8 ‘ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது’ என்ற கதையை எழுதியவரைப் பற்றித் தனக்குள் ஏற்பட்ட சந்தேகத்தோடு மேற்பகுதிகளைப் படிக்கலானான் தனசேகரன். தன்னையும் தன்னைச் சுற்றியும் பீமநாதபுரம் அரண்மனையில் இருப்பவர்களை அப்படியே படம் பிடித்தாற்போல இருந்தது அந்தச் சிறுகதை. பூபதி இருக்கிறவரை சீமநாதபுரம் அரண்மனையின் புகழ்பெற்ற புராதனமான ஓவியங்கள், பஞ்சலோகச் சிலைகள் எதையுமே மலிவான விலைக்கு வாங்கி அந்நிய நாடுகளுக்கு அனுப்பிப் பணம் பண்ண முடியாதென்று எண்ணி, ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ உரிமையாளர் சாமிநாதன் அவற்றை அடையத் தந்திரமாக வேறு குறுக்கு வழி முயற்சிகளில் இறங்கினார். சாமிநாதன் பக்கா வியாபாரி. அவரிடம் ஏஜெண்டுகளாகத் தமிழ்நாடு முழுவதும் ஓடியாடித் திருடிக் கொண்டு வந்து சேர்க்கக் கூடிய நாகரிகமான சிலத் திருடர்கள் பலர் இருந்தனர். அவர்கள் அவருடைய கையாட்களாக எல்லா இடங்களிலும் செயல் பட்டார்கள். சீமநாதபுரம் பெரிய ராஜாவோ பலவீனங்களும் பணக் கஷ்டங்களும் நிறைந்தவராக இருந்தார். எனவே ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதன் அவருக்கு வகையாக வலை விரிக்க முடிந்திருந்தது. அவ்வப்போது சீமநாதபுரம் பெரிய ராஜாவாகிய விஜயராஜேந்திர சீமநாத பூபதியைச் சந்தித்து ஐயாயிரம், பத்தாயிரம் என்று கடன் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்படிக் கொடுக்கும் கடன்களுக்கு அவ்வப்போது மகா ராஜாவிடமிருந்து பிராமிசரி நோட்டும் எழுதி வாங்கிக் கொண்டு வந்தார். பணம் கிடைத்தால் போதும் என்ற தவிப்பில் இருந்த பெரிய ராஜா நோட்டின்மேல் நோட்டாக எழுதிக் கையெழுத்துப் போட்டுச் சாமிநாதனிடம் கொடுத்துக் கொண்டே இருந்தார். அவரால் செலவுகளைச் சுருக்கிக் கொள்ள முடியவில்லை. ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பதுபோல் சாமிநாதனும் ஏதோ உள் நோக்கத்தை வைத்துக் கொண்டு தான் கேட்ட போதெல்லாம் ராஜாவுக்குக் கடன் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்தக் கடனுக்குப் பதிலாக அங்கே சீமநாதபுரம் அரண்மனையில் நிறைந்து கிடக்கும் கலைச் செல்வங்கள் எல்லாம் கிடைத்தால் அவற்றின் மூலம் பத்து லட்ச ரூபாய்க்கும் மேலாக லாபம் சம்பாதிக்கலாம் என்று தனக்குத் தானே கனக்குப் போட்டுப் பார்த்து ஒரு மதிப்பீடு வைத்திருந்தார் அவர். பெரிய ராஜாவோ தம் மகன் பூபதிக்குத் தெரியாமலே சாமிநாதனிடம் அவ்வப்போது பெருந்தொகை கடன் வாங்கி வந்தார். கழுத்தளவுக்குக் கடன் ஏறிவிட்ட நிலைமை.
அந்த ஆண்டின் இறுதிக்குள் பெரிய ராஜா ‘ஏன்ஷி யண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதனிடம் வாங்கிய கடன் பன்னிரண்டு லட்ச ரூபாய் வரை ஆகிவிட்டது, சாமிநாதனின் கூட்டுறவோடும் ஒழுங்கில்லாத ஒரு சில கெட்ட நண்பர்களின் தூண்டுதலாலும் பெரிய ராஜா ‘சீம நாத் புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் தாம் ஒரு புதிய சினிமாத் தயாரிப்புக் கம்பெனியை வேறு ஆரம்பித்துத் தொலைத்திருந்தார். அது ஒரு காசும் லாபம் தராமல் பணத்தைக் கபளீகரம் செய்து கொண்டிருந்தது. ஒரு படமும் தயாரித்து ரிலீசாகாமல், நாளுக்கு நாள் அந்தக் கம்பெனி நஷ்டத்தைத் தேடித் தந்து கொண்டிருந்தது. சினிமாக் கம்பெனி தொடங்கியதனால் பெரிய ராஜாவுக்குச் சில அழகிய நடிகைகளின் சகவாசமும் பழக்கமும் சுகமும் கிடைத்தது தான் மிச்சமே ஒழிய உருப்படியாக வேறெதுவும் நடக்க வில்லை.
அவரோ வாங்கியிருந்த எல்லாக் கடன்களையும் அரண்மனை மேல்தான் வாங்கியிருந்தார். அரண்மனையிலுள்ள சிலைகள், ஓவியங்கள், மியூஸியம், லைப்ரரி எல்லாவற்றையும் சுருட்டி விடலாம் என்ற திட்டத்தோடுதான் சாமிநாதன் அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தார். இந்த விஷயம் மகன் பூபதிக்குத் தெரிய வந்த சமயத்தில் நிலைமை கட்டு மீறிப்போய் அரண்மனை ஜப்திக்கு வந்து விட்டது. பத்திரிகைகளில் ஏல நோட்டீஸ் கூடப் பிரசுரமாகி விட்டது. அரண்மனை மதிற்கவர்களிலும் நான்கு புறத்துக் கோட்டைக் கதவுகளிலும் ஏல நோட்டீசை எல்லாரும் காணும்படி அச்சிட்டு ஒட்டியிருந்தார்கள். ஊரெல்லாம் இதைப் பற்றியே பேச்சாகி இருந்தது. பூபதிக்கு ஒரே கோபம். தன் கோபத்தை யார் மேல் காட்டுவதென்றே அவனுக்குப் புரியவில்லை. பணம் கட்டி ஏலத்தைத் தடுப்பதென்றாலும் ஒரே நாளில் பத்துப் பன்னிரண்டு லட்ச ரூபாயை எப்படித் திரட்டுவதென்று மலைப்பாக இருந்தது. தந்தையோ ஊரில் இல்லை. சென்னையில் குடிபோதையோடு ஏதாவது ஒரு சினிமா நடிகையின் மடியில் அவர் புரண்டு கொண்டிருக்கக்கூடும். அவர் ஓடி வந்து இந்த ஏலத்தைத் தடுப்பார் என்று எதிர்பார்ப்பது பயனற்றது. என்ன செய்வது எப்படி இதைத் தடுக்கலாம் என்று பூபதி யோசிப்பதற்குள் காரியம் கை மீறிப் போய்விட்டது. அரண்மனை வாசலில் பொருள்களும் கட்டிடமும் ஏலத்துக்கு வந்தபோது சாமிநாதன் தன்னுடைய கையாட்களையே பணத்துடன் நிறுத்தி வைத்திருந்து லைப்ரரி ஓவியங்கள், சிற்பங்கள் எல்லாவற்றையும் கூடிய வரை மலிவான விலைக்கு ஏலத்தில் எடுத்து விட்டார். அரண்மனையும் அதைச் சுற்றி இருந்த காலி இடங்களும் கூட ஏலத்துக்குப் போய் விற்று விட்டன. பூபதிக்கு ஏற்பட்ட மன வேதனை சொல்லி முடியாது. அரண்மனை வாசலில் ஏலத்தை வேடிக்கை பார்க்க ஊர் ஜனங்களின் பெருங் கூட்டம் கூடிவிட்டது. சிலர் அனுதாபப்பட்டார்கள். வேறு சிலர், “இந்த அரண்மனைவாசிகளுக்கு நன்றாக வேண்டும். இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்” என்று ஆத்திரத்தோடு கருவிக் கொண்டு போனார்கள். வேறு சிலர் தங்கள் ஊரின் பரம்பரையான பெருமைகளை யாரோ பட்டினத்து வியாபாரி வந்து ஏலம் எடுப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் குமுறி மனம் வருந்தினார்கள். அப்படி மனம் வருந்திய உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர் ஓர் ஒரமாக அரண்மனை வாசலில் ஒதுங்கி நின்ற பூபதியின் அருகே வந்து அனுதாபம் நிறைந்த குரவில் “ரொம்ப வருத்தப்படறேன் இளையராஜா! உங்கள் தந்தையார் பெரியராஜா இப்படி எல்லாம் கடன் வாராப்பில பண்ணியிருக்க வேண்டாம். எல்லாம் காலக் கோளாறு, உங்க பொறுப்பிலே இருந்தாலாவது நீங்க இதெல்லாம் ஆகாமல் ஜாக்கிரதையா இருந்திருப்பிங்க...” என்றார். “நீங்க வருத்தப்படற மாதிரி இந்த ஏலம் நடக்கிறதுக்காக நான் வருத்தப்படலே. இதுக்கப்புறமாவது எங்கப்பாவுக்குப் புத்தி வந்து அவருடைய ஆஷாட பூதித்தனங்கள் தெளிந்தால் பரவாயில்லை. இந்த உயரமான கல் மதிற்சுவர்களுக்கு வெளியே தெருவில் தூக்கியெறியப்பட்ட பிறகாவது இனிமேல் இங்குள்ளவர்களுக்கு அசல் வாழ்க்கை எத்தகையது என்பது புரியவேண்டும். இந்த அரண்மனை ஏலம் போவதில் எனக்கு மனக் கஷ்டமே இல்லை. இது போகும் போதாவது எங்கள் குடும்பத்தைப் பிடித்த பீடைகளான சோம்பல், வறட்டுக் கவுரவம், டம்பம் எல்லாம் தொலைந்தால் சரிதான். இன்று நான் வருந்துவது எல்லாம் இங்கேயிருந்த அறிவு நூல்கள், சிற்பங்கள், ஓவியங்கள். அருங்கலைப் பொருட்கள் எல்லாம் அந்நிய நாடுகளுக்குச் சோரம் போகின்றனவே என்பதற்காகத்தான். அவை அவ்வாறு இங்கிருந்து வெளியேற்றப்படுவது எனக்கும், உங்களுக்கும் இவ்வூர் மக்களுக்கும் மிகப் பெரிய அவமானம். அந்தப் பொருட்களை ஏலத்துக்கு விடாமல் இங்குள்ள மற்றப் பண்டங்களை மட்டும் ஏலத்துக்கு விட்டே அவர்கள் என் தந்தைக்குக் கொடுத்த கடனை அடைத்துக் கொள்ள முடியும். ஆனால் கடன் கொடுத்தவர்களின் பேராசை காரணமாக இங்கு எல்லாமே ஏலத்துக்கு விடப்பட்டிருக்கின்றன. நமது கலைப்பொருட்களும் நூல்களும் சிலைகளும் சிற்பங்களும் அந்நிய நாடுகளுக்குப் போவதை மறியல் செய்தாவது தடுத்தாக வேண்டும். அரசாங்கமே இவற்றை மீட்டு இவ்வூரில் ஒரு மியூஸியமும் லைப்ரரியும் கட்டி அதைப் பொது மக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ஊர்வலமாகச் சென்று மனுக்கொடுப்போம். அதுவரை சாமிநாதன் இதில் ஒரு சிறு துரும்பு கூட எடுத்துச் செல்ல முடியாமல் ஊர்மக்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். வெகுஜன அபிப்பிராயத்தையோ ஊர் மக்களின் ஏகோபித்த விருப்பத்தையோ கலெக்டர் புறக்கணித்து விட முடியாது. எப்படியும் இந்தக் காரியத்தை நாம் சாதித்தே ஆக வேண்டும்.” நிதானமாகவும் திட்டமிட்டும் இந்த வார்த்தைகளைச் சொன்னான் பூபதி. அவனிடம் வருத்தப் பட்டுக்கொண்டிருந்த பெரியவரும் இந்த யோசனையை ஒப்புக்கொண்டு வரவேற்றார். வேறு சிலரும் அந்தச் சூழ்நிலையில் அதைத் தவிர வேறு வழி இல்லை என்றார்கள் அப்படிச் செய்வதை வரவேற்றார்கள். அடுத்த கணமே பூபதியும் அவனுடைய நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்ட ஊர்ப் பிரமுகர்களும் மறியலுக்குக் கூட்டம் சேர்க்க ஏற்பாடு செய்தார்கள். காலதாமதமின்றி உடனே அது நடந்தது. அந்தக் கூட்டத்தைப் பூபதியாலும், மற்றவர்களாலும் மிகக் குறுகிய நேரத்துக்குள்ளாகவே சேர்த்து விட முடிந்தது. மறியலுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஏலம் எடுத்த சாமிநாதனே மிரண்டு போனார். “சிலைத் திருடர்கள் ஒழிக! சொந்த நாட்டுக் கலைப் பொருள்களை அந்நிய நாடுகளில் விற்றுச் சோரம் போகாதே!” என்ற கோஷங்களோடு லைப்ரரியிலும், கலைக்கூடத்திலும் இருந்து பண்டங்களை ஏற்றி எடுத்துச் செல்ல வந்த ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸாரின்’ லாரிகளை வழி மறித்தார்கள் அவர்கள். உள்ளூரின் எல்லா அரசியல் கட்சிகளும் இதில் பூபதியோடு ஒத்துழைத்தன. சிற்பங்களையும் ஒவியங்களையும், அரும்பொருள்களையும் அவர்கள் அரண்மனையின் தனிச் சொத்தாக மட்டும் நினைக்கவில்லை, மக்களின் பொதுச் சொத்தாக நினைத்தார்கள். அவை ஏலம் போவதை ஊரின் இழப்பாக, நாட்டின் இழப்பாக, அவர்கள் நினைத்தார்கள். “ஒரு தனிப்பட்ட நபருக்கு நான் கடன் கொடுத்திருக்கிறேன். அதைச் சரிக்கட்ட அந்தத் தனிப்பட்ட நபரின் தனிச் சொத்துக்களை ஜப்தி செய்து ஏலம் போட்டு என் கடனை அடைத்துக் கொள்கிறேன். இதில் நீங்கள் கோஷம் போடவோ மனம் குமுறவோ, ஊர்வலம் விடவோ என்ன இருக்கிறது?” என்று சாமிநாதன் பூபதியையும் மற்றவர்களையும் பார்த்து ஆத்திரத்தோடு கேட்டார். “அரண்மனைக்குத் தனிச் சொத்து என்று எதுவும் கிடையாது. எல்லாம் மக்களின் வரிப்பணத்திலே வாங்கிச் சேர்த்ததுதான். இந்தச் சிலைகள், இந்த நூல் நிலையம், இந்தப் பொது ஓவியங்கள் எல்லாம் இவ்வூரில் இனி மக்களுக்குப் பயன்படும் காட்சிச் சாலைகளில் வைக்கப்பட வேண்டும்” என்றார்கள் அவர்கள். ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதனின் நிலைமை பரிதாபகரமானதாக இருந்தது. அவரால் ஊர்க்காரர்களையும் மக்களையும் மீறிக் கொண்டு எதையும் செய்ய முடியவில்லை. அரண்மனையிலிருந்த பழைய கார்கள், ஏர்க்கண்டிஷன் பிளாண்ட்கள், ரெஃப்ரிஜிரேட்டர்கள் போன்றவற்றை ஏலம் எடுத்தவர்கள் வேறு விதமாகவும், லாரிகளிலும் எடுத்துச் சென்றபோது மறியல் செய்தவர்கள் தடுக்கவில்லை. விட்டு விட்டார்கள். ஆனால் லைப்ரரி, மியூஸியம், சித்திரச்சாலை, சிற்பக் கூடங்களிலிருந்து எதையும் ஏலம் எடுத்தவர்களைத் தொடக்கூட விடவில்லை. ஒருநாள் இரண்டு நாள் அல்ல... ஆறு மாதங்கள் வரை இந்தப் போராட்டமும் மறியலும் நீடித்தன. பத்திரிகைகளில் தொடர்ந்து இந்தப் போராட்டம் பற்றிய செய்திகள் நாள் தோறும் இருந்தன. ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதன் எத்தனையோ விதமான செல்வாக்குகளைப் பயன்படுத்திச் சிற்பங்களையும் ஓவியங்களையும் சீமநாதபுரத்திலிருந்து கடத்திக் கொண்டு போக முயன்றும் முடியவில்லை. பெரிய ராஜாவின் ஒத்துழைப்புக் கிடைத்தும்கூட அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. மறியல்காரர்கள் இராப் பகலாக முறை வைத்துக் கொண்டு லைப்ரரியையும், சிற்பச் சாலையையும், சித்திரச்சாலையையும், மியூஸியத்தையும் யாரும் அண்டவிடாமல் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். முடிவில் மறியல்காரர்களுக்குத் தான் வெற்றி கிடைத்தது. மியூஸியம், சிற்பக்கூடம், சித்திரச்சாலை ஆகியவற்றை ஏலம் எடுத்தவரிடம் இருந்து மீட்டு அரசாங்கப் பழம்பொருள் பாதுகாப்பு இலாகா தன் பொறுப்பில் ஏற்க முன் வந்தது. உரியதும் நியாயமானதுமாகிய காம்பன் சேஷனை ஏலம் எடுத்தவர்களுக்கு அரசாங்கம் தருவதற்கு ஒப்புக் கொண்டது. உள்ளூரிலேயே ஊருக்கு மையமான ஓரிடத்தில் புதிய கட்டிடங்களை நிர்மாணித்த பின் மியூஸியத்தையும், சித்திர சிற்பக் கூடங்களையும் அந்தப் புதுக் கட்டிடங்களுக்கு மாற்றிக் கலெக்டர் பொறுப்பில் கொண்டு வருவது என்று ஏற்பாடாகிவிட்டது. ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதனும் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழி எதுவும் இருக்கவில்லை. பூபதிக்கு இந்த வெற்றி பெரும் மனத்திருப்தியை அளித்தது. ‘ஏன்ஷியண்ட் ஆர்ட் டிரேடர்ஸ்’ சாமிநாதன் மட்டும் ரொம்ப நாள் வரை தன்னுடைய நெருங்கிய சிநேகிதர் களிடம் அந்தச் சீமநாதபுரம் ‘பேலஸ் ஆக்ஷன்’ பற்றி பேச்சு வரும் போதெல்லாம், “என்னுடைய அத்தனை திட்டமும் சீமநாதபுரம் இளையராஜா பூபதியாலேதான் கெட்டுப் போச்சு. அவன் சாமர்த்தியசாலி. பெரிய கலகக்காரன். கடைசியிலே தான் நினைச்சதைச் சாதிச்சு முடிச்சுட்டான். வெறும் கட்டிடத்துக்காகவும், காலி நிலத்துக்காகவும், பழைய கார்களுக்காகவும் ஃபிரிஜிரேடருக்காகவும், ஓட்டை உடைசல் ஏர்க்கண்டிஷன் பிளாண்ட்டுக்காகவுமா நான் அவ்வளவு சிரமப்பட்டுப் பெரிய ராஜாவுக்குக் கேட்ட போதெல்லாம் கடன் கொடுத்து அந்த அரண்மனையை ஏலத்துக்குக் கொண்டு வந்தேன்? லட்சம் லட்சமா விலைக்குப் போகிற பிரமாதமான சிலைகள், ஓவியங்கள், மியூசியம், ரேர்புக்ஸ் எல்லாம் கிடைக்கும்னு ஆசைப்பட்டுத்தான் குடிகாரரும் காமலோலனும் ஆகிய பெரிய ராஜாவை குளிப்பாட்டி, ரூபாய்களாலே அவரை அபிஷேகம் பண்ணி நோட்டு எழுதி வாங்கினேன். இந்தப் பூபதி என்னோட எல்லாப் பிளானையும் பாழாக்கி விட்டான். கலெக்டர் கவர்மெண்ட் வரை விஷயத்தை எட்டவிட்டு அதை ஒரு பொதுப் பிரச்னையாக்கி அரசாங்கமே புதுசா மியூசியம் கட்டி எல்லாத்தையும் வைக்கிற அளவுக்குப் பண்ணியாச்சு. பூபதி என்னை ஏமாத்திப்பிட்டான்” என்று வாய் ஓயாமல் பூபதியின் மேல் வசைமாரி பாடிக் கொண்டிருந் தார். சாமிநாதனின் ஆத்திரமெல்லாம் பூபதி மேல்தான் இருந்தது. ஆனால் பூபதியோ அதற்கு நேர்மாறாக சாமிநாதனைப் புகழ்ந்து கொண்டிருந்தான். அரண்மனை என்ற வெள்ளை யானை அபாயத்திலிருந்து மீட்டுத் தங்கள் குடும்பத்தைக் கோட்டையின் கற்சுவர்களுக்கு வெளியே அனுப்பி வைத்ததற்காகச் சாமிநாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தான். அவரை வாயார வாழ்த்திப் புகழ்ந்து கொண்டிருந்தான். உலகின் கஷ்ட நஷ்டங்கள் தெரியுமாறு தங்களை ஆக்கிய பொறுப்பு சாமிநாதனுக்கு உரியது என்று உண்மையாகவே அவன் நம்பினான். அரண்மனை ஏலத்துக்கு மட்டும் வந்திராவிட்டால் தன் தந்தை உட்படப் பலருக்கு வெளி உலகின் அசல் வாழ்க்கை தெரியாமல் அவர்கள் தங்களது பழைய தந்தக் கோபுர நிலையிலேயே இருந்து இருப்பார்கள் என்று தோன்றியது அவனுக்கு. ***** இந்த அருமையான சிறுகதையைப் படித்து முடிக்கும் போது இரவு மணி ஒன்று. படிக்கத் தொடங்கும்போது தூக்கம் வந்துவிடும் போலக் கண்ணைச் சுழற்றியது உண்மை. ஆனால் படித்து முடித்த பின்போ மனத்தைப் பல அழுத்தமான சிந்தனைகள் ஆக்கிரமித்துக் கொண்டதன் காரணமாகத் தூக்கம் போய்விட்டது. தனசேகரன் அந்தப் பழைய வாரப் பத்திரிகையை மறுபடியும் முலையில் தூக்கிப் போட்டு விடாமல் பத்திரமாக தன் படுக்கையின் தலைப்பக்கமாக மடித்து வைத்துக் கொண்டான். பீமநாதபுரத்துக்கும், கதையில் வந்த சீமநாதபுரத்துக்கும் ஒரே ஓர் எழுத்துத்தான் வித்தியாசமாக இருந்தது. அதைத் தவிர மற்றொரு வித்தியாசம் அதில் பழைய ராஜா உயிரோடிருந்தார். இங்கே பீமநாதபுரத்தில் தவறுகளையும் ஊழல்களையும் செய்த பழைய ராஜா இறந்து போய்விட்டார். அந்த கதையில் வந்த இளைய ராஜா பூபதியின் நிலையிலேயே இங்கே தானும் இருப்பது தனசேகரனுக்கும் புரிந்தது, இந்த சமஸ்தானமும் இதன் உடைமைகளும் இன்னும் ஏலத்துக்குப் போகிற அவ்வளவு நிலைமைக்குக் கெட்டு விடவில்லை என்றாலும் இங்கே தன் தந்தையும் கணிசமான அளவுக்கு வெளியே கடன் வாங்கி வைத்து விட்டுப் போயிருக்கிறார் என்பது தனசேகரனுக்கு நினைவு வந்தது. கதை தனசேகரனின் நினைவுகளைத் தூண்டி விட்டு விட்டது. கதையில் வந்த இளையராஜா பூபதியின் கலாசாரப்பற்று தனசேகரனுக்கும் இருந்தது. அதுவும் இந்தச் சிறுகதையைப் படித்த இடம் பீமநாதபுரம் சமஸ் தானத்தின் ‘இண்டலெக்சுவல் நகரம்’ எனப் புகழ் பெற்ற ஆவிதானிப்பட்டியாக இருந்ததனால் அந்த உணர்வுகள் மேலும் பெருகின. வளர்ந்திருந்தன. இதயத்தில் நின்றன. மனம் ஒருவிதமான உருக்கத்தில் இலயித்துப் போயிருந்தது. மறுநாள் காலையில் எழுந்ததும் காபி குடித்துக் கொண்டே மாமா தங்கபாண்டியனிடம் அந்த சிறுகதையை பற்றிப் பேச்சுக் கொடுத்தான் தனசேகரன். “காரியத்தைக் கவனிக்காமே சும்மா கதையையும், நாவலையும் படிச்சுக்கிட்டிருக்கிறதிலே என்ன பிரயோஜனம்? இந்த ஊர்லே நமக்கு நிறைய வேலை இருக்கு. ஒரு வாரத்துக்குள்ளே நான் மட்டுமாவது மலேசியாவுக்குத் திரும்பியாகணும். ஹாங்காங்குக்கு ரப்பர் எக்ஸ்போர்ட் விஷயமா ஒரு எக்ரிமெண்ட் பெண்டிங்கிலே இருக்கு” என்று பதில் கூறினார் மாமா. அவன் சொல்லிய கதையைப் பற்றி அவர் கவனம் திரும்பவில்லை. அவனே அவர் கவனத்தை ஈர்த்து அந்த வாரப் பத்திரிகையையும் எடுத்துக் காட்டிக் கதைச் சுருக்கத்தையும் அவருக்குச் சொன்னான். முழுவதும் கேட்ட பின் “யாரோ நம்ம சமஸ்தானத்து உள் நிலவரம் எல்லாம் தெரிஞ்சவன் தான் எழுதியிருக்கான். விட்டுத் தள்ளு. இது யாருன்னு கண்டுபிடிச்சு இப்போ என்ன ஆகப்போகுது?” என்று சுலபமாகப் பதில் சொல்லி விட்டார் மாமா! காலை பத்து மணிக்கு அவர்கள் தங்கியிருந்த ஆவிதானிப்பட்டி பி.டபிள்யூ.டி. இன்ஸ்பெக்ஷன் பங்களாவுக்கு ஐந்தாறு தமிழ்ப் புலவர்கள் தேடி வந்திருந்தார்கள். மாமா அவர்களைப் பார்க்கவே தயங்கினார். தனசேகரனோ அவர்களைச் சந்திக்கத்தான் வேண்டும் என்றான். “சந்திக்கணும்னு நீ விரும்பினால் தாராளமாகச் சந்தித்துப் பேசு. எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை, ஆனால் இந்தப் புலவங்க ஏதாவது மான்யம் நின்னு போனது பத்தித்தான் உங்கிட்ட வந்து குறை சொல்லப் போறாங்க. சமஸ்தானத்தை உங்கப்பாரு இப்ப வச்சிட்டுப் போயிருக்கிற கஷ்ட நிலையிலே யாருக்கும் எதுவும் செய்யிறாப்லே இல்லை. அதை மட்டும் நல்லா ஞாபகத் திலே வச்சுக்கோ’’ என்றார் மாமா. மாமாவை உள்ளேயே விட்டுவிட்டு வெளி வராந்தாவுக்குப் போய் அந்தப் புலவர்களோடு அமர்ந்து பேசினான் தனசேகரன். தேடி வந்து விட்டவர்களை முகத்தில் அடித்தாற் போல் திருப்பி அனுப்ப அவனுக்கு விருப்பம் இல்லை. எல்லாருக்கும் பருகுவதற்குக் காபி வரவழைத்துக் கொடுத்து உபசரித்தபின் அவன் கனிவாக உரையாடத் தொடங்கினான். வந்திருந்த அந்தப் புலவர்கள் மறுபடி சமஸ்தானத்தில் வருஷா வருஷம் நவராத்திரி விழாவையும், தமிழ்ப் புலவர்களின் வித்வத் சதஸையும் நடத்தவேண்டும் என்றும், அப்படி நடத்தினால்தான் பீமநாதபுரத்தைப் பிடித்திருக்கிற வறுமைகளும், கடன் கஷ்டங்களும், பீடைகளும் விலகும் - மழை நன்றாகப் பெய்யும் என்றும் யோசனை கூறி னார்கள். அவர்களுடைய மனம் புண்பட்டு விடாமல் தனசேகரன் அதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டான். “சமஸ்தானமே ஆவிதானிப்பட்டிப் புலவர்களின் பிரபந்தங்களை எல்லாம் வெளியிட வேண்டும்” என்றார் மற்றொரு புலவர். தனசேகரன் எதையும் நேருக்கு நேர் மறுத்து விடாமல் கேட்டுக் கொண்டான். சிறிது நேரம் கழித்து அவர்களை வாயில்வரை உடன் சென்று வழியனுப்பிவிட்டு உள்ளே திரும்பியதும் மாமா வேறொரு முக்கியமான விஷயத்தைத் தனசேகரனிடம் ஆரம்பித்தார். |