பத்தாம் திருமுறை

திருமூலர்

அருளிய

திருமந்திரம்

     திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக அமைந்துள்ளன. ஒன்று முதல் ஒன்பது வரையான திருமுறைகள் தோத்திர வகையையும், பத்தாவது திருமுறை சாத்திர வகையையும், பதினொன்றாவது திருமுறை பிரபந்த வகநயையும், பன்னிரண்டாவது திருமுறை புராணவகையையும் சாரும். இத்திருமுறைகள் பன்னிரண்டில் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது திருமந்திரமாலை எனவும், தமிழ் மூவாயிரம் எனவும் வழங்கும் திருமந்திரமாகும். திருமந்திரம் ஒன்பது தந்திரங்களால் அமைந்துள்ளது. ஒன்பது தந்திரங்களும் ஒன்பது ஆகமங்களின் சாரமாகும். தமிழகத்தின் முதல் சாத்திர நூல் திருமந்திரமாகும். முதல் இரண்டு சாத்திர நூல்களான திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும் திருமந்திரத்தின் வழி வந்தவையே எனக்கூறலாம். திருமூலர் திருவாவடுதுறையில் தங்கி மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாகப் பாடியதாகக் கூறுவர்.

     உரையாசிரியர் : மு.குகன். 64 வயதான இவர் தொலைதொடர்புத் துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து முழு ஈடுபாட்டுடன் முயற்சித்து திருமந்திரத்திற்கு உரை எழுதியுள்ளார். முதுகலை பட்டதாரியான இவர் தற்சமயம் திருச்சியில் வசித்து வருகிறார். (பேசி: +91-431-2459799, மின்னஞ்சல்: guhananda@gmail.com)

பாயிரம்
விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

     ஐந்து கைகளையும் யானை முகத்தையும் இளம்பிறை போன்ற தந்தத்தை உடையவனும் சிவனது குமாரனும் ஞானச் சிகரமாக விளங்குபவனுமாகிய விநாயகக் கடவுளை அறிவினில் வைத்து அவன் திருவடிகளைத் துதிக்கின்றேன்.

1. கடவுள் வாழ்த்து

1. ஒன்ற அவன்தானே இரண்டு அவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் *ஏழு உம்பர்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே. 1

     சிவன் ஒருவனே சத்தியோடு இரண்டாய், பிரம்ம, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மும்மூர்த்தி களாகி ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்து, நான்கு வேதங்களாகி உண்மை விளங்கச் செய்து, ஐந்து இந்திரியங்களையும் அடக்கும் ஆற்றல் அளிப்பவனாய், ஆறு ஆதாரங்களிலும் விரிந்து, அதற்கு மேல் ஏழாவது இடமாகிய சகஸ்ரதளத்தின் மேல் பொருந்தி, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டுப் பொருள் களையும் உணர்ந்து அவற்றில் கலந்து அட்டமூர்த்தமாய் விளங்குகின்றான்.

* ஏழுபார்ச் சென்றவன்

2. போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாங்
கூற்று உதைத்தானை யான் கூறுகின்றேனே. 2

     இறைவனைப் புகழ்ந்து பாடி நான் உரைக்கின்றேன். இனிமையான உயிரிலே பொருந்தியிருக்கும் தூயவனாகவும் நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனாகவும், மேல் சொல்லப்பட்ட திசைகளுள் தெற்குத் திக்கிற்குரிய இயமனை உதைத்தவனாகவும் அவ்விறைவனை புகழ்ந்து நான் பாடுகின்றேன்.

3. ஒக்க நின்றானை உலப்பு இலி தேவர்கள்
நக்கன் என்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கம் நின்றார் அறியாத பரமனைப்
புக்கு நின்று உன்னியான் போற்றி செய்வேனே. 3

     இறைவனை நான் அணுகி இருந்து அநுதினமும் வழிபாடு செய்வேன்.உடனாய் நிற்பவன்; அழிவற்ற தேவர்கள் ஆடையற்றவன் எனப்பரவும் தலைவன். பக்கத்தில் உள்ள திருமால் முதலிய தேவர்கள் அறிய முடியாத மேலோன். இத்தகைய இறை வனை நான் அணுகி நின்று நாள் தோறும் வழிபடுவேன்.

4. அகல் இடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
புகல் இடத்து *என்றனைப் போத விட்டானைப்
பகல் இடத்தும் இரவும் பணிந்து ஏத்தி
இகல் இடத்தே இருள் நீங்கி நின்றேனே. 4

     இறைவனை வணங்கி அறியாமை நீங்கி நின்றேன். அகன்ற சீவர்களுக்கு மெய்ப்பொருள் ஆனவன். வானுலகுக்கு வித்துப் போன்றவன். அடைக்கலமான இடத்திலே என்னைச் செல்ல விட்டவன். இத்தகு இறைவனைப் பகலிலும் இரவிலும் வணங்கிப் பரவி மாறுபாடுடைய இவ்வுலகில் நான் அறியாமை நீங்கி நின்றேன்.

* தெம்மெய்யைப்

5. சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்த அன்று பொன் ஒளி மின்னும்
தவனச் சடை முடித் தாமரை யானே. 5

     சிவபெருமானைப் போன்ற தெய்வம் இல்லை! சிவபெருமானோடு ஒப்பாகவுள்ள கடவுள் புறத்தே உலகில் எங்குத் தேடினும் இல்லை. அவனுக்கு உவமையாக இங்கு அகத்தே உடம்பிலும் எவரும் இல்லை. அவன் அண்டத்தைக் கடந்து நின்ற போது பொன் போன்று பிரகாசிப்பான். சிவன் செந்நிறம் பொருந்திய ஊர்த்துவ சகஸ்ரதளத் தாமரையில் விளங்குபவனாவான்.

6. அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6

     சிவனையன்றி முத்தி பெற வழியில்லை! சிவனைக் காட்டிலும் மேம்பட்ட தேவர்கள் ஒருவரும் இல்லை. சிவனல்லாது செய்கின்ற அருமையான தவமும் இல்லை. அவனை அல்லாது பிரமன், விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூவராலும் பெறுவது ஒன்றும் இல்லை. அவனையல்லாது வீடு பேறு அடைவதற்குரிய வழியை அறியேன்.

7. முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனுமாய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத்தானே. 7

     தந்தையாகித் தாங்குவான்! பொன் போன்ற சகஸ்ரதளத்தில் விளங்குபவன் சிவபெருமான். அவனே பழமையாகச் சமமாக வைத்து எண்ணப்படுகின்ற நான்முகன், திருமால், உருத்திரன், முதலிய மூவர்க்கும் பழமையானவன். தனக்கு ஒப்பரும் மிக்காரும் இல்லாத தலைமகன். இறைவனை யாரேனும் "அப்பனே" என்று வாயார அழைத்தால் அப்பனாக இருந்து உதவுவான்.

8. தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 8

     இறைவன் வெம்மையன், குளிர்ந்தவன்! தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தீயை விட வெம்மை உடையவன்; (அடியார்க்கு) நீரைவிடக் குளிர்ந்தவன்; குழந்தையை விட நல்லவன்; பக்கத்தே விளங்குபவன்; நல்ல அடியார்க்குத் தாயை விட அருள் செய்பவன். சிவனிடம் அன்பு செய்வார்க்கு தாயைக் காட்டிலும் கருணை புரிவான். இவ்வாறிருந்தும் இறைவனது கருணையை அறிபவர் இல்லை.

9. பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னால் பிறங்க இருந்தவன் பேர் நந்தி
என்னால் தொழப்படும் எம் இறை மற்று அவன்
தன்னால் தொழப்படுவார் இல்லை தானே. 9

     வணங்கக் கூடியவர் எவரும் இல்லாதவன்! இறைவன் பொன்னால் இயற்றப்பட்டாற் போன்ற அழகிய சடை பின்புறம் விளங்க விளங்குபவன். நந்தி என்பது அவனது திருநாமமாகும். உயிர்கட்கெல்லாம் தலைவனாகிய அந்த சிவன் என்னால் வணங்கத் தக்கவன். அப்பெருமானால் வணங்கத் தக்கவர் வேறு எவரும் இல்லை.

10. தானே இருநிலம் தாங்கி விண்ணாய் நிற்கும்
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழை பொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தண் கடல் ஆமே. 10

(இப்பாடல் 1165-ம் பாடலாகவும் வந்துள்ளது)

     யாவுமாய் நிற்பவன் சிவனே. விசாலமான மலையாகவும் குளிர்ச்சியான கடலாகவும் இப்பூவுலகத்தைத் தாங்கிக் கொண்டும், ஆகாய வடிவினனாகவும், சுடுகின்ற அக்கினியாகவும், அருள் பொழியும் சத்தியுமாகவும் இருக்கிறான். சிவனே எல்லாப் பொருளிலும் வியாபகமாய் உள்ளான்.

11. அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதும் ஒன்று இல்லை
முயலும் முயலின் முடிவும் மற்று ஆங்கே
பெயலும் மழைமுகில் பேர் நந்தி தானே. 11

     அவன் பெயர் நந்தி. தூரத்திலும் பக்கத்திலும் எமக்கு முன்னோனாகிய இறைவனது பெருமையை எண்ணினால் "ஒத்ததாகச் சொல்லக் கூடிய பெரிய தெய்வம் பிறிதொன்றில்லை." முயற்சியும், முயற்சியின் பயனும், மழையும், மழை பொழிகின்ற மேகமும், அந்த இறைவனே ஆகும். அவன் பெயர் நந்தி.

12. கண்ணுதலான் ஒரு காதலின் நிற்கவும்
எண் இலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண் உறுவார்களும் வான் உறுவார்களும்
அண்ணல் இவன் என்று அறியகிலார்களே. 12

     அவனே தலைவன் ஒப்பற்ற அன்போடு அழியாதிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய "சிவனே அழியாதிருக்கும் அருள் புரிபவன்" என்பதை விண்ணவரும் மண்ணவரும் அறியாதிருக்கின்றனரே! என்ன அறியாமை!

13. மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்னம் நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே. 13

     கலந்தும் கடந்தும் இருப்பவன். கண்ணில் கலந்தும் எங்கும் கடந்தும் விளங்குகின்ற சிவனை பிரமன், விஷ்ணு முதலான தேவர்களும் எண்ணத்தில் அகப்படுத்தி நினைப்பதில்லை. மண்ணுலகோரோ சிவனைக் கடந்து சென்று அறிய முடியவில்லை.

14. கடந்துநின்றான் கமலம் மலர் ஆதி
கடந்துநின்றான் கடல் வண்ணம் எம் மாயன்
கடந்துநின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின்றான் எங்கும் கண்டு நின்றானே. 14

     எதனையும் கண்காணிக்கின்றவன். சிவன் சுவாதிட்டான மலரிலுள்ள பிரமனையும், மணிப்பூரகத்திலுள்ள விஷ்ணுவையும், அநாகதச் சக்கரத்திலுள்ள ருத்திரனையும் கடந்து சிரசின் மேல் சகஸ்ரதளத்தில் நின்று எங்கும் கண்காணித்துக் கொண்டுள்ளான்.

15. ஆதியுமாய் அரனாய் உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்து ஆர்ந்து இருந்தான் அருள்
சோதியுமாய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள்
நீதியுமாய் நித்தம் ஆகி நின்றானே. 15

     சோதியானவன் சிவன் உலகினைப் படைப்பவனாயும், உடலைக் காத்து மாற்றம் செய்பவனாயும், அழிப்பவனாயும், குவிதல் இல்லாத இயல்போடு ஊழைச் செலுத்துபவனாயும், திருவருள் சோதியாயும், என்றும் அழியாத தன்மையோடு நிறைந்து உள்ளான்.

16. கோது குலாவிய கொன்றைக் குழல் சடை
மாது குலாவிய வாள் நுதல் பாகனை
யாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம் பயில்வாரே. 16

     தேவர் வணங்குவது ஏன்?அமரர்களும் தேவர்களும் குற்றத்தில் பொருந்தியுள்ளமை யால் அழகு நிறைந்த ஒளியோடு கூடிய நெற்றியையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவனாகிய சிவனது குணத்தைப் பாராட்டி நாடமாட்டார்கள்.

17. காயம் இரண்டும் கலந்து கொதிக்கினும்
ஆயம் கத்தூரி அது மிகும் அவ்வழி
தேசம் கலந்து ஒரு தேவன் என்று எண்ணினும்
ஈசன் உறவுக்கு எதிர் இல்லை தானே. 17

     ஈசன் உறவுக்கு ஒப்பில்லை. தூல உடம்பும் சூக்கும உடம்பும் ஒன்றாகக் கலந்து இருப்பினும் மாயை சம்பந்தமுடைய சூக்கும உடம்பில் தான் கானமானது மிகுந்திருக்கும். அக்கானம் அல்லது நாத வழியே மனம் பதிந்து ஆன்மா தன்னை ஒளி வடிவாகக் காணினும் உடலை விட்டு ஆகாய வடிவினனாகிய சிவனோடு கொள்ளும் தொடர்புக்கு நிகரில்லை.

18. அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறை தவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கம் அது ஆக்கின்
இதுபதி கொள் என்ற எம் பெருமானே. 18

     தலைவனாக்கும் வள்ளல் ஸ்பந்த உணர்வு சிரசின் வடகீழ்த்திசையில் உள்ளது. வட திசையைப் போற்றி அங்கு விந்துவை ஒளிமயமாகும் யோகம் செய்து உயிர்ச் சத்தியைச் சேமித்து வைத்தால் ஒளி மண்டலம் விளங்கும். இவ்வட திசைக்குத் தலைவனாக நீயும் ஆகலாம் என்று சொல்பவன் எமது தலைவனாவான்.

19. இது பதி ஏலம் கமழ் பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறிவாளன்
விது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அது பதியாக அமருகின்றானே. 19

     சீவரின் தவத்தில் விளங்குபவன். வடதிசைக்குத் தலைவன், விஷய வாசனைக்கு இடமான ஏழு ஆதாரங்களையும் அழித்துப் பால் நிலமாக்கிய மூதறிவாளன், பாவங்களைப் போக்கடிக்கின்ற பலியினைக் கொள்ளும் வடதிசையை இடமாக்கிக் கொண்ட சீவரது உண்மையான தவத்தை நோக்கி அத்தவம் செய்வோரையே இடமாக்கிக் கொண்டு எழுந்தருளியிருக்கிறான்.

20. முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் *அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசன் உருவம்
கடிமலர்க் குன்றம் மலை அது தானே. 20

* அரனெறி

     இடியும் முழக்கமும் ஈசர் உருவம். இறப்பையும் பிறப்பையும் கருவில் உதிக்கும் முன்னே வரையறை செய்த சிவன் பொருந்தியுள்ள நியதியை அறியின், அது விளக்கம் மிக்க கண்மலருக்கு மேல் உள்ள சிரசாகும். கண்மலரே அகநோக்கு வழியாகும். ஆகாயபூத அறிவு சிரசில் சிறந்து விளங்கத் தொடங்கும் போது சாதகனது சிரசில் அவ்விறைவனது வடிவம் ஒளியும் ஒலியுமாக விந்து நாதமாக வெளிப்படும்.

21. வானப் பெருங்கொண்டல் மால் அயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்த எம்
கோனைப் புகழுமின் கூடலும் ஆமே. 21

     சிவனைப் புகழ்வீர்! சிவன் ஒப்பற்றவன். வானத்தில் உள்ள மேகம் போன்ற கரிய திருமால், பிரமன், தேவர் முதலியவரின் இழிந்த பிறவியை நீக்குபவன். அவன் ஆணவமான காட்டு யானை கதறும்படி பிளந்தவன். இத்தகைய எம் சிவபெருமானைப் போற்றிப் புகழுங்கள். சிவனைப் புகழ்ந்தால் பிறவி நீக்கம் பெற்று உய்யலாம்.

22. மனத்தில் எழுகின்ற மாய நன்னாடன்
நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர்
எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன்
பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே. 22

     இறைவன் யாருக்கு உதவுவான்! மாயையில் தோன்றிய உடம்புக்கு உரியவனாகியவனும் தியானப் பொருளாக மனத்தில் தோன்றுகின்றவனுமாகிய சிவன் - சீவர் நினைத்ததை அறிவான் என்ற போதும் சீவர் தாம் சிவனை நினையாதிருக்கின்றனர். கடவுளுக்கு என்னிடத்தில் கருணை இல்லை என்று சொல்லும் தன் கருணைக்கு இலக்காகாமல் தப்பி நிற்பவருக்கும் கருணை வழங்கி நிற்கின்றான் இறைவன்.

23. வல்லவன் வன்னிக்கு இறை இடை வாரணம்
நில் என நிற்பித்த நீதியுள் ஈசனை
இல் என வேண்டா இறையவர் தம் முதல்
அல்லும் பகலும் அருளுகின்றானே. 23

     அவனால் வாழ்வு! சர்வ வல்லமையுடைய இறைவனை இல்லை என்று கூற வேண்டாம். அவன் படைத்தல் முதலியவற்றைச் செய்கின்ற கடவுளர்க்கும் தலைவனாய் இரவும் பகலும் ஆன்மாக் களுக்கு அருள் செய்து கொண்டிருக்கின்றான்.

24. போற்றிசைத்தும் புகழ்ந்தும் புனிதன் அடி
தேற்றுமின் என்றும் சிவன் அடிக்கே செல்வம்
ஆற்றியது என்று மயல் உற்ற சிந்தையை
மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே. 24

     சிவன் அடிக்கே செல்வம்! போற்றிக் கூறியும், புகழ்ந்து பாடியும், நின்மலனாகிய சிவன் திருவடியை இடைவிடாது தாரகமாகக் கொண்டு தெளியுங்கள். சிவபெருமான் திருவடிக்கே நம் செல்வமெல்லாம் உரியது என்று எண்ணி புறப்பொருளில் மயங்கிக் கிடக்கின்ற மனத்தை மாற்றி நிற்பவரிடத்தில் சிவன் நிலைபெற்று நிற்பான்.

25. பிறப்பு இலி பிஞ்ஞகன் பேரருளாளன்
இறப்பு இலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பு இலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பு இலி *மாயா விருத்தமும் ஆமே. 25

* மாய விருகமும்

     அஞ்ஞானம் நீங்கும்! சிவன் பிறவி இல்லாதவன். எல்லாவற்றையும் ஒடுக்குபவன். மிக்க அருள் உடையவன். அழிவு இல்லாதவன். எல்லாருக்கும் இடைவிடாத இன்பத்தை அருளுபவன். இத்தகைய சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் நீங்கள் அவனடி மறவாதவர்களாய் அஞ்ஞானம் நீங்கி ஞானப்பேறு அடையலாம்.

26. தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்து நின்றான் பரிபாரகம் முற்றும்
கடந்து நின்றான் கமல மலர் மேலே
உடந்திருந்தான் அடிப் புண்ணியம் ஆமே. 26

     கமலத்தில் வீற்றிருப்பவன்! சிவன் ஆன்மாக்களை என்றும் தொடர்ந்து நிற்பவன். எங்கும் பரவியுள்ளவன். உலகம் முழுவதையும் கடந்தவன். சகஸ்ரதள ஆயிரம் இதழ்த் தாமரைய மீது இருந்தவன். அத்தகைய சிவனை வணங்குங்கள். அவ்வாறு வணங்கினால் சிவனது திருவடிப்பேறு கிட்டும்.

27. சந்தி எனத்தக்க தாமரை வாள் முகத்து
அந்தம் இல் ஈசன் அருள் நமக்கே என்று
நந்தியை நாளும் வணங்கப்படும் அவர்
புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே. 27

     உள்ளமே கோயில்! சேர்க்கையின் இடம் என்று சொல்லப்படும் சுவாதிட்டான மலரின் கீழ் ஒளி பொருந்திய முகத்தையுடைய இறுதியில்லாத "இறைவனது கருணை நமக்கே உரியது" என்று அப் பெருமானைத் தினந்தோறும் வழிபடுவோரது புத்தியில் சிவன் தானே புகுந்து பெயராது நின்றான். சுவாதிட்டான மலரில் பிரமனாகத் தொழிற் புரியும் சிவனே சகஸ்ரதளத்தில் சதாசிவ மூர்த்தியாக அருள் புரிகிறான்.

28. இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின் முன் ஆகி நின்றானும்
உணங்கி நின்றான் அமராபதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே. 28

     வழித்துணையாவான்! எக்காலத்தும் எவ்விடத்தும் மாறுபட்ட தன்மையில் நீக்கமற நிறைந்துள்ள சிவன் தனக்கென செயலின்றி உள்ளான். ஆன்மாவோடு பொருந்தியுள்ள சிவன் தன்னை வழிபடு வோர்க்கு வழிகாட்டியாக உள்ளான்.

29. காண நில்லாய் அடியேற்கு உறவு ஆர் உளர்
நாண நில்லேன் உன்னை நான் தழுவிக் கொளக்
கோண நில்லாத குணத்து அடியார் மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்து நின்றானே. 29

     அடியாற்கு உறவு யார் உளர்! மாறாத சிவ நினைவு கொண்ட அடியார் மனத்திடை ஆணி வேர் போல் அமர்ந்து இருக்கும் சிவனே, உன்னை காணும்படி நீ நில்லாவிடினும் உன்னை நான் தழுவிக் கொள்ள வெட்கப்பட்டு நிற்கமாட்டேன். உன்னைத் தவிர அடியேனுக்கு உறவு யார் உள்ளார்!

30. வான் நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான் நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கும் அதுபோல் என் நந்தியை
நான் நின்று அழைப்பது *ஞானம் கருதியே. 30

     இறைவனை ஞானம் பெறும்பொருட்டு அழைக்கின்றேன். உலகவர் வேண்டாது தானே பெய்யும் மழை போல இல்லாமல் பால் வேண்டி பசுவை அழைக்கும் கன்றுக்கு பசு பால் கொடுப்பது போல தன்னை அண்டி வேண்டுவோர்க்கு ஞானத்தை சிவன் அருளுவான்.

* ஞாலங் கரியே

31. மண்ணகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
விண்ணகத்தான் ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடல் உற்றானுக்கே
கண்ணகத்தே நின்று காதலித்தேனே. 31

     உள்ளத்தில் இசையானான்! இறைவன் பூவுலக வாசிகளுக்கு மனித வடிவிலும், புவர் லோக வாசிகளுக்கு ஒளிவடிவிலும், சுவர்லோக வாசி களுக்கு தேவவடிவிலும், சித்திகளை விரும்பியவர்க்கு சித்தராகவும், நிறைவு பெற்ற மனத்தை உடையவர்க்கு நாத மாகவும் காட்சியளிக்கிறான். அத்தகைய சிவனை அகக் கண்ணில் அறிவாக எண்ணி அன்பு பூண்டிருக்க வேண்டும்.

32. தேவர் பிரான் நம்பிரான் திசை பத்தையும்
மேவு பிரான் விரி நீர் உலகு ஏழையும்
தாவு பிரான் தன்மை தான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே. 32

     பாடிப்பரப்புவோம்! விரிந்த நீரால் சூழப்பெற்ற ஏழு உலகங்களையும் கடந்துள் ளவனும், சீவ கோடிகளின் பத்துப் பக்கங்களிலும் நிறைந் துள்ளவனும், மானிடர்கள், தேவர்கள் அனைவர்க்கும் தலைவனுமாகிய சிவனின் அகண்ட வியாபகத் தன்மையை ஒருவரும் முழுதும் அறிந்து இயம்ப முடியாது.

33. பதிபல ஆயது பண்டு இவ் வுலகம்
விதிபல செய்து ஒன்றும் மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும்
மதி இலர் நெஞ்சினுள் வாடுகின்றாரே. 33

     அமைதியின்றி வாடுகின்றார்! உண்மைப் பொருளான சிவத்தை உணராது பல கடவுளர் களைப் பல கிரியை விதியால் வழிபடுவதாலும், தோத்திரப் பாடல்களைப் பாடுவதாலும் அமைதி கிடைக்காது. அதனால் பயனில்லை.

34. சாந்து கமழுங் *கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின்றேனே. 34

     எப்போதும் பரவி வழிபடுகின்றேன்! கலவைச் சாந்தில் வீசும் கத்தூரியின் மணம் போல் சிவபெருமான் தேவர்க்கு அருளிய உண்மை நெறி சிவமணம் கமழும். அத்தகைய உண்மையான நெறியில் செல்ல, சிவனின் ஆயிரம் திருநாமங்களை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பவர்களின் சீவனில் சிவமணம் எப்போதும் வீசும்.

* கவுரியின்

35. ஆற்றுகிலா வழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக்கும் கிழக்குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவும் ஆமே. 35

     ஈசான முகம் விளங்கும்! சிவனைப் போற்ற போற்ற - சிவன் சகஸ்ரதளத்தில் கவிழ்ந்துள்ள அஷ்டதள கமலத்தை நிமிரும்படி செய்து - உங்கள் எண்ணத்தை உலக முகத்தில் இருந்து மேல் முகமாகச் செய்து - உங்களது ஈசானமுகம் ஒளி மயமாக விளங்கச் செய்வான்.

36. அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பு இலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே. 36

     அருள் பெறலாம் !உயிர்கள் அனைவர்க்கும் தந்தையானவனை, நந்தியை, ஆரா அமுதம் போன்றவனை, வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளுவதில் தனக்கு ஒப்பில்லாதவனை, அச்சிவனை எந்த முறையில் வழிபட்டாலும் அந்த முறையில் ஈசனின் அருளைப் பெறலாம்.

37. நானும் நின்று ஏத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன்
வானில் நின்று ஆர் மதிபோல் உடல்உள் உவந்து
ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்றவாறே. 37

     இறைவன் கமலத்தில் வீற்றிருக்கும் திறன்! நாள்தோறும் இறைவனை நிலையாய் இருந்து வழிபட்டால், தழல் போன்ற மேனியையுடைய இறைவன் வெளிப்பட்டு நிற்பான். வானத்தில் சந்திரனைப் போல இறைவன் இந்த உடலில் சந்திரமண்டலமாகிய சகஸ்ரதளத்தில் ஜோதி மயமாக இயங்கிக் கொண்டிருக்கிறான்.

38. பிதற்று ஒழியேன் பெரியான் அரியானைப்
பிதற்று ஒழியேன் பிறவா உருவானைப்
பிதற்று ஒழியேன் எங்கள் பேர் நந்தி தன்னைப்
பிதற்று ஒழியேன் பெருமைத் தவன் *யானே. 38

     பிதற்றலைக் கைவிடேன்! ஒரு தாயின் வயிற்றில் பிறவாதவன், பெரியவன், அரியவன், உருவமுடையவன் ஆகிய சிவனை சகஸ்ரதளத்தில் நின்று இடைவிடாது தோத்திரம் செய்வதே பெரிய தவம்.

* மைத்தவந் தானே

39. வாழ்த்தவல்லார் மனத்துள் உறுசோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெருமான் என்று இறைஞ்சியும்
ஆத்தம் செய்து ஈசன் அருள் பெறலாமே. 39

     ஈசன் அருள் பெறலாம்! இறைவன் தன்னைத் திருவைந்தெழுத்தால் வணங்க வல்லவரின் திருவுள்ளத்தில் மிக்க அறிவுப் பேரொளியாய்த் தோன்றுவான். இறைவனை அன்பினால் நேசித்தும், வாயாரப் புகழ்ந்தும், அவனுக்குத் தன்னை முழுமையாகக் கொடுத்தும் வணங்கினால் இறைவன் அருளைப் பெறுவது எளிதாகும்.

40. குறைந்து அடைந்து ஈசன் குரைகழல் நாடும்
நிறைந்து அடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்
*மறைஞ்சு அடம் செய்யாது வாழ்த்த வல்லார்க்குப்
புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே. 40

     உடலில் புகுந்து நின்றனன் இறைவன்! ஆத்ம தத்துவத்தின் குறையை நினைந்து சிவனது திருவடியை வணங்கி வாழ்த்த வல்லார்க்குச் சிவன் " நீீ வேறு - உடம்பு வேறு " என்று உடலைப் பிரித்தறியும் ஆற்றலை அருளுவான்.

* மறஞ்சடஞ்

41. சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானைப்
புனம் செய்த நெஞ்சிடை போற்றவல்லார்க்குக்
கனம் செய்த வாள் நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கி நின்றானே. 41

     வணங்குவார் மனத்தகத்தான்! விந்து நீக்கத்தைத் தடுத்து உண்ட தேவர்பிரானாகிய சதாசிவமூர்த்தி நாதமயமாகி நின்று இருட்டை மாற்றி ஒளி மண்டலத்தை விளங்கச் செய்தான். அத்தகைய சிவன் ‘மனம் தூயராய்ப் போற்ற வல்லார்க்கு’ இனமாக வந்து பொருந்துவான்.

42. போய் அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயகனால் முடி செய்து அதுவே நல்கு
மாயகம் சூழ்ந்து வரவல்லர் ஆகிலும்
வேயன தோளிக்கு வேந்து ஒன்றுந்தானே. 42

     சிவன் இல்லறத்தாரிடமும் வந்து பொருந்துவான்! சிவனை இடைவிடாது தோத்திரம் செய்பவர் மாயையோடு கூடிய உலக சம்சாரப் பந்தத்தில் உழல்பவராயினும் அவ்விறைவன் அவர்களோடு வந்து பொருந்துவான்.

43. அரன்அடி சொல்லி அரற்றி அழுது
பரன்அடி நாடியே பரவிப் பன்னாளும்
உரன்அடி செய்து அங்கு ஓதுங்க வல்லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்து நின்றானே. 43

     பூரணமாக நிறைந்து நிற்பான்! சிவனது திருவருளைச் சிந்தித்து அவனது திருவடியைப் புகழ்ந்து பாடி அன்பினால் கசிந்துருகி சிவஞானத்தில் நிலைத்திருப்போர்க்குச் சிவன் அவரது மனத்தைச் செம்மைப்படுத்தி அவரது சீவனில் புகுந்து பூரணமாக நிறைந்திருப்பான்.

44. போற்றி என்பார் அமரர் புனிதன் அடி
போற்றி என்பார் அசுரர் புனிதன் அடி
போற்றி என்பார் மனிதர் புனிதன் அடி
போற்றி என் அன்புள் பொலிய வைத்தேனே. 44

     அன்பினுள் விளங்க வைத்தேன்! வானவரும், அசுரரும், மனிதரும் இறைவனை வாழ்க என அன்பின்றி வாழ்த்துவர். நான் அப்பெருமானை வணங்கி அன்பினுள் விளங்குமாறு நிலைபெறும்படி செய்தேன். சிவனது திருவடியை அன்போடு வணங்க வேண்டும்.

45. விதிவழி அல்லது இவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே. 45

     பகலவன் ஆவான்! உலகம் சிவன் விதித்த முறையின்படியே நடக்கின்றது. நமது வாழ்க்கையும் சிவன் விதித்தபடியே தான் நடக்கின்றது. அந்த சிவனை தோத்திரம் செய்து வழிபடுவோர்க்கு சிவன் முத்திநெறி காட்டியருளும் சிவசூரியனாவான்.

46. அந்திவண்ணா அரனே சிவனே என்று
சிந்தைசெய் வண்ணம் திருந்து அடியார் தொழ
முந்திவண்ணா முதல்வா பரனே என்று
*வந்திவ் வண்ணன் எம் மனம்புகுந் தானே. 46

     வணங்குபவர் மனம் புகுந்தான்! அந்தி வண்ணன், அரன், சிவம் என உருவமாக வழிபட்டாலும், முந்திவண்ணன்,முதல்வன், பரன் என அருவமாக வழிபட்டாலும், எவ்வண்ணம் வழிபட்டாலும் அவ்வண்ணம் வழிபடுபவர் மனம் புகுந்து அருளுபவன் சிவன்.

47. மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாதவர்க்கு இல்லை நின் இன்பந் தானே. 47

     வணங்குபவர் மனம் புகுந்தான்! இல்லறத்திலிருந்து இறைபணி செய்பவர் பெரிய தவத்தை யுடையவர்க்கு ஒப்பாவார். இடைவிடாது தியானத்தில் இருப்பவர் இறைவனது அன்பில் பொருந்தியிருப்பர். உலகவர் விவகார வேளையில் உலகத்திலும் மற்றைய நேரங்களில் சிவசிந்தனையிலும் இருந்தால் இல்வாழ்க்கை யானது அவரைப் பந்திக்காது. இல்லற வாழ்க்கையில் சிவசிந்தனையோடு இருந்தால் பேரின்பம் கிட்டும்.

48. அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியால் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்று மேவி நின்றேனே. 48

     அணையா விளக்கைப் பொருந்தியிருந்தேன்! இரவு, பகல் என்ற பேதமின்றி பூமியில் உள்ளோர்க்கு அருளும் மேலான என் தந்தையை அடியார் வணங்கும் தேவதேவனை என்னுடைய சிரசில் தியானித்துப் பொருந்தியிருந்தேன்.

49. பரை பசு பாசத்து நாதனை உள்ளி
உரை பசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத்
திரை பசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரை பசு பாசம் கடந்து எய்தலாமே. 49

     முத்தியை அடையலாம்! சீவனாகிய பசு ஆணவம், கன்மம், மாயையால் கட்டப்பட்டு துன்புறுவதை உணர்ந்து பதியாகிய சிவனை நினைந்து பொருந்தியிருந்தால் பாவக்கடலைக் கடந்து முத்திக் கரையை அடையலாம்.

50. சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான் என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்து நின்று
ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று
நாடுவன் *யானின் றறிவது தானே. 50

* நானின்

     வழிபடுபவர் செய்ய வேண்டியது! பாடியும், மலர்களைத் தூவி அர்ச்சித்தும் இறை சிந்தனை யில் ஆடியும் மனதில் வைத்து அன்பால் போற்றியும் சகஸ்ர தளத்தில் இறைவன் திருவடி கண்டு தியானித்தும் இவனே தேவதேவன் என நாம் அறிந்தபடியெல்லாம் இறைபணி செய்ய வேண்டும்.

51. வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. 1

     வேதத்தை ஓதி வீடு பெற்றனர்! வேதத்தில் நாம் ஓதத்தக்க நீதிகள் எல்லாம் உள்ளன. எனவே தர்க்கவாதத்தை விட்டு வேதத்தை ஓதி அனுபூதி மான்கள் முக்தி பெற வேண்டும்.

52. வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. 2

     வேதத்தை உரைத்த காரணம்!வேதத்தின் உட்கருத்தை அறியாது ஓதிக் கொண்டிருப்பவன் உண்மை வேதியராக மாட்டான்.

53. இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர்வாய் உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்கு உரு ஆகிய வேதியர் சொல்லும்
கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே. 3

     நுண்ணிய நிலையினன் சிவபெருமான்!மந்திரவடிவான அழகிய வேதத்தில் ஞானியர்க்குத் தேவை யான உள்ளம் உருக்கும் மந்திரங்களாயும் பிறரை அழிக் கும் கம்பீரமான மந்திரங்களாயும் சூக்கும நிலையில் நின்றவன் முக்கண்ணையுடைய சிவபெருமானாவான். பலனை விரும்பாத ஞானியர்க்கும் பலனை விரும்பும் இல்லறத்தார்க்கும் பலனை அளிப்பவன் சிவன் ஒருவனேயாவான்.

54. திருநெறி ஆவது சித்த அசித்து அன்றிப்
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குருநெறியாம் சிவமா நெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 4

     உபநிடதம் கூறும் நெறி !அறிவு அறியாமையற்ற, வீடுபேறாயுள்ள சிவனைப் பொருந்துமாறு குருவால் உணர்த்தப் பெறும் நெறியே தெய்வீகநெறி.

55. ஆற அங்கமாய் வரும் மாமறை ஓதியைக்
கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்
பேறு அங்கம் ஆகப் பெருக்குகின்றாரே. 5

     சிவனை உணர்வார் இலர்! வேதத்தை அருளிச் செய்த சிவனை நம் உடம்பின் பகுதி யாகக் கொண்டு அவனது இயல்பை உணர வேண்டும். சிவன் வெளியே இருப்பதாக வைத்து பயன் கருதி செய்யும் கருமங்கள் வினையைத்தான் பெருக்கும்.

56. பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியில் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே. 6

     புறத்தே போய் அழிவர்! பாட்டும் இசையும் ஆட்டமும் இறைவனது உண்மையை உணர அமைக்கப் பெற்றவை. இந்த உண்மை உணராது ஆடல் மகளிர், அவற்றுக்கான இசையின் புறத்தோற்றத்தில் மயங்குபவர், வேத நெறி காட்டும் உண்மை நெறி நில்லார்: விரதமில்லாதவராவார். அவர் வேள்வியில் விருப்பமுடையவராய் உண்மைப் பொருளை உணராது மாறுபாடுற்று அழிகின்றார்.

3. ஆகமச் சிறப்பு

57. அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன்
அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்
அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே. 1

     ஆகமங்களை அருளியவன்! உமாபாகன் இருபத்தெட்டு ஆகமங்களை அறுபத்தாறு பேர்களுக்கு உச்சியை நோக்கியுள்ள ஈசான முகத்திலிருந்து உபதேசித்து அருளினான்.

(சதாசிவ மூர்த்திக்கு ஐந்து முகங்கள்:- அவை 1. சத்தியோசாதம் 2. வாமதேவம் 3. அகோரம் 4. தற்புருடம் 5. ஈசானம்).

58. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்து எண் கோடி நூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணி நின்று அப்பொருள் ஏத்துவன் *யானே. 2

* நானே

     ஆகமத்தின் வழி! ஆன்மாக்களின் மீதுள்ள கருணையால் இறைவன் வழங்கிய இருபத்தெட்டு கோடியே நூறாயிரம் ஆகமங்கள் ஈசனது பெருமையை உரைக்கும். யானும் ஆகமத்தின் வழியைப் பின்பற்றி அப்பொருளை வணங்குவேன்.

59. பண்டிதர் ஆவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் *அறம் சொன்னவாறே. 3

* அரன்சொன்னவாறே

     சிவபெருமான் வெளிப்படுத்தியவை அறத்தை உரைப்பன! சூக்குமவடிவில் உள்ள கருத்துக்களே ஒலி வடிவில் மொழிகளாக உள்ளன. சிவன் சொல்லிய அறத்தை பதினெட்டு மொழிகளிலும் கருத்து கெடாமல் வெளிப்படுத்த அறிஞர்களால் முடியும்.

60. அண்ணல் அருளால் அருளுந் திவ்ய் ஆகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிது
எண்ணில் எழுபது கோடி நூறாயிரம்
எண்ணிலும் நீர் மேல் எழுத்து அது ஆகுமே. 4

     பயனற்றவை. சிவபெருமானால் அருளப்பட்ட கடவுள் தன்மை உடைய எழுபது கோடியே நூறாயிரம் ஆகமங்கள் தேவர்களின் அனுபவத்துக்கு வாராதவை. ஆகமத்தை அறிந்தாலும், அவற்றை அனுபவமின்றி அறிந்தால் பயனில்லை.

61. பரனாய்ப் பராபரம் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மம் தானே சொல் காலத்து
அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி
உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே. 5

     அறிவாய் விளங்குபவன்! உலகத்தைத் தாங்குபவனும், சிவபுண்ணியம் அருளு பவனும், தேவர் வணங்கி வழிபடுபவனுமாகிய சிவபெருமானே பரஞானம், அபரஞானம் அறிவித்து ஆகமத்தில் அறிவாய் விளங்குகின்றான்.

62. சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமேசர் தம்மில் தாம் பெற்ற
நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே. 6

     பரசிவத்திடமிருந்து பெற்றவை! சிவமாகிய பரம்பொருளிடமிருந்து சத்தி, சதாசிவர், மகேசர், உருத்திரர், திருமால், பிரமன் ஆகியோர் அவரவர் அறிவில் பெற்ற ஒன்பது ஆகமங்கள் எங்கள் குருநாதனாகிய நந்தியெம்பெருமான் வழி முறையாகப் பெற்றவை ஆகும்.

63. பெற்ற நல் ஆகமங் காரணங் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்
துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே. 7

     ஒன்பது ஆகமங்களின் பெயர்கள்! குருபரம்பரையில் பெற்ற ஒன்பது ஆகமங்களின் சாரமே திருமூலரின் திருமந்திரமாகும். அவற்றில் 1. காரணம் 2. காமிகம் 3. சிந்தியம் 4. சுப்பிரம் இவை நான்கும் சிவபேதம். 5. வீரம் 6. வாதுளம் 7. காலோத்ரம் 8. மகுடம் இந்த நான்கும் ருத்திர பேதம். 9. யாமளம் தந்திர சாஸ்திரம் என்றும் கூறுவர்.

64. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்இலி கோடி தொகுத்திடும் ஆயினும்
அண்ணல் அறைந்த அறிவு அறியாவிடின்
எண்இலி கோடியும் நீர்மேல் எழுத்தே. 8

     நீர் மேல் எழுத்தாகும்! இறைவன் அருளால் வந்த சிவாகமங்கள் கணக்கற்ற கோடி களாகத் தொகுத்துச் சொல்லப் பெற்றிருப்பினும் இறைவன் சொன்ன உண்மைப் பொருளை உணராவிடின் அவை அனைத்தும் நீர் மேல் எழுத்துப் போல் பயனற்றவை.

65. மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று
ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகையார்க்குக் கருணை செய்தானே. 9

     ஊழிக்காலத்தில் அருளினான்! சிவபெருமான் பராசக்திக்கு ஆகமப்பொருளை சிருட்டி தொடங்கும் முன் ஊழிக் காலத்தில் வடமொழியிலும் தென்மொழியிலும் உபதேசம் செய்தருளினான்.

66. அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்
சிமிட்டலைப் பட்டு உயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ் இரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே. 10

     சிவனை ஆகம அறிவால் அறிய இயலாது! ஆன்மாக்களை பந்தத்தில் விடுகின்ற முறைமையினையும், ஆன்மாக்களைப் பந்தத்தில் நின்று நீக்கும் முறைமையினை யும், கண் இமைத்தல் நின்று உயிர் போகின்ற முறைமை யினையும் தமிழ், வடமொழி இரண்டிலும் உணர்த்தப் பெறு கின்ற சிவனையும் ஆகம அறிவினால் அறிய முடியாது.

4. குரு பாரம்பரியம்

67. நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி *வியாக்ரமர்
என்று இவர் என்னோடு எண்மரும் ஆமே. 1

     நந்தி அருள் பெற்ற எண்மர்! சிவனிடம் உபதேசம் பெற்ற குருநாதர் எண்மராவர். அவர்கள் 1.சனகர் 2.சனந்தனர் 3.சனாதனர் 4.சனற்குமாரர் 5.சிவயோகமாமுனி 6.பதஞ்சலி 7.வியாக்ரபாதர் 8.திருமூலர்.

* வியாக்ரமன்

68. நந்தி அருளாலே நாதனாம் பேர் பெற்றோம்
நந்தி அருளாலே *மூலனை நாடினோம்
நந்தி அருளா அது என் செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட #யானிருந் தேனே. 2

* நாதனை
# நானிருந்

     நந்தி வழிகாட்ட நான் இருந்தேன்! சிவனருளால் மூலாதாரச் சக்கரத்தில் விளங்கும் உருத்திரனை அடையலாம். சிவன் வழிகாட்ட மூலாதாரத்தி லிருந்து மேலேறிச் சிரசின் மேல் நிலைபெறலாம். சிவனருள் எல்லாவற்றையும் செய்யும். சிவனது அருளால் குருநாதன் என்ற தகுதியையும் பெறலாம்.

69. மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி ஆமே. 3

     திருமூலரின் மாணவர் எழுவர்! திருமூலர் மூலம் திருமந்திரம் உபதேசம் பெற்ற ஏழுமாணாக்கர்கள். 1.மாலாங்கன் 2.இந்திரன் 3.சோமன் 4.பிரமன் 5.உருத்திரன் 6.காலாங்கி 7.கஞ்சமலையன்.

70. நால்வரும் நாலு திசைக்கொன்று நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் *யான்பெற்றது எல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதர் ஆனார்களே. 4

* நான்பெற்ற

     நால்வர் உபதேசம் செய்தல்! சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய சனகாதியர் நால்வரும் நான்கு திக்குகளுக்கு ஒருவராய்ச் சென்று தாம் பெற்ற அனுபவங்களைப் பிறர்க்கு உணர்த்தி மேன்மையுடைய குருநாதர்களானார்கள்.

71. மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் மூன்றொளி ஆகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்டுகிலானே. 5

     சிவபெருமான் செய்த உபதேச இயல்பு! இறைவன் சனகாதி நால்வருக்கு உபதேசித்தது துறவு நெறி. சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்கிரபாதர் மூவருக்கும் உபதேசம் செய்தது உலகுடன் இருந்து உலகுக்கு அருளும் நெறி. இரு நெறிகளிலும் பிறவி நீக்கம் ஒன்றே குறிக்கோளாகும். இரு நெறியையும் இணைப்பதே திருமூலர் நெறியாகும்.

72. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்தண் நியமங்கள் செய்யுமின் என்று அண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர் சடையோடே
அழுந்திய நால்வர்க்கு அருள் புரிந்தானே. 6

(இப்பாடல் 553-ம் பாடலாகவும் வந்துள்ளது)

     கடன்களைச் செய்ய உபதேசித்தல்! எட்டுத் திக்குகளிலும் மழை பெய்தாலும் யோகியர் கிரசில் விளங்கும் செவ்வொளியில் அழுந்தியிருத்தல் வேண்டும். செய்கருமங்களை விடாது செய்ய வேண்டும் என்று சிவன் சனகாதியர் நால்வருக்கும் உபதேசித்தருளினான்.

5. திருமூலர் வரலாறு

73. நந்தி இணையடி *யான்தலை மேற்கொண்டு
புந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்து
அந்தி மதிபுனை அரன் அடி நாள்தொறும்
சிந்தைசெய்து ஆகமம் செப்பலுற்றேனே. 1

* நான்தலை

     சிவபெருமானைத் தியானித்து நூலைத் தொடங்குகிறேன். பக்திநெறி - உருவ வழிபாடு. அநாகத சக்ர தியானம் - ஞானநெறி. அருவ வழிபாடு - ஆக்ஞா, சகஸ்ரதள தியானம். சிவபெருமானின் திருவருளால் திருமந்திரமாகிய ஆகமத்தைச் சொல்லத் தொடங்குகிறேன் - திருமூலர்.

74. செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பு இலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே. 2

     திருக்கூத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தேன்! சிவயோகம் பயில்பவர் தேகத்தைச் சூழவும் தேகத்து உள்ளும் ஒளிக்கதிர்கள் பாய்ந்து உள்ளும் புறமும் இணைவதை அறிவார். ஏழு ஆதாரங்களையும் ஒளிநெறி பற்றி உள்ளும் புறமும் ஒன்றுபடுத்தி "ஒளி மயமாக இருந்தேன்" என்கிறார் திருமூலர்.

75. இருந்தஅக் காரணம் கேள் இந்திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித்து அடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியினாலே. 3

     சிதாகாயத்தில் பொருந்தியிருந்தேன்! அண்டம் என்ற ஆகாயக் கூற்றில் சிவத்தை நோக்கி மேலேறும் போது கீழே சுருண்டு கிடந்த குண்டலினி நிமிர்ந்து மேல் செல்கிறது. மேலே சமாதிக்கு சென்று மீள்பவர் பேரறிவுடன் கூடிப் பின் பிரிந்து மீள்கின்றனர். ஏழு ஆதாரங்களிலும் பொருந்தியிருந்து அந்த ஏழு புவனங்களுக்கும் தலைவியாகிய அருமையான தவத்துக் குரிய சத்தியை சிதாகாயப் பெருவெளியில் பக்தியினாலே தரிசித்தபின் நான் அருளுடன் திரும்பினேன் என்கிறார் திருமூலர்.

76. சதாசிவந் தத்துவம் முத்தமிழ் வேதம்
*மிதா சனியாதிருந்தேன் நின்ற காலம்
இதா சனியாதிருந்தேன் மனம் நீங்கி
உதா சனியாது உடனே #உணர்ந்தோமால். 4

* நிதாசனி
# உணர்ந்தேமால்

     ஆராய்ச்சியால் உண்மையை உணர்ந்தேன்! உணவையும் மறந்து சதாசிவ தத்துவம், முத்தமிழ் வேதம் ஆகியவற்றில் அளவுக்கு மீறிய ஆராய்ச்சியால் மனம் தெளிந்து உண்மைப் பொருளை உணர்ந்திருந்தேன் என்கிறார் திருமூலர்.

77. மாலாங்கனே இங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்கமாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந்தேனே. 5

     ஐந்தொழிற் கூத்தைக் கூற வந்தேன்! பிரபஞ்ச சிருட்டிக்கு காரணமான ஆற்றல் நீலவொளியில் உள்ளது. நீல ஒளியில் இருந்தே பிரபஞ்சம் படைக்கப் படுகிறது. பிரபஞ்சத்தில் அறிவாகிய செவ்வொளி எல்லா உயிர்களிலும் கலந்துள்ளது. இந்த இரு ஒளிகளால் சூக்கும உலகங்களும் ஸ்தூல பூதங்களும் படைக்கப்பட்டு பஞ்ச கிருத்தியம் நடைபெறுகிறது. இந்த உண்மையை உணர்த்தவே வந்தேன் என்கிறார் திருமூலர்.

78. நேரிழை ஆவாள் நிரதிசய ஆனந்தப்
பேருடையாள் என் பிறப்பு அறுத்து ஆண்டவள்
சீருடையாள் சிவன் ஆவடு தண்துறை
சீருடையாள் பதம் சேர்ந்திருந்தேனே. 6

     இறைவியின் திருவடியைச் சேர்ந்திருந்தேன்! சிவபெருமான் சீவர்களைப் பக்குவம் செய்யும் பொருட்டு வீணாத்தண்டில் பொருந்தியிருக்கும் சத்தியின் திருவடியைச் சேர்ந்திருந்தேன்; சுழுமுனையில் விளங்கும் சிவசத்தியோடு பொருந்தியிருந்தேன் என்கிறார் திருமூலர்.

79. சேர்ந்திருந்தேன் சிவமங்கை தன் பங்கனைச்
சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடு தண்துறை
சேர்ந்திருந்தேன் சிவபோதியின் நீழலில்
சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே. 7

     சிவன் திருப் பெயரை எண்ணியிருந்தேன்! சிவனது திருநாமங்களை ஓதி சகஸ்ரதளத்தில் அம்மையப் பனை வழிபட்டு சிவமாகிய அறிவின் நிழலில் சேர்ந்திருந் தேன் என்கிறார் திருமூலர்.

80. இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என் நந்தி இணையடிக் கீழே. 8

     இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன்! தேவர்களும் துதிக்கும்படியான, இரவும் பகலுமற்ற சுயம்பிரகாச வெளியில் நந்தி தேவரின் திருவடியின் கீழ் எண்ணற்ற காலம் அமர்ந்திருந்தேன் என்கிறார் திருமூலர்.

81. பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே. 9

     தமிழ் செய்யுமாறு என்னைப் படைத்தான்! தன்னைப் பற்றித் தமிழில் ஆகமம் செய்யும் வண்ணம் தனக்கு நல்ல ஞானத்தை அளித்ததுடன் இறைவன் தனக்கு பிறவியையும் கொடுத்து அருளினான் என்கிறார் திருமூலர்.

82. ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்
ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
*யானும் இருந்தேன் நற்போதியின் கீழே. 10

* நானும்

     திருவடியின் கீழ் இருந்தேன்! ஏழு ஆதாரங்கள், விந்து, நாதம் ஆகிய ஒன்பதும் கடந்த நிலையில் சத்தியும் சிவமும் கலந்த சகஸ்ரதளத்தில் நின்று தோத்திரம் செய்து நல்ல அறிவுமயமான சிவனை வணங்கி சிவனது திருவடியின் கீழ் இருந்தேன் என்கிறார் திருமூலர்.

83. செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர் தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந்தேனே. 11

     திருமூலர் வந்த வழி! காமத்தை வெல்கின்ற அறிவு பொருந்திய ஞான முனிவ ரான சிவனை நினைந்து திருக்கைலாயத்திலிருந்து செல்லு கின்ற சூக்குமமாயுள்ள விண் வழியாக இவ்வுலகு வந்தேன் என்கிறார் திருமூலர்.

84. சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களின்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே. 12

     வேதச் சொல்லையும் பொருளையும் உணர்த்தல்! சிவபெருமான் வேதத்தின் சொல்லையும் பொருளையும் எனக்கு உணர்த்தி அருளினான் என்கிறார் திருமூலர்.

85. *யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே. 13

* நான் பெற்ற

     சிவம் வந்து உங்களுடன் பொருந்திவிடும்! ஆகாயத்தை இடமாகக் கொண்ட அறிவு சொரூபமான சிவத்தைப் பற்றிச் சொல்லப் போனால் அது உடலைப் பற்றிய உணர்வாகவுள்ள மந்திரமாகும். அந்த மறை பொருளைச் சிந்தித்தால் சிரசில் உணர்வு உண்டாகி விடும். அப்படி இறைவனைப் பற்றி நினைந்து “தான் அடைந்த இன்பத்தை இவ்வுலகமும் அடைவதாக” என்கிறார் திருமூலர்.

86. பிறப்பு இலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்று கை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடும் கூடிநின்று ஓதலும் ஆமே. 14

     நூலைக் கற்கத் தக்கவர்! பிறப்பிறப்பற்ற சிவனை சுழுமுனையில் கண்டவர் பக்தி யோடு திருமந்திரம் ஓதத் தகுந்தவர் ஆவர்.

87. அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான்
எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்
தங்கு மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே. 15

     உலகமும் உயிரும் வாழச் செய்வது திருமந்திரம்! இறைவன் உடல் சீராக இருக்கும் வண்ணம் உடலில் அங்கிக் குடரைச் சீராக வைக்கும் "சாடாராக்கினி"யை வைத்தான். ஏழுலகங்களும் சீராக இருக்கும் வண்ணம் "வடவாமுகாக்கினி"யை வைத்தான். எந்த குழப்பமும் இல்லாதிருக்க எல்லாப் பொருள்களையும் அடக்கி வைத்துள்ள திருமந்திரத்தை வைத்தான். உலகையும் உயிரையும் வாழவைக்க உதவுவது திருமந்திரம்.

88. அடிமுடி காண்பார் அயன் மால் இருவர்
படி கண்டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி
அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல
முடி கண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே. 16

     திருமாலும் பிரமனும் காண இயலாத வடிவு! 'சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண்போம்' என்று நினைத்து, அதற்கு முயன்ற பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும் இறைவனின் அடிமுடி காணாமல் மீளவும் பூமியில் கூடினர். 'நான் அடி காண்கிலேன்' என்று திருமால் உரைத்தார். 'நான் முடி கண்டேன்' என்று பிரமன் பொய் சொன்னான். திருமாலும் பிரமனும் கூட காண முடியாத சிறப்பினை உடையது இறைவனது வடிவமாகும்.

89. பெற்றமும் மானும் மழுவும் பிரிவு அற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்து
அற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பதமும் அளித்தான் எங்கள் நந்தியே. 17

     என் முடி மீது அடி சூட்டினான்! மேலான பரம்பொருளின் கற்பனையாய் அமைந்த இவ்வுலகில் குருபரன் ஒழிவினை நல்கித் திருவடி தீட்சைச் செய்தருளினான்.

90. ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு அத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் தன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட்டேனே. 18

     திருமந்திரத்தில் விளக்கப்பட்டவை! அறியப்படும் பொருளையும், அறிகின்ற அறிவையும், அறிகின்றவனையும், மாயையின் விவரங்களையும் சுத்த மாயையில் விளங்கும் பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை ஆகிய சர்வசத்தியின் கூட்டத்தையும், அவ்வித சத்திகளில் விளங்கும் சிவத்தையும், சொரூபசத்தியின் பிரபாவத்தையும் திருமந்திரத்தில் அறியலாம்.

91. விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன் சொற்போந்து
வளப்பில் கயிலை வழியில் வந்தேனே. 19

     அவன் ஆணைப்படி வந்தேன்! அசைவற்றிருக்கும் அறிவு மயமான சோதியான நடராச மூர்த்தியின் ஆணையினால் திருக்கையிலையில் இருந்து தென்னாடு வந்தேன் என்கிறார் திருமூலர்.

92. நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்
நந்தி அருளால் மெய்ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நானிருந்தேனே. 20

     மெய்ஞ்ஞானம் பெற்றேன்! சிவனின் அருளால் மூலாதாரத்தில் உள்ள உருத்திரனையும், பின் சிவனின் அருளால் சகஸ்ரதளத்தில் உள்ள சதாசிவமூர்த்தியையும் தரிசித்து மெய்ஞானம் பெற்று சிவன் அருளில் நிலை பெற்றிருந்தேன் என்கிறார் திருமூலர்.

93. இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே. 21

     திருமூலர் நாதாந்த நிலையில் விளங்கினார்! மூலாதாரத்தில் உள்ள சிவசத்தி சீவனை மேலே செலுத்தியபோது பிரணவத்தின் உச்சியை அடையும். நாத நிலை முடிவு பிரணவத்தின் முடிவாகும். பிரணவமாகிய நாதம் முடிந்த நாதாந்த நிலையில் பிரணவ உச்சியில் ஆன்மா சோதி சொரூபமாக விளங்கும். பிரணவம்: அகாரம், உகாரம் மற்றும் மகாரம் கலந்த ஓம். நாதாந்தநிலை: அகாரம், உகாரம், மகாரம், நாதம், விந்து ஐந்தும் கடந்த நிலை.

94. பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத்து இரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன் எம்மானை
இயற்றிகழ் சோதி இறைவனுமாமே. 22

     எப்போதும் இறைவனைப் புகழ்வேன்! இரவிலும் பகலிலும் சுயம்பிரகாசமாய், ஒளி வடிவாய் இருக்கும் சிவனை புகழ்ந்து தியானித்து சிவனை அடைய முயல வேண்டும்.

6. அவையடக்கம்

95. ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
யாரறிவார் இந்த அகலமும் நீளமும்
பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேரறியாமை விளம்புகின்றேனே. 1

     மூலத்தை அறியேன்! ஏகமாய், சத்தாய், சித்தாய், ஆனந்தமாய் உலக முழுவதும் தோன்றவும் ஒடுங்கவும் நிலைக்களமாகிய கடவுளின் பெரு மையையும் நீளத்தையும் அகலத்தையும் பரப்பினையும் யார் அறிய வல்லவர்? தனக்கென நாமமும் ரூபமும் இல்லாத பெரிய சுடரின் அடியையும் முடியையும் யார் அறிய வல்லவர்?

96. பாடவல்லார் நெறி பாட அறிகிலேன்
ஆடவல்லார் நெறி ஆட அறிகிலேன்
நாடவல்லார் நெறி நாட அறிகிலேன்
தேடவல்லார் நெறி தேடகில்லேனே. 2

     நெறியை அறியேன்! பாடும் நெறியில் புகழைப் பாடவோ, பக்தி நெறியில் ஆடவோ, போக நெறியில் நாடவோ, ஞான நெறியில் தத்துவத்தை ஆராயவோ அறியாதவர் உய்வு பெறுவது எங்ஙனம்?

97. மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே. 3

     இறைவனை நாம் உணர முடியாது! நிலைபேறு உடைய வேதத்தை வாக்கினால் ஓதுபவர் சுவரத்தினுள் இனிய நாதரூபமாக எழுகின்ற ஈசனை, அப் பெருமானை நுண்மையிலிருந்து பரு உடலைப் படைத்த பிரமனும், திருமாலும் உணர முடியுமோ? "வேதஸ்வரத் தினில் நாதரூபமாக விளங்கும் இறைவனை நாம் உணர முடியாது"

98. தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
*ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமையால் இப் பயனறியாரே. 4

* இத்துடன்

     பயனை அறியாதவர்! இறைவனை அன்னியப் பொருளாக பாவித்து வழிபடும் முனிவர்களும் தேவர்களும் சிவனை அறியமுடியாது. சிவனை சீவனுக்குள் அகங்காரமின்றிக் காண்பவரே சிவனை அறிய முடியும்.

7. திருமந்திர தொகைச் சிறப்பு

99. மூலன் உரைசெய்த மூவாயிரந் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே. 1

     திருமந்திரம் மூவாயிரம் பாடல்கள்! மூவாயிரம் திருமந்திரங்களையும் பொருளுணர்ந்து காலை எழுந்தவுடன் ஓதினால் சிவனை அடையலாம்.

100. வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவாயிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவாயிரம் பொது
வைத்த சிறப்புத் தரும் இவை தானே. 2

     முத்தி நிலை கூறும் மூவாயிரம் பாடல்கள்! திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. அது ஒன்பது தந்திரங்களாக உள்ளது. முதல் ஐந்து தந்திரம் பொது. பின் நான்கு தந்திரம் சிறப்பு. இந்த பொது, சிறப்பு தந்திரங்களை, மூவாயிரம் பாடல்களை ஓதுவார்க்கு அது இம்மை மறுமைப் பயன் அளிக்க வல்லது.