19 கோலவடிவு, சுவரில் போட்ட கரங்களை எடுத்துவிட்டு, அப்படியே கீழே சரிந்தாள். சரிந்தவள் கோபமாக எழுந்தாள். என்னப்பத்தி, என்னைக் கேட்காமலே எப்படி முடிவெடுக்கலாம் என்று அங்கே போய் கேட்கலாம் போல் எட்டிப் பார்த்தாள். என்னைக் கேளாமலே எப்படிப் பெத்தாளோ, அதுபோல கேளாமலே காவு கொடுக்காவ. எல்லாரும் ஊமையாயிட்டாவளே. அம்மாகூட பேசலியே. சித்தப்பா சந்திராவுக்கு இப்படி ஒரு மாப்பிள்ள பாப்பாரா? நான் தொக்கா, மாடா, ஆடா...? மனுஷி... வோட்டுப் போட்ட பொண்ணு. கோலவடிவின் கைகால்கள் ஆடின. தலையே பராமானது. கண்களே எரிச்சலாயின. அக்னிராசா அவளை, அங்கம் அங்கமாக, அங்குலம் அங்குலமாக எரித்தான். காளியம்மனுக்கு ஆடு. கடலைக்குக் கோழி. இந்த ரெண்டு பேருக்குமா சேத்து நான். நானே. அப்பா வழக்காளி அப்பா. தகராறு சங்கதில மட்டும் ரெண்டு தரப்பையும் விசாரிக்கணுமுன்னு எப்படிப் பேசுறியளோ அப்படி சுபகாரியத்திலயும் விசாரிக்கணும். இல்லாட்டா ஒரு சுகம் இன்னொரு சோகத்தோட சேரும். இதனால சொகந்தான் சோகமாகுமே தவிர சோகம் சுகமாயிடாது. ஒங்க கிட்டே எப்படிச் சொல்ல. யார் மூலம் சொல்ல. அண்ணனுக்கு கடை வைக்கது முக்கியம். அம்மாவுக்கு நீங்க முக்கியம். நான்தான் - இந்தப் பாவிப்பொண்ணுதான் யாருக்கும் முக்கியமில்லாமப் போயிட்டேன். போயிட்டேனே... “எம்மா... அம்மன் கோவிலுக்கு போயிட்டு வாறேம்மா.” பாக்கியத்துக்கு சந்தோஷம். மகளுக்கு அக்னி ராசாவ பிடிக்காதோ? என்ற சந்தேகம் இப்போது அம்மாக்காரிக்கு, அணுவளவும்கூட இல்லை. பிடிச்சுட்டு. இல்லாட்டா கோவிலுக்குப் போகமாட்டாள். அம்மனுக்கு நன்றி சொல்லப் போறாள். அவளுக்கு பிடிச்சா எனக்கு பிடிச்ச மாதிரிதான். ஆனாலும் ஏதோ... கோலவடிவு, அடிமேலடியாய் நடந்தும், அடியற்று நடந்தும், அடியோடு நடந்தும் குலதெய்வமான காளியம்மன் கோவிலுக்கு வந்தாள். அவள் எந்த நேரம் வந்தாளோ, அந்த நேரம் பார்த்து கோவிலில் திரை விழுந்தது. அம்மனுக்கு கண் திறக்கப் போறாங்களாம். அம்மனின் இரண்டு கண்களிலும் மஞ்சளைப் பூசுவார்கள். பிறகு சந்தனத்தை அப்புவார்கள். அப்புறம் கோலவிழியில் வர்ணம் போடுவார்கள். உள்ளே கறுப்பு வட்டம் போடுவார்கள். ஒரு மையைக் கொட்டுவார்கள். இதுமேல் தான் கண்திறப்பு. அம்மா கண்திறக்க, ஒரு மணி நேரமாவது ஆகும். அதுக்குள்ள என் கண்ணே மூடிடும். மூடிடும்... கோலவடிவு, கோயில்முன்பு போடப்பட்ட குவிந்த பந்தலைப் பார்த்தாள். மேல்தளத்தில் போடப்பட்ட பட்டாடைகளை நோக்கினாள். விதவிதமான ஜிகினா காகிதங்களைக் கண்ணுற்றாள். சப்பரம் பல்வேறு தெய்வப் பொம்மைகளால் அலங்காரமாக நின்றது. வில்லுப்பாட்டாளிகள் உட்காரப் போகும் பெஞ்சு மேட்டைப் பார்த்தாள். அம்மனுக்காக எல்லாம் இருக்கு. ஆனால் அம்மன்தான் இல்லை. எனக்கு வழக்காளி அப்பா இருப்பதுபோல், எனக்காக அரிவாளை எடுத்த அண்ணன் இருப்பதுபோல், அம்மனுக்கு சப்பரம் இருக்கு. பந்தல் இருக்கு. ஆனால் அம்மன் இல்ல. எனக்கு நானே இல்லாமப் போனது மாதிரி. அம்மா, காளியம்மா. இது அடுக்குமாடி? உனக்கு மட்டும் சர்வ வல்லைமையுள்ள ஈஸ்வரன், எனக்கு மட்டும் ஒரு இடிச்சபுளி. என்னதாயி நியாயம். கோலவடிவு, அம்மனுக்குப் புறமுதுகு காட்டியபோது, அலங்காரி அத்தை எதிர்ப்பட்டாள். இவளைப் பார்த்து அவள், காலில் குத்திய முள்ளை எடுப்பது போல, ஒத்தக் காலில் நின்றாள். கோலம் அங்கே ஓடிப் போனாள். அத்தையிடம் பேசினால் அழுகை வரும். அதோ அந்த வெடி வண்டி சத்தம் போல... அப்பாவுக்கு கேட்கும்படியாய் சத்தம் வரும்.
கோலவடிவு, அத்தையின் முன்னால், கோலிபோல் சுருட்டப்பட்ட அந்த காகிதத்தை எறிந்துவிட்டுத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்தாள். அத்தையோடு இணைந்து நடக்க முடியவில்லை. ஊர் இருக்கும் இருப்பில், அது முடியாத காரியம். ஆனாலும், அலங்காரி அத்தை பின்னால் நடந்தபடியே முன்னால் போனவளுக்கு அபயமளித்தாள்.
“அடக் கடவுளே! என்னதான் ஆனாலும், என் நிலைமை உனக்கு வர விடமாட்டேன். கருக்கலுல பருத்திக் காட்டுப் பக்கமா வா. அக்கினி ராசா ஒனக்கு மாப்பிள்ளையா வரமாட்டான். கலங்காமப் போ.., என் ராசாத்தி. நான் எதுக்கு இருக்கேண்டி...?” |