்டப்படி செய்” என்று மாமா குறுக்கிட்டுச் சொன்னதைத் தனசேகரன் ஏற்கவில்லை. உறுதியாக மறுத்துப் பதில் சொல்லி விட்டான். “இந்த மாபெரும் காட்சிச் சாலையின் மூலம் எங்கள் பரம்பரை வரலாற்றின் பெருமை மிக்க பகுதிகளை நான் உலகறிய அறிவிக்கிறேன். இதில் முதலீடாகிற தொகை பயனுள்ளது ஆகும்” என்றான் அவன். மியூசியம் அமைப்பதற்குக் கால் லட்ச ரூபாய் மரச்சாமான், கண்ணாடி அலமாரிகள், விளக்கு, மின்விசிறி ஏற்பாடுகளுக்கே ஆகும் என்று தெரிந்தது. இவை தவிர ஆட்கள் சம்பளம் வேறு இருந்தது. அரண்மனையின் மூன்று தளங்களையும் மியூசியம் அமைக்க விட்டு விட்ட தினத்தன்றே மாமாவும் தனசேகரனும் தங்கள் குடியிருப்பை வசந்த மண்டபத்து விருந்தினர் விடுதிக்கு மாற்றிக் கொண்டார்கள், மியூசியம் அமைப்பது என்ற வேலையில் தச்சர்களும் மேஸ்திரிகளுமாகப் பலர் இரவு பகலாய் ஈடுபட்டிருந்தனர். “இது அநாவசியமான புதிய முதலீடு. பயன்தராத முதலீடு. புரொடக்டிவ் எக்ஸ்பெண்டிச்சர் இல்லே” என்றார் மாமா. தனசேகரனோ ‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற கதையில் படித்த கதாநாயகனின் மனநிலையில் அப்போது இருந்தான். அவனுடைய இலட்சியத்தில் அந்த அரண்மனையின் எதிர்காலம் பற்றிய ஒரு முடிவு ஏற்பட்டிருந்தது. அதை அவன் மெல்ல மெல்ல முயன்று உருவாக்கிச் சாதனை செய்து கொண்டிருந்தான். |