(தமிழ்நாடு அரசு பரிசுபெற்ற சமூக நாவல்)

12

     “மாமி உங்களை உங்கள் விலாசத்தில் கொண்டு விடணுமா?...”

     “வேண்டாண்டியம்மா, நீ இவ்வளவு ஒத்தாசை பண்ணினதே பெரிசு ஆச்சு. நாளைக்குச் சாயங்காலம் வண்டி ஏறணும். நீ ஒரு ஆட்டோ மட்டும் புடிச்சு உக்காத்தி வச்சுடு. கரோல் பாகில, அந்தப் பெரிய ரோட் இருக்கே, அங்கேந்து போறப்ப எனக்கே அடையாளம் தெரியும். பக்கத்தில பால் பூத் இருக்கு...”

     ஓர் ஆட்டோவைப் பேசி அவர்களை ஏற்றி விடுகிறாள்.

     “பத்திரமாப் போயிட்டு வாம்மா... உங்கிட்ட அட்ரெஸ் வாங்கிக்கணும்னு நினைச்சேன். பாத்தியா?”

     கிரிஜா புன்னகை செய்கிறாள். “நாங்க வீடு மாறிடுவோம். மாமி எங்கிட்ட உங்க அட்ரஸ் இருக்கே. காகிதம் போடறேன் நானே. உங்க ஊரில வந்து உங்களைப் பார்த்தாலும் பார்ப்பேன்...”

     “திவ்யமா வா, போயிட்டு வரோம்...!”

     ஆட்டோ வட்டமடித்தாற் போல் சென்று சாலையில் மறையும் வரை அங்கே நின்று பார்க்கிறாள். காலைப் பொழுதின் சுறு சுறுப்பு. பள்ளிச் சிறாரின் சீருடைகளும், மலர் முகங்களுமாய்த் தெருவோர நடைபாதைகளில் மலர்ந்திருக்கிறது. இந்நேரம் அவள் குழந்தைகளும் பள்ளிக்குக் கிளம்பியாக வேண்டும்.

     மதன நகர் செல்லும் பஸ்ஸைத் தேடி, ஏறி அமருகிறாள். அமைதியாகவே இருக்கிறாள்.

     பஸ் இவளுக்குப் பரிச்சயமான வட்டத்துள் நுழைய நாற்பது நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. நடைபாதைப் பழக்கடைகள் உள்புறம் கடையோரங்களில் நிற்கும் சொகுசுக்காரர்கள், வண்மை கொழிக்கும் மக்களின் தேவைக்கான பல பல பொருள்களும் விற்கும் அங்காடிகள்.

     பஸ்ஸிலிருந்து அவள் இறங்குகையில் ஸ்கூட்டரில் வரும் சிவலால் பையன் பார்க்கிறான். “நமஸ்தே ஆண்டி! ஊருக்குப் போயிருந்தீர்களா?”

     “ஆமாம், எங்கே ஃபாக்டரிக்கா?”

     சகஜமாகப் பேசுகிறாள்.

     முனிசிபாலிடி பள்ளிக்குச் செல்லும் ஏழைக் குழந்தைகளின் அணி ஒன்று சாலையை கடந்து போகிறது. “ஆன்டி” என்று ஒரு குரல்.

     ஓ, மாயாவின் பையன் தனு...! சாதாரணமாகக் குரல் கொடுத்துக் கூப்பிட மாட்டான். இவளைக் காணவில்லை என்று வீட்டில் கலவரம் நிகழ்ந்திருக்க வேண்டும். இளநீல சூடிதார் பைஜாமாவில் சுஷ்மா கல்லூரிக்குக் கிளம்பிச் செல்கிறாள். தெரிந்த முகம். பளிச்சென்று ஒரு சிரிப்பு; நின்று பார்வை. “மார்னிங்...!” இவளுடைய தெரு... வழக்கம் போல், எந்த நேரத்திலும் உண்ட களைப்பின் சோம்பலைக் காட்டும் படி காட்சி அளிக்கும். ஒவ்வொரு சுற்றுச் சுவருக்குள்ளும் பூதங்களைப் போல் மூடிக்கொண்டு இரண்டு மூன்று கார்கள் ‘கண்ணாடி’ பதித்த பெயர்ப்புரைகள்... ‘சந்தனா’வின் சொந்தக்காரி, பிதுங்கி விழும் வெண் சதையுடன் வாசலுக்கு நேராகக் காலையுணவு அருந்துகிறாள். இந்தத் தெருவை இவ்வளவு நின்று நிதானமாக இவள் பார்த்ததில்லை. பழைய பிரிகேடியர் விக்ரம்கிங், வாயிலிலுள்ள அழகுச் செடிகளுக்கு நீர் பாய்ச்சுகிறான். இவளுக்குப் பேசிப் பழக்கமில்லை. என்றாலும் நின்று ஒரு மலர்ச்சியுடன் பார்க்கிறான்.

     “ஓ கவி கி மா? ஊருக்குப் போயிருந்தீர்களா?...” என்று ஸுனு ஓடி வந்து கேட்கிறாள். எதிர்வீட்டு மருமகள், ஏதோ அலுவலகத்தில் ரிஸப்ஷனிஸ்ட்.

     “ஓ... ஆமாம்...” ஆயிற்று. வீட்டு வாசலில் பத்திரிக்கை படிப்பவன் கதவு கிளிக்கென்று செய்யும் ஓசை கேட்டு எட்டிப்பார்க்கிறான்.

     “ஆயியே! ஆயியே!... எங்கே போயிருந்தீர்கள்? வீடு ஒரே அமர்க்களமாயிட்டது?...”

     அவள் நிற்கவில்லை. விடுவிடென்று படி ஏறுகிறாள். கதவு திறந்தே இருக்கிறது. ஒருவரும் பள்ளிக்குச் செல்லவில்லை. பரத் தான் முதலில் இவளைப் பார்க்கிறான்.

     “அம்மா” என்று ஓடிவருகிறான். “அம்மா வந்துட்டா அம்மா வந்துட்டா...”

     “அம்மா? நீ கெட்டுப்போயிட்டே, இனிமே வர மாட்டேன்னு சொன்னா. எப்படிம்மா கெட்டுப் போனே?...”

     நெஞ்சில் கத்தரிபட்டுத் துண்டானாற்போல் துணுக்கென்று நோகிறது. குரல்கேட்டு, கோடுபோட்ட பைஜாமா அங்கியுடன் முகச்சவரம் செய்யும் கோலத்துடன் சாமு நடையில் வருகிறான். அவள் உறுத்துப் பார்த்தாள். “குழந்தை கிட்ட யார் இப்படிச் சொன்னது?”

     “அம்மா... வந்துட்டா, கிடைச்சுட்டா, அம்மா கெட்டுப் போகல...” அவள் பரத்தின் தலையைத் தடவிக் கொண்டு, நிற்கிறாள். ஏனோ அவன் பார்வையின் கடுமை அவள் சரளத்தைத் தடுத்து நிறுத்துகிறது.

     “எங்கே போயிட்டு வரே?...”

     “ஹரித்துவாரம் போயிருந்தேன். குழந்தைகிட்ட இப்படியா இரண்டர்த்தச் சொல்லெல்லாம் சொல்லுவது!”

     “பின்ன எப்படியடி சொல்ல? தொலைஞ்சு போனா கெட்டுப் போனான்னுதானே சொல்லணும்?”

     இவனுடைய இந்தக் குரலை அவள் இதற்குமுன் கேட்ட தில்லை. ஆணைகளான கட்டுக்களைத் தகர்த்தால் என்ன பலன் தெரியுமா என்று கிளர்ந்து வரும் குரல். அந்தக் குரலில் கவிதாவும், சாருவும் கூடச் சமையலறையில் இருந்து ஒடி வருகிறார்கள். குழந்தைகள் இருவரும் வண்ணமிழந்து பொலிவிழந்து காட்சியளிக்கின்றனர். கவிதாவின் மாக்ஸியில் எண்ணெய்ப் பிசுக்கு, மஞ்சள் கறை எல்லாம், அவள்தான் சமையல் வேலை செய்கிறாள் என்று அறிவிக்கின்றன. சாருவின் விரலில் ஒரு துணி சுற்றிய காயம் ஊகிக்க முடிகிறது.

     “ஹாய் அம்மா, எங்கம்மா போயிட்ட? கிச்ச்ன்ல வேலை செய்யுங்கடி கழுதைகளான்னு அடிக்கிறார்மா. அப்பா? கீழ பன்டியோட அம்மா டிக்குவ அனுப்பிச்சு, ரொட்டியும் சப்ஜியும் பண்ணிக்குடுக்கச் சொன்னா, ஒரு நாளக்கி. அவன் கிச்சன்ல வரக்கூடாதுன்னு பாட்டி கத்தறா. ரத்னாக்கா வந்தா. அவளைப் புடிச்சி பாட்டியும் அப்பாவும் திட்டினா. ரத்னாக்கா சொல்லித்தான் நீ ஓடிப்போனியாம்!... ரத்னாக்கா அப்பா கிட்ட ரொம்பச் சண்டை போட்டாள்...” என்று சாரு குழந்தை போல் ஒப்புவிக்கிறாள்.

     “உள்ள போங்கடி கழுதைகளா! ரெண்டு பேரையும் எங்கானும் போர்டிங்ல கொண்டுத் தொலைக்கணும். ஓடிப் போயிட்டு இந்த வீட்டில நுழைய, என்ன துணிச்சல் இருக்கணும்? அரித்துவாரம் போனாளாம், அரித்துவாரம்... எங்கிட்ட காது குத்தறா. எதுக்கடி போன இப்ப அரித்துவாரம்?”

     “இத பாருங்க, குழந்தைகளை வச்சிட்டு இப்படிப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.”

     அவன் ஓரெட்டு அவளை அறைவது போல் முன்னே வருகிறான்.

     “பல்லை உடைப்பேன், நாயே. என்னடி உரிமைப் பேச்சுப் பேசறே? ஓடிப்போயி எங்கோ சீரழுஞ்சு வந்துட்டு? எனக்கு வெளியில் தலை நீட்ட முடியல...”

     பாட்டி இப்போது மெள்ள எட்டிப் பார்க்கிறாள்.

     “வாண்டாண்டா, சாமு. நமக்குப் பாவம் வேண்டாம். அநாவசியமா ஏன் கோபப்பட்டு வார்த்தையக் கொட்டரே? பால் சிந்தியாச்சு. அவ சாமான், துணிமணி எடுத்துண்டு போறதானா போகட்டும்...”

     அடிபாவி...!

     அடிவயிற்றிலிருந்து சுவாலை பீறிட்டு வருகிறது. பரத் மருண்டு போய் அழுகிறான்.

     “அம்மா..! நீ திரும்பிப் போயிடுவியா?...” சாமு, பிள்ளையைப் பற்றி இழுக்கிறான். “உள்ளே போ. ராஸ்கல், அம்மாவாம் அம்மா. யாரது அம்மா இங்க? வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாத ஒரு ஜன்மம் அம்மாவாம்!...”

     “சாமு நீ பேசாம இரு சித்த, வாயிலிருந்து கீழ விழுந்துடுத்து, எத்தனை நல்ல பண்டமானாலும் திருப்பி எடுத்து முழுங்க முடியறதா? குழந்தைகள் எப்படி அல்லாடிப் போயிடுத்து! மல்ஹோத்ரா, பிள்ளைய விட்டு பாவம் நேத்து ஆஸ்பத்திரில எல்லாம் தேடிட்டு வரச் சொன்னான். எங்கிட்ட, ஏண்டீம்மா கடைக்குப் போறேன்னுதானே சொல்லிட்டுப் போன? இத, கடைக்குப் போயிருக்கா, வந்துருவ, வந்துருவன்னு பார்த்தா வயத்தில புளிகரைக்கிறது. வரவேயில்ல. குழந்தைகள் வரா, மாயா வரா, கடைவீதி, மார்க்கெட்டெல்லாம் சல்லடை போட்டுத் தேடியாச்சு. என்னன்னு நினைக்க? நான் என்ன செய்வேன்? இவனோ ஊரில் இல்ல. ரோஜாக்கு போன் போட்டு, அவ ஒடி வந்து, இவனுக்கு போன் போட்டு, அடுத்த பிளேனில அடிச்சுப் புடிச்சிண்டு வந்தா என்னத்தைன்னு செய்ய? அன்னிக்குக் காலம யாருக்கோ ஃபோன் பண்ணினாப்பா, காஸுக்கான்னு கூடக் கேட்டேன். பதில் சொல்லலன்னேன். இத்தனை பெரிய டில்லிப் பட்டணத்தில் எங்க போய்த் தேட?”

     “அம்மா, உன்னை வாயிலே துணியடச்சு, குண்டுக் கட்டாக் கட்டிக் காரில வச்சுக் கடத்திட்டுப் போயிட்டாங்களா? அப்பிடித்தானேம்மா, அந்த சினிமால கூட வந்தது..?”

     பதின்மூன்று வயசுப் பெண்ணின் யதார்த்தமான சிந்தனை, அவளுள் நெகிழ்ச்சியைத் தோற்றுவிக்கிறது.

     “அவளக்கடத்திட்டுப் போயி என்ன பண்ணுவாங்க! இவளே தானே ஒடியிருக்கா. கொஞ்ச நாளாவே போக்கு சரியில்லாமதானிருந்தது. ஆனா இவ்வளவுக்குத் துணிஞ்சுடுவன்னு நான் நினைக்கல... ஏண்டி நிக்கற எம்முன்னால? எந்த எண்ணத்தோட நீ போனியோ, அதே கையோட திரும்பிப் போய்க்கோ. நீ இந்த ஒரு வாரமா எங்கே இருந்தே, எங்கே போனேன்னு நான் ‘ப்ரோப்’ பண்ண போறதில்ல. நீ ஒரு வேளை வராமலே இருந்தா தேடிட்டிருப்பேன். இனிமே விசாரிக்கிறதே அசிங்கம். எனக்கு மானக்கேடாயிட்டுது. போலீஸ் கமிஷனர்கிட்ட நான் எந்த முகத்தை வச்சிட்டு என் பெண்சாதி வந்துட்டான்னு சொல்லுவேன்? என் மானம் கப்பலேறியாச்சு!”

     ஒரு பேய்க் கையால் முகத்தில் அறைப்பட்டாற் போல் இருக்கிறது.

     எத்தனை இயந்திர மயமான இராட்சதத் தாக்குதல்? எரிவாயு அடைப்பானை மூட மறந்து போய், காலையில் தீக்குச்சி, கிழிக்குமுன், அது ஆளை அடிக்கப் பற்றிக் கொள்வது போன்ற கதைதானா இது? அப்படி இப்படி மறந்து போய் மின் இணைப்பைத் தொட்டு விடுவது போன்றது தானோ, இவள் குடும்ப அரண்களும்? இவன் ஏன் இவ்விதம் நடந்து கொள்ள நேர்ந்தது என்று நினைக்கும் அளவுக்குக் கூட அவள் மனித மதிப்பைப் பெற்றிருக்கவில்லையா? குடும்ப மானம் என்பது அவள் தாங்கிக் கொண்டிருக்கும் நீர்க் குமிழியா?

     “என்னடி மனிதத்தன்மையைக் கண்டுவிட்டாய், பெரிய... மனிதத்தன்மை? நானும் ஊரில இல்லாதபோது, அம்மாவிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டுப் போகற அளவுக்குக் கிரிசை கெட்ட உனக்கு நான் என்னடி மனிதத் தன்மையைக் காட்டணுங்கறே?”

     “உன்னை மறுபடி இங்கே வீட்டில் கூட்டி வச்சுக்கற அளவுக்கு நான் மழுங்கிப் போயிடல. உன்னைக் கட்டின தோஷத்துக்கு உனக்கு என்ன அழணுமோ, அதை வக்கீல் மூலமா ஏற்பாடு பண்ணிடறேன். நீ உன் இஷ்டப்படி போய்ச் சேர். இங்க இருந்து என் குழந்தைகளுக்கு எதிர்காலம் இல்லாமல் பண்ணிடாதே. இந்த ஏரியாவிலேயே இப்ப, எனக்கு வெளில தலைநீட்ட முடியாது...”

     கார் வந்து நின்ற ஓசை கேட்கவில்லை. ரோஜா மாமி வருகிறாள்.

     “வந்துட்டாளா?... எனக்கு மனசே கேட்கல சாமு, மல்ஹோத்ராவுக்கு போன் பண்ணினேன். ‘வந்துட்டா ஒரு கால் மணியாறது’ன்னான். சரி விசாரிச்சுப்போம்னு உடனே வந்தேன்...”

     ஓ... இவர்கள் நேற்று ஃப்ளைட்டில் அமெரிக்கா போக வில்லையா?... பேச்செழாமல் நிற்கிறாள்.

     “ஏம்மா, கிரி, உனக்கே இது சரியாயிருக்கா? குழந்தைகள் தவிச்சுப் போக; வயசானவ, அள்ளு அள்ளாக் குலுங்கி அழறா. என்னடீ செய்வேன் ரோஜா, இப்படிப் பேர் வாங்கி வச்சுட்டுப் போயிட்டாளேன்னு. சாருதான் பாவம், யார் யாரோ ஸ்நேகிதா வீட்டுக்கெல்லாம் ஃபோன் பண்ணி, ‘மம்மி அங்க வந்தாளா ஆன்டி, கடைக்குப் போறேன்னு போனாங்க, காணலைன்னு’ கேட்டுண்டிருந்தது. ஒரு தாயாராகப் பட்டவள் செய்யற செயலா இது?... அந்தப் பொண், ரத்னா, அது வேற தடியனாட்டம் ரெண்டு சிநேகிதனைக் கூட்டிண்டு வந்து பாட்டியை நாக்கில் நரம்பில்லாமல் பேசித்து. இந்த வயசுக்கு அவருக்கு இதுவேணுமா? முதல்நாள் அவளை இங்க பார்க்கறப்பவே அவல்லாம் இந்த வீட்டுக்கு வரக்கூடிய உறவில்லன்னு தோணித்து. எப்படிச்சொல்ல? ஸிகரெட்டப் புடிச்சிண்டு போறதுக. எல்லாம் வெளிப்படை. ஏதுடா நமக்கும் பதினாறு வயசுப் பெண்ணிருக்கு, இந்த மாதிரி ரகங்களைச் சேர்க்கலாமான்னு நீதானே தாயாராக லட்சணமா ‘கட்’ பண்ணனும்? ஒருநாள் கிழமை, பாவாடை உடுத்திக்கோ, தாவணி போட்டுக்கோன்னு நாமதான் சொல்லணும். நான் ஏன் சொல்றேன்னு நினைச்சுக்காதே சாமு, ‘பளிச்’னு ஒரு குங்குமம் நெத்தில வெச்சுக்கறதில்ல. நாகரிகமா இருக்க வேண்டியதுதான். எனக்குந்தான் வீட்டில வராத விருந்தாளியா? ஆனால் என் நியமம், பூஜை, விட்டுடமுடியுமா? ஒரு வெள்ளி, செவ்வாய். மலைக்கோயிலுக்குப் போய் வந்தா என்ன? நீ பண்ணிக் காட்டினால்தானே குழந்தைகளுக்கு வரும்? அதுகளை வச்சிட்டே, பாட்டி மடி, ஆசாரக் குடுக்கைன்னா அதுகளுக்கு மதிப்பு வருமா? நீ ஊரில் இல்ல. உன் அம்மா, பாதிநா ராப்பட்டினிதான்...”

     இவளால் இதற்குமேல பொறுக்க இயலவில்லை. அவளுடைய வயிரங்கள் பெரிய குங்குமம், சாயம் பூசிய கறுப்பு முடி, மின்னும் பட்டு எல்லாம் வெறுப்பைக் கிளர்த்திக் கொண்டு வருகின்றன.

     “...மாமி உங்களுக்கே இது நல்லாயிருக்கா? ஒரு குடும் பத்தின் நடுவே புகுந்து, இப்படிப் பிரிக்கிறது உங்களுக்கு அழகா? எத்தனை நாள் பட்டினி போட்டேன், பார்த்தீர்கள்?”

     “உனக்கேனம்மா கோபம் வரது? குழந்தைகளை, நாம் தான் நல்லவழியாகக் கொண்டு போகணும். ஒரு ஆடி வெள்ளி, தைவெள்ளின்னு சொல்லி மடி, ஆசாரமா இருக்கச் சொல்லிக் குடுக்கணும்னுதானே சொல்றேன்!...” கிரிஜா என்ன சொல்கிறோம் என்பதறியாமல் அடிவயிற்றிலிருந்து கத்துகிறாள்.

     “உங்க விழுப்பு, மடி எல்லாம் போலி! தங்கமும் வயிரமும் கடத்திட்டு வந்து, வரி கொடுக்காமல் ஏமாற்றி, பிறத்தியார் வீட்டில் குடுத்துப் பதுக்கி வைக்க, ஒண்ணும் தெரியாத கிழவியை உபயோகிக்க வேஷம் போடுறீங்க! என் குழந்தைகளுக்கு வேஷம் போடற மடி தேவையில்ல!”

     சாமு பாய்ந்து வந்து அவள் முகத்தில் அறைகிறான்.

     “என்னடி சொல்ற? திமிரெடுத்து எவன் வீட்டிலோ தங்கிட்டு வந்து நிக்கற நாய். என்னடீ பேசற...?” கிரியின் கண்களில் தீப்பறக்கிறது.

     “இத, பாருங்க! அநாவசியமாக வாயைக் கொட்டாதீங்க! நான் எங்கும் ஓடிப் போகல. நீதான் இந்த வீட்டைத் தாங்கறதா நினைச்சிக்க வேண்டாம்ன்னு என்னை ஒரு விநாடியில் தூக்கி எறிஞ்சு, சோத்தை வீசி எறிஞ்சிட்டுப் போனிங்க! அப்ப உங்கம்மா, இந்த மாமி, யாரும் எனக்கு நியாயம் சொல்ல வரல. நான் வெறும் மழுக்குண்ணிப் பொம்மையில்ல. என் படிப்பு, அறிவு, மனுஷத்தன்மை எல்லாத்தையும் வெட்டிச் சாய்ச்சிட்டு கண்ணை மூடிட்டு உடம்பால் உழைக்கும்படி, சவுக்கடியைவிட மோசமான உள்ளடியினால் கட்டாயப்படுத்தினர்கள். இல்லாட்ட, பதினெட்டு வருஷம் இந்த வீட்டில் அச்சாணியாக உழன்றவளுக்கு நீங்கள் என்ன மதிப்பு கொடுத்தீர்கள்? அது அன்னிக்கு எனக்கு பொறுக்கல. நீங்கள் என்ன செய்தாலும் நான் முழுங்கிட்டு மெஷினாக இருக்கணும்னு பொறுக்காம அன்னிக்கு மனசு விட்டுப் போச்சு. கங்கையைப் பார்க்கப் போனேன். இந்த மாமியும்தான் என்னைப் பார்த்தாள். ஏன் சும்மா இருக்கறீங்க? பிச்சை பண்ணி வைக்க வந்தேள் என்னைப் பார்க்கலியா? இப்படி அபாண்டமா, நாவில் வராத அவதூறுகளைச் சொல்லலாமா?”

     “என்னது? உன்னைப் பார்த்தேனே? நான் எங்க உன்னைப் பார்த்தேன்? என்னைப் பொய்ச்சாட்சி சொல்ல இழுக்காதேம்மா? உன் மூஞ்சிய அன்னிக்கு இங்க வந்தப்ப பார்த்ததுதான், இப்ப பார்க்கிறேன்...”

     பெண்ணுக்குப்பெண் காலை வாரிவிட்டு யமனாக நிற்கும் கொடுமையில் கிரிஜா விக்கித்துப் போகிறாள்.

     “மாமி...! நீங்க என்னைப் பார்க்கல! அந்தக் கெளரி அம்மா, பூதப்பாடி உறவுன்னுகூடச் சொன்னதாகச் சொன்னார். அவாகூடப்போய், அவாகூடத்தங்கி அவாகூடத்தான் காலம வந்து இறங்கினேன். நீங்ககூட நம்மாத்துல தங்கலாம். ஆனா நாளை ஃப்ளைட்ல அமெரிக்கா போறோம். குழந்தை கல்யாணம் நிச்சயமாகப் போறதுன்னு சொன்னேளாம்..."

     “ஐயோ என்னென்ன கதை கட்டுகிறாள், பாருங்கோம்மா! சாமு, இத்தனைக்கு வந்தப்புறம்... நம்ம சிநேகமெல்லாம் நீடிக்கறதுக்கில்ல. என்னமோ ஒரு பாசம், பழகின தோஷம் வந்து வந்து பெரியவ பெத்தவ மாதிரின்னு ஏதோ உப்பிலிட்டது. சர்க்கரைன்னு கொண்டு கொடுப்பேன். இனிமே எனக்கென்ன? உங்க வீடு.”

     ரோஜா மாமி திரும்பினால் விடுவார்களா!

     “ரோஜா நீ எதுக்குடி வருத்தப்படற! அந்த நாள்ளயே நான் படிச்சு வேலை பண்ற பொண் வேண்டாம்னு இதுக்குத் தான் பயந்தேன். எங்க பெண் படிச்சாப்பலவே காட்டிக்க மாட்டா, பாருங்கோன்னு இவம்மா சொன்னா, இருக்கவும் இருந்தா. இப்ப என்ன போறாத காலமோ, எதெதுகளோ வந்து குழப்பி, திரிய விட்டாச்சு... எல்லாம் என்னால் வந்தது தான். நான் ஒருத்தி மடி ஆசாரம்னு இல்லாம இருந்தா, இஷ்டம்போல போயிண்டிருக்கலாம்...”

     “அம்மா, இத்தனைக்குப் பிறகும் இங்க வந்து இவ இருக் கறதுங்கறது சரிப்படுமா? நீ ஏன் வருத்தப்படறே? இவளுடைய உள்விஷம் எனக்குத்தான் தெரியாமல் போச்சு... அவ எங்க வேணாப் போயிக்கட்டும்... ஆமாம்...” அவன் வெடுக்கென்று உள்ளே செல்கிறான்.

     கிரிஜாவினால் இனியும் இந்த வீட்டில் எப்படி இருக்க முடியும்? நாற்பத்தாறு வயசு, மூன்று குழந்தைகளுக்குத்தாய். இவள் குடும்பத்தைவிட்டுப் போனால், உடல் பரமான மாசுகளை வீடுவதுதான் நியாயமா? அந்த மாசு ஆணுக்குக் கிடையாது. இல்லை? ஒரு மனிதப்பிறவியான பெண்ணை, இயந்திரத்தையும் விட மோசமாக நடத்த ஓர் ஆணுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் உரிமை வழங்கும் ஓர் அமைப்புத்தான் குடும்பம். இந்த மையமான அதிகார உரிமை குவியலை மாற்றமாட்டோம் என்றால், அவள் வெளியேறித்தான் அதைச் சீராக்க முனையவேண்டும்.

     அவள் படிகடக்கையில், “அம்மா... நீ போறியாம்மா...?” என்று பரத் ஓடிவருகிறான். கவிதா நகத்தைக் கடித்துக் கடித்துத் துப்புகிறாள். சாரு தந்தைக்கு அஞ்சி ஒதுங்கி நின்றாலும் உதடுகள் துடிக்கின்றன.

     “ஏய், எல்லாம் உள்ள போங்க! பரத்... இங்க வா! நீ அம்மா அம்மான்னு போனா ஒண்ணும் கிடையாது. ரிமோட் கன்ட்ரோல் ப்ளேன் வாங்கிட்டு வருவேன். ரோபோ வாங்கித் தருவேன். அம்மாவோட போனால் ஒண்ணும் கிடையாது!” ஒரு கையில் பிள்ளையைப் பிடித்துக்கொண்டு அவன் ஆசை காட்டி நிபந்தனை விதிக்கும் நேரத்தில் அவள் விடுவிடென்று தெருவில் இறங்கிப் போகிறாள்.

     யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.



சுழலில் மிதக்கும் தீபங்கள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15