13
சாதாரணமான சிலருடைய மரணத்தினால் ஓர் உயிர் மட்டும் தான் போகிறது. ஆனால் அசாதாரணமான வேறு சிலருடைய மரணத்தினாலோ ஒரு நல்ல இயக்கமே போய் விடுகிறது. நல்லவர்கள் கெடுதலும் அழிவும் அடைந்து நலியும் அதே வேளையில் தீயவர்கள் பயனும் வளர்ச்சியும் பெறுவது போல் தென்படும் பிரமை நிகழ்ச்சிகள் சில உண்டு. நேஷனல் டைம்ஸ் மகாதேவன் என்ற சிறந்த பத்திரிகையாளர் மாரடைப்பினால் திடீரென்று காலமாகிவிட்ட செய்தி, பத்திரிகையின் மரண அறிவிப்புப் பகுதியில் தென்பட்டுத் துணுக்குறச் செய்த அதே வேளையில்... பைந்தமிழ் நாவலர், பாண்டுரங்கனாருக்கு அரசாங்கத்தாரின் அகாதெமிப் பரிசு அளிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி தெரிந்தது. எத்தனை செய்திகள் தெரிந்தாலும் அவற்றில் கவரப்பட்டுச் செல்லாமல் மகாதேவனின் திடீர் மரணச் செய்தி ஒன்றே சுகுணனின் உணர்வை ஓட்டமறச் செய்து விட்டது. அவருக்காக முந்தைய தினங்களில் உதக மண்டலத்துக்கும் கூனூருக்கும் இடையேயுள்ள கிராமபோன் ஊசித் தொழிற்சாலையைப் பார்த்து விட்டு வந்ததையெல்லாம் கழிவிரக்கத்தோடு நினைவு கூர்ந்தான் சுகுணன். காணி நிலத்தை ஏழை உழவன் உழைத்து உழைத்து... உரமாக்கிப் பயிர் செய்தாற் போல் அவர் தனியாக வளர்த்து நிலைநிறுத்திய 'நேஷனல் டைம்ஸ்'இதழையும் - துன்பங்களையும் வறுமைகளையும் உடைய அவருடைய பெரிய குடும்பத்தையும் நினைத்துக் கவலையிலாழ்ந்தான் அவன். நினைப்பதற்கே தயங்கி மலைக்கக்கூடிய பெருங் கவலையாய் இருந்தது அது. துன்பப்படுகிறவர்களை எதிர்ப்பதில் மரணமும் அல்லவா முந்திக் கொண்டு நிற்கிறது? மகாதேவனின் மரணம் ஒரு தனி மனிதனின் சாதாரண மரணமாக மட்டும் அவனுக்குத் தோன்றவில்லை. ஒரு நல்ல இயக்கத்தின் மரணமாகவும் தோன்றி கவலையிலாழ்த்தியது. நெற்றி வேர்வை நிலத்தில் வழிய உழுது பாடுபட்ட நல்ல உழவன் ஒருவன் அதன் பயனை அடையும் முன் மாண்டு விட்டது போல சுதந்திரச் சிந்தையோடு ஒரு நல்ல பத்திரிகையைத் தொடங்கி வளர்த்தவர், அது ஒளி பெருகி ஓங்கிடக் காணாமல் மாண்டதை எண்ணி எண்ணி வேதனையில் மூழ்கினான் சுகுணன். சென்ட்ரல் நிலையத்தில் இறங்கிய போது அதன் கலகலப்பையும், ஆரவாரத்தையும் உணரக் கூட ஆற்றலின்றி ஒரு இயந்திரம் போல் வெளியேறி வாடகைக் காரைத் தேடினான் அவன். மனத்தின் துயரமும் தடுமாற்றமும் அவனை நிற்கவும் முடியாமல் புறத்திலும் தள்ளாடச் செய்தன. மகாதேவனைப் போல் தன்மானமும் தன்னம்பிக்கையும் கொண்டு தனியே வெளியேறிப் பத்திரிகை நடத்திய தீரனின் தோல்வியை அல்லது அழிவை எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கும் பெரும் பத்திரிகை முதலாளிகளும், எதிரிகளும், பொறாமைக்காரர்களும் இந்த மரணத்துக்காக உள்ளூற எப்படி எப்படியெல்லாம் மகிழ்ந்திருப்பார்கள் என்றெண்ணியபோது அந்த எண்ணத்தையே அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாதாரணமான சிலருடைய மரணத்தினால் ஓர் உயிர் மட்டும் தான் போகிறது. ஆனால் அசாதாரணமான வேறு சிலருடைய மரணத்தினாலோ ஒரு நல்ல இயக்கமே போய் விடுகிறது. மகாதேவன் இரண்டாவது விதமான மரணத்தையே அடைந்துவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. அவருடைய இயக்கம் அழிந்து போவதைச் சுதந்திரச் சிந்தனையுள்ள எந்தத் தமிழ்ப் பத்திரிகையாளனும் விரும்ப மாட்டான் என்று சுகுணன் அறிவான். வாடகைக் காரில் நேரே மகாதேவன் வீட்டிற்கு விரைந்தான் அவன். போகிற வழியில் மனத்தில் ஏதோ தோன்றவே ஒரு வெற்றிலை பாக்குக் கடையின் அருகில் காரை நிறுத்தி அன்றைய காலை 'நேஷனல் டைம்ஸ்' - வெளிவந்திருக்கிறதா இல்லையா என்று விசாரிப்பதற்காக இறங்கினான். நல்ல வேளையாக அவன் பயந்தது போல் வராமலில்லை. கடை முன்பு 'டைம்ஸின்' வால்போஸ்டர்கள் தொங்கின, பத்திரிகையும் வந்திருந்தது. ஆனால் தலையங்கமோ செய்திகளோ அதிகம் இல்லை. மகாதேவனின் அருங்குணங்களைப் பாராட்டும் இரங்கற் கட்டுரைகளும், பிரமுகர்களின் அனுதாபக் கடிதங்களும், புகைப்படங்களுமாக எட்டுப் பக்கம் மட்டும் அடித்து வெளியிடப்பட்டிருந்தது. முதல் நாள் நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு அவர் திடீரென்று மாரடைப்பால் காலமாகியிருந்தார். மத்தியானம் பன்னிரண்டு மணிவரை அவர் இருந்து கவனித்திருந்தும் மறூநாள் இதழ் நாலு பக்கம் தாம் வெளிவர முடிகிறதென்றால் இனிமேல் நாளை முதல் யார் கவனிப்பில் பத்திரிகை எப்படி வெளிவரும் என்ற கேள்வி பெரிதாக எழுந்தது அவன் மனத்தில்.
"நான் ஒரு நாள் இல்லாமல் போய்விடலாம். ஆனால் இந்தப் பத்திரிகை இல்லாமல் போய்விடக்கூடாது" என்று மகாதேவன் வாய்க்கு வாய் உறுதி கூறும் சொற்கள் நினைவு வந்து சுகுணனைக் கண் கலங்கச் செய்தன. பத்திரிகையை விலைக்கு வாங்கி அவன் கடை வாயிலிலேயே பிரித்துப் பார்த்த போது - வியாபாரத்துக்கும் அதிகமான கருணையோடு, "ஆசிரியர் ரொம்ப நல்லவர்ங்க. திடீர்னு போயிட்டாரு. நாளைக்கு இந்தப் பேப்பர் வருமோ வராதோ?... இதைத்தான் வாங்கிப் படிப்பேனின்னு பிடிவாதமாக இருக்கிறவங்க இனிமே சங்கடப்படுவாங்களேன்னு கவலையாயிருக்கு" - என்றான் கடைக்காரன்.
அதைக் கேட்டுக் கொண்டே வாடகைக்காரை நோக்கி நகர்ந்தான் சுகுணன். கார் மறுபடியும் புறப்பட்டது. ஐஸ் ஹவுஸ் பக்கம் திரும்பி மகாதேவனின் வீட்டுக்கு முன் கார் நின்ற போது - அவர் நீத்துச் சென்ற குடும்பத்தின் கவலையும் - அதைவிடப் பெரிய குடும்பமான இதைத்தான் வாங்கிப் படிப்போமென்று பிடிவாதமாக டைம்ஸை வாங்கிப் படிக்கும் நல்ல வாசகர் குடும்பத்தைப் பற்றிய கவலையும் சேர்ந்தே சுகுணனை வாட்டின. வீட்டு வாயிலில் கூட்டம் கூட்டமாக யார் யாரோ நின்றார்கள். சுகுணனைப் பார்த்ததும் மகாதேவனின் மனைவி கோவென்று கதறியழத் தொடங்கிவிட்டாள். குழந்தைகள் வயது வந்த பையன், பெண் எல்லாரையும் சேர்த்துப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. வேதனை மிகுதியில் சம்பிரதாயமாகத் துக்கம் விசாரிப்பதற்குத் தேவையான சாதாரணச் சொற்கள் கூட அப்போது அவனுக்குக் கிடைக்கவில்லை. வாயிற்புறம் வந்து பத்து நிமிடத்துக்கு ஒரு தரம் அனுதாபத் தந்திகளைக் கையெழுத்திட்டு வாங்கிய வண்ணம் இருந்தார்கள். துக்கத்துக்கு வருவோர் போவோர் கூட்டம் அதிகமாக இருந்தது. சம்பிரதாயமான துக்கத்தை ஒரு வழியாகக் கேட்டு முடிந்த பிறகு, "ஆபீஸை யார் கவனிக்கிறார்கள்? அடுத்த வாரம் வெளியிட வேண்டிய இண்டஸ்டிரியல் ஸப்ளிமெண்ட் அரைகுறையாக இருக்குமே..." என்று மெல்ல விசாரித்தான் சுகுணன். "ஆபீஸ் என்ன வேண்டிக் கிடக்கிறது? பாழாய்ப் போன ஆபீஸ் தானே அவரை இப்படி வாரிக் கொண்டு போயிற்று. இதற்காக இராப் பகலாக உயிரை விட்டு உயிரை விட்டுத்தான் இப்படியாச்சு..." - என்று அந்த அம்மாள் கண்ணீருக்கிடையே குமுறினாள். அப்போதுள்ள நிலையில் அவர்களிடம் இதைப் பற்றி விசாரித்துப் பயனில்லை என்று உணர்ந்த சுகுணன் - மகாதேவனின் மூத்த பையனைத் தனியே வாயிற்புறம் அழைத்துச் சென்று விவரங்களை விசாரித்தான். அவனுக்கும் விவரமாக எதுவும் சரியாகத் தெரியவில்லை. "கிராமத்திலிருந்து பெரியப்பா வந்திருக்கார்; காலையிலேயே 'டைம்ஸ்' ஆபீசுக்குப் புறப்பட்டுப் போனார், இன்னும் திரும்பி வரவில்லை. போறதுக்கு முன்னே அம்மாவிடமும் பேசி விட்டுத்தான் போயிருக்கார். அநேகமாக மெஷின்மேன், ஃபோர்மென், கம்பாஸீட்டர்களுக்கெல்லாம் இன்னிக்கே கணக்குத் தீர்த்துடறதாக ஏற்பாடு. நாளைக்குப் பேப்பர் வரது சந்தேகம். பிரஸ்ஸையும் விற்கச் சொல்லி அம்மா சொல்லியாச்சு" - என்று பையன் இழுத்துப் பேசி நிறுத்திய போது சுகுணன் அப்படியே திகைத்து நின்று விட்டான். அந்த ஏற்பாடு மகாதேவனின் ஆன்மாவையும் கொன்று விடும் போலிருந்தது. "எங்கேயாவது அடங்கி வேலை பார்த்தாலும் பார்த்திருக்கலாம். மகாதேவன் பத்திரிகை தொடங்கி அதிலேயே செத்துத் தொலைந்தார்! பத்திரிகையும் செத்தது" - என்ற மானக் குறைவான பேச்சு இந்த உலகில் எழாமல் உயிரைக் கொடுத்தாவது தடுத்து விட வேண்டுமென்று அவன் தவித்தான். ஒரு நல்ல பத்திரிகையாளனின் மனத்தை இன்னொரு நல்ல பத்திரிகையாளன் தான் புரிந்து கொள்ள முடியும். மகாதேவனின் அகால மரணத்தை விடக் கொடுமையானது அவருடைய பத்திரிகையின் நிர்பந்தமான மரணம் என்பதை அவன் உயிர்த் தவிப்போடு உணர்ந்தான். துடித்தான். 'கடைசி நல்ல எழுத்தாளனால் கூட ஒரு பத்திரிகையை இந்த நாட்டில் வெற்றிகரமாக நடக்கும்படி நிலைநாட்டிவிட்டுப் போக முடியவில்லை' - என்ற அவநம்பிக்கையான எண்ணம் பொதுமக்களிடம் நிலைத்து விடவே இது உதவும் என்று அவனுக்குத் தோன்றியது. மகாதேவனுக்குத் தான் செய்ய வேண்டிய மிகப் பெரிய மரியாதை அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டு விடாமல் காப்பது தான் என்று அவனுக்குப் புரிந்தது. உள்ளே ஓடினான். மகாதேவனின் மனைவியிடம் இலட்சியத்தைச் சொன்னால் அந்தத் துக்க வேளையில் அது புரியாது என்பது அவனுக்குத் தெரியும். எனவே இலாப நஷ்டக் கணக்கைத் தொடங்கிப் பத்திரிகையைக் கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தாமலிருப்பது பல வகையிலும் இலாபம் தரும் என்பது போல் பிடிவாதமாக வாதிட நினைத்தான் அவன். அந்த முயற்சியிலும் முதலில் தோல்வியே கிடைத்தது. அவன் கூறியது அவர்களுக்குப் புரியவில்லை. "பேப்பருக்குக் கடன், மைக்குக் கடன், இட வாடகை நிறைய பாக்கி நிற்கிறதாம்... நான் பெண் பிள்ளை. தனியா எப்படி இதையெல்லாம் அடைக்க முடியும். அப்படியே நடத்தினாலும் அவர் உயிருக்கே எமனாக முடிந்தது - என்னை மட்டும் வாழ வச்சிடப் போறதா என்ன?" என்று தீர்மானமாக மறுத்தாள் அந்த அம்மாள். அப்புறமும் பொறுமை இழக்காமல் அந்த அம்மாளோடு விவாதித்தான் சுகுணன். "இவ்வளவு கடனும் இருப்பதால் தான் அதைத் தொடர்ந்து நடத்துவது நல்லதென்கிறேன். அவர் அரும்பாடுபட்டுப் பத்தாயிரம் ரூபாய் வரை விளம்பரங்கள் சேகரித்த 'இண்டஸ்டிரியல் ஸப்ளிமெண்ட்' அரைகுறையாகக் கிடக்கிறது. பத்திரிகை நின்று விட்டாலோ அவ்வளவும் வீண். நடந்தால் அவ்வளவு கடனும் அடையும். அவருடைய ஆசையும் அழியாது. நல்ல காலமும் விரைவில் பிறக்கும். தயவு செய்து இதில் என்னை நம்பி விட்டு விட்டால் உங்களுக்கு நான் நாளை நிச்சயமாக நல்ல பதில் சொல்ல முடியும்" என்று மன்றாடினான் சுகுணன். இறுதியில் ஒரு வழியாக அந்த அம்மாள் மனமிரங்கியது. பையனிடம் விவரம் சொல்லிச் சுகுணனோடு கூட அனுப்பினாள். சுகுணன் மகாதேவனின் மூத்த பையனோடு தம்புச் செட்டித் தெருவிலிருந்து டைம்ஸ் காரியாலயத்துக்கு விரைந்தான். அங்கே மகாதேவனின் சகோதரருக்கும் தொழிலாளர்களுக்கும் விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பேச்சு ஒரு முடிவுக்கு வரவில்லை. சுகுணனைக் கண்டதும் தொழிலாளர்கள் முகமலர்ச்சியடைந்தனர். "சார் நீங்களே சொல்லுங்க... ஐயா அரும்பாடுபட்டு வளர்த்ததை ஒரே நாளில் இழுத்து மூடிப்பிட்டு எங்களையெல்லாம் தெருவிலே நிறுத்திடறது உங்களுக்கே சரியாப் படுதா?" - என்று சுகுணனைக் கேட்டார்கள் ஃபோர்மெனும் பிற தொழிலாளர்களும். இதற்குள் மகாதேவனின் மகன் பெரியப்பாவை உள்ளே தனியாக அழைத்துச் சென்று ஏதோ விவரம் கூறவே அவர் திரும்பி வந்து சாவிக் கொத்தைச் சுகுணனிடம் கொடுத்துவிட்டு, "சார்! இனி மேல் உங்க பாடு. பேசித் தீர்த்துக்குங்க" - என்றார். "தீர்ப்பதற்கு ஒன்றுமில்லை. போனவருக்கு நாம் செய்கிற பெரிய மரியாதை அவர் நம்பிக்கையைத் தொடர்ந்து செயலாக்குவதுதான்" - என்றான் சுகுணன். அடுத்த கணம் டெலிபிரிண்டர் ஒலி சுறுசுறுப்பாக இயங்கியது. அச்சுக் கோர்ப்பவர்கள் விரைந்தார்கள். சுகுணன் கம்போஸுக்குச் செய்தியைத் தயாரித்துக் கொடுப்பதில் ஈடுபட்டான். இன்னொருபுறம் இண்டஸ்டிரியல் ஸப்ளிமெண்டுக்கான வேலைகளும் தொடர்ந்தன. மகாதேவனின் மறைவு பற்றியும் இதற்குப் பின்னும் அவரை நன்றாக நினைவு கூற ஒரே வழி அவருடைய பத்திரிகை தான் என்பதைப் பற்றியும், சுகுணனே உருக்கமாக ஒரு தலையங்கம் எழுதினான். பம்பரமாகக் காரியங்களைச் செய்து அன்று மாலையில் வெளியாக வேண்டிய சிட்டி எடிஷனையும் அனுப்பி வெளியூர்ப் பார்ஸல்களையும் அனுப்பி முடித்த போது சுகுணன் களைத்து போயிருந்தான். ஆனாலும் தலை சிறந்த இலட்சியவாதி ஒருவர் தொடங்கிய பத்திரிகை ஒரு நாள் கூட நிற்காமல் வெளிவந்து விட்டது என்ற பெருமிதம் மனத்தில் இருந்தது. பத்திரிகை நிச்சயமாய் நின்று போய்விடும் என்று எதிர்பார்த்திருந்த பணப் பெருச்சாளிகளுக்கு அது பெரிய அதிர்ச்சியாகவும் இருந்தது. களைப்போடு அன்றிரவு அவன் அறைக்குத் திரும்பும் போது - வழியில் தாமஸ் மன்றோவின் குதிரைச் சிலையைப் பார்க்க நேர்கையில் மகாதேவனை நினைத்து ஓரிரு கணங்கள் கண் கலங்கினான். அப்படிக் கலங்கிய போது அந்தச் சிலை திகைத்து நிற்பது போலிருந்தது. பத்திரிகை நடத்தி வெற்றி காண வேண்டுமென்ற வைராக்கியத்தோடு மறுபடி நிமிர்ந்து திடமாகப் பார்த்த போது அந்தச் சிலை விரைவாக நகர்வது போலவும் இருந்தது. ஒருநாள் இரவு பிராட்வேயிலிருந்து நடந்தே வீடு திரும்பும் போது இந்தச் சிலையைக் காண்பித்து மகாதேவன் தன்னிடம் கூறிய வாக்கியங்கள் அவனுக்கு அப்படியே நினைவு வந்தன. "கையில் வசதியோடு நாம் வேகமாக வாழ்க்கையின் காரியங்களுக்கு ஓடியாடி அலைந்து கொண்டிருக்கும் போது - இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் உற்சாகமாய் ஓடுவதாய்த் தெரியும். கையில் வசதியில்லாமல் நாம் தயங்கி மலைத்து நிற்கும் போது இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் சிலையாகச் சபிக்கப்பட்டு விட்டது போல் தோன்றும். நாம் ஓடினால் உடன் ஓடுகிற சிலை இது. நாம் நின்றால் உடன் நிற்கிற சிலையும் இதுதான்!" இந்த வாக்கியங்கள் இவற்றைச் சொல்லிவிட்டுப் போனவரின் மறைவுக்குப் பின் இப்போது இன்னும் அதிகப் பொருள் நிறைவுள்ளவையாகத் தோன்றின அவனுக்கு. காலையில் இரயிலிலிருந்து இறங்கியதும் நேரே ஐஸ்ஹவுஸ் பகுதியிலிருந்த மகாதேவனின் வீட்டுக்குப் போய் அங்கிருந்து அப்படியே தம்புச் செட்டித் தெருவில் போய் அன்றைய 'டைம்ஸ்' வெளிவர ஏற்பாடுகள் செய்வதில் முனைந்து விட்டதன் காரணமாகச் சுகுணனுக்கு - நீராடவோ, உடை மாற்றிக் கொள்ளவோ கூட நேரமில்லை. அதனால் இரவில் அறைக்குத் திரும்பியதும் வேர்வையடங்க நெடுநேரம் 'ஷவரில்' நின்றான் அவன். தலையில் குளிர்ந்த தண்ணீர் இறங்கியதும் சிந்தனை சுறுசுறுப்படைந்தது. மகாதேவன் விட்டுச் சென்ற 'நேஷனல் டைம்ஸ்'ஐ எப்படி எல்லாம் வளர்த்து 'ஒரு சுதந்திரச் சிந்தனையாளனின் வெற்றியாக அதை இந்த நாட்டுக்கு நிரூபிக்க வேண்டும்' - என்பதைப் பற்றி எண்ணலானான் சுகுணன். டைம்ஸின் முதல் இதழில் சுதந்திரச் சிந்தனையாளர்கள் பத்திரிகை தொடங்குவதைப் பற்றியும் அவர்கள் வெல்வதையும் தோற்பதையும் பற்றியும் குறிப்பிடும் போது கூட, "எங்கள் போர்க்களம் மிகவும் சிறிது. வசதிகளாலும், கருவிகளாலும் குறைவுடையது. இதில் சிலர் மடியலாம். சிலர் அழியலாம். சிலர் தளரலாம். சிலர் தோற்கலாம். ஆனால் இன்று தோற்கும் ஒவ்வொரு நல்ல தோல்வியும் நாளை வெல்ல வேண்டுமென்று துடிக்கும் பல்லாயிரம் பேனா வீரர்களை உண்டாக்கி விடுகிற சத்தியமான தோல்வியாக இருக்குமே ஒழிய ஒரேயடியாக ஒடுங்கச் செய்து விடுகிற ஊமைத் தோல்வியாக இருக்கவே இருக்காது. எங்களை விட வசதிகளும் கருவிகளும் உள்ளவர்களை வெல்வதற்கு எங்களிடம் மனோபலம் மட்டும் தான் இருக்கிறது. நாங்கள் தளரும் போது எங்களைப் போலவே மனோபலமுள்ள ஆயிரமாயிரம் வீரர்கள் எங்களைத் தொடர்ந்து இந்தக் களத்தில் போரிடுவார்கள் என்ற நம்பிக்கையைப் படைக்க முடியுமானால் அதுவே எங்கள் சாதனையாக இருக்கும்." -என்று உணர்வு பொங்கப் பொங்க ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அப்போது, இந்த முதல் இதழ் வாக்கியங்களைப் பல முறை படித்துப் படித்து மனப்பாடமே செய்திருந்தான் சுகுணன். அப்போது 'நேஷனல் டைம்ஸின்' ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய தலையங்கங்களைப் படித்து இரங்கிய வேகத்தில் - நகரின் பல பகுதிகளில் எங்கெங்கோ பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான கம்பாஸிட்டர்களிலிருந்து - புரூப் ரீடர்கள் வரை எல்லாரும் தினசரி 'டைம்ஸ்' வாங்குவதை ஒரு நோன்பாகக் கொண்டிருந்தார்கள் என்பதையும் சுகுணன் அறிந்திருந்தான். அப்படி ஒரு சுய கௌரவத்தையும் - தன்னம்பிக்கையையும் படைத்தவருடைய முயற்சியை வெல்லச் செய்வதில் அதே விதமான சுய கௌரவமும் தன்னம்பிக்கையும் உள்ள அடுத்த தலைமுறைப் பத்திரிகையாளன் என்ற முறையில் தனக்கும் இன்று பெரும்பங்கு உண்டென்று எண்ணி விரதம் பூண்டது அவன் உள்ளம். அவன் நீராடி உடை மாற்றிக் கொண்டு அறையைப் பூட்டிய பின் சாப்பாட்டுக்காக மெஸ்ஸிற்குப் புறப்பட்ட போது, அப்போதுதான் அவன் ஊரிலிருந்து திரும்பியதைக் கவனித்த அறைப் பையன் அவன் ஊரில் இல்லாத நாட்களில் அவனைத் தேடி வந்தவர்களைப் பற்றிய விவரங்களை ஓடி வந்து தெரிவித்தான். பையன் கூறியதிலிருந்து சுகுணனிடம் கைமாற்றாகப் பணம் வாங்கிக் கொண்டு போயிருந்த பாலக்காட்டுப் பெண் கமலம் இரண்டு முறையும் துளசி நான்கு முறையும் அவனைத் தேடி வந்திருப்பதாகத் தெரிந்தது. வேறு சில நண்பர்களும் தேடி வந்திருந்தார்கள். டெல்லியில் நடைபெற இருக்கும் அகில இந்திய பத்திரிகையாளர் சங்க மாநாட்டு அழைப்பிலிருந்து பாண்டுரங்கனாரின் உள்ளூர்க் கந்த புராணப் பிரசங்க அழைப்பு வரை அழைப்புக்களும் கடிதங்களுமாக ஒரு கொத்துத் தபால்களும் அறைக்குள் விழுந்து கிடந்தன. அவற்றை உடனே பார்க்கும் சுறுசுறுப்பும் ஆர்வமும் கூட அன்றைய மனநிலையில் அவனிடம் இல்லை. "யாராவது முக்கியமானவர்கள் தேடி வந்து அவசியம் பார்த்தாக வேண்டுமென்று வற்புறுத்தினால் மட்டும் இந்த விலாசத்தையோ ஃபோன் நம்பரையோ அவர்களுக்குக் கொடு. இனிமேல் என்னை இங்கே அறையில் பார்ப்பது சிரமம் எப்போதாவது தான் வருவேன். சில சமயம் இரண்டொரு நாள் வராமலே இருக்கும்படியும் ஆகி விடும்" என்று பையனிடம் நேஷனல் டைம்ஸ் விலாசத்தையும் ஃபோன் நம்பரையும் குறித்துக் கொடுத்தான் சுகுணன். பார்லிமெண்டில் ஏதோ ஒரு முக்கியமான பட்ஜெட் விவாதம் நடந்து கொண்டிருந்த சமயம் அது. அந்தச் சமயத்தில் ஒரு தினசரியின் கடமைகளும்,சுறுசுறுப்பும் அதிகமாக இருக்க வேண்டும். ஆதலால் பத்திரிகை தாமதமாக வருவதோ, உரிய புதுச் செய்திகள் வெளிவராமல் மற்றப் பத்திரிகைகளின் முந்திய பதிப்பில் வந்ததையே மாற்றித் திரித்து வெளியிடுவதாக அமைவதோ பேரையே கெடுத்து விடும். டைம்ஸின் மகாதேவன் இத்தனை ஆண்டுகளாகக் காப்பாற்றி வந்த பத்திரிகைத் தரம் சிறிது கூட இறங்கிவிடக் கூடாதென்ற அக்கறை செலுத்துவதில் சுகுணன் மிகவும் கவனமாயிருந்தான். அதனால் மறுநாளிலிருந்து இயலுமானால் 'நேஷனல் டைம்ஸ்' காரியாலயத்திலேயே தங்கி இராப்பகலாக உழைக்கக் கருதியிருந்தான் அவன். தன்னுடைய இளமையும், உழைக்கும் ஆற்றலும் அந்தப் பத்திரிகையை நிலை நிறுத்துவதற்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பது அப்போது அவன் வைராக்கியமாகவும் - இன்னும் அழுத்தமாகச் சொல்லப் புகுந்தால் ஒரு வெறியாகவுமே இருந்தது. அந்தச் சமயங்களில் அவனுக்கு வேறெவையுமே நினைவில் இல்லை. ஊரிலிருந்து திரும்பியதும் ஞாபகமாகத் தனக்குத் தெரிவிக்கச் சொல்லியிருந்த துளசியைப் பற்றி விசாரிப்பதையும் அவன் மறந்தான். அவள் சிலமுறை தேடி வந்ததாகவும் பலமுறை ஃபோன் செய்ததாகவும் லாட்ஜ் பையன் தெரிவித்தும் அவன் அதற்கு இரங்கவோ உருகவோ முடியாமல் வேறு கவலைகளும் தாகங்களும் அவனைச் சூழ்ந்திருந்தன. கோவையிலிருந்து சௌக்கியமாகத் திரும்பியதற்குத் தங்கைக்கு ஒரு கடிதம் எழுத எண்ணியும் அதைச் செய்ய முடியவில்லை. பூம்பொழிலிலிருந்து தனக்கு வரவேண்டிய 'பிராவிடண்டு ஃபண்டு' முதலிய தொகைகளையும், தன்னுடைய புத்தகங்கள் விற்ற வரவிலிருந்து சேமித்து வைத்திருந்த ஒரு பெருந்தொகையையும், 'ரெக்கரிங் டிபாஸிட்'டில் போட்டிருந்த தொகையிலிருந்து எடுத்த ஒரு தொகையையும் திரட்டி முழு மூச்சாக மகாதேவனின் 'டைம்ஸி'ல் முதலீடு செய்து அதை நிலை நிறுத்திவிடத் திட்டமிட்டிருந்தான் அவன். துரதிருஷ்டவசமாக அவன் திரட்டிய தொகையில் முன்பே மகாதேவனிடம் அவரிருந்த போது தந்தது போக மீதமுள்ள தொகை முழுவதும் டைம்ஸுக்கு ஏற்கெனவே இருந்த கடன்களை அடைக்கவே சரியாயிருக்காது போல் தோன்றியது. சூரியன் மறைந்ததும் இருள் சூழ்வது போல் மனிதன் மறைந்ததும், 'இனி மேல் திரும்பிப் பணம் வருமோ வராதோ' - என்ற பயத்தில் கடன்காரர்கள் சூழ்ந்து கொண்டு ஒரே சமயத்தில் நெருக்கும் பாவத்துக்கு ஈடு ஏது? அந்தக் கடன் கொடுமையும் டைம்ஸுக்கு இருந்தது. 'டைம்ஸ்' நின்று விடாமல் வெளிவர வேண்டிய பொறுப்பைச் சுமக்கத் தொடங்கிய இரண்டொரு நாட்களிலேயே சுகுணனுக்கு இந்தச் சூழ்நிலை நன்கு தெரிந்து விட்டது. ஆனாலும் அவன் தளரவில்லை. மகாதேவனின் குடும்பத்தாரைக் கலந்தாலோசித்த பின் 'நிறுவியவர் மகாதேவன்' என்ற பெயரைப் பத்திரிகைப் பெயரின் கீழே அச்சிட்டு விடுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டு மற்றப் பொறுப்புக்களைத் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு 'நேஷனல் டைம்ஸ்' தொடர்ந்து வெளிவரப் பொதுமக்கள் ஆதரவைக் கோரி உருக்கமான அறிக்கை ஒன்றை எழுதி வெளியிட்டான் சுகுணன். "எங்கள் போர்க்களம் மிகவும் சிறியது. வசதிகளாலும் கருவிகளாலும் குறைவுடையது" - என்று தொடங்கி மகாதேவன் டைம்ஸ் முதல் இதழில் வெளியிட்டிருந்த வாக்கியங்களையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தான் அவன். சுகுணனின் கதைகளாலும், நாவல்களாலும் கட்டுண்டு மயங்கிய வாசகர்கள் தமிழகத்திலும் கடல் கடந்த நாடுகளிலும் நிறைய இருந்தார்கள். அவர்கள் இந்த அறிக்கையால் பெரிதும் கவரப்பட்டிருப்பது அடுத்தடுத்த தினங்களில் தொடர்ந்து வந்த ஆதரவுக் கடிதங்களாலும், 'செக்' மணி ஆர்டர்களாலும் நிரூபணமாயிற்று. சிலர் தங்க மோதிரங்களையும், பொன் வளையல்களையும், பொற் சங்கிலிகளையும், சவரன்களையும் கூட நிதியாக டைம்ஸுக்கு அனுப்பியிருந்தார்கள். மற்றப் பத்திரிகையாளர்கள் வியக்கும்படியும், அதிசயிக்கும்படியும் - ஏன் - பொறாமைப்படும்படியாகவும், இருந்தது இந்த அன்பு வெள்ளம். கொழுத்த பணப் பெருச்சாளியால் நடத்தப்படும் எதிர்த்தரப்புப் பத்திரிகை ஒன்று மனம் வெந்து புகைச்சலெடுத்து - 'டைம்ஸ் பிச்சை எடுக்கிறது' - என்பது போல் குறிப்பாகக் கிண்டல் செய்து எழுதி இதைக் கேலி செய்த போது, 'பிச்சை எடுக்கக் கூட யோக்கியதை இல்லாதவர்கள் எழுதிய வாக்கியம் இது' என்று தலைப்பிட்டு அந்தப் பகுதியையும் டைம்ஸிலேயே எடுத்துப் போட்டான் சுகுணன். அதனாலும் டைம்ஸ் வாசகர்களின் அனுதாபம் பெருகிற்றே ஒழியக் குறையவில்லை. காலை, மாலை வேளைகளில் அவனுக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவ உழைக்கப் பல நண்பர்கள் தேடி வந்தனர். 'டைம்ஸ்' அலுவலகம் எப்போதும் கலகலவென்றிருந்தது. முன்பு அவனிடம் பண உதவி பெற்று அந்த நன்றி நிறைவோடிருந்த பாலக்காட்டுப் பெண் கமலம் இலவச 'டைப்பிஸ்டாக' வந்து காலை மாலை வேளைகளில் அலுவலக சம்பந்தமான கடிதங்களை முத்து முத்தாக அடித்து அனுப்பினாள். மனிதர்களின் உண்மை அன்பில் 'டைம்ஸ்' ஓர் சத்திய இயக்கமாக வளர்ந்தது. வெளியிடப்பட்ட 'இண்டஸ்ட்ரியல் ஸப்ளிமெண்டின்' - வருமானம் சிறிது காலம் தாக்குப் பிடித்தது. மகாதேவனின் குடும்பத்துக்கு மாதம் முதல் தேதி பிறந்ததும் ஐநூறு ரூபாய் உதவித் தொகை கொடுக்க ஏற்பாடு செய்து மிகவும் சிரமமான நிலைகளிலும் அந்த ஏற்பாட்டைத் தேதி தவறாமல் நாணயமாகக் காப்பாற்றி வந்தான் சுகுணன். மகாதேவனின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அந்தக் குடும்பத்தாருக்கும் இப்போது அவன் மேல் ஒரு சகோதர பாசமும் நம்பிக்கையும் பெருகியிருந்தது. அந்த உழைப்பின் வேகத்திலும், அளவுக்கு மீறிச் சுற்றித் திரிந்து அலைய நேர்ந்ததிலும் சுகுணன் கறுத்து இளைத்துப் போயிருந்தான். வேளாவேளைக்குச் சரியாக உண்ண முடியாது போயிற்று. பல வேளைகளில் 'உண்ண வேண்டிய வேளை இது' என்பதை நினைவு கூறவும் முடியாமல் வேறு வேலைகளில் மூழ்கி இருக்கும்படி நேர்ந்தது. துளசியை மட்டும் அவன் சந்திக்கவே முடியவில்லை. கண்ணாடியில் எப்போதாவது முகத்தைப் பார்க்கும் போது கறுத்து இளைத்திருப்பது நினைவு வந்தால், 'இந்த நிலையில் துளசி தன்னைப் பார்த்தால் மிகவும் வேதனைப் படுவாள்' - என்பதும் சேர்ந்தே நினைவு வரும். அவள் ஊரில் இல்லையா, இருக்கிறாளா என்பதைக் கூட அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. தெரிந்து கொள்வதற்கு ஓய்வும் வாய்ப்பும் கூட இல்லை. ஊரில் இருந்தால் துளசி துரத்தித் துரத்தித் தனக்கு ஃபோன் செய்வாள் என்பதும் தவறாமல் ஞாபகம் வந்தது. அவளால் எங்கிருந்தாலும் தன்னைத் தேடி வராமல் இருக்க முடியாது என்பதையும் அவன் நினைவு கூர்ந்தான். மனிதனுக்குள்ளே மூலாதாரமாக மறைந்து கிடக்கிற நெஞ்சக்கனல் அன்பினால் தான் ஜ்வலிக்கிறது என்பதை உணர்வது போல் அத்தனை பரபரப்பான வேலைகளிடையேயும், 'துளசி வரவில்லை' - 'துளசி ஃபோன் செய்யவில்லை' - என்பதை அந்தரங்கமாக நினைப்பதிலிருந்து தன்னை அவனால் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் அது ஒரு ஞாபகமாகவும் ஏக்கமாகவும் கூட இருந்தது. ஆயிரம் பேர் துணை நிற்கிறார்கள், உதவுகிறார்கள், அன்பு செய்கிறார்கள் என்பதில் எல்லாம் கூட திருப்தி காண்கிற மனித மனம் - ஆன்மாவோடு கலந்து விட்டாற் போன்ற யாரோ ஒருவர் துணை நிற்க வரவில்லையே என்பதற்காக ஏங்குகிற இந்த அந்தரங்கத்தை எண்ணி வியந்தான் சுகுணன். ஒவ்வொருவனுடைய மனத்தையும் அவனுடைய வாழ்க்கை முழுவதும் இப்படி ஏங்க வைப்பதற்கு யாராவது ஒருத்தி இருப்பாள் போலிருக்கிறது என்றும் ஒரு பிரமையான தத்துவம் கூடத் தோன்றியது அவனுக்கு. வெளியே புறப்பட்டுப் போய் விசாரிக்கவும் - தெரிந்து கொள்ளவும் முடியாமல் அதிக நேரம் அருகிலிருந்தே கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று 'நேஷனல் டைம்ஸில்' இருந்தது. செய்திகளோ, தந்திகளோ, கிடைக்கக் கிடைக்க அவற்றைப் பிரித்து வகைப்படுத்தி அச்சுக் கோர்ப்பவர்கள் கையில் கொடுத்து - அவர்கள் ஒவ்வொன்றாக அச்சுக் கோத்துக் கொடுத்த பின் பிழை திருத்தி மறுபடியும் சரி பார்த்து - அச்சிட வேண்டியிருந்தது. மற்ற தினசரிகளோடு போட்டியிட்டுச் செய்திகளை விரைவாகவும் முன்பாகவும் தருவதற்கு வேண்டிய வசதிகள் இதனால் குறைந்திருந்தன. விரைவாகக் 'கம்போஸ்' செய்வதற்கு 'டைம்ஸ்' போன்ற நல்ல தினசரிக்கு நவீன 'மானோ டைப்' இயந்திரம் ஒன்று தேவையாயிருந்தது. அந்த இயந்திரம் வைத்திருந்த மற்ற தினசரிகளோடு போட்டி போடவாவது டைம்ஸுக்கும் அது தேவையாயிருந்தது. 'மானோ டைப்' இயந்திரம் இல்லாததனால் சுகுணனும் பிழை திருத்துவோரும், இரண்டோர் உதவியாசிரியர்களும் அதிக நேரம் பாடுபட வேண்டியிருந்தது. கம்பாஸிட்டர்கள் மாற்றி மாற்றிக் 'கம்போஸ்' செய்ய அதிக நேரம் ஆயிற்று. நிறையப் புதுப்புதுச் செய்திகளைக் கொடுக்கவும் முடியாமலிருந்தது. 'கம்பாஸிட்டர்'களின் தொகையைக் கூடுதலாக்கலாம் என்றால் தமிழில் கம்பாஸிட்டர்கள் கிடைத்த அளவு ஆங்கிலத்தில் 'கம்போஸ்' செய்யத் தெரிந்தவர்கள் அதிகமாகக் கிடைக்கவில்லை. வலைபோட்டுத் தேடிப் பிடிக்க வேண்டியிருந்தது. கிடைக்காதபோது இருக்கிறவர்களை வைத்துக் கொண்டே சுகுணன் சிரமப்பட வேண்டியிருந்தது. சுகுணன் அந்தக் காரியாலயத்தில் பொறுப்புக்களை கவனிக்கத் தொடங்கிய நாளிலிருந்து இரவு பகல்கள் ஓடுவது தெரியாமல் போயிற்று. வேளா வேளைக்கு உணவு இல்லாததால் உடல் நலம் கெட்டு விட்டது. சரியான துணையோ, ஆதரவோ, அந்தரங்கம் புரிந்த நட்போ இல்லாமல் அவன் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அந்த வேதனையிலும் ஒரு மன நிறைவு இருந்தது. 'சத்திய வீரன் ஒருவன் மடிந்த போர்க்களத்தில் அவனுடைய சத்தியப் பணியைத் தாங்கித் தொடர்ந்து போரிடுகிறேன்' - என்ற பெருமிதத்தை உணர்வதன் மூலமே தன் கவலைகளை அவன் மறக்க முடிந்தது. "இந்தப் பஞ்சைப் பயல்கள் எல்லாம் எத்தனை நாளைக்குப் பத்திரிகையை நடத்தி விட முடியும்? யானையைக் கட்டித் தீனி போடற காரியம் இது" என்று நாகசாமி தன்னைப் பற்றி யாரிடமோ அலட்சியமாகத் தெரிவித்திருந்த செய்தி, சுகுணன் காதுவரை எட்டியிருந்தது. 'வீரனை அவனறிய அலட்சியம் செய்கிறவன் தன்னுடைய அலட்சியச் சொற்களாலேயே அவனுடைய பலத்தைப் பல மடங்கு பெருக்கி விட்டுவிடுகிறான்' - என்பதை நாகசாமி அறிய மாட்டார். அவர் அலட்சியமாக நினைக்கிறார் என்பதாலேயே சுகுணனுக்குத் தன் இலட்சியங்களில் கவனமும் பிடிவாதமும் பெருகியிருந்தது என்னவோ உண்மை. முதன் முதலில் மகாதேவன் 'டைம்ஸை' வாராந்திரச் செய்தி அநுபந்தம் போல் தான் சுருங்கிய அளவில் தொடங்கி நடத்தினார். சிறிது காலத்தில் அது தினசரியாக பெருகியது. அப்படி அது தினசரியாக வளர்ந்து பெருகியபோதே நாகசாமியைப் போன்ற பெரும் பத்திரிகை முதலாளிகளுக்குத் தாங்க முடியாத அசூயையும் - ஆற்றாமையும் உண்டாகியிருந்தது சுகுணனுக்குத் தெரியும். தன்னோடு தொடர்பில்லாத யாரோ ஒரு சுதந்திரப் பத்திரிகையாளராகிய மகாதேவனின் பத்திரிகை வளர்ந்து தினசரியாகப் பெயர் பெற்றதையே அசூயையோடும், எரிச்சலோடும், எதிர் கொண்ட நாகசாமி தன் காரியாலயத்திலிருந்து விலகிப் போன ஓர் ஆசிரியர் இப்போது அதைப் பொறுப்பேற்று நடத்துகிறார் என்பதை மட்டும் எப்படிப் பொறாமையின்றி எதிர்கொள்ள முடியும்? அவருடைய பொறாமையைக் கண்டு சுகுணன் வியக்கவில்லை. 'அப்படிப் பொறாமை கொள்வதுதான் அவர் நிலையிலுள்ளவர்களுக்கு இயல்பு' என்று எண்ணினான் அவன். மற்றவர்களுடைய நெற்றிக் கண் தன்னை நோக்கித் திறக்கத் திறக்க அவனுடைய துணிவும் தன்னம்பிக்கையும் வளர்ந்து பெருகின. பழைய நக்கீரன் வெதும்பி விழுந்தது போல அவன் விழுந்துவிடவில்லை. தன் முயற்சிகளிலும், பிடிவாதங்களிலும் வெறி அதிகமாகவே - அவன் தன் உடல் தாங்க முடிந்த சக்திக்கு மேல் அதிக சக்தியைச் செலவழித்து உழைக்கலானான். அதன் விளைவையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. மறுநாள் டைம்ஸின் வாரமலர் வரவேண்டிய நாளாக அமைந்து விட்ட ஒரு முக்கியமான சனிக்கிழமை காலை. அவன் காரியாலயத்திலேயே தன் அறையில் ஒரு மூலையில் சுருண்டு தளர்ந்து படுக்கும்படி ஆகிவிட்டது. ஒரு வேலையையும் செய்ய முடியாத தளர்ச்சி அவனைப் பற்றியிருந்தது. கண்கள் நெருப்பாக எரிந்தன. தோள்பட்டைகளில் வெட்டி எறிந்தது போல் ஒரு சோர்வு கனத்தது. நடக்கவோ நிற்கவோ தள்ளாடும் நிலையில் ஒன்றுமே செய்ய முடியுமென்று தோன்றவில்லை. மூச்சுக் காற்றில் நாசி மயிர் எரிவது போன்ற பயங்கரக் காய்ச்சல், பசுமை செழித்த நல்ல மரத்தை யாரோ வெட்டிச் சாய்த்தது போல் தளர்ந்து படுத்து விட்டான் அவன். வேலைகள் என்னவோ நடைபெற்றுக் கொண்டிருந்தது. உதவியாசிரியர்களும், பிழைதிருத்துவோர்களும், வழக்கமான காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். கமலம் லீவு போட்டு விட்டு வந்து கடிதங்களைப் பார்த்து பதில் அனுப்ப வேண்டியவற்றிற்குப் பதில்களைத் தயார் செய்து கொண்டிருந்தாள். முக்கியமான பிரச்னை ஒன்று எதிர் நின்றது. இரண்டு மணிக்குள் பாங்கில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கட்டி கோடௌனிலிருந்து பத்திரிகைக் காகிதக் கட்டுகளை எடுத்தால் தான் மறுநாள் பத்திரிகை அச்சாகி வெளிவரும். உடல் நலமில்லாத சுகுணனிடம் இதை எப்படி தெரிவிப்பது என்று 'கிளியரிங் கிளார்'க்கும் - அக்கௌண்டெண்டும் தயங்கிப் பேசாமல் இருந்தார்கள். அப்போது மாத முதல் வாரம் வேறு. முந்திய சில தினங்களில் தான் எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கப் பட்டிருந்தது. அதனால் காரியாலயத்தில் மீதமிருந்த கையிருப்புப் பணம் இருநூறு இருநூற்றைம்பதுக்குள் தான் அடங்கியது. என்ன செய்வது என்ற திகைப்பும் கவலையும் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவர் முகத்திலும் இருந்தது. 'நேஷனல் டைம்ஸ்' போன்று ஏழைப் பத்திரிகைக்குத் திடீரென்று இவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்து கொள்ள ஒரு வசதியும் இருக்கவில்லை. காரியாலயத்தைச் சேர்ந்த அனைவரும் இதை எண்ணி மலைத்துத் தயங்கியிருந்த வேளையில் சுகுணனே தள்ளாடியபடி எழுந்திருந்து தன் மேஜையருகே வந்து நாற்காலியில் உட்கார்ந்தான். ஃபோர்மெனைக் கூப்பிட்டு 'வாராந்தர சப்ளிமெண்ட்'க்கு ஸ்டிரைக் ஆர்டர் போடுவது பற்றி விசாரித்த போது எதிர்ப்புறம் நிலவிய தயக்கத்திலிருந்தே - 'நியூஸ் பிரிண்ட் காகிதம் இல்லை' என்பதைக் குறிப்பாகப் புரிந்து கொள்ள முடிந்தது அவனால். "இந்த வாரம் மட்டும் 'ஸப்ளிமெண்ட்' இல்லைன்னு போட்டுப்பிட்டு நியூஸ் பகுதியை மட்டும் முடிஞ்சவரை அடிச்சி விட்டுடலாம் சார்" என்று ஃபோர்மென் கூறிய யோசனையைச் சுகுணனால் ஏற்க முடியவில்லை. நண்பர்கள் யாரிடமாவது கடன் கேட்கலாமா என்று சிந்தித்து - கமலத்தை உள்ளே அழைத்தான் சுகுணன். டெலிபோனை எடுத்து டயல் செய்யவும் அவன் கைகளில் ஆற்றல் இல்லை. கமலத்திடம் இரண்டு டெலிபோன் நம்பர்களைச் சொல்லி டயல் செய்து அவர்கள் கிடைத்தால் தன்னிடம் கொடுக்கச் சொல்லி வேண்டினான் சுகுணன். அவன் கூறிய எண்ணுக்கு டயல் செய்வதற்காக கமலம் ஃபோனை நெருங்கிய போது அப்படிச் செய்ய முடியாமல் யாரோ கூப்பிடுகிற மணி அடித்தது. கமலமே எடுத்தாள் அடுத்த கணம், "அண்ணா யாரோ துளசியாம்..." - என்று அவள் டெலிபோனை அவனிடம் நீட்டியபோது - "உடம்பு சரியில்லையாம். அப்புறம் பேசுங்கன்னு - சொல்லி வைத்துவிடு" என்றான் சுகுணன். அப்போதுள்ள துன்பமான நிலையில் அவன் துளசியைப் பார்க்கவோ பேசவோ விரும்பவில்லை. "ஹி இஸ் நாட் டூயிங் வெல்" என்று கமலம் டக்கென்று ஃபோனை வைத்த போது சுகுணனுக்கு முள் குத்தினாற் போல மனம் கூசினாலும் அப்போது அதைத் தவிர வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை. 'துளசி - நேற்று வரை ஏன் ஃபோன் செய்யவில்லை. ஒரு வேளை இன்று தான் எங்காவது வெளியூரிலிருந்து திரும்பினாளோ?' என்றெல்லாம் சிந்தனை ஆவலோடு ஓடினாலும் - அவன் ஒன்றும் வெளியே காண்பித்துக் கொள்ள முடியவில்லை. துளசியின் அழைப்பை - அறுத்து முடித்த வேகத்தில் கமலம் அவன் கூறிய மற்ற நம்பர்களுக்கு முயன்றாள். இருவரில் ஒருவர், ஊரில் இல்லை. மற்றவருடைய நம்பர் கிடைக்கவே இல்லை. 'என்ன செய்வது?' என்ற கேள்வி சுகுணனின் முன் எழுந்தது. உட்கார முடியாமல் மறுபடியும் மூலையில் போய்ச் சாய்ந்தான் அவன். "ஹார்லிக்ஸ், போர்ன்விடா, ஏதாவது வாங்கி வருகிறேனே அண்ணா" என்றாள் கமலம். 'வேண்டாம்' என்பது போல் ஜாடை செய்துவிட்டு, "இந்த மாதிரி சமயத்திலா நான் இப்படிப் படுத்துக் கிடக்க வேண்டும்?" என்று ஆற்றாமையோடு தனக்குத் தானே பேசுவது போல் கூறிக் கொண்டான் அவன். அப்போது பகல் பதினொன்றரை மணிக்கு மேல் ஆகியிருந்தது. இரண்டு மணிக்குள் பணம் கட்டி 'நியூஸ் பிரிண்ட், ரீல்களை எடுத்து வராமற் போனால்?' என்ற கேள்வி ஒவ்வொருவர் மனத்திலும் எழுந்து நின்றது. ஏதாவது மாயமாக நடந்து பத்திரிகையைக் காப்பாற்றினாலொழிய வேறு வழி இல்லை என்பதை எல்லாரும் உணர்ந்திருந்தார்கள். கடிகாரமும் தயவு தாட்சண்யமின்றி ஓடிக் கொண்டிருந்தது. 'டைம்ஸு'க்குப் பலமுறை இப்படி எத்தனையோ சோதனைகள் வந்திருக்கின்றன. ஒவ்வொன்றையும் கடந்து அது பிழைத்துத்தான் வாழ்ந்திருக்கிறது. 'ஆனால் இந்த முறையோ?'... நினைப்பதற்கே மரணத்தைவிடக் கொடுமையானதாக இருந்தது இந்தக் கேள்வி. |