![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 1 அக்டோபர் 2025 11:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 16 |
3 மணி ஆறரை தான் ஆகிறது; அதற்குள் வந்திருக்கிறாள். பச்சை வாயில் புடவை. தலை முழுகி ஈரக் கூந்தலைத் தோளோடு முடித்துக் கொண்டிருக்கிறாள். புருவங்களுக்கிடையே இருக்கிறதோ இல்லையோ என்று தெரிந்தும் தெரியாமலும் சிறு திருநீற்றுக் கீற்று இருக்கிறது. நள்ளிரவில் உதிர்ந்து, பனித்துளிக் கண்ணீரின் சோகத்தில் தோய்ந்த பாரிஜாத மலரின் நினைவு எழ, ரேவதி சற்று எட்ட இருந்தே பார்த்துக் கொண்டிருந்தாள். நெற்றி மங்கலத்தை இழந்தால், அழகு அழுவதுண்டோ? கவடற்று ஒருவனுடைய உள் மனசு தெரியாமல் மாலையிட்டாள். அவனுக்காக வாழ்வையே, பசுமையையே இழந்து நிற்கிறாள். என்ன கொடுமை! “உன் கடிதங்களைக் கூட என்னால் கிழித்தெறிய முடியவில்லை; மலர்நெஞ்சைக் கிள்ளிப் போட உன்னால் எப்படி முடிந்தது, வாசு!” என்று உள்ளூறக் கதறினாளே? ஆனால், இன்று இந்தக் கொடுமையைப் பார்க்கவே பொறுக்க வில்லையே? “உடம்பு சரியில்லையோ? இப்போதுதான் எழுந்தீர்களா? கண்ணெல்லாம் சிவந்திருக்கிறதே?” “ஓ... ஒன்றுமில்லை. சாரு, இது... இவள் தான் வாசுவின்...” என்று ரேவதி குழறினாள். “தெரியுமே? அவள் இங்கு வந்திருக்கிறாளே? உட்காருங்கள்” என்று சாரு உபசரித்தாள் பூமாவை. “பரவாயில்லை. நான் உங்களை எல்லாம் விடச் சிறியவள். எனக்கு இந்த மாசந்தான் பதினெட்டு வயதாயிற்று. என்னை, வா, போ என்று சொல்லலாமே?” ரேவதி துணுக்குற்றவளாக நோக்கினாள். பதினெட்டு வயசு முடியவில்லை, அதற்குள் எல்லாம் ஆயிற்றென்று அழுகிறாளோ அவள்? இல்லை, சிரிக்கிறாள். இதழ்களில் புன்னகை தான் இலங்குகிறது. ஆனால், அழும் புன்னகை. “அப்பா உடம்பு இப்போது எப்படி இருக்கிறது? எழுந்து உட்காருகிறாரா?” மாடியிலிருந்து அம்மா பேஸினும் கையுமாக இறங்கிப் பின்புறம் செல்வதைக் கவனித்த வண்ணம் பூமா கேட்கிறாள். இதெல்லாம் கேட்டு இவளால் எப்படி நடமாட முடிகிறது? இயற்கையாக எப்படிச் சம்பிரதாயப் பேச்செல்லாம் பேச முடிகிறது? “தேவலையாகும் என்று தான் டாக்டர் சொல்கிறார். வரும்போது வந்து விடுகிறது. குணமாகும் என்று தான் நம்புகிறோம்.” “லீவு கழிந்து திரும்புவாயா?” “வருவேன் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்போதே உங்களை எல்லாம் வந்து பார்க்க வேண்டும் என்று பல நாட்கள் நினைத்தது உண்டு. வீடு நினைவிலிருந்ததே ஒழிய, தெருவின் பெயர் தெரியவில்லை. மேலும் ஹாஸ்டலிலிருந்து பெர்மிஷன் வாங்கிக் கொண்டு புதிசான இடத்துக்கு வருவது கொஞ்சம் கஷ்டம்.” “நேற்று ரேவதி பீச்சில் பார்த்தேன் என்று சொன்னாள். இப்போதாவது வந்தாயே? உள்ளே வாயேன்; காப்பி கலந்து கொண்டிருந்தேன். ஆறிப் போகும். ரேவதி பல் தேய்த்து விட்டு வரட்டும்.” உள்ளே வந்து சாரு மணையை எடுத்துப் போட்டாள். பூமா வெகுநாட்கள் பழகினாற் போல் வந்து உட்கார்ந்தாலும், மருட்சி அகலவில்லை. ரேவதி பல் துலக்கிவிட்டுச் சமையலறைக்குள் வந்த போது, சாரு டவரா டம்ளரில் காப்பியை ஆற்றி வைத்துக் கொண்டிருந்தாள். பூமாவுக்கு காப்பி வைத்திருந்தாள். ஆனால் அவள் தொடவில்லை. “ஆறிப் போயிருக்கும், பூமா. எடுத்துக் கொள்.” “நான் காப்பியை ஒரு வருஷமாக விட்டு விட்டேன். சோறில்லாமல் தான் இருக்க முடியாது. உயிர் வாழ வேண்டும்.” சாருவும் மறுமொழி கூறவில்லை; ரேவதியும் கூறவில்லை. “எங்கள் ஹாஸ்டலில் இதெல்லாம் நினைக்கவும் முடியாது. எதோ சோறு, புளிக்குழம்பு” என்றாள் மீண்டும். “அப்படியா? ஒருவருக்குமே காப்பி கிடையாதா? பால் கொடுப்பார்களா, ஆனால்?” பூமா, சாருவின் இந்தக் குழந்தைக் கேள்விக்கு ஒரு சிரிப்புச் சிரித்தாள். சிரிப்பில் கண்ணீர் முத்துக்கள் கலகலத்தன. “ஒன்றுமே கிடையாது. ஒன்பதரை மணிக்குச் சாப்பாடு தான். பழக்கம் பண்ணிக் கொண்டவர்களுக்குக் காப்பி கேட்கும் நா. திருட்டுத்தனமாக, பொடி வாங்கி வந்து வெந்நீரை ஊற்றிச் சர்க்கரையைப் போட்டுக் குடிப்பவர்கள் உண்டு. பால் பொடி என்று என்றேனும் ஒருநாள் எவளோ கொண்டு வந்து விட்டால் அமர்க்களம்தான். ஆனால் வார்டன் அம்மாளுக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் தண்டனை கிடைக்கும்.” ரேவதி அந்த உலகத்தின் பிசிறாக வந்த சேதியை இமை கொட்டவும் மறந்து கேட்டாள். “நம் சொந்த செலவில் போட்டுக் குடித்தால் அவளுக்கென்ன?” “உஹூம், சொந்த செலவு செய்ய முடியாதவர்கள் தானே இந்த ஹாஸ்டலுக்கு வருபவர்கள்? அப்படிப் பசை இருந்தால் இந்தக் கட்டுப்பாட்டுக்கு வரவேண்டாமே? வார்டன் அம்மாவுக்கென்று நாங்கள் காப்பி போடுவோம். ‘ஏ’ கிளாஸ் சாப்பாட்டையும் சமைப்போம். அந்த அடுப்பிலேயே, எங்கள் சாப்பாட்டையும் செய்வோம். அதெல்லாம் இங்கே சொல்லக் கூடாது. நான் எல்லாம் விட்டு விட்டேன்.” “பாவம்” என்றாள் சாரு. “பாவமேது, புண்ணியமேது? நான் எதற்கு இந்தப் பட்டணம் தேடி இந்த ஹாஸ்டலுக்கு வந்திருக்கிறேன்? காப்பியையும் நல்ல சாப்பாட்டையும் எதிர்பார்த்தா? அப்படி எல்லாம் சுகப்படக் கொடுத்து வைத்திருந்தால் இப்படி ஏன் தலைவிதி வருகிறது?... இன்னும் கல்யாணமாகாமல் படிக்கிறது... என்று ஒரு பேச்சாக இருக்குமே? வாயருகில் பாலைக் கொண்டு போகும் போது மண்ணில் தட்டிக் குப்புறத் தள்ளினாற் போல் விதி செய்துவிட்டதே.” ரேவதி இடித்த புளி போல் காப்பியும் கையுமாக நின்றாள். “இனி ஒரு நாளில்லை, இரண்டு நாளில்லை, மூன்று வருஷங்கள் படித்து வேலைக்கு வரும் வரையிலும் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்ட வேண்டும். அண்ணாதான் என்ன செய்வான்? சம்சாரி. எனக்காக எத்தனையோ சிரமப்பட்டுக் கல்யாணம் செய்து கொடுத்தான். என் அதிர்ஷ்டம் இப்படி ஆயிற்று. இப்போதும் இந்த ஹாஸ்டலுக்கு வர எங்கெங்கோ சிபாரிசுகள் பிடித்து, மாசம் பதினைந்து ரூபாய் கிடைக்க வழியும் செய்து தந்திருக்கிறான். ஆனால், மேல் செலவு இல்லையா? அண்ணாவின் நிலைக்கு இதுவே கஷ்டம். அவன் கஷ்டம் விலகாமலிருக்க நான் பாரமாகி விட்டேன்...” “வாசு இன்ஷ்யூரேதும் செய்திருக்கவில்லையா?” “ஒன்றுமில்லை போல்தானிருக்கிறது. எனக்கு ஒன்றும் தெரியவுமில்லை, புரியவுமில்லை. நாலு சவரனில் ஒற்றை வடத் தாலிச் சங்கிலியும், கைக்கு இரண்டு வளையலும் பாத்திரம் பண்டங்களும் வாங்கிக் கொடுத்தே அண்ணா கல்யாணம் செய்து கொடுத்தான். பாத்திரம் பண்டங்கள் ஏதேனும் ஆயிரம் ரூபாய் தேறும். அவர்களுக்கு அது அல்பம். ஆனாலும் நாங்களாக எப்படிப் போய்க் கேட்போம்? நான் படித்து முடியும் வரை, குழந்தையை உத்தேசித்தேனும் அவர்கள் மாசம் பத்தோ இருபதோ கொடுத்தால் நன்றாக இருக்கும். ஒரு கடுதாசி கூட மாமனார் போடவில்லை.” “காதலையும் கல்யாணத்தையும் துயரத்தையும் தாண்டி வாழும் பிரச்னை, வயிற்றுப் பிரச்னை!” “கடுதாசி கூட எழுதவில்லையா? என்ன அக்கிரமம்?” “அதையும் நாம் எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? நான் போய் அவர் வீட்டில் பத்து மாசம் ஒரு வருஷம் வாழ்ந்தேனோ? இப்படி ஒரு பழைய உறவுகாரர்கள் இருப்பதையே அம்மா நினைவு வைத்திருக்கவில்லை. திடீரென்று வந்தார்கள். ஒரு கையில் மாலையும், ஒரு கையில் கத்தியுமாக. எல்லாம் முடிந்து போயிற்று. அது போகட்டும், குழந்தை பிறந்திருக்கிறதென்று தெரியும், அண்ணாவே பிள்ளைக் குழந்தையாகப் பிறந்திருக்கிறதென்று கடுதாசி போட்டான். நான் படிக்கிற விவரத்துக்குக் கூட எழுதினான். யாரோ மூன்றாம் மனிதர்களிடம், நாங்கள் ஜாதகத்தைத் தப்பாக மாற்றிக் கொடுத்து அவர் பிள்ளையைக் கொன்று விட்டோம் என்று சண்டை போட்டாராம். நான் இப்படி நிற்க வேண்டும் என்று என் அண்ணாவும் அம்மாவும் ஆசைப்பட்டு, நிஜமான ஜாதகத்தை மாற்றிக் கொடுத்திருப்பார்களா?” துயரத்திலும் ரேவதிக்குச் சிரிப்பு வந்தது. ஜாதகந்தான் அவள் வாழ்விலும் ஒளியை அவிக்கச் சாக்காயிருந்தது. “உன் பெண்ணைக் கொண்டால் என் பையன் உயிருக்கே ஆபத்து” என்றாராம். இப்போது அதே சாக்கைத் திருப்பிக் கொள்கிறாரா? ‘அற்பாயுசுப் பையன் போய்விட்டான். உமக்கு ஒரே வழியாகி விட்டது. ஆனால் அந்த அல்பாயுசு, இன்னும் பலகாலம் சீர்குலைந்து நில்லென்று பாவத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறானே? இவளுக்கு இப்போது பதில் சொல்ல மாட்டேன் என்று ஒளிவது நியாயமா? இதைக் கேட்க நான்கு பேர் இல்லையா?’ “நீ இன்றைக்கே ஊருக்குப் போக வேண்டுமா? பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து இங்கே கொஞ்ச நாள் இரேன்? இங்கே தங்கக் கூடாதா?” என்றாள் ரேவதி. “கூடாமல் என்ன? ஊருக்குக் கடிதாசி எழுதி டிக்கெட் வாங்கி விட்டேனே? அண்ணா பஸ்ஸுக்கு வருவான். நேற்றைக்கு பீச்சுக்கு வந்தாளே பத்மா, அவள் கோயமுத்தூர் வரையிலும் துணைக்கு வருகிறாள். பிறகு பஸ்ஸிலும் அவளே ஏற்றி விடுகிறேனென்றாள்...” “அப்படியானாலும் ராத்திரிதானே வண்டி? ஹாஸ்டலுக்குப் போய் அங்கிருந்து சாமான்களை எடுத்துக் கொண்டு வந்து விட்டால், ராத்திரி இங்கிருந்தே போய்விடலாமே? வேறு யாரேனும் வருவார்களா? யார் வீட்டுக்கேனும் போக வேண்டுமா?” முதலில் பூமா கொஞ்சம் தயங்கினாள். “அவசியமில்லை. ஏனென்றால் அண்ணா என்னை இங்கே கொண்டு வந்து சேர்ப்பதற்குத் தெரிந்தவர்கள் வீட்டில் தங்கினானே ஒழிய, அவர்கள் ஒருவர் கூட ஹாஸ்டல் பக்கம் வரவுமில்லை. நானாக ஒரு கடுதாசி எழுதியும் பதில் போடவில்லை. நேராக நான் போகவேண்டியதுதான்...” “நீ இப்போதே திரும்பிப் போகக் கூட வேண்டாம். சாயங்காலமே ஹாஸ்டலுக்கு போய்விட்டு சாமான்களை எடுத்துக் கொண்டு அப்படியே ஸ்டேஷனுக்குப் போகலாம்...” “இல்லை, நான் எல்லாரிடமும் சொல்லிக் கொள்ள வேண்டும். போய்ச் சொல்லிவிட்டு வேண்டுமானால் சாமான்களுடன் வந்து விடுகிறேன்” என்றாள் பூமா. “வேண்டுமானால் இல்லை. நிச்சயமாகவே சாப்பிட வந்துவிடு!” என்றாள் ரேவதி. “சாப்பாட்டுக்கு முடியுமோ? காத்திருக்க வேண்டாம், பார்க்கிறேன்” என்று விடைபெற்றுக் கொண்டு பூமா படியிறங்கினாள். அவள் சாப்பாட்டுக்கு வரவில்லை. ரேவதி வாசலில் அடிச்சத்தம் கேட்ட போதெல்லாம் எட்டிப் பார்த்தாள். சைக்கிள் ரிக்ஷாவின் மணி தெருவில் கேட்கும் போதெல்லாம் வாசல் நடையில் நிழல் படிவதாகப் பிரமை தட்டியது. அவளைக் காணவில்லை. ஏன் பூமா வரவில்லை? வரமாட்டாளோ? வாசு அவளிடம் சொல்லி இருப்பானோ? அவன் சொல்லியிருந்தாலும் இப்போது கூறுவதில் என்ன தவறு? அவள் மனசுக்குத் தெரியட்டுமே? ‘என் மீது ஒருநாளும் அவர் அன்பு செலுத்தியிருக்க முடியாது. ஒப்புக்காக மணந்தார். அவருக்காக வாழ்வை மாய்த்துக் கொள்வது மதியீனம் என்பதை அவள் தன் வரைக்கேனும் உணர்ந்து கொள்ளட்டுமே?’ வாழ்வில் காதல் என்ற அருமை கைகூடி உயரிய மணத்துக்காக ஏங்கி, அது கிடைக்காமல் போகும் நஷ்டத்தை விட, சாதாரணமாகக் கிடைக்காத சாதாரண மணவாழ்வு எதிர்பாராமல் கிடைத்து, கனவாய் மறைந்து வறுமையிலும் வாழ்விலும் பிரச்னையிலும் ஆழ்த்தி விடுகையில் ஏற்படும் நஷ்டம் பெரியது. வாசுவின் மனைவி அவர் வீட்டிலேயே அவர் மகனுக்காகக் கையேந்தும் நிலை எவ்வளவு கொடுமையானது? வாசுவின் தந்தைக்குப் புகளூரில் இரண்டு வீடுகள் இருக்கின்றன. சாப்பாட்டுக்குக் கஷ்டமில்லாத வகையில் காணி கரைகள் இருக்கின்றன. இன்னும் இரண்டு பையன்கள் படிக்கிறார்கள். பெண்கள் இருவரும் இளையவர்கள். வாசுவின் குழந்தையின் அம்மா, அநாதை போல் நிற்கிறாள். வாசுவின் குழந்தை எப்படி இருப்பான்? “கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ஏன் உட்காருகிறாய்? அவளைக் காணவில்லை. இனிமேல் சாப்பாட்டுக்கு வர மாட்டாள். நீ வாயேன்?” என்று அழைத்தாள் சாரு. அவளுக்கு அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலை ஒழுங்காக நடக்க வேண்டும். சாப்பாடாயிற்று. இரண்டு மணி வரையிலும் எப்படியோ தள்ளினாள். உடனே அந்த வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ரேவதி கிளம்பி விட்டாள். விடுதியில் சென்றேனும் பூமாவைப் பார்க்க வேண்டும். மனசில் மூடி வைத்திருப்பதை அன்று அவளிடம் கூறி விட வேண்டும் என்ற பரபரப்பு நடையில் தெரிந்தது. |