12

     'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' - என்று சிவபெருமானையே எதிர்த்து நின்று நியாயம் பேசிய நக்கீரன் பிறந்த போதே உலகத்தின் துணிவுள்ள முதல் பத்திரிகையாளன் பிறந்துவிட்டான்.

     வழக்கமாகப் பார்க்கும் மனிதர்கள், வழக்கமாக நடமாடும் இடங்கள், இவற்றை நீக்கி வெளியூருக்கு வந்த உற்சாகம் மனத்தில் இருந்தது. கோவை நிலையத்திலிருந்து அண்ணூருக்குப் போக வாடகைக் கார் தேடும் முயற்சியில் ஈடுபட்டான் சுகுணன். மிகச் சில ஆண்டுகளில் கோயம்புத்தூர் எவ்வளவோ வளர்ந்திருந்தது. குண்டூசி முதல் இயந்திரங்கள் வரை எல்லாவற்றையும் உருவாக்கவல்ல பல பெரிய தொழிற்சாலைகள் தோன்றியிருந்தன. சத்தியமங்கலம் சாலையில் கணபதியைக் கடப்பதற்குள்ளேயே பல பெரிய தொழிற்கூடங்கள் புதியனவாகவும் நவீனமான தோற்றம் உடையனவாகவும் தென்படத் தொடங்கி விட்டன! சுண்ணாம்பு கலப்புடன் சுக்கான் கல்லும் மண்ணுமாகத் தெரியும் கோவையின் பூமியயப் பல இடங்களில் கட்டிடங்களுக்காக வானம் தோண்டிக் குவித்திருந்தார்கள். சென்னையிலும், பிறபெரிய நகரங்களிலும் கட்டிடங்கள் எழுகிற விரைவையும், ஆடம்பரத்தையும் காணும் வேளைகளில் எல்லாம் இனி உழுவதற்கும் விளைவதற்கும் மண்ணே மீதமிருக்காதோ என்று ஒரு மலைப்பான எண்ணம் சுகுணனுக்கு அடிக்கடி வருவதுண்டு. பாரதத்தின் இருண்ட கிராமங்களையும் எழுத்தறிவில்லாத மக்களையும் மனத்திற் கொண்டு காந்தியடிகள் போராடிய சுதந்திரப் போர் நகரங்களை மட்டுமே வளர்க்கும் ஒருதலைப் பட்சமான வெற்றியாகப் போய் விட்டதோ என்ற சந்தேகம் கூட அவனுள் அடிக்கடி எழுந்ததுண்டு. அண்ணூரில் கோவையின் வளர்ச்சி தென்படவில்லையாயினும், வளர்ச்சிக்கு அருகிலிருக்கும் ஒரு சூழ்நிலை தென்பட்டது. சாலையின் இருபுறமும் செழிப்பான பருத்திச் செடிகளில் வெளேரென்று பருத்தி பூத்திருந்தது. இடையிடையே கரும்புத் தோட்டங்கள் பசுந்தோகைகளைச் சிலிர்த்துக் கொண்டு செழுமையாகத் தோன்றின. விடுதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவள் அங்கேயே தங்கி வசித்து வந்தாள். சகோதரியோடு தானும் தங்க முடியாது என்பதைச் சுகுணன் நினைவு கூர்ந்தான். வாடகைக் கார் பள்ளிக்கூட விடுதிக்குள் நுழைந்த போது எதிரே தென்பட்ட ஒவ்வொருவரும் தன்னையும், காரையும் வியப்புடன் ஏறிட்டுப் பார்ப்பதை சுகுணன் உணர முடிந்தது. கார் விடுதி முகப்பில் நின்றதும் வராந்தாவில் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்த நாலைந்து பெண்கள் பரபரப்பாகப் படியேறி மேலே மாடிக்குப் போய்ச் சுகுணனின் சகோதரியை அழைத்து வந்தனர். தனிமையில் சலித்துச் சலித்துத் தன் வரவைப் பற்றி கற்பனையும் ஆவலும் காண்பித்த தங்கை தன்னிடம் படிக்கிற பெண்களிடம் எல்லாம் அதைப் பற்றிச் சொல்லிப் பெருமையடித்துக் கொள்ள தொடங்கியிருக்க வேண்டுமென்று அவனால் அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. ஆவல், வியப்பு, ஆகிய உணர்வுகளில் எல்லாம் மரத்துப் போயிருந்த பட்டினத்து மனிதர்களிடையே இருந்து விட்டு, எதிலும் ஆவலும், வியப்பும் நிறைந்த சிற்றூர் மனிதர்களைச் சூழ்வது திடீரென்று ஏதோ ஒரு விதமான விடுதலையும் சுதந்திரமும், கிடைத்து விட்டதைப் போல் மகிழச் செய்தன. அந்த மகிழ்ச்சியில் இனம் புரியாததொரு குறுகுறுப்பும் இருந்தது.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.