14
ஆசையின் அழியாத தெய்வீக எல்லை நிராசைதான். ஏனென்றால் அந்த எல்லையில் ஆசைப்படுதல் என்ற உணர்வுத் துடிப்புக்கு முடிவே இருப்பதில்லை. எதிரே சுவரில் காலஞ்சென்ற மகாதேவன் நேருவுடன் சிரித்துக் கொண்டே உரையாடிக் கொண்டிருந்த புகைப்படம் முன்பு எப்போதோ எடுத்து மாட்டப்பட்டிருந்தது. டைம்ஸ் காரியாலயத்துக்கு ஹரீந்திரநாத் சட்டோபாத்தியாயா வந்திருந்த போது எடுத்திருந்த புகைப்படம் ஒன்றும் அருகில் மாட்டியிருந்தது. இவ்வளவு பெரிய தலைவர்களுடனும், கவிஞர்களுடனும், கலைஞர்களுடனும் பழக்கமுள்ள ஒரு உண்மைத் தேசியவாதி நிறுவிய நல்ல பத்திரிகையே சரியாக நடக்க முடியாத இந்தத் தேசத்தில் மிட்டாய்க் கடை வைத்துப் பணக்காரர்களாகியவர்களும், சணல் ஆலை வைத்துச் செல்வம் குவித்தவர்களும், முதல் போட்டு நடத்துகிற ஏழாந்தர, எட்டாந்தரப் பத்திரிகைகள் கூட அற்புதமாகச் செலாவணியாவதை நினைக்கத் தொடங்கிய போது எதிரே ஒன்றையுமே பார்க்காமல் தளர்ச்சியோடு தளர்ச்சியாகக் கண்களை அப்படியே இறுக்கி மூடிக் கொண்டு விடவேண்டும் போல் தோன்றியது சுகுணனுக்கு. அந்தப் படங்களையும், சுவர்களையும் அப்பால் கவலையோடு தெரியும் கமலத்தின் முகத்தையும் பத்திரிகைக் காகிதப் பற்றாக்குறையை நினைவுறுத்தும் கேள்விக் குறி போல் நிற்கும் அச்சக ஃபோர்மெனையும் எதிர்கொண்டு பார்க்கவே கூசியவனாகக் கண்களை மூடினான் அவன். பத்து நிமிடங்கள் இப்படிக் கழிந்திருக்கும். சிந்தனையில் ஒன்றுமே வழி பிறவாத தளர்ச்சியில் கரைந்த விநாடிகள் அவை. சித்திரம் போல் எதிரே நின்று கண்களில் நீர் அரும்ப அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் துளசி. எதிரே அவன் பார்வையில் பாதாதிகேச பரியந்தம் அவள் தென்பட்டபோது - தரையில் பதித்த தாமரைகளைப் போல் தெரிந்த அவள் பாதங்களில் 'இந்தக் கால்கள் இன்னும் உங்களருகில் நெருங்கி வந்து நிற்க முடியாமல் பெரியோர்கள் நாள் பார்த்து முகூர்த்தம் பார்த்து நிச்சயித்து இப்படித் தடையும் போட்டு விட்டார்கள்' - என்பது போல் அப்படிப்போட்ட அழகிய தடைகளாக மெட்டிகள் வெளேரென்று மின்னிக் கொண்டிருந்தன. பவழமாய்ச் சாயமிட்டிருந்த அளவான அழகான நகங்களோடு தயங்கிய அந்தப் பாதங்களில் அவன் பார்வை நிலைத்தது. அவள் முகத்தைத் தொடர்ந்து ஏறிட்டுப் பார்க்க அவனால் முடியவில்லை. மனமும் இல்லை. "இதெல்லாம் என்ன? உடம்பு சரியில்லை என்றால் அதை அறிந்து கொள்ளக் கூடத் தகுதியில்லாத பாவியாகி விட்டேனா நான்?" - அவள் குரலில் தயங்கிய பின் நிதானமாகவும் நிர்த்தாட்சண்யமாகவும் அவன் அவளுக்குப் பதில் கூறினான்: "இவை என்னுடைய சொந்த சிரமங்கள். நான் பெருமைப்படவோ, சிறுமைப்படவோ இன்று காரணமாயிருப்பவை இவை தான். இவற்றை பங்கிட்டுக் கொள்ள நான் யாரையும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய வறுமையின் துன்பங்களில் அவற்றைக் காண்பதற்காக என்னை விட வசதியுள்ளவர்கள் எதிரே வந்து நிற்பதை நான் விரும்பவும் முடியாது - இரசிக்கவும் வழியில்லை."
- அவனுடைய வாய் சொந்தத் தளர்ச்சியினாலும், ஆற்றாமையினாலும், எழுந்த கோபத்தில் இப்படிப்பட்ட சொற்களை உதிர்த்தாலும், மனம் - தான் அவளை நோக்கி நியமித்து அனுப்பும் இந்தச் சொற்கள் மிகக் கடுமையானவை என்பதை உணர்ந்தே இருந்தன.
அவளோ இந்த வார்த்தைகளில் சீற்றமடையாமல் கண்களில் நீர் நெகிழ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு ஒவ்வொரு வார்த்தையாக எண்ணித் தேர்ந்தெடுத்துத் தொடுத்து வாக்கியம் அமைத்துப் பேசுபவள் போல அவள் அவனை நோக்கிப் பேசினாள்:- "எனக்குத் தனியே என்னுடைய சொந்த சிரமங்கள் என்று பிரிக்கும் படியாக ஒன்றுமில்லை. ஏனென்றால் உங்களுடைய சிரமங்களையே என் சிரமங்களாக உணரப் பழகிவிட்டவள் நான். இந்த வரவு செலவுக்கணக்கிலும், உப்புப் புளிச் செலவிலும் தேய்ந்து விடாமல் - உல்லாசமாக - சுதந்திரமாக நீங்கள் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்று எனக்குள் இரவு பகல் உறங்காமல் இன்னும் நோன்பியற்றுகிறேன் நான்...! கோபத்தில் ஏதேதோ பேசுகிறீர்கள். பரவாயில்லை. ஆனால் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்களுடைய முதல் சிறுகதையைப் பாராட்டி உருகத் தொடங்கின நாளிலிருந்து உங்கள் மனக்கோவிலில் இலட்சுமீகரமாக நின்று - கற்பனையாகிய ஐசுவரியத்தைப் பொங்கச் செய்வது நானல்லாமல் வேறு யார்? நானா? இல்லையா? இல்லையென்று வாயால் துணிந்து நீங்கள் சொல்லிவிடலாம். நான் இன்னொருவருக்குக் கழுத்தை நீட்ட நேர்ந்து விட்ட துர்ப்பாக்கியம் உங்களை அப்படிச் சொல்ல வைக்கும். ஆனால் உங்கள் மனச்சாட்சியை நீங்களே பொசுக்கி விட முடியாது. உங்களுக்கு மனம் இருந்தால் அதற்கு நான் தான் சாட்சி. இன்றும் நாளையும் - ஏன் இந்த மண்டை வேகிற வரையும் அப்படித்தான். என்னுடைய வெறும் மாமிச உடம்பைத் தான் இன்னொருவருக்கு வாழக் கொடுத்திருக்கிறேன். அது நான் செய்த பாவம். மனம் - மனம் என்று வானளாவ எழுத்தில் எழுதியிருக்கிறீர்களே, அந்த அற்புத வஸ்துவை உங்களிடமல்லவா வைத்துவிட்டுப் போனேன்... நம்பி ஒப்படைத்துவிட்டுப் போன பொருளை இல்லையென்று ஏமாற்றுவதுதான் நியாயமா?" - துளசியின் பேச்சு இதுவரை இவ்வளவு கூராக அவன் நெஞ்சில் வந்து தாக்கியதே இல்லை. சோகத்தை கற்பித்துப் பேசுகிறவனின் சொற்கள் வேறு, சோகத்தை அனுபவிக்கிறவர்களின் சொற்கள் வேறு. சோகத்தை இதயத்திலிருந்து கொட்டுகிறவர்களுக்கு அந்தச் சோகமே சொற்களாக வருகின்றன. அது தன்னைப் போல் கற்பித்து எழுதியவர்களின் கற்பனைச் சோகத்தைப் பொய்யாக்கி விடுகிறது என்று அப்போது தோன்றியது சுகுணனுக்கு. துளசி அவ்வளவு உணர்ச்சி நிறைந்த வார்த்தைகளைத் தன் சோகமாகக் கொட்டி விட்டாள் அவன் முன். சிறிது நேரம் அவளுக்கு எதை மறுமொழி கூறுவது, எப்படிக் கூறுவது, எந்தச் சொற்களால் கூறுவது என்றே தெரியாமல் அவன் தயங்கினான். அந்த அறையில் அப்போது அவர்கள் இருவரைத் தவிர வேறெவரும் இல்லை. துளசி அழுது கொண்டே சுகுணனிடம் ஏதோ வினாவியதைக் கண்டு, 'இவர்கள் சொந்தப் பேச்சுக் கிடையே இனி இங்கும் நாம் நிற்கக்கூடாது' என்பது போல் கமலமும் கூட வெளியேறி முன் வராந்தாப் பக்கம் போயிருந்தாள். "தயவு செய்து என்னைத் தனியே விடு துளசி! நான் படவேண்டிய துன்பங்களும், கவலைகளும் அதிகமாயிருக்கின்றன" - என்று கூறியபடியே முன்பு ஃபோனில் கிடைக்காத நண்பருக்கு மறுபடி டயல் செய்தான். இந்த முறை ஃபோனில் அவர் கிடைத்தார். சுகுணன் தன்னுடைய இயல்புக்கு மாறாக டெலிபோனில் அந்த நண்பரிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டியிருந்தது. "ரொம்ப நெருக்கடியான நிலைமை சார்! இந்த முறை எப்படியும் நீங்கள் உதவியே ஆகவேண்டும். ஒரு நல்ல மனிதர் தொடங்கிய காரியம் நின்று போய்விடக் கூடாது என்ற பிடிவாதத்துக்காகத்தான் நான் இதில் தலை கொடுத்து உழைக்கிறேன்..." "....." எதிர்ப்புறம் பேசியவர் எவ்வளவு தேவையாயிருக்கும் என்று கேட்டிருப்பார் போலிருக்கிறது. "சுமார் ஆயிரம் - ஆயிரத்தைந்நூறு ரூபாய் வரை தேவையாயிருக்கும்" - என்றான் சுகுணன். "....." "எப்படியாவது பாருங்கள் சார்." "....." "அப்படியா?... பரவாயில்லை... சார்... உங்களைச் சிரமப்படுத்தி விட்டேன். மன்னியுங்கள்." - சுகுணன் சோர்வோடும், ஏமாற்றத்தோடும், டெலிபோனை வைத்துவிட்டு நிமிர்ந்த போது - எதிரே துளசி தன் கைப்பையைத் திறந்து பளீரென்று மின்னும் புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருந்தாள். அவளையும் அந்தப் பணத்தையும் இலட்சியம் செய்யாதவன் போல வேறு ஏதோ காரியங்களில் மூழ்கினான் அவன். அவனுடைய அந்த அலட்சியத்துக்காகக் கூட அவன் மேல் ஆத்திரப்பட முடியாத அவ்வளவு பிரியத்தை வைத்து விட்ட துளசியோ நிதானமாகப் பணத்தை எண்ணி ஓர் உறையில் போட்டு அதன் மேல் முத்து முத்தான எழுத்துக்களில் 'டைம்ஸுக்கு ஓர் அபலையின் நன்கொடை' - என்று எழுதி அவனிடம் அதை நீட்டினாள். அவன் அதை வாங்கிக் கொள்ள மறுத்தான். "ஏன்? 'டைம்ஸ்' நின்று போய்விடக் கூடாதென்ற அக்கறையும், கவலையும் எனக்கு இருக்கக் கூடாதா?" "டைம்ஸுக்கும் அதன் பிடிவாதக்கார ஆசிரியனுக்கும் சில கொள்கைகள் உண்டு. உன் நன்கொடையை ஏற்க முடியாது." "இப்படிச் சொல்வது உண்மையாயிருந்தால் இன்று வரை சுமார் முப்பதாயிரம் ரூபாய் வரை நீங்கள் என்னிடம் பிடிவாதமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும்..." "என்ன உளறுகிறாய்? எதற்காக உனக்கு நான் முப்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்?" "எத்தனை, எத்தனையோ பெயர்களில் நான் யார் என்று காண்பித்துக் கொள்ளாமலேயே - ஆயிரக்கணக்கான ரூபாய்களையும், பொன் வளையல், பொன் மோதிரங்கள், வைர நகைகள், என்று என்னுடைய சகல ஐசுவரியங்களையும், நீங்கள் 'டைம்ஸு'க்கு நிதி கோரி எழுதி அறிக்கை விட்ட போது பல ஊர்களிலிருந்து அனுப்பியிருக்கிறேன்; என்னுடைய இந்த நன்கொடை மறுக்கப்படுமானால் அவையும் மறுக்கப்படத்தானே வேண்டும்? இதோ நானே அப்படி அவற்றை அனுப்பியதற்கான தபால் இரசீதுகள்; பிரயாண டிக்கெட்டுகள் - எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன்..." - ஒரு கொத்து விமான டிக்கெட்டுகளையும், மணியார்களையும் அனுப்பிய இரசீதுகளையும், பாங்க் டிராஃப்ட்கள் அனுப்பிய இரசீதுகளையும், இன்ஷூர் பவர் அனுப்பிய பதிவு சீட்டுக்களையும் ஆவேசத்தோடு தன் கைப்பையிலிருந்து அவன் மேஜை மேல் அள்ளிக் குவித்தாள் துளசி. அவள் அப்படிச் செய்திருப்பது சாத்தியமென்பதை உறுதியாக நம்பிய சுகுணன் அப்படியே மலைத்துப் போய் அவளை இமையாமல் நோக்கினான். தாங்கிக் கொள்ள முடியாத பெரு வியப்பாயிருந்தது அது. அவளோ ஒரு பாவமும் அறியாத பேதை போல், 'உங்கள் இதயத்தில் நிரம்பிக் கிடக்கும் இலட்சுமீகரம் நான் தான். என்னை அங்கிருந்து தயவு செய்து வெளியேற்ற முயலாதீர்கள்' - என்று இறைஞ்சுவது போல் கண்ணீர் மல்க அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் கூறிய உண்மையை நிரூபிப்பது போல் அவள் கைகளில் நிறைந்திருந்த பொன் வளைகள், காதிலிருந்த வைர அணிகள், மூக்குத்தி, மோதிரம், கழுத்திலிருந்த வைர நெக்லஸ் எல்லாம் அந்த அந்த இடங்களில் இப்போது இல்லாது சாதாரணமான சில அணிகளோடு பொலிவற்று வெறுமையாயிருப்பதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. அவள் மேல் எல்லையற்ற கருணையும் பச்சாதாபமும் பெருகிட அவன் இப்போது அவளை நோக்கினான். அவனுக்குத் தொண்டை கம்மி அடைத்தது. குரல் கரகரத்தது. "நீ இப்படிச் செய்திருக்கக் கூடாது துளசீ! இன்னொருவருடைய உடைமையாகிவிட்டவள் நீ என்பதை மறந்து விட்டாயா?" "மறக்கவில்லை! ஆனால் இது மனிதர்களின் உலகம். வெறும் அன்பினால் மட்டும் நமக்கு வேண்டியவர்களைக் காக்கவோ, வளர்க்கவோ இங்கு முடிவதில்லை. நமக்கு வேண்டியவர்களை அவர்களுடைய தேவைகளுக்குத் திண்டாட விட்டு விட்டுப் பிரியங்களுக்காக மட்டும் எதிர்பார்ப்பது நியாயமாகாது. இன்று இந்தத் துளசி எங்கோ தளிர்த்துத் தழைக்கலாம். ஆனால் இதன் ஆணி வேர் உங்கள் உள்ளத்தில் ஊன்றியிருக்கிறதே! வேர் இருக்கிற இடம் வாடினால் அது செடிக்கு மட்டும் நல்லதா என்ன? மணம் என்பது வேரிலிருந்து ஊறும் மூலப் பொருளாயிற்றே?" "தவறு! நிற்கிற மண்ணின் பெருமையால் தான் அது மணக்கவே முடிகிறது." "நீ உன் பெருந்தன்மையை அளவுக்கதிகமாக நிரூபிக்கிறாய் துளசீ! நான் இவ்வளவுக்குப் பாத்திரமாகத் தகுந்தவன் தானா என்று எனக்கே இப்போது சந்தேகமாக இருக்கிறது. என்னுடைய குணமோ பிடிவாதம். நான் உன்னிடம் அடிக்கடி பேசும் சொற்களோ கடுமையானவை. இருந்தும் நீ என்னை விடாமல் பிரியத்தினால் துரத்துகிறாயே? இதில் என்ன பயன் கண்டாய் நீ?" "பயனும், இலாப நஷ்டமும் பார்க்கிற சிறிய விவகாரமாக இதை நான் நினைக்கவில்லை. நான் மனப்பூர்வமாக வேரூன்றியிருக்கும் சத்தியமான மண் எதுவோ அது வாடக் கூடாது. அந்த மண் வாடினால் நானும் வாடியே தீர வேண்டும்..." "மணந்து கொள்ள முடியாமற் போன பின் 'மணக்க நினைத்திருந்தோம்' என்ற எண்ணத்திலேயே மணந்து கொள்வதை விடச் சிறப்பாக வாழ்கிறோம் நாம்..." "ஒப்புக் கொள்கிறேன். முதல் முதலாக உங்கள் கடுமையும் ஆத்திரமும் நீங்கி இன்று என்னிடம் ஒரு நல்ல வார்த்தை பேசியிருக்கிறீர்கள். இந்த வார்த்தைகளே என்னை உங்கள் முன் சௌபாக்கியவதியாக்குகின்றன. தயவு செய்து இந்தப் பணத்தை எடுத்துக் கொடுத்து 'நியூஸ் பிரிண்ட்' கிளியர் செய்து வாங்க வழி செய்யுங்கள். பத்திரிகையின் வெளிவரவேண்டிய பதிப்புக் கால தாமதமில்லாமல் வெளிவரட்டும். என் உதவியைப் புறக்கணிக்காதீர்கள். நான் வாடாமலிருப்பதற்காக நானே செய்து கொள்ளும் உதவி இது..." "என்னைப் பெரிய கடனாளியாக்குகிறாய் துளசி?" "நானே உங்களுக்குக் கடன்பட்டிருக்கும் போது அது எப்படி சாத்தியம்?..." - சுகுணன் அவளை நோக்கி முழுமையாக முகமலர்ந்து புன்முறுவல் பூத்தான். அவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். சுகுணன் கமலத்தை அழைத்துப் பணத்தை அவள் கையில் ஒப்படைத்தான். அக்கௌண்டண்டிடம் கொடுத்து 'கிளியரிங் கிளார்க்' மூலம் பேப்பருக்கு ஏற்பாடு செய்யும்படி வேண்டியதோடு துளசியையும் சுருக்கமாக அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். பத்திரிகை நிற்காமல் காப்பாற்ற வந்த ஓர் அபூர்வ வன தேவதையைத் தொழுவது போல பாவனையில் துளசியை நோக்கிக் கைகூப்பினாள் கமலம். 'சாசுவதத்திற்கு எல்லை காலத்தின் நெடுமையில்லை. ஒரு விநாடி சத்தியமாக நின்றாலும் அந்த ஒரு விநாடி கூட சாசுவதம் தான். புகழையும் பொறுப்பையும் தாங்குகிற ஆயுதமாய்ப் பழியையும் பாராட்டுதலையும் நிர்ணயிக்கிற சக்தியாய்த் தன் கையிலிருக்கிற எழுதுகோலைப் போல் அவள் நினைவும் தன்னுள் சாசுவதமே' என்று முன்பு ஒருநாள் துளசியைப் பற்றி நினைத்த நினைப்பே இப்போது அவனுள் மிகுந்தது. "நான் புறப்படுகிறேன். நாளைக்கு மறுபடி டில்லி போக வேண்டுமாம். அப்பா நாளைக் காலை விமானத்தில் டிக்கட் வாங்கிவிட்டார். மறுபடி எப்போது சென்னை வருவேனென்று எனக்கே தெரியாது..." துளசி விடைபெற முயன்றாள். "கொஞ்சம் உட்கார்! போகலாம்... உன்னோடு சிறிது பேச வேண்டும் போல் தாகமாயிருக்கிறது..." என்றான் சுகுணன். "நீங்கள் சிறிது பேச விரும்பும் இதே தாகம் - நான் வாழ் நாள் வரை தவிக்க வேண்டிய ஒன்று என்பது ஞாபகமிருக்கட்டும்..." என்று கூறிக்கொண்டே எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் துளசி. "துளசி? உன்னை நான் முன்பு கடுமையாகப் பேசியிருக்கும் சில வார்த்தைகளுக்காக நீ என்னை மன்னிக்க வேண்டும். ஏதோ ஓர் அவசரமான ஆசையில் பிறக்கிற மனிதர்களின் காதல் சத்தியங்கள் வேறு ஏதோ ஓர் அவசரத்தில் அல்லது அவசியத்தில் எத்தனை விரைவாகப் பொய்யாய்ப் போய் விடுகின்றன? அதையும் ஒரு நிறைவாக ஒப்புக் கொள்கிற திருப்தியை இப்போது நீ எனக்கு நிரூபித்து விட்டாய். ஆசையின் அழியாத தெய்வீக எல்லை நிராசை தான். ஏனென்றால் அந்த நிராசை என்ற எல்லையில் ஆசைப்படுதல் என்ற உணர்வுத் துடிப்புக்கு முடிவே இருப்பதில்லை. திருப்தியில் ஆசை நெருப்பு நீறு பூத்து அவிந்து போய்ச் சாம்பலாகிக் குவிந்து விடுகிறது. நாமோ இப்போது பரிபூரணமாக நிராசையோடு எதிரெதிரே நிற்கிறோம். நம்முடைய இந்தத் தாபம் - இந்த ஆசை நெருப்பு என்றும் அணையவே அணையாது. ஆசையின் முடியாத எல்லை நிராசைதான் என்று எனக்கு இப்போது நன்றாக விளங்குகிறது. நிராசை தான் மனிதனை மயக்குகிறது. இல்லையானால் நிராசையில் முடிந்த அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு, கதைகளில் மட்டும் ஏன் அத்தனை கவர்ச்சி உண்டாக வேண்டும்? தாபம், நிராசை, அதிருப்தி, குறைவு, தாகம், என்பன போல் நிறையாத மூளியான உணர்வுகளால் தான் மனிதன் தன்னுடைய சொர்க்கத்தைத் தேட வேண்டுமென்பது கடவுளின் சித்தம் போலிருக்கிறது." "....." "'நீ ஒரு பூமாலை' - என்று நீண்ட நாட்களுக்கு முன் ஒரு முறை உன்னிடம் கூறினேன்; நினைவிருக்கிறதா துளசி?..." "நினைவில்லாமலென்ன? 'வீரர்களின் கம்பீரமன தோள்களை அலங்கரிக்க வேண்டிய மணமாலைகள் சந்தர்ப்ப வசத்தால் கோழைகளின் தளர்ந்த கைகளில் சூட்டப்பட்டு விடுவதும் உண்டு போலும்' - என்று பின்னால் அதையே மாற்றி எழுதி எனக்கு வாழ்த்து அனுப்பினீர்களே? அது கூட நினைவிருக்கிறது." "தயவு செய்து இப்போது அதை மறந்து விடு துளசீ..." "நான் வசையாக எதுவும் உனக்கு எழுதவில்லை. என்னுடைய வசையிலும் - என் அன்பின் தொனி இருப்பதை நீ உணர்ந்திருக்கலாம்..." "உங்கள் சொற்களில் அன்பை உணர்ந்ததை விட வேதனையைத் தான் நான் அதிகமாக உணர்ந்தேன். அதற்காகவும் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் 'சாதாரண மனிதர்களின் வேதனைதான் அவர்களுக்குத் தவம். எல்லாராலும் தவம் செய்யக் காட்டுக்குப் போய்விட முடியாது. பலருக்கு அவர்கள் படுகிற துன்பங்களே அவர்கள் அடைய வேண்டியதை அடைவிக்கிற தவமாக இருக்கும்' - என்று நீங்களே எழுதியிருக்கிறீர்கள். அப்படி நான் செய்த தவம் இன்று பலித்திருக்கிறது..." "உண்மை! நாம் மனிதர்கள். பலவீனமான நம் அதிருப்திகளுக்கிடையேயும் அன்பினால் தான் நிமிர்ந்து நடக்கிறோம். வெளிப்படையாக உன்னிடம் பலமுறை நான் கடுமையான சொற்களைக் கூறியிருந்தாலும் எனக்குள் அந்தரங்கமாக உன்னை நினைத்து நினைத்துக் கருணை மயமாக நெகிழ்ந்திருக்கிறது என் உள்ளம். இன்னொருத்தியின் உள்ளத்தில் நாம் தவிப்பாகவோ - ஏக்கமாகவோ நிரம்பியிருக்கிறோம் என்ற ஞாபகமே ஒரு தவிப்பாக எரிந்திருக்கிறது என்னுள். அதை உன்னால் புரிந்து கொள்ள முடிந்ததோ இல்லையோ எனக்குத் தெரியாது?" "புரியாமலென்ன? 'வாழ்வின் துயரங்களுக்கு வெறும் நெஞ்சில் மட்டும் சாட்சியாக நிற்கிற ஊமைத் துணைகளால் பயனில்லை' - என்று நீங்கள் ஒரு முறை என்னிடம் குத்திக் காட்டியிருக்கிறீர்கள். அதை உங்களை விட நன்றாக நான் உணர்ந்திருந்த காரணத்தால் தான் இப்போது கைகளாலும் உதவி செய்து சாட்சியாக நிற்பதற்கு வந்தேன். 'டைம்ஸ்' நடந்தால் தான் உங்களுடைய பெருமை காப்பாற்றப்படும் என்பதில் உங்களை விட எனக்குக் கவலை அதிகம்..." "குயிலைப் போல், கிளியைப் போல், சிட்டுக் குருவியைப் போல், மைனாவைப் போல் பெண்ணின் அன்பிற்கும் மெல்லிய சிறகுகள் தான் உண்டு என்று முன்பு நான் நினைத்திருந்தேன். 'விடாமல் நம்மைத் துரத்தும் இந்தக் காதல் பறவையின் மெல்லிய சிறகுகள் வலிக்குமே' - என்று கூடச் சில சமயங்களில் அந்தரங்கமாக உன்னை நினைத்து நான் பச்சாதாபப்பட்டிருக்கிறேன். ஆனால் உன்னுடைய அன்பின் சிறகுகள் மெல்லியவையாயினும் வல்லவைகளாயிருப்பதை - எவ்வளவு தூரம் வேண்டுமாயினும் துணைப் பறவையைத் துரத்திப் பறந்து வர முடிகிற அளவு வல்லவைகளாயிருப்பதை இன்று உன் செயல்களிலும், சொற்களிலுமிருந்து நான் நன்றாகத் தெரிந்து கொள்ள முடிகிறது துளசீ" "....." சிறிது நேர மௌனத்துக்குப் பின் துளசி அவனிடம் சிறு குழந்தை போல் ஓர் அல்ப ஆசையைத் தெரிவித்தாள். "தயவு செய்து இந்த ஆட்டோகிராப்பில் இரண்டு வரி எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பீர்கள் அல்லவா. எனக்கு உங்கள் கையெழுத்துக்களைத் தினம் ஒரு முறையாவது கண் குளிரப் பார்க்க வேண்டும் போல ஆசையாயிருக்கும்." "என் எழுத்தில் என்னைப் பார்ப்பதை விட உன் இதயத்தினுள்ளேயே என்னை நீ சுலபமாகப் பார்த்துக் கொள்ள முடியுமே துளசீ...!" "இதுவரை நான் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டிய அவசியமில்லாது அருகிலேயே இருந்து விட்டேன். இப்போது தொலை தூரத்துக்குப் பிரிந்து போவதால் ஏதோ அல்ப ஆசை. உங்கள் கையெழுத்தையோ போட்டோவையோ நான் வேறுவிதமாகப் பார்க்க உலகம் ஒப்பாது. தயவு செய்து மறுக்காதீர்கள்" - என்று கூறியவாறே ஆட்டோகிராப்பை நீட்டினாள் அவள். அதில் தான் எழுத வேண்டிய பக்கத்துக்கு எதிர்ப்புறம் தனது சிறிய புகைப்படம் ஒன்று அளவாகக் கத்தரித்து ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டான் சுகுணன். "மனிதர்கள் நாடும் ஆசைகள் இப்படி அல்பமானவை தான். ஆனால் இந்த அல்பமான சுகங்களைத் தானே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மகாகவிகள் பெரிதாகக் கொண்டாடி எழுதியிருக்கிறார்கள்" - என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான் சுகுணன். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு கைப் பையின் உள்ளே வைத்தாள். மறுபடியும் அவள் கண்களில் நீர் திரண்டது. "அப்பா டில்லியில் என் சொந்த ஆடம்பரச் செலவுகள் அதிகமாயிருக்குமென்று மாதம் ஆயிரம் ரூபாய் அனுப்புகிறார். இவருடைய சம்பளம் வேறு நிறைய வருகிறது. உங்களுடைய பத்திரிகையைக் காப்பாற்றுவதற்காக நான் பவுடர் ஸ்நோவைக் கூட விட்டாயிற்று. வீட்டுச் செலவையும் சொந்த ஆடம்பரச் செலவுகளையும் மீதம் பிடித்தாவது டைம்ஸுக்கு என் உதவிகளைத் தொடர்ந்து செய்வேன்." "மறுக்கவில்லை. என்னைத் துரத்தும் காதல் பறவையின் சிறகுகள் அவ்வளவிற்கு வலிமையானவை என்று உணர்ந்து அதற்கு நான் நன்றி செலுத்துகிறேன்." "நன்றி வேண்டாம். அது என்னை அந்நியமாக்குகிறது. அன்பு செய்யுங்கள், போதும். நான் உங்களிடம் ஒப்படைத்திருக்கும் என் மனத்தை நீங்கள் விட்டு விடாமல் பேணினாலே எனக்குத் திருப்தி தான்." - அவன் அவளை வழியனுப்புவதற்காகப் படியிறங்கி வாயில் வரை சென்ற போது அப்போதுதான் நியூஸ் பிரிண்ட் ரீல்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. உள்ளே மெஷின் ஓடும் ஓசை கடமுட வென்று எழுந்தது. "என்னை மறந்து விட மாட்டீர்களே...?" கேட்கத் தொடங்கியவள் விம்மிக் கொண்டு வரும் அழுகையை உள்ளேயே அடக்க முயல்வது குரலில் தெரிந்தது. சுகுணனின் இதயத்தை வேதனை பிசைந்தது. இத்தனை பெரிய பிரிவாற்றாமை அவன் நெஞ்சை இதுவரை சுமையாக அழுத்தியதே இல்லை. "அசடே! பைத்தியம் போல இப்படித் தெருவில் அழலாமா? தன்னுடைய நம்பிக்கைகளை ஒருவனிடம் பூரணமாக ஒப்படைத்து விட்ட ஒருத்தியின் உடம்பை யார் மணந்து கொண்டால் தான் என்ன? உண்மையில் அந்த நம்பிக்கைகளை ஆள்கிறவன் அல்லவா அந்த மனத்தை ஆள்கிறான். என்னை நம்பு. கவலையின்றிப் போய் வா! நீ இதயபூர்வமாக நோன்பியற்றுகிற வரை என் எழுத்திலும் இந்தப் பத்திரிகையிலும் இலட்சுமீகரம் குறையவே குறையாது" - என்று அருகே வந்தவளிடம் நாத் தழுதழுக்கக் கூறினான் அவன். சில விநாடிகள் குனிந்து பூமியையே பார்த்துக் கொண்டு தயங்கி நின்ற துளசி - தொண்டையை அடைக்கும் குரலில் "வருகிறேன்..." என்று கூறிவிட்டு மீண்டும் காரை நோக்கி நடைப்பிணமாகச் சென்றாள். அந்தப் பிரியும் நேர மன நிலைக்குப் பொருத்தமாக அமைந்தாற் போல, 'மனிதர்களின் ஆசைகளே இப்படி அல்பமானவை தான்' - என்று அவளுடைய கையெழுத்து நோட்டுப் புத்தகத்தில் தான் எழுதியதை மீண்டும் நினைத்துக் கொண்டான் அவன். அவள் கார் புறப்பட்டது. நகரும் காரிலிருந்தே ஒரு கையை ஸ்டியரிங்கில் வைத்தபடி இன்னொரு கையை உயர்த்தி ஆட்டி விடை பெற்றாள் அவள். அவனும் வலது கையை உயர்த்தி ஆட்டினான். கார் தெருத் திரும்புகிற வரை நின்று பார்த்துக் கொண்டிருந்தான் சுகுணன். மனத்தில் ஏதோ ஊமையாக அழுதது. அடுத்த கணமே அங்கு ஒரு திடமான சமாதானமும் பிறந்தது. 'ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவருக்கு மற்றொருவர் அர்ப்பணமாகிவிடுகிற நிச்சயமான காதல் என்பது முனிவர்களின் தவச்சாலைகளில் பக்தி சிரத்தையோடு அணையாமல் காக்கப்படும் வேள்வித் தீயைப் போல் உள்ளேயே கனிகிறது. வாழ்வின் சோர்வுகளில் அது அணைவதில்லை. நீறு மட்டுமே பூக்கிறது' - என்று எண்ணியபடியே மேலே படி ஏறி அலுவலகத்துக்குள்ளே திரும்பினான் அவன். இனி அடுத்த வினாடியிலிருந்து ஓர் இலட்சியப் பத்திரிகாசிரியனை நோக்கிச் சமூகத்திலிருந்து திறக்கும் எத்தனையோ நெற்றிக் கண்களைப் பொறுத்துக் கொண்டு அவன் வெதும்பி விழுந்து விடாமல் நிற்க வேண்டியிருக்கும். அந்த நெற்றிக் கண் சூடுகளை அவன் இனிமேல் தளராது தாங்க முடியாது. அவனுக்குள் இருக்கும் மற்றொரு இதயத்தின் அன்பு அதற்குத் துணை செய்யும். அந்த அன்பில் அவன் வேதனை இருக்கிறது. அந்த வேதனையில் தான் அவன் அன்பும் இருக்கிறது. சாதாரண மனிதர்களின் வேதனை தான் அவர்களுக்குப் பெரிய தவம். ஏனென்றால் வாழ்க்கையை விட்டு விட்டுக் காட்டுக்குப் போய் வேறு தனித் தவம் செய்ய அவர்களால் முடியாது. உள்ளே போய் அமர்ந்த சுகுணன் அன்றைய 'டைம்ஸ்' பதிப்புக்குத் தலையங்கம் எழுதப் பேனாவை எடுத்தான். வெளியே மாலை இருள் மயங்கத் தொடங்கியிருந்தது. கார் ஹார்ன் ஓசைகளும், மனிதர்களின் குரல் விகாரங்களும் நெருக்கியடித்துக் கொண்டு கேட்கத் தொடங்கின. இருந்தாற் போலிருந்து மகாதேவனோடு தாமஸ் மன்றோவின் குதிரைச் சிலை கண்முன் மானசீகமாக ஓடுவது போல் ஒரு பிரமை நிழலாடியது. அவன் எழுதத் தொடங்கினான். சக்தி வாய்ந்த சொற்கள் அவன் நியமித்த வேகத்தோடு - விதியோடு காகிதத்தில் போய் இறங்கி உருவாகி நின்றன. ஒரு நல்ல பத்திரிகையாளனுக்கு இரண்டு கவலைகள் உண்டு. சமூக நியாயத்தைப் பற்றிய கவலைகள். சொந்த நியாயங்களைப் பற்றிய கவலைகள். அவனுக்குச் சொந்தமென்று எதுவுமில்லை. ஆனால் அவனுள்ளும் ஒரு கவலை இருந்தது. மறுபடியும் கூறினால் அந்தக் கவலை தான் அவன் வேதனை. அந்தக் கவலை தான் இன்று அவன் மகிழ்ச்சி. இரண்டும் வேறு வேறு இல்லை. தன்னுடைய வறுமைக்காகவும் பிறருடைய அறியாமைகளுக்காகவும் சேர்த்துப் போராட வேண்டிய ஒரு தேசத்தில் தான் வாழ்கிறோம் என்பதை இனி ஒவ்வொரு கணமும் அவன் நினைவு கூர்ந்தாக வேண்டிய சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கும். வறுமை உள்ளவர்களிடம் நல்லெண்ணமும் வசதி உள்ளவர்களிடம் அலட்சியமும் மிகுந்த ஓர் இரண்டுங்கெட்டான் தேசத்தில் நியாயங்களைச் சாதிக்க முயலுகிற ஓர் இலட்சியப் பத்திரிகையாளனின் சிரமங்கள் எல்லாம் இனி அவன் அடைய வேண்டியிருக்கும். புதுமைக்கும், வளர்ச்சிக்கும் செவி சாய்த்து வரவேற்கும் மனப்பான்மையில்லாத ஓர் ஆட்டுமந்தைக் கூட்டத்தைத் திருத்துவதற்குப் பிடிவாதமும், இலட்சியமும் மட்டும் போதாதென்பதை ஒவ்வொரு கணமும் அவன் உணர வேண்டியிருக்கும். பிடிவாதமும், இலட்சியமும் சாதிக்க முடிந்ததை விடச் சாதுரியமும் சமயோசித புத்தியுமே அதிகமாகச் சாதிக்க முடியும் என்ற சாதாரண நடைமுறை உண்மையையும் எதிர்கொண்டாக வேண்டியிருக்கும். அறியாமைக்கு எதிராக அறிவைக் கொண்டு போராட வேண்டியது தவிர வெறும் மனிதர்களின் சூழ்ச்சிக்கு எதிராக அறிவைக் கொண்டு போராட வேண்டியிருக்கும் என்று இனி அவன், உணரவும் நேரிடலாம். யாருடைய அநியாயங்களை எதிர்த்து அவன் குரல் கொடுக்கிறானோ அந்த அநியாயங்களைப் பயிர் செய்து பிழைப்பவர்கள் அவனை நோக்கிக் கோரமான நெற்றிக் கண்களைத் திறந்து வெதுப்பவும் முயலலாம். ஆனால் அதற்காக அவன் தயங்கவோ, தளரவோ முடியாது. அவன் தனக்குள் அணையாமல் காக்கும் அன்பு என்கிற வேள்வி நெருப்புத் தான் சமூகத்தின் மூலை முடுக்குகளிலிருந்து அவனை நோக்கித் திறக்கும் இந்தக் கோரமான அனல் விழிகளிலிருந்து மீளும் சத்தியத்தை இனி அவனுக்குத் தரவேண்டும் போலும்! (முற்றும்) |