உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
21 பொதுவாக, சமய சந்தர்ப்பங்கள் சம்பந்தப்பட்டவர்களைக் காலால் இடறுவதுதான் பெரும்பாலான வழக்கம். ஆனால் அலங்காரிக்கோ, அது இப்போது கை கொடுத்தது. கோலவடிவைக் கடத்திக் கொண்டு போக வேண்டும் என்பதை எப்படித் துளசிங்கத்திடம் எடுத்துரைப்பது என்று அவள் யோசித்தபோது அவர்களுக்குப் பின்னால் நடந்த அக்னிராசாவின் சித்தப்பா பற்குணமும், கரும்பட்டையான் ராமசுப்பும் அவர்களுக்கு முன்னால் நடந்து ஒரு ஓரமாக நின்றார்கள். பற்குணம், ராமசுப்புவுக்குச் சொல்வது போல், துளசிங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். “நீ ஏண்டா கவலைப்படுறே. ஊரையே அடிக்கப்போறது மாதிரி. மெட்ராஸ்ல இருந்து அம்போக்குப் பயலுவள இறக்கிட்டான்னு யோசிக்காதடா. ஒவ்வொரு பய செம்பலும்பையும் இறக்கிக் காட்டுறேன். ஊரைப் பகைக்கின் வேரோடு கெடும் என்கிறது பழமொழி. பாத்துப்புடலாம். குஸ்திப் பயலுவளாம். குஸ்திப் பயலுவ. செறுக்கி மவணுவ என் ஒத்தக் கைக்கு பொருவானுவளா? ஒரே வெட்டுத்தான், மேளச்சத்தம் மட்டும் கேக்கட்டும். அதுவரைக்கும் பொறுத்துக்க...” துளசிங்கம் ஏதாவது பதில் சொன்னால், அங்கேயே அவனை இரண்டில் ஒன்றைப் பார்க்கப் போவதுபோல், அந்த இருவரும் அவனையே பார்த்தபடி மெள்ள நடந்தார்கள். துளசிங்கம் வேறுபக்கம் முகத்தைத் திருப்பியதால், அதுவே ஆரம்ப வெற்றி என்று அனுமானித்து, ஒரு கிளை வழியில் நடந்து பனங் காட்டிற்குள் மறைந்து போனார்கள். அலங்காரி குத்திக் காட்டினாள். “பாத்தியாய்யா... அவங்க பேசுறத. நம்ம செம்பட்டையான் ஆளுவ போதாதாக்கும். நீ எதுக்காவ அப்பு மெட்ராஸ்ல இருந்து சின்னப் பயலுவள இறக்குமதி செய்யணும்?” “அய்யோ சித்தி. நான் சுடலைமாடன் விசேஷத்த வீடியோ படம் எடுக்கதுக்காவ கொண்டு வந்திருக்கேன். கோயில் கொடைக்காவ போட்ட பணம் மாதிரி பத்து மடங்கு சம்பாதிக்கப் போறேன். எங்கப்பன். இது தெரியாம முனங்குறாரு இவனுவ வேற புதுக்கதை கட்டி விடுறானுவ.” “அப்போ காத்துக் கருப்பன் அடிச்சா... இவங்க கையை கட்டிக்கிட்டு நிப்பாங்களா...” “அதெப்படி. நம்ம கோயிலுக்குள்ளேயே வந்து எவனும் வாலாட்டுனா. பின்னிப்பிடுவாங்க பின்னி. வேல தெரிஞ்சவங்க. ஒரே டிக்கட்டுல வீடியோ படத்துக்கு வீடியோ படம். அடிக்கு அடி.” “இந்த பற்குணம் வெறும் வாய்ச்சவடால்காரன்தான். ஆனால் மெட்ராஸ்ல இருந்து ஊர்காரன அடிக்கதுக்கு ஆள் வந்திருக்குன்னு சட்டாம்டட்டி முழுதும் தண்டோரா போடப் போறான். இந்தத் தகராறுல கலந்துக்காத காரை வீட்டுக்காரங்களும், நமக்கு எதிரா திரளப் போறாங்க. நம்ம கோயில இழுத்து மூடப் போறாங்க.” “நான் மெட்ராஸ்காரங்கள அனுப்பி வைக்கவும் முடியாது. ஊர்க்காரன் கிட்ட சொல்லவும் முடியாது. ஏன்னா இந்தச் சமயத்துல எவனும் எவன் பேச்சையும் கேட்க மாட்டான். ஒரே குழப்பமாய் இருக்கு சித்தி. ஊர்க்காரனுவ ஒண்ணா திரண்டா நம்ம பயலுவளே ஒட்டம் பிடிப்பானுவ. என்ன செய்யலாம். ஒரு வழியும் தெரியலே.” “ஒனக்கு சுடலைமாட சாமி கொடையும் நடக்கணும், கரும்பட்டையானும் தல குனியணும், ஊர்க்காரனும் பேசப்படாது. இந்த மூணும் ஒரே சமயத்துல நடக்கணுமுன்னா நடக்கும். நடத்திக் காட்டுறதுக்கு நானாச்சு.” “எப்டி சித்தி? எப்டி?” “ஆனால் சித்தி சொல்லுறதை மட்டும் நீ கேக்கணும்.” “நீ எது சொன்னாலும் கேக்கேன் சித்தி...” “அதோ சோளத் தட்டைக்குள்ள மறஞ்சுட்டாளே, கோலவடிவ, அவள. நீ கூட்டிட்டு ஓடணும்...” நடந்து கொண்டிருந்த துளசிங்கம் அப்படியே நின்றான். அதைக் கவனிக்காது நடந்த அலங்காரி சித்தியின் கையைப் பிடித்து, அவளையும் நிறுத்தினான். அவளையே சிறிது நேரம் ஆச்சரியமாய் பார்த்துவிட்டு சந்தேகம் கேட்டான். “உனக்குப் பைத்தியமா சித்தி? குத்துலயும் கொலையுலயும் விடப் போற விவகாரத்தை எப்படி சிரிச்சுக்கிட்டே பேசுறே?” “ஒன்ன அந்த மாதிரி சந்தர்ப்பத்துக்கு சித்தி விடுவனா...?” “விடப் போறியே. அப்பவே நீ இப்படிச் செய்யச் சொல்வேன்னு ஒரு சந்தேகம். ஆனால் இதுக்குமேல என்னால முடியாது சித்தி. சுடலை குடைதான் முக்கியம்...” “சுடலைக்கு கொடை மட்டும் ஒன்னால நடத்த முடியுமோ...? ஊர்க்காரன் தான் விடுவானா...? அப்போ மட்டும் குத்து வெட்டு கொலை நடக்காதோ...?” “சண்டையில சாகிறது வேற... சாகிறதுக்காவ சாகிறது வேற...” “ஒன்னைவிட சித்தி பத்து பதினஞ்சு வயது பெரியவள். ஆயிரம் சண்டையைப் பார்த்தவள். ஊர்ல ஒவ்வொருத்தனைப் பற்றியும் தெரிஞ்சவள். இவ்வளவு கஷ்டப்பட்டு நம்ம கெளரவத்த காப்பாத்த வேண்டியதில்ல. அதுக்கு லேசான வழி இருக்கு. கோலவடிவை கூட்டிக்கிட்டு ஓடு. கரும்பட்டையான் கன்னத்துல கை வச்சுடுவான். காத்துக் கருப்பன் பொண்ண சரியா வைக்கத் தெரியலன்னு பழனிச்சாமியத் திட்டுவான். ஆக நம்ம கொடை பிரமாதமா நடக்கும்.” “நீ சொல்றது மாதிரி கரும்பட்டையான் பயலுவள, அதுவும் இந்த திருமலைப் பயல, அவமானப் படுத்துறதுக்கு இதைவிட நல்லவழி எதுவும் இல்ல. ஆனால் கோபத்துல அவங்க, அதாவது அந்தச் சமயத்துல ஏற்படுற கோபத்துல அரிவாள கிரிவாள எடுத்து...” “அதை அப்போ பார்த்துக்கலாம். ஊர்க்காரன் அந்த அளவுக்கு விடமாட்டான். பழனிச்சாமிக்கு துளசிங்கம் மருமகனாயிட்டான். ஊரு உலகத்துல நடக்கது மாதிரி ஒரு நாள் இல்லாட்டாலும் ஒரு நாளாவது ஒண்ணா சேருவாங்க. நாம ஏன் கெட்ட பேர் வாங்கணுமுன்னு ஒதுங்கிக்குவான்...” “சரி சித்தி. இவள் சம்மதிப்பாளா...?” “சம்மதிக்க வைக்கது என் பொறுப்பு...” “சரி. இவளக் கூட்டிட்டுப் போய் அப்புறம் எங்க விடுறது.” “ஒன் சினிமாப் புத்திய காட்டிட்ட பாரு. நான் என்ன அவ்வளவு கல் நெஞ்சுக்காரியாடா. நானும் மனுஷிதாண்டா. கோலவடிவை நீ கூட்டிக்கிட்டு ஓடிப்போற... ரிஜிஸ்தர் ஆபீஸ்ல அவளை கல்யாணம் செய்யுற... அப்புறம் நம்ம சுடலைமாடசாமி கொடைக்கு ரெண்டு பேருமா புருஷன் பொண்டாட்டியா வாரீய...” “கொடை நாளைக்கு ராத்திரி துவங்குதே...” “நாளைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமைதான் உச்சம். அதுக்கு வந்தா போதும்.” “இவள் சரியான நாட்டுப்புறம். இவளப்போய் கல்யாணம் செய்யுறதை நினைக்கவே...” “கரும்பு தின்னக் கூலியாடா கேக்கே, கூலி. அவள் மாதிரி ஒரு குடும்பப் பெண் கிடைக்க நீ கொடுத்து வைச்சிருக்கணும். ஆனால் இப்பவே சொல்லிட்டேம்பா, அவள கல்யாணம் செய்யுறதா இருந்தா கூட்டிட்டுப் போ. இல்லாட்டா இப்பவ சொல்லிடு. அப்புறம் ஒன் பாடு, ஊர்க்காரன் பாடு. சுடல கோயில் மூடட்டும், செம்பட்டையான் தலை குனிஞ்சு நடக்கட்டும், எனக்கென்ன. நேருக்கு நேராய் நெஞ்சை நிமுத்துறவளுக. எத்தனையோ பேர் இருக்காளுவ. ஆனால் கோலவடிவு கிடைச்சதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும்.” துளசிங்கம், மீண்டும் நின்றபடியே யோசித்தான். சித்தி சொல்வது ஒருவகையில் சரிதான். கோலவடிவு குடும்பப் பாங்கான பெண். நிசமான பெண். அவனுக்கு எத்த ஜோடி இல்லதான். ஆனால் எதையும் சோடிச்சுப் பேசத் தெரியாத அப்பாவி. வீட்ல பொண்டாட்டியா இருந்துட்டுப் போவட்டும். திருமலைப் பயலுக்கும் செருப்படி கொடுத்தது மர்திரி இருக்கும். அலங்காரி, துளசிங்கத்தின் நடைவேகத்தை வர்ணித்தாள். “எப்பாடா... நீ வேகமாய் நடக்கதைப் பாக்க சித்திக்கு எவ்வளவு தெம்பா இருக்கு தெரியுமா. அதோ பாரு, பனங்காட்டுக்குள்ள போன பற்குணம் திரும்பி நடக்கதை. நம்ம கிட்ட வம்பு பண்ணுறதுக்குன்னே வந்திருக்கானுவ, பாதியிலயே... பேதில போற பயலுவ. சரி, மெதுவா நடப்பா. சித்தியும் கூட நடக்கணுமுல்லா...” “நீயும் எங்ககூட வாயேன் சித்தி...” “நீங்க ஓடிப்போறதால ஆடிப்போற ஊரை சமாளிக்க நான் இருக்கணுமே.” அலங்காரியும் துளசிங்கமும் பள்ளப் பகுதியான பருத்திக் காட்டைத் தாண்டி, மேட்டுப் பகுதியான சோளத் தோட்டத்தின் பக்கமாக வந்தார்கள். அலங்காரி, ஊருக்குள் மறைந்து கொண்டிருந்த பற்குணத்தையும், அவரோடு சென்ற ராமசுப்புவையும் பார்த்துக் கொண்டே நின்றாள். சோளப் பயிருக்குள் போகப் போன துளசிங்கத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள். பிறகு மெல்லக் கூவினாள்... “கோலவடிவு, ஒனக்கு நல்லகாலம் வந்துட்டுடி... என் ராசாத்தி... எந்தப் பக்கமா நிக்கே...?” அந்தப் பெரிய சோளத் தோட்டத்தில் நடுப்பக்கத்தில் நான்கைந்து சோளத் தட்டைகள் வளைந்து வளைந்து ஆடின. வா வா என்று வளைந்தன. துளசிங்கத்தைப் பார்த்த கோலவடிவால் தாங்கமுடியவில்லை, தாளமுடியவில்லை. விக்கலும் வெடிப்புமாய் அழுதாள். முகத்தைக் கரங்களால் மூடியபடியே அழுதாள். அவனைப் பார்த்து முகம் படர்ந்த கர விரல்களை விலக்கி, வெட்கத்தோடு சிரித்து சிணுங்கியவள் இப்போது வெட்கமற்றவள் போல் அழுதாள். அவளைப் பார்க்க துளசிங்கத்திற்கே என்னவோ போலிருந்தது. கோலவடிவின் பக்கம் அலங்காரி வந்து நின்று கொண்டாள். அவள் தலையைச் சாய்த்து, தன் தோளிலே போட்டுக் கொண்டாள். பிறகு, அவளைத் தனக்கு எதிராகத் திருப்பி வைத்துக் கொண்டு, எந்தவித பீடிகையும் போடாமலே வெட்டொன்று துண்டு ரெண்டாகப் பேசினாள். “எனக்கு நீட்டி முழக்கிப் பேச நேரமில்ல கோலம். ஒனக்காவ உயிரைக் கொடுக்கவும் இவன் தயாராயிட்டான். ஒன்னை அக்னி ராசாவோட சேர்த்து பாக்கவே இவனால முடியல. அதனால நாளைக்கு ராத்திரிக்கு ஒன்னை கூட்டிட்டுப் போய் மறுநாள் காலையில ரிஜிஸ்தர் ஆபீஸ்ல தாலி கட்டுதான். அப்புறம் மாலையும் கழுத்துமாய், ஒங்கப்பா பழனிச்சாமி காலுல வந்து விழுவான். துளசிங்கம், பழனிச்சாமி அண்ணாச்சிக்கு மருமகனா ஆயிடுவான். நீ எலி டாக்டரு மருமகளா ஆயிடுவே. கோயில் கொடை தகராறும் தீந்துடும். ஒன்னைப் பிடிச்ச அக்னிராசா சனியனும் விலகிடும். என்ன சொல்லுதே? ரெண்டுல ஒன்னை இப்பவே சொல்லு. ஒனக்காவ நாங்க ரெண்டு பேரும் இங்க வந்துட்டோம். ஒங்க ஆட்கள் எங்களப் பார்த்துட்டா ரெண்டு கொல விழும். அதுக்கு முன்னால சொல்ல வேண்டியத சொல்லிடு... அத்த சொன்னதுக்கு சம்மதமா.” கோலவடிவு திகைத்துப் போனாள். திக்குமுக்காடினாள். இப்படிப்பட்ட யோசனையை அவள் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் அவனை விட்டுவிட்டு, அக்னியை வலம் வரவும் மனம் இல்லை. ஆனாலும் இப்படியா? எம்மாடி நெனச்சுச் பார்க்கவே முடியலியே. இவருகூட நான் ஓடணுமா? இதைவிட செத்துடலாம். அப்பா துடிச்சிடுவாரு. அம்மா செத்திடுவாள். அண்ணாச்சி குதிப்பான். அவங்க கிடக்கட்டும். எனக்கே இது சரியா தெரியலியே. எம்மாடி... அலங்காரி அத்தையோட யோசனைப் பாரு, யோசனை. கோலவடிவு, பூணிக்குருவி மாதிரி தோன்றிய ஒரு சோளக் கதிரைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு அதையே பார்த்தபடி நின்றாள். துளசிங்கம் உப்புக் குத்திக் கால்களில் நின்றபடி சோளத் தோட்டத்திற்கு வெளியே நோட்டம் விட்டான். அலங்காரி அடுக்கிக் கொண்டே போனாள். “ஒன் நிலம எனக்குப் புரியது கோலம். ஆனால் ஒரு பொண்ணு, எதிர்காலத்துக்காவ இந்தக் காலத்துலயே ஒரு முடிவு எடுத்தாகணும். ஊர்ல கொண்டான் கொடுத்தாங்க வருஷம் முழுசும் சண்ட போடுவான். அதுல நம்ம வாழ்க்கைய தொலச்சிடப்படாது. ஊர்ல நடக்க பாரதப் போருக்கு நீ அரவானாய் ஆயிடப்படாது. என்ன சொல்லுதே? ஆள் அரவம் கேட்குது. சரிடா, துளசி வாடா போகலாம். கோலத்துக்கு அலங்கோல மாகணுமுன்னு தலைவிதி இருந்தால், நான்தான் என்ன செய்ய முடியும். நீதான் என்ன செய்ய முடியும். புறப்படுடா...” அலங்காரி துளசிங்கம் கையைப் பிடித்து இழுத்தபடியே நடக்கப் போனாள். கோலவடிவு கையில் இருந்த கதிரை விட்டுவிட்டு, அலங்காரியின் தோளைப் பற்றினாள். துவண்ட முகத்தோடு பேசினாள். “அம்மன் கொடைக்குப் பிறவு ஆற அமர...” “என்னம்மாளு... நீ, நாங்க என்னமோ ஒனக்கு உதவுறதாய் நெனச்சால், நீ எங்களுக்கு உதவுறதாய் நெனைக்கே. அம்மன் கொடையில என்ன நடக்கப் போவுதோ, எது நடக்கப் போவுதோ. விவகாரம் கோர்ட்டுக்குக் கூட போவும். அப்போ கல்யாண மேடைக்கு போக முடியுமா? அதுவரைக்கும் இவனை ஒங்க ஆட்கள் உயிரோட விட்டு வைக்கப் போறாங்களோ, இல்லியோ. எது சொன்னாலும் இப்பவே சொல்லு...” கோலவடிவு, துளசிங்கத்தையே பார்த்தாள். அய்யய்யோ, இவர வெட்டிக் கொன்னாலும் கொன்னுடுவாங்களோ. எனக்காவ இத்தன அமளியிலயும் உயிருக்கு ஆபத்தக் கூட நினைக்காம, இங்க வந்திருக்கிற இவர அம்மன் கொடைக்குப் பிறகு அடியோட பார்க்க முடியாமக் கூட போவுமோ. அதுக்காவ இவரு பின்னால நான் ஓட முடியுமா... இதுக்கா அப்பா என்ன வளத்தாரு. இதுக்கா அம்மா என்னப் பெத்தாள். ஆனால் இப்பவே இவர பிரிய எனக்கு மனம் வரமாட்டாக்கே... இந்தக் காட்டுலயே இவரோடயே இந்த கணத்துல இருந்தே இருக்கலாம் போல மனம் துடிக்குது... இவர விட்டுட்டு என்னால... “கோலம், அத்தைய நீ தப்பா நெனச்சாலும் சரி... நீ எப்பவோ எடுக்கப் போற முடிவு இப்பவே எடுத்துடு. இல்லன்னா. ஒனக்கே ஒரு முடிவு கட்டிடுவாவ. அக்னிராசாவ கட்டிட்டு, அப்புறம் அத்தைகிட்ட வரப்படாது.” கோலவடிவு இருதலைக் கொள்ளி எறும்பானாள். தலையைப் பிடித்துக் கொண்டாள். முகத்தை ஆட்டிக் கொண்டாள். தலையைப் பின்னால் வளைத்து, கண்ணிரைப் பின்புறமாகத் தெறிக்க விட்டாள். துளசிங்கம் நகர்வது போல் தெரிந்தது. அலங்காரி அத்தை அவனைப் பிடித்து இழுப்பது போல் தெரிந்தது. அய்யோ, போறாரே, என்னைவிட்டு போறாரே... அலங்காரி நிற்பதையும் பொருட்படுத்தாமல், கோலவடிவு துளசிங்கம்மேல் விழுந்தாள். அவன் இரண்டு தோள்களிலும் கைகளைப் போட்டபடி தேம்பினாள். அந்தத் தோள்களைப் பற்றியபடியே ஏங்கி ஏங்கி அழுதாள். ‘உன்னை விடமாட்டேன்’ என்பதுபோல் அவன் கழுத்தைத் தன் கரங்களால் பின்னிக் கொண்டு அலை மோதினாள். அலங்காரி அவசர அவசரமாகப் புறப்பட்டாள். “அய்யய்யோ என் ஆட்ட கோவில் பக்கம் மரத்துல கட்டிப் போட்டத மறந்துட்டேன், பாருங்க... நிதானமாக வாங்க... நான் போறேன்...” |