சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : நிழற் கோலம் - 4 |
4 ரேவதி அந்தப் பள்ளிக் கட்டிடத்துக்கு எத்தனையோ முறைகள் வந்திருக்கிறாள். கலை நிகழ்ச்சிகள், ஆட்டங்கள், போட்டிகள் எல்லாம் நடைபெறும் சந்தர்ப்பங்களில் அங்கே வந்ததுண்டு. ரேவதி மாணவியாகவும் தோழிகளைச் சார்ந்தும் அங்கே வந்திருந்தாலும், பள்ளிக்கூடத்தின் பின்பகுதியில் இருந்த கைம்பெண்கள் விடுதிக்கு அவள் சென்றதில்லை. பெரிய மாளிகையில் வரவேற்பறை, உட்காரும் அறை, உணவருந்தும் அறை, படுக்கையறை, குளியலறை, சமயலறை முதலிய இடங்களுக்கப்பால் சாமான்கள் வைக்கும் கிடங்கு அறை போல, மேல்தளமும் விசாலமான வகுப்பறைகளும் வராந்தாக்களுமாக விரிந்திருந்த பள்ளிக்கட்டிடத்தின் பின்னே ஒரு மூலையில், பூச்சழிந்த நீள மதில் சுவரில் தெரிந்த சிறு வாயிலுள் ‘கைம்பெண்கள் விடுதி’ என்று பெயர் பெற்ற இடம் இருந்தது. அந்தச் சிறு வாயிலுக்குள் ரேவதி, தலைகுனிந்து குறுகிக் கொண்டு நுழைந்தாள். காரை பெயர்ந்த மூன்றடி அகல வராந்தாவில், வரிசையாக இருள் தங்கிய அறைகளைக் கண்டாள். எட்டிப் பார்த்த ஓர் அறையிலும் சாமான்களும் தெரியவில்லை, ஆள் அரவங்களுமில்லை. வராந்தாவின் எதிரே முற்றம்; முற்றத்தின் ஓரத்தில் இன்னொரு மதில்சுவர். வெளி உலக வாழ்விலிருந்து அவர்களைத் தடுக்கும் அரணாக இருந்தது. முற்றமெல்லாம் புல்லும் பூண்டுமாக இருந்தன. ஒரே ஒரு வேப்பமரம். அதன் கிளைகளில் கட்டப்பெற்ற கொடி ஒன்றில், ஓர் அரக்கு வண்ண நூல் சேலை காய்ந்து கொண்டிருந்தது. பூமாவைப் பற்றி விசாரிக்கவாவது யாரேனும் தென்படுவார்களா என்று பார்த்துக் கொண்டே ஒவ்வோர் அறையாகக் கடந்து வந்த ரேவதியின் முன், கோடி அறையிலிருந்து பூமாவே ஓர் இரண்டு முழக் கயிற்றோடு வெளிப்பட்டாள். இருட்டறை, கயிறு, பூமா! துணுக்குற்று, “என்ன, கயிறெதற்கு?” என்று கேட்டாள் ரேவதி. “படுக்கை கட்டலாமென்று எடுத்து வந்தேன். ஒரு தலையணை ஜமக்காளமானாலும் கட்டி விடலாமே?” என்றாள் பூமா. “எங்கள் அறைக்குள் வந்து நாங்கள் வாழும் அழகைக் காண வேண்டாம்” என்று தடுப்பவள் போல உடனே வராந்தாவின் மறுகோடிக்கு வந்து நின்று, “மன்னிக்கவேணும். உங்களிடம் நான் சொல்லிவிட்டு, வர முடியாமலாகி விட்டது. இங்கே உங்களை உட்காரச் சொல்லக் கூட இடமில்லை...” “பரவாயில்லை, நேரமாயிற்றே, காணோமே என்று வந்தேன். போகலாமா?” “பத்மா, பணம் எடுக்க என்னையும் தபாலாபீஸுக்குக் கூட்டிப் போனாள். அங்கேயே நேரமாகி விட்டது. இப்போது கிளம்பிக் கொண்டு தானிருந்தேன். சாமான்களைக் கட்டி வைத்துவிட்டால், பத்மாவே ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்து விடுவாள்” என்றாள் படபடவென்று. பதினெட்டு வயசாகவில்லை. உலக வாழ்வின் பட்டறையில் தேய்ந்து மெருகேறு முன், இருட்டுக்குள் தள்ளப்பெற்ற புது வைரம். இதற்குச் சொலிக்கும் பேறு கிடையாது. கடும் வேலைகளுக்குப் பயன்பெறும் வைரமாகத் தியாக வாழ்வு வாழ வேண்டும்! பேச்சுக் குரல் கேட்டோ என்னமோ, இருட்டறையிலிருந்து இன்னொரு பெண் வந்து எட்டிப் பார்த்தாள். “இதோ, பத்மா வருகிறாள். பத்மா, இவர்தான் நான் சொன்னேனே...” பத்மா சிரித்து, “அன்றைக்குப் பீச்சில் பார்த்தோமே?” என்றாள். “வார்டன் ரமாமணிதானே? எங்கே, இருக்கிறாளா?” “உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள் பூமா வியப்போடு. “நானும் அவளும் ஒன்றாகப் படித்தோம். அவள் பிறகு பி.டி. எடுத்தாள் போலிருக்கிறது. இல்லையா இங்கே?” “...காலையில் தான் போனார்கள்” என்றாள் பத்மா. சாமான்களைக் கட்டி வைத்துவிட்டு, எஞ்சியிருந்த ஒன்றிரண்டு பேர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு, தலைமை ஆசிரியையை வீட்டில் சென்று பார்த்துவிட்டு, பூமா விடுதலை பெற்று வர மாலை ஐந்து மணி அடித்து விட்டது. பூமாவின் பாடம், வகுப்புக்கள், ஆசிரியைகள் போன்ற விஷயங்களையே பேசிக் கொண்டு வந்தவர்கள், தெருப்பக்கம் வந்ததும் மௌனமாயினர். சட்டென்று கனவு கலைந்த மாதிரி ரேவதி, “நீ இதற்கு முன் பட்டணம் வந்திருக்கிறாயோ?” என்று கேட்டாள். உடனே தவற்றை உணர்ந்தாற் போல், “ஓ... வாசுவுடன் முதலில் வந்தாயே?” என்று திருத்திக் கொண்டாள். “ஆமாம், அப்போது இந்தப் பட்டணத்தைப் பார்த்த போது, எல்லாம் மலைப்பாக இருந்தது. செருப்புப் போட்டுக் கொண்டு பெண்கள் நடுத்தெருவில் நடந்தால் வாசலில் நின்று வேடிக்கைப் பார்க்கும் பட்டிக்காட்டிலிருந்து வந்தவள் நான். எல்லாமே புதுமையாக இருந்தது.” “பட்டணத்தில் நீங்கள் எங்கெல்லாம் போனீர்கள்?” ரேவதியின் குரலில் அநுதாபமோ, இளக்கமோ இல்லை என்பதைப் பூமா கூர்மையாகக் கவனித்திருந்தால் உணர்ந்திருக்கலாம். அவள் குரலில் பழிவாங்கும் நோக்கின் குரூரம் ஒளித்திருந்தது. அது அவளுக்கே புரியாதது. “...சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போனோம். மாம்பலத்தில் அண்ணாவுக்கு வேண்டியவர்கள் வீடு, அப்புறம் உங்கள் வீடுதான். நான்கு நாட்கள் கூட முழுசாக இல்லையே?” “இவ்வளவுதானா? உனக்குப் பட்டணமெல்லாம் தெரியாதே? சுற்றிக் காட்டவில்லை?” “...பீச்சுக்குத்தான் தினமும் வந்தோம்.” “பீச்சுக்கா?” “ஆமாம். இன்றைக்குக் கடைசி நாள். எனக்குக் கடற்கரை மணலில் உட்காருவதென்றால் மனசுக்கு மிகவும் இதமாக இருக்கிறது. உங்களுக்குத் தடை இல்லை என்றால், அரை மணி நேரம் இருப்போமே?” என்றாள் பூமா தயங்கிய வண்ணம். “எனக்கு என்ன தடை!” என்று திரும்பினாள் ரேவதி. கடற்கரையும் கூட்டமும் பூமாவின் குரலுங் கூட அவளுக்கு நினைவில் தங்காமல் நழுவின. போக்குப் புரியாமல் எழும்பிய மனவெழுச்சியின் ஆற்றலில் பேச்சு, நடப்பு எல்லாம் வசப்பட்டிருந்தன. கூட்டத்தோடு கூட்டமாக அவர்களும் அந்த மணற்கரையை நோக்கி நடந்தார்கள். “நாம் நேற்று உட்கார்ந்திருந்தோமே, ஸெனெட் ஹவுஸுக்கு எதிரே, அதே இடத்தில் தான் அவர் கூட என்னை அந்த நாட்களில் கூட்டி வந்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.” ரேவதிக்கு உடல் சிலிர்த்தது. ‘வாசுவும் நானும் அங்குதானடி சந்திப்போம்! அங்கு தானடி எனக்காக அவரோ, அவருக்காக நானோ காத்திருப்பது வழக்கம்!’ என்று கத்திவிடுவாள் போலிருந்தது. உணர்ச்சியை விழுங்கிக் கொண்டு நீரை ஒட்டிக் கரைக்கு நடந்தாள். இருவரும் உலர்ந்த மணல் விளிம்பில் உட்கார்ந்தனர். பூமா தான் மௌனத்தைக் கலைத்தாள். “எனக்குப் பட்டணத்தில் எல்லாவற்றையும் விட அதிசயமாக இருந்தது சமுத்திரந்தான். சின்ன வயசில் எப்போதோ, என் அப்பா உசிரோடு இருந்த போது, கொல்லத்தில் இருந்திருக்கிறோம். ஆனாலும் நான் கல்யாணமாகி வந்து, இந்தச் சமுத்திரத்தைப் பார்த்துப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இவ்வளவு பெரிய சமுத்திரம், எல்லை மீறினால் என்ன ஆகும் என்று நினைத்தேன்.” “என்னடி, சுற்றி வளைக்கிறாய்? கல்யாணமாகி, கர்வமும் மிடுக்குமாய்ப் புது மோகத்தில் நீ முழுகி இருந்தபோது, இந்த ஆராய்ச்சியா செய்து கொண்டிருந்தாய்?” நெஞ்சிலே முட்டிய சொற்கள், நாவில் வரவில்லை. “அவர் உன்னுடன் பேசவேயில்லையா?” என்று தான் கேட்டாள். “உஹும், அவர் என்னிடம் மொத்தமாகப் பேசியதெல்லாம் விரல்விட்டு எண்ணி விடலாம். “கடற்கரையில் கடலைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்க எனக்குப் பிடிக்கிறது” என்று சொன்னேன். “அப்படியா? எனக்கும் இப்படிச் சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருக்கத்தான் பிடிக்கிறது” என்று தண்ணீரைப் பார்த்துக் கொண்டே முழங்கால்களில் தலையைச் சாய்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தார். நான் நடுவில் ஏதேனும் கேட்டால், “அதுதான் லைட் ஹவுஸ், அது காலேஜ்” என்ற மாதிரியில் ஏதேனும் பேசினார். இப்படி எல்லாம் கனவாக முடிந்துவிடும் என்று கனவிலேனும் எண்ணியிருந்தேனா?” “ஏனடி பெருமூச்செறிகிறாய்? வாசு ஏன் அப்படி நீலக்கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார் என்பதை நான் அறிவேன். இந்தக் கடல் அவர் மனசைக் குத்தியிருக்கும். பேரிரைச்சல் போட்டு, “இவ்வளவுதானா உன் துணிவு!” என்று நகைத்திருக்கும். அந்த வேதனையை வேண்டுமென்று அனுபவிக்கவே அவர் இந்தக் கடற்கரை தேடி வந்திருப்பார்... நீ எட்டிக் கூடப் பார்க்காத அவருடைய மனசின் பீடத்தில் நான் உட்கார்ந்திருந்தேன். நான்... ரேவதி... தெரியுமா? தெரியுமா... டீ!” ரேவதி ஓலமிட்ட உள்ளத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு கடலை வெறித்துப் பார்த்தாள். பூமா அவளைக் கவனிக்கவேயில்லை. கிளறிவிட்ட நினைவெல்லாம் அவளுக்குச் சொற்களாக வந்தன. அது ஆறுதலாக இருந்தது. “ஏன் அப்படிச் சமுத்திரத்தையே பார்க்கிறீர்கள்? அதில் அப்படி என்ன தெரிகிறது?” என்று நான் உங்கள் வீட்டுக்கு வந்த பின் கடைசி நாள் சாயங்காலம் இங்கு வந்தோமே, அப்போது கேட்டேன். அவர் திரும்பி, என்னைப் பார்த்து விட்டுச் சிரித்தார்...” நிறுத்தி விட்டுச் சட்டென்று கீழே குனிந்து கொண்டு மணலில் விரல்களால் கோலமிட்டாள். பொட்டுப் பொட்டாகக் கண்ணீர்த் துளிகள் அந்தக் கோலத்தில் உதிர்ந்தன. ரேவதி பரபரப்பாக, “என்ன சொன்னாரடி? திரும்பிப் பார்த்துவிட்டுச் சிரித்தார். அப்புறம்?” என்றாள். நாணமும் மகிழ்வும் முகத்தில் குலவையிட, அவள் அந்நிகழ்ச்சிகளை எல்லாம் மனசோடு சுவைத்து அனுபவிக்க வேண்டியவை அல்லவோ? இவ்விதம் அழியாத சோகத்தை நினைப்பூட்டும் சித்திரமாக, எவரிடமேனும் கூறி நெஞ்சு வெடிக்கக் கதறும் நிகழ்ச்சியாக உயிர் பெற்றுவிட்டதை எப்படிப் பொறுப்பாள்? “சிரித்துக் கொண்டே, நான் என்ன செய்யட்டும் பூமா. நான் எங்கு திரும்பினாலும் எதைப் பார்த்தாலும் என் கண்களில் ஒரு பெண்ணின் முகம் தான் தோன்றுகிறது” என்றார். பூமாவின் தொண்டை தழுதழுத்தது. “இந்தப் பாவிக்கு இவ்வளவு பேறு தகாதென்று தெய்வம் அடித்துவிட்டது. ஏதோ வெட்கப்பட்டுக் கொண்டு தப்பை ஒப்புக் கொள்வது போல் அப்போது சிரித்தாரே, அந்தச் சமயத்தில் இந்த ஈரேழு பதினாறு உலகிலும் நம்மைப் போல் ஒருவரும் இருக்க மாட்டார்களென்று நினைத்தேன்...” ரேவதியின் இதழ்க் கடையில் மின்னல் போல் ஒரு வெற்றிச் சிரிப்புத் தோன்றி மறைந்தது. ‘அந்தப் பெண் நீதானென்று நினைத்துக் கொண்டாயா? அடி அசடு? அது நான்! நான்!’ என்று கெக்கெலி கொட்டிய சிரிப்பு அது. பூமா கண்களைத் துடைத்துக் கொண்டாள். “நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் நான் ஒரு ஈ காக்கையிடம் கூடச் சொன்னதில்லை. பத்மாவிடமெல்லாம் பழகினாலும் கூட, அவர்களெல்லாம் தூண்டித் தூண்டிக் கேட்டாலும் கூட, நான் இப்படி மனசு விட்டுப் பேசியதில்லை. நீங்கள் கூடப் பிறந்த அக்காவைப் போல் எப்படியோ ஒட்டி விட்டீர்கள்...” ஒன்றுமே தெரியாத இந்தப் பெண்ணின் மனசைக் குத்துவதில் என்ன லாபம்? வாசுவைத் தனக்கே சொந்தமாக நினைத்துக் கொண்டு இருந்திருக்கிறாள். அவருடைய புதிரான பேச்சிலே கூடச் சந்தேகம் தோன்றவில்லை. ரேவதி மனமிளகி விட்டாள். வாசு அவளை மணந்தாலும் ஒவ்வொரு விநாடியும் ரேவதியின் நினைவிலே தான் அழுந்தி வேதனைப் பட்டுக் கொண்டிருந்தார் என்றறிய அவள் மனம் திசை மாறித் துடித்தது. “உன் பிள்ளைக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டாள் திடீரென்று. “பெயரா?” “ஆமாம். ஒரு வயசுக்கு மேலிருக்குமே? பேர் வைக்கவில்லை?” “ஏதோ பிள்ளையாய்ப் பிறந்திருக்கிறதென்று ஒரு விதத்தில் ஆறுதல் தான். ஆனால் அதிர்ஷ்டத்தைத் துடைத்துக் கொண்டு வந்திருக்கிறதே? ஒருவரும் ஒரு பேரும் வைக்கவில்லை. அண்ணாதான், மணி, மணிப்பயல் என்று கொஞ்சுவார். அவருக்குப் பாவம், எல்லாம் பெண்கள் நாலு பேரும் பெண்கள். எங்கள் வீட்டிலேயே இவன் தான் பையன்...” சடேரென்று தன் வீட்டு நினைவு வந்தது ரேவதிக்கு. மூன்று பெண்களுக்கு நடுவில் ஒரு பிள்ளை. ஒரு பையன் என்று உயர்வை அவன் மீது ஏற்றிக் கொண்டாடினார்கள். அந்தப் பையன் உண்மையில் அவனை நம்பியுள்ள குடும்பத்தை நினைக்கிறானா? “பெண், பெண் தானே என்றெல்லாம் விஷ நாவால் கொட்டிக் கொட்டி பெண்ணே பெண்ணை ஒன்றுக்கும் உதவாதவளாக ஆக்குகிறாள் இல்லையாடி? பையன் பையன் என்று சொல்லி, பையன்கள் என்ன சாதிக்கிறார்கள்?” திடீரென்று கொப்புளித்த வேகத்தைக் கண்டு பூமா வியந்து நோக்கினாள். “உன்னையே நினைத்துப் பார். யாரோ ஒருவன், காசு பணமில்லாமல் வருகிறான் என்றதும், உடனே தள்ளிவிட வேண்டும் என்று தானே எண்ணினார்கள்? வேறு ஏதேனும் செய்தார்களா? பெண்ணை, பெண்ணே பிறந்ததிலிருந்து பயங்கொள்ளி, அடிமை, அபலை என்றெல்லாம் உணர்த்தி உணர்த்தி ஒளியை நசுக்கி விடுகிறார்கள். வேலிக்கப்பால் பூச்செடி வளர்ந்து விட்டால் என்ன செய்வதென்ற பயத்தினால் தன்னம்பிக்கையும் உள் துணிவும் வளர இடமின்றியே கிள்ளிக் கிள்ளி எறிந்து விடுகிறார்கள். வேலியோடு அழகாக வளர, வழிகாட்ட... வழி தெரியவில்லையடி? வழியில்லை...!” இந்த ஆவேசப் பேச்சு, பூமாவுக்குப் புரியவுமில்லை, புரியாமலுமில்லை. “பெண் சக்தி. அவள் தைரிய லட்சுமியாக இருக்க வேண்டுமடி. அவளைக் கூனிக்குறுக ஒரு வளையத்தில் விட்டு வைக்கும் சில சமுதாய வரையறைகளை நினைத்தால் எனக்குச் சொல்ல முடியாத ஆத்திரம் வருகிறது. சொல்ல முடியாத ஆத்திரம்...” ரேவதிக்கு மூச்சு முட்டியது. அன்று அஞ்சினாள். தான் முழு மன்சோடு வரித்த வாசுவைத் தனியாகச் சந்திக்க அஞ்சினாள். எதனால்? எதனால்? புரிந்து கொள்ளாது போனாலும் பூமா, “எனக்கே ஒன்றும் பிடிக்கவில்லை. தைரியம் எங்கே வருகிறது? நீங்கள் இப்போது சொன்னாற் போல் சொந்த அம்மாவை, வீட்டாரை நினைத்தே பயப்பட வேண்டி இருக்கிறதே? குழந்தை சுருள் முடியும் கொழு கொழு வென்ற உடம்புமாக இருப்பதைக் கண்டு நம்மையும் அறியாமல் சந்தோஷப்படக் கூட உரிமையில்லை. என்னை மீறி நான் சிரித்தால் கூட, நான் செய்தது குற்றம் என்று உரைக்கும்படி, “ஆமாம், இந்த அழகுக்குக் கொஞ்சலும் சீராடலும் தான் குறை! பிறக்கும் போதேதான் எல்லாவற்றையும் துடைத்தாகி விட்டதே?” என்று பெற்றவளே சொல்கிறாள். நினைத்தால், எல்லாவற்றுக்கும், யாருக்கும், பயப்படவே நான் பிறந்தவளாகத் தோன்றுகிறது. பயத்தில் நடுங்கிக் கொண்டே தப்பைச் செய்கிறேன்” என்றாள். “உங்கள் ஹாஸ்டல் இருக்கிறதே, அதென்ன, நம்பிக்கையற்றவர்களுக்கு மறுமலர்ச்சி தரும் கல்விக்கூட விடுதியா? எல்லாப் பெண்களிலிருந்தும் நீங்கள் வேறானவர்கள் என்பதை அறிவுறுத்தும் சிறைக்கூடம் போல் எனக்குத் தோன்றுகிறது. நேற்று நீங்கள் இங்கே உட்கார்ந்து உல்லாசப் பேச்சும் பேசினீர்களே? எனக்கு வியப்பாக இருந்தது; வருத்தமாக இருந்தது. அந்த உணர்ச்சியைச் சொல்லத் தெரியவில்லை. இன்று நீங்கள் வாழும் இடத்தைப் பார்க்க வேண்டும் என்றே வந்தேன். உன் மீதே உனக்கு நம்பிக்கையில்லாத எண்ணங்களுடன் நீ படித்து, இதே போன்ற எண்ணங்களை இன்னும் இன்னும் பிறக்கப் போகும் பெண்களுக்கு நீ போதிப்பாய். உனக்குப் பதினெட்டு வயசாகிறதே? பதினெட்டு வயசு ஆண்பிள்ளை போல் உலகை நிமிர்ந்து பார்க்க உனக்குத் தைரியம் கொஞ்ச மேனும் வருமா? உன்னிடம் அப்படி ஒரு துணிவு எட்டிப் பார்க்க முடியுமா? எட்டிப் பார்த்தாலும் மற்றவர்கள் ஒப்புக் கொள்வார்களா?” “நீங்கள் சொல்லுவது எல்லாம் புரிகின்றன. பழக்கமான இடத்தைத் தவிர, வேறிடம் எட்டிப் பார்க்கத் தெம்பு இல்லை. எனக்கு நானே பயப்படுகிறேன். நான் அழகாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். எதோ ஒரு விபத்து, எப்போதோ எப்படியோ நேர இருப்பது போல் எனக்கு எப்போதும் பயமாக இருக்கிறது...” “அந்தப் பயத்துக்குக் காரணம் இதுதான். இந்தச் சமூகம், எந்தத் தவறு நேர்ந்தாலும் பெண்ணைக் காரணமாக்கி, அவள் மீது பழியைப் போட்டு, அவளைக் காலம் காலமாகத் தவற்றுக்கு மன்னிப்பில்லை என்று உணரும்படி பார்த்துக் கொள்ளும் பணியைச் செய்து வருகிறது. துணிவுடன் தன் தவற்றை ஏற்று எதிர்த்து நிற்க ஒரு பெண் முன் வந்தாலும், அவள் பரம்பரைக்கும் அந்த நிழல் வரும்படிச் செய்து விடுகிறது. அதனால் தான் பெண் எப்போதும் வரையறையை மீறப் பயப்படுகிறாள். அவள் பயப்படாமல் இருந்து விடுவாளோ என்று, பெற்றவர்கள் அஞ்ச வழி செய்கிறார்கள். எதுவும் செய்ய முடியாது போனாலும் இந்தக் கட்டுக் காவலை அழுத்தமாகப் போடுகிறார்கள். உன் விஷயம் இப்படித் தானே?” “இதேதான். வரதட்சணை வேண்டாம், நல்ல பையன்; ஏழை தானே, உன் பெண்ணைக் கொடுக்கிறாயா என்று ஒருவர் வந்து கேட்டதும், பெண்ணை ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்க வேண்டுமே, பாரம் போக வேண்டுமே என்று கொடுத்து விட்டார்கள். பாரம் போயிற்றா? போகவில்லையே? புஷ்பா இருக்கிறாளே? பார்த்தீர்களே நேற்று? அவளை இப்படித்தான், வைத்துச் சோறு போடுவது பாரம் என்று ஒரு மூன்றாந்தாரக்காரனுக்குக் கட்டினார்கள். அவன் பணக்காரன்; குடிகாரன். மூன்று மாசம் கூட உயிரோடு இருக்கவில்லை. குடல் ஆபரேஷன் செய்தார்களாம். செத்துப் போய் விட்டான். இவள் மூக்குத்தியை ஏதோ ஃபாஷனுக்குக் கழற்றுவது போல் கழற்றிவிட்டாள். செத்துப் போனவர், இவள் பேருக்கு, ஐம்பதாயிரமோ, பதினைந்தாயிரமோ, தெரியாது, ஒதுக்கியிருக்கிறாராம். என்றாலும் அது கிடைக்கவில்லை. சண்பகத்தம்மாள், அண்ணனின் இளைய பெண்சாதியைப் படிக்க வைத்து முன்னுக்குக் கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்டு இந்த ஹாஸ்டலில் சேர்த்திருக்கிறாள். இங்கே தான் கட்டுப்பாடுகள் நன்றாக இருக்கின்றனவாம். பணம் செலவழிக்க வகை இருந்தும் இந்த தரித்திரத்தில் இன்னும் மாய வந்திருக்கிறாள். இப்போது, புஷ்பா அவளுக்குப் பயந்து, திருநீறும் வெள்ளைச் சேலையுமாக ஒடுங்கி இருந்தாலும், அவளுடைய உள் மனசு எனக்குத் தெரியும். செத்துப் போன புருஷனுக்குத் தூரத்து உறவில் ஒரு டாக்டர் இருக்கிறான். அவன் இப்போதுதான் படிப்பு முடித்திருக்கிறான் போலிருக்கிறது. அவனுக்குச் சொந்தமாக ஆஸ்பத்திரி வைப்பதற்கெல்லாம் பணவசதி கிடையாது. இவளுக்குப் பணமும் கைக்கு வந்து, அவனைக் கல்யாணம் செய்து கொண்டு தானும் டாக்டராக ஆசை. அதற்காக வேஷம் போடுகிறாள். வேஷம் போடுகிறவர்களின் மனசுகளில் எவ்வளவு மாறான ஆசைகள் இருக்கின்றனவென்று தெரிந்து கொள்ளவே எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது...” “நீ போய், பத்தும் இருபதும், உன் குழந்தைக்காக, உன்னை மதியாதவர்களிடம், உன் வாழ்வையே இப்படி ஆக்கியவர்களிடம் போய்க் கேட்கப் போகிறாய். இல்லையா? இதுதானே உன் கனவு?” பூமா இந்தக் கேள்விக்கு உடனே மறுமொழி தரவில்லை. சில விநாடிகளுக்கு அலை ஓசையைத் தவிர ஏதும் செவிகளில் விழவில்லை. “நான்... நான் ஒன்று சொல்லட்டுமா?” என்றாள் ரேவதி மெல்லிய குரலில். அவள் என்ன சொல்வாளோ என்ற ஆவலின் ஒளி தோய்ந்த முகத்தோடு பூமா அவளையே பார்த்தாள். ரேவதி, பூமாவைப் போல் பொன் தோய்ந்த நிறமுடையவளல்ல. செம்மை படர்ந்த வண்ணம். நல்ல உயரம். சுருண்ட கட்டையான கேசம். நீண்ட புருவங்களுக்குக் கீழ் எப்போதும் சலிக்கும் விழிகள். அளவான கூரிய மூக்கு. மெல்லிய இதழ்களுடன் சற்றே பெரிய வாய். உருண்டை வாகான முகம். அவளைப் பார்த்தால் உறுதியில்லாதவளென்றோ அஞ்சுபவளென்றோ சொல்லி விட முடியாது. சாரு, தாயைப் போல் மாநிறமுடையவள். ஆனால் இருவருமே தாயாரைப் போல் மாநிறமுடையவள். ஆனால் இருவருமே தாயாரைப் போல் குட்டையானவர்களல்ல. பூமா இவ்விதம் அவளையே நோக்கிக் கொண்டு சிந்தனையை ஓட விட்டிருக்கையில், காலடியில் பூவொன்று விழுந்தாற் போல் ரேவதியின் குரல் அவளைச் சிலிர்க்கச் செய்தது. “உன் குழந்தையை என்னிடம் விடச் சம்மதிப்பாயாடி? உன் குழந்தையை நான் வெறுமே கடமைக்காக வளர்ப்பவளைப் போல் கருதி வளர்க்க மாட்டேன். பிறர் கடனை ஏற்கிறோமே என்ற மதிப்புக்காக, வளர்ப்பதாகக் கருத மாட்டேன். என் வாழ்வுக்கோர் லட்சியமாக, நம்பிக் கையைத் தரும் வாய்ப்பாகக் கருதி, என் குழந்தையாகவே வளர்ப்பேன். தருவாயா? சம்மதிப்பாயா?” மாலை மயக்கத்தில் விரிந்து பரந்த நீலக் கடலுக்கு முன்னால் கிளர்ந்த உள்ளத்துடன் பேசும் ரேவதியை பூமாவினால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்? இது உண்மையா? கதைகளில் வரும் சம்பவமோ? சினிமாவோ? “நீ உயிரளித்த உடைமைக்காரிதான். ஆனால் இந்நேரம் வரை எனக்கு இந்த எண்ணம் தோன்றவில்லை. இப்போது பளிச்சென்று இருட்டில் வழிகாட்டும் மின்னல் போல் தோன்றியது. வெறும் விளையாட்டல்ல. நிஜமாகத் தான் கேட்கிறேன்.” பூமா நெற்றியில் முத்து முத்தாகத் துளித்து விட்ட வேர்வையைத் துடைத்துக் கொண்டாள். நம்பவே கடினமாக இருந்தது. என்ன பேசுவதென்று புரியவில்லை. அவளுடைய காலஞ் சென்ற கணவரின் ஒன்று விட்ட அத்தை பெண். கல்யாணமாகவில்லை. படித்த பெண். எல்லோரும் கரித்துக் கொட்ட வந்து பிறந்திருக்கும் குழந்தையை இவள் வளர்ப்பாளா? இப்படியும் நடக்க முடியுமா? “ஏண்டி, மௌனம் சாதிக்கிறாயே? எனக்குப் புத்தி சரியில்லை என்று எண்ணுகிறாயா? பயப்படாதே, எனக்கு எல்லாம் சரியாகத்தானிருக்கிறது.” “அப்படி எல்லாம் இல்லை அக்கா...” என்றாள், பூமா வெட்கத்துடன். பணத்துக்குத் தட்டில்லை. அதனால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமோ? படித்த பெண். அதனால் சுதந்திரம் இருக்குமோ? இது நிசம்தானா? அவளுடைய அம்மாவும் அண்ணாவும் சொன்னால் நம்புவார்களோ?...” ‘ஏனடி தயக்கம் பின்னே? வாசு, இல்லை, உன் கணவன் மீது நான் குற்றம் சொல்வதாக நினைக்காதே. நீ குழந்தையை வளர்ப்பதற்குக் கூடக் கஷ்டப்படும் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கிறாயே? அதனால் கேட்கிறேன். நமக்கெல்லாம் ஒரு பிடிப்பு, நோக்கம் ஒன்று வேண்டும். நீ படித்துப் பாஸ் பண்ணி வாத்தியாரம்மாவாகப் போகிறாய். நான் படித்தாகி விட்டது. நாற்பது குட்டிகளுக்கு வாத்தியாரம்மாவாகப் போவதை விட, ஒன்றுக்கு அம்மாவாக இருக்கலாம் என்று கேட்கிறேன். ஏண்டி, பேசவே இல்லையே?” எண்ணங்கள் மோதி அடித்துக் கொண்டு வர, பேச்சு கோவையில்லாமல் வந்தது. பூமா தயங்கிய வண்ணம் “ஆகட்டும் அக்கா” என்றாள். “என்ன ஆகட்டும்? இதென்னடா இது, இப்படியும் குழந்தைப் பிச்சை கேட்பவர் உண்டா என்று பார்க்கிறாய். கல்யாணம் பண்ணிக் கொண்டால் வருகிற பாக்கியம் என்று பார்க்கிறாய். அப்படித்தானே?” “இல்லை அக்கா!” “என்ன இ ல்லை? நீ என்ன நினைக்கிறாய் இப்படிக் கேட்பதற்கு?” “எனக்குப் புரியவில்லை.” “சுற்றிச் சுற்றி வளைப்பானேனடி? வாசுவும் நீயும் உலகறியக் கல்யாணம் செய்து கொண்டீர்கள். அந்தப் பந்தத்துக்குச் சான்றாக உனக்கு ஒரு மணியும் பிறந்திருக்கிறான். ஆனால் நாங்கள்... நாங்கள் உள்ளங்கள் ஒப்ப வாழ்ந்தோம்... வாழ்கிறோம். இந்த வாழ்வுக்குச் சாவு, பொட்டழிக்கும் கோலம் ஒன்றுமே கிடையாது. நாங்கள் வாழ்ந்து கொண்டே இருப்போம். நேற்றும், இன்றும், நாளையும். புரிகிறதா? புரிகிறதா, பூமா? ஜாதகமும் கோப தாபமும் இந்த வாழ்வை ஒன்றுமே செய்து விட முடியாது...” வானில் வண்ணக் காட்சிகளை எல்லாம் கருமை படர்ந்த குழப்பம் மறைந்தது. பூமாவின் முகமண்டலத்திலும் நிழல் பரவியது. அப்படியானால்?... அப்படியானால்? சரேலென்று திரை விலகினாற் போல் புரிகிறதா, இவளுக்கு? குழம்பி வரும் கருமையினூடே, சாலை எங்கும் மினுக்கென்று ஒளி வரிசைகள் பூப்பதுபோல முன்பு அந்த ஒரு மாசம் வாசுவுடன், பழகிய, பேசிய, நடமாடிய நினைவுகள் எல்லாம் உள்ளத்தில் பூத்துப் புதுப் பொருளை விளக்குகின்றனவா? “புரிகிறதாடி?” “புரிகிறது அக்கா...” என்று மொழிந்த போது, பூமாவின் குரல் கம்மியது. என்ன காரணத்தினாலோ, கண்களில் குபுக்கென்று நீர் நிறைந்தது. “அதோ, அலைகடலில் அந்தக் கட்டுமரம் போகிறது பாரேன்? காற்றும் மழையும் பலத்தால் அது எம்மாத்திரம்? ஆடி ஆடிக் கவிழ்ந்தாற் போல் சரிந்து நிமிர்ந்து அலைகளூடே அது எதற்குப் போகிறது? மீன் பிடிக்க வேண்டும். அதுவே வாழ்வு என்ற நோக்கம் இல்லாது போனால், இத்தனை அலைப்பிலும் ஈடு கொடுக்கத் தெம்பு எங்கிருந்து வருமடி? சொல்லேன்?” “புரிகிறது அக்கா?” “உன் பையனை அதற்குத்தான் கேட்டேன். என்னிடம் வைத்து வளர்க்க உரிமை கொடு, நான் வளர்க்கிறேன்...” “எனக்கு ஓர் ஆட்சேபமுமில்லை...” என்று பூமா கூறும் போதே காற்று திடீரென்று பலத்தது. கண்களில் மணலைத் தூவிக் கொண்டு சுழன்று அடித்தது. ஓவென்று அலைந்த கடல், விளையாட்டுப் பிள்ளை போல் சுழன்ற காற்றை ஆரவாரத்துடன் வரவேற்றது. கடற்கரையே காலியாகும்படி மக்கள் எழுந்து நடந்தார்கள். “கடற்கரையா இது? ஒண்டுக் குடித்தன ஸ்டோர் போலிருக்கிறது!” என்று முணுமுணுத்த வண்ணம் கோபால் சாலை ஓரம் நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போதுதான் கடற்கரைக் கூட்டம் சாலையில் வெள்ளமாகத் திரும்பி வரலாயிற்று. சுள்சுள்ளென்று பூமுகங்களில் மணல் உறைக்க, சேலைத் தலைப்புக்கள் வண்ணக் கொடிகளைப் போல் பறக்க, கால் மணலில் புதையப் புதைய ரேவதியும் பூமாவும் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்ததை நடைபாதியில் நின்ற வண்ணம் கோபால் கவனித்து விட்டான். ரேவதியின் படபடப்பு இன்னமும் மாறவில்லை. அவளுடைய நடையின் வேகத்தை மற்றவர்களால் எட்ட முடியவில்லை. கோபால் அவள் யாராக இருக்கும் என்று அந்தக் குழம்பிய மங்கலில் உற்றுப் பார்த்தான். ரேவதியை இனம் கண்டு கொள்வது கஷ்டமில்லை. சாரு இன்னும் ஒல்லி. மேலும் இவ்வளவு நீண்ட பின்னல் அவளுக்கு உரியதல்ல. யாராக இருக்கும்? வளைந்து நெளிந்து, கூட்டத்தில் தோளோடு தோள் உராயாதபடி, அவர்கள் கடற்கரைச் சாலையைக் கடந்து பைகிராப்ட்ஸ் சாலையில் நுழைகையில் பின்னிருந்தே கோபால் தொடர்ந்தாற் போல் நெருங்கினான். “எங்கே, பீச்சுக்குப் போய் வருகிறீர்களா?” குரல் கேட்டதும் ரேவதி திரும்பிப் பார்த்தாள். உடனே பூமாவும் திரும்பினாள். |