என்னுரை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட நாவல் இது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தினகரன்’ நாளிதழில் தொடர்கதையாக வெளியானது. தினகரன் ஆசிரியர் திரு கே.பி. கந்தசாமி அவர்களுக்கும், என்னிடம் இந்த தொடருக்கு ஏற்பட்ட தாக்கங்களை அவ்வப்போது தெரிவித்த நண்பர் சின்னராசுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இப்படிப்பட்ட இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகளில், வீடியோ - சமூகத்தில் நல்லதும் கெட்டதுமான பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது, இன்றையக் கிராமங்களில் எப்படி நிகழ்கிறது என்பதை விளக்கும் படைப்புதான் ‘என்னுரை - சாமியாடிகள்’ என்ற இந்த புதினம் என்றாலும் இதில் வீடியோ - ஆடியோ தாக்கம் இலைமறைவு காய்மறைவாகக் காட்டப்பட்டு, இதன் விளைவுகளால் ஏற்பட்ட கதையம்சமே இந்தப் புதினத்தில் மேலோங்கி நிற்கிறது. பிரபல விமர்சகரும் பொதுவுடைமைச் சிந்தனையாளருமான தொ.மு.சி. அவர்கள், இந்த நாவல் வீடியோ ஆடியோவான விஞ்ஞானத் தாக்கத்தின் நல்ல அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார். இது ஒரளவு உண்மையே. எடுத்த எடுப்பில் கிராமங்களைத் திணறடித்த இந்தத் தாக்கத்தை சித்தரிப்பதில் இதன் நல்ல அம்சங்கள் நழுவிப் போயின. என்றாலும், எந்தப் பதிப்பிலும் எழுதியது எழுதியபடி இருக்கவேண்டும் என்பதால் இந்த நாவலை அவர் குறிப்பிட்டதுபோல் மாற்றி அமைக்கவில்லை. இன்றையக் கிராமங்களில், அம்மன் கொடைகள் என்பவை கிராம தேவதைகளுக்குக் காட்டப்படும் சலுகைகளாக மாறிவிட்டன. இவற்றில் பயபக்தி என்பது கடந்த காலமாகி விட்டது. இந்த திருவிழாக்களில் ‘டெக்கில்’ படம் போடுவதே பிரதானமாகி விட்டது. என்னுரை - சாமியாடிகள் குறிப்பிட்ட நேரத்தில் ஏதோ ஒப்புக்கு ஆடி அடங்கவேண்டும். இவர்களை சீரியஸாக எடுத்துக் கொண்ட காலம் மலையேறி விட்டது. இவர்களும் அதை உணர்ந்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் சாமியாட்டத்தை முடித்து விடுகிறார்கள். கிராம தேவதைகள், கிராம மக்கள் அனைவருக்கும் பொதுமையானது என்பதுபோய் ஒவ்வொரு பங்காளிக் கூட்டமும், தத்தம் கிராம தேவதைகளை தங்களது சுயமரியாதையோடு இணைத்துக் கொள்கிறது. இதனால் பங்காளிக் கூட்டங்களுக்கு இடையே, மோதல்களும் கெளரவப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இது, வீடியோ ஆடியோ கலாச்சாரம் தொடுத்த முதல் தாக்குதல்.
இரண்டாவதாக, கிராமிய பேச்சு வழக்கை தொலைக்காட்சித் தமிழ் வழக்கு துரத்திக் கொண்டிருக்கிறது. அண்ணாச்சி என்ற மண்வாசனை வார்த்தை ‘அண்ணே’வாகி விட்டது. ‘மயினி’ என்பது ‘அண்ணி’ ஆகிவிட்டது. ‘வளத்தம்மா’, ‘அய்யாமை’ என்ற பொருள் பொதிந்த உறவாடல் வார்த்தைகள் ‘பாட்டி’ என்று நேரிலும், ‘பெரிசு’ என்று மறைமுகமாகவும் பேச்சு வழக்காகி விட்டது. தொலைக்காட்சி திரைப்படங்களும் வீடியோவில் காட்டப்படும் திரைப்படங்களும் அன்றாடப் பொழுதுபோக்காகி விட்டது. ஆக மொத்தத்தில் கிராமத்து இளைஞர்களுக்கு வாழ்க்கைக்கும், வீடியோ திரைப்படங்களுக்கும் இடையே வேற்றுமை காணமுடியாமல் போய்விட்டது.
இந்த நாவலின் நாயகியான கோலவடிவை, கிராமத்தை விட்டு வெளியேறச் செய்து, சுயநலமிகளிடம் சிக்கி வேறு வழியில்லாமல் விலைமகளாக ஆக்கவேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தேன். ஆனால், மனம் கேட்கவில்லை. ஒரு எழுத்தாளன், துவக்கத்தில் பாத்திரங்களைப் படைப்பான். குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் அந்தப் பாத்திரங்களே, ‘இப்படி இப்படி எங்களை படைப்பாயாக...’ என்று எழுத்தாளனுக்கு ஆணையிடும் என்று மகத்தான விமர்சகரான காலஞ்சென்ற பொதுவுடைமைத் தத்துவ சிந்தனையாளர் தோழர் ஆர்.கே. கண்ணன் அவர்கள் என்னிடம் அடிக்கடி கூறுவார். அப்படி அவர் குறிப்பிட்டது, இந்த நாவலில் என்னை அறியாமலேயே, என் விருப்பத்திற்கு எதிராகவே நிறைவேறி விட்டது உண்மைதான். இந்த நாவலில் கோலவடிவே, ‘என் முடிவை இப்படித்தான் விளக்கியாக வேண்டும்’ என்று எனக்கு ஆணையிட்டு விட்டாள். அந்த ஆணையை என்னால் மீற முடியவில்லை. இது, ஒரு படைப்பியல் விசித்திரம். படைப்பாளி நினைத்தும் அவன் நினைத்ததுபோல் எழுத முடியாது என்பதற்கு நானே ஒரு உதாரணமாகி விட்டேன். கிராமத்தில் நிகழும் வீடியோ ஆடியோ கலாச்சாரத்தையும், சொல்வடைகளின் மாற்றத்தையும் முதன்முதலாக வாசகர் கவனத்திற்கு கொண்டு வந்த முதலாவது நாவல் இது என்று குறிப்பிடலாம். பீடம் தெரியாமல் சாமி ஆடுகிறான்' என்பது அன்றைய கிராமத்துப் பழமொழி. அதாவது ஒருத்தர், தனது செயலைப் பற்றியோ அதன் பின் விளைவுகளைப் பற்றியோ புரியாத பேதை என்கிற பொருளில் இந்தப் பழமொழி வந்திருக்கவேண்டும். இது முன்பு பொருந்தியதோ இல்லையோ, இப்போது பொருந்துகிறது. இந்த நாவலின் தலைப்பிற்கேற்ப நவீன கலாச்சார ஊடுறுவலால் கோவில்களில் மட்டும் இப்போது சாமியாட்டம் நடைபெறவில்லை. கிராமமே சாமி ஆடுகிறது. ஆமை புகுந்த வீடு போலான தொலைக்காட்சி வரவழைப்பு எங்கே கொண்டு போகும் என்பது புரியாமலே எல்லோருமே பீடம் தெரியாமல் சாமி ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். வேப்பிலை அடிக்கத்தான் ஆளில்லை. இந்த நாவலில், சாதிச் சண்டைகள் சித்தரிக்கப்படவில்லை. ஆனாலும், இதில் வரும் பங்காளிக் கூட்டங்களின் மோதல்களும் இவற்றைப் போன்றதே. ஆக, கலவரத்திற்கு சாதி மட்டுமே காரணமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை. இந்த நாவல் சொல்லாமல் சொல்கிறது.
சு.சமுத்திரம் |