2 தனசேகரனும், மாமா தங்கபாண்டியனும் கோலாலம்பூரிலுள்ள சுபாங் இண்டர் நேஷனல் விமான நிலையத்தில் புறப்பட்டு கொழும்பு கட்டுநாயக விமான நிலையத்தில் வந்து இறங்கும் போது மாலை 4 மணி. கொழும்பிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படும் விமான நிலையமாகிய இரத்மலானை விமான நிலையமோ நகரின் மற்றொரு கோடியில் இருந்தது. சர்வதேச விமான நிலையமாகிய கட்டுநாயகவில் இருந்து ஒரு டாக்சியில் ‘இரத்மலான்’வுக்கு விரைந்து, அங்கிருந்து அவசர அவசரமாகச் சென்னை செல்லும் விமானத்தைப் பிடித்துப் புறப்பட்டிருந்தார்கள் அவர்கள். கொழும்பில் விமானம் வேலெழுந்து பறந்த போது ஏதோ குடும்ப விஷயத்தைப் பற்றி தனசேகரனிடம் பேச ஆரம்பித்தார் மாமா. “கடைசி ரெண்டு வருசத்திலே உங்கப்பா இருந்த சவரணையைப் பார்த்தா அநேகமாச் சமஸ்தானத்துச் சொத்தை எல்லாம் சீரழிச்சிருப்பாரு. சும்மாக் கெடக்காம காலங் கெட்ட காலத்திலே அவருக்குச் சினிமாப் படம் எடுக்கற பைத்தியக்கார ஆசை வேற வந்து தொலைச்சிருந்தது.” “நீங்க சொல்றதுதான் சரியாயிருக்கும் மாமா! உருப்படியா ஒண்ணும் இருக்காது. அரண்மனைக் கோட்டை மதில் சுவரைத் தவிரப் பாக்கி அத்தனையையும் வித்திருப்பாரு. அல்லது அடகு வச்சிருப்பாரு. எதுக்கும் இப்போது நீங்க என் கூடப் புறப்பட்டு வந்ததாலே எனக்கு நிம்மதி...” “வந்துதானே ஆகணும் தம்பீ! உயிரோட இருந்தப்ப எனக்கும் அவருக்கும் ஒத்துக்காதுன்னாலும் சொந்த மச்சினரு சாவுக்குக் கூட வரலேன்னு நாளைக்கு ஒருத்தன் குறை சொல்ல இடம் வச்சுடப் பிடாது பாரு. ஆயிரம் மனஸ்தாபம் இருக்கலாம். உங்கப்பா கெட்டவராவே இருந்திருக்கலாம். குடும்பத்துக்குள்ளார ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக் கொடுக்கப்படுமா?” என்றார் மாமா தங்க பாண்டியன். அவரும் அவனும் பேச ஆரம்பித்த குடும்ப விஷயங்கள் ஒரு முடிவுக்கு வராமல் அநுமார் வால் மாதிரி நீண்டு கொண்டு போகவே விமானம் அதற்குள் சென்னை மீனம்பாக்கம் நிலையத்தில் தரையிறங்கிவிட்டது.
தனசேகரனிடமும் சரி, அவனுடைய மாமா தங்க பாண்டியனிடமும் சரி, ஆளுக்கு ஒரு ‘சூட்கேஸ்’ மட்டுமே லக்கேஜ் என்ற பெயரில் இருந்தன. அதனால் பாஸ்போர்ட் எண்ட்ரி, கஸ்டம்ஸ் செக்கிங் ஆகிய காரியங்கள் மிகச் சுருங்கிய நேரத்திலேயே முடிந்து விட்டன.
அவர்கள் விமான நிலையத்தில் சர்வதேசப் பரிசோதனைப் பிரிவிலிருந்து லவுஞ்ஜுக்கு வரும் முதல் வாயிலில் அடி எடுத்து வைத்ததுமே சில உறவினர்களும் பீமநாதபுரத்திலிருந்து காருடன் தயாராக வந்து காத்திருந்த டிரைவரும் அவர்களை எதிர்கொண்டார்கள். யாருடனும் நின்று பேச அவர்களுக்கு நேரமில்லை. வந்திருந்த உறவினர்களிடம் சொல்லி உடனே பீமநாதபுரத்துக்கு டெலிஃபோன் மூலம் தாங்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து ஊருக்குக் காரில் புறப்பட்டு விட்டதாகத் தகவல் தெரிவிக்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள் அவர்கள். கார் செங்கல்பட்டைக் கடக்கும் போது இரவு மணி எட்டேமுக்கால். “பசிக்குதா தம்பி? ஏதாவது சாப்பிடறியா? நாளைக் காலையிலே பத்துப் பன்னிரண்டு மணி கூட ஆகும். மயானத்திலிருந்து அரண்மனைக்குத் திரும்பற வரை பச்சைத் தண்ணி கூட வாயிலே ஊத்த முடியாது” என்று மாமா ஆறுதலான குரலில் தனசேகரனை விசாரித்தார். “மனசு சரியாயில்லே, ஒண்ணுமே வேண்டாம் மாமா.” “அடச் சீ!... போன மனுஷன் ஒண்ணும் நீ பட்டினியிருக்கேங்கிறதுக்காகத் திரும்பி வந்து சேர்ந்துடப் போறதில்லே. வயித்தைக் காயப் போடாதே. எனக்குத் தெரியாதா உன் சங்கதி? எத்தினி ராத்திரி ஈபோவிலேயிருந்து பினாங்குக்கோ, கோலாலம்பூருக்கோ போயிட்டுத் திரும்பறப்போ, வழியிலே ரெண்டு மூணு சீனன் கடையிலாவது காரை நிறுத்தி மீ கோரேங்கையும், கருப்புத் தேத்தண்ணியும் குடிச்சாத்தான் ஆச்சுன்னு பிடிவாதம் பிடிச்சிருக்கே நீ? இன்னிக்கு மட்டும் பசிக்காமப் போயிடுமா என்ன? ஏய் டிரைவர்! வண்டியை ஓரமா நிறுத்திப் போட்டுக் கொஞ்சம் ‘பிரட்’டும் பிஸ்கட்டும் வாழைப்பழமும் வாங்கிட்டு வா சொல்றேன்” என்று தனசேகரின் பதிலுக்குக் காத்திராமலே தானாகவே கார் டிரைவருக்கு உத்தரவிட்டார் மாமா தங்கபாண்டியன். டிரைவர் அவர் சொன்னபடி காரை மெயின் ரோட்டில் இடது பக்கம் ஓரமாக நிறுத்தி விட்டு ரொட்டி, பிஸ்கட், வாழைப்பழத்தோடு சொல்லாவிட்டாலும் இருக்கட்டும் என்று தமிழில் இரண்டும், ஆங்கிலத்தில் ஒன்றுமாகச் சாயங்கால நியூஸ் பேப்பர்கள் மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தான். “சபாஷ்! நியூஸ்பேப்பர் வேற வாங்கியாரச் சொல்லணும்னு நினைச்சேன். சொல்றப்ப மறந்துட்டேன். நீயாவே வாங்கியாந்துட்டே. நல்ல காரியம் பண்ணினே அப்பா” என்று டிரைவரைப் பாராட்டிக் கொண்டே பத்திரிகைகளை வாங்கிக் கொண்டார் மாமா. “தம்பீ! பிரட்-பிஸ்கட் வாழைப்பழம் எல்லாம் வாங்கி வண்டியிலே வச்சிருக்கேன். பசிக்கிறப்போ சொல்லு, சாப்பிடலாம்” என்று தனசேகரனிடம் கூறிவிட்டு நியூஸ் பேப்பரின் கொட்டை எழுத்துத் தலைப்புக்களை மட்டும் காரின் உட்புறமிருந்த விளைக்கைப் போட்டுக் கொண்டு அந்த வெளிச்சத்தில் படிக்க முயன்றார் மாமா. தமிழ் மாலைத் தினசரிகளில் எல்லாம் முதல் பக்கத்திலேயே தலைப்பில் இல்லாவிட்டாலும் சற்று கீழே தள்ளி ‘பீமநாதபுரம் ராஜா மாரடைப்பில் காலமானார்’ என்று பெரிதாகத் தலைப்புக் கொடுத்துப் படத்துடன் பிரசுரித்திருந்தார்கள். ஆங்கிலத் தினசரியில் மட்டும் அதை மூன்றாம் பக்கத்தில் கீழ்க்கோடியில் மரண அறிவிப்புப் பகுதியில் முதல் அயிட்டமாக வெளியிட்டு இருந்தார்கள். தமிழ்ப் பத்திரிகைகளில் அந்தக் கார் வெளிச்சத்தில் படிக்க முடிந்த மாதிரி இருந்த பெரிய எழுத்துச் செய்திகளையும் தலைப்புக்களையும் வாய்விட்டுப் படித்துக் கொண்டிருந்த மாமா, ‘நடிகர்களும் நடிகைகளும் திரைப்பட முக்கியஸ்தர்களும் முதுபெரும் டைரக்டர் கோமளீஸ்வரன் தலைமையில் பீமநாதபுரம் விரைகிறார்கள்’ என்று படித்துவிட்டு அவ்வளவில் அந்தப் பேப்பரைப் படிப்பதை நிறுத்திவிட்டுத் தனசேகரன் பக்கமாகத் திரும்பி, “தம்பி! இந்தக் கோமளீஸ்வரன் யாரு தெரியுமில்லே? நான் இவன் பேரை வேணும்னே உங்கப்பா கிட்டப் பேசறப்பக் கூடக் கோமாளீஸ்வரன்னுதான் சொல்வேன். இவன் தான் உங்கப்பாவைச் சினிமா லயன்லே கொண்டு போய்க் கவுத்து விட்ட பயல். இவன் பேச்சைக் கேட்டுக்கிட்டுத்தான் அவரு உங்கம்மா செத்து ஒரு வருஷம் முடியறதுக்குள்ளே அந்த ஜெயநளினி பேருக்கு லட்ச ரூபாயிலே அடையாறிலே வீடு வாங்கி வச்சாரு... இந்த பயலைப் பார்த்தா அரண்மனைத் தோட்டத்திலே ஒரு தென்னை மரத்திலே கட்டி வச்சு உதை உதைன்னு உதைக்கணும், அப்பத்தான் என் கோபம் எல்லாம் ஆறும்” என்றார். “இவரு, தானா வலுவிலே போயிக் காஞ்ச மாடு கம்புலே விழுந்த கதையாக் கெட்டுப் போனாருன்னா அதுக்கு அவன் என்ன பண்ணுவான் மாமா? அவனைப் போல் இருக்கிறவன் கொடுக்கிறதுக்கு யாராவது பசையுள்ள ஆள் சிக்கறானா இல்லியான்னு தேடிக்கிட்டுத்தான் இருப்பான். கெட்டுப் போகிறவன் மேலே கொஞ்சங் கூடக் கோபிக்காம கெடுக்கிறவனைக் கட்டிவச்சு உதைக்கப் போறேன்கிறது என்ன நியாயம்?” “அது சரி தம்பி, ஆனால் கெட்டுப்போனவருதான் இப்போ உலகத்தை விட்டே புறப்பட்டுப் போயிட்டாரே? அவரை இனிமே என்னா செய்யமுடியும்?” “அவரு காலம் முடியற வரை அவர் யார் சொல்லியும் திருந்தத் தயாராயில்லே. நீங்க கூடத்தான் எவ்வளவோ சொன்னீங்க. மீதமிருக்கிறதைக் கன்ஸாலிடேட் பண்ணி ஊட்டியிலியோ, கொடைக்கானலிலேயோ அல்லது மைசூர் ஸ்டேட்ல சிக்மகலூரிலேயோ எஸ்டேட் வாங்கிப் போடலாம்னீங்க. அவரு எங்கே கேட்டாரு? சமஸ்தானம், சமஸ்தானம்னு ராஜாப் பட்டம் போட்டு அழைக்கிற சோம்பேறிகளை எல்லாம் நம்பியே குட்டிச் சுவராப் போனாரு!” “அதுமட்டுமில்லே! நான் எவ்வளவோ தலையிலே அடிச்சுக்கிட்டேன். உங்க காலம் மாதிரி எல்லாம் இனிமே எதிர்காலம் இருக்காது. அந்தப்புரத்திலே மந்தை மாதிரி இளையராணிங்கங்கற பேர்ல அடைச்சுப் போட்டிருக்கிற பொம்பளைங்களை வெளியே பத்தி விட்டுடுங்க. இல்லாட்டி அவங்க மக்கள், பேரன், பேத்திகள் எல்லாரையும் கட்டி மேய்ச்சுப் படிக்க வச்சுத் துணிமணி வாங்கிக் குடுக்க இந்த அரண்மனையைப் போலப் பத்து அரண்மனையை வித்தாக் கூடக் காணாதுன்னேன், கேட்கலை. இப்போ அவங்களையும் அவங்க வம்சாவளிங்களையும் பத்தி விடறதுக்கும் துரத்தறதுக்கும் வீணாகச் சின்னப் பையன் நீ சங்கடப்படணும்...” “நாம எங்கே அவங்களைத் துரத்திவிடறது? அவங்க நம்மைத் துரத்தி விடாமே இருக்கணுமேங்கறதுதான் மாமா இப்போ என் கவலை?” என்றான் தனசேகரன். கார் டிரைவர் தங்கள் உரையாடலை எல்லாம் கேட்டுக் கொண்டு வருகிறான் என்பதை இருவருமே நினைவு வைத்துக் கொண்டுதான் இருந்தார்கள். காலஞ்சென்ற மகாராஜாவை மதித்ததை விட அந்த டிரைவர் தன்னையும் தனசேகரனையும் அதிகமாக மதிப்பது மாமா தங்கபாண்டியனுக்கு நன்றாகத் தெரியும். கடைசிக் காலங்களில் அவன் மகாராஜாவின் நடத்தைகள் பிடிக்காமல், “சமஸ்தான வேலைன்னா கௌரவம்கிற காலம் மலையேறிப் போச்சுங்க. இவரு கண்ட சினிமாக்காரிங்க வீட்டிலே எல்லாம் போய்க் காத்துக் கிடக்க ஆரம்பிச்சுட்டாருங்க. நானும் உங்க கூட மலேசியாவுக்கே வந்துடறேனுங்க. அங்கே எஸ்டேட்லே ஏதாவது டிரைவர் வேலை போட்டுக் கொடுங்க போதும். மானமாப் பிழைக்கலாம்” என்று தங்க பாண்டியன் ஊர்ப்பக்கம் வந்து திரும்பும் போதெல்லாம் அவரிடம் இந்த டிரைவர் பலமுறை கெஞ்சியிருக்கிறான். அதனால் சிறிது நேர உரையாடலுக்குப் பின் இந்த டிரைவரையே தங்கள் பேச்சில் கலந்து கொள்ளச் சொல்கிறார் போன்ற கேள்வி ஒன்றை அவனிடமே கேட்டார் மாமா தங்க பாண்டியன். “என்ன ஆவுடையப்பன்? நாங்க பேசிக்கிறதை எல்லாம் கேட்டுக்கிட்டுத்தானே வர்றே? மகாராஜா காலமானப்போ அரண்மனை நெலைமை எப்படி? கஜானா நிலைமை எப்படி? காரியஸ்தர் சேர்வை என்ன சொல்றாரு?” “எல்லாம் கேட்டுக் கிட்டுத்தான் வரேன் சார்? வந்து இறங்கினதும் இறங்காததுமா உங்க மனசையும் சின்ன ராஜா மனசையும் கஷ்டப்படுத்தற மாதிரி விஷயமாச் சொல்ல வேண்டியிருக்கேன்னு தான் வருத்தமா யிருக்குங்க...” “அதுக்கு நீ என்னப்பா பண்ணுவே? நடந்திருக்கிற விஷயத்தைத் தானேப்பா நீ சொல்ல முடியும்? எங்க மனசு கஷ்டப்படாமே இருக்கணும்கிறதுக்காக நடக்காதைதை இட்டுக் கட்டிச் சொல்லவா முடியும். செத்துப் போன மகாராஜா பிழைச்சு உயிரோட வந்துட்டதாகச் சொல்லுவியா? அல்லது அரண்மனை கஜானாவிலே ஐம்பது கோடி ரூபாய் எப்பிடிச் செலவழிக்கிறதுன்னு தெரியாமக் குவிஞ்சு கெடக்கு சார்னு பொய் சொல்வியா? நிஜமா நடந்ததைத் தானே நீ சொல்ல முடியும்? நிஜமா நடந்தது எல்லாம் கசப்பாவும் கஷ்டமாவுந்தான் இருக்கும். நீ பயப்படாமே நடந்ததைச் சொல்லிகிட்டு வா ஆவுடையப்பன்! எங்க மனசு ஒண்ணும் அதைக் கேட்டுக் கஷ்டப்பட்டுடாது. மனசுக்கு நல்ல ‘ஷாக் அப்ஸார்பர்’ போட்டு ஆடாம அதிராம வச்சுக்கிட்டிருக்கோம் நாங்க. கவலைப்படாமச் சொல்லு நீ” என்றார் மாமா. “மகாராஜா காலமான அன்னிக்கே அரண்மனைக் குள்ளாரப் பலதும் பலவிதமா நடந்து போச்சுங்க. அரண்மனைக் காரியஸ்தர் உஷாராகிச் சுதாரிச்சுக்கிட்டுப் பெரிய ராஜாவோட டிரஸ்ஸிங் ரூம், படுக்கை அறை, அலமாரிகள், பீரோக்கள் எல்லாத்தையும் பூட்டி சீல் வைக்கிறதுக்குள்ளேயே நிறையத் திருட்டுப் போயிட்டதுங்க. கடைசியிலே கூட அரண்மனைக்குள்ளாரப் போலீஸைக் கூட்டியாந்துதான் சேர்வைக்காரரு எல்லாத்தையும் பூட்ட முடிஞ்சிச்சு!” “திருடினவங்க யாரா இருக்கும்னு நெனைக்கிறே ஆவுடையப்பன்?” “வேற யாரு? வெளியில் இருந்தா அரண்மனைக்குள்ளாரத் திருடிப் போட்டுப் போகணும்னு ஆட்கள் வரப் போறாங்க? எல்லாம் உள்ளேயே இருக்கிறவங்க செஞ்ச வேலை தான். அகப்பட்ட வரை சுருட்டிக்கிட்டது மிச்சம்னு சுருட்டிக்கிட்டாங்க. பெரிய ராஜாவோட பிரதேதத்தை முகப்பிலே ராஜராஜேஸ்வரி ஹால்லே கொண்டாந்து ஐஸ் அடுக்கிப் பொதுமக்களோட பார்வைக்கு வச்சிட்டுக் காரியஸ்தர் மறுபடி உள்ளே திரும்பிப் போறதுக்கு முன்னே ஒரு பெரிய தீவட்டிக் கொள்ளையே அடிச்ச மாதிரி சாமான்கள் பறிபோயுடிச்சி...” “உங்க பெரிய ராஜா ஏதாச்சும் கொஞ்சமாவது வச்சிட்டுப் போயிருக்காரா ஆவுடையப்பன்?” “என்னத்தை வச்சிருக்க விட்டிருக்கப் போறாங்க? எல்லாத்தையுந்தான் சினிமாக்காரிகள் உறிஞ்சியிருப்பாங்களே! நிறையக் கடனைத்தான் வச்சிருப்பாரு!” “கேட்டுக்கோ தம்பி! உனக்குத்தான், உங்கப்பா எதைச் சேர்த்து வச்சிருக்கார்ன்னு கேட்டியில்லே?” “ஆவுடையப்பனைக் கேட்டு விசாரிச்சுத்தான் இதைத் தெரிஞ்சுக்கணுமா மாமா? நமக்கே தெரிஞ்சுருக்கிற விஷயம் தானே இது?” “ப்ரீவீ பர்ஸ் நின்னப்புறம் கூட அவரோட ஊதாரிச் செலவுகளை அவர் நிறுத்தலேன்னு தெரியறது. நல்ல மனுஷனா இருந்தா ராஜமான்யம் நிறுத்தப்பட்டதுக்குப் பின்னாடியாவது திருந்தியிருக்கணும். இவர் அப்பவும் திருந்தலே...” “இவர் திருந்த மாட்டார் என்ற ஏக்கத்திலேதான் அம்மாவே ஏங்கி ஏங்கிச் செத்துப் போனாங்கங்கறதை மறந்துட்டீங்களா மாமா?” கார் மதுராந்தகத்தைக் கடந்து திண்டிவனத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. “பெட்ரோ பங்க்லே கடன் சொல்லித்தான் டாங்க ஃபுல் பண்ணிக்கிட்டுப் புறப்பட்டேன் சார். சேர்வை காரரே பெட்ரோல் பங்குக்கு ஃபோன் பண்ணிக் கெஞ்ச வேண்டியதாப் போச்சு. வேறொரு சமயமா இருந்தா அவனும் நிர்த்தாட்சண்யமா மாட்டேன்னிருப்பான். சாவு காரியம்கிறதுனாலே போனாப் போகுதுன்னு சம்மதிச்சான். ஊர்லே ஜவுளிக்கடை, பலசரக்குக் கடை, பூக்கடை, பழக்கடை எல்லாத்திலியும் அரண்மனைக் கணக்கிலே கழுத்து முட்டக் கடன் இருக்கு.” “அப்போ மகாராஜா, தம்பிக்குக் கழுத்து முட்டக் கடனைத்தான் சேர்த்து வச்சிட்டுப் போயிருக்காருன்னு சொல்லு!” “நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன? எல்லாருக்கும் ஏற்கெனவே தெரிஞ்ச விஷயந்தானுங்களே?” “கடைசிக் காலத்திலே வீடு வாங்கி வச்சுக் குலாவினாரே; அந்த சினிமாக்காரி அவ இப்போ இங்கே அழ வந்திருக்காளா அப்பா?” “வராமேயா, பின்னே? அதுதான் சித்தே முந்திப் பேப்பர்லே படிச்சீங்களே; ‘டைரக்டர் கோமளீஸ்வரன் தலைமையிலே நட்சத்திரங்கள் பீமநாதபுரம் விரைகிறார்கள்’னு. எல்லோரும் வந்து ‘கஸ்ட் ஹவுஸ்’ நிறைய டேரா அடிச்சிருக்காங்க சார்.” “உங்க தாத்தா விஜய மார்த்தாண்ட பீமநாத பூபதி காலமானப்போ பிரிட்டிஷ் கவர்மெண்ட்டோட பிரதிநிதியா டில்லியிலேருந்து வைசிராய் வந்து மலர் வளையம் வச்சாரு. அப்போ நான் சின்னப் பையன். உங்க அப்பா தலையெழுத்து - சினிமாக்காரிகளும், பட்டணத்து நடுத்தெரு புரோக்கர்களும் வந்து மலர் வளையம் வைக்கணும்னு தான் இருக்கு. மரியாதை கௌரவம் இதுக்கெல்லாம் கூடக் கொடுத்து வச்சிருக்கணும் தம்பீ! இவரு கொடுத்து வச்சது இவ்வளவுதான் போலிருக்கு.” இதற்கு தனசேகரன், பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். மாமா சிறிது நேரம் கண்ணயர்ந்தார். கார் எவ்வளவு வேகமாகப் போனாலும் ஸீட்டில் சாய்ந்தபடி உட்கார்ந்த நிலையிலேயே கூட நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்க அவரால் முடியும். தனசேகரனால் அப்படித் தூங்க முடியாது. சுற்றுப்புறத்தில் சிறிய ஓசை ஒளிகளால் பாதிக்கப்பட்டால் கூட அவனுக்குத் தூக்கம் வராது. அவன் தன்னை ராஜபரம்பரை என்றோ பீமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய ராஜா என்றோ நினைப்பது கூட இல்லை. என்றாலும் பல விஷயங்களில் ராஜ துல்லிய குணம் என்று சொல்வார்களே அந்தத் தன்மை அவனிடம் அமைந்திருந்தது. எந்த விஷயத்திலும் அவன் செய்வது, தெரிவிப்பது, தெரிந்து கொள்ளுவது எல்லாம் துல்லியமாக இருக்கும். தாய்வழி மாமா தங்கபாண்டியனுக்கு தனசேகரன் மேல் அளவற்ற பிரியம். தன் அக்கா மகன் என்ற உறவு முறையையும் பீமநாதபுரம் சமஸ்தானத்தின் நேரடியான ராஜ வாரிசு என்ற கௌரவத்தையும் விட அவனுடைய கம்பீரமான தோற்றமும் எதிலும் அற்பத்தனமே இல்லாத பெருங்குணமும் அவரைக் கவர்ந்திருந்தன. நல்ல பழகும் முறைகளும் சிரித்த முகமும் தனசேகரனின் இயல்புகளாக இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாகத் தனசேகரனின் தன்னடக்கத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். யார் யாரோ புதுப்பணக்காரர் விட்டுப் பிள்ளைகள் எல்லாம் பணத் திமிரினாலும் செருக்காலும் மண்டைக் கனம் பிடித்து அலைகிற இந்த நாளில் தனசேகரின் தன்னடக்கம் பலரை ஆச்சரியப்பட வைத்தது. மாமா தங்கபாண்டியன் பீமநாதபுரம் சமஸ்தானாதிபதியை விடப் பெரிய பணக்காரர் என்பதும் மலேசியாவில் ‘டத்தோ’ சிறப்புப் பட்டம் கொடுத்துக் கௌரவிக்கப்பட்ட பொது வாழ்க்கைப் பிரமுகர் என்பதும் அவரோடு வந்து தங்கியிருந்த மருமகன் தனசேகரனுக்கும் செல்வாக்கை அளிக்கத்தான் செய்தன, என்றாலும் அப்படி ஒரு செல்வாக்கைத் தான் அண்டியிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் எல்லாரிடமும் எளிமையாகவும் வித்தியாசமின்றியும் மலர்ந்த முகத்தோடும் பழகினான் தனசேகரன். டத்தோ தங்கபாண்டியன் தம்முடைய மூத்த மகளைத் தனசேகரனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாகத் தம் அக்காவும் காலஞ்சென்ற பீமநாதபுரம் மூத்த ராணியுமான வடிவுடைய நாச்சியாரம்மாளுக்கும் வாக்குக் கொடுத்திருக்கிறார். ஒருவேளை காலஞ்சென்ற பீமநாதபுரம் மகாராணிக்கு அப்படி ஒரு வாக்கைக் கொடுத்திரா விட்டாலும் கூடத் தம்முடைய மகளுக்குத் தனசேகரனை விடப் பொருத்தமான வேறு ஒரு மாப்பிள்ளையை டத்தோ தங்கபாண்டியனால் தேர்ந்தெடுக்க முடியப் போவதில்லை. விழுப்புரம் தாண்டியதும் மாமா தங்கபாண்டியன் தூக்கம் கலைந்து காரில் கண் விழித்தார். “ஏனப்பா ஆவுடையப்பன், வண்டியிலே கூஜா நிரையக் குடிதண்ணீர் எப்பவும் வச்சிருப்பியே; இருக்கா?” “இருக்குங்க! பின்னாடி உங்க காலடியிலே ஒரு பிளாஸ்டிக் கூடையிலே கூஜா நிறையப் பச்சைத் தண்ணி, பிளாஸ்கிலே வெந்நீர் எல்லாம் இருக்கு சார்!” “என்ன தம்பீ! இன்னுமா உனக்குப் பசிக்கலே? ஊர் எல்லைக்குள்ளார நுழைஞ்சிட்டா நீ சாப்பிட முடியாது. இப்பவே ஏதாச்சும் சாப்பிட்டோம்னு பேர் பண்ணிட்டாத்தான் நல்லது தம்பி! இந்தா, எடுத்துக்க...” என்று ரொட்டிப் பொட்டலத்தில் ஒரு பகுதியையும், இரண்டு வாழைப் பழங்களையும் தனசேகரிடம் எடுத்து நீட்டினார் மாமா தங்கபாண்டியன். கார் போய்க் கொண்டிருக்கும் போதே பத்து நிமிஷத்தில் அவர்கள் உணவு முடிந்து விட்டது. மீது ரொட்டியையும் பிஸ்கட்களையும் வாழைப்பழங்களையும் எடுத்து டிரைவரிடம் கொடுத்து, “இன்னிக்கி நீயும் இதைத் தான் சாப்பிடு ஆவுடையப்பா! வேறே எதாச்சும் ‘ஹெவியா’ சாப்பிட்டா தூக்கம் வந்தாலும் வந்துடும். அகாலத்தில் காரை ஓட்டிக்கிட்டு ‘லாங் டிஸ்டன்ஸ்’ போறப்பக் குறைவாச் சாப்பிடுறதுதான் நல்லது” என்றார் தங்கபாண்டியன். “ஒண்ணும் சாப்பிடாட்டிக் கூட பரவாயில்லீங்க. எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருப்பாங்க. உங்க ரெண்டு பேரையும் சீக்கிரமா ஊர்லே கொண்டு போய்ச் சேர்த்துடணும்.” “அப்படிச் சொல்லாதே! முதல்லே சாப்பிட்டுக்கோ. ஓரமா வண்டியை நிறுத்தி வவுத்துப் பாட்டை முடி. அப்புறம் போகலாம்” என்று தங்கபாண்டியன் அவனைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார். டிரைவர் ஆவுடையப்பன் ரொட்டி, பிஸ்கட், வாழைப்பழம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சாப்பிடுவதற்காகக் கீழே இறங்கப் போனான். “இந்த இருட்டிலே நீ எங்கே இறங்கிப் போய்ச் சாப்பிடப் போறே? சும்மா முன் சீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிடுப்பா” என்றான் தனசேகரன். “இல்லீங்க... உங்க முன்னாடி எல்லாம் உட்கார்ந்து சாப்பிடறதுக்குக் கூச்சமா இருக்குமுங்க. என்னை என் இஷ்டப்படி விட்டுடுங்க” என்று கீழேயே இறங்கிப் போய் விட்டான் டிரைவர். “உங்கப்பாகிட்ட இத்தனை வருஷமா வேலை பார்த்தும் அவரோட கெட்ட குணம் எதுவும் தனக்கு வந்துடாமேயும், தன்னோட நல்ல குணம் எதுவும் அவராலே கெட்டுப் போயிடாதபடியும் தப்பினவன் இவன் ஒருத்தன் தான் தம்பி... இவனைக் கூட அவர் நல்லபடியா வச்சுக்கலே. நடுநடுவே நான் ஊர் வந்து திரும்பறப்ப எல்லாம் இவன் என்னைப் பார்த்து நானும் உங்க கூட மலேசியாவுக்கு வந்திடறேன் சார்னு சொல்லிக்கிட்டிருந்தான். நான் தான் ‘தெரிஞ்சவங்களுக்குள்ளே வீண் மனஸ்தாபம் வேண்டாமப்பா! நீ இங்கேயே இரு. செலவுக்கு வேணா அப்பப்போ ஏதாவது வாங்கிக்கோ’ன்னு நூறு அம்பதுன்னு குடுத்துக்கிட்டிருந்தேன்” என்றார் மாமா. “எங்கப்பாவுக்கு விசுவாசம், நன்றி எல்லாம் பிடிக்கும். ஆனால் அது பணச் செலவில்லாமே கிடைக்கிற விசுவாசமா இருக்கணும். அவரு யாருக்காகப் பணத்தைத் தண்ணியா வாரி இறைச்சாரோ அவங்களெல்லாம் நன்றி விசுவாசமில்லாதவங்களா இருப்பாங்க. இதோ இந்த ஆவுடையப்பனைப் போல விசுவாசமுள்ள ஏழை எளியவங்களுக்கு அவர் ஒண்ணுமே பண்ணியிருக்க மாட்டாரு மாமா. அதுதான் அவர் வழக்கம்.” டிரைவர் சாப்பிட்டுவிட்டு வந்து சேர்ந்தான். நிறைய இடங்களில் நெடுஞ்சாலையில் பாலங்கள், ரோடுகளில் ரிப்பேர் இருந்ததால் கரடுமுரடான மாற்று வழிகளில் கீழே இறங்கிக் கார் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே விரைந்து செல்வது தடைப்பட்டது. முதலில் நினைத்திருந்தபடி நடு இரவு ஒன்றே முக்கால் அல்லது இரண்டு மணிக்கு அவர்கள் பீமநாதபுரம் போய்ச் சேர்ந்துவிடலாம் என்பது சாத்தியமாகவில்லை. ஊருக்குள் அவர்கள் கார் நுழையும் போது மணி இரண்டே முக்கால். அரண்மனையின் பிரதான வாயிலில் நுழையும் போது மணி மூன்று. எங்கோ கோழி கூடக் கூவி விட்டது. விடியப் போவதற்கு முந்திய குளிர்ந்த காற்றுக் கூட மெல்ல வீசத் தொடங்கி விட்டது. கார், நேரே அரண்மனை இராஜ ராஜேஸ்வரி விலாச ஹாலில் முகப்பில் போய் நின்றது. எங்கும் ஒரே அமைதி. ஒரே இருட்டு. அங்கங்கே அரண்மனை விளக்குகள் மரங்கள் செடி கொடிகளின் கனமான அடர்த்தியினிடையே மின்மினிகளாய் மினுக்கிக் கொண்டிருந்தன. தொடர்ந்து இரண்டு இராத்திரிகள் கண் விழிப்பு என்பதனால் அங்கங்கே நின்றபடியேயும் உட்கார்ந்தபடியேயும், தூண்களில், சுவர்களில் சாய்ந்தபடியேயும் தூங்கத் தொடங்கியிருந்தார்கள். முகப்பில் கார் வந்து நின்ற ஓசையைக் கேட்டு முதலில் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையும் அவரைத் தொடர்ந்து அரண்மனை ஊழியர்களும், முக்கியஸ்தர்களும், உறவினர்களும் ஒவ்வொருவராகக் கண்களைக் கசக்கிக் கொண்டு வந்து நின்றார்கள். அவர்களில் மிகச் சிலர் காலஞ்சென்ற பெரிய ராஜாவின் மேல் தங்களுக்கு இருந்த விசுவாசத்தைக் காட்டுவதற்காகச் சின்னராஜாவையும் தாய் மாமனையும் பார்த்தவுடன் சிறுபிள்ளைகளைப் போலக் கோவென்று கதறி அழத் தொடங்கியிருந்தனர். தனசேகரனுக்கும் மனசை ஏதேதோ உணர்ச்சிகள் தொட்டன. வருத்தின. ஆனால் அழுகை மட்டும் வரவில்லை. அம்மா இறந்த ஞாபகமும் அதை ஒட்டிய துயர ஞாபகங்களும் தான் மீண்டும் மனத்தில் மேலாக வந்து எழுந்து மிதந்தன. மாமா தங்கபாண்டியன் மகாராஜாவின் சடலத்தருகே இரண்டு நிமிஷம் நின்று பார்த்துவிட்டு, “இந்தாங்க மிஸ்டர் பெரிய கருப்பன் சேர்வை! இப்பிடி வாங்க, உங்ககிட்டத் தனியாகக் கொஞ்சம் பேசணும், ஏற்பாடெல்லாம் எப்படி? என்னென்ன நிலைமை? காலையிலே விடிஞ்சதும் நேரே மயானத்துக்குப் புறப்பட்டுட வேண்டியதுதானே? நாளைக்கு என்ன கிழமை? ராகு குளிகன் பார்த்து எடுக்கிற நேரத்தை முடிவு பண்ணியாச்சா?” என்று சுறுசுறுப்பாக மேலே நடக்க வேண்டிய காரியங்களை விசாரிக்கத் தொடங்கினார். சிறிது தொலைவு தனியே சென்றதும் அக்கம் பக்கத்தில் வேறு யாரும் நின்று கேட்டுக் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதி செய்தபின் குரலைத் தணித்துக் கொண்டு “அரண்மனைக் கஜானாவிலே ரொக்கமா எதுவும் இல்லீங்க. ‘அன்று மறுநாள்’ காரியத்துக்கே பணம் கிடையாது. நீங்க வந்ததும் உங்க கிட்டவும் சின்ன ராஜா கிட்டவும் ஒரு வார்த்தை கேட்டுக்கிட்டுத் தங்க நகைகள் எதையாவது கொண்டு போய் வச்சுப் பணம் பெற்றுக் கொள்ள அனுமதி வாங்கிச் செய்யலாம்னு இருந்தேன்” என்றார் பெரிய கருப்பன் சேர்வை. “அது அவசியமில்லே! என்னோட மெட்ராஸ் ஆபீஸ் ஆட்களை நானே டெலிபோன்லே சொல்லி மீனம்பாக்கம் ஏர்ப்போர்ட்டுக்கு ‘கேஷோட’ வரச் சொல்லியிருந்தேன். அவங்க வந்திருந்தாங்க. பணம் என்ன வேணுமோ எங்கிட்டக் கேளுங்க. நான் தரேன். செலவுலே ஒண்ணும் கஞ்சத்தனம் வேண்டாம். குறைவில்லாமே எல்லாம் நடக்கட்டும். பூமி தானம், கோதானம், சுவர்ணதானம் எதுவுமே விடாமச் செஞ்சுடுங்க. தனசேகரன் சின்னப் பையன். அவனுக்கு ரொம்ப நேரம் பசி தாங்காது. பகல் பன்னிரண்டு மணிக்குள்ளார வாச்சும் எல்லாம் முடிஞ்சிட்டா நல்லது.” “அதுக்குள்ளே முடிஞ்சிடும்னு நினைக்கிறேன். இந்தப் பொம்பிளைங்க தான், நாலு ராஜவீதி மட்டும் போதாது, நாலு ரதவீதியையும் சேர்த்து எட்டு வீதியும் சுத்தினப்புறம் தான் பிரேதத்தை மயானத்துக்குக் கொண்டு போகணும்னு கலாட்டா பண்றாங்க. பேரப்பிள்ளைங்கன்னு ஒரு பெரிய பட்டாளத்தைக் கூட்டியாந்து, இவங்க அத்தினி பேரும் நெய்ப்பந்தம் பிடிக்கணும்னு தொந்தரவு பண்றாங்க. நான் சொன்னாக் கேட்க மாட்டேங்கறாங்க...” “அவங்களை நான் பார்த்துக்கிறேன். நீங்க ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க. முதல்லே நாளை மத்தா நாளு அத்தினி பேரையும் அடிச்சுப் பத்தி வெளியிலே துரத்தி அரண்மனையை ‘டெட்டால்’ தெளிச்சு சுத்தப் படுத்தியாகணும், என்ன சொல்றீங்க...?” “அதைப் பெரிய மகாராஜா எப்பவோ செஞ்சிருக்கணுங்க. செஞ்சிருந்தார்னா இன்னிக்கி இந்த அரண்மனை கடன்பட்டு இப்பிடித் திவால் ஆகிற நிலைமைக்கு வந்திருக்காது. நாங்கள்ளாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம்... அவர் கேட்கலை” என்றார் சேர்வை. சேர்வையிடம் ரொக்கமாக அவர் கேட்ட தொகைக்கு ஒரு ரூபாய்களாகவும் இரண்டு, ஐந்து, பத்து, நூறு ரூபாய்களாகவும் சில்லறைக் காசுகளாகவும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டுத் தனசேகரனையும் உடனழைத்துக் கொண்டு அரண்மனையின் உட்பகுதிக்குச் சென்றார் தங்கபாண்டியன். அரண்மனை நகைகள் உள்ள கருவூல அறை, மகாராஜாவின் உடைகள் உள்ள அறை, கஜானா அறை, முக்கியமான தஸ்தாவேஜுகள் உள்ள ‘டாக்குமெண்ட்ஸ்’ ரூம், வெள்ளிப் பாத்திரங்கள், பாத்திரங்கள் எல்லாம் உள்ள ஸ்டோர் ரூம் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தன. லைப்ரரி, ஐம்பொன் சிலைகள், புராதன ஓவியங்கள், வாகனங்கள் எல்லாம் உள்ள கண்காட்சி சாலை மட்டும் சீல் வைக்காமல் சும்மா பூட்டப்பட்டிருந்தது. பெண்கள் பகுதியான அந்தப்புரத்திற்குள் அவர்கள் போகவில்லை. ஆனாலும் கண்விழித்து அவர்கள் அரண்மனைக்குள் வருவதை அந்தப்புரத்தில் ஏதோ ஒரு ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்ட யாரோ ஓர் இளையராணி தூங்கிக் கொண்டிருந்த அத்தனை பேரையும், ‘சின்னராஜாவும் அவரு தாய் மாமனும் வராங்க’ என்று பரபரப்புச் சேதி சொல்லி எழுப்பி விட்டு விட்டாள். ஒரு பெரிய பெண் கூட்டம் பல்வேறு வயதுகளில் குழந்தை குட்டிகளுடன் வந்து சூழ்ந்து கொண்டது. சிலர் மகாராஜா இறந்ததற்காக அழுதனர். இன்னும் சிலர் தங்கள் எதிர் காலம் என்ன ஆகுமோ என்று அழுதனர். அவ்வளவு பேரும் தன் தந்தையின் விதவைகளைப் போல் காட்டிக் கொள்ள முயன்றாலும் அவர்கள் மனம் அப்படி எதையும், யாரையும் இழந்து விட்டது போன்ற நிலைமையில் இல்லை என்பது தனசேகரனுக்குத் தெரிந்தது. தங்களை இளையராஜாவுக்குப் பிடிக்காது என்று அதில் பலருக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும் சித்திமுறை கொண்டாடித் தனசேகரனைக் கட்டி அழ வந்த சிலரை மாமா தங்கபாண்டியன் குறுக்கிட்டுத் தடுத்துவிட்டார். “அவன் இந்தக் காலத்துப் பையன்! இந்தக் கட்டியழறதெல்லாம் அவனுக்குப் பிடிக்காது. தெரியவும் தெரியாது. தயவு பண்ணி அவனை விட்டுடுங்க” என்று அந்தப் பெண் பிள்ளைக் கும்பலிலிருந்து அவனை விடுவித்து மீட்டுக் கொண்டு வந்தார் மாமா. “நல்ல வேளை மாமா! நீங்க கூட வந்ததாலே பிழைச்சேன்” என்றான் தனசேகரன். “சித்தியாவது ஒண்ணாவது? அதிலே பலபேருக்கு உனக்கு அக்கா தங்கை இருந்தாங்கன்னா அவங்களுக்கு ஆகியிருக்கிற வயசு கூட இருக்காது. சும்மா பாவலாப் பண்றாங்க. ரொம்ப ஆபத்தான கூட்டம் இது. அப்பா காரியம் முடிஞ்சதும் தலைக்கு ஏதோ ஆயிரம், இரண்டாயிரம் குடுத்தாலும் சரி இவர்களை வெளியே அனுப்பிச்சு வச்சிடனும். இல்லாட்டித் தாங்க முடியாது.” “அப்பா திவாலானதே இளையராணி இளையராணின்னு இப்படி ஒரு மந்தையை அரண்மனைக்குள்ளே சேர்த்ததாலே தான் மாமா.” “விட்டுத்தள்ளு தம்பீ! செத்துப் போனவங்க யாரானாலும் அவங்க தெய்வத்துக்குச் சமானம்பாங்க. நல்லவரோ கெட்டவரோ உங்கப்பா போயிட்டாரு. போன மனுஷனோட குறைகளைப் பத்திச் சொல்லிக்கிட்டே இருக்கிறதிலே அர்த்தமில்லே. இதை எல்லாம்பத்தி நீயும் நானும் நாட்கணக்கா, வாரக்கணக்கா, மாதக்கணக்கா, வருஷக்கணக்காகப் பேசி அலுத்தாச்சு. இனிமே நடக்க வேண்டியதைக் கவனிப்போம் வா. நடந்த கதைகளைப் பேசிக்கிறதாலே ஒரு சல்லிக்குக் கூட பிரயோசனமில்லை தம்பி!” அவர்கள் இருவரும் அரண்மனையிலிருந்து வெளியேறிக் ‘கஸ்ட் ஹவுஸ்’ முகப்பிற்கு வந்ததும் மின்னுகிற சில்க் ஜிப்பாவும் வெற்றிலைச் சிவப்பேறிய உதடுகளுமாக ஓர் இரட்டை நாடி மனிதர் பெரிய கும்பிடாகப் போட்டுக் கொண்டே எதிரே வந்தார். “இதோ எதிரே வர்ரானே, இவன் தான் டைரக்டர் கோமாளீஸ்வரன்! தெரியுமில்லே?” “தெரியும் மாமா! ஒரு தடவை பார்த்திருக்கேன்.” கோமளீஸ்வரன் அருகே வந்ததும் மகாராஜாவின் மறைவிற்காக அவர்கள் இருவரிடமும் துக்கம் கேட்டான். அவர்கள் எப்போது, எந்த விமானம் மூலம் சென்னை வந்து பீமநாதபுரத்தை அடைந்தார்கள் என்பதை விசாரித்தான். அப்புறம் சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு, “காரியங்கள்ளாம் ஆனதும், ‘அவங்க’ சின்ன ராஜாவையும் உங்களையும் ரெண்டு நிமிஷம் தனியே பார்த்துப் பேசணும்னாங்க” என்றான். உடனே மாமாவுக்கு முகம் கடுகடுப்பாக மாறியது. “அவங்கன்னா யாரு? எனக்குப் புரியலியே?” “அதான் மகாராஜாவோட ‘இவங்க’, அடையாறிலே இருக்காங்களே...” “எனக்கு புரியிறாப்ல சொல்லித் தொலைப்பா.” “ஜெயநளினி அம்மா வந்திருக்காங்க சார்! அவங்க தான் காரியங்கள் முடிஞ்சதும் ரெண்டு நிமிஷம் உங்களைப் பார்க்கணும்னாங்க.” “எனக்கு அப்பிடி யாரையும் தெரியாதேப்பா” என்றார் மாமா தங்கபாண்டியன். |