உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ. 118 (3 மாதம்) | GPay/UPI ID: gowthamweb@indianbank |
ஈரோடு புத்தகத் திருவிழா 2025 கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் - 150 & 151 21-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா ஈரோடு சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் 01/08/2025 முதல் 12/08/2025 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழா தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும். தினமும் மாலை 6.00 மணிக்கு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைவரும் வாரீர் |
1 விரிந்து பரந்து கண்ணுக்கெட்டிய வரை அலைமோதும் நீலக்கடல் கட்டிப் போட்டதொரு அரக்கனைப் போல் பொங்கி பொருமுகிறது. இதை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள்? எதற்காகக் கட்டிப் போட்டார்கள்? மேல்வானில் அந்திக் கன்னியின் மஞ்சள் பட்டாடை மறையுமுன் சந்திரனுக்குத்தான் ஏன் இந்த அவசரமோ? எட்டி எட்டிப் பொங்கும் கடலின் ஆற்றாமையைக் கண்டு நகைக்க என்ன ஆணவம்! முழங் கால்களைக் கட்டிக் கொண்டு ரேவதி நீலக் கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். பட்டணத்துச் சந்துகளிலும், பொந்துகளிலும் கத்திரி வெய்யிலின் வெம்மையில் புழுங்கிய மனிதக் கும்பல், கடற்பரப்பில் ஆடி வரும் மென்காற்றைச் சூடாக்க வந்து நிறைந்திருந்தது. முட்டு முட்டாய், ஜோடி ஜோடியாய், வண்ண வண்ணமாய் வெள்ளையாய், சிரிப்பாய், உல்லாசமாய், ஆற்றாமைகளைக் கொட்டும் வாய்ப்பாய், குழந்தைகளாய், சிறுவர்களாய், நீண்டு சென்ற கடற்கரை நிறைந்திருந்தது. ரேவதி தனியே தான் அமர்ந்திருந்தால். செனெட் மண்டபத்துக்கு எதிராக அவள் எப்போதும் வந்து உட்காரும் இடம்; அநேகமாக அவளுக்குக் காலி இல்லாமல் இருந்ததில்லை. விரிந்து கிடக்கும் கடற்கரை மணலில் கால்களை வைக்கையில், ஒடுங்கி கிடக்கும் சிறகுகள் சிலிர்த்துக் கொண்டாற் போல் ஒரு விடுதலை உணர்வு எப்படி உண்டாகிறது? தடுக்கும் சுவர்களில்லை; வண்டி வாகனங்களின் குறுக்கீடுகளில்லை. வரை பிடித்தாற் போன்று கறுப்புச் சாலைகளின் வீதிகளில்லை என்ற உல்லாசத்தில் மனசு விடுதலை நிகழ்ச்சி கொண்டாடுகிறது போலும்! ஆனால் சிலிர்த்துக் கொண்ட சிறகுகளைக் கட்டிப் பிடித்து மடியில் வைத்துக் கொண்டாற் போல் அவள் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். சிறகை விரித்துக் கொண்டு எங்கே செல்வது? எப்படிச் செல்வது? அந்தக் கடற்கரையில் தனியாக அவளைப் போல் கடலைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால், சம்சாரச் செப்பிலிருந்து ஓய்வு தேட வந்தவர்களோ, கலை, கவிதை என்று பித்துக் கொண்டவர்களோ தாம் ஏகாந்தத்தை நாடி வந்திருப்பார்கள். இளமையும் துடிப்பும் தோழமையும் நாடுபவை. தேடிக் கூடி அந்தக் கடற்கரை இனிமையை அநுபவிக்க வந்திருப்பார்கள்; அல்லது தேடித் தேடிக் காணத் தவித்துக் காத்திருப்பார்கள். சிறகை விரித்துக் கொண்டு எங்கே செல்வது? எப்படிச் செல்வது என்றெல்லாம் அசட்டுக் கேள்விகள் கேட்டுக் கொண்டு, குதிக்கும் கடலையே பார்த்துக் கொண்டு அவளைப் போல் எவரேனும் அங்கு வந்து உட்கார்ந்து இருப்பார்களோ? பச்சையும் நீலமும், சிவப்பும் வெள்ளையுமாகப் பூச்செண்டு போல் ஒரு கூட்டம் அவளிருந்த பக்கம் வந்து கொண்டிருந்தது. கல்லூரி மாணவியரோ? ஆனால், இரட்டைப் பின்னல், குதிரை வால் போன்ற கூந்தல் சிங்காரிகளாக இல்லையே? தன்னைக் கடந்து அவர்கள் தண்ணீருக்குச் செல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்கையிலே, “இங்கேயே உட்காரலாமடி!” என்று ஒருத்தி உட்கார்ந்தாள். பச்சை புடைவை; அம்மை வடு முகம்; வயசு இருபத்தேழு, இருபத்தெட்டு இருக்கலாம்; வாத்தியாரம்மாளோ? “தண்ணீரின் அருகே போகலாமே?” என்றாள் பொன்னிறக் காஷ்மீரப் பட்டுச் சேலை உடுத்திருந்த மெல்லிழையாள் ஒருத்தி. கூந்தலைப் பின்னிவிடாமல், சிவப்பு ரிப்பனால் முடிந்து, பறக்க விட்டிருந்தாள் அவள். “ஏன் தண்ணீரில் பந்தைப் போட்டுப் பிடிக்கச் சொல்லிக் கொண்டு வெள்ளை நாயுடன் உன் சுந்தராங்கதன் வருவான் என்று பார்க்கிறாயோ?” என்று குறுநகை புரிந்தாள் வெள்ளைச் சேலைக்காரி. அவள் தலையை இழைய வாரி முடித்திருந்தாள். புருவங்களுக்கு மத்தியில் திருநீற்றுக் கீற்று லேசாகத் தெரிந்தது. மாநிறம். பூசினாற் போன்ற உடல்வாகு. ரேவதி உடல் சிலிர்க்கப் பார்க்கையிலே, கொல்லென நகைத்தபடியே அவர்கள் அனைவரும் உட்கார்ந்து கொண்டு விட்டார்கள். கறுப்புச் சேலையணிந்த ஒருத்தி, ரேவதிக்கு நாலடி தூரத்துக்குள், அவளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய கூந்தல் கீழே மணலைத் தொட, நாகம் போன்ற பின்னலாகப் புரண்டது. தந்தக் கை ஒன்றை மணலில் ஊன்றியிருந்தாள். அதில் குலுங்கும் வளையல்கள் இல்லை. “ஏன்? நான் வெளிப்படையாக நடக்கிறேன். நீங்கள் பாதிப் பேரும் வேஷம் போடுகிறீர்கள். ஏண்டி புஷ்பா? சுந்தராங்கதன் ஒருவன் வந்து, “சுந்தரி! உனக்கு நான் மறுவாழ்வு தருகிறேன்” என்று சொன்னால், “ஊஹூம், நான் மாட்டேன், நாத்தி செண்பகத்தம்மாளுக்கு அடங்கியவள் நான்” என்று கையை உதறிக் கொள்வாயாக்கும்” என்றாள் பொன்னிறச் சேலைக்காரி. “அவள் மெடிகல் காலேஜுக்குப் போகப் போகிறேன் என்று சொல்கிறாளே, எதற்காம்? யாரேனும் ஒரு டாக்டர் மீதோ, டாக்டராகப் போகிறவன் மீதோ, மயங்கி விழுவதற்குத்தான்! இந்தத் திருநீறு, செண்பகத்தம்மாள், எல்லாம் இப்போதைக்கு... இல்லையாடி புஷ்பா?” என்றாள் பச்சைப் புடவைக்காரி. “அப்படியெல்லாம் மயங்கி விழுந்தால் காலம் சென்ற பெரிய முதலாளியின் சொத்தில் ஒரு பைசாக் கூட கிடைக்காது. திருநீறும் மற்றச் சம்பிரதாயங்களும் இருக்கின்றனவா என்று பார்க்கத்தான் செண்பகத்தம்மாள் மாசம் ஒரு நடை ஹாஸ்டலுக்கு வருகிறாள்!” “உண்மையில், செண்பகத்தம்மாள், டாக்டருக்குப் படிக்க உன்னை அனுப்புவாளோ புஷ்பா, உன்னை?” “ஏண்டி, கல்யாணத்தின் போது பெரிய முதலாளிக்கு வயசு ஐம்பத்தைந்து என்றாயே? இப்போது சின்ன முதலாளியாக வந்திருப்பவனுக்கு எத்தனை வயசு இருக்கும்?” “சேச்சே! சின்ன முதலாளி, முதல் தாரத்தின் முதல் பையன். மூன்று குழந்தைகள். கடையை லட்சணமாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறான். போயும் போயும் உனக்குப் புத்தி போகிறதே? இவள் பெரிய முதலாளியை மூன்றாந்தாரமாகக் கட்டி, சமையலறை மூலையிலிருந்து இந்த ஹாஸ்டல் மூலைக்கு வந்திருக்கிறாள். இனிமேல் டாக்டர் மிஸஸ் புஷ்பாவாக, இல்லை... மிஸஸ் புஷ்பா... யாரோ அவர்?” ‘களுக்’கென்று சிரித்தாள் பச்சைச் சேலைக்காரி. “எனக்கென்னமோ, நம் ரமாமணியின் சிவப்புப் புடைவையைக் கண்டால் நடுங்கி மயங்கும் புஷ்பா, டாக்டருக்குப் படிக்கவாவது என்று தோன்றுகிறது!” “ஆமாம், இந்த ஆஸ்பத்திரிகளில் சிவப்புக் கம்பிளி கொடுக்கிறார்களே, அந்தக் கலரை மாற்றினாள் என்ன?” சம்பந்தமே இல்லாமல் அந்தக் கறுப்புப் புடவைக்காரி இதைச் சொன்னபோது, ரேவதிக்குச் சடாரென்று உள்ளம் அதிர்ந்தாற் போல் குலுங்கியது. அதுவரையிலும் பேசியிருக்கவில்லை அவள். கூந்தல், வாழுபவள் பொறாமைப்பட வழிந்து புரளுகிறது. அவளுக்குரியவனைச் சிவப்புக் கம்பளி போர்த்தி, பட்டணத்து ஆஸ்பத்திரி எதிலேனும் நீட்டி வைத்திருந்தார்களோ, பாவம்! ‘ரமாமணி’ என்ற பேர் வந்ததுமே ரேவதியின் சந்தேகம் ஊர்ஜிதமாகிவிட்டது. அவளுடன் படித்த ரமாமணி, கைம்பெண்கள் விடுதியில் ‘வார்டன்’ உத்தியோகம் பார்ப்பதாகத்தானே ஒரு மாதம் முன்பு சந்தித்த போது தெரிவித்தாள்...? இவர்களெல்லாரும்... “ஆமாமடி, அந்த ‘டேஞ்சர்’ கலரை மாற்றினால் குறைந்தபட்சம் நூற்றுக்கு இருபது சாவுகளையேனும் தடுக்கலாம். சந்தர்ப்பம் வாய்த்தால், இதற்கு ஒரு திருத்தம் கொண்டு வர நான் நடவடிக்கை எடுப்பேன்.” “சாம்பல் வர்ணமோ, லேசான பச்சையோ கொடுக்கலாம். சிவப்பு... டேஞ்சர்...” இச்சமயம் கையெழுத்து மங்கி வரும் நேரமாக இருந்தது. பேசியவள் தொடருமுன், சிவப்புப் பந்தொன்று பறந்து வந்து பொன்னிறச் சேலைக்காரியின் மெல்லிதழகளை முத்தமிட்டாற் போல் வந்து முட்டியது. கண் மூடித் திறக்கும் நேரத்தில் கப்பென்று பேச்சரவம், சிரிப்பொலி எல்லாம் அடங்கி விட்டாற் போலிருந்தது. பந்தை எடுக்க, அவர்களிடையே குதித்து ஓடி வந்த வெள்ளை நாய் ஒன்று, மாலதியை உராய்ந்து கொண்டு பந்தை கவ்விக் கொண்டு ஓடியது. சிறிது தொலைவில் பந்தை வீசி நாயை ஏவிய இளைஞன், அதன் வாயினின்றும் பந்தை வாங்கிக் கொண்டு அதைத் தட்டிக் கொடுத்தான். “ஏண்டி, மாலதி, இடித்த புளிபோல் உட்கார்ந்து விட்டாய்? அக்கிரமம்!” என்று துள்ளினாள் பச்சைப் புடவைக்காரி. “இத்தனை பெரிய கடற்கரையில் நாய் பழக்க வேறு இடம் இல்லையோ? அயோக்கியத்தன்!” என்று சீறினாள் புஷ்பா. வரம்பில்லாத மூக்குக் கண்ணாடி அணிந்திருந்த அந்த இளைஞன் குமிண் சிரிப்புடன் மாலதியை நோக்கி, “வெரி ஸாரி” என்றான். “செய்வதையும் செய்து விட்டு, ஸாரி! சீச்சீ.” “கேடு கெட்ட ஜன்மங்கள்!” “மாலதி, நீ மிக மோசமடி!” “நடந்தது நடந்தாச்சு. என்ன சண்டை?” என்றாள் மாலதி. அப்போதுதான் கருப்புப் புடவைக்காரி திரும்பினாள். ரேவதிக்கு ‘திக்’ கென்றது. இவள்!... இவளா? இவளா? அடி... பாவி! செந்தாழை நிறமும் கருப்புப் புடவையும் கருப்புச் சோலியும் கருங்கூந்தலும் பாழ் நெற்றியை இன்னும் காண்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் அழகு செய்திருக்கிறதே? இது அழகா? மூக்குத்தியும் குங்குமமுமாக அவள் அன்று வந்த போது பூச்சொரிந்த களை, அவை போன பின் சோக காவியம் சொரியும் அவல அழகை இசைக்குமோ? சோகத்திலும் வறுமையிலுங் கூட அழகு உண்டோ? அவளும் ரேவதியையே தான் பார்க்கிறாள். ரேவதி அவள் கருப்புச் சேலையைத் தொட்டு, “நீ... நீ... வாசுவின்...” என்றாள். அடுத்த வார்த்தை வரவில்லை; தொண்டை அடைத்தது. “ஆமாம். நீங்கள்... அவர் மாமா பெண் ரேவதி தானே?” “ஆமாம். இங்கு படிக்கிறாயா என்ன?” “என்ன செய்வது? இந்த வருஷம் சேர்ந்தேன். ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு. பாஸானால் அடுத்த வருஷம் ஸ்கூல் ஃபைனல்.” “குழந்தை, பையனா, பெண்ணா?” “பையன். ஊரில்தான் இருக்கிறது.” “பரீட்சை முடிந்து லீவு விட்டாச்சா உனக்கு?” “ஆமாம். நாளை மறுநாள் ஊருக்குப் போகிறோம்.” “ஊருக்குப் போகுமுன் வீட்டுக்கு வாயேன்? எனக்கு இத்தனை நாட்கள் தெரியாமல் போச்சே?” “விநாயகர் கோயில் தெருத்தானே? வருகிறேன்.” “உனக்குத் தெரியுமே வீடு? அதேதான். கட்டாயம் வரவேண்டும்.” “வருகிறேன்.” “வாடி பூமா? ரமாமணி முழித்துப் பார்ப்பாள். நிலா வேறு வந்தாச்சு.” எவளோ குரல் கொடுத்தாள். எல்லோரும் எழுந்து நடந்தார்கள். “வருகிறேன்!” ரேவதியிடம் சொல்லிவிட்டு பூமா அவர்களைப் பிடிக்க விரைந்தாள். பச்சை, கருப்பு, வெள்ளை எல்லாம் கண்களுக்கு நிழலுருவங்களாய் மங்கி மனிதக் கும்பலில் மறைந்தன. வாசு என்ற அந்தப் பழிகாரன் (இனி அவன் இவன் என்று நினைத்தால் என்ன?) ஒருத்தியின் நெஞ்சைக் குமுற வைத்துவிட்டு, இப்படி ஒரு சுடர்ப் பொறியையும் அழித்து விட்டுப் போக வேண்டுமா? பதினெட்டு வயசில் மூளியும் முழு அழகு பெறுவாளாம். இந்த அழகின் முழு விளக்கம் ஒரு கணக் கொள்ளைக்காக மாய வேண்டுமா? எங்கே பறந்து போக முடியும்? அடங்கி ஒடுங்கிக் கிடந்தாற் போலிருந்த சிறகு துடிக்கிறது. காயம் பட்டாற் போல் இரத்தம் கசியத் துடிக்கிறது. ரேவதிக்கு அழ வேண்டும் போலிருக்கிறது. அவள் எழுந்து நடக்கிறாள். கண் முன் புள்ளிகளாய் அப்பி, அகன்று செல்வது போல் மனிதக் கும்பலும் கலைந்து சென்று கொண்டிருக்கிறது. பின்னே கடலின் ஓலம் மெல்ல மெல்ல, அவளுடைய செவிகளினின்றும் விலகுகிறது. |