2
பழக்கப்பட்டு விட்ட மனிதனால் ருசிகளில் எப்போதுமே ஏமாற முடிவதில்லை. இன்னொருவர் மேல் நாம் வைக்கிற நம்பிக்கை அல்லது இன்னொருவர் நம் மேல் வைக்கிற நம்பிக்கை - பிரியம், அன்பு, அநுதாபம், ஆதரவு - இவையெல்லாம் கூட வாழ்க்கையில் மனிதன் கண்டு விட்ட மனத்தின் உணர்ச்சி பூர்வமான ருசிகள்தான். நல்ல வேளையாகத் தென்னிந்திய இரயில் மார்க்கங்களில் சில பகுதி இரயில்களுக்குப் 'பார்ஸல் பாஸஞ்ஜர்' - என்று தற்செயலாகவே ஒரு பொருத்தமும் காரணமும் அமையும்படி பெயர் கொடுத்திருக்கிறார்கள். இந்த இரயிலில் வந்தவர்களையோ, வருகிறவர்களையோ, பிரயாணத்தைப் பற்றி விசாரித்தால் கூட 'பார்ஸலில் வந்தேன்' - என்றே மறுமொழி கூறுகிறார்கள். இப்படிச் சொல்வதில் ஒரு குத்தல் அல்லது இரயில்வேக்காரர்களை நிரந்தரமாகச் சபிக்கும் ஒரு சாபம் இருப்பதாகத் தோன்றியது சுகுணனுக்கு. கொண்டதையும் கொள்ளாததையும் எப்படியோ அள்ளித் திணித்துப் பார்ஸல் செய்து பொட்டணம் கட்டுவது போல்தான் இந்த இரயில்களில் பிரயாணிகள் குழந்தைகளும் குட்டிகளுமாகத் திணியுண்டு - இடியுண்டு வருகிறார்கள். தான் புறப்பட்ட நிலையத்துக்கு அடுத்த நிலையத்திலேயே குழந்தை குட்டிகளோடு புகுந்த ஒரு பெரிய குடும்பத்துக்குத் தன் இடத்தைத் தியாகம் செய்துவிட்டு நிற்கத் தொடங்கிய சுகுணனுக்குச் சென்னை எழும்பூர் நிலையம் வருகிறவரை மறுபடி உட்கார இடம் கிடைக்கவே இல்லை. போன ஆண்டு சென்னையிலிருந்து - ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட பத்திரிகைப் பிரிதிநிதிகளின் தூது கோஷ்டியில் தானும் ஒருவனாகப் போயிருந்த போது டோக்கியோவுக்கும் ஒஸாகாவுக்கு மிடையே பிரயாணம் செய்த இரயில் சுத்தமும் அழகும், நேரம் தவறாத வேகமும், பிரயாணிகள் உட்காருவதற்குத் தாராளமான இடவசதியும், இருந்ததை இப்போது நினைவு கூர்ந்தான் சுகுணன். அப்படி நினைவு கூர்ந்தபோது தான் பிரயாணம் செய்து கொண்டிருந்த இரயிலையும் வளர்ச்சியடைவதில் மந்தகதி போடும் தன் தேசத்தையும் சிந்திக்கவே கொஞ்சம் வெட்கமாயிருந்தது அவனுக்கு. இந்திய இரயில்வேயில் பிரயாணிகளுக்கும், சாமான்களுக்கும், தனித்தனி புக்கிங் ஆபீசுகள் இருப்பது ஒன்று மட்டும்தான் பெரிய வித்தயாசமாகத் தோன்றியதே தவிர, வேறு வித்தியாசங்கள் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. தீவிரமாகச் சிந்திக்கப் பழகிவிட்ட ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் இவற்றை நினைப்பதிலிருந்து அவனால் தன்னைத் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை. பார்க்கப் போனால் அவன் கண் விழித்துப் பிரயாணம் செய்த நேரத்தில் இந்திய இரயில்வேயைப் பற்றியும், எப்போதோ ஜப்பானுக்குப் போய்விட்டு வந்ததைப் பற்றியும், டோக்கியோ இரயில் நிலையத்தில், 'இந்த நிலையத்துக்குள் வரும் இரயில்களையும் இங்கிருந்து புறப்படும் இரயில்களையும் கொண்டு உங்கள் கடிகாரத்தில் நேரத்தைச் சரிசெய்து கொள்ளலாம்' - என்று ஜப்பானியர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதைப் பற்றியும் நினைத்த நேரம் மிகவும் குறைவுதான். அவன் அதிக நேரம் மாற்றி மாற்றி நினைத்த நினைவோ வேறொன்றாயிருந்தது.
நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் பிரயாணம் செய்த நேரத்தில் துளசியைப் பற்றித்தான் அதிக நேரம் நினைத்திருந்தான் அவன். தான் ஏன் இனிமேலும் அவளைப் பற்றி இப்படி நினைக்க வேண்டுமென்று - அவளை நினைப்பதை உடனடியாகத் தவிர்க்கத் துணியாத தன் மனத்தின் மேலேயே ஆத்திரம் வந்தது அவனுக்கு. இனிப்பு, கார்ப்பு, புளிப்பு, உப்பு இவைகளைப் போல் அன்பும் தவிர்க்க முடியாத ருசிகளில் ஒன்றாக வாழ்வில் இடம் பெற்றிருக்கிறது. பழக்கப்பட்டு விட்ட மனிதனால் ருசிகளில் எப்போதுமே ஏமாற முடிவதில்லை. இன்னொருவர் மேல் நாம் வைக்கிற நம்பிக்கை அல்லது இன்னொருவர் நம்மேல் வைக்கிற - பிரியம், அன்பு, அநுதாபம், ஆதரவு - இவையெல்லாம்கூட வாழ்க்கையில் மனிதன் கண்டு விட்ட மனத்தின் உணர்ச்சிபூர்வமான ருசிகள். இந்த நீண்டகால ருசிகளை அத்தனை சுலபமாக மனிதனால் மறந்து விட முடியாது போலிருக்கிறது! சொல்லப்போனால் நாவின் ருசிகளை விட இந்த மனத்தின் ருசிகளுக்குத்தான் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத இடம் உண்டு என்பது நிருபணமான உண்மையாகத் தோன்றியது.
மனித மனத்தின் இந்த ருசிகளில் எப்போதும் தேவையானவையும் எப்போதும் விரும்பப்படுகிறவையுமான சில நியாயமான ருசிகளைப் பொருளாகக் கொண்டுதான் உலக மகா கவிகளின் காவியங்கள் எல்லாம் படைக்கப்பட்டிருக்கின்றன. நாவின் ருசிகள் மனித வாழ்வின் தேவையை மட்டுமே படைக்கின்றன. மனத்தின் ருசிகளோ - அவை தான் மனித வாழ்வையே அந்தப் பெயருக்குரிய கௌரவத்துடன் செம்மையாக உருவாக்குகின்றன. அன்பிலும், கருணையிலும் ருசிகண்டு ருசிகண்டு வளர்ந்தவன் சுகுணன். தான் இன்னொருவரைச் சூழும்போதே அன்பு வெள்ளமாக நெருங்கிச் சூழ்ந்து பெருக வேண்டுமென்று நினைக்கிற சுபாவம் அவனுடையது. தன்னைச் சூழ்கிறவர்களும் அப்படியே சூழவேண்டுமென்று நினைத்துத் தவிக்கிற மலர்மனம் அவனுடையது. கடந்த சில நாட்களாக அந்த மனம் ஏமாற்றத்தால் இறுகிக் கடுமையாகியிருந்தது. கொதிப்படைந்திருந்தது. விரக்தியுற்றிருந்தது. ***** அந்த அதிகாலையில் எழும்பூர் நிலையத்தின் படிகளுக்குக் கீழே எந்தவிதமான மாறுதலோ, சிறப்போ விளைந்து விடாமல் சென்னை வழக்கம் போல் தானிருந்தது. தண்ணீர் அலை அலையாக ஓடுவதற்குப் பதில் நிறைய மனிதர்களும் டிரான்ஸ்போர்ட் பஸ்களும், வாடகைக் கார்களும், சைக்கிள்களும், ரிக்ஷாக்களும் நிதானமாக ஓடுகிற ஒரு மகாநதியைக் கற்பனை செய்தாற்போல் இந்தச் சென்னை நகரத்து வீதிகளைத் தனக்குள் பலமுறை கற்பனை செய்திருக்கிறான் அவன். கிழிந்த டயர்களும் தோல் துண்டுகளுமாகத் தான் இருக்குமிடத்தை அறிவிப்பதற்குத் தம்மளவில் தரைமேல் உண்டாக்கிய ஒரு சிக்கனமான ஷோரும் போல் நாலைந்து செருப்புக்களைக் கொலு வைத்துவிட்டுக் காத்திருக்கும் செருப்புத் தொழிலாளிகளும், ஆப்பிளுக்கு துணியால் துடைத்துப் பாலிஷ் போடும் ஆப்பிள் பழக்கடைக்காரரும், யாரோ ஒரு முக்கியமான தலைவர் கைதாகி விட்ட செய்தியோடு இருக்கும் தினசரி வால்போஸ்டர்களை வரிசையாகத் தொங்கவிட்டிருக்கும் பத்திரிகை ஸ்டால்களுமாக எழும்பூர் நிலையத்தின் எதிர்ப்புறம் திரும்பத் திரும்ப ஒரே விதமாக அச்சடித்த ஒரு புத்தகத்தின் பக்கம் போலிருந்தது. காட்டப்படும் வேகத்தினாலும், பரபரப்பினாலும் மனிதர்கள் நுழைந்து வெளிவரும் இராட்சதச் சுறுசுறுப்பினாலும் 'மீல்ஸ் ஃபேக்டரி' அல்லது 'டிபன் ஃபேக்டரி' என்று சொல்லத்தக்க இரண்டொரு கலகலப்பான ஓட்டல்களும் எதிரே வழக்கம் போல் தானிருந்தன. எதிர்ப்புறத்தை ஓரிரு விநாடி நிதானமாகப் பார்த்துவிட்டு மனத்தில் வேண்டியதும் வேண்டாததுமான சிந்தனைகளோடு டாக்ஸியையோ, ஆட்டோ ரிக்ஷாவையோ எதிர்நோக்கி நின்ற சுகுணன் எதிர்பாராத சந்திப்பு ஒன்றிற்கு ஆளானான். 'துளசி'யின் வீட்டு டிரைவர் எதற்காகவோ அந்த வேளையில் அங்கு எழும்பூருக்கு வந்திருந்தான். கார் பார்க்கிங்கில் பார்த்த போது எத்தனை கார்களுக்கு நடுவில் நிறுத்தப் பட்டிருந்தாலும் தனியே அடையாளம் தெரியக்கூடிய அந்த மூக்குச் சப்பையான 'ஓக்ஸ்வாகன்' - காரும் இப்போது சுகுணனின் பார்வையில் தெரிந்தது. "என்னா சார்? வர்ரீங்களா? கலியாணத்தன்னிக்கும் காணவேயில்லியே... எங்கனாச்சும் வெளியூர்லே ஜோலியா பூட்டிங்களா?" - என்று விசாரித்தான் அந்த டிரைவர். அவனுடைய கேள்வியில் எழுப்பப்பட்ட சந்தேகத்துக்கு மறந்தாற் போலப் பாவித்துக் கொண்டவனாக ஒரு பதிலும் சொல்லாமலே - தெரிந்தே வேண்டுமென்றே கை நழுவ விடுகிற ஒரு பொருளைப் போல அந்த விஷயத்தை அப்படியே விட்டு விட்டு "இந்த அதிகாலை நேரத்திலே எழும்பூருக்கு எங்கே வந்தாய் அப்பா? யாராவது ரயில்லே வாராங்களா? அழச்சுக்கிட்டுப் போக வந்திருக்கியா?" - என்று அவனிடம் வேறு கேள்வியைக் கேட்டான் சுகுணன். "இல்லீங்க. புதுசாக் கலியாணமான மாப்பிள்ளை ஐயாவும், துளசி அம்மாவும் கோடைக்கானலுக்கு ஹனிமூன் போறாங்களாம். ஐயா டிக்கட் ரிசர்வ் பண்ணிட்டுவரச் சொன்னாரு. அதுக்காகத்தான் வந்தேன்" - என்றான் டிரைவர். அவனுடைய இந்தப் பதில் மனத்தில் இன்னொரு முள்ளைக் குத்தினாற் போலிருந்தது சுகுணனுக்கு. இரண்டு மூன்று விநாடிகள் தயங்கிவிட்டு "வாரீங்களா சார்? அறையிலே கொண்டு விட்டுப் பிட்டுப் போறேன்" - என்று கேட்ட டிரைவருக்கு, "இல்லே! நான் போய்க் கொள்கிறேன். உன் காரியத்தைப் பார்" - என்று கச்சிதமாகப் பதில் வந்தது சுகுணனிடமிருந்து. பதினைந்து நிமிடங்கள் சடுகுடு விளையாடுவது போல இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக அலைந்து ஓட்டம் பிடித்து மீண்ட பின் டாக்சி கிடைத்தது. டாக்சியில் போகும் போதும் ஏதேதோ நினைவுகள். அதாவது போக வேண்டிய இடத்தை டாக்ஸிக்காரனுக்குச் சொல்லவும் மறந்துவிட்ட அளவிற்கு நினைவுகள். டாக்சி எழும்பூரிலிருந்து நேர் கிழக்கே ஓடி இடது பக்கம் திரும்பிப் பாலம் ஏறி இறங்கி அப்புறம் வலது புறம் மூர்மார்க்கெட், சென்ட்ரல் நோக்கி ஓடத் தொடங்கிய பிறகுதான் - பக்கங்களில் பார்த்துப் பரபரப்போடும் பதற்றத்தோடும் வழிமாறிவிட்டதை உணர்ந்து - டிரைவருக்கு அறிவிக்கத் தோன்றியது. அதன் விளைவு - கோட்டை நிலையம் போய் - அப்புறம் - போர் நினைவுக் கட்டிடம் (வார் மெமோரியல்) மெரீனா எல்லாம் சுற்றிச் சுங்குவார் தெரு வழியே - திருவல்லிக்கேணி பெரிய தெருவுக்குப் போய் நின்றது டாக்சி. வாடகையைக் கணக்குத் தீர்த்து டாக்சியை அனுப்பிவிட்டுப் பெட்டிப் படுக்கையோடு படியேறி மாடிக்குப் போனான் சுகுணன். கையிலிருந்த சாமான்களை அவன் கீழே வைத்து விட்டுச் சாவியை எடுத்துத் தன் அறையைத் திறந்த போது - பக்கத்து அறைக்காரருக்குத் தபால்காரர் எக்ஸ்பிரஸ் டெலிவரி கடிதம் ஒன்றைக் கொடுத்துக் கையெழுத்து வாங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. இன்னும் சிறிது நேரத்தில் என்னுடைய 'அந்த மணவாழ்த்துக் கடிதமும் சாதாரணத் தபாலில் - துளசிக்குக் கிடைக்கும்' - என்று நினைத்துக் கொண்டான். அவன் அவளுக்கு எழுதியிருக்கும் அந்த வாக்கியங்கள் மறுபடி ஒவ்வொரு சொல்லாக அவனுக்கு நினைவு வந்தது. 'வீரர்களின் தோள்களை அலங்கரிக்க வேண்டிய மணமாலை சந்தர்ப்ப வசத்தால் கோழைகளின் கைகளில்...' காரியாலய முகவரிக்கு எழுதாமல் அறை முகவரிக்கே வழக்கமாக எழுதும் இரண்டொரு நெருங்கிய நண்பர்களின் கடிதங்கள் கதவிடுக்கு வழியாகப் போடப்பட்டுக் கிடந்தன. அதில் ஒரே ஒரு கடித உறை மட்டும் தபால் தலையோ, முத்திரையோ, எதுவுமில்லாமல் - கனத்த உரையின் மேல் 'சுகுணன் அவர்கள், அறை எண் 9, கண்ணப்பா லாட்ஜ், பெரிய தெரு, சென்னை - 5' - என்று சுத்தமாகத் தமிழில் முகவரி டைப் செய்யப் பெற்றதாயிருந்தது. முன்புறமோ பின்புறமோ அதில் எங்கும் அனுப்பியவர் முகவரியோ வேறு குறிப்போ எதுவுமே இல்லை. இந்த மாதிரி வேளைகளில் மனத்தில் தோன்றும் ஒரு தற்செயலான ஆனால் அதே சமயத்தில் பின்னால் சரியாயிருக்கப் போகிற ஓர் அநுமானத்தோடு 'தான் அறையைப் பூட்டிக் கொண்டு அவசரமாக இரயிலேறி வெளியூர் போனபின் துளசி யாரிடமாவது இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கக் கூடும்' என்று எண்ணிப் பிரித்துப் பார்த்தால் அநுமானம் தவறாதபடி அது துளசியின் கடிதமாகவே இருந்தது. தன் கையெழுத்தினால் எழுதக் கூசியோ, பயந்தோ - அவளே ஜாக்கிரதையோடும், பயத்தோடும், எச்சரிக்கையோடும் அந்தக் கடிதத்தைத் தமிழில் டைப் செய்திருந்தது அவனுள் இன்னும் அதிகமாக ஆத்திரமூட்டியது. ஒரு மனிதனுடைய உறவை அடைவதிலும் விலக்குவதிலும் பெண்ணுக்குத்தான் எத்தனை ஜாக்கிரதை? எத்தனை முன்னெச்சரிக்கை? எத்தனை சம்பிரதாயமான பயங்கள்? அவசர அவசரமாகக் கடைசித் தாளை விரித்துக் கையெழுத்தைப் பார்த்தான். அதுவும் அவளுடைய சொந்த எழுத்தினால் இல்லை. 'உங்களுடையவள் - அபலை' என்ற வார்த்தைகளும் கூட டைப் செய்யப்பட்டே இருந்தன. அதன் மேலிருந்த ஆத்திரம் காரணமாகக் கடிதம் எழுதுவதற்கென்றே தயாரிக்கப்பட்ட பஞ்சு போன்ற மெல்லிய தாளில் எழுதப்பட்டிருந்தும் அந்த இலேசுக் காகிதங்கள் கூடத் தன் கைகளில் கல்லாய்க் கனப்பதுபோல் அப்போது உணர்ந்தான் சுகுணன். இதற்குள் எதிர்த்த அறைக்காரரும் பக்கத்து அறைக்காரரும் குசலம் விசாரிக்க வரவே - அவர்களிடம் ஒப்புக்கு ஏதோ பேசி அனுப்ப வேண்டியிருந்தது. அவளுடைய அந்தக் கடிதத்தைப் படிக்காமல் அசிரத்தை செய்ய வேண்டும் போல் வெறுப்பாகவும் இருந்தது. உடனே அவசர அவசரமாக அதைப் படித்து விட்டு ஆத்திரப்பட வேண்டும் போலவும் இருந்தது. இந்த உணர்ச்சிக் குழப்பத்தில் என்ன செய்வதென்று தயங்கி அவளுடைய அந்த டைப் செய்யப்பட்ட கடிதத்தை அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொண்டு தபாலில் வந்து கிடந்த மற்றக் கடிதங்களை எடுத்துப் படிக்கலானான் சுகுணன். அந்த ஆண்டு பி.இ.என். மகாநாடு டெல்லியில் நடக்கப் போவதாகவும் அதற்கு அவன் அவசியம் வர வேண்டுமென்றும் டெல்லியிலிருந்து நண்பன் மணி எழுதியிருந்தான். இந்த முறை அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர்களின் பெடரேஷன் சென்னையில் கூடுவதற்கு அவனால் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா? என்று கல்கத்தாவிலிருந்து 'கோஷ்' கேட்டிருந்தார். இன்னொரு கடிதம் கிராமத்தில் ஆசிரியையாக வேலை பார்க்கும் அவனுடைய சகோதரியிடமிருந்து வந்திருந்தது. படித்துக் கொண்டிருந்த கடிதங்கள் எல்லாம் படிக்காமல் ஒதுக்கி வைத்துவிட்ட ஒரு கடிதத்தையே பலமாகவும் அவசரமாகவும் நினைவுப்படுத்திக் கொண்டிருந்தன. ஒரு காரியத்தை முதலில் செய்துவிடுவது எத்தனை பெரிய சிரத்தையோ அத்தனை பெரிய சிரத்தைதான் 'அதைக் கடைசியில் செய்வதற்காகத் தனியே மீதம் வைத்திருக்கிறோம்' என்று ஒவ்வொரு வினாடியும் நினைத்தபடியே முதலில் செய்யும் மற்றக் காரியங்களை வேகமாகச் செய்வதும். முழு வாக்கியத்தின் அர்த்தம் நாமே பாவனையாகக் கற்பித்து அதன் முடிவில் போட்டு வைக்கிற ஒரு கடைசிப் புள்ளியில் போய் முடிவையும் முடிந்து விட்ட நிரூபணத்தையும் பெறுவது போல் கடைசியாகச் செய்ய வேண்டுமென்று பிரித்து ஒதுக்கி வைப்பதாலேயே சில காரியங்களுக்கு முதன்மையும் முக்கியமும் சிரத்தையும் உண்டாகி விடுகிறது. துளசியின் கடிதத்திற்கும் இப்போது அப்படி ஒரு சிரத்தை தானாகவே அவன் விரும்பாவிடினும் உண்டாகியிருந்தது. அவ்வளவு நேரம் அணைக்கட்டி நிறுத்தியிருந்த ஆர்வம் மீறிப் பெருக, அந்தக் கடிதக் கத்தையைக் கையிலெடுத்தான் சுகுணன். கடிதத்தின் மேற்புறம் தேதி - நேரம் மணி நிமிடம் கூட டைப் செய்யப்பட்டிருந்தது. இரவு பதினோரு மணிக்கு மேல் தன் அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு இந்தக் கடிதத்தை இரகசியமாக 'டைப்' செய்திருந்தாள் அவள். 'என்றும் என் வழிபாட்டுக்குரிய தெய்வத்திற்கு' என்று புது மிஷினில் புதுப் பச்சை ரிப்பன் மாட்டி அடித்தாற்போல் பச்சை நிற எழுத்துக்கள் முதல் வரியாகத் தனியே எடுக்கப்பட்டுக் காவியத்திற்குக் கடவுள் வாழ்த்துப் போலவோ, காப்புப் போலவோ அணிவகுத்து முன் நின்றன. அந்த ஒரு வரியைப் படித்த விநாடியில் மேகம் மழையாகக் கொட்டி மறைந்தாற் போல் அவள் மேலிருந்த ஆத்திரம் கருணையாகப் பெருகி மறைந்தது. பார்க்கப் போனால் நீண்ட வாழ்க்கையின் எந்த நிலையிலும் எந்த இடத்திலும் பெண் என்பவள் ஓர் அபலைதான். இந்த நிலையில் ஒருத்தி சந்தர்ப்பவசத்தினால் தன்னுடையவளாக முடியவில்லை என்பதற்காக அவளை வெறுப்பது எவ்வளவு சுயநலமானது? அல்லது சிறுபிள்ளைத்தனமானது? - என்று இப்படி எண்ணியபோது - தன்னை மணந்து கொள்ள முடியாமல் போய்விட்டது என்ற ஒரே காரணத்துக்காகத் துளசியை உதாசீனம் செய்வது பக்குவமான செயலாக அவனுக்கே படவில்லை. திடீரென்று எதற்காகவோ அவள் மேலே தான் பெரிதாகப் பரிதாபப்பட வேண்டும் போலவும் அனுதாபப்படவேண்டும் போலவும் மிக விரைவாக அவன் உணர்ச்சி மாறியது. அந்தக் கடிதத்தை அவள் தொடங்கியிருந்த ஒழுங்கு, மரியாதை, சிரத்தை, பயம், அவளுடைய புன்னகையைப் போல் சுத்தமான அந்தப் புதிய பச்சை நிற டைப் எழுத்துக்கள் - எல்லாம் சேர்ந்து அவன் மனத்தை இளகச் செய்துவிட்டன. இந்த விநாடி அவன் மனம் ஒரு கவிஞனின் மிக மென்மையான சத்துவ குணத்தோடிருந்தது. "என்னைத் தயை செய்து - பெருந்தன்மையோடு மன்னித்து விடுங்கள். சொல்லாமல் கொள்ளாமல் எல்லா ஏற்பாடும் செய்து முடித்துவிட்டு அப்பா இப்படி என் அபிப்பிராயத்தையோ ஆசையையோ நான் வெளியிட ஒரு மணி நேர அவகாசம் கூடத் தராமல் திருமணம் என்ற பிரமிப்பான காரியத்தைத் திடுமென்று எனக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்துவாரென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. 'வாழ்க்கை நாம் திட்டமிட்டபடி எதிர்வருவதில்லை. அது தான் திட்டமிட்டபடி நம் முன் நேர்கிறது' - என்று உங்களுடைய "பாலைவனத்துப் பூக்கள்" என்ற நாவலில் நீங்கள் எழுதியிருக்கிற கடைசி வாக்கியங்களைத் தான் நினைக்கிறேன் இப்போது. எங்கள் வீட்டில் எனக்கு எவ்வளவோ உரிமையும், செல்லமும் உண்டு என்று பேர். ஆனால் இந்தத் திருமண சம்பந்தமாக மட்டும் ஏனோ என்னை ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் இப்படி நிர்க்கதியாய் விட்டு விட்டார்கள். ஒலியாக வெளிப்பட்டு அபிப்பிராயங்களையும் அங்கீகாரங்களையும் தேடாமல் மனத்தினுள்ளேயே அடங்கிவிடும் கற்பனையாய் சங்கீதத்தைப் போல இனி நினைப்பின் எல்லையிலேயே தங்கி மரியாதை பெற வேண்டிய பொருளாகிவிட்டது நம் காதல். என்னுடைய இந்தக் கையாலாகாத வாக்கியத்தைப் படித்ததும் என்னைக் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் போலக் கோபமும் ஆத்திரமும் வரும் உங்களுக்கு. அப்படி உங்கள் கோபத்திற்கும், ஆத்திரத்திற்கும் பொருளானால் கூட மகிழ்ச்சியாயிருக்கும் எனக்கு. ஏனென்றால் நான் எந்தக் கோபத்துக்குப் பாத்திரமாகிறேனோ அந்தக் கோபம் உங்களுடையது. நிதானமாக என் நிலையைச் சிந்தித்தீர்களானால் என் மேல் கோபம் வருவதற்குப் பதில் அநுதாபம் தான் வரும் உங்களுக்கு. நான் உங்களோடு நெருங்கிப் பழகியதையும், உங்கள் எழுத்துக்களின் மேல் மோகம் கொண்டதையும், பத்திரிகையின் உரிமையாளர் என்ற முறையில் அப்பாவைக் காண்பதற்காக எங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்த போதெல்லாம் தேவைக்கதிகமான உரிமையும், உறவும் பாராட்டி உங்களை ஓடியாடி உற்சாகமாக உபசரிப்பதையும் வெறும் இரசிகத் தன்மை என்று மட்டுமே அப்பாவால் எப்படிச் சாதாரணமாக நினைத்து ஒதுக்கி விட முடிந்ததென்பது தான் எனக்கே ஒரேயடியாக விளங்கவில்லை. இந்த விஷயத்தில் அப்பா இப்படி என்னைக் கைவிட்டு விடுவாரென்று நான் நினைக்கவில்லை. இதில் உங்களை விட எனக்குத் தான் பேரிடி. நான் பெண். 'பெண்கள் பிறக்கும் போதே முன்னெச்சரிக்கையோடு கூடப் பிறந்திருக்கிறார்கள்' - என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே; அந்த முன்னெச்சரிக்கை கூடச் சரியான சமயத்தில் எனக்கு இல்லாமல் போய் விட்டது. நான் தான் நன்றாக ஏமாந்து போனேன். எதையும் வெளியில் சொல்லவும் முடியாது உள்ளேயே அழுது புழுங்க வேண்டும். உள்ளேயே நொந்து வேக வேண்டும். இந்த ஏமாற்றத்தோடு வாழவும் வேண்டும். அல்லது வாழ்ந்து கொண்டே ஏமாற வேண்டும். நீங்கள் ஆண்பிள்ளை ஏமாற்றத்தைக் கூட விரக்தியாகவோ, தைரியமாகவோ மாற்றிக் கொண்டுவிட முடியும். நான் தான் இதில் பெரிய பாவி. நாளைக்கும் அதற்குப் பின்பும் விடியப் போகிற ஒவ்வொரு தினமும் இனி எனக்குப் பெரிய சுமை தான். இந்த விநாடியிலும் கூட வெகுண்டெழுந்து அப்பாவிடம் போய் "எனக்கு இந்தக் கலியாணத்தில் சம்மதமில்லை. நான் சுகுணன் அவர்களை என் நாயகராக வரித்து விட்டேன். தயைசெய்து இப்போதே இந்தக் கலியாணத்தையும் இதன் ஆரவார ஆடம்பரத் தடல்புடல்களையும் உடனே நிறுத்தி விட்டுத் திருப்பதிக்கோ திருநீர் மலைக்கோ அழைத்துப் போய் என்னையும் என் சுகுணனையும் இணைத்து வையுங்கள். எங்கள் அன்பைக் கௌரவிப்பது போல் எங்கள் திருமணம் எளிமையாக நடந்தால் போதும்" - என்று கண்ணைக் கசக்கிக் கலகம் செய்யலாம். அப்படிச் செய்தால் அதன் விளைவு உங்களைப் பாதிக்கும். நீங்கள் ஏதோ என்னைச் சொக்குப் பொடி போட்டு மயக்கி என் குழந்தை மனத்தைக் கெடுத்து விட்டதாக மற்றவர்கள் அப்பாவிடம் கோள் மூட்டுவார்கள். உங்கள் மேல் அநாவசியமாக அப்பாவுக்கு ஆத்திரம் வரும். இரண்டு தினசரிகளையும் ஒரு வாரப் பத்திரிகையும் ஒரு மாதப் பத்திரிகையும் உட்கொண்டு விளங்கும் இந்தப் பெரிய பத்திரிகை நிறுவனத்தில் உங்கள் மேல் பகைமையும் பொறாமையும் உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாததல்லவே? வெகுண்டெழுந்து குமுறி இதை மறுப்பதற்குச் சந்தர்ப்பமும் உரிமையும் இருந்தும் கூட நிதானமாகச் சிந்தித்த பின் உங்களுக்காகவே நான் ஊமையானேன். என்னுடைய இழப்பை நான் உணர்கிறேன். அதே சமயத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையாயிருக்க வேண்டியவளென்ற முறையில் உங்கள் எதிர்கால நலனையும் நான் காக்க வேண்டியவளாயிருக்கிறேன். இந்தத் தாபம் - என் நெஞ்சின் சதையைப் பிய்த்தெடுத்துக் கொண்டு வருகிறாற் போன்ற இந்த விம்மல் வீண் போகாது. இன்னொரு பிறவியிலாவது நம் நினைவு கைக்கூடும். 'சாதாரண மனிதர்களின் வேதனை தான் அவர்களுக்குத் தவம். எல்லோராலும் தவம் செய்யக் காட்டுக்குப் போய்விட முடியாது. பலருக்கு அவர்கள் படுகிற வேதனைகளும் துக்கங்களுமே அடைய வேண்டியதை அடைகிற தவமாக இருக்கும்' - என்று நீங்களே எழுதியிருக்கிறீர்கள். இனிமேல் இந்தக் கடிதத்தில் என்ன எழுதுவதென்று தெரியவில்லை. எவ்வளவோ மலைமலையாக எழுத மீதமிருப்பதாகவும் என் மனம் கனத்துப் போயிருக்கிறது. நீங்கள் இந்தக் கலியாணத்திற்கு நிச்சயமாக வரமாட்டீர்கள் என்று என் மனம் சொல்கிறது. அதை வைத்துக் கொண்டும் வம்பு பேசுவார்கள். உலகத்துக்காக எல்லாரையும் போல் நீங்களும் கலியாணத்தன்று தலையைக் காட்டி விட்டுப் போய் விடுவது நல்லது. கல்யாணத்தில் உங்களைப் பார்த்தாலும் எனக்கு அழுகை வரும். பார்க்கா விட்டாலும் அழுகை வரும். கடைசியாக ஒரு வேண்டுகோள். அந்தரங்க சுத்தியான இந்த வேண்டுகோளுக்கு வேறெந்த அர்த்தமும் கற்பித்துக் கொள்ளாதீர்கள். மணக்கோலத்தில் என்னை ஒரு முறை ஒரே ஒரு முறையாவது உங்கள் கண்களால் நிமிர்ந்து தாராளமாகப் பாருங்கள். அந்த ஒரு விநாடியிலாவது உங்கள் பார்வையில் நான் மணமகளாவேன். மற்றவர்கள் என்னை வற்புறுத்தி உட்கார வைத்து அப்படி அலங்கரிப்பதற்கு என்னளவில் நான் உள்ளம் குளிர முடியுமானால் நீங்கள் என்னைக் கண்ணெடுத்துப் பார்க்கிற அந்த ஒரு கணத்தில் தான் அது முடியும். 'யாருக்காகவோ இவள் அலங்கரித்துக் கொண்ட அலங்காரம் தானே?' - என்று மட்டும் நினைத்து விடாதீர்கள். நான் என்னை அலங்கரித்துக் கொள்ளவில்லை. திருமணத்துக்காக நான் அலங்கரிக்கப்படுவேன். மணமேடைக்காக நான் தயார் செய்யப்படுவேன். 'தீடீரென்று எத்தனையோ பேர் என்னென்னவோ வந்து இந்த உலகத்தை விட்டுப் போய்விடுகிறார்களே; அது மாதிரி இந்த விநாடியில் செத்துத் தொலைந்து போய்விட்டால் எத்தனை நிம்மதியாயிருக்குமென்று எனக்கு இப்போது தோன்றுகிறது. இந்த மாதிரி சமயங்களில் நினைத்த போது சாகிற சக்தி மட்டும் மனிதர்களுக்கு இருந்துவிட்டால்?' - என்று எண்ணத் தோன்றுகிறது. நமக்குத் தெரிந்தவரை இந்த மாதிரிச் சாவை வரப்பிரசாதமாக அடைந்த ஒரே ஒருத்தி சிலப்பதிகாரப் பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி தான். அவள் பாக்கியசாலி. பந்தலில் வாழை மரமும் தோரணமும் கட்டுவது போல் நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என் கைகளிலும் கழுத்திலும் தங்கமும், வைரமுமாக நகைகளைக் கட்டி என்னை அலங்கரிக்கப் போகிறார்கள். உங்களைப் போல் ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள். காதலில் இழந்தாலும் அழுகை வராது. பரம்பரையாக ஆண் குலத்துக்கே கல் மனம். நாங்களோ காரணத்தை மறைக்க முடிந்தாலும் கண்ணீரை மறைக்க முடியாது. எதிர் வரும் இன்னொரு பிறவி எதிலாவது - இந்த ஞாபகமும் சுவடும் நமக்கு நினைவில்லாவிடிலும் கடவுள் நம்மைக் கணவன் மனைவியாக இணைக்கட்டும். இந்தப் பிறவியை - எனக்குப் பிடிக்காமல் நான் தாலிக்கயிற்றால் சிறையிடப்படும் இந்த வாழ்வை ஒரு கெட்ட சொப்பனம் போல அவசரமாக ஓட்டி விட வேண்டும் போல இப்போது நான் பறக்கிறேன். நினைப்பினாலும் பாவனையினாலும் நான் உங்கள் அடிமை. நீங்கள் தான் என் இதயத்தை ஆளுகிறீர்கள். அடிமைகள் ஆளுகிறவர்களுக்குச் சமாதானம் கூறுவது அதிகப் பிரசங்கித் தனமாயிருக்கும். எனவே திடுமென வந்த இந்தப் பேரிடிக்கு ஒரு சமாதானமும் கூறத் தோன்றவில்லை எனக்கு. இனி வேறென்ன எழுதுவது? படித்ததும் ஞாபகமாக இதைக் கிழித்தெறிந்து விடுங்கள்.
இப்படிக்கு, உங்களுடையவள் - அபலை இந்தக் கடிதத்தைப் படித்தவுடன் உள்ளூரிலேயே இருந்து துளசியின் திருமணத்திற்குப் போயிருக்க வேண்டுமென்று தோன்றியது சுகுணனுக்கு. அடுத்த கணமே போகாமல் தான் வெளியூரில் போய்த் தலைமறைவானது தான் சரியென்று தோன்றியது. அந்தக் கடிதம் அவனுள் உண்டாக்கிய உணர்ச்சிக் குழப்பத்தின் காரணமாக நிச்சயமாய் நிர்ணயமாய் அவனால் எந்த உணர்விலும் காலூன்றி நிற்க முடியவில்லை. அந்தத் திருமணத்திற்கு அவன் வராததைக் காரியாலயத்திற்குப் போனதும், யார் யார், எப்படி எப்படி நேராகவும், குத்தலாகவும், விசாரிப்பார்கள் என்று இப்போதே கற்பனை செய்ய முயன்றான் அவன். அதையும் கூட அவனால் தொடர்ந்து நினைக்க முடியவில்லை. 'கடிதத்தைக் கிழித்தெறியுங்கள்' - என்று எழுதத் துணிந்ததிலிருந்து அவள் தன்னை எவ்வளவு அந்நியமாகவும், அவநம்பிக்கையாகவும் எண்ணிப் பயந்திருக்க முடியும் என்று நினைத்த போது அப்படி எழுதிய அவள் மேல் அவனுக்கு தாங்க முடியாத கோபம் வந்தது. கடிதத்தை, அவள் எழுதியது போல் கிழிக்கவில்லை. பத்திரமாகப் பெட்டியடியில் வைத்துவிட்டுக் குளிக்கப் போனான். காரியங்கள் எப்போதும் போல் வழக்கமாக இயங்கின. மனதைத் திடப்படுத்திக் கொண்டு காரியாலயத்திற்குப் போகிற வழியில் அவனுடைய முதலாளியும் - துளசியின் தந்தையுமாகிய - மாருதி பப்ளிகேஷன்ஸ் க்ரூப் ஆஃப் மாகஸின்ஸ் - அதிபர் - நாகசாமியை - சாந்தோம் ஹைரோடிலுள்ள அவர் வீட்டிற்குப் போய் கண்டு, பட்டும், படாமலும் கலியாணத்தன்று ஏன் வரவில்லை என்று அவர் கேட்டதற்கு அவனால் ஏதோ சாக்குக் கற்பித்துச் சொல்ல முடிந்தது. அது கூட அப்போது பொருத்தமாகவும் சொல்ல இயைபாகவும் வந்தது. நல்ல வேளையாக அவருடைய வீட்டில் அவரது முன்புறத்து அறையிலேயே காரியம் முடிந்து விட்டது. உள்ளே போக வேண்டிய அவசியமோ துளசியையோ அவள் கணவனையோ பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமோ நேரவில்லை. நாகசாமி கச்சிதமாகப் பேசி ஒரு 'டிரிங்கும்' வரவழைத்துக் கொடுத்து தாம்பூலப் பையோடு அவனை வழியனுப்பி வைத்தார். "உள்ளே போய்த் துளசியையும் பார்த்துவிட்டுப் போங்களேன். உங்கள் கதைகளின் முதல் ரசிகையாச்சே?" - என்று விடை கொடுக்கிற சமயத்தில் அவர் உபசாரமாகச் சொல்லிய வார்த்தையை, "அதற்கென்ன அப்புறம் பார்த்துக் கொண்டால் போயிற்று. இந்த அவசரத்தில் எதற்கு?" என்று சுகுணனால் நாசூக்காகத் தட்டிக் கழித்துவிட முடிந்தது. தாம்பூலப் பையோடு வாசலிலேயே முன்னுணர்வுடன் காக்க வைத்திருந்த டாக்சியில் ஏறிக்கொண்டு "மாருதி பிரஸ்ஸுக்குப் போ" - என்று ஊரறிந்த பேரறிந்த இடமும் சொல்லியபின் நிதானமாகக் கையிலிருந்த தாம்பூலப் பையைப் பார்த்து அதில் எழுதியிருந்த மணமக்களின் பெயரை அப்போது தான் புதிதாகப் படிப்பது போல், சுகுணன் தனக்குத் தானே ஒரு முறை படித்துக் கொண்டான். தோள்கள் விம்மித் தணிய ஒரு பெருமூச்சு நெஞ்சடியிலிருந்து எழுந்து சரிந்தது. டாக்சி காரியாலய வாயிலில் நின்றது; கணக்குத் தீர்த்து அனுப்பிவிட்டு உள்ளே படியேறினால் - சொந்தக் காரைத் தானே ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்தி விட்டு அவசர அவசரமாக அவனைப் பின் தொடர்ந்த அட்வர்டிஸ்மெண்ட் மானேஜர் ரங்கபாஷ்யம் பிடித்துக் கொண்டார். "தி ஒன்லி நோடபிள் ஆப்ஸென்ஸ் இஸ் யுவர்ஸ்!" "அதற்கென்ன செய்வது? ஊரில் ரொம்ப முக்கியமான காரியம். தவிர்க்க முடியவில்லை." காரியாலத்தில் ஒவ்வொருவரும் அவன் திரும்பி வந்தால் அவனிடம் இதைத்தான் கேட்கவேண்டுமென்று சொல்லிப் பேசி வைத்துக் கொண்டார் போல அதே வாக்கியத்தை அதே ஆங்கிலத்தில் இழுத்தாற் போல கூறி நிறுத்தி அவன் முகத்தைப் பார்க்கலானார்கள். தேர்ந்த பத்திரிகையாளரின் சாமர்த்தியத்தோடு சுகுணன் பொறுமையிழக்காமல் ஒவ்வொருவருக்கும் நிதானமாகப் பதில் சொல்லித் தனக்குத் தானே திருப்தியோடு அந்தக் காரியத்தைச் செய்து கொள்ள வேண்டியிருந்தது. தன்னுடைய அறைக்குப் போய் மின் விசிறியைக் கடிதங்கள் பறந்து விடாமல் அளவாகப் போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்தால் - சொல்லி வைத்தது போல் ஃபோன் மணி அடித்தது. நாகசாமி தான் பேசினார். "நீங்க வீட்டுக்கு வந்திருந்தப்பவே கொடுக்கணும்னு நினைச்சேன் மறந்துபோச்சு. குழந்தை கல்யாண போட்டோ ஒண்ணு அனுப்பறேன்! இந்த வார இஷ்யூவிலேயே ரைட் ஹாண்ட் சைடிலே வரமாதிரி முதல் ஃபாரத்திலேயே ஒரு அரைப்பக்கம் நல்ல பார்டராக் கட்டிப் போட்டுடுங்க..." டக்கென்று - எதிர்ப்பக்கம் டெலிபோன் வைக்கப்பட்டுவிட்ட ஓசையையும் காத்திருந்து கேட்ட பின்பே - அவசரமில்லாமல் பொறுத்திருந்து விட்டுத்தான் தன் பக்கம் ரெஸீவரை வைத்தான் சுகுணன். கடிதங்கள், அந்த இரண்டு மூன்று நாளில் வந்திருந்த கதைகள், கட்டுரைகள், கொஞ்சம் பருமனான கட்டாகக் குவிந்திருந்த கவிதைகள் எல்லாம் தனித்தனியே அவன் மேஜையில் இருந்தன. மேஜை மேல் இலேசாக ஒரு மெல்லிய தூசி மூட்டம் - விரலை வைத்தால் அடையாளம் பதிகிற மாதிரிப் பரவியிருந்தது; அப்போது அன்று அவன் மனம் இருந்ததைப் போல. மணியை அடித்தான். பையன் வந்து மேஜையைத் துடைத்துவிட்டுப் போனான். பக்கத்து அறை அதே மாருதி பப்ளிகேஷன்ஸைச் சேர்ந்த தினசரி இதழான காலை மலரின் ஆசிரியர் அறை. இரண்டிற்குமிடையே ஒரு தடுப்பு உண்டு. அங்கே டெலிபிரிண்டர் இயங்கத் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக ஒலி எழுந்தது. தொலைவில் அதே காம்பவுண்டிலிருந்து அச்சகத்தின் இயந்திர முழக்கம் ஜன்னல் வழியே மெல்லக் கேட்டுக் கொண்டிருந்தது. கடிதங்களைப் படிக்க எடுத்த சுகுணன் யாரோ உள்ளே வருவதற்கடையாளமாக ஸ்பிரிங் கதவு கிரீச்சிடவே நம்மாழ்வார் நாயுடு சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தார். "என்னங்க இப்படிச் செய்திட்டீங்க?" "எதை எப்படிச் செய்தேன் நாயுடு?" "அதுதான்... நம்ம ஐயா கொழந்தை கல்யாணத்தன்னிக்கிப் பார்த்து வெளியூருக்கு எங்கோ பூட்டீங்களே சார்! உங்க கதைன்னாத் துளசீம்மாவுக்கு உசீர். பாவம்! நீங்க வராதது அதுக்கே கூட வருத்தமாயிருந்திருக்கும்." "என்ன செய்வது நாயுடு? காரியம் தவிர்க்க முடியாதது." "நீங்க ஒருத்தர் தான் வராத ஆளு சார்..." "....." "எல்லா எழுத்தாளரும் கூட வந்திருந்தாங்க... முக்காவாசி நாளு பெங்களூர்லியே கிடப்பாரே அந்தக் கவிஞர் சார் கூட வந்திருந்தாருன்னாப் பார்த்துக்குங்களேன்..." -சுகுணன் புன்முறுவல் செய்ய முயன்றான். "சரி போவுது. கொழந்தை கல்யாணப் படம் இந்த இஷ்யூவிலியே வரணும். இதோ ஐயா படம் அனுப்பிச்சிருக்காரு... சைஸ் போட்டுக் கொடுங்க... மங்களகரமா யெல்லோ பார்டர் கட்டிடறேன். உங்க 'டம்மியிலே' லீடர் ஃபாரத்திலேயே மூணாம் பக்கம் வலது புறம் மேலாக இதுக்கு அரைப் பக்கம் குறிச்சுக்குங்க சார்..." சுகுணனின் நீண்ட விரல்களோடு கூடிய அழகிய வலது கை ஓர் இயந்திரம் போல் எழும்பி முன் நீண்டு அந்தப் படத்தை வாங்கியது. நிச்சலமான முகத்துடன் தன் முகத்திற்குத் தனது பாவனையே முகமூடியாக்கிக் கொண்டாற்போல ஊடுருவும் கண்களால் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான் அவன். எல்லாக் கல்யாணப் புகைப்படங்களைப் போலத்தான் அதுவும் இருந்தது. படத்தில் அவள் கூடத் தாராளமாகச் சிரித்துக் கொண்டுதான் நிற்கிறாள். "இன்னா சார்! படத்தில் கொழந்தை ரொம்ப நல்லா சிரிச்சிக்கிட்டிருக்கில்ல?..." "பிரமாதமாயிருக்கிறது..." "ஏன் சார்? ஊர்லேயிருந்து வந்தப்புறம் என்னவோ மாதிரியிருக்கீங்களே? என்ன விசயம்? உடம்புக்குச் சுகமில்லியா?" -சுகுணன் இரண்டாவது முறையாக புன்முறுவல் புரிய முயன்று இயலாமல் தோற்றான். ஆனால் அதைச் சாதுரியமாக மறைத்துக் கொண்டு படத்தின் பின்புறம் சைஸ் அளவு குறித்து வழக்கம் போல் கையெழுத்துப் போடப் பேனாவை அருகில் கொண்டு போய் விட்டுத் திடீரென்று மனம் மாறி, 'கையெழுத்து இல்லாட்டிதான் என்ன?' - என்று படத்தை அப்படியே நாயுடுவிடம் நீட்டினான். "பிளாக் பண்ண அனுப்பு நாயுடு! ஐயா கூடக் கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஃபோன் பண்ணினார்..." "சர்த்தான்! அப்புறம் வந்து பேசிக்கிறேன் சார்! நீங்க 'மூட்'லே இல்லே..." என்று ஏதோ தனக்குத் தோன்றியதைக் கூறிவிட்டுப் போனார் நாயுடு. மறுபடி ஃபோன் மணி அடித்தது. "நான் தான் துளசி..." நீண்ட நேரம் விம்மி விம்மி அழுதபின் வருகிற தளர்ந்த சாயலில் சோக கீதமாய் ஒலித்தன வார்த்தைகள். ஒன்றும் பேசாமல் ஃபோனுடன் அப்படியே இருந்தான் சுகுணன். "நான் தான் துளசி..." - இப்போது அவள் அழுவதே தெளிவாக ஃபோனில் கேட்கிறது. "கங்ராஜுலேஷன்ஸ்! இப்போதுதான் உங்கள் திருமணப் புகைப்படத்தை 'பிளாக்' செய்ய அனுப்பி வைத்தேன். படம் ரொம்ப நன்றாயிருக்கிறது" என்று குத்தலாகச் செயற்கையானதும் புதுமையானதுமான மரியாதையோடு அவளை விளித்துச் சொல்லிவிட்டுப் பட்டென்று டெலிபோன் ரெஸீவரை வைத்தான் சுகுணன். தன்னுடைய வார்த்தைகள் தான் நியமித்து அனுப்பிய கடுமையோடு போய் அவளைத் தாக்கியிருக்கும் என்ற திருப்தியோடும் ஆனால் அந்தத் திருப்திக்காகப் பெருமைப்படுவதில் ஒத்துழைக்க மறுக்கும் கருணைமயமான அந்தரங்க மனத்தோடும் சிறிது நேரம் என்ன செய்ய வேண்டும், என ஒன்றுமே தோன்றாமல் எதிரே தெரியும் ஸ்மோக் கிளாஸோடு கூடிய நடுவாக மறைக்கும் அந்தச் சிறிய ஸ்பிரிங் கதவைப் பராக்குப் பார்த்தான் சுகுணன். மறுபடி டெலிபோன் மணி. சில விநாடிகள் எதிர்ப்புறம் குரலே இல்லை. பழகிப் போன குரலுக்குரியவளின் அழகை மட்டும் தெளிவாகக் கேட்கிறது. அந்தக் கடன்காரியின் அழுகையும் இனிமையாகத்தான் ஒலிக்கிறது! "இதென்ன ஒப்பாரி?" "நான் உடனே உங்களைப் பார்க்கணும்..." "....." "அங்கே வருகிறேன்..." "இங்கேயா...? கூடாது வேண்டவே வேண்டாம்..." பதில் இல்லை. எதிர்ப்புறம் துளசி டெலிபோனை வைத்தாகிவிட்டது. இந்த முறை அவள் முந்திக் கொண்டாள். அவன் என்ன செய்வதென்றறியாமல் திகைத்தான். |