(தமிழ்நாடு அரசு பரிசுபெற்ற சமூக நாவல்)

8

     காலையில் அவர்கள் இருவரும் எழுந்திருக்கும் முன் கிரிஜாவுக்கு விழிப்பு வந்து விடுகிறது. பல்லைத் துலக்கி விட்டு மாற்றுச் சேலையை எடுத்துக் கொண்டு 'ஹரிகிபைரி’யை நாடி நடக்கிறாள். கங்கையை ஒட்டிய சந்தில் உள்ள கடைகள் விழித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியக் கலாசாரத்தின் இழைகள் சமயத்தறியில்தான் பின்னப் படுகின்றன. பெண்கள் விரும்பும் அணிமணிகள், சேலை துணிகள், பாத்திரங்கள், யாத்திரீகர்களுக்குத் தேவையான பெட்டிகள், மற்றும் கங்கை நீர் முகர்ந்து செல்ல உதவும் அலுமினியத் தூக்குகள், பித்தளைச் செம்புகள், பிளாஸ்டிக் ‘கேன்’கள், பூசனைக்குரிய பல்வேறு வெங்கலப் படிமங்கள் என்று முடிவேயில்லை; மிட்டாய்க் கடைகளில் புதிய நெருப்பு புகைகிறது. புதிய பால் வந்து இறங்குகிறது. ஏற்கெனவே ஓரடுப்பில் பெரிய இரும்பு வாணலியில் பால் காய்கிறது... சந்து நெடுகிலும் மக்கள். இனம் புரிந்து கொள்ளும் படியான மொழி பல்வேறு பிரதேச மக்களின் கலவையாக நீண்டு செல்கிறது, சந்து. குடும்பத்தவர், துறவியர், இளைஞர், முதியோர், அப்போது தான் இரயிலில் வந்து இறங்கியவர்களாக மூட்டை முடிச்சுக்களைச் சுமந்தவர்கள், இந்தக் கரைதான் வாழ்வே என்று ஊறிப் போனவர்கள்...

     ‘ஹரியின் பாதங்க’ளென அழைக்கப் பெறும் படித் துறையின் மேல் சலவைக்கற்றரையின் சிறு சிறு கோயில்களும் ஈரம் பிழியும் மக்களும், பிச்சைக்காரரும் தருமதாதாக்களும் பணியாளரும் குழுமும் கட்டம்.

     கிரிஜாவுக்கு இந்த முகமறியாக் கூட்டம் தன்னை மறந்த மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது.

     மாற்றுச் சேலையை ஒரு படியில் வைக்கிறாள். நீராடி முடித்த ஒரு வங்க மூதாட்டி அமர்ந்திருக்கிறாள். “இது இங்கே இருக்கட்டும்!”

     அவள் தலையை ஆட்டி ஆமோதிக்கிறாள். படிகளின் மேல் நிற்கையிலேயே கங்கையின் இழுத்துச் செல்லும் வேக ஓட்டம் மனசுள் அச்சத்தை ஊட்டுகிறது. குளம் போல் தடுக்கப்பட்ட நிலையிலும் இந்த ஓட்டம் காலை வைத்தால் இழுக்கிறதே? அப்பால் சங்கிலிக் கட்டைகள் தாங்கிகள் எதுவும் மிச்சமில்லை. எல்லாவற்றையும் பெருகி வரும் கங்கை அடித்துச் சென்று விட்டதோ? சேலையை வரிந்து கொண்டு இவள் தயங்கியவாறு இறங்குகிறாள். இழுப்பு...

     அருகிலே, பெரிய ஒட்டுக் குங்குமத்துடன் ஒரு குஜராத்தி நங்கை கோலாகலமாக ஒரு மூதாட்டியின் கையைப் பற்றிக் கொண்டு நீராட உதவுகிறாள்! “ஆவோஜி ஆவோ...!”

     “இரண்டு மூன்று நான்கு பேர்களாகக் கைகளைப் பற்றிக் கொண்டு ஓட்டத்தைச் சமாளித்து மூழ்கி எழுந்திருக்கின்றனர்.

     இந்த வளையத்தை விடாமல் வைத்து இயக்கும் நங்கையின் உற்சாகத்துக்கு அளவேயில்லை. அவள் கணவனோ, சகோதரனோ தெரியவில்லை. ஓர் இளைஞன், நீராடலுக்கு இடையே படியில் அமர்ந்து காட்சிகளை ரசிக்கிறான்.

     கிரிஜா தயங்கி நிற்பதைக் கண்டு, “ஆவோஜி ஹாத் பகட்லியே!” என்று ஊக்குகிறான். “ஆவோஜி! ஆவோஜி!” என்று நங்கை கைநீட்டிக் கோர்த்துக் கொள்கிறாள்.

     மூழ்கு...! மூழ்கு...! கங்கை... கங்கையே இது என்ன புத்துணர்வு? இதுதான் பேரின்பமோ? எல்லாத் துன்பங்களையும், எல்லாக் குழப்பங்களையும் அடித்துச் சென்று தெளிவும் துலக்கமும் தரும் இந்த ஓட்டம்... இதில் போகாமல் பத்திரமாக இருக்கிறோம் என்ற கைப்பிணைப்புக்கள்...

     மூழ்கி...! மூழ்கி...!

     இவர்களைப் பிணைத்துக் கொண்டு நீரில் ஆடும் நங்கைக்குத் தலை முழுகத் தெரியவில்லைதான். ஆனால், “ஆவோஜி! ஆவோஜி!” என்றழைத்துப் புதிய புதிய மக்களை வட்டத்தில் கோர்க்கிறாள். இளைஞர், சிறுமி, முதியவர் எல்லோருடைய அச்சத்தையும் விரட்டும், கை ஆதரவாய்ப் பிணைக்கிறாள். இங்கே மொழியும் இனமும், பிராந்தியமும் அடிபட்டு, ஒரே ஓட்டத்தில் சங்கமமாகின்றன.

     இந்த நிமிடங்களாகிய நேரம், இந்த கைப்பிணைப்புக்கள் தரும் பத்திர உணர்வு, இந்த ஓட்டம், இந்தப் புத்துணர்வு தரும் நீராடல், எல்லாம் சத்தியம். இங்கு தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி, படித்தவர், படிக்காதவர், கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு எதுவும் இல்லை. கரையில் ஏறிய பின் மீண்டும் வந்து இந்தக் கைப்பிணைப்பில் இணைகின்றனர்.

     “...இதோ இருக்காளே? ஏம்மா? ஒரு வார்த்தை சொல்லிட்டு வரக்கூடாதா?...'”

     கிரிஜா திரும்பிப் பார்க்கிறாள்.

     கெளரியம்மாள், கணவனைக் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.

     “நீங்க, மாமா எழுந்து, அவரைக் கூப்பிட்டு வர நேர மாகும்னு நான் வந்துட்டேன். உங்களுக்கு வழி தெரிஞ்சதில்லையா?...”

     “...இங்கியும் இழுப்புத்தானே இருக்கு...?”

     இதற்குள் குஜராத்திப் பெண்ணின் உற்சாகம் பஞ்சாபிக் காரிக்குத் தொற்றி விட, “ஆயியே... ஜி...” என்று கையை நீட்டுகிறாள்.

     “மாமி, இப்படி வாங்கோ, கையைப் புடிச்சிட்டு நாலைஞ்சு பேராக ஸ்நானம் பண்ணுறது ரொம்ப சுகமாயிருக்கு. கங்கைக் கரைக்கு வந்து செப்பில் முகர்ந்து விடுவதா? மாமா? வாங்க! மாமி கையெப் பிடிச்சுக்குங்கோ...”

     உற்சாகம் பிய்த்துக் கொண்டு போகிறது. இந்த வளையத்தில் இப்போது கிழவரின் மறு கையைப் பற்றிக் கொள்ள ஓர் இளைஞன் வருகிறான், அவன் மனைவி மறுகை. இடையில் இரு தம்பதியரையும் இணைக்கும் கிரிஜா - மூழ்கி மூழ்கி அந்தப் பரவசத்தில் திளைக்கின்றனர்.

     கெளரி அம்மாள் ‘கங்கே, யமுனே, சரஸ்வதி, காவேரி, பவானி’ என்று எல்லா நதிகளையும் சங்கமிக்க வைக்கும்படி சொல்லிச் சொல்லி மூழ்குகிறாள். நீரோட்டம் புதுமையாக வருகிறது; புதிது புதிதாக மனிதர்கள் இணைவதும், கரையேறுவதும் புத்துணர்வின் அலைகளாய்ப் பிரவகிக்கின்றன.

     கிரிஜா பழைய கிலேசங்கள் சுத்தமாகத் துடைக்கப்பட, தன்னைப் புதிய கன்னியாக உணருகிறாள்.

     மூன்று நாட்கள் கங்கை நீராடலும் கரையில் திரிதலுமாக ஓடிப் போகின்றன. விடுதலையின் இன்ப அமைதியைக் குழந்தைபோல அநுபவிக்கிறாள்.



சுழலில் மிதக்கும் தீபங்கள் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15