![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
10 “ஏன் இந்தப் பொருளாதார மந்தம்?” கைலாச முதலியாரின் மனத்தை இந்தக் கேள்வி புழுப் போல் குடைந்து அரித்துத் தின்று கொண்டிருந்தது. நித்த நித்தம் இந்தக் கேள்வி பூதாகரமாக விம்மி வளர்ந்து விசுவரூபம் பெற்று, அவரது இதயத்தை ஒரு பேய்க் கனவைப் போல் அழுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கேள்வியின் பாரச் சுமையை இறக்கி வைக்கக் கூடிய தெளிவான விடையை அவரால் கண்டு கொள்ள இயலவில்லை. பொருளாதார நெருக்கடியின் மர்மத்தை விளக்கிக் கொள்வதற்காக, அவர் பத்திரிகைகளின் உதவியை நாடினார். ஆனால் அவர் மதிப்புக் கொடுத்து வாங்கிப் படித்த அந்தத் தேசியப் பத்திரிகைகளோ உண்மையைத் திரித்துக் கூறி அவரை மேன்மேலும் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தன. ‘மக்களிடம் தெய்வ பக்தி குன்றிப் போய் விட்டதுதான் துயரங்களுக்கெல்லாம் காரணம்’ என்று உபதேசம் செய்தது ஒரு பத்திரிகை. ஆனால் அவரறிந்த வரையிலும் அவரறிந்த மக்களின் தெய்வ பக்தியோ அப்படியொன்றும் குன்றிப் போய்விட்டதாகத் தெரியவில்லை. லோகநாயகி அம்மன் கோயிலுக்கு முன்னை விட, நெசவாளிகள் அதிகம் பேர் தரிசனம் செய்ய வந்தார்கள்; திருச்செந்தூர் விசாகத் திருநாளுக்கு திருநெல்வேலி ரயில் கெடியில் கூட்டம் ஒன்றும் குறைந்த பாடில்லை; ஆடி அமாவாசைக்குச் சொரி முத்தையன் கோயிலுக்கு வண்டி கட்டிக் கொண்டு யாத்திரை செல்லும் பக்தர் கூட்டங்களுக்கும் பஞ்சமில்லை. ‘கம்யூனிஸ்ட் அபாயம் தான் கஷ்டங்களுக்குக் காரணம்’ என்று பூச்சாண்டி பிடித்தது இன்னொரு தினசரி. ஆனால், அவருக்கோ கம்யூனிஸம் என்றால் இன்னதெனத் தெரியாது. எனினும் அவரறிந்த மட்டில் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாரும் அபாயகரமான நபர்களாகவோ, பயங்கரமான ஆசாமிகளாகவோ இருக்கவில்லை. கோயிலுக்குச் சென்று விட்டு வரும் வழியில் அவர் ஒன்றிரண்டு சமயம் செங்கொடி கட்டிப் பறக்கும் கன்யூனிஸ்ட் பொதுக் கூட்டங்களிலும் தலை நீட்டிப் பார்த்திருக்கிறார். அவர்களில் யாரும் தாறுமாறாகப் பேசவோ, அடிபிடி சண்டைக்குக் கொடி கட்டவோ செய்ததாக அவருக்குத் தோன்றவில்லை; அவர்களில் யாரும் தாதுலிங்க முதலியாரைப் போல் கள்ள மார்க்கெட்டில் கொள்ளையடித்ததாகவோ, தோட்டக் கூலிகளைக் கட்டி வைத்து உதைக்க அனுமதித்ததாகவோ, மைனர்வாளைப் போல் கோயில் சொத்துக்கு குழி பறித்ததாகவோ அவர் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை... ‘சுதந்திரக் குழந்தைகள் இன்னும் பலமேற்படவில்லை. பக்குவம் ஏற்படவில்லை. அதற்குள் சுபிட்சத்தை எதிர் பார்க்கலாமா?’ என்று தர்க்க நியாயம் பேசியது ஒரு சஞ்சிகை. அந்தத் தர்க்க நியாயத்தையும் கைலாச முதலியாரால் புரிந்து கொள்ள இயலவில்லை. வெள்ளைக்காரன் வெளியேறியதற்கும், உள்ளூர்க்காரன் அரசாள்வதற்கும் அவருக்கு எந்தவித வித்தியாசத் தன்மையும் புலப்படவில்லை. சுதந்திரம் வந்த பின்னால், இரவோடு இரவாகச் சுகமோ சுபிட்சமோ ஏற்பட்டு விடும் என்று எதிர்பார்த்து ஏமாறும் அளவுக்கு அவர் ஞான சூன்யராக இருக்கவில்லை. ‘எனினும், சுதந்திரம் வந்த பின்னர், முன்னிருந்ததையும் விட நிலைமை மோசமாகவா போய்க் கொண்டிருப்பது?’ என்று தான் நினைத்தார் அவர். சுதந்திரம் வந்த பின்னர் அரிசி விலை ஏறிக் கொண்டு தான் சென்றதே ஒழிய இறங்கக் காணோம்; பணக்காரர்கள் மேலும் மேலும் பெரும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் மேலும் பரம ஏழைகளாகவும் தான் மாறிக் கொண்டிருந்தார்களேயன்றி, இருவர் வாழ்க்கையிலும் புதுமையான மாற்றம் எதுவும் ஏற்படவில்லை; லஞ்சமும் ஊழலும் முன்னை விட அதிகமாய்த் தானிருந்ததே ஒழியக் குறைந்தபாடில்லை; காங்கிரஸ்காரரிடத்தில் பிளவுன், பூசலும், பதவிப் பித்தும், பொறாமையும் தான் அதிகரித்திருந்ததே தவிர, முன்னிருந்த சேவை வைராக்கியமோ, தியாக புத்தியோ காணப்படவில்லை... பத்திரிகைகளில் காணப்பட்ட தர்க்க நியாயங்களைக் கொண்டு, கைலாச முதலியார் எப்படியெப்படி எல்லாமோ கணக்குப் போட்டுப் பார்த்தாலும், தம்மை வருத்துகின்ற அந்தக் கேள்விக்கு அவரால் விடை தெரிந்து கொள்ள முடியவில்லை. நூல் விலை ஏன் ஏறியது? அது இறங்குவதற்கு மார்க்கமுண்டா? வியாபாரம் ஏன் படுத்து விட்டது? அது நிமிர்வதற்கு வழிவகை யுண்டா? பணம் ஏன் சுருங்கி விட்டது? தேவையான சாமான்களை வாங்குவதற்கு இயலுமா? ஏற்றுமதி ஏன் குறைந்து விட்டது? அதற்கு ஒரு விமோசனம் உண்டா? - தமது மனத்தை உறுத்தும் அந்த அடிப்படைக் கேள்வியை ஒட்டி அவரது மனத்தில் எத்தனையெத்தனையோ கேள்விகள் கொக்கியிட்டு வளைந்து நின்றன. எனினும் அவரால் அவற்றுக்கு எவ்வித விடையும் காண இயலவில்லை. கைலாச முதலியார் போன்றவர்களின் கண்களிலிருந்து உண்மையை மூடி மறைத்து, முலாம் பூசி, பொத்திப் பொதிந்து திரித்துச் சிதைத்துக் கூறி வந்த அதே தேசிய பத்திரிகைகள் அவரிடமிருந்து அந்த ஒரே ஒரு உண்மையை மட்டும் மூடி மறைக்கவில்லை; மறைக்க இயலவில்லை. சோற்றில் மூடி மறைக்க முடியாத முழுப் பூசணிக்காயாக, அந்தப் பிண்டப் பிரமாணமான உண்மை விளங்கியது. அன்று காலையில் கைலாச முதலியார் பட்டறைப் பலகையில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த போது தான் அவர் அந்தச் செய்தியைக் கண்டார்; தெய்வ பக்தியின் அவசியத்தைப் பற்றி ஒரு மந்திரி பேசிய பேச்சை ஏழு பத்தித் தலைப்புக் கொடுத்துப் பிரசுரித்திருந்த அதே பக்கத்தின் கடைகோடி மூலையில் அந்தச் செய்தி முக்கியத்துவம் இழந்து ஒடுங்கிக் காணப்பட்டது.
கைத்தறி நெசவாளி காலமானார் நாமக்கல் ஏகாம்பர முதலியார் என்னும் கைத்தறி நெசவாளி பிழைப்புக்கு வழியில்லாமல் பதினைந்து நாட்களுக்கு மேல் பட்டினி கிடந்து, இன்று காலமானார். பட்டினிக் கொடுமையின் காரணமாகவே அவர் காலமானாரென்று ஊர் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அவரது சடலத்தை ஊர் மக்கள் பண வசூல் செய்து அடக்கம் செய்தனர். (ந.நி.) கைலாச முதலியாரின் பார்வையில் இந்தச் செய்தி தற்செயலாகப் பட்டிருந்தால் ஏதோ சாதீய அபிமானத்தால், ஒரு கணம் அனுதாபம் காட்டி விட்டு, மறு பக்கத்தைத் திருப்பியிருப்பார். ஆனால் கொஞ்ச நாட்களாகவே அவர் இப்படிப்பட்ட செய்திகளைத்தான் பத்திரிகைகளில் தேடித் தேடிப் படித்து வந்தார். அன்றொரு நாள் ராசீபுரத்தைச் சேர்ந்த ஒரு நெசவாளியின் மனைவி பசிக் கொடுமை தாங்காது தன் இரண்டு குழந்தைகளைக் கிணற்றில் போட்டுத் தானும் விழுந்து இறந்ததாக அவர் செய்தி படித்தார்; மற்றொரு நாள் காஞ்சிபுரத்தில் இருபத்தைந்து வயது நெசவுத் தொழிலாளி ஒருவன் வறுமையின் காரணமாக, பட்டினி கிடந்து மாண்டதாகப் படித்தார்; இன்னொரு நாள் வேறொரு கைத்தறித் தொழிலாளி ரோட்டடிச் சாலைப் புறத்தில் ஒரு மரத்தில் தூக்கிட்டுத் தொங்கி, தற்கொலை செய்து கொண்டதை வாசித்தறிந்தார்; குழந்தைக்குப் பால் வாங்கிக் கொடுக்க முடியாத இளம் தாயொருத்தி தன் பிள்ளையை ஒன்றரை ரூபாய்க்கு விற்று விட்ட பரிதாபக் கதையையும் அவர் பத்திரிக்கையில் பார்த்தார். தேசியப் பத்திரிகைகளாலும் மூடி மறைக்க முடியாத பற்பல செய்திகளைப் படித்துப் படித்துக் கொஞ்ச நாட்களாகவே அவர் மனம் கலக்கமுற்று இருந்தது. ஏகாம்பர முதலியாரின் துயரச் செய்தியைப் படித்ததும், கைலாச முதலியாருக்குத் தன்னையும் அறியாமல் கண்கள் கலங்கின. அதே சமயத்தில் கடந்த சில நாட்களாகவே அவரது உள்ளத்தில் அவரறியாமலேயே இனந்தெரியாது உருவாகி வந்த அந்தப் பய பீதி, தாமும் இந்த மாதிரியான துர்க்கதிக்கு ஆளாகிவிட நேருமோ என்ற அச்சம், அவரது உள்ளத்தை உலுக்கி விட்டது. அந்தப் பயங்கர எண்ணத்தின் வேகத்தைத் தாங்க முடியாதவராக, அவர் பத்திரிகையை மூடி யார் கண்ணிலும் பட்டு விடக் கூடாது என்ற காரண காரியமற்ற எச்சரிக்கையோடு அதைப் பட்டறைப் பலகைக்கு அடியில் போட்டுக் கொண்டார்! ‘முருகா’ என்று ஒரு கணம் கண்ணை மூடி வாய்விட்டுப் பிரார்த்தித்துக் கொண்டார்; அலைமோதிக் கொந்தளிக்கும் சிந்தனையை அடக்கியாள முடியாமல், கண்களை மூடி யோக நிஷ்டை செய்ய முயன்றார். “முதலாளி!” எதிர்பாராத விதமாக வந்த அழைப்புக் குரல் கைலாச முதலியாரின் யோகத்தைக் கலைத்து விட்டது. கண்ணைத் திறந்து பார்த்தார். எதிரே வடிவேலு முதலியாரும் வேறு சில வாடிக்கை நெசவாளர்களும் நின்று கொண்டிருந்தார்கள். “எங்கே வந்தீங்க” என்று தன்னுணர்வு பெற்றுத் திரும்பிய கைலாச முதலியார், அவர்களை நோக்கி நிர்விசாரமாகக் கேட்டார். “நூல் வாங்கிக்கிட்டுப் போகலாம்ணு வந்தோம்” என்று சுருக்கமாகப் பதிலளித்தார் வடிவேலு முதலியார். கைலாச முதலியார் இன்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒரு கணம் சும்மாயிருந்தார். பிறகு அவர்களிடம் திரும்பி, “என்ன தம்பி, உங்களுக்கு நிலைமை தெரியாததா? வந்த சரக்கெல்லாம் அப்படியப்படியே உட்கார்ந்திருக்கு. ஒண்ணும் நகர்ந்த பாட்டைக் காணோம். இன்னும் நெய்து நெய்து எங்கேதான் அடுக்கி வைக்கிறது?” என்று பரிதாபமாகப் பதிலளித்தார். “அப்படிச் சொன்னா முடியுமா, முதலாளி? எங்க புழைப்பும் நடக்க வேண்டாமா?” என்று அங்கலாய்த்தார் ஒரு நெசவாளி. அதற்குள் இன்னொருவர், “ஆமா முதலாளி? வேணுமின்னா கூலியைக் கூடக் குறைச்சிக்கிடுங்க. எங்க புழைப்பைக் கெடுத்துப் பிடாதீங்க” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். கைலாச முதலியாரின் இளகிய மனம் ஒரு கணம் தர்மாவேசத்தால் அலைக்கழிந்தது. அன்று கூலி உயர்வுக்காக, வாதாடி வழக்காடிப் பேசிய அதே தொழிலாளர்கள் இன்று தங்கள் வயிற்றுக் கொடுமையினால், கூலியைக் கூடக் குறைத்துக் கொள்ள முன் வரும் கோரத்தை, அந்தக் கோரத்தின் சூட்சுமத்தை அவர் உணர்ந்து கொண்டார். அந்த உணர்ச்சி ஏற்பட்ட போது எதிரே நின்ற அந்தத் தொழிலாளிகள் ஒவ்வொருவரும், அந்த இனம் தெரியாத ஏகாம்பர முதலியாரைப் போல் காட்சியளிப்பதாகவும், அவர்கள் அனைவரும் வற்றி மெலிந்து வாடி உலர்ந்து எலும்புக் கூடுகளாக மாறுவது போலவும், ராமன் வீழ்த்திய மராமரங்களைப் போல, அந்த எலும்புக் கூடுகள் சடசடவென்று முறிந்து விழுந்து, பிடிசாம்பலாகக் குமைந்து குவிவது போலவும், அவரது மனக்கண் முன்னால் ஒரு பிரமைக் கனவு திரை விரித்தது. ஆனால், அதே பிரமையைத் தொடர்ந்து, தமது மனைவி தன் அருமை மகன் ஆறுமுகத்தைக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்வது போலவும், தமது உயிரற்ற சடலம் விக்கிரமசிங்கபுரம் ரோட்டுப் பாதையிலுள்ள புளிய மரத்தில் தூக்கிலிட்டுத் தொங்கிக் கொண்டிருப்பது போலவும், தமது அருமை மகன் மணி வயிற்றுக்குச் சோறின்றிப் புழுவாய் வாடிச் சுருண்டு கிடப்பது போலவும், ஒரு கண்காணாத உருவெளித் தோற்ற மயக்கம் அவரது மனத்திரையில் பளிச்சிட்டு மறைந்தது. மறு கணமே அவர் தமது இளகிய மனத்தை இறுகப் பிடித்துக் கொண்டு பதிலளித்தார்: “உங்களுக்கு நூல் கொடுத்து என்ன பிரயோசனம்? மேலும் மேலும் எனக்குத்தானே கைப்பிடித்தம். உங்க வயிற்றுக் கொடுமை கூலியைக் கூடக் குறைக்கச் சொல்லுது. ஆனா, உங்களுக்கு உதவி செய்றதுக்குக் கூட, எனக்கு விதியில்லை. தயவு செய்து வேற யாரையாவது போய்ப் பாருங்க.” நெசவாளிகள் அந்த இடத்தை விட்டு அடி பெயரவில்லை. வடிவேலு முதலியார் கட்டி வறண்டு போன தொண்டையை லேசாகக் கனைத்துச் சரிபடுத்திக் கொண்டு, “அண்ணாச்சி, வெட்கத்தை விட்டுச் சொல்லுதேன். வீட்டிலே ஒரு மணி அரிசி கூட இல்லை. நேத்து ராத்திரியிலேயிருந்து ஒண்ணுமே சாப்பிடலை. வீட்டுக்காரிக்கு வேறே உடம்புக்குச் சரியில்லை...” என்று பரிதாபகரமாகச் சொல்லத் தொடங்கினார். கைலாச முதலியாரால் அந்தப் பிரலாபத்தைக் கேட்டுக் கொண்டிருக்க இயலவில்லை. எனவே அவர் விருட்டென்று இடத்தை விட்டு எழுந்திருந்தவாறே, “தம்பி, உங்க கஷ்டம் எனக்குத் தெரியத்தான் செய்யிது. உங்களை மாதிரித் தறிகாரர் பாடும் திண்டாட்டம், என்னை மாதிரி ‘தொட்டுக்கோ துடைச்சிக்கோ’ என்றிருக்கும் சிறு வியாபாரிகள் பாடும் திண்டாட்டம். இப்போ உள்ள நிலைமையில் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உங்களை ரொம்பவும் வேண்டிக்கிடுதேன். தயவு பண்ணி வேறே யாரையாவது போய்ப் பாருங்க” என்று மளமளவென்று பதில் கூறிவிட்டு, அதற்குப் பதிலை எதிர்பாராதவராக, எதிர்பார்க்கும் விருப்பம் அற்றவராக, வீட்டுக்குள் சென்று மறைந்தார். “முதலாளி” என்று ஒரு நெசவாளி அவயக் குரல் எழுப்பிப் பரிதாபகரமாக உரத்துக் கூப்பிட்டார். ஆனால் கைலாச முதலியாரோ முகத்தைக் கூடத் திருப்பவில்லை. நெசவாளிகள் அனைவரும் இன்னது செய்வதெனத் தெரியாமல், அந்த இடத்திலேயே முளையறைந்த மாதிரி பெருமூச்செறிந்து நின்றனர். எங்கு செல்வது, என்ன செய்வது என்பதே தெரியாமல், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு ஒரு கணமும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கத் துணிச்சலற்று மறுகணமுமாக, சிறிது நேரம் அங்கேயே நின்றனர். அவர்களிடையே நிலவிய பயங்கரமான சவ அமைதியை ஒரு நெசவாளி துணிந்து கலைத்து அவர்களை உசுப்பி விட்டார்: “வாங்க, வாங்க. நின்னு என்ன பிரயோசனம்?” நெசவாளிகள் குனிந்த தலை நிமிராமல் வீட்டை விட்டு வெளியேறினர். தீக்கோழி மணலுக்குள் தலையைப் புதைத்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அசட்டுத்தனத்தைப் போல, கைலாச முதலியார் வீட்டுக்குள் சென்று தொல்லைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பினாலும், சூழ்நிலை அவரை அப்படி இருக்க விடவில்லை. எண்ணற்ற சிந்தனைக் குழப்பங்கள் வலை பின்னிச் சிக்கிப் பிணைக்கும் வேதனையிலிருந்து, திமிறும் வழி தெரியாமல் திகைத்துப் போய், கட்டிலில் தலைசாய்த்துக் கிடந்த கைலாச முதலியாரை மீண்டும் அந்தக் குரல் உசுப்பி எழுப்பியது. மாடியிலிருந்து இறங்கி வந்த மணி தந்தையின் அருகே சென்று நின்று, அருமையோடும் பவ்வியத்தோடும் அழைத்தான். “அப்பா...” கைலாச முதலியார் கண் விழித்து உட்கார்ந்தார். “என்னப்பா?” “ஸீஸன் டிக்கெட் தீர்ந்து போச்சு. நாளைக்குப் புதுசு வாங்கியாகணும்” என்று விஷயத்தை விளக்கினான் மணி. “எவ்வளவுடா?” என்று வேண்டா வெறுப்பாகக் கேட்டார் தந்தை. “ஸெகண்ட் கிளாசுக்குப் பதினஞ்சு ரூபாய்.” கைலாச முதலியாரின் குரல் திடீரென்று வக்கிர கதி பெற்று விட்டது. “ஸெகண்ட் கிளாஸ்! இனிமே நீ ஒண்ணும் ஸெகண்ட் கிளாஸிலே போக வேண்டாம். மூணாம் கிளாஸிலேயே போனாப் போதும். உன் செலவுக்கின்னு மாசம் அம்பது ரூவா தந்தும் உனக்குப் பத்தெலெ. வீட்டு நிலைமை தெரியாமல், நீ விளையாடுதே. நினைச்ச நினைச்ச வாக்கிலே சினிமாவுக்குப் போறதும், போத்தி ஹோட்டல்லெ கணக்கு வைக்கிறதும்...” மணிக்குத் திடுக்கிட்டது. தன் தந்தை இவ்வாறு ஆத்திரத்தோடு பேசி அவன் அறிந்ததில்லை. அவரது எதிர்பாராத திடீர்த் தாக்குதலின் காரண காரியம் அவனுக்குப் புரியவில்லை. எனினும் அவரது அந்தச் சுடுசொல் அவனது சுயமரியாதையையே பங்கப்படுத்துவது போல், அவமானப் படுத்துவது போல் நெஞ்சில் உறைந்தது. அவர் பேசி முடிப்பதற்குள்ளாகவே அவன் தன்னையும் அறியாமல் குறுக்கிட்டான்: “நான் செலவழிக்கிறதிலேதான் குடி முழுகிப் போவுதாக்கும்!” கைலாச முதலியாருக்குக் கண்கள் சிவந்தன; உதடுகள் துடிதுடித்தன; அவருக்கும் தமது சுயமரியாதை, அதிலும் தாங்க முடியாத மனவேதனையினால் தவிக்கும் தமது தன்மானம் வடுப்பட்டுப் போனது போல் தோன்றியது. அடிபட்ட பாம்பு போல் அவர் சீறியெழுந்தார். “ஏண்டா, எதிர்த்தா பேசறே?” அவர் குரல் கடூரமாக ஒலித்தது; “நானே நொந்து போய்க் கிடக்கிறேன். என் உயிரை வாங்காதே. இனிமே, நீ உன் செலவையெல்லாம் ஒரு திட்டப்படுத்திச் சுருக்குற வழியைப் பாரு!” “அப்படி நான் என்ன அநாவசியமா செலவழிக்கிறேன்?” என்று தனது நிரபராதத் தன்மையினால் ஏற்பட்ட தெம்புடன் கேட்டான் மணி. “அநாவசியமோ, அவசியமோ? செலவைச் சுருக்குன்னு நான் சொல்றேன். தெரிஞ்சிதா? நம்ம வீட்டுக்கு உன் செலவு தாங்காது!” தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் சம்வாதத்தைக் கேட்டு, அடுப்பங்கரையிலிருந்த தங்கம்மாள் அகப்பையும் கையுமாக விரைந்து வந்து குறுக்கிட்டாள்: “அவன்கிட்டே ஏன் போயி வாயைக் குடுக்கிய? நம்ம கஷ்டம் நம்மோடே. புள்ளைக மனசை வேறெ புண்படுத்தணுமா?” என்று கணவனை நோக்கிக் கூறிவிட்டு, மகனிடம் திரும்பி, “மணி, நீ போடா மேலே” என்று கூறினாள் தங்கம். தங்கம்மாளின் குறுக்கீடு தந்தைக்கும் தனயனுக்கும் நிதான புத்தியை வரவழைத்தது. மணி ஒன்றும் பேசாமல், வீட்டை விட்டு வெளியே சென்றான்; கைலாச முதலியாரும், மனச் சாந்தியை நாடி மாடியிலுள்ள தமது பூஜை அறைக்குள் சென்றார். பூஜை அறைக்குள் சென்று, அவரது நம்பிக்கைக்கும் பக்திக்கும் பாத்திரமான முருகப் பெருமானின் திருவுருவத்தின் முன்பு கண்மூடி, கைகூப்பி நின்று மனத்தை ஒரு நிலைப்படுத்த முயன்றும், அவரால் நிம்மதி பெற முடியவில்லை. ‘நீளத்திரிந்து நின்றும் நீங்கா நிழல்போல’ அவரை அலைக்கழிக்கும் சிந்தனைகள் அவரை மேலும் மேலும் வாட்டின. அந்தச் சிந்தனைகள் வகுத்த சக்கர வியூகத்தினூடே சிக்கித் தவித்து மனம் உளைத்தார் கைலாச முதலியார். ‘எத்தனை நெருக்கடிகள்! எத்தனை கடன்கள்! வியாபாரம் இல்லையென்று தெரிந்தும், அந்தக் கொடும்பாவி தாதுலிங்க முதலியார் சமயம் பார்த்துக் கழுத்தை அறுக்கிறானே! பன்னிரண்டாயிரம் ரூபாயையும் ஒரு தேதியிலே பைசல் பண்ண வேண்டும் என்றால் என்னால் முடிகிற காரியமா? அந்த மைனர் முதலியார் - அவனாவது பொறுத்திருக்கிறானா? இருந்திருந்து அவனிடம் போய் ஏன் கடன் வாங்கினேன்? அந்தப் பயல் இழவுக்காக அரியநாயகிபுரம் பக்கத்திலிருந்த வயலைக் கூட அடமானம் வைத்தேனே... இத்தனை கடன்களையும் எப்படி அடைக்கப் போகிறேன்?... ஒண்ணா, ரெண்டா?... முருகா என்னை எப்படியப்பா மீட்கப் போகிறாய்? இந்தக் கவலையிலேயே என்னை உருக்கி உருக்கிக் கொன்று விடுவாய் போலிருக்கிறதே... முருகா! முருகா! முருகா!’ கைலாச முதலியாரால் ஓரளவு கூட நிம்மதி பெற முடியவில்லை. சொறி சிரங்கு மாதிரி அரித்துப் பிடுங்கும் அந்தச் சிந்தனைகளை மேலும் மேலும் கிண்டிக் கிளறி, இதயத்தில் ரத்தம் சொட்டச் செய்து கொண்டாரே ஒழிய அதிலிருந்து மீளும் வழியை அவரால் காண முடியவில்லை. ஓரிடத்திலும் இருக்க நிலை கொள்ளாமல் தவித்த கைலாச முதலியார், சிறிது நேரத்தில் மீண்டும் கீழிறங்கி வந்து, பட்டறையில் போய் அமர்ந்தார். அவரது கை அவரையும் அறியாமல் பட்டறைப் பலகைக்கு அடியில் கிடந்த செய்தித் தாளை எடுத்தது; அவரது கண்களும் மனமும் ஏனோ அதே செய்தியை - நாமக்கல் ஏகாம்பர முதலியாரின் மரணச் செய்தியைத் தேடிப் படித்தன. அதைப் படித்த போது மீண்டும் அவர் மனத்தில் பயபீதி உருவாயிற்று; கைகளும் மனமும் நடுங்கிச் சிலிர்த்தன. “முதலாளி!” எதிர்பாராது வந்த அந்தக் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போனார் கைலாச முதலியார். ஏதோ செய்யத் தகாத காரியத்தைச் செய்யும் போது, கையும் மெய்யுமாகப் பிடிபட்டது போல் அவர் கலவரமுற்றுக் குழம்பினார்; அவசர அவசரமாக, தினசரிப் பத்திரிகையைப் பலகைக்கு அடியிலே தள்ளினார்; தள்ளிவிட்டுக் குரல் வந்த திசையில் தலையைத் திருப்பினார். எதிரே நின்றவரைக் கண்டதும், அவருக்கு நாக்கே உள்ளிழுத்துக் கொண்டது போல் இருந்தது. எமலோகத்திலிருந்து ஓலை கொண்டு வந்த கிங்கரனைப் போல் அவரெதிரே தாதுலிங்க முதலியாரின் கணக்கப் பிள்ளை நின்று கொண்டிருந்தார். “கணக்கப் பிள்ளையா?” கைலாச முதலியாரின் குரல் கட்டிப் போய் அடைத்து ஒலித்தது. “முதலாளி அனுப்பிச்சாக. உடனே பணம் வேணுமிண்ணு, கையோடே பணம் வாங்கிக்கிட்டு வரச் சொன்னாக. ரெண்டிலே ஒண்ணு தெரிஞ்சிக்கிட்டு வான்னு விரட்டிட்டாக” என்று பவ்வியத்தோடு கூறி நிறுத்தினார் கணக்கப்பிள்ளை. கைலாச முதலியார் பரிதாபகரமாகப் பெருமூச்செறிந்தார். “என்ன கணக்கப் பிள்ளை? நம்ம கஷ்டம் அவுகளுக்குத் தெரியாதா?” “அதென்னமோ அவுஹ பாடு, உங்க பாடு” என்று மெட்டாகப் பேசி நிறுத்தினார் பிள்ளை. கைலாச முதலியார், ஒரு நிமிஷ நேரம் ஒன்றுமே பேசவில்லை. பிறகு ‘முருகா’ என்று வாய்விட்டுச் சொல்லிவிட்டு, மடியிலிருந்து சாவிக்கொத்தை எடுத்து இரும்புப் பெட்டியைத் திறந்தார். அதிலிருந்து நோட்டுக் கட்டுக்களை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணி முடித்தார். “இந்தாரும், இதிலே மூவாயிரம் இருக்கு; இதை கொண்டு குடுங்க. பாக்கிக்கு நான் வந்து தாக்கல் சொல்றதாகச் சொல்லுங்க” என்று கூறியவாறே நோட்டுக் கட்டுக்களை எடுத்துப் பெட்டியடி மேஜை மீது வைத்தார் முதலியார். கணக்கப் பிள்ளை அந்த நோட்டுக் கட்டுக்களைத் தொடவே இல்லை. “இதென்ன இது, மூவாயிரத்தைக் குடுத்தா, அஞ்சுக்குக் குறைஞ்சி வாங்கிட்டுப் போனா, முதலாளி முகத்திலேயே முழிக்க முடியாது. தயவு செஞ்சி கொஞ்சம் பார்த்துக் குடுத்திருங்க” என்றார் பிள்ளை. “இப்ப அவ்வளவுக்குத் தொகை இல்லையே. இருந்தா பெரிய முதலாளிக்கா தவணை சொல்லப் போறேன்?” என்று இரங்கிய குரலில் வேண்டிக் கொண்டார் கைலாச முதலியார். “அதென்னமோ, இது ரொக்கப் பாவத்தாம். அதனாலே மொத்தமா வேணுமாம். அத்தோடே நூல் கொடுத்த பாக்கியையும் கேட்டுட்டு வரச் சொன்னாக” என்று விடாப் பிடியாகப் பேசினார் பிள்ளை. கைலாச முதலியாருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. கிடுக்கித் தாக்குதல் மாதிரி நாலா புறத்திலிருந்தும் நெருக்கடிகள் ஸ்தூலமாக முற்றி வந்து மோதுகின்ற நிலைமையைப் பிரத்தியட்சமாக உணர்ந்தார். அந்த உணர்ச்சியிலிருந்து மீளும் வகை தெரியாமல், ‘முருகா, முருகா’ என்று முனகியவாறே எதிரே தொங்கிய ஆறுமுகப் பெருமானின் படத்தை நோக்கினார். புன்னகை ததும்பும் இன்முகத்தோடும், வள்ளி தெய்வானை சமேதராகவும், வைர வைடூரிய அலங்கார பூஷிதராகவும், வடிவேல் அழகராகவும் அபயக் கரம் காட்டி, அசையாது நின்றார் ஆறுமுகப் பெருமான். அந்த அபயக் கரத்திலிருந்து கைலாச முதலியார் மீது எந்தவித அருளும் சொரியப் போவதாகத் தெரியவில்லை. ஆறுமுகப் பெருமானையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்த கைலாச முதலியார் திடீரென்று ஏதோ தீர்மானத்துக்கு வந்தது போல் பட்டறைப் பலகையிலிருந்து எழுந்து வீட்டுக்குள் சென்றார். “தங்கம்!” அவர் குரலில் இன்னதென அறிய முடியாத வெறி புரையோடியிருந்தது. தங்கம் வந்தாள். “நகைகள் எல்லாம் எங்கே இருக்கு?” என்று யந்திரம் போல கேட்டார் அவர். “பீரோல்லெதான் இருக்கு” என்று கூறியவாறே சாவியைக் கொண்டு வந்து கொடுத்தாள் மனைவி. கைலாச முதலியார் திருடிப் பழக்கமற்ற புதிய கள்ளனைப் போல் அவசர அவசரமாகப் பீரோவைத் திறந்து நகைகளில் பலவற்றை எடுத்து மடியில் கட்டிக் கொண்டார். கணவரின் வெறி பிடித்தது போன்ற இந்தச் செய்கையைக் கண்டு, வியப்பும் பயமும் கொண்டவளாக இமைத்த கண் வாங்காது பிரமித்து நின்றாள் தங்கம்மாள். கைலாச முதலியார் பீரோவைப் பூட்டிவிட்டுத் திரும்பும் போது, தங்கம் அமைதியாக மெதுவாகக் கேட்டாள். “எதுக்கு இதெல்லாம்?” கைலாச முதலியார் பதிலே சொல்லாமல், மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியே வந்தார்; நகைகளை மேஜை மீது அள்ளி வைத்தார். “இந்தாரும்; எடுத்துக்கிட்டு போய்த் தொலையும்” என்று உள்ளடங்கிய கோபத்தோடு கூறினார் கைலாச முதலியார். மேஜை மீதிருந்த நோட்டுக்களையும் நகைகளையும் முந்தியில் வாரி முடிந்தவாறே “கணக்கு?” என்று கம்மிய குரலில் உசாவினார் பிள்ளை. “எல்லாம் நான் வந்து பார்த்துக்கிடுதேன். என் மானத்தை வாங்காதேயும். போய்த் தொலையும்!” என்று கடூரமாக கூறிவிட்டு முகத்தை வெட்டித் திருப்பிக் கொண்டார் முதலியார். கணக்கப் பிள்ளை அந்த இடத்தை விட்டு அகன்று சென்ற பிரக்ஞையேயற்று, கைலாச முதலியார் சிறிது நேரம் வரையில் அசையாது இருந்தார். புகைமூட்டம் போட்டது போல் அவரது உள்ளம் உள்ளுக்குள் பொருமிப் பொருமிப் புழுங்கிக் கொண்டிருந்தது. இன்னதென்று தெரியாத ஒரு வேதனை உடம்பெல்லாம் பரவி நின்று, உறுத்துவது போலிருந்தது. தன் நினைவு திரும்பிய கைலாச முதலியார் மீண்டும் எதிரே கிடந்த படத்தின் மீது கண்களைத் திருப்பினார். எதிரே ஆறுமுகப் பெருமானின் அபயக்கரம் மீண்டும் காட்சி அளித்தது; ஆனால், அவரது மனக்கண்ணின் முன்போ இனம் தெரியாத அந்த ஏகாம்பர முதலியாரின் குரக்கு வலித்து விகாரமாய்த் தோன்றிய உயிரற்ற சடலம் தான் தோற்றம் அளித்தது! |