5 மேரியின் நிதானமும், பொறுமையும் சுமதிக்கு வியப்பூட்டின. நிபந்தனைகளோ நிர்ப்பந்தங்களோ இல்லாமலே அவள் தன்னிடம் பணத்தைக் கொடுத்து விட்டுப் போனது நம்ப முடியாததாயிருந்தது. ‘அடி சுமதி நீதானே அன்றொரு நாள் என்னிடம் வீறாப்புப் பேசினே? நீ அப்படி வீறாப்புப் பேசினாப்பவே என் வழிக்கு வராமல் போகமாட்டேன்னு எனக்குத் தெரியும். இப்போ பண முடை வந்ததும் நீ தானாகவே என் வழிக்கு வந்துட்டே’ - என்று பணத்தைக் கொடுப்பதற்கு முன்பாகவோ, பணத்தைக் கொடுத்த பின்போ அவள் சொல்லிக் காட்டிவிடுவாள் என்று சுமதி பயந்தாள். மேரி அவள் பலத்தைப் பொய்யாக்கி விட்டாள். ஆனாலும் மேரியின் நிதானத்தைப் பற்றிய சந்தேகம் இன்னும் சுமதிக்கு இருந்தது. மேரி பணம் கொடுத்துவிட்டுப் போன தினத்துக்கு மறுநாள் காலை, முதல் வேலையாக அதை மணியார்டர் செய்து எம்.ஒ. ரசீதைப் பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டாள் சுமதி. சுமதி தனக்கு உடல்நலமில்லை என்ற பெயரில் மறு நாளும் வகுப்புகளுக்கு மட்டம் போட்டு விட்டாள். விண்ணப்பத்தாளைப் பூர்த்தி செய்துகொண்டு பணத்தோடு நேரில் போகலாமென்றுதான் முதலில் அவள் நினைத்திருந்தாள். ஆனால், அன்று ஃபோன் செய்து பேசியபோது எம்.ஓ. ரசீதையும் விண்ணப்பத்தையும் அனுப்பினாலே போதுமானது - பின்பு நாங்கள் இன்டர்வ்யூவுக்குக் கூப்பிடும்போது வந்தால் போதும் - என்று நாடகக் குழுவைச் சேர்ந்த அவர்கள் சொல்லிய விதம் நேரில் வர வேண்டாம் என்பது போலிருந்தது. ஆகவேதான் போகும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, முதலில் எம்.ஓ. செய்திருந்தாள் அவள். நாடகக் கம்பெனியின் அச்சிட்ட விண்ணப்பத்தில் ‘இடையளவு’, ‘மார்பளவு’ எல்லாம் கேட்டிருந்தார்கள். கல்லூரி வாயிலில் இருந்த ஒரு தையற் கடையில் வேலைக்காரி மூலம் ஒரு ரூபாய் கொடுத்து ஓர் இஞ்ச் டேப்பை அரைமணி இரவல் வாங்கி வந்து, பாத்ரூம் கதவைத் தாழிட்டுக்கொண்டு தனக்குத்தானே சுமதி அந்த அளவைகளைப் பார்த்தாள். விண்ணப்பத்தை ஒரு விதமாகப் பூர்த்தி செய்து எம்.ஓ. ரசீதையும் இணைத்து அனுப்பினாள். பகல் இரண்டு மணிக்குள் அந்த வேலை முடிந்துவிட்டது.
பிற்பகல் தபாலில் மதுரையிலிருந்து அம்மா எழுதிய கடிதம் கிடைத்தது.
அன்புள்ள சுமதிக்கு அநேக ஆசிகள். உன்னிட மிருந்து கடிதம் வந்து நாளாகிவிட்டது. ஏறக்குறைய நீ கடிதம் எழுதி ஒரு மாதத்துக்கும் மேலாகி இருக்கும் என்ற நினைக்கிறேன். போன மாதம் அனுப்பியதுபோல் அடுத்த மாதம் முதல் தேதி உனக்கு நான் பணம் அனுப்ப முடியும் என்று தோன்றவில்லை. நம் வீட்டில் குடியிருந்தவர்கள் செங்கோட்டைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிக் காலி செய்து கொண்டு போய்விட்டார்கள். இனி மேல் வாடகைப் பணம் வராது என்பதோடு அவர் களிடம் வாங்கியிருந்த இரண்டு மாச அட்வான்ஸ் பணத்தை நான் சிரமப்பட்டு மேனேஜ் செய்து திருப்பிக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. புதிதாக யார் வாடகைக்கு வருவார்கள், எப்போது வருவார்கள் என்று தெரியவில்லை. வந்தால்தான் உறுதி. எனக்கு ஸ்கூலில் சம்பளம் போட்டதும் முதல் வாரத்தில் ஏதோ முடிந்ததை அனுப்புகிறேன். இந்த மாதம் அதை வைத்து நீ அட்ஜஸ்ட் செய்துகொள். குடியிருந்தவர்களுக்கு அட்வான்ஸ் திருப்பிக் கொடுக்கவே பக்கத்தில் கைமாற்று வாங்க வேண்டியதாய்ப் போயிற்று. அதை வேறு திருப்பிக் கொடுக்க வேண்டும். இன்னும் சினிமாப் பத்திரிகைகளில் உன்னுடைய கேள்வி - பதில்களையும் ஆசிரியருக்குக் கடிதங்களையும் படிப்பதாகப் பக்கத்து வீட்டு சரசு சொல்லுகிறாள். உருப்படியாகப் படித்து முன்னேறப் பார். என்னருகே இந்த ஊரிலேயே இருந்து படித்தால் நானே உனக்குச் செல்லம் கொடுத்து உன்னைக் குட்டிச் சுவராக்கி விடுவேனோ என்ற பயந்துதான் மெட்ராசுக்கு அனுப்பினேன். இந்த வயசில் மறுபடி பரீட்சைக்குப் படித்து ‘ஸெகண்டரிகிரேட்’ வாத்தியார் வேலை போதாதென்ற ‘தமிழ்ப் பண்டிட்’ ஆவதற்கு வித்வான் பாஸ் பண்ணி, இப்போதுதான் நாலு மாதமாகத் தமிழ்ப் பண்டிட் வேலை போட்டு பி.டி. கிரேடு சம்பளம் எனக்குத் தருகிறார்கள். உன் ஒருத்திக்காகத்தான் நான் இந்த சிரமம் எல்லாம் படுகிறேன் என்பதாவது உனக்கு நினைவிருக்கிறதா? உங்கப்பா இருந்திருந்தால் நான் இவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்காது. அவர் போனப்புறம் வாழ்க்கையே வெறுத்துப்போன எனக்கு நீதான் நம்பிக்கையாயிருக்கே. நீ சொல்ற எதையும் நான் தட்டிச் சொல்றதில்லை. போன வருஷம் கோடை விடுமுறைக்குக் கொடைக்கானல் போகணும்னே. மறு பேச்சுப் பேசாமல் கூட்டிக் கொண்டு போனேன். இருபது நாள் தங்கினோம். ஆயிரம் ரூபாய்வரை செலவு ஆச்சு. உன் திருப்திக்காக இதெல்லாம் நான் செய்வது போல் என் திருப்திக்காக நீ நன்றாகப் படிக்கணும். பரீட்சையில் டிஸ்டிங்ஷன் வாங்கணும். உன்னைப்பற்றி நான் எப்படி எப்படியோ கனவு கண்டு கொண்டிருக்கிறேன் சுமதி! நீ ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணி பெரிய பெரிய உத்தியோகம் எல்லாம் பார்க்கப் போகிறாய் என்றும் நிறைய பேரும் புகழும் சம்பாதிக்கப் போகிறாய் என்றும் நான் நம்புவது வீண் போகக்கூடாது சுமதி! ஹாஸ்டல் வார்டன் அம்மாள் அனுமதி கொடுத்தால் கூட நீ இரண்டு வாரத்திற்கு ஒரு சினிமாவுக்கு மேல் பார்க்கக் கூடாது. கண்ட கழிசடைச் சினிமா மேகஸீனை எல்லாம் படிக் காதே. அதில் எதிலாவது தாறுமாறான கேள்விகள், ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதி உன் பேர் அச்சில் வருவதைப் பார்க்கும் அற்ப சந்தோஷத்தை இனியாவது விட்டு விடு. அது உன் படிப்பைக் குட்டிச் சுவராக்கிவிடும். இந்த மாதம் நான் குறைவாகப் பணம் அனுப்புவதற்காக வருத்தப் படாதே. அடுத்த மாதம் எதை மிச்சம் பிடித்தாவது வழக்கம்போல் அனுப்பி விடுவேன்.
இப்படிக்கு அன்புடன் உன் அம்மா பெரியநாயகி. கடிதத்தைப் படித்ததும் சுமதியின் மனத்தில் உறுத்திய முதல் விஷயம் அம்மா குறைவாகப் பணம் அனுப்பப் போகிறாள் என்பதுதான். மேரியின் பணத்தை உடனடியாகத் திருப்பிக் கொடுக்க முடியாது என்பது உறுதியாயிற்று. இரண்டாவதாக அந்தக் கடிதத்தில் அவளுக்குப் பிடிக்காத விஷயம் சினிமாவைப் பற்றி அம்மா அறுத்திருந்த அறுவை. புலவர் பரீட்சைகளைப் பிரைவேட்டாக எழுதிப் பாஸ் செய்து அம்மா தமிழ்ப் பண்டிட் ஆனாலும் ஆனாள், அவள் கடிதங்கள் எல்லாம் ஒரே உபதேச காண்டங்களாகவே வந்து சேருகின்றன. வெறும் ஸெகண்டரி கிரேட் டீச்சராக இருந்தபோது அம்மா இவ்வளவு துாரம் உபதேசம் செய்யமாட்டாள். தமிழ் பண்டிட் ஆனவுடன் அம்மா நிறைய உபதேசம் செய்வதற்குக் கற்றுக் கொண்டு விட்டாளோ என்றெண்ணித் தனக்குத்தானே சிரித்துக் கொண்டு சுமதி கடிதத்தை மடித்து மேஜை மேலிருந்த கல்லூரிக் காலண்டரில் சொருகினாள். அறை வாசலில் நிழல் தட்டியது. சுமதி திரும்பினாள். மேரி நின்று கொண்டிருந்தாள். சிரித்தபடியே, “இங்கிலீஸ் லெக்சரர் லீவாம். ஈவினிங் கிளாஸ் இல்லே. உன்னைப் பார்க்கலாம்னு வந்தேன்” என்றாள். “உள்ளே வாயேன்! ஏன் வாசல்லேயே நிற்கிறே?” மேரி உள்ளே வந்தாள். “இன்னிக்கும் நீ காலேஜுக்கு லீவா சுமதி?” “வேலை இருந்தது. வரலே... வந்துதான் என்ன வெட்டி முறிக்கப் போகிறோம். கிளாஸுக்கு வரதைவிட ரூம்லே இருந்து நோட்ஸை ஒழுங்காப் படிச்சால்கூட போதும்...” “நேற்று உனக்கு உதவ முடிஞ்சதிலே எனக்கு ரொம்பத் திருப்தி சுமதி! பை தி பை. தப்பா நெனைச் சுக்காதே, இப்பக்கூட எங்கிட்டப் பணம் இருக்கு... உனக்கு ஏதாவது தேவையிருந்தால் தரேன்...” சுமதிக்குத் தேவை எதுவும் இல்லை. ஆனால் பணம் குறைவாக அனுப்பப் போகிறேன் என்ற அம்மாவின் முன்னெச்சரிக்கைக் கடிதம் பயமுறுத்தியது. என்ன நினைத் தாளோ தெரியவில்லை மேரியின் தயவை அப்போதே பயன்படுத்திக் கொள்ள விரும்பியவள் போல், “இருந்தால் இன்னும் ஒரு ஐம்பது ரூபாய் கெர்டேன் மேரி! நூற்றைம்பதாகக் கணக்கு வைத்துக் கொள்ளலாம்” என்றாள் சுமதி. “கணக்கு என்னடீ கணக்கு ! உனக்கு நான் கணக்குப் பார்த்துத்தான் கொடுக்கணுமா? ஐயாம் நாட் எ மணி லெண்டர். ஜஸ்ட் யுவர் கிளாஸ் மேட், டேக் திஸ்.” இப்போது மேரி நீட்டியது ஒரு முழு நூறு ரூபாய் நோட்டு. சுமதி தயங்கினாள். ஆனால் ஒரு கணம்தான். புதுமுகங்கள் தேடும் நாடகக் குழுவினர் தன்னை இண்டர்வ்யூவுக்குக் கூப்பிட்டு எழுதினால் அன்று போகவர டாக்ஸி செலவு முதலியவற்றுக்காக மறுபடி மேரியிடமே கடனுக்காக நிற்கவேண்டாம்? இப்போதே அவளிடம் நூறாக வாங்கிக்கொள்வதில் என்ன தவறு? என்ற மறு பரிசீலனையும் மனத்தில் தோன்றவே அடுத்த கணம் அந்த நூறு ரூபாய் நோட்டையே தயக்கமின்றி அவளிடமிருந்து வாங்கிக் கொண்டாள் சுமதி. “மொத்தம் இருநூறு ஆகிறது. மேரி.” “கவுண்ட் பண்ணாதே சுமதி ! அது பிடிக்கலே. இருநூறு என்ன? உனக்காக ரெண்டாயிரம் கூட ஆகட்டுமே. நான் தரேன்.” “மேரி. ரியலி ஐயம் கிரேட்ஃபுல் டு யு. அண்ட் ஐ நெவர்...” அருகே வந்து மேரி அவள் வாயைப் பொத்தினாள். ‘நேரத்தை வீணாக்காதே. ‘ஜெர்ரிலுயி’ படம் ஒண்ணு ‘ஃபேமிலி ஜுவல்ஸ்’னு மாட்னிஷோ இருக்கு. வார்டனிட்ட பெர்மிஷனுக்குச் சொல்லிவிட்டு வா சுமதி ! போகலாம்.” “படத்துக்கா போகணும்கிற?” “ஆமாம்! வா போகலாம்?...” அன்றென்னவோ சுமதிக்கு எங்காவது வெளியே போய்ச் சுற்றிவிட்டு வரவேண்டும் போலிருந்தது. அன்றைய மனநிலை விடுபட்டாற்போல எங்காவது சுற்றத் தோன்றியது. உடை மாற்றிக்கொண்டு மேரியோடு புறப்பட்டுவிட்டாள். வார்டனிடம் அவளுக்குள்ள முகராசியினாலும், பகல் காட்சி என்பதனாலும் சுலபமாகவே அனுமதியை வாங்கிக் கொண்டு கீழே படியிறங்கி ஏற்கெனவே ப்ளே கிரவுண்டில் போய்க் காத்திருந்த மேரியோடு சேர்ந்து சுமதி போனபோது மறுபடி மேலே மாடியில் வராந்தாவிலிருந்து வார்டன் அம்மாளின் குரல், “சுமதி, உன்னைத்தானே ஒரு நிமிஷம் இப்படி வந்திட்டுப் போயேன்...” என்று இரைந்து கூப்பிடவே திரும்ப நிமிர்ந்து பார்த்த சுமதி, “இரு மேரி! போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்” என்று சொல்லி விட்டு மறுபடி மேலே படியேறிப்போனாள். அவள் மேலே போவதற்குள் வராந்தாவில் நின்ற வார்டன் தன் அறைக்குள் போயிருந்ததனால் இவளும் திரும்ப அறைக்கே சென்றாள். “ஆமாம்! இப்போ யாரோட சினிமாவுக்குப் போறே?” “ஏன்?” “மேரியோடையா?” கேள்வி ஒரு தினுசாக ஒலிக்கவே உடனே தற்காப்பு உணர்வையடைந்த சுமதி பொய் சொல்லத் துணிந்தாள். “இல்லே. கிரவுண்டிலே நின்னுண்டிருந்தா அவ. நான் போறபோது சும்மா எங்கூடப் பேசிண்டே வெளியிலே அவளும் புறப்பட்டுட்டா... அவ எங்கூட வரலே” “அப்படியானால் சரி... போ...” வார்டன் ஏன் இப்படிக் கூப்பிட்டுக் கேட்கிறாள் என்பது சுமதிக்குப் புரியவில்லை. மேரியோடு யார் யார் மாலை வேளைகளில் வெளியே புறப்பட்டுப் போகிறார்களோ அவர்களை எல்லாம் வார்டன் தீவிரமாகக் கண்காணிக்கிறாள் என்று அர்த்தமா? அல்லது தற்செயலாகத்தான் வார்டன் தன்னை திரும்ப மேலே அழைத்து இதை விசாரித்தாளா என்று புரிந்து கொள்ள முடியாமல் சுமதி மனம் குழம்பினாள். கீழே இறங்கிப் போய் மேரியோடு சேர்ந்து கொண்டு மறுபடி அவள் நடந்தபோது, மேரியே வார்டன் அம்மாளைப் பற்றி ஆரம்பித்தாள். “சுமதி, பீ கேர் ஃபுல்! வார்டன் அம்மாள் பெரிய ராட்சஸி! சில இன்னொஸண்ட் கேர்ள்ஸை ராத்திரிலே கையை அமுக்கி விடு. காலை அமுக்கிவிடுன்னு தன் ரூமுக்கு வரவழைச்சுக் குட்டிச் சுவராக்கியிருக்கா... நீயும் ஏமாந்திடாதே...” “நிஜமாவா மேரி...?" “நிஜமில்லையா பின்னே? நீ இந்தக் காலேஜிலே யாரை வேணாக் கேட்டுப் பாரேன்.” பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் கல்லூரிக் காம்பவுண்டைக் கடந்து வெளியே டாக்ஸி ஸ்டாண்டும் அருகேயே பஸ் ஸ்டாப்பும் உள்ள பிரதான சாலையோரத்துக்கு வந்திருந்தார்கள். பஸ் ஸ்டாப் அருகே சில மாணவிகள் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர். சுமதியும் விரைந்து பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தபோது, “பஸ் வேண்டாம் சுமதி ! இப்பவே நேரமாச்சு. டாக்சியிலேயே போயிடலாம் வா!” என்று கூறித் தடுத்தபடி ஒரு டாக்சியையும் கையசைத்து வரவழைத்து விட்டாள் மேரி. மேரியையும், சுமதியையும் பார்த்ததும் டாக்சிக்காரன் சிரித்துக்கொண்டே மீட்டரைப் போட்டான். அவன் ஏன் சிரிக்கிறான் என்பது சுமதிக்குப் புரியவில்லை. ஒரு வேளை அவன் மேரிக்கு முன்பே தெரிந்தவனாக இருக்கவேண்டும் என்று சுமதி நினைத்துக் கொண்டாள். டாக்சியில் ஏறி மேரி அருகே அமர்ந்து கொண்டு பக்கத்தில் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவிகளைப் பார்த்த போது அவர்களும் தங்கள் பக்கமாகப் பார்த்துச் சிரித்தாற் போல் நிற்கவே சுமதியின் உள்மனம் என்னவோ குறுகுறுத்தது. டாக்சிக்காரனும் சிரிக்கிறான். அருகே நிற்கிற மாணவிகளும் சிரிக்கிறார்கள்? யாருக்காகச் சிரிக்கிறார்கள்? எதற்காகச் சிரிக்கிறார்கள்? இவர்களெல்லாம் ஏன் சிரிக்கிறார்கள்? கேள்விகள் பெரிதாக அவள் மனத்தில் எழுந்தன. அதற்கான பதில்தான் அவளுக்கு உடனே புரியவில்லை. மர்மமாயிருந்தது. |