![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 1 அக்டோபர் 2025 11:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 16 |
2 ரேவதி வீட்டுக்குள் நுழைகையில் சாரு விளக்கடியில் அமர்ந்து ஸ்டவ் வைத்தியம் செய்து கொண்டிருந்தாள். திருவல்லிக்கேணி விநாயகர் கோவில் தெருவில் மிகப் பழைய நாளைய வீடு. தனி வீடு, வாசல் திண்ணை, ரேழி, நடுமுற்றம், முற்றத்தில் குழாய், முற்றத்தை ஒட்டிய கூடத்தில் எதிரும் புதிருமாய் இரு அறைகள், பின்புறம் குளியலறை. இவை தவிர, மாடியில் ஓர் அறை, வராந்தா, அத்தனைக்கும் அறுபது ரூபாய் தான் மாச வாடகை. இருபது வருஷ காலமாக இருக்கும் சலுகை. சாரு, கூடத்தில் ரேவதி வந்ததையும் கவனியாமல் தன் வேலையில் கண்ணாக இருந்தாள். நோயில் விழுந்து விட்ட அப்பா, அவருக்காகவே நடமாடும் அம்மா, ஒரு தான் தோன்றித் தங்கை, இவர்களுக்காகவே பிறவி எடுத்தாற் போல் நினைத்துக் கொண்டு, கடிகாரம் போல் வாழும் இருபத்தைந்து வயசுப் பெண் சாருவுக்கென்று பிறந்து வளர்ந்திருப்பவன் கண்ணாமூச்சி ஆடாமல், கண்களில் தட்டுப்பட்டு தாலியைக் கட்டியிருந்தானானால், நண்டும் சிண்டுமாக இரண்டு மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாகி யிருப்பாள். இப்போது இயந்திரம் போல் காலை நாலரை மணிக்கு எழுந்திருப்பதும், பால் வாங்கி வைத்துவிட்டுப் பல்லைத் தேய்த்துக் காப்பி போடுவதும், வெந்நீரைக் கொண்டு வைத்து அம்மாவை எழுப்பி, அப்பாவுக்குப் பணிவிடை செய்ய ஆயத்தமாக்குவதும், குளிப்பதும், சமைப்பதும், பரிமாறுவதும், காப்பிக் கொட்டை வறுப்பதும், வேலைக்காரியிடம் வேலை வாங்குவதும், சமையலறையைப் பறட்டுப் பறட்டென்று தேய்த்துக் கழுவுவதும், இரவு பத்து மணிக்கு ஓய்வதும் தான் அவளுடைய வாழ்க்கை. இருபத்தைந்து வயசில், நூற்றுக் கிழவியின் பாங்கையும் பொறுப்பையும், சாரு எப்போதிருந்து எப்படி எடுத்துக் கொண்டாள்? நாள்தோறும் பார்த்துக் கொண்டே இருக்கையில் அங்குலம் அங்குலமாக வளருவதோ, கருப்புக் கற்றைக் கூந்தலில் வெள்ளி இழை ஊடாடுவதோ, தளதளத்த கன்னம் தொங்கக் கீறல் விழுவதோ தெரிகிறதா? அப்படித்தான் சாரு வீட்டு நிர்வாகத்தைப் பற்றிக் கொண்டு அந்த வீட்டின் அன்னலட்சுமியாய் வளைய வருகிறாள் போலும்! எப்போதேனும் பூநூல் சவுக்கம் பின்னுவாள்; பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளைப் படிப்பாள். அவளுக்கு அலுப்பு உண்டாவதில்லை; சலித்துக் கொள்வதில்லை, தினமும் மாயமாட்டேன் என்று ஒதுங்குவதில்லை. வெளியே எங்கோ பறந்து செல்லத் துடிப்பதில்லை. முணுமுணுப்பதில்லை; குறைப்பட்டுக் கொள்வதில்லை. ஏன்? அக்காவாம், தங்கையாம்! ஒரு பேச்சு, அந்தரங்கம் வேண்டுமே? இவளுக்கு உணர்ச்சி கிடையாது? யந்திரம், கல்...! “ஏன், ஸ்டவ்வில் என்ன?” என்றாள் ரேவதி ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு. “காற்றே ஏறவில்லை. அடைத்துக் கொண்டிருந்தது. பால்காரனிடமிருந்து, சைக்கிள் ஸ்பானரைக் கேட்டு வாங்கினேன். கழற்றினால், பர்னரில் எத்தனை கரி...!” “அம்மா எங்கே?” “பஜனை மடத்தில் கதையாம்? போனாள்.” “கதை, இது ஒரு சாக்கு!” வயிற்றில் பிறந்த பிள்ளை, கடலுக்கப்பால் சென்று, வீட்டை மறந்து மாறி விட்டான் என்ற நினைவை மாற்றிக் கொள்ளக் கதை, புராணம் என்ற சாக்கு. இருபதினாயிரம் ரூபாயைக் கட்டிக் கொடுத்து, மூத்தவளைக் கல்யாணம் செய்து கொடுத்தார்கள். அவள் கல்யாணம் என்ற பெயரில், அந்த வீட்டுச் செல்வத்தையே இன்னொரு வீட்டுக்குப் பெயர்த்துக் கொண்டு போவது போல் சுருட்டிக் கொண்டு போய்விட்டு, தலைச்சன் பேறு பெறாமலே இறந்து போனாள். அந்தத் துயரத்திலேயே இடிந்து போன அம்மா, மகன் வெளிநாடு செல்வதை விரும்பவே இல்லை. குபேர நாட்டுக்குப் போகும் பிள்ளையாண்டான் வாரிக் கட்டிக் கொண்டு வந்து கொடுக்கப் போகிறான் என்று பிள்ளைக்குச் சாதகமாக அம்மாவை எதிர்த்து நின்று அப்பா அவனை விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார். இரண்டாண்டுகள் பெட்ரோலியம் ஆராய்ச்சி என்றான்; முடிந்ததும் சுரங்க இயலில் மேற்படிப்பு என்றான்; இன்னும் நிலக்கரியில் ஆராய்ச்சி முடியவில்லை என்று நீட்டிக் கொண்டிருக்கிறான். ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. லாஸ் ஏஞ்சல்ஸ் ஆஸ்பத்திரியில் காது ஆப்பரேஷன் செய்து கொள்ளப் போன அப்பாவின் நண்பர் சிவஞானம், இரண்டு வருஷங்களுக்கு முன் வந்து சொன்ன சேதி, உறுதியாகிக் கொண்டுதான் இருக்கிறது. ‘எப்படியோ, பையன் அங்கேயே ஒரு மாதிரி ஊன்றி விடுவான்’ என்று அவர் சொன்னார். அதே அதிர்ச்சியாக, குடும்பத்தலைவர் இடுப்புக்குக் கீழ் உதவாத நிலையில் படுக்கையோடு இடிந்து விட்டார். மாடியறை நோயாளியாக நிலைத்து விட்டார். ஓய்வுகால பென்ஷன் நானூறு ரூபாய் வருமானம் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. பாபு ஊர் திரும்பியதும் சாருவுக்குக் கல்யாணமென்று கோடித்து, நகை, பாத்திரம் எல்லாம் தயாராக முன்பே அம்மா வாங்கி வைத்தாள். இப்போது மூத்தவளும், மூத்தவனுமாக முதுகை ஒடித்துக் கட்டிலில் தள்ளியிருக்கும் புருஷனைப் பற்றிய கவலையில் அவளும் அமுங்கிப் போய்விட்டாள். ‘இவ்வளவு அடியை நான் தாங்கியதே பெரிசு, இனியும் தாங்க முடியாது’ என்று முரண்டு செய்து கொண்டு, அடுப்பை மூட்டாமல் படுத்துக் கொள்ளும் குடும்பத் தலைவியைப் போல், அவள் பொறுப்பைக் கழுவி விட்டாள். ‘கடமை’ என்று ஒன்றில்லையா? ஒரு குழந்தைக்கு நோயானால் மற்றது பட்டினியா? ஒருத்தி சமைத்துப் போடுகிறாள், இன்னொருத்தி வெளிவேலை செய்வாளோ? கூடத்து மூலையில் இருந்த ரேடியோவைப் படக்கென்று திருப்பிய வண்ணம், ரேவதி அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள். “வாசுவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாளே, அவளைப் ‘பீச்’சில் பார்த்தேன்!” என்றாள் படபடப்பாக. இந்தச் சேதியைக் கேட்டுச் சாரு சிறிதேனும் பரபரப்பு அடைய வேண்டுமே? ஹும்! திரும்பிக் கூடப் பார்க்கவில்லை அவள். “என்ன அழகு என்கிறாய்? குழந்தை போல் கள்ளம் கவடு தெரியாத அழகு. இத்தனை அழகு ஒரு பெண்ணுக்கு இருக்கக் கூடாது!” சாரு ஸ்டவ் பம்பைக் குடைந்து கொண்டிருந்தாள். அதைப் பிடுங்கி வீசி எறிந்து விடலாம் போல் ஆத்திரம் வந்தது ரேவதிக்கு. “அவளோடு நான் பேசினேன். அடுத்த வருஷம் ஸ்கூல் பைனலாம். பிள்ளையை ஊரில் அவளுடைய அண்ணா மன்னியிடம் விட்டு வந்திருக்கிறாளாம்!” என்றாள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு. “பிள்ளையா?” என்றாள் சாரு, திரும்பிப் பாராமலேயே. அப்பாடா, முத்து உதிர்ந்ததே! “ஆமாம். பிள்ளைதானாம் சாரு. இவள் இனியும் படித்து வேலை செய்யப் போகிறாள். ஒரு அறை நிறைய வினாத் தெரியாததுகளை வைத்துக் கொண்டு, அதுகளுக்கும் புரியாமல், அவளுக்கும் புரியாமல் கத்தி வயிறு வளர்க்கப் போகிறாள். பீச்சில் வந்து உட்கார்ந்து கொண்டு அவளுடைய ஹாஸ்டல் கும்பல், என்னவெல்லாம் பேசுகிறதென்கிறாய்? சேச்சே, வேஷம் போடச் சொல்லிக் கொடுக்கும் சமுதாயமடி நம்முடையது! உள்ளே அத்தனையும் அழுக்கு, மேலே மினுக்கு என்று காட்டும் பேச்சைப் பேசிக் கொண்டு, என்ன வேண்டிக் கிடக்கிறதடி!” சாருவுக்கு இவளுடைய படபடப்பு புதிதா என்ன? ஸ்டவ் வைத்தியம் பரிபூரணமானதும், கந்தல்துணி, ஊசிகள், கிரஸின் புட்டி முதலிய உபகரணங்களைக் கொண்டு போய்ச் சமையலறையில் வைத்து விட்டுக் கைகளைக் கழுவிக் கொள்ளலானாள். ஒப்புக்காகவேனும் எதையேனும் சொல்லித் தொலைக்கக் கூடாதா? ரேவதி திரும்பி உட்கார்ந்தாள். மேசைக்கு மேல் சுவரை அலங்கரித்த படம் கண்களில் பட்டது. அது பாபுவின் படம். வகிடு தெரியாத கிராப்பு, அரும்பு மீசை, டை, காலர், கோட்டு, கோட்டில் ரோஜாப்பூ... விமானத்தில் ஏறிச் செல்லு முன் எடுத்த படம். பிள்ளை அமெரிக்கா போகிறான் என்று ஆசையும் அருமையுமாய் எடுத்து வைத்துக் கொண்ட நகல். இவன் என்ன, தெய்வமா? தன்னைச் சுற்றி ஒரு குடும்பம் இருக்கிறது என்ற பொறுப்பைப் புரிந்து கொள்ளதவனை எதற்காகப் படத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்? அவன் பொறுப்பை நினைக்க மறந்து போன பிறகு, அவனைப் படத்திலாவது தினம் தினம் பார்த்துப் பெருமூச்செறிவதில் என்ன பொருள் இருக்கிறது? இரண்டு மூன்று மாசத்துக்கொரு முறை கடனே என்று ஒரு காகிதம். உறவையும் உற்றவரையும் மறந்து, போன இடத்தில் சுயநலம் தேடும் பிள்ளையிடம் இன்னும் என்ன, பாசமும் நம்பிக்கையும் வேண்டிக் கிடக்கிறது? “பாபு எப்போது வருகிறானாம்?” என்று அக்கமும் பக்கமும் கேட்டால், வரும் செப்டம்பரில் வருவான் என்று மூடி மறைப்பதென்ன வேண்டியிருக்கிறது? செப்டம்பரும் அக்டோபரும் வந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றன... ஆனால், கேட்பவர்களுக்கெல்லாம் தெரியாதா என்ன? ஒற்றைப் பிள்ளையாகப் பிறந்திருக்கும் ராஜகுமாரனல்லவா? இன்னும் அவனைப் பற்றிய பெருமையில் குறை காண முடியவில்லை! இவனுடைய கள்ளச் சிரிப்பில் எந்த நீல விழிக்காரி மயங்கி விழுந்தாளோ? பெண் எங்கிருந்தாலும் பெண் தானே? ஒரு வேளை, சில வருஷங்கள் சென்ற பின் அநுபவித்து, அலுத்துத் திரும்புவான். கோழைகள்! வரம்பு மீறிச் செல்லத் தெரியுமே ஒழிய, பலனை ஏற்கத் துணிவு இல்லாத கோழைகள்! ஆனால் அந்தச் சமுகம், இரவை பகலாக்கும் சமூகம், கோழையானாலும் பாதகமில்லை, தாலிக்கயிறு என்ற மகத்துவத்தைப் பெண்ணின் மீது மட்டும் ஏற்றிப் பழியைப் போடுவதில்லை. பெண் தியாகச் சின்னம், அவளுக்கு வாழ்வு கிடையாது என்றெல்லாம் போலிச் சித்தாந்தம் பேசி, பெண்ணின் மங்கலத்தைப் பறித்து அழிக்கும் போலிச் சமுகமில்லை அது. போகமில்லை, தியாகம் தான் என்று மூளியை மறைத்து வேஷமிடும் வேலை அங்குக் கிடையாது. போலிதான் குறிக்கோள். பெண்ணுக்கும் ஒரு வாழ்வு உண்டு என்று நடைமுறைய்யில் சாத்தியமானதை ஒப்புக் கொள்ளும் சமூகம் அது. முடுக்கிவிட்ட ரேடியோவில் ஏதோ காதல் நாடகம் நடந்து கொண்டிருந்தது போலும்! அங்கும் காதலின் ஏமாற்றம் தான்! ஏமாற்றி விட்ட காதலனுக்காக ஒருத்தி அழுது துடித்துக் கொண்டிருந்தாள். ரேவதி, படக்கென்று அதை நிறுத்துகையில் சாரு தட்டுப் போடும் சத்தம் கேட்டது. சாப்பாடு தயார், வரலாம் என்று அறிவிப்பதைப் போல் ஒருமுறை வந்து எட்டிப் பார்ப்பாள். பேச்சுக்கே அந்த வீட்டில் தேவை கிடையாது. யார் மீதோ கொண்ட ஆத்திரத்தை யார் மீதோ காட்டக் கொதிப்பது போன்ற மௌனம். தட்டின் முன் உட்கார்ந்து ஒரு கவளம் விழுங்கியதும் மடமடவென்று தண்ணீரைக் குடித்தாள் ரேவதி. “நீ அவளைப் பார்த்திருக்கிறாயோ, சாரு?” “எழும்பி எழும்பி ஏன் குதிக்கிறாய், அமைதியாக இரு,” என்று உபதேசம் செய்யும் பாவனையில் சாரு அவளை நோக்கினாள். “கல்யாணமானதும் வாசுதான் அவளை இங்கு அழைத்து வந்திருந்தானே? நினைவில்லையா? நீ தான் உர்ரென்று அன்று, அப்போது, சமயம் பார்த்து மருந்துக் கடைக்குப் போய்விட்டு வந்தாயே?” “ஆமாம், ஆமாம். அப்போதுதானே நானும் பார்த்தேன்? ஆனாலும் படுவெட்டு... நான் இங்கே வரச் சொல்லி இருக்கிறேன்.” “உம்” என்பது போல் ஒரு பதில். அவ்வளவுதான். அவள் சாப்பிட்டு முடிக்குமுன் சாரு உண்டு முடித்து விட்டு மாடிக்குப் போனாள். அப்பாவைக் கவனித்துக் கஞ்சியோ, மருந்தோ கொடுத்துவிட்டு வந்து, பரபரவென்று பாத்திரங்களைத் தேய்க்கப் போட்டாள். மேடை கழுவி, தரை கழுவ ஆயத்தம் செய்யலானாள். யார் மீதோ கொண்ட கோபத்தை யார் மீதோ காட்டுவது போல், சிமிட்டித் தளத்தைக் கட்டைத் துடைப்பத்தை வைத்துக் கொண்டு பறட்டுப் பறட்டென்று தேய்த்தாள். ரேவதி தட்டைக் கொண்டு முற்றத்தில் போட்டுவிட்டு மறுபடியும் கூடத்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். எவ்வளவு நேரம் அடம்பிடித்தும் தன் நினைப்பைச் சாதித்துக் கொள்ள முடியாத குழந்தையைப் போல், சொல்லொணாத துயரம் நெஞ்சில் தளம் கட்டி நின்றது. இதோ, பறட்டுப் பறட்டென்று சாரு தரையைத் தேய்க்க ஆரம்பித்து விட்டாள். தினம் தினம் இப்படித் தேய்த்துக் கழுவ அந்தத் தரையில் என்ன தான் இருக்கிறது? இவளை யார் இப்படித் தரை கழுவச் சொல்கிறார்கள்? அந்தப் பறட்டுச் சத்தம் நெஞ்சிலே உராய்வது போலிருந்தது ரேவதிக்கு. “சாரு! தினம் தேய்க்கத் தரையில் என்ன இருக்கிறது?” என்று கத்தினாள். சாரு வழக்கம் போல் அவள் கத்தலைப் பொருட்படுத்தவில்லை. அலம்பித் துடைத்து, சாமான்களைப் பார்த்து, மூடி, மாடிக்கு ஃபிளாஸ்கில் வெந்நீர் தண்ணீர் எல்லாம் கொண்டு வைத்து, கதையோ புராணமோ கேட்டு வரும் அம்மாவுக்குக் கதவு திறந்து... இவள் எதற்கு இப்படி அச்சில் சுழலும் சக்கரம் போல் சுழல்கிறாள்? எதிர்காலம் என்பது என்னவென்று புரிந்து கொண்டு சுழல்கிறாளா? இல்லை, சுழலுவதுதான் விதி என்று சுழல்கிறாளா? விதி...! இந்த இரண்டெழுத்துச் சொல்லுக்கு என்ன தான் பொருளோ? அது எதற்காக இப்படி மனிதர்களை ஆட்டம் காண வேண்டும்? வாசு அடிக்கடி சென்னைக்கு வந்து ஒன்று விட்ட மாமா வீடென்று உறவு கொண்டாடிக் கொண்டு எதற்காக அங்கு வந்து தங்கினான்? ஒரு கள்ளமும் அறியாமல் மலர்ந்த உள்ளத்திலே அடக்க முடியாத இன்பக் கனவுகளையும், எதிர்கால ஆசைகளையும், அவன் எதற்காக எழுப்பி விட்டான்? கடைசியில் பட்டம் நீலவானில் எழும்பிப் பறக்கையில், கயிற்றைப் பட்டென்று அறுத்துக் கொண்டு, அப்பா சொன்னாரென்று, அவளை - கடற்கரையில் கண்டாளே அந்தக் குழந்தையை - பூமாவை - குத்து விளக்கை, அணைத்துவிட்டுப் போயே போய் விட்டான். இந்த அப்பாக்கள் யார்? விதியின் சுழற்சியிலே அவர்களுக்கு என்ன பங்கு? ஏதோ வந்தான், போனான், சிநேகம் கொண்டாடினான். பெரியவர்கள் மனசுக்குப் பண விஷயம் ஒத்து வரவில்லை, ஜாதகம் பொருந்தித் தொலைக்கவில்லை. விட்டு விடும்படியாக, மறந்து விடும்படியாக, துடைத்து விடும்படியாகவா அவளும் அவனும் ஒன்றுபட்டிருந்தார்கள்? சில மாசங்களானால் என்ன, சில வருஷங்களானால் என்ன, சில கணங்களானால் என்ன? அந்த உறவின் ஆழந்தானே முக்கியம்? தோல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வாசு தலைமைக் காரியாலயத்துக்கு வரும் சாக்கில் சில நாட்கள் வந்து தங்கி விட்டு மீண்டும் ஊர் சுற்றப் போய் விட்டால், கல்லூரித் தபால் பெட்டியில் ரேவதிக்காகக் கற்றை கற்றையாக அவன் கடிதங்கள் காத்துக் கிடக்கும். “நீயே என் ஒளி ரேவதி, நீயின்றி, நானில்லை...” இப்படி உறுதி கூறும் ஒரு கடிதம். “அப்பாவுக்கு இஷ்டமில்லை. உன் அப்பா கஞ்சத்தனம் காட்டி விடுவாராம். அவர் கர்வியாம். நான் அங்கு வந்து தங்குவதே அவருக்குத் தெரியாது. என்றோ, எப்போதோ, யார் கல்யாணத்திலோ நிகழ்ந்த சண்டையை இப்போது நினைத்துக் கொண்டு மரியாதை இல்லாதவன் என்று பேசுகிறார். பகையை ஊதி வளர்ப்பதில் என்ன இன்பம் இருக்க முடியும் ரேவதி?” என்று நிலைமையை உரைக்கும் ஒரு கடிதம். “இந்த உலகில் இனி எவர் வந்தாலும் உன்னையும் என்னையும் பிரிக்க முடியாது. இதை அப்பா விரைவில் அறியப் போகிறார்” என்று மீண்டும் உறுதிப் படுத்தும் இன்னொரு கடிதம். “என்னை அப்பா கண்டபடி திட்டுகிறார். ஆனால் என்ன? உன் நினைவில் எனக்கு அதெல்லாம் உறைப்பதில்லை.” “இந்த ஒரு வார காலமாக உன் கடிதத்துக்காக நான் எப்படி செத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரியுமா? உனக்கென்ன அக்கறை? உன் அப்பா, ஐ.ஏ.எஸ்.களுக்காக வலை விரித்துக் கொண்டிருப்பார். நீ மென்று விழுங்கிக் கொண்டிருப்பாய்” என்று ஒரு கடிதத்தில் கூர் அம்பைப் பாய்ச்சி இருப்பான். அப்பாவும் அப்பாவும் இறுதியாக முட்டிக் கொண்டு, ஜாதகம், சீர் என்று உறவை வீம்புக்காக முறித்துக் கொண்ட பின், அவன் ஒரு கடிதத்தில் இவ்விதம் புலம்பி இருந்தான். “உன்னை மறந்து இப்பிறவியில் இருப்பது அசாத்தியம். உன் பிரிவு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து விடும் ரேவதி!” இதற்குப் பிறகு அவனிடமிருந்து அவளுக்கு இறுதியாக ஒரு கடிதம் கிடைத்தது. அதைச் சென்னை நகர ஹோட்டல் ஒன்றிலிருந்து எழுதியிருந்தான். “உனக்கு உண்மையில் என் மீது அன்பும் நம்பிக்கையும் இருந்தால், இந்த ஹோட்டல் அறையில் வந்து சந்திக்கவும்” என்று தெரிவித்தது கடிதம். இக் கடிதத்தைக் கண்டு அவள் மருண்டு நின்றாள். பத்தொன்பது வயசு நிறையவில்லை. பெற்றோர் காவலில் இருப்பவள். வேலியை விட்டு எட்டி வந்து பழகினாலும், வேலியை பிய்த்தெறிந்து விட்டு வரத் துணிவில்லை. அன்பையும் நம்பிக்கையையும் அவன் சோதனை செய்யும் விதமா இது? வழக்கமான கடற்கரை எங்கே போயிற்று? அவளுக்கு மூத்தவளான சாரு மணமாகாமல் வீட்டில் இருக்கிறாள். பாபு அமெரிக்க வாழ்வை விட்டு வரமாட்டானென்று தந்தையின் நண்பர் சிவஜானம் அப்போது வந்து தெரிவிக்கவில்லை என்றாலும், அப்பாவின் உடல்நிலை அப்போதே கோளாறாகி விட்டது. டாக்டர்கள் வருவதும் போவதும், மருந்தும் மருத்துவமும் அப்போதே தொடங்கி விட்டன. நெஞ்சுக்குள் நடுக்கம் இருந்தாலும் ரேவதி துணிச்சலை வரவழைத்துக் கொண்டாள். மாலை நான்கு மணி சுமாருக்கு வெளிக்கிளம்பத் தயாரானாள். அன்று கல்லூரி விடுமுறை நாள். வீட்டிலே சொல்லிக் கொள்ளாமல் போக முடியுமா? பொய்யேனும் சொல்லிப் பழகியிருக்கிறாளே ஒழிய, சொல்லாமல் போகத் துணிவில்லையே? “நளினியின் வீட்டுக்குப் போய் வருகிறேனம்மா!” என்று அவள் கூறுகையிலேயே அம்மா முறைத்துப் பார்த்தாள். “எங்கே இப்ப? அப்பாவை ஸ்பெஷலிஸ்டிடம் கூட்டிப் போகக் கோபால் வருவான். நீதான் கூட வரவேண்டும். வேறெங்கும் போக வேண்டாம்!” பெண் எங்கே போக நிற்கிறாள் என்பதை அறிந்தே, அன்று அவள் கோடு கிழித்து விட்டாற் போல் தோன்றியது. “நான்... நானெதற்கம்மா? கோபால் போதாதா? நளினியிடமிருந்து என் நோட்ஸை வாங்கி வர வேண்டும்மா! பரீட்சையாச்சே?” “நாளைக்கு வாங்கிக் கொள்ளலாம்! அது தலை போகிற காரியமில்லை! நான் சொல்வதைக் கேள், இப்போது!” அன்று ரேவதி போகவில்லை. அவனைச் சந்திக்கவில்லை. ஆலமரம் போல் வேரூன்றி வளர்த்ததாக அவள் நினைத்துக் கொண்டு இருந்த காதல், அந்த ஒரு தடுப்பில் அடியோடு முறிந்து சாய்ந்து விடுமா? எத்தனையோ முறைகள் அவனுக்காகக் கடற்கரையில் நெஞ்சு நடுங்கக் காத்து நின்றிருக்கிறாளே? அந்த ஒரு முறை, அவள் பெண், அவளுக்கும் என்ன அசௌகரியங்கள் இருந்திருக்குமோ என்று அவன் சிந்தித்துப் பார்த்திருக்கலாகாதா? அவளுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. ஒருநாள், நாலைந்து மாசங்களுக்குப் பிறகு, தபாலில் வாசுவின் கல்யாண அழைப்பிதழ் வந்தது. அவள் எப்படி நம்புவாள்? வாசுவா? வாசுவுக்கா வேறொருத்தியுடன் கல்யாணம்? நம்பத்தான் வேண்டியிருந்தது. தான் கட்டிய மாளிகை தன் நெஞ்சுக்குள்ளேயே இடிந்து விழுந்த அதிர்ச்சியை அவள் யாரிடம் புலம்பி ஆற்றிக் கொள்வாள்? பத்தொன்பது வயசுடன் கல்லூரிப் பட்டப் படிப்பும் முடிந்து போயிற்று. வீட்டிலேயே அழுது தீர்க்கக் கூட வசதியில்லை. அப்போதே வீட்டில் களை குன்றிப் போய் இருந்தது. சிவஞானம் வந்து சொன்ன விவரம், அப்பாவின் படுத்த படுக்கை, இரண்டும் அப்போதைய நிலையில் முக்கியமான விஷயங்களாக இருந்தன. கடைக்குப் போவதும், மருந்து வாங்குவதும், எங்கேனும் புத்தகசாலை, கடற்கரை, கலா நிலையம் என்று ஒரு நோக்கின்றிச் சுற்றுவதும் தவிர, தீவிரமாகச் செய்ய வேலை எதுவுமில்லை; மனமுமில்லை. ஆசையும் உரமும் ஊட்டி, ஒடித்துப் போட, பெண் மனசு கிள்ளுக்கீரையா? வாசுவை எப்போதேனும் கண்டால் கடுமையாகக் கொட்டி விட வேண்டும் என்று ஒரு நாள் தீர்மானம் செய்து கொள்வாள். பேசி என்ன பயன்? கடுமையை வெளியிட்டு என்ன பயன் என்று இன்னொரு நாள் திடமாக எண்ணிக் கொள்வாள். கல்யாணம் நிகழ்ந்து பத்து நாட்களுக்குப் பின், ஒருநாள் பிற்பகல் இரண்டு மணி இருக்கும். அப்பாவைப் பார்க்க, மாடியில் அப்போது தான் டாக்டர் வந்திருந்தார். ரேவதி, கீழே வெந்நீர் கொண்டு போக இறங்கி வந்தாள். வாசலில் டாக்டரின் ஸ்கூட்டரை மறைத்துக் கொண்டு கருப்பும் மஞ்சளுமாய் ஒரு டாக்ஸி நின்றிருந்தது. அவள் கூடத்துக்கு வருமுன் அவர்கள் மாடிப்படி தாண்டிக் கூடத்துக்குள் நுழைந்திருந்தார்கள். அவளுக்கு நன்றாக இப்போதும் நினைவுக்கு வந்தது. அவன்... அவன் தான் வந்திருக்கிறானென்று முகத்தையே நிமிர்த்தாமல் நடந்து சமையலறைக்குள் சட்டென்று புகுந்து விட்டாள். சாருதான் சமையலறைக்குள்ளிருந்து வெளிச்சென்று அவர்களை வரவேற்றாள். “வாருங்கள், வாருங்கள்...” என்று இவள் வரவேற்கையிலே, ரேவதிக்கு உள்ளே நெஞ்சு வெடித்தது. அவள் - பூமா - பட்டுப்புடவை சரசரக்க, சமையலறை ஓரமாக வந்து நின்றாள். அசைப்பிலே தான் ரேவதி பார்த்தாள். பச்சைப் பட்டுச் சேலையும் அரக்குச் சோளியும் அன்று அவள் அணிந்திருந்தாள். கல்யாண மஞ்சள் பூச்சும், மரு தோன்றிச் சிவப்பும், அவளுடைய தந்த நிறத்துக்கு மெருகூட்டியிருந்தன. ரேவதி வெந்நீரெடுத்துக் கொண்டு தலை நிமிர்ந்ததும், சொல்லி வைத்தாற் போல் பூமா சிரித்தாள். குழந்தை சிரித்தாற் போல் சிரித்தாள். அந்தக் குழந்தையின் மீது அவளுக்கு அப்போது இரக்கம் உண்டாகவில்லை. எதிரே கண்டால் புன்முறுவல் செய்து வரவேற்கும் தியாகத்துக்காக ரேவதி காதலித்தாளா? இல்லையே? வாசுவை அவள் நேராகப் பார்க்கக் கூட விரும்பவில்லை. வெந்நீரைக் கொண்டு மாடியில் வைத்து விட்டு, டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டைச் சாக்காக எடுத்துக் கொண்டு, ஒரு கடையும் திறந்திராத அந்த வேளையில் அவள் வெளியே நடந்தாள். எதற்காகப் புது மனைவியைக் கூட்டிக் கொண்டு அங்கே அவன் வந்தான்? அவளைக் குத்திக் காட்டவோ? குத்திக் காட்ட அவள் மட்டும் தவறு செய்தாளா? இல்லையேல் தந்தை பழிவாங்கிவிட்ட எண்ணத்துடன் மகனைப் போகச் சொன்னாரா? அன்றி, நான் ஆண் மகன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மார்தட்டிக் கொள்ளவோ? அடித்து வீழ்த்திவிட்டுத் துடிப்பதைப் பார்க்கும் ஆனந்தத்தில் வந்தானோ ஒருவேளை? பஸ் ஏறிச் சென்று தொலைவில் உள்ள கடைக்குப் போய் மருந்துப் புட்டியுடன் அவள் திரும்பி வருகையில் வாசுவும் இல்லை, பூமாவும் இல்லை. சாருதான் இருக்கிறாளே? இனிப்பும் காரமும் செய்து உபசரித்திருந்தாள். வாசுவுக்கு அந்த வீட்டில் வந்தமர்ந்து இனிப்பு ருசிக்க மனம் இருந்ததா? அவன் சாப்பிட்டிருப்பானா? ரேவதி அந்தக் கேள்விகளைச் சாருவிடம் கேட்கவில்லை. ஆனால் சாரு அந்தப் பண்டங்களை அவள் முன் வைத்த போது அவளுக்கு இனிப்பாக இருக்கவில்லை. மருந்து பில்லையும் சில்லறையையும் அன்றிரவு மேசை இழுப்பறையில் வைக்கத் திறந்த போதுதான், வாசு அங்கே, அன்று எதற்காக வந்தான் என்று அவளுக்குப் புரிந்தது. “உன் கடிதத்துக்காக நான் செத்துக் கொண்டிருக்கிறேன் ரேவதி!” என்று எழுதியவன், புதுமண வாழ்வில் அவை முட்புதராக இருக்கக் கூடாதென்று அங்கு விட்டு விட்டுப் போயிருக்கிறானோ? நெஞ்சு தீப்பிடித்துக் கொண்டாற் போலிருந்தது ரேவதிக்கு. ‘வாசு! நீ இவ்வளவு கல் நெஞ்சனாக எப்படி ஆனாய்!’ கையில் எடுத்துக் கொண்டு கிழிக்கத் துடித்தாலும் அவற்றை நாசமாக்கத் துணிவு வரவில்லை. இதுவும் ஒரு விதமான கோழைத்தனமோ? நெஞ்சினுள்ளே பத்திரமாக வைத்துப் போற்றும் அவனுடைய நினைவுகளைப் போலவே, அந்த இரு கடிதக் கற்றைகளையும் அவள் சேர்த்துப் பத்திரமாக வைத்துப் பெட்டியில் பூட்டினாள். எரிச்சலை விழுங்கிக் கொண்டு சாருவிடம் வந்தவர்களைப் பற்றி அன்று விசாரித்தாள். “காசு பணம் எதுவுமே வாங்கவில்லையாம். அதற்கே அவர்கள் கஷ்டப்பட்டுக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டியிருந்தாற் போல் இருக்கிறது. வாசுவின் அம்மா வழியில் ஏதோ தூரத்து உறவாம். தகப்பனார் இல்லையாம். தமையனுக்குப் பாலக்காட்டுப் பக்கம் ஏதோ பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் வேலை போலிருக்கிறது...” என்று சாரு தெரிவித்ததைக் கேட்டுக் கொண்டே வந்த அம்மா கூட, “நாம் படியேறு முன் பத்தாயிரம் கொடுப்பாயா என்று கேட்டானே? அத்தனையும் நஞ்சு!” என்று கடுகடுத்தாள். “குழந்தை போல் பேசுகிறாள். வெகுளிப் பெண், அழகாக இருக்கிறாள்” என்றாள் சாரு. “போதுமே? விடுங்கள், அந்தப் பேச்சை. இனிமேல் என்ன வேண்டி இருக்கிறது?” யார் காரணமோ? எது சாக்கோ? முறிந்தாயிற்று. எப்படியோ, எங்கோ அவனும் வாழ்வான் என்று தான் நினைத்தாள். ஆனால் - படுக்கையில் படுத்த படு கிழங்கள், வருஷக் கணக்காய் இழுத்துக் கொண்டிருக்க வில்லையா? வெடுக்கென்று பால் பீரிட ஒடிந்து விழுந்த பச்சைக் காயாக... நிசமா? நிசம்தானா இது? ரேவதி கறுப்பு மையில் மூன்று வரிகள் கீறிக் கொண்டு வந்த கடிதாசியை வெறித்துப் பார்த்தாள். அவளால் நம்ப முடியவில்லை; ஏற்க முடியவில்லை. வழக்கம் போல் அன்றும் சாரு சமைத்தாள்; பரிமாறினாள். அவளுடைய அம்மா அவனுக்காக ஒரு முழுக்கைப் போட்டுவிட்டு, வழக்கம் போல் அப்பாவுக்கு மருந்து கொடுக்க மாடிக்குப் போனாள். அந்த வீட்டில் அவர்களுக்கு அதற்கு மேல் அவன் நெருங்கிய பந்து இல்லை. மறுநாள் கோபால் வந்து விவரங்களைக் கூறினான். கோயமுத்தூர்ப் பக்கம் வேலையாகச் சுற்றிக் கொண்டிருந்தானாம். காலையில் சாப்பிட்டுவிட்டு பாங்கிக்குப் போனானாம். அங்கேயே தலை சுற்றுகிறதென்று உட்கார்ந்தானாம். அப்படியே மயக்கமாகச் சாய்ந்து விடவே ஆஸ்பத்திரியில் கொண்டு போட்டார்களாம். அவ்வளவுதானாம். பகல் இரண்டு மணிக்குக் கதை முடிந்தாயிற்று! மயக்கமும் மாரடைப்பும் வரும் வயசா? வாய்விட்டு அழக்கூட அவளுக்கு வகை இல்லையே? மஞ்சக் கயிற்றைக் கட்டிக் கொண்டவளுக்குக் கூட முழுசாக ஒரு மாச பந்தம் இல்லை. மேலும் ஊரறிய மனைவி என்று பார்ப்பவர்கள், கேட்பவர்கள் காட்டும் அநுதாபத்தில் அவளுடைய துயரம் கரையலாம். ஆனால், உலகின் கண்களில் வாசுவுக்கும் ரேவதிக்கும் என்ன உறவு? அவனுக்கு அவள் யார்? வெளியார் கண்களுக்கு அவள் யார்? ‘உன் பிரிவு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து விடும் ரேவதி’ என்ற மொழிகளை நினைத்து உள்ளே வெந்து துடிப்பதை யாரே அறிய முடியும்? மஞ்சட் கயிற்றுடன் ஒரு மாசம் இருந்ததற்கு அடையாளமாக ஒரு குழந்தையைப் பெற்று ஊரில் விட்டு விட்டு, வாசுவின் மனைவி, பள்ளிக்கூடச் சிறைக்கு வந்திருக்கிறாள். வாழப் புகுந்து, விதிக் கொடுமை நேர்ந்தால் பாடப் புத்தகமும் பட்டணத்து ஹாஸ்டலும் தான் கதி போலும்! இப்போதும் ரேவதி பெற்றோர்களின் ஆதரவில் இருப்பவள் தான். ஆனால், கட்டுமில்லை, காவலுமில்லை. இரண்டு மூன்று வருஷங்களாக யாருக்கோ, எதற்கோ காத்திருப்பது போல் வீடு இயங்கினாலும் அவள் ஒரு நோக்குமில்லாமல் எப்படியோ பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறாள். கடற்கரையில் பூமாவைப் பார்த்து விட்டு வந்த பின் ஏற்பட்ட சலசலப்பு அவளுக்கு அடங்கவே இல்லை. பழைய கதைகளை எண்ணி எண்ணி, விழித்த கண்களிலிருந்து, நீரருவி பெருகி வழிந்து தலையணையை நனைத்தது. “உங்களுக்காக நான் எந்தக் கடுமையையும் பொறுத்துக் கொள்வேன் வாசு!” என்று மணக்க மணக்க எழுதி விட்டு செயலில் காட்டினாளா? உள்ளத்தால் முழுதும் உடமையாக்கிக் கொண்ட பிறகு அச்சம் என்ன வந்து தொலைத்தது? அஞ்சி அஞ்சிக் கூசி, வாழ்நாளெல்லாம் குறுகவோ, அன்று அப்படி அவன் அழைத்த போது அம்மாவின் பேச்சைப் பெரிதாக எண்ணினாள்...? காலமெல்லாம் பூக்காத புல்லாக வேரோடிக் கிடக்க அவளாகவே ஒதுங்கி விட்டாளே? மனிதனின் வாழ்க்கை ஒரு கண மாற்றங்களில் தொங்கிக் கிடக்குமோ? அன்று வாசுவை அவள் சந்தித்திருந்தால் ஒரு கால் பூமாவே அவன் வாழ்வில் குறுக்கிட்டிருக்க மாட்டாள். பிள்ளை மீறி விட்டான் என்று தெரிந்திருந்தால் அப்பா படி ஏறிச் சென்று ஒரு ஏழைப் பெண்ணின் பாவத்தைக் கொட்டிக் கொண்டிருந்திருக்க மாட்டார். ரேவதியும் வாசுவுமாக இருந்திருந்தால் ஒருவருக்கும் அமங்கலம் வந்திராமல் இருந்திருக்கலாம்... பாழ் நெற்றியில், அழகு... அழுகிறதே? இரவு எப்போது தூங்கினாளென்று அவளுக்கே தெரியாது. காலையில் விழிப்பு வந்து அவள் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த போது வெளியே பேச்சுக் குரல் கேட்டது. பரபரப்பாக எழுந்து வந்தாள். பூமா வந்திருந்தாள். |