அறிமுகம்

     விரல்களை நீட்டியும் குறுக்கியும் வளைத்தும் மடித்தும் நிழல் உருவங்களைத் தோற்றச் செய்யும் போது சிறுவன் பிரமிக்கிறான். “வெறும் விரல்களின் உருவங்களா இவை?” என்று வியக்கிறான்.

     புறக் கண்களால் காண முடியாத மனித மனங்களின் இயக்கங்களும் இத்தகைய நிழற் கோலங்களைத் தான் தோற்றுவிக்கின்றன.

     பல காரணங்களுக்காக வாழ்வெனும் நீண்ட பாதையிலே ஆணும் பெண்ணும் இயைந்து செல்ல வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஒழுங்கான சமுதாய அமைப்புக்காக, ஒத்து அமைந்து மகிழ்வு கூட்டும் குடும்பக் கட்டுக் கோப்புக்காக, சில கட்டுப்பாடுகள் தேவையாக இருக்கின்றன. ஆனால் இவ்விதமான ஒரே மாதிரியான சில விதிகளுக்கு உட்பட்டு இயங்க, ஒவ்வோர் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான சூழ்நிலையில் ஒரே மாதிரியான இயல்புடையவர்களாகத் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் இயந்திரங்களைப் போல் இருப்பதில்லையே? ஒவ்வொரு தனி இயல்பும், சூழ்நிலைக்கும் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்பத் தனி ஒரு உருவைப் பெற்றிருக்கிறதே?

     வெளிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் ஆடவனின் மனப்பரப்பு பொதுவாக அகன்றிருக்கிறது. இன்பமும் துன்பமும் பதிந்தாலும் மிகவும் ஆழமாக, அடித்தளத்தில் வேரூன்றி விடுவதில்லை. ஆனால் ஒரே வட்டத்தில் சுழலும் வீட்டுப் பெண்ணின் இதயத்திலே, ஒரு சிறு அசைவு நேர்ந்தாலும், வெளிக்கு அது தெரியாமற் போனாலும், அமைதியில் அடங்க வெகு நேரமாகும். பெண்ணுள்ளத்தின் இந்த அடிப்பரப்பிலே ஒளிந்திருக்கும் வேகமன்றோ தாய்மைக்குரிய ஆற்றலாக உருப்பெற்று வெளியாகிறது?

     இந்த ஆற்றல் ஒவ்வொரு பெண்ணிடமும் எப்படியோ வெளியாகிறது. வெளிவர வழியமையாது போனாலும், அவரவர் தனி இயல்புக்கு ஏற்றபடி வழி காணவும் வகை செய்து கொள்கிறது. இம் முயற்சியிலே போராட்டம், களிப்பு, தோல்வி, வெற்றி, சோர்வு, எல்லாமே உண்டு. ஆழமிருந்தாலும் சலனம் காட்டாத குளமாய் விளங்கும் பெண் சாரு. சேற்றைக் காட்டாமல் பூத்துப் பொலியும் தாமரைத் தடாகமாக, துயரிருந்தால் அடக்கிக் கொண்டு, இனிய புறச் செய்கைகளால், இல்லத்தின் மலர்ச்சிக்குப் பொறுப்பாக வளைய வருகிறாள். கள்ளம் கபடு தெரியாமல், தெளிந்த நீர்த்தேக்கம் போல் நிற்கும் அபலை பூமா, வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணுகிறாள்.

     ஆழ்மனத்தின் அடித்தளத்திலிருந்து பொங்கி வரும் வேகத்தோடு கூடிய புதுமைப் பெண் ரேவதி. ஒரு விநாடியும் அடங்கியிராத ஆற்றலை அகத்தே கொண்ட அலைகடலை நினைப்பூட்டும் இயல்புடையவள்.

     சாருவையும் பூமாவையும் புரிந்து கொள்ளும் கோபாலன் அதே போல் ரேவதியைப் புரிந்து கொள்ள இயலாதவனாகிறான். புதுமைக்குப் புதுமையாக விளங்கும் ரேவதி, பழமைக்குப் பழமையாக நிற்பது கண்டு திகைக்கிறான். அவளுடைய அடிமனசின் ஓட்டங்களை, ஆற்றலை, புரிந்து கொண்டு அவள் செயல்களை ஏற்றுக் கொண்டாலும், அந்த உள்ளத்தின் முழுமையை அவன் கண்டு கொள்ளவில்லை. நெருங்கி நெருங்கி வருகிறான்; வந்து திகைத்து வியந்து நிற்கிறான். அவன் அநுமானம்... வெறும் நிழற்கோலந்தானா? இதோ நாம் தான் ரேவதியையே சந்திக்கப் போகிறோமே?



நிழற் கோலம் : அறிமுகம் 1