20 அவர்கள் தன்னைக் கதாநாயகியாகப் போட்டு எடுக்கப் போகிற படம் என்ன, தன்னோடு, அதில் வேறு யார், யார் நடிக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு முறையாக எப்போது தொடங்கும், எப்போது முடியும் எதுவுமே சுமதிக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படவில்லை. சில மாலை வேளைகளில் யோகாம்பாள் அத்தை வீட்டுக்குச் சென்று இரவு அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் காலைதான் தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தாள் அவள். வேறு சில மாலை வேளைகளில் தயாரிப்பு அலுவலகத்திலேயே யாரோடாவது நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்துவிட்டு இரவு அங்கேயே தங்கிவிடவும் செய்திருக்கிறாள். எதிலும் அவள் கண்டிப்பாக இருந்து கொள்ள முடியவில்லை. முடியவுமில்லை... யோகாம்பாள் அத்தை வீட்டில் வாக்குக் கொடுத்தபடி தினம் இரவு அங்கே தங்கப் போகவும் இல்லை. போகாமலும் இல்லை. கன்னையாவின் தயாரிப்பு அலுவலகத்துக்கு அருகே இருந்த பாங்கு கிளை ஒன்றில் சுமதியின் பெயருக்கு ஒரு கணக்குத் திறந்து வைக்கப்பட்டது. தனக்குத் தரப்பட்ட முதல் செக்கை அந்தக் கணக்கில் போட்டாள் அவள். தொடர்பாகவும் திட்டமிட்டும் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றாலும் அவ்வப்போது அன்று எடுக்கப்பட்ட நடனக் காட்சியைப் போலத் துண்டு துண்டாகச் சுமதியை வைத்து எதையாவது எடுத்தார்கள். அதில் சுமதியை மட்டுமே நடிக்கச் செய்தார்கள். அந்தக் காட்சிக்குப் பலர் பார்வையாளர்களாக அழைக்கப் பட்டார்கள். பலருக்குச் சுமதியும், சுமதிக்குப் பலரும் அறிமுகப் படுத்தப்பட்டார்கள். நிறையப் பெரிய மனிதர்கள், தொழிலதிபர்கள் வீட்டுக்கெல்லாம் சுமதியைக் கப்பல் போன்ற சவர்லெட் காரில் ஒரு வேலையுமின்றி உடனழைத்துக் கொண்டு போய்விட்டு வந்தார் கன்னையா. காஷ்மீரிலிருந்து திரும்பிய இருபதாவது நாளோ முப்பதாவது நாளோ சுமதிக்கு வழக்கமான லேடி டாக்டர் ஒருத்தியிடம் அழைத்துச் சென்று ஊசி போட்டு மாத்திரைகள் சில வாங்கிக் கொடுத்தாள் மேரி. அதையடுத்து வீட்டில் உட்காரவேண்டிய நாட்களில் தவறாமல் உட்கார்ந்த பின்புதான் சுமதிக்குப் பயம் போய் நிம்மதி வந்தது. “சுமதி! நீ எதுக்கும் பயப்பட வேண்டியதில்லை. இந்த லேடி டாக்டர் எங்களுக்கு ரொம்ப வேண்டியவ. யாரிட்டவும் எதையும் சொல்லமாட்டா. ஒரு தடவை இங்கே மேலே டான்ஸ் படிக்க வந்த பொண் ஒருத்திக்கு ரெண்டு மாசமோ மூணு மாசமோ கர்ப்பமே ஆயிடுச்சு. டான்ஸ் மாஸ்டர் கையைப் பிசைஞ்சுக்கிட்டு நின்னான். அந்தப் பொண்ணு ‘கிணத்துலே குதிச்சுச் சாகப் போறேன்னு’ அழுதது; இந்த லேடி டாக்டரிட்டக் கூட்டிக்கிட்டுப் போய்த்தான் சரிப்படுத்தினேன்” என்று மேரி கூறினாள். அவள் தன்னைத் தைரியப்படுத்து கிறாளா அல்லது மேலும் மேலும் தாராளமாகத் தான் கெட்டுப் போவதற்குத் தூண்டுகிறாளா என்பது புரியாமல் சுமதி மருண்டாள்.
தயாரிப்பாளர் கன்னையாவைப் பொறுத்தவரை சுமதியிடம் மிக மிகத் தாராளமாக நடந்து கொண்டார். ஒருநாள் அவள் ஏதோ ஜவுளிக் கடைக்குப் போக வேண்டும் என்றாள். அந்த ஜவுளிக் கடை கூப்பிடு தூரத்தில் தான் இருந்தது. பாண்டி பஜாருக்கு அவள் இருந்த அபிபுல்லா ரோடிலிருந்து நடந்தே கூடப் போய்விட்டு வந்துவிடலாம். கன்னையாவிடம் போய்க் கடைக்குப் போகப் போவதைச் சொன்னதும், “என்னம்மா நீ இன்னும் விவரந்தெரியாத பொண்ணாயிருக்கே, உன்னை மாதிரிப் பத்துப் பத்திரிகையிலே படம் எல்லாம் வெளி வந்து பிரபலமான ஸ்டார் ஒருத்தி அனாதை மாதிரித் தெருவிலே நடந்து போறது நல்லாவா இருக்கும்? நீ அப்பிடி எல்லாம் போகப்பிடாது, அது உனக்கும் மரியாதை இல்லே. உன்னை வச்சுப் படம் எடுக்கிற எனக்கும் மரியாதை இல்லே. இங்கே இருக்கிறதுக்குள்ளே பெரிய சவர்லெட் வண்டியிலே உன்னைக் கடையிலே கொண்டு போய் விட்டுக் கூட்டிக்கிட்டு வர்ரேன்” என்றார்.
“நீங்க எதுக்குங்க வீணா அலையணும்? நானே போயிட்டு வந்துடறேன்” என்றாள் அவள். “சரி வேண்டாம்னா நான் வரலே. டிரைவரைக் கூப்பிட்டுச் சொல்லிடறேன். நீ போயிட்டு வா. வேணுங்கறதை வாங்கிக்கோ. பணம் ஏதாச்சும் வேணுமா? இந்தா! எதுக்கும் கையோட வச்சுக்கோ இருக்கட்டும்” என்று ஓர் ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவளிடம் எடுத்துக் கொடுத்தார் கன்னையா. “பணம் வேண்டாங்க. ஏற்கெனவே நீங்க கொடுத்த ‘செக்கை’ மாத்திக் கொஞ்சம் பணம் எடுத்து வச்சிருக்கேன். அது போறும்னு நினைக்கிறேன்” என்று மறுத்தாள் சுமதி. கன்னையா விடவில்லை. “அட அது இருந்தா இருக்கட்டுமே அம்மா! இதையும் கூட வச்சுக்க” என்று அவள் வலது கையைப் பிடித்து இழுத்து அதில் நூறு ரூபாய் நோட்டுக்களைத் திணித்தார் அவர். முதுகில் ஒரு செல்லப் பிராணியைத் தட்டிக் கொடுப்பதுபோல் அவளைத் தட்டிக் கொடுத்தார். பாண்டி பஜாரில் இருந்த ஒரு பெரிய பட்டு ஜவுளிக் கடைக்குப் போனாள் அவள். கன்னையாவின் டிரைவர் கடை வாசலில் கப்பல் போன்ற அந்த நீளமான சவர்லெட்டை நிறுத்திக் கீழே இறங்கிப் பின் ஸீட்டில் அமர்ந்திருந்த சுமதி இறங்குவதற்காகக் கதவையும் திறந்துவிட்டான். சுமதி கீழே இறங்கவும் அவளுடைய பழைய கல்லூரித் தோழிகள் ரூம்மேட் விமலா உட்பட நாலைந்து பேர் “ஹாய்! சுமதி” என்று வந்து அவளைச் சூழ்ந்து கொள்ளவும் சரியாயிருந்தது. சுமதி தற்செயலாக அவர்களை அங்கே சந்தித்தாள். “இது உன் காராடி?” என்று கேட்டாள் விமலா. “அப்பிடித்தான் வச்சுக்கோயேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் சுமதி. வேண்டுமென்றேதான் அவளுக்கு அப்படிப் பதில் சொன்னாள் சுமதி. “உன் சினிமா விளம்பரம் எல்லா டெய்லிஸ்லேயும் முழு முழுப்பக்கம் வந்ததே, அந்தப் படம் எப்படீ ரிலீஸாறது? நாங்கள்ளாம் ரொம்ப ஆவலோட காத்திண்டிருக்கோம்டீ?” என்றாள் மற்றொரு தோழி. “ஐயாம் வெரி வெரி ப்ரெளட் ஆஃப் யூ சுமதி” என்றாள் வேறொரு சிநேகிதி. வேறொரு தோழி சுமதியிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டாள். “நீ காலேஜ் படிப்பைப் பாதியிலே விட்டுட்டுச் சினிமாவுக்கு ஓடினது தப்புன்னு விமலா அபிப்ராயப் பட்டா. நான் அப்படி நினைக்கலேடீ சுமதி! நீ காலேஜிலே படிச்சிண்டே கிடந்தேன்னா இன்னும் ஏழு தலைமுறையானால் கூட இப்படி ஒரு சவர்லே இம்பாலாவிலே வந்து ‘ஜம்’னு இறங்க முடியாது. நீ செய்ததுதான் சரி! நம்மைத் தேடி வர்ர அதிர்ஷ்டத்தை நாம காலாலே எட்டி உதைக்கப் பிடாது” என்று சுமதிக்கு அவள் செய்தது சரிதான் என்று நற்சான்றிதழ் கொடுத்தாள் ஒரு சிநேகிதி. சுற்றி நிற்கிற அனைவர் கண்களும் அப்போது தன்னைப் பொறாமையோடு நோக்குவதைச் சுமதி புரிந்து கொண்டாள். சுமதிக்கு உள்ளூரக் கவர்வமாகக் கூட இருந்தது. “எல்லாரும் வாங்கடி! துணியை செலக்ட் பண்ணி எடுத்திட்டு எங்கேயாவது போய்க் காபி குடிக்கலாம்” என்று தோழிகள் அனைவரையும் தன்கூட அழைத்தாள் சுமதி. “ஹே. ஆளைப்பாரு. வெறும் காபியோட எங்களை ஏமாத்திடலாம்னு பார்க்காதே. நீ பெரிய ஸ்டாரா யிட்டே உன் ஸ்டேட்டஸுக்கு தகுந்த மாதிரி எங்களுக்கு ஏதாவது பண்ணனும்டீ. எல்லாரையும் இப்பவே தாஜ்கோரமேண்டலுக்குக் கூட்டிண்டு போடி” என்றாள் துடிக்குக்காரியான தோழி. “நீங்கள்ளாம் வர்ரதா இருந்தா எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லேடீ. தாஜ்கோரமண்டல், சவேரா, இண்டர்நேஷனல் எங்கே கூப்பிட்டாலும் நான் வரத் தயார்” என்று இணங்கினாள் சுமதி. தன்னுடைய உள்மனத்தின் வேதனைக்குத் தற்காலிகமான மாற்றாகப் பயன்படும் அந்தத் தோழியர் கூட்டத்துக்காக அவள் பணம் செலவழிவதைப் பற்றிக்கூட கவலைப்படவில்லை. அவளுக்கு அவர்களுடைய கம்பெனி அப்போது இதமான உணர்வைக் கொடுத்தது. தோழிகள் அவளைச் சூழ்ந்துகொண்டு மொய்த்தனர். அத்தனை தோழிகளோடும் கூட்டமாக ஜவுளிக்கடைக்குள் நுழைவது பெருமையாகக்கூட இருந்தது. பத்திரிகைகளில் அவள் படத்தைப் பார்த்திருந்த கடை ஊழியர்கள் சிலர் தங்களுக்குள், “டேய்! இவதான் புதுமுகம் சுமதிடா” என்று தணிந்த குரலில் தன் பெயரைச் சொல்லித் தங்களுக்குள் முணுமுணுத்தது கூட அவளுடைய கர்வத்தை வளர்ப்பதாயிருந்தது. ஒர் ஊழியன் ஒரு வாரத்துக்கு முந்திய தினசரி ஒன்றை எடுத்து நீட்டி அதில் முதல் பக்கத்திலேயே கவர்ச்சிப் படமாக வெளியாகியிருந்த அவளது முக்கால் நிர்வாண நடனப் படத்தை இன்னொருவனிடம் சுட்டிக் காட்டி அவளைப் பற்றிச் சொல்லிக் கொண் டிருந்ததை அவளே ஒரக்கண்ணால் கவனித்துக் கொண்டே கவனிக்காதது போல் கடைக்குள்ளே போனாள். அதுவும் அவளுக்குப் பெருமையாகவே இருந்தது. “வாங்கம்மா, புரொட்யூலர் கன்னையாகூட நீங்க வந்துக்கிட்டிருக்கீங்கன்னு இப்பத்தான் ஃபோன் பண்ணிச் சொன்னாரு” என்று அந்த ஜவுளிக்கடையின் முதலாளியே எழுந்திருந்து வந்து கைகூப்பி எதிர் கொண்டு தன்னை வரவேற்றபோது சுமதிக்குப் பெருமித உணர்வு ஏற்பட்டது. கன்னையாவின் செயல் அவளை உயர்த்துகிற வகையிலேயே அவள் மனத்தில் புரிந்தது. தோழிகள் முன்னிலையில் அந்தச் சவர்லெட் இம்பாலா சவாரி, உபசாரம், வரவேற்பு எல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்தி ருந்தன. பெண் என்பவள் இங்கிதமான உபசாரங்களாலும், முகமன் வார்த்தைகளாலும் எந்தக் காலத்திலும் ஏமாற்றப்பட முடிந்தவள் என்ற கருத்துக்கு நிதரிசனமான உதாரணமாக அப்போது சுமதி இருந்தாள். ‘ஒவ்வொரு பெண்ணும் ஆசை மயமானவள், சபலங்கள் நிறைந்தவள். புகழுக்கு வசப்படுகிறவள், உபசாரங்களில் சிக்கிக் கொள்கிறவள்’ - என்று கன்னையா அனுபவம் மூலம் தெரிந்து வைத்திருந்த அளவுகோல் சரியாகவே இருந்தது. சுமதியும் அவள் தோழிகளுமாகப் புடவை ஸெலக்ட் செய்கிற காட்சியைப் பக்கத்து ஸ்டுடியோக்காரரை வரவழைத்து நாலைந்து புகைப்படங்கள்கூட எடுத்துக் கொண்டார் அந்த கடை முதலாளி. “நாளைக்கு ஏதாவது பேப்பர்லே விளம்பரம் பண்றப்போ இன்ன ஸ்டார் எங்க வாடிக்கைக்காரங்கன்னு போடறப்ப, இந்தப் படத்தையும் போடலாம் பாருங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் கடைக்காரர். அவர்களுக்கு எல்லாம் குளிர்பானம் வரவழைத்துக் கொடுத்து உபசரித்ததோடு மிகவும் மரியாதையாக வாசலில் கார்க் கதவுவரை வந்த வழியனுப்பினார் அவர். தோழிகள் எல்லோரையும் ஏற்றிக் கொண்டு அவர்களோடு நேரே நுங்கம்பாக்கம் ஹை ரோட்டிலிருந்த தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்குச் சென்றாள் சுமதி. திடீரென்று “இந்த ஹோட்டல் ஏன் இன்கம் டாக்ஸ் ஆபீஸுக்கு எதிரே இருக்குன்னு யாருக்காவது தெரியுமா?” என்று தோழிகளைக் கேட்டாள் சுமதி. “தெரியாது! நீதான் சொல்லேன்” என்றார்கள் தோழிகள். “இன்கம் டாக்ஸ் கட்டினப்புறமும் யாரிட்ட லட்ச லட்சமா மீந்திருக்கோ அவங்க இங்கே வந்தால்தான் கட்டுபடியாகும். அதனாலேதான் இன்கம் டாக்ஸ் ஆபீசுக்கு எதிர்த்தாப்லேயே கட்டிப்பிட்டாங்க” என்று சுமதி ஒரு ஜோக் அடித்ததும் தோழிகள் எல்லாம் கலகல வென்று சிரித்தார்கள். அந்த ஜோக்கைப் பாராட்டவும் செய்தார்கள். “எப்படியோ நீ இங்கே வர்ர தகுதி உள்ளவள்னு தெரிஞ்சுக்கிட்டதுலே நாங்க சந்தோஷப் படறோம்டீ சுமதி!’ என்று விமலா மட்டும் சுமதி சொன்னதை வைத்தே இடக்காக அவளுக்கு மறுமொழி கூறினாள். தாஜ்கோரமண்டலில் சாப்பிட்டு முடிக்க இரண்டு மணி நேரம் ஆயிற்று. பில் எண்ணுாறு ரூபாய் ஆகி விட்டது. சுமதியிடம் கன்னையா கொடுத்த பணம் இருந்ததால் அவள் தாராளமாகச் செலவழித்தாள். பில்லைத் தோழிகளிடம் காட்டிவிட்டு, “இப்போ சொல்லுங்கடீ! நான் இதுக்குள்ளே நுழையறப்போ இது ஏன் இன்கம் டாக்ஸ் ஆபீசுக்கு முன்னாடி இருக்குன்னு ஜோக் அடிச்சேனே அது எத்தனை பொருத்தம்?” என்று சிரித்தபடியே தோழிகளை வினவினாள் சுமதி. ஹோட்டலிலிருந்து வெளியேறியதும் தோழிகளை ஹாஸ்டல் வாசலில் கொண்டுபோய் டிராப் செய்தாள் சுமதி. “ஏண்டி! வார்டனைப் பார்த்துவிட்டுப் போறியா? நீ ‘சவர்லே’யிலிருந்து இறங்கியதை அவள் பார்க்கட்டும்” - என்றாள் விமலா. “வொய் ஷுட் ஐ?” என்று முகத்தைச் சுளித்தாள் சுமதி. அவள் தயாரிப்பு அலுவலகத்துக்குத் திரும்பியதும் வாசலிலேயே உலாவிக் கொண்டிருந்த கன்னையாவிடம், “கொஞ்சம் மன்னிச்சிக்குங்க. நேரமாயிடிச்சு, என் ஃபிரண்ட்ஸுங்க சில பேர் வழியிலேயே பார்த்துட்டாங்க” என்றாள். “நோ நோ! மன்னிக்கறதாவது ஒண்ணாவது? இந்தக் கார் உன்னோடதும்மா! உன் சொந்தக்கார் உன் சொந்த வீடுன்னு இதை எல்லாம் நீ நினைச்சால்தான் எனக்குத் திருப்தி” என்றார் கன்னையா. அவருடைய அந்த அளவு கடந்த பிரியம் எதற்கு ஏன் என்பதை அவள் யோசித்துக் கொண்டிருந்தாள். அந்த யோசனை முடியுமுன் அன்றிரவே அது புரிந்தது. |