பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

... தொடர்ச்சி - 11 ...

1001 ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் * வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே. 88

* வில்வப்பலகை

ஆகர்ஷணம்

1002 எண்ணாக் கருடனை ஏட்டில் * உகாரமிட்டு
எண்ணாப் # பொன்னொளி எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி
எண்ணா எழுத்தோடுஎண்ணாயிரம் வேண்டிலே. 89

* அகாரமிட்; யகாரமிட்
# பொன்னாளில்

3. அருச்சனை

1003 அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுனனை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. 1

1004 சாங்கம தாகவே சந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீரால் குழைத்துவைத்து
ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே. 2

1005 அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
* இன்புட னேவந்து எய்திடும் முத்தியே. 3

* இன்பமுடனேவந்

1006 எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே. 4

1007 நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்
மண்ணிய நைவேத் தியம்அனு சந்தான
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபமென்னும்
* மன்னும் மனம்பவ னத்தோடு வைகுமே. 5

* மண்ணு வனலத் தோடிவை; எண்ணும் பலனத் தோடிவை

1008 வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர்
வேண்டார்கள் கன்மம் அதில்இச்சை அற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே. 6

1009 அறிவரு ஞானத்து எவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின்றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே. 7

1010 இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்
மருளறி யாமையும் மன்னும் அறிவு
மருளிவை *விட்டறி யாமை மயங்கும்
மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே. 8

* விட்டெறி

1011 தான்அவ னாக அவனேதான் ஆயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவன் அன்பிது நாலாம் மரபுறத்
தான்அவன் ஆகுமோ * ராசித்த தேவரே. 9

* ராதித்த

1012 ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள்கண்டத்து ஆயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே. 10

1013 நமவது ஆசனம் ஆன பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமவற ஆதி நாடுவது அன்றாம்
சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே. 11

1014 தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும்
ஒளிவரு நாளில் ஓர்ஏட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே. 12

4. நவகுண்டம்

1015 நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின்
நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும்
நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்டம் ஆனவை நான்உரைப் பேனே. 1

1016 உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும்
நகைத்தெழு நாற்கோணம் நன்மை கள்ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே
* மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே. 2

* மிகைத்திடு குண்டங்கள்

1017 மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள்
கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பார்அறிந்து அண்டம் சிறகற நின்றது
நான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே. 3

1018 கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே. 4

1019 எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே. 5

1020 கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும்
பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே. 6

1021 நற்சுட ராகும் சிரமுக வட்டமாம்
கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற்
பைச்சுடர் மேனி பதைப்புற்று இலிங்கமும்
நற்சுட ராய்எழு நல்லதென் றாளே. 7

1022 நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமோ
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதென் றாளையும் கற்றும் வின் னாளே. 8

1023 வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கென்று
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே. 9

1024 இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏக
நடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச்
சுகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே. 10

1025 முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன்
அக்கணன் தானே அகிலமும் உண்டவன்
திக்கணன் ஆகித் * திகைஎட்டும் கண்டவன்
எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே. 11

* திசையெட்டுங்

1026 எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான்
மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே. 12

1027 மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்
ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழு
நாட்டும் சுரரிவர் நல்லொளி தானே. 13

1028 நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுள மாகி * நின் றாளே. 14

* நின்றானே

1029 நின்றஇக் குண்டம் நிலையாது கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும்
கொண்டஇத் தத்துவம் * உள்ளே கலந்தெழ
விண்ணுளும் என்ன எடுக்கலு மாமே. 15

* முன்னே

1030 எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக்
கடுத்த முகம்இரண்டு ஆறுகண் ஆகப்
படித்துஎண்ணும் நாவெழு கொம்பொரு நாலும்
அடுத்தெழு * கண்ணான தந்தமி லாற்கே. 16

* கண்ணான் அந்தமிலார்க்கே

1031 அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே. 17

1032 பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகவும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே. 18

1033 பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே. 19

1034 அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐஐந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே. 20

1035 முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற நாடிப் பரந்தொளி யூடு போய்ச்
செற்றற்று இருந்தவர் சேர்ந்திருந் தாரே. 21

1036 சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே. 22

1037 மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்
உய்கண்டம் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே. 23

1038 கலந்திரு பாதம் இருகர மாகும்
மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்கு
மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி
உணர்ந்திரு குஞ்சி அங்கு உத்தம னார்க்கே. 24

1039 உத்தமன் சோதி உளனொரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங்கு இருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே. 25

1040 கொடியாறு சென்று குலாவிய குண்டம்
* அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏழ் உலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே. 26

* அடியுரு

1041 மாதன மாக வளர்கின்ற * வன்னியைச்
சாதன மாகச் சமைந்த குருவென்று
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பரிந்தது பார்த்தே. 27

* கன்னியைச்

1042 பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லை
காத்துடல் உள்ளே கருதி இருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே. 28

1043 உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்
* பயங்கண்டு கொண்டஇப் பாய்கரு வொப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே. 29

* பகங்கண்டு

1044 சாதனை நாலு தழல்மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதுஐஞ்சு பொய்கய வாரணம்
நாதனை நாடு நவகோடி தானே. 30

5. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்

1045 மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாந் திரிபுரை யாங்கே. 1

1046 திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி * யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
வருபல வாய்நிற்கும் மாமது தானே. 2

* யாம்பால; யம்பல

1047 தானா அமைந்தவம் முப்புரம் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையுள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே. 3

1048 நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்
பல்கும் பரவிந்து பாரண்ட மானவை
நல்கும் பரைஅபி ராமி அகோசரி
புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே. 4

1049 தாளணி நூபுரம் செம்பட்டுத் தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே. 5

1050 குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட * வரத்த நிறமன்று கேலாத்தள்
கண்டிகை ஆரம் கதிர் முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றானே. 6

* வரத்தள் நிறமன்னு

1051 நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே. 7

1052 சுத்தவம் பாரத் தனத்தி சுகோதயள்
வத்துவம் ஆய்ஆ ளும் மாசத்தி மாபரை
அத்தகை * யாவும் அணோரணி தானுமாய்
வைத்தஅக் கோல மதியவள் ஆகுமே. 8

* யான மனோரணி

1053 அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே. 9

1054 அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா * ரருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே. 10

1055 தான்எங்கு உளன்அங்கு உளதுதையல் மாதேவி
ஊன்எங் குள அங்கு உள்ளுயிர்க் காவலன்
வான் எங் குளஅங் குளேவந்தும் அப்பாலாம்
கோன் எங்கும் நின்ற குறிபல பாரே. 11

1056 பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
பராசத்தி புண்ணிய மாகிய போகமே. 12

1057 போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகஞ்செய்து ஆங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய்து ஆங்கே அடியவர் நாள்தொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே. 13

1058 கொம்புஅனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
* நம்பி என் உள்ளே நயந்துவைத் தேனே. 14

* நம்பினேன்

1059 வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலையவ ளாமே. 15

1060 தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே. 16

1061 நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந்து ஏழுல கும்தொழ
மன்றது ஒன்றி * மனோன்மனி மங்கலி
ஒன்றெனொடு ஒன்றிநின்று ஒத்துஅடைத்தாளே. 17

* மனோன்மணி

1062 ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மணி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே. 18

1063 உணர்ந்துட னேநிறகும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே. 19

1064 அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ள நோக்கித்
தெளியுறு * வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டானே. 20

* சித்துச்

1065 உண்டில்லை என்றது உருச்செய்து நின்றது
வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டல முன்றுற மன்னிநின் றாளே. 21

1066 நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே
நின்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே. 22

1067 ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே. 23

1068 தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிடும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூம்பிள்ளை ஆருமாம் ஆதிக்கே. 24

1069 ஆதி விதமிகுத் தண்தந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரல்
சோதி மிகுந்துமுக் காலமும் தோன்றுமே. 25

1070 மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆயந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே. 26

1071 அருள்பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் * யானே. 27

* நானே

1072 ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈன வராகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை உழுபடை ஏந்திய வெண்ணகை
ஊன மறஉணர்ந் தாரஉளத்து ஓங்குமே. 28

1073 ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
* ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே. 29

* ஹ்ரீங்காரத்

1074 தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயிர்வித்துத் தந்த பதினாலும்
வானோர் * தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே. 30

* தவமும்

6. வயிரவி மந்திரம் *

(இஃது ஒரு பிரதியில் ஆதிவயிரவி மந்திரம் என்றுள்ளது)

1075 பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்
சொல்நிலை சோடம் அந்தம் என்று ஓதிடே. 1

1076 அந்தம் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தை கமலத்து எழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகின்றாளே. 2

1077 ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற * பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சாரவுழிச் சாரார் கதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே. 3

* போதம்

1078 புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தைதன் தென்னனும் ஆமே. 4

1079 தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு
உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே. 5

1080 ஓதிய நந்தி உணரும் திருவருள்
நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும்
போதம் இருபத்து எழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே. 6

1081 சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாகபா சாங்குச
மாலங் கயனறி யாத வடிவுக்கு
மேல்அங்க மாய்நின்ற மெல்லிய லாளே. 7

1082 மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை
கல்லியல் ஒப்பது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே. 8

1083 பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே. 9

1084 பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர்
ஆரியத் தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துத் சத்தியைத் தாங்கள் கண்டாரே. 10

1085 கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை * யோகி இறைவி பராசக்தி
அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுள் பூசனை யாளே. 11

* மேலாகி; மோகி

1086 பூசனை கந்தம் புனைமலர் மாகோடி
யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும்
வாசம்இ லாத மணிமந் திரயோகம்
தேசம் திகழும் திரிபுரை காணே. 12

1087 காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவிநற் காரணி * காணே. 13

* தானே

1088 * காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே. 14

* காரண

1089 அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரை செய்யும்
செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவம் உரைத்தானே. 15

1090 உரைத்த நவசத்தி ஒன்று முடிய
நிரைத்த விராசி நெடுமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே. 16

1091 தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
வேமத்து இருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்எழு நுண்புகை
மேவித்து அழுதொடு மீண்டது காணே. 17

1092 காணும் இருதய மந்திர முங்கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணு நடுவென்ற வந்தம் சிகையே. 18

1093 சிகைநின்ற வந்தக் கவசங்கொண்டு ஆதிப்
பகைநின்ற வங்கத்தைப் பாரென்று மாறித்
தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே. 19

1094 வருத்தம் இரண்டும் சிறுவிரன் மாறிப்
பொருந்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண்டு உள்புக்குப் பேசே. 20

1095 பேசிய மந்திரம் இகாரம் பிரித்துரை
கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக்
கூசியவிந்து வுடன் கொண்டு கூவே. 21

1096 கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை
மேவிய மாயை * விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே. 22

* வரிசங்கு

1097 நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே. 23

1098 சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே. 24

1099 ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகிற் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாக் கோலம் ஒன்று ஆகுமே. 25

1100 கோலக் குழவி குலாய புருவத்துள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே . 26