1 பீமநாதபுரம் நகரம் என்று சொல்லிவிட முடிந்த அதிக வசதிகள் உள்ளதும் அல்ல; வசதிகளே இல்லாத குக்கிராமமும் அல்ல; சமஸ்தானமாக இருந்த காலத்தில் அந்த ஊருக்குத் தனி அடையாளங்களும் தனிச் சிறப்புகளும் இருந்தன. நவராத்திரி விழா, புலவர்களின் கவி மழைகள், இசை, நடனம், சதிர், பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, வாண வேடிக்கை எல்லாம் இருந்தன. இவை ஆண்டுக்கு ஆண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தன. அரண்மனையையும், சமஸ்தானத்தையும் மையமாகக் கொண்டிருந்த ஊரின் முக்கியத்துவங்கள் அங்கிருந்து விலகி இடம் மாறின. ஊரின் முக்கால்வாசி இடம் அரண்மனை; மலைப் பாம்பு போல் வளைந்து கிடந்த கற்கோட்டைக்குள் காடாய் அடர்ந்த நந்தவனங்கள், பூங்காக்கள், மரக் கூட்டங்களுக்குள்ளே நடுவாக அரண்மனை இருந்தது. ஊரின் வளர்ச்சி, தளர்ச்சி, கடைவீதி வியாபாரம், போக்குவரத்து எல்லாம் ஒரு காலத்தில் அரண்மனையைப் பொறுத்துத்தான் இருந்தன. இன்று அது மாறிவிட்டது. வேறு சூழ்நிலைகளும் வேறு முக்கியத்துவங்களும் ஊருக்குள்ளே உருவாகிவிட்டன. பீமநாதபுரம் சமஸ்தானத்தின் ராஜமான்யமாகக் கிடைத்து வந்த ஆண்டுக்கு ஏழு லட்சத்து எண்பதாயிரம் ரூபாயும், பின்வழித் தோன்றல்களுக்கு என்று நிர்ணயிக்கப்பட்ட ஆறு லட்சத்து இருபதினாயிரம் ரூபாய்களும் நிறுத்தப்பட்ட பின் அதே கவலையில் 1972-ம் வருடம் டிசம்பர் மாதம் பனி அதிகமாக இருந்த ஒரு பின்னிரவில் மாரடைப்பினால் காலமாகிவிட்டார் அதன் மகாராஜாவாக இருந்த பீமநாத ராஜ சேகர பூபதி. அதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் பெரிய மகாராஜா பீமநாத ராஜ சேகர பூபதியுடன் ஏதோ ஒரு மனஸ்தாபம் ஏற்பட்டுத் தன் தாய்வழி மாமன் ஒருவருக்கு மலேசியாவில் இருந்த ரப்பர்த் தோட்டத்துக்கு மானேஜராகப் போய்விட்ட ராஜாவின் ஒரே மூத்த மகன் திரும்பி வருவதற்காக அந்திமக் கிரியைகள் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மூத்தமகன் விமானத்தில் புறப்பட்டு வருவதாகத் தகவலும் வந்துவிட்டது. தனசேகரன் வருவானா மாட்டானா என்று கூட அந்த ராஜ குடும்பத்தில் ஒரு சர்ச்சை இருந்தது. அவன் வருவதாகக் கேபிள் கிடைத்ததும் தான் அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவன் வருவது பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். “ரெண்டு வருசமா எட்டிப் பார்க்காம இருந்த புள்ளையாண்டானுக்கு அப்பன் இறந்ததும் சொத்துச் சுகம், வாரிசு உரிமை எல்லாம் என்ன ஆகுமோன்னு பயம் வந்திருக்கும். அதான் ப்ளேன்ல பறந்து ஓடியாரான்.” “சே! சே! அப்பிடிச் சொல்லிடாதீங்க. சொத்து சுகத்தை எல்லாம் தனசேகரன் என்னிக்குமே இலட்சியம் பண்ணினதில்லே. அப்படி எல்லாம் இலட்சியம் பண்ணியிருந்தா அவன் மலேசியாவுக்கே போயிருக்க வேண்டியதில்லியே?” “எப்படியோ? இப்போ அவன் புறப்பட்டு வந்தால் எல்லாம் தானே தெரியுது? பெரிய ராஜா போயாச்சு. இனிமே எப்படியும் அண்ணன் தம்பி தங்கைகளுக்குள்ளே சொத்துச் சுகம் பற்றின தகராறுகளோ பேச்சு வார்த்தைகளோ ஏற்படாம இருக்கிறது சாத்தியமில்லே! தகராறு எப்படியும் வந்துதான் தீரும்.” “அண்ணன் தம்பி தங்கைங்கிற பேச்சுக்கே இடமில்லே. முறையான வாரிசு தனசேகரன் ஒருத்தன் தான். மற்றவங்கள்ளாம் இளையராணிகளுக்குப் பிறந்தவங்கதானே?”
இப்படி எல்லாம் ஊரில் பலவிதமாகப் பேச்சு எழுந்தது. சமஸ்தானத்து உறவு முறைகளின்படி அண்ணன் தம்பிகள் அக்கா தங்கைகள் என்ற பெயரில் வெளியூர்களில் இருந்த எல்லாருக்கும் தந்திகள் பறந்தன. காலஞ்சென்ற பீமநாத ராஜ சேகர பூபதிக்கு ஏராளமான வாரிசுகள். மனைவியைத் தவிரவும் - அதாவது முறைப்படி ராணி என்று அரண்மனை வேலைக்காரர்கள் அழைத்து மரியாதை செய்து வந்த தர்மபத்தினியைத் தவிரவும் அந்தப்புரத்துக் காமக் கிழத்தியர் வேறு பலர் இருந்தனர். அவர்களுடைய குழந்தைகளும் மகாராஜாவின் வாரிசுகளாகவே கருதப்பட்டனர். இரண்டு வருஷங்களுக்கு முன் பெரிய ராஜாவின் போக்குகள் பிடிக்காமல் அவரை திருத்தவும் முடியாமல் தான் தனசேகரனே மலேசியாவுக்குப் புறப்பட்டுப் போயிருந்தான். அவன் மலேசியா புறப்படுவதற்கு ஆறு மாதத்திற்கு முன்புதான் அவன் அன்னையும் பட்டத்து ராணியுமான வடிவுடைய நாச்சியாரம்மாள் காலமாகியிருந்தாள். தனசேகரனுக்குத் தந்தையிடம் ஒட்டுதலே இல்லாததோடு தாயிடம் தான் நிறைய ஒட்டுதலும் பாசமும் இருந்தன. தாய் இறந்த சில மாதங்களுக்குள் தந்தை செய்த சில காரியங்கள் அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. தாயும் தனசேகரனும் தான் பெரிய மகாராஜாவைத் தவறான வழிகளில் செல்லாமல் இழுத்துப் பிடித்து நிறுத்துகிற தடுப்புச் சக்தியாக இருந்தார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் தான் அவர் கொஞ்சம் பயப்பட்டார். மற்றவர்கள் எல்லாருமே அவரிடம் எதிரே நின்று பேசுவதற்கே அஞ்சுகிறவர்களாக இருந்தார்கள். தாய் போனதும் தனசேகரனுக்கும் மகாராஜாவுக்கும் இடையே இருந்த இணைப்புச் சக்தி போய்விட்டது. மகாராஜா தான்தோன்றித்தனமாக நடக்க ஆரம்பித்து விட்டார்.
தனசேகரனின் அன்னையும் பீமநாதபுரம் சமஸ்தானத்தின் மூத்த ராணியுமான வடிவுடைய நாச்சியாரம்மாள் காலமானவுடன் திடீரென்று ஏற்பட்ட சபலங்களாலும், சகவாச தோஷத்தினாலும் கேட்பார் பேச்சை கேட்டுக் கொண்டும் சினிமாத் தயாரிப்பில் இறங்கினார் மகாராஜா. அதற்காக ‘பீமா புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் சென்னையில் ஒரு சினிமாக் கம்பெனியும் திறக்கப்பட்டது. சினிமாக் கம்பெனி திறக்கப்பட்டதையொட்டிச் சில நடிகைகளோடு அவருக்கு அதிகத் தொடர்பு ஏற்பட்டது. அவர்களில் சில அழகான இளம் நடிகைகள் ‘வீக் என்ட்’ எண்டர்டெயின்மெண்டுக்காகப் பீமநாதபுரம் அரண்மனைக்கே பெரிய பெரிய ‘சவர்லே’ இம்பாலா கார்களில் தேடி வரத் தொடங்கினார்கள். ஜெயநளினி என்ற ஒரு புதிய கதாநாயகிக்கு லட்ச ரூபாய் செலவழித்து அடையாற்றில் ஒரு பங்களா வாங்கிக் கொடுத்தார் மகாராஜா. இந்த மாதிரிப் போக்கில் அதிருப்தியும் கசப்பும் அடைந்த பின்பே தாய்வழி மாமன் ஒருவருக்கு மலேசிய நாட்டில் ஈப்போவில் வியாபாரமும், பக்கத்தில் ரப்பர் எஸ்டேட்டுகளும் இருக்கவே - அவரோடு மலேசியா புறப்பட்டுவிட்டான். மகாராஜாவின் மூத்த மகனும் இளையராஜாப் பட்டம் பெற வேண்டியவனுமான தனசேகர பாண்டிய பூபதி என்ற முழுப் பெயரையுடைய தனசேகரன். சமஸ்தானத்துக்கு ‘ப்ரீவிபர்ஸ்’ என்னும் ராஜமான்யத் தொகை வருவது நிற்கிற வரை பெரிய மகாராஜா, கூத்து, குடி, ரேஸ், சினிமாத் தயாரிப்பு என்ற பெயரில் நடிகைகளோடு லீலை எல்லாவற்றையும் தாராளமாக நடத்த முடிந்தது. ராஜமான்யம் நின்றதுமே அவரது இதயமும் நின்று போய்விட்டது. விவரம் தெரியாத காரணத்தால் சினிமாத் தயாரிப்பில் அவரை நிறைய ஏமாற்றிவிட்டார்கள். அவரது படங்கள் வெற்றியோ வசூலோ ஆகவில்லை. அவ்வளவேன்? சில படங்கள் தயாராகவே இல்லை. பணத்தை மட்டும் லட்ச லட்சமாக முழுங்கின. நிறைய நஷ்டப்பட்டும் நடிகைகள் மேலுள்ள நைப்பாசையால் அவர் சாகிறவரை சினிமாவை விடவில்லை. சினிமாக் கவர்ச்சிகளும் சாகடிக்காமல் அவரை விட்டு விலகிப் போய்விடவில்லை. சமஸ்தானங்கள் ஒழிக்கப்பட்டு ராஜமான்யம் வரத் தொடங்கியதும், இந்திய மகா ராஜாக்களில் பலர் ரேஸ் குதிரைகள் வளர்ப்பது, சினிமா எடுப்பது, ஆடம்பர ஹோட்டல்கள் நடத்துவது, காபி எஸ்டேட், டீ எஸ்டேட், டெக்ஸ்டைல் மில் எனப் பலவிதமான தொழில்களில் இறங்கினர். அவர்களில் பலர் கடந்த கால டாம்பீக உணர்வுகளை விட முடியாமல் சிரமப்பட்டனர். பழைய பழகிய ஆடம்பரங்களுக்கும், புதிய நிர்பந்தமான பணப்பற்றாக்குறைக்கும் ஒரு போராட்டமே அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் ஆரம்பமாகியிருந்தது. அந்தப் போராட்டத்தில் தோற்றுப் போய்த்தான் மகாராஜா பீமநாத ராஜ சேகர பூபதி மாண்டு போயிருந்தார். பீமநாதபுரம் சமஸ்தானமாக இருந்தவரை திவான் தனி இராணுவம், தனிப் போலீஸ், தனிக்கொடி, தனி ராஜ மரியாதைகள் எல்லாம் இருந்தன. கஜானாவில் தங்கமும் வைரமும் குவிந்து கிடந்தன. கடைசி திவானாயிருந்து ஓய்வு பெற்ற சர்.டி.ராகவாச்சாரியர் காலம் வரை அரண்மனையும் சமஸ்தானமும் செல்வச் செழிப்பில் தான் மிதந்தன. சமஸ்தான அந்தஸ்து ஒழிவதற்கு முந்திய கடைசி நவராத்திரி வித்வத் சதஸின் போது கூட மன்னரை வாழ்த்திய தமிழ்ப் புலவர்களுக்கும், சங்கீதக் கச்சேரி செய்த இசை வித்வான்களுக்கும், நாட்டியமாடிய நடனக்காரிகளுக்கும் தங்கச் சவரன்களாகத்தான் சன்மானங்கள் எண்ணி வழங்கப்பட்டன. பட்டுப் பீதாம்பரங்களும் விலையுயர்ந்த காஷ்மீர் சால்வைகளும் போர்த்தப்பட்டன. சமஸ்தான திவான் சர்.டி.ராகவாச்சாரி ஓய்வு பெறுகிற நேரமும் சமஸ்தானங்கள் அந்தஸ்தை இழக்கிற காலமும் சரியாக நெருங்கி வந்ததினால் ‘மாதம் மூவாயிரம் ரூபாய் சம்பளத்தில் இனிமேல் நமக்கு ஒரு திவான் அவசியமில்லை’ என்ற முடிவுடன் திவானைக் கௌரவமாக ஓய்வு பெறச் செய்து ஒரு பெரிய விடையளிப்பு விருந்தும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார் பீமநாத ராஜ சேகர பூபதி. ராஜமான்யமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சில லட்ச ரூபாய்களுக்குள்ளேயே இனிமேல் சமஸ்தானச் செலவுகளையும் சொந்தச் செலவுகளையும், குறுக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. திவான் இல்லை என்றாலும் திடீர் என்று அவர் கவனித்து வந்த ஏராளமான வேலைகளையும், பொறுப்புக்களையும், யாராவது கவனித்தே ஆக வேண்டியிருந்தது. காரியஸ்தர் என்ற புதுப் பெயரில் ஒரு பழைய காலத்து வக்கீலை ராஜா நியமித்திருந்தார். அரண்மனைக் காரியஸ்தர் என்ற பெயரை ஏற்று உத்தியோகம் பார்த்து வந்த அவருக்குக் கீழே இரண்டு கிளார்க், ஒரு டைபிஸ்ட், ஓர் அகௌண்ட்டெண்ட், ஒரு கேஷியர், ஒரு அட்டெண்டர், ஒரு மெஸஞ்சர் ஆகிய ஆறு ஏழு பேர் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. பெரிய மகாராஜா மாரடைப்பால் காலமானவுடனே அப்போது மலேசியாவில் ஈப்போவில் இருந்த அவருடைய மூத்த குமாரன் தனசேகரனுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியதே அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைதான்! தனசேகரன் உடனே வருவதாகத் தெரிவித்ததுடன் காரியஸ்தரைப் பீமநாதபுரத்திலிருந்து காரோடு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரச் சொல்லியும் வேண்டிக் கொண்டிருந்தான். தனசேகரன் வருவதோடு அவனுடன் காலஞ்சென்ற மகாராஜாவின் மைத்துனரும் தனசேகரனின் மாமாவான டத்தோ தங்கப் பாண்டியனும் மலேயாவிலிருந்து கூடவே புறப்பட்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேரே கோலாலம்பூரிலிருந்து சென்னை வருகிற ‘பிளைட்டில்’ இருவருக்கும் இடம் கிடைக்காததால் ஆஸ்திரேலியாவிலிருந்து கோலாலம்பூர் வந்து அங்கிருந்து கொழும்பு செல்லுகிற ஒரு வெளிநாட்டு விமானத்தில் இடம் பிடித்துக் கொழும்பிலிருந்து சென்னை வந்து விடுவதாகத் தனசேகரனே மறுபடி டெலிபோனில் கூப்பிட்டு அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையிடம் வருகையை உறுதிபடுத்திச் சொல்லி விட்டான். அந்த வருகைச் செய்தி பீமநாதபுரம் நகரிலும் முழுமையாகப் பரவிவிட்டது. பீமநாதபுரம் அரண்மனைகளின் முகப்பிலேயே இருந்த ராஜராகேஸ்வரி விலாசஹாலில் காலஞ்சென்ற மகாராஜாவின் உடல் ஐஸ்கட்டிகள் அடுக்கப்பட்டு வாசனைத் தைலங்கள் தடவப்பட்டுப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. நகரில் பரவலாகத் துக்க தினம் அநுஷ்டிக்கப்பட்டது. கடைவீதிகளில் பெரும்பாலான கடைகள் துக்கத்தைக் காட்டும் அடையாள நிகழ்ச்சியாக மூடப்பட்டு விட்டன. அரசியல் கட்சிகள் என்ற பெயரில் எத்தனை கட்சிகளுக்குப் பீமநாதபுரம் தெருக்களிலும் நாற்சந்திகளிலும், முச்சந்திகளிலும் கொடிக் கம்பங்கள் இருந்தனவோ அத்தனை கொடிக் கம்பங்களிலும் கொடிகள் பாதி அளவு கீழே இறங்கிப் பறந்தன. பொது நிறுவனங்களுக்கும் கல்விக் கூடங்களுக்கும் மறுநாள் காலையே விடுமுறை விடப்பட்டன. மகாராஜாவின் சடலத்தைக் கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்கு நகரிலிருந்தும் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் மக்கள் அரண்மனை முகப்பில் கூடி விட்டனர். எவ்வளவு தான் கெட்ட பெயர் எடுத்திருந்தாலும் எவ்வளவுதான் தாறுமாறாக வாழ்ந்திருந்தாலும் ஜனங்களுக்கு ராஜா என்ற பிரமையும், மயக்கமும் இருக்கத்தான் செய்தன. முறையாக வாழ்ந்தவர்களைப் பார்ப்பதை விடத் தாறுமாறாக வாழ்ந்தவர்களைப் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. கடைசிக் காலத்தில் அவர் சினிமாத் தயாரிப்பாளராக இருந்தார் என்ற தொடர்பினாலும் நிறைய நடிகைகளோடு அவருக்குத் தொடர்பிருந்ததனாலும் மரணம் நேர்ந்த இரவுக்கு மறுதினம் காலையிலேயே இரவோடிரவாகச் சென்னையிலிருந்தே காரில் புறப்பட்டும் திருச்சி வரை ரயிலில் வந்து பின்பு காரில் சவாரி செய்தும் பல நடிகைகளும், நடிகர்களும், தயாரிப்பாளர்களும் அஞ்சலி செலுத்துவதற்குப் பீமநாதபுரம் வந்து விட்டார்கள். அந்த மாதிரி வந்திருந்த சினிமா நட்சத்திரங்களைப் பார்க்கவும் வேறு அரண்மனை முகப்பில் மக்கள் கூட்டம் அதிகமாகி விட்டது. நட்சத்திரங்கள் ஒரு மகாராஜாவின் பிரேதத்தைப் பார்த்துத் தங்கள் கடைசி மரியாதையைச் செலுத்திவிட்டுப் போக வந்திருந்தார்கள். மக்களோ நட்சத்திரங்களுக்குத் தங்களுடைய மரியாதையைச் செலுத்தத் திரளாகக் கூடிவிட்டனர். யாருக்குக் காலஞ்சென்ற மகாராஜா லட்ச ரூபா செலவில் சென்னை அடையாற்றில் ஒரு பங்களா வாங்கிக் கொடுத்ததாகப் பரவலாக ஒரு வதந்தி நாடு முழுவதும் பரவியிருந்ததோ அந்தக் கட்டழகு நடிகை ஜெயநளினி ஒரு முழுக்கறுப்பு நிறப் பட்டுப்புடவையை அணிந்து துக்கம் கொண்டாடுகிற பாவனையில் வந்த போது கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பார்த்ததாலும் பரபரப்பும் அதிகமாகிவிட்டன. “மனுஷன் மண்டையைப் போடறதுக்கு முன்னே அவ்வளவு பணத்தையும் இவ காலடியிலே கொண்டு போய்த்தான் குவிச்சாரு!” “அதுக்காவது விசுவாசம் காண்பிக்க வேண்டாமா? அதுனாலேதான் கறுப்புப் புடவை கட்டிக்கிட்டுத் துக்கம் கொண்டாட வந்திருக்கா இவ. வாங்கின காசுக்காவது நன்றியிருக்கணுமில்லியா?” “பெரிய மகாராணி போனப்புறமே அவரு தாறுமாறா ஆயிட்டாரு. அப்புறம் கண்ட்ரோல் பண்ண ஆளு யாரும் இல்லே. அதுக்கேத்தாப்ல மூத்த புள்ளையாண்டானும் கோபிச்சுகிட்டு மலேசியாவுக்குப் போயாச்சு.” “ஏதோ மனுஷன் போய்ச் சேர்ந்தாச்சு! சமஸ்தானமா இருக்கறப்பவே போயிருந்தாலும் ராஜ மரியாதை கிடைச்சிருக்கும். இப்போ அதுவும் இல்லே. வெறும் சினிமாக்காரங்க மட்டும் தேடி வர்ற மரியாதைதான்.” இப்படிப் பலவிதமான உரையாடல்களை அரண்மனை முகப்பில் கூடியிருந்த பொதுமக்களின் கூட்டத்திடையே சர்வசாதாரணமாகக் கேட்க முடிந்தது. மகாராஜா காலமான மறுநாள் இரவு ஏழே முக்கால் மணியளவில் தான் தனசேகரனும் அவன் மாமாவும் சென்னை வரமுடியும் என்றிருந்ததால் அடுத்த நாள் இரவையும் விட்டு மூன்றாம் நாள் அதிகாலையில் தான் காலஞ்சென்ற ராஜாவின் இறுதிச் சடங்குகளைச் செய்வதென்று முடிவாகி இருந்தது. பீமநாதபுரம் நகரின் மேற்குக் கோடியில் அரச குடும்பத்துக்குச் சொந்தமான தனி மயானம் ஒன்று அடர்ந்த தோட்டமாகக் காடு மண்டியிருந்தது. சமஸ்தானத்தின் வம்ச பரம்பரை முழுவதும் அந்த மயானத்தில் தான் இறுதி யாத்திரையை முடித்துச் சாம்பலாகியிருந்தது. அங்கே தான் அரண்மனை வெட்டியான்கள் காட்டைச் செதுக்கி இறந்து போன மகாராஜாவின் சடலத்துக்கு எரியூட்ட இறுதியிடம் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். சமஸ்தானத்துக்குச் சொந்தமான காட்டிலிருந்தே சந்தனக் கட்டைகள் கொண்டு வந்து அடுக்கப்பட்டிருந்தன. மகாராஜாவின் இறுதி யாத்திரையில் சடலத்துக்குப் பின்னால் தூவிக் கொண்டு வருவதற்காக ஒரு லாரி நிறைய ரோஜாப் பூக்களும், மல்லிகைப் பூக்களும் வேறு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. இறுதி யாத்திரையை எந்தெந்த வீதிகள் வழியாக வைத்துக் கொள்வது என்பது பற்றிப் போலீஸ் அதிகாரிகளுக்கு ரூட் விவரம் சொல்லுவதற்கு முன்னால் அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கும் ராஜ குடும்பத்தினருக்கும் அது பற்றிப் பல்வேறு அபிப்பிராய பேதங்கள் இருந்தன. ‘நாலு ரத வீதிகளிலும் நாலு ராஜ வீதிகளிலும் சுற்றி வந்து அப்புறம் மயானத்திற்கான சாலையில் போக வேண்டும்’ என்பதாக ராஜ குடும்பத்தினர் அபிப்பிராயப்பட்டனர். மேல ராஜ வீதி, கீழ ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, அதை அடுத்து அதே போல் நான்கு ரத வீதிகள் ஆகிய எட்டு வீதிகளுக்கு ஒரே சமயத்தில் பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்து தருவது உள்ளூர்ப் போலீஸ்காரர்கள் தங்களுக்குச் சிரமமாக இருக்குமென்று சொன்னார்கள். நான்கு ராஜ வீதிகள் மட்டும் போதும் என்று போலீஸ் அதிகாரிகள் யோசனை சொன்னார்கள். அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையும் அந்த யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டார். ராஜ குடும்பத்தினர் மட்டும் எட்டு வீதிகளையும் கண்டிப்பாக வற்புறுத்தினார்கள். மறுநாள் பகல் பதினொரு மணிக்கே அரண்மனைக்குச் சொந்தமான ‘சவர்லே’ கார் ஒன்று சென்னை விமான நிலையம் சென்று மலேசியாவிலிருந்து இலங்கை வழியாக வரப்போகும் தனசேகரனையும் அவன் மாமா டத்தோ தங்கப் பாண்டியனையும் அழைத்து வரப் புறப்பட்டது. முதலில் பெரிய கருப்பன் சேர்வையே அந்தக் காரில் சென்னை போய் விமான நிலையத்திலிருந்து அவர்களை அழைத்து வருவதாக இருந்தார். ஆனால் அரண்மனைக் காரியஸ்தர் என்ற முறையில் மகாராஜாவின் இறுதிக் கிரியைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கு அவர் பீமநாதபுரத்தில் இருந்தே ஆகவேண்டும் என்று தோன்றியதால் காரை மட்டும் டிரைவரோடு குறித்த நேரத்திற்கு ஒரு மணிக்காலம் முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும்படி அனுப்பி வைத்தார். கார் புறப்பட்டுப் போனதுமே அரண்மனையில் ஒரு முக்கியமான பிரச்னை காரியஸ்தரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. காலஞ்சென்ற பீமநாத ராஜசேகர பூபதிக்கு முறைப்படி பட்டத்து ராணியாயிருந்த வடிவுடைய நாச்சியாரம்மாளுக்குத் தான் தனசேகரன் ஒரே பிள்ளையே தவிர அந்தப்புரப் பெண்களான இளைய ராணிகள் மூலம் நிறையப் பிள்ளைகள் பெண்கள் பிறந்து அவர்களில் சிலருக்குத் திருமணமாகிப் பெரிய மகா ராஜாவுக்கு ஏதோ ஒரு வகையில் பேரன் பேத்திகள் கூட இருந்தனர். அப்படி ஏற்பட்ட பேரன்மார்களில் சிலர் மகாராஜாவின் சடலத்தருகே நெய்ப்பந்தம் பிடிக்க வேண்டும் என்றார்கள். காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கு இந்த நெய்ப்பந்தப் பிரச்னையில் சில தர்மசங்கடங்கள் ஏற்பட்டன. அவர் காரியஸ்தராகப் பதவி ஏற்ற பின் அந்த அரண்மனையில் ஏற்பட்ட முதல் பெரிய சாவு இதுதான். அதனால் பல விஷயங்களை எப்படிச் செய்வது என்பதில் அவருக்கு முன் அனுபவம் எதுவும் கிடையாது. நெய்ப்பந்த விஷயம் பின்னால் சொத்து வகையில் ஏதாவது தகராறுகளைக் கிளப்பிவிடுமோ என்று அவர் பயந்தார். தனசேகரனும் அவனுடைய தாய்வழி மாமாவும் வந்த பிறகு அவர்களைக் கேட்டுக் கொண்ட பின் நெய்ப்பந்த விஷயம் பற்றி முடிவு சொல்லலாமா இப்போதே சொல்லலாமா என்று அவர் தயங்கினார். ஏனென்றால் இறுதிக் கிரியைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் மகாராஜாவின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுவதிலும் தொடர்பு இருந்தது. ‘என் பேர நெய்ப்பந்தம் பிடித்தான். அதனால் அவனுக்கு இன்ன சொத்து சேர்ந்தாக வேண்டும்’ என்று பின்னால் ஒவ்வோர் இளைய ராணியும் இதைச் சுட்டிக் காட்டி உரிமை கொண்டாட வந்துவிடக் கூடாதே என்று பயமாக இருந்தது பெரிய கருப்பன் சேர்வைக்கு. அதனால் தானே நெய்ப் பந்தத்தை மறுத்ததாக இருக்கக் கூடாதென்று அதற்குப் போலீஸ் அதிகாரிகளின் உதவியை நாடினார் அவர். “நீங்கள் முதல்லே இறுதி ஊர்வலத்துக்கு எட்டு வீதி கிடையாது. நாலு ராஜ வீதி மட்டும்தான்னு முடிவு பண்ணுங்க. அப்புறம் நெய்ப்பந்த விஷயத்தைக் கவனிக்கலாம்” என்றார் அதிகார். போலீஸ் அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்தி, “எட்டு ராஜவீதி கிடையாது, நாலு ராஜ வீதி தான். நெய்ப்பந்தத்துக்கு அனுமதி இல்லை” என்று இரண்டையும் தடுத்து விட்டார் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை. மகாராஜாவின் அந்தரங்க அறைகள், இரும்புப் பெட்டிகள் எல்லாவற்றையும் பூட்டி உடனே ‘சீல்’ வைக்க வேண்டிய அவசரமும் அவசியமும் வேறு அப்போது ஏற்பட்டது. இளையராணிகள் என்ற பெயரில் அரண்மனை அந்தப்புரத்தில் அடைந்து கிடந்த பல பெண்கள் காலஞ்சென்ற மகாராஜாவின் அறைகளில் புகுந்து அவரவர்களுக்கு அகப்பட்டதைச் சுருட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகக் காரியஸ்தருக்குத் தகவல் கிடைத்த போது பிற்பகல் இரண்டு மணி. எப்படிப் போய் யாரைக் கண்டிப்பது, யாரைத் தடுப்பது என்று முதலில் அவருக்குத் தயக்கமாக இருந்தது. எல்லாமே கொள்ளை போய்விட்டால் அப்புறம் தனசேகரனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் தான் பதில் சொல்லியாக வேண்டியிருக்குமோ என்ற கவலையும், பயமும் வேறு பிடித்தன. போலீஸ் அதிகாரிகளின் உதவியோடு மகாராஜாவின் தனி அறைகள், பீரோக்கள், இரும்புப் பெட்டிகள் இருந்த பகுதிகளைப் பூட்டி சீல் வைத்தார் காரியஸ்தர். மகாராஜா அலங்கரித்துக் கொள்ளும் அறையிலும் பாத்ரூமிலும் இருந்து பல கைக்கடிகாரங்கள், ஐந்தாறு மோதிரங்கள், அதற்குள் களவு போய் விட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது. மகாராஜாவின் பெர்ஸனல் கலெக்ஷன்ஸ் என்ற வகையில் பலரக ரிஸ்ட் வாட்சுகள், அலாரம், டைம்பீசுகள், காமிராக்கள், டேப்ரெகார்டர்கள், காஸெட்டுகள் எல்லாம் இருந்தன. மோதிரங்களையும், செயின்களையும் குளியலறையில் கழற்றி வைத்துவிட்டு அதை ஒட்டியிருந்த படுக்கை அறையினுள்ளே தான் திடீரென்று அவர் மாரடைப்பில் காலமானார். அவர் காலமான அதிர்ச்சியிலிருந்து மீண்டு எச்சரிக்கை உணர்வோடு உடைமைகளைப் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யுமுன் அரண்மனைக்குள்ளேயே திருடர்கள் திருடிகள் உருவாகி அவரவர்களால் முடிந்த பொருள்களைத் திருடி ஒளித்து விட்டனர். ராஜமான்யம் நிறுத்தப்பட்ட சில மாதங்களில் அந்த அரண்மனையில் ஏற்பட்ட பணக் கஷ்டம் சொல்லி மாளாது. அந்தப் பணக் கஷ்டத்தில் மகாராஜாவே சில வேளைகளில் தம்முடைய பொருள்களையே யாருக்கும் தெரியாமல் ஒளிவு மறைவாக எடுத்துச் சென்று விற்றுப் பணம் பண்ண நேர்ந்திருக்கிறது. இளைய ராணிகள், அவர்களுடைய புதல்வர்கள், மகாராஜாவின் அந்தரங்க ஊழியர்கள் எல்லாருமே அவரவர்கள் பங்குக்கு அரண்மனைப் பித்தளைப் பாத்திரம் முதல் விறகுக் கட்டை வரை பலவற்றை இரகசியமாக விற்றுப் பணம் தேடிக் கொள்வது என்பது வழக்கமாகி இருந்தது. பெண்கள் ஃபேஸ் பவுடரும், ஷாம்புவும் வாசனைச் சோப்பும் செண்ட்டு ஸ்நோவும், ஹேர் ஆயிலும் வாங்கப் பணம் கிடைக்காமல், டைனிங் டேபிள் சில்வர் வெஸல்ஸ் ஸெட்டுகளிலிருந்து வெள்ளித் தட்டு ஸ்பூன்கள், டம்ளர்கள் என்பது வரை வேலைக்காரிகள் மூலம் உள்ளூர் வெள்ளிக் கடைகளுக்குக் கொடுத்தனுப்பி விற்பது ஓர் இரகசிய வழக்கமாக ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி இருந்தது. சட்டப்படி இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டிய அரண்மனைக் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்குத் தர்மசங்கடமாக இருந்தது. பொருள்களைத் திருடுகிறவர்கள், ஒளித்து வைக்கிறவர்கள், வெளியே இருந்து வந்ததால் போலீஸில் பிடித்துக் கொடுத்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாம். உள்ளேயே இருக்கிற இரகசியத் திருடர்களை என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. இந்தப் பிரச்சனையைக் கையாளுவதில் அரண்மனையின் கௌரவம் வேறு சம்பந்தப்பட்டிருந்தது. விஷயத்தைப் பகிரங்கமாக்கி எல்லாரிடமும் புகார் செய்தால் அரண்மனையின் கௌரவம் மரியாதை உறவுமுறை எல்லாம் கெட்டுப் போய்விடும். ஒன்றும் செய்யாமலிருந்தாலோ உள்ளே இருந்தவர்களாலேயே தொடர்ந்தும் திட்டமிட்டும் நடத்தப்பட்ட சில்லறைத் திருட்டுக்களால் பொருள்கள் ஒவ்வொன்றாகப் பறிபோய்விடும் போலிருந்தது. அரண்மனைக்குள்ளே இருந்த ராஜகுடும்பத்தினரிடமும், அந்தரங்க விசுவாச ஊழியர்களிடமும் இதைப் பற்றிக் கூப்பிட்டுப் பேசவும் முடியாமல் விசாரிக்கவும் முடியாமல் பெரியகருப்பன் சேர்வையின் தாட்சண்ய சுபாவம் வேறு அவரைத் தடுத்தது. வேறு எந்த நாளிலும் எந்தச் சமயத்திலும் திருட்டுப் போனதை விடப் பெரிய மகாராஜா இறந்த சில மணி நேரங்களில் காரியஸ்தர் உஷாராவதற்குள்ளே பல திருட்டுக்கள் அரண்மனையின் பல பகுதிகளில் நடந்து விட்டன. இதைத் தடுக்கப் போலீஸ் வருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமை ஏற்பட்ட பின்னரே போலீஸாரை உள்ளே கூப்பிட்டு அவர்கள் உதவியினால் முக்கிய அறைகளைப் பூட்டி ‘சீல்’ வைக்க நேர்ந்தது. தனசேகரனும், அவன் மாமாவும் வந்து சேர்ந்து இறந்த மகாராஜாவின் காரியங்கள் எல்லாம் முடிந்ததும் “இந்தா! உன் சொத்து. இனிமேல் இவற்றை நீதான் கவனித்துக் கொள்ள வேண்டும். எனக்கு வயசாச்சு. என்னாலே முடியலை. தவிரவும் ராஜமானியமும் நின்னு போனப்புறம் அரண்மனைச் செலவுகள் மிகவும் சிரம ஜீவனமாகப் போச்சு. காரியஸ்தன்னு என்னை மாதிரி ஒருத்தருக்கு மாதச் சம்பளம் கொடுக்கிறது இன்னிக்கி இந்த அரண்மனை கஜானா இருக்கிற சிரமதசையிலே இனிமே சாத்தியமில்லே. நான் விலகிக் கொள்கிறேன்” என்று கௌரவமாகச் சொல்லிவிட்டே விலகிக் கொள்ளலாமென்று நினைத்தார் பெரியகருப்பன் சேர்வை. மகாராஜாவின் உயில் விவரம் எல்லாம் வேறு ஏற்கெனவே ஒரு வருஷத்துக்கு முன்னால் அவருக்கு முதல் ‘ஹார்ட் அட்டாக்’ வந்த போது எழுதினவை. ‘சீல்’ செய்யப்பட்ட உறைகளில் பெரிய கருப்பன் சேர்வையிடம் பத்திரமாக இருந்தன. போக இச்சையினாலும், சமஸ்தானமாக இருந்த காலத்து வழக்கப்படியும் அப்போதிருந்த செல்வச் செழிப்பு என்கிற மதிப்பினாலும் இளையராணிகள் என்கிற நாசூக்கான பெயரில் காலஞ்சென்ற மகாராஜா அரண்மனைக்குள் சேர்த்துக் கொண்ட எண்ணற்ற வைப்பாட்டிகள் கூட்டமும் அவர்கள் வாரிசுகளும் பேரன் பேத்திகளும் காரியஸ்தருக்கு அரண்மனை நிர்வாகத்துக்கும் பெரிய தலைவலியாயிருந்தார்கள். பின் நாட்களில் மகாராஜாவுக்குச் சினிமா நட்சத்திரங்களின் மேல் கவனம் விழுந்து விட்டதால் அந்தப்புரத்துப் பெண்கள் பக்கம் அவர் திரும்பிப் பார்ப்பதே இல்லை. அரண்மனை வருமானம் குறையக் குறைய இந்த அந்தப்புரப் பெண்களும், இவர்களுடைய வாரிசுக் கூட்டமும் தேவையில்லாத, ஆனால் கைவிடவும் முடியாத பெரிய சுமைகளைப் போல அரண்மனை நிர்வாகத்தை உறுத்தினார்கள். அவர்களுக்கு ஆடம்பரத் தேவைகள் இருந்தன. ஒவ்வொருத்தியும் ஒரு புடவையை நானூறு, ஐநூறு ரூபாய்க்குக் குறைவில்லாத வகையில் தான் கட்ட விரும்பினாள். விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் தவிர வேறு மலிவான துணிப் புடைவைகளை அவர்கள் தொடுவதேயில்லை. சோப்பு, வாசனைப் பவுடர், ஷாம்பு இவையெல்லாம் அந்த அரண்மனை எல்லைக்குள்ளேயே ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்தால் கூடப் போதாது என்கிற அளவிற்குச் செலவழிந்தன. ராஜமானியம் நின்று பணத்தட்டுப்பாடு வந்த பின்னர் முதல் முறையாகக் கடந்த நாலைந்து மாதங்களில் பீமநாதபுரம் பஜாரில் உள்ள பெரிய ஜவுளிக்கடை, பெரிய நகைக் கடை, பெரிய ஷாப் எல்லாவற்றிலும் அரண்மனைக் கணக்கில் ஆயிரம் ஆயிரமாகக் கடன் பாக்கி நிற்கத் தொடங்கியது. ஓர் எல்லைக்கு மேல் போகவே கடைக்காரர்கள் மேற்கொண்டு கடன் தருவதற்குக் கூடத் தயங்கினார்கள். துணிந்த சிலர் மகாராஜாவையே நேரில் போய்ப் பார்த்துத் தயங்கித் தயங்கி, “பாக்கி ரொம்ப நிற்குதுங்க. ஏதாவது கொஞ்சமாச்சும் கொடுத்தால் தான் மேற்கொண்டு கடன் தரலாம்” என்று கேட்கக் கூட ஆரம்பித்து விட்டார்கள். பீமநாதபுரம் மகாராஜா மாரடைப்பால் காலமான மறுதினம் பகலில் சென்னை விமான நிலையத்துக்குக் கார் அனுப்பி விட்டு அரண்மனை அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது பெரிய கருப்பன் சேர்வை இந்தப் பிரச்னைகளை எல்லாம் மாற்றி மாற்றி நினைவு கூர்ந்தார். மகாராஜாவின் முறையான வாரிசும் ஒரே புதல்வருமான தனசேகரன் இவற்றையெல்லாம் எப்படிச் சமாளிக்கப் போகிறானோ என்று அவருக்குக் கவலையாக இருந்தது. கவலையில்லாமல் தாய்மாமனுடைய அரவணைப்பில் ஈபோவில் இருந்த அவன் இனிமேல் இங்கு வந்து படவேண்டிய கவலைகளை எண்ணி அவன் மேல் பெரிய கருப்பன் சேர்வைக்கு அனுதாபம் கூட ஏற்பட்டது. “பிணத்துக்குப் பின்னாலே மயானம் வரை காசு வாரி இறைக்கணும். அது இந்த சமஸ்தானத்தில் வழக்கம். மூணு தலைமுறைக்கு முன்னே இவரோட அப்பாவுக்கு அப்பா காலமானப்போ நாலு ராஜ வீதியிலேயும் பொற் காசுகளை வாரி எறைச்சாங்களாம். இப்போ அது முடியாட்டியும் ரெண்டு நயா பைசா ஒரு நயா பைசாவாவது மாற்றி இறைச்சாகணும்” என்று காரியஸ்தரை உள்ளே கூப்பிட்டுத் தகவல் சொன்னாள் அங்கிருந்தவர்களில் சற்றே வயது மூத்த ஓர் இளையராணி. “ராத்திரி இளையராஜா தனசேகரனும் அவங்க மாமாவும் வந்துடறாங்க. எல்லாத்தையும் அவங்கள்ளாம் வந்தப்புறம் அவங்ககிட்டவே சொல்லுங்க. அவங்க இஷ்டப்படி எது தோதோ அதைச் செய்யட்டும்” என்றார் காரியஸ்தர். அந்த அரண்மனை முகப்பில் மகாராஜாவின் பிரேதத்தை மட்டும் மக்களின் பார்வைக்காக வைத்திருந்தார்கள். ஆனால் பார்வைக்குத் தெரியாமல் அரண்மனையின் பெரிய மதில்களுக்குள்ளே இருந்த கடன் பத்திரை நகல்களும், கடைகளின் நினைவூட்டும் கடிதங்களும் ஏராளமாக இருந்தன. பல செலவுகளைச் சமாளிப்பதற்கே தனசேகரனும், மாமாவும் வந்த பின்பு அவர்களைக் கேட்டுத்தான் வழி செய்ய வேண்டும் என்று பெரிய கருப்பன் சேர்வை காத்துக் கொண்டிருந்தார். வந்ததும் வராததுமாகத் தனசேகரனிடமும் அவனுடைய தாய்வழி மாமனிடமும் அரண்மனை ஏறக்குறையத் திவாலான நிலைமையில் இருப்பதைச் சொல்வதற்கு நேர்கிறதே என்பதை எண்ணிய போது காரியஸ்தரின் மனதுக்குக் கஷ்டமாகவும் தயக்கமாகவும் தான் இருந்தது. இன்று இந்த அரண்மனை இப்படிப் பண வறட்சியில் சிக்கியதற்குக் காலஞ்சென்ற மகாராஜாவும், அவருடைய துர்ப்போதனையாளர்களும் தான் முழுக்க முழுக்கக் காரணமே ஒழியத் தனசேகரன் காரணமில்லை. இந்த விஷயத்தில் அவன் மேல் அப்பழுக்குச் சொல்ல முடியாது என்பது எல்லாம் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கு நன்கு தெரிந்துதான் இருந்தது. ஒரு வேளை தனசேகரன் மலேசியாவுக்குப் புறப்பட்டுப் போகாமல் இங்கேயே உடனிருந்து பெரிய மகாராஜாவையும், அரண்மனைச் செலவுகளையும் கட்டுப்படுத்திக் கண்காணித்திருந்தால் இவ்வளவு மோசமாகி இருக்காதோ என்னவோ என்று கூடக் காரியஸ்தருக்குத் தோன்றியது. தனசேகரனுக்கு வீண் டாம்பீகமும், ஆடம்பரச் செலவுகளையும் பிடிக்காது என்பது காரியஸ்தருக்குத் தெரியும். தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடே அதில் தான் ஆரம்பமாகி முற்றியது என்று கூட அவர் அறிந்திருந்தார். சமஸ்தானாதிபதியின் மூத்த மகன், இளையராஜா என்றெல்லாம் பேர்கள் தடபுடலாக இருந்த போதிலும் தனசேகரன் மலேசியா புறப்படுவதற்கு முந்திய தினம் வரை இரயிலில் சாதாரண இரண்டாம் வகுப்பில் தான் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். பீமநாதபுரம் ஊருக்குள் கடை வீதிக்கோ, லைப்ரரிக்கோ - அவை மிக அருகிலிருக்கின்றன என்ற காரணத்தால் நடந்து தான் போய்க் கொண்டிருந்தான். மகாராஜா எத்தனையோ முறை நேரில் கூப்பிட்டுத் திட்டியும், இரைந்து கண்டித்தும், அவன் அதைக் கேட்கவில்லை. “நமக்கு ஒரு ஸ்டேட்டஸ் இருக்குடா! ‘இன்ன சமஸ்தானத்து யுவராஜா காசில்லாமே ஸெக்கண்ட் கிளாஸ்ல போறான். தெருவிலே அநாதைப் பயல் மாதிரி நடந்து போறான்’னெல்லாம் நான் உயிரோட இருக்கிறப்பவே உன்னைப் பற்றி என் காதிலே விழப்படாது” என்று தனசேகரனைச் சத்தம் போட்டும் இருக்கிறார். ஆனால் அந்தச் சத்தத்தையும் கூப்பாட்டையும் தனசேகரன் பொருட்படுத்தியதே இல்லை. சமஸ்தான அந்தஸ்துப் போன பிறகும் மகாராஜா செய்த ஆடம்பரங்கள் அவனுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாகக் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு தந்தை சினிமா எடுக்கக் கிளம்பியது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை. சொல்லிப் பார்த்து அவரை ஒன்றும் திருத்தி விட முடியாது என்று தோன்றவே தனசேகரன் தன்னளவில் ஒதுங்கி விட முயன்றான். அந்தச் சமயம் பார்த்து மலேயாவிலிருந்து ஊர் வந்திருந்த அவனுடைய தாய்வழி மாமன் தன்னோடு அக்கரைச் சீமைக்கு அவனைக் கூப்பிடவே அவனும் மறு பேச்சுப் பேசாமல் அவரோடு புறப்பட்டு விட்டான். அதன் பின்னால் இரண்டாண்டுகள் வரை அவன் ஊர்ப்பக்கமாக எட்டிக் கூடப் பார்க்கவில்லை. இப்போதுதான் தந்தை காலமான பின் முதன் முதலாக ஊர் திரும்பினான் தனசேகரன். இரவு எட்டு மணிக்குச் சென்னையிலிருந்து காரியஸ்தருக்கு ஃபோன் வந்தது. தனசேகரனும் மாமாவும் மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து காரில் ஊருக்குப் புறப்பட்டுவிட்டதாகத் தகவல் தெரிவித்தார்கள் வேண்டியவர்கள். அவர்கள் கார் நள்ளிரவு ஒன்றரை அல்லது இரண்டு மணிக்குப் பீமநாதபுரம் வரும் என்று எதிர்பார்க்கப் பட்டது. |