உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
(தமிழ்நாடு அரசு பரிசுபெற்ற சமூக நாவல்) 5 “உள்ள வாங்க அபு! கமின்!” கிரிஜா ரத்னாவின் குரலில் கைவேலையை விட்டு, வெளியே வந்து பார்க்கிறாள். உயரமாக, மூக்கிக் கண்ணாடி, பிடரியைத் தொட்டுப் புரளும் முடி, முன்பக்கம் லேசாக இருகோணங்கள் உள்ளடங்க முதிர்ச்சி காட்டும் நெற்றி, ஜிப்பா, ஜோல்னாப் பை என்று ஓர் இளைஞன் நிற்கிறான். “வாங்க ஆன்டி, இவர் அபு... இவரும் என்னைப் போல் ஒரு ப்ராஜக்ட் பண்ணுறார். இவர், கிரி ஆன்டி...” அவன் கை குவிக்கிறான்; கிரி புன்னகையுடன் தலையசைத்து வரவேற்று முன்னறையில் உட்காரச் சொல்கிறாள். “...உங்க காஃபி நேர்த்தியைச் சொல்லிக் கூட்டிட்டு வந்தேன் கிரி ஆன்டி.” கிரிஜா மென்மையாகப் புன்னகை செய்கிறாள். “உங்களைப் பற்றி ரத்னா நிறையவே சமாசாரம் சொன்னாள்!” அவன் தமிழில் தான் பேசுகிறான். கிரிஜா உள்ளே வந்து, காபி கலக்கச் சித்தமாகிறாள். சாரு டான்ஸ் கிளாசுக்கும், கவிதா சிநேகிதி வீட்டுக்கும் போயிருக்கிறார்கள். பரத் மேல் மாடியில் மல்ஹோத்ரா பையனுடன் பட்டம் விடுகிறான். கிரிஜா, மாமியாருக்கு சொஜ்ஜி கிளறி வைத்திருக்கிறாள். ரத்னா எல்லாம் தெரிந்து கொண்டே உள்ளே வந்து, குளிரலமாரியைத் திறக்கிறாள். “கிரி, ஏதானும் கொறிக்க இருக்கா?” “இங்க டப்பாவில் தேன்குழல் இருக்கு பார்!” “ஹாய், சொஜ்ஜியா, ஏலக்காய் மணம் வருதேன்னு, அதானே பார்த்தேன்.” சற்றும் தயங்காமல் தட்டில் இரண்டு கரண்டியளவு வைத்துக் கொண்டு தேன்குழலையும் நொறுக்கிப் போட்டுக் கொள்கிறாள். இரண்டு தட்டுக்களையும் ஏந்திக் கொண்டு செல்கிறாள். “என்னைக் கேட்கக் கூடாதா, ரத்னா?” திரும்பிப் பார்க்கிறாள். “உன் பாட்டி நேற்று பட்டினி கிடந்தாள். இன்று ரகளை?” அவள் பேசாமல் சிரித்த வண்ணம் முன்னறைக்குப் போகிறாள். தட்டுக்களை அங்கு கொண்டு வைத்து விட்டு மீண்டும் குளிர் நீரெடுக்க வருகிறாள். “ரத்னா, உன்னால் என் நிலைமையைப் புரிஞ்சுக்க முடியாது. என் குடும்ப அமைதியில் நீ தலையிடாதே!” “தலையிட்டுத்தான் ஆகணும் கிரி ஆன்டி. நீங்க தனி மனுஷி இல்லை. ஒரு மொத்த சமுதாயத்தின் அங்கம். அறிவுப் படிப்புப் படிச்சு, கற்பிக்கத் தெரிஞ்சவங்க. உங்க அறிவு, திறமை, எல்லாம் இப்படி முட்டாள்தன மடிக்கூட்டில் பலியாகணுமா? மனுஷருக்கு மனுஷர் வேற்றுமை காட்டும் இது நிச்சயமா தருமமும் இல்லை, மண்ணும் இல்லை. தன்னையே எப்போதும் உயர்த்திப் பிடிச்சுகிட்டு மத்தவங்களைக் காலில் தேய்க்கும் கருவம் இது. ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணே விரோதியாகும் முட்டாள்தனம்!” “நீ இப்படி இரண்டு நாள் வந்து எதையானும் சொல்லி விட்டுப் போ, நாளைக்கு உன் சிற்றப்பா வந்தால், அவருக்கு அவம்மாவை எதிரிடுவதே பிடிக்காது!” “அவர் வரட்டும். அப்ப நான் சொல்றேன். நீங்க வாங்க. அபு உங்ககிட்ட பேசனும்னிருக்கார். அவர் பிராஜக்ட் என்ன தெரியுமா? உங்களைப் போல் படிச்சிட்டு, அந்த அறிவு எதுக்கும் பயனாகாம சமூகத்திலே முடங்கிப்போற சக்திகளைப் பத்தி ஸ்டடி பண்றது. நமக்கு இப்ப தேவையான ஆராய்ச்சி...” கிரிக்கு மலை உச்சியின் விளம்புக்குப் போவது போல் தானிருக்கிறது. சற்றைக்கெல்லாம் காபியை எடுத்துக் கொண்டு போகிறாள். அபு எழுந்து ஒரு பணிவுடன் காபிக் கிண்ணத்தை எடுத்துக் கொள்கிறான். “உக்காருங்க ஆன்டி!” ரத்னா கையைப் பற்றி சோபாவில் உட்காரச் செய்கிறாள். மேலே படிக விளக்கு வெளியேயிருந்து திரையினூடே வரும் மாலை நேர ஒளியில் மின்னுகிறது. அறையின் நேர்த்தியான இளம் நீலமும் பச்சையும் தெரியும் பூங்கோலம் ஒட்டிய சுவர்களும், பதித்த அலமாரியின் கண்ணாடியினூடே தெரியும் கலைப்பொருள்களும், இவளுக்கே அந்நியமாகத் தெரிகின்றன. சுவரில் தொங்கிய ஒரு ‘பதிக்’ ஓவியத்தை அவன் சுட்டுகிறான். “இது... எங்க வாங்கினீங்க?” “நாங்க வாங்கல. ஒரு ஃபாரின் சிநேகிதர் ‘பிரசண்ட்’ பண்ணினதா நினைப்பு.” “...இது பாலி ஆர்ட்னு நினைக்கிறேன்...” “ஓ...! நான் இதெல்லாம் கவனிக்கிறதே இல்ல...” “அட்லீஸ்ட், இது இராமாயணக் காட்சின்னாலும் தெரிகிறதில்ல?” “அதுதான் அநுமார் முகம் பளிச்சினு இருக்கே?” என்று ரத்னா சிரிக்கிறாள். “அது அநுமார்தானா...?” கிரி உற்றுப் பார்க்கிறாள். என்ன மடத்தனம்? அப்படிக் கூட இவள் கவனித்துப் பார்த்திருக்கவில்லை. அநுமாரில்லை என்றால்...? “உங்களுக்குப் புரியல? இது சுக்ரீவன், இராமர், லட்சுமணர்... பின்னே மரங்கள் சுக்ரீவனிடம் ராமர் தன் வில் திறமையைக் காட்டும் இடமாக இருக்கலாம்.” கிரிஜா உற்றுப் பார்க்கிறாள், மீண்டும். இராமன் அம்பை எடுத்துப் பூட்டச் சித்தமாக இருக்கும் ‘பாவம்’ தெரிகிறது. மரங்கள் ஏழைத் துளைத்துக் காட்டும் இடமோ? “நான் இத்தனை நாள் - அதாவது அது வந்து இரண்டு வருஷத்துக்கு மேல் இருக்கும். இப்போதுதான் நீங்கள் சொன்ன பிறகு உற்றுப் பார்க்கிறேன்...” அவளுக்கு நாணமாக இருக்கிறது. “உங்களுக்குப் பார்க்க வேண்டும்னு தோன்றக் கூட இல்லையா?” “ஹம்... ஒரு காலத்தில் ‘பதிக்’ கிளாசுக்குப் போய் கத்துக்கக் கூடக் கத்துக்கிட்டேன்... ஆனால்... அதெல்லாம் போன ஜன்மமாயிட்டது...” மீண்டும் வெளிறிய புன்னகை. “நீங்க... ஏழெட்டு வருஷம் டீச் பண்ணிட்டிருந்ததா ரத்னா சொன்னாள். கல்யாணத்துக்குப் பிறகு வேலை வேண்டாம்னு விட்டுட்டீங்களா?” “கல்யாணத்துக்கு முன்பே அப்படிக் கண்டிஷனா?” “...அ... அதெல்லாம் அப்படி ஒண்ணும் இல்லை.” “பின்ன நீங்களா விட்டுட்டீங்களா?” கிரிக்கு ஏதோ பேட்டிக்கு முன் சங்கடப்படுவது போல் இருக்கிறது! அந்தக் காலத்தில், எட்டு வருஷம் அவள் வேலை செய்த காலத்துச் சாதனையை யார் எண்ணினார்கள்? அவள் செங்கற்பட்டுக்கு அருகே ஒரு கிராமத்தில் வேலை ஏற்றுச் சென்றதும், எந்த வசதியுமில்லாமல், பள்ளிக்கூடத்துக்கு நல்ல பெயர் வாங்கியதையும் அங்கே இருந்தே எம்.ஏ. ஆங்கில இலக்கியம் எழுதித் தேர்ந்ததையும் யார் பாராட்டினார்கள்? “என்னம்மா, எங்கோ கிராமப் பொந்தில் போய் இவள் வேலை செய்வது? இங்கே பட்டணமாக இருந்தாலானும் சட்டுனு வரன் இருந்தால் அவளைப் பார்க்க வசதியாக இருக்கும்...” என்று தான் அண்ணன் குதித்தான். அக்காவோ, “இவளை யார் எம்.ஏ. எடுக்கச் சொன்னது? போஸ்ட் கிராஜுவேட் பண்ணினவனைன்னா இனிமேல் பார்க்கணும்” என்றாளாம்! “வயசு முப்பதாகிறதே! தாலி கழுத்தில் விழலியே” என்று அம்மா மாய்ந்து போனாள். “துர்க்கைக்கு ராகுகால அர்ச்சனை பண்றேன். ஆடி மாசம் வெள்ளிக்கிழமையில், நீ வந்து ஒரு வெள்ளியிலானும் எலுமிச்சம் பழ விளக்கேற்றி வை. சுவாமிகளே சொல்லியிருக்கார், வர தைக்குள் கல்யாணம் ஆகும்னு’ என்று கடிதத்துக்கு மேல் கடிதம் அனுப்பினாள். அந்தச் சூழலில், அந்தப் பராமரிப்பில், அந்த நம்பிக்கைப் போஷாக்கில், இவளுக்கு அறிவுப்பூர்வமான சிந்தனை எப்படி உதிக்கும்? தலைமை ஆசிரியர், வயது முதிர்ந்தவர். விடுப்புக்கும் தடையில்லை. ஒரு வெள்ளிக்கிழமை, எலுமிச்சம்பழ மூடியைத் திருப்பி நெய்யூற்றி, சந்நிதியில் விளக்கேற்றி வைத்தாள். தனக்கு வரப்போகும் கணவன், முரடனாக, குடிகாரனாக, குரூபியாக இருக்கலாகாது என்று மட்டும்தான் அவளால் எண்ண முடிந்தது. சம்பாதித்த பணத்தைத் தன் பெயருக்கு வங்கியில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட நினைக்கத் துணிந்திராத அவள், அந்த அரண்களை மீறி எப்படிச் சிந்தித்திருக்க முடியும்? “பையன் ஸி.ஏ. பண்ணிட்டு அமெரிக்காவில் போய் மானேஜ்மென்ட் டிகிரி வாங்கியிருக்கிறான். இரண்டு பிள்ளை, ஒரு பெண். பெரியவன் கனடாவில் இருக்கிறான். இவன் இரண்டாவது. பெண்ணுக்குக் கல்யாணமாகி, குழந்தைகள் இருக்கின்றன. ஒரே மாமியார், பிக்குப் பிடுங்கல் இல்லை. கையில் காலில் என்று கேட்கவில்லை, ‘போடுவதைப் போட்டு ஸிம்பிள் மாரியேஜ் பண்ணுங்கள் போதும்’ என்று அந்தம்மா சொல்லிட்டா...” என்று வாயெல்லாம் பல்லாக அம்மா மகிழ்ந்து போனாள். கல்யாணத்துக்கு முதல் நாளே, மாமியார் இவளை அழைத்து வரச் சொல்லி, தன்னுடைய ஒன்றேகால் காரட் தோட்டையும், இரட்டை மூக்குக்குமான பேசரி, முத்து மூக்குத்திகளையும் போட்டுக் கொள்ளச் சொல்லிக் கொடுத்தாள். அப்போது இவள் ஒற்றை மூக்குதான் குத்தியிருந்தாள். “எடுப்பான மூக்கு, இன்னொரு மூக்கைக் குத்திண்டு, முத்து மூக்குத்தியையும் போட்டுக் கொள்” என்று சட்டமிட்டாள். இந்த வயிரங்கள், பிறந்த வீட்டுச் சுற்றத்தை வியப்பால் வாய் பிளக்கச் செய்துவிட்டன. “கிரிஜா மாமியாரைப் போல் கிடைக்கணுமே? மாட்டுப் பெண்ணை கண்ணை இமைகாப்பது போலக் காப்பாள்! வரதுக்கு முந்தி எந்த மாமியார் வைரத் தோட்டையும் மூக்குத்திகளையும் தூக்கிக் குடுப்பா? தோடு மட்டுமே இருபதுக்குக் குறையாது...” என்று சொல்லிச் சொல்லி, எந்தக் குறையுமே கிடையாது என்று தீர்த்துவிட்டார்கள். “அவனுக்கு அஞ்சாயிரம் சம்பளமாம் வேலையை விடணுமான்னு கேப்பாளா?” என்று அதையும் இயல்பாகத் தீர்த்துவிட்டார்கள். கல்யாணம் ஆன புதிதில் சில ஆண்டுகள் பம்பாயில் இருந்தார்கள். பிறகு சென்னையில் பரத் பிறக்கும் வரையில் வாசம். அடுத்து டெல்லிக்கு வந்து விட்டார்கள். மாமியார் காலம் காலமாகப் பழகிய ஊர் - நட்பு. “என்ன, நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லலியே? வேலைய நீங்களாத்தான் விட்டீங்களா?” “அப்படி ஒரு கேள்விக்கே இடமில்ல. கல்யாணமாகல - வேலை. கல்யாணமான பிறகு பொருளாதாரத் தேவையுமில்லை. இவர் பம்பாயில் இருந்தார். அதைப்பத்தி எண்ணவே சந்தர்ப்பம் இல்ல...” “ரொம்பச் சரி, பம்பாய் ஒரு காரணம். ஆனா, உங்களுக்கே இப்படி பி.ஜி. எல்லாம் பண்ண ஆர்வமா இருந்ததெல்லாம் ‘இன்வால்மெண்ட்டே’ இல்லாம செய்ததுன்னு இப்ப ஒத்துக்க முடியுமா?” “ஓ... அதெப்படிங்க சொல்லுவது? அப்ப, ரொம்ப ‘என்தூஸியஸ்டிக்’கா, டீச்சிங் மெதட்ல, ஒவ்வொரு லெவல்லயும் சோதனையே பண்ணியிருக்கிறேன். அங்க ரொம்பக் குழந்தைகள் பின் தங்கிய வகுப்பு. நல்ல ‘ரிஸல்ட்’ கொண்டு வந்திருக்கிறேன். ஒரு குழந்தை பாருங்க, தாய் ஒரு திருடி, தகப்பன் ஒரு குடிகாரன். அவளுக்குப் பெற்றோராலேயே ‘ப்ராப்ளம்’. அம்மாவே பெண்ணைத் திருடச் சொல்லுவா. கௌரவமா இருக்க இந்தப் பள்ளிக்கூட யூனிஃபார்ம்! போலீசில புடிச்சிட்டுப் போய் இந்தப் பள்ளிக்கூடத்துப் பொண்ணுன்னு சொன்னதும், ஸ்கூலுக்கே கேவலம்னு அவளுக்கு டி.ஸி. கொடுக்க ஹெட்மாஸ்டர் பிடிவாதமா இருந்தார். அவளை நான் தனியாக வச்சிக்கிட்டு, பிரச்னையை அவ அம்மாவையே கூப்பிட்டுப் பேசினேன். இரண்டு வருஷம் அவளுக்குச் சொல்லிக் குடுத்தேன். டென்த் பாஸ் பண்ணிட்டுப் போனா.” “வொன்டர்ஃபுல் ஆன்டி! நீங்க, இப்ப வெறும் அடுப்புப் பூச்சியாயிட்டீங்களே!” தூண்டிக் கொடுத்ததும் பொலபொலவென்று ஆற்றாமை சரிகிறது. “இப்ப... நானா... நானான்னு ஆயிட்டது. என் குழந்தைகளுக்குக் கூடச் சொல்லிக் கொடுக்க முடியாத நிலை. கவிதா, இங்கிலீஷ்ல நாற்பது மார்க் வாங்கியிருக்கு. கோச்சிங் கிளாசுக்குப் போறா. நினைச்சால் கஷ்டம் தான்...” “இது அப்பட்டமான உரிமைப் பறிப்புன்னு தோணலியா உங்களுக்கு?” “தோணினால் என்ன செய்யலாம்? இட் இஸ் டூ லேட்...” “பெட்டர் லேட் தென் நெவர்...” என்று ரத்னா அவள் கையைப் பற்றுகிறாள். “இப்ப என்ன பண்ணலாம்? இந்த வீட்டுப் பொறுப்பை யார் ஏற்பார்கள்?” “உங்களைப் போல் இருக்கிறவர்கள், சொந்தக் குழந்தைகளுக்கும் அந்நியமாகும் நிலைமையில் இருப்பது பரிதாபம் தான். உங்க வீட்டில் மாட்டியிருக்கும் படம் பற்றித் தெரியவில்லை. ஒரு சமூக விஷயம் பற்றித் தெரியாது. வாழ்க்கையின் ஒரு பொது ஓட்டத்திலிருந்து ஒதுங்கிய ஒரு அன்றாட நியமத்தில் நீங்கள் உங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறீர்கள். இது முழுதும் தேவைதானா, என்பதை நீங்கள் ஏன் நினைத்தும் பார்க்கவில்லை? பெரிய பெண்சக்தி இப்படி வீட்டுக்குள் முடங்கி வீணாகப் போவதைப் பற்றிச் சிந்தியுங்கள். இந்தச் சமுதாயத்தின் குறைபாடுகள், துன்பங்கள், இதெல்லாவற்றிலும் நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று ஏன் எப்போதுமே நீங்கள் உணரவில்லை?” அவன் சற்றே ஆறுதலாகக் காபியை எடுத்துப் பருகுகிறான். “ரத்னா சொன்னது போல் மிகவும் நன்றாக இருக்கிறது...” புன்னகை செய்கிறான். “... என்னை மன்னித்து விடுங்கள்... குழப்பி விட்டு விட்டேனா?” “ஓ... நோ. இல்லை. இந்த அதிருப்தி என்னுள் ஆழப் புதைந்து தான் இருக்கிறது. ஆனால்... ஆனால்... பொருளாதாரத் தேவை இருந்தால் தான் பெண் வேலைக்குப் போகலாம் என்ற நினைப்புதான் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்களிடையே இருக்கிறது. அது ஒரு உரிமை என்றோ, இல்லையேல், அறிவு பூர்வமான மலர்ச்சியும், ஆளுமையும் அவசியம் என்றோ யாரும் நினைப்பதில்லை. சின்னச் சின்ன வட்டத்துக்குள்ளேயே செக்கு மாடாய் முடிந்து போக வேண்டி இருக்கிறது...” “ஆல் ரைட்... நான் ஒரு... சின்ன ‘கொஸ்சினரை’க் கொடுக்கிறேன். அதைக் கொஞ்சம் படித்து, உங்களுக்கு ஆறுதலான நேரத்தில் பதில் எழுதிக் கொடுப்பீர்களா? இது வெறும் சாடிங்கல்ல. எதானும் உருப்படியாக ‘மோடிவேட்’ பண்ணனும்னு தான் ஆசை...” தம் கைப்பையிலிருந்து நீண்ட டைப் செய்யப்பட்ட காகிதம் ஒன்றை எடுத்து அவளிடம் கொடுக்கிறான். மேலெழுந்த வாரியாகப் பிரித்துப் பார்க்கிறாள். பெயர், வயசு, படிப்பு தகுதிகள்... பிறந்த இடம், வகுப்பு... குடும்ப நிலை பற்றிய கணிப்பு, கூட்டுக் குடும்பமா - தனிக் குடும்பமா - அது பற்றிய கருத்துக்கள், இவள் திருமணத்தில் வரதட்சணை உண்டா, சுயச் சார்பு விவரம், இவள் கருத்து, கற்பு நிலை பற்றிய கருத்து, பெண்ணின் பொதுவாழ்வைப் பாதிக்கிறது என்பதில் அனுபவம், குடும்பத்தில் ஆணும் பெண்ணும் சம உரிமை பெறுவது என்பது செயல் ரீதியாகச் சாத்தியமா - ஆணின் இயக்கம் குடும்பத்தில் எந்த விதமாக இருந்தால் சம உரிமை பெறலாம் என்று கருதுகிறாள். இப்படி, பலபல வினாக்கள். அபு விடை பெற்றுக் கொண்டு போகிறான். ரத்னா அவனுடன் தெரு முனை வரையிலும் செல்கிறாள். கிரி அந்தத் தாளைப் பத்திரமாகச் சுவாமி அலமாரியின் பக்கம் பெட்டிக்கடியில் வைத்துவிட்டு, குளியலறைக்குள் செல்கிறாள். ரத்னா உள்ளே நுழைகையில், கிரி, ஈரச்சேலையைப் பிழிந்து உலர்த்துகிறாள். “கேட்டது இராமாயணம். இடிப்பது பெருமாள் கோயிலா? என்ன அக்கிரமம் இது. கிரி ஆன்டி?” அவளைப் பார்க்காமலே கிரி பதிலளிக்கிறாள். “ரத்னா கூட்டை உடைச்சிட்டா, பிறகு அதில் இருப்பதில் அர்த்தமில்லை. அதனால், உடனே செயலாக்க முடியாது... எதையும்...” ஆம். கிரி ஒரு முடிவுக்கு வருவதென்பது எளிதல்ல. வந்தால், பின் வாங்கல், விட்டுக் கொடுத்தல் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது... |