உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 31 ...
3001 உலகமது ஒத்துமண் ஒத்துயர் காற்றை அலர்கதிர் அங்கிஓத்து ஆதிப் பிரானும் நிலவிய மாமுகில் நீர்ஒத்து மீண்டுஅச் செலவுஒத்து அமர்திகைத் தேவர் பிரானே. 20
3002 பரிசறிந்து அங்குளன் அங்கி அருக்கன் பரிசறிந்து அங்குளன் மாருதத்து ஈசன் பரிசறிந்து அங்குளன் மாமதி ஞானப் பரிசறிந்து அந்நிலம் பாரிக்கும் ஆறே. 21
3003 அந்தம் கடந்தும் அதுஅது வாய்நிற்கும் பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள் தந்த உலகெங்கும் தானே பாராபரன் வந்து படைக்கின்ற மாண்பது வாமே. 22
3004 முத்தண்ண ஈரண்ட மேமுடி ஆயினும் அத்தன் உருவம் உலகுஏ ழெனப்படும் அத்தனின் பாதாளம் அளவுள்ள சேவடி மத்தர் அதனை மகிழ்ந்துஉண ராரே. 23
3005 ஆதிப் பிரான்நம் பிரான்அவ் அகலிடச் சோதிப் பிரான்சுடர் மூன்றுஒளி யாய்நிற்கும் ஆதிப் பிரான்அண்டத்து அப்புறம் கீழவன் ஆதிப் பிரான்நடு வாகிநின் றானே. 24
3006 அண்டம் கடந்துஉயர்ந்து ஓங்கும் பெருமையன் பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன் தொண்டர் நடந்த கனைகழல் காண்டொறும் தொண்டர்கள் தூய்நெறி தூங்கிநின் றானே. 25
3007 உலவுசெய் நோக்கம் பெருங்கடல் சூழ நிலம்முழுது எல்லாம் நிறைந்தனன் ஈசன் பலம்முழுது எல்லாம் படைத்தனன் முன்னே புலம்முழு பொன்னிற மாகிநின் றானே. 26
3008 பராபர னாகிப் பல்லூழிகள் தோறும் பராபர னாய்இவ் அகலிடம் தாங்கித் தராபர னாய்நின்ற தன்மை யுணரார் நிராபர னாகி நிறைந்துநின் றானே. 27
3009 போற்றும் பெருந்தெய்வம் தானே பிறரில்லை ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும் வேற்றுடல் தானென்றும் அதுபெருந் தெய்வமாம் காற்றது ஈசன் கலந்து நின்றானே. 28
3010 திகையனைத் தும்சிவ னேஅவ னாகின் மிகையனைத் தும்சொல்ல வேண்டா மனிதரே புகையனைத் தும்புறம் அங்கியிற் கூடு முகையனைத் தும்எங்கள் ஆதிப் பிரானே. 29
3011 அகன்றான் அகலிடம் ஏழும்ஒன்றாகி இவன்தான் எனநின்று எளயனும் அல்லன் சிவன்தான் பலபல சீவனு மாகி நவின்றான் உலகுறு நம்பனும் ஆமே. 30
3012 கலையொரு மூன்றும் கடந்தப்பால் நின்ற தலைவனை நாடுமின் தத்துவ நாதன் விலையில்லை விண்ணவ ரோடும் உரைப்ப உரையில்லை உள்ளுறும் உள்ளவன் தானே. 31
3013 படிகால் பிரமன்செய் பாசம் அறுத்து நெடியான் குறுமைசெய் நேசம் அறுத்துச் செடியார் தவத்தினில் செய்தொழில் நீக்கி அடியேனை உய்யவைத்து அன்புகொண் டானே. 32
3014 ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும் வாச மலர்போல் மருவி நின் றானே. 33
3015 இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறை நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன் தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே. 34
3016 உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும் கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும் வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம் அள்ளற் கடலை அறுத்துநின் றானே. 35
3017 மாறெதிர் வானவர் தானவர் நாடொறும் கூறுதல் செய்து குரைகழல் நாடுவர் ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும் வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே. 36
3018 விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன் கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன் பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன் எண்ணில் ஆனந்தமும் எங்கள் பிரானே. 37
3219 உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல் நித்திலச் சோதியன் நீலக் கருமையன் எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச் சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே. 38
3020 நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன் அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம் மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம் புறம்பல காணினும் போற்றகி லாரே. 39
3021 இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன் பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன் கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு எங்குநின் றான்மழை போல்இறை தானே. 40
3022 உணர்வது வாயுவே உத்தம மாயும் உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப் புணர்வது வாயும் புல்லிய தாயும் உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே. 41
3023 தன்வலி யால்உல கேழும் தரித்தவன் தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன் தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான் தன்வலி யாலே தடம்கட லாமே. 42
3024 ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை ஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே. 43
3025 * பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக் குண்டாலம் காயத்துக் குதிரை பழுத்தது உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள் பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே. 44 * விண்டாலம் 22. சர்வ வியாபி
3026 ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி ஆயும் அறிவையும் மாயா உபாதியால் ஏய பரிய புரியும் தனதுஎய்தும் சாயும் தனது வியாபகம் தானே. 1
3027 நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும் ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர் தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே 2
3028 கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி உடலிடை வைகின்ற உள்ளுறு * தேவனைக் கடலின் மலிதிரைக் காணலும் ஆமே. 3 * தேனைக்
3029 பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித் தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும் இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம் பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே. 4
3030 உறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டு இறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும் சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி பெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே. 5
3031 பற்றி னுள்ளே * பரமாய பரஞ்சுடர் முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரு மற்றவ னாய்நி ன்ற மாதவன் தானே. 6 * பரமாய்ப்
3032 தேவனும் ஆகும் திசைதிசை * பத்துளும் ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும் ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும் நாவனும் ஆகி நவிற்றுகின் றானே. 7 * பத்தையும்
3033 நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும் காக்கும் அவனித் தலைவனும் அங்குள நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி போக்கும் வரவும் புணரல் லானே. 8
3034 செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி ஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும் கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன் ஒழிந்தில * னேழுலகு ஒத்துநின் றானே. 9 * கேழுல
3035 உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலனும் அவனே இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 10
3036 புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை நலமையின் ஞான வழக்கமும் ஆகும் விலமையில் வைத்துள் வேதியர் கூறும் பலமையில் எங்கும் பரந்துநின் றானே. 11
3037 விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன் மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும் தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர் கண்ணவ னாகிக் கலந்துநின் றானே. 12
3038 நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல் நின்றனன் தானே வளங்கனி யாயே. 13
3039 புவனா பதிமிகு புண்ணியன் எந்தை அவனே உலகில் அடர்பெரும் பாகன் அவனே அரும்பல சீவனும் ஆகும் அவனே இறையென மாலுற்ற வாறே. 14
3040 உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும் விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும் கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே. 15
3041 எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப் பண்ணும் திறனும் படைத்த பரமனைக் கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது உண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே. 16
3042 இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம் உருக்கொடு தன்னடு ஓங்கஇவ்வண்ணம் கருக்கொடு எங்கும் கலந்திருந் தானே திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே. 17
3043 பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன் செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன் * அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி # பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே. 18 * நலவியன் # பலவில காய்
3044 அதுஅறி வானவன் ஆதிப் புராணன் எதுஅறி யாவகை நின்றவன் ஈசன் பொதுஅது வான புவனங்கள் எட்டும் இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே. 19
3045 நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம் தூரும் உடம்புறு சோதியு மாய் உளன் பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை ஊரும் சகலன் உலப்பிலி தானே. 20
3046 மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ் மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம் மூலன் உரைசெய்த முப்பது உபதேசம் மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே. 21 23. வாழ்த்து
3047 வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள் வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. 1 ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று மிகைப் பாடல்கள் 1. உரை நூல்களில் காணப்பட்ட பாடல்கள் (3048-3094 செய்யுட்களுள் 3048- பெருந்திரட்டு குறுந்திரட்டிலும், 3049, 3050- வைராக்கிய தீப வுரையிலும், 3051 நிட்டானு பூதி வுரையிலும், 3052-3057 - அவிரோத வுந்தியாருரையிலும், 3058-3067 (தருமையாதீன வெளியீடு) முத்தி நிச்சயப் பேருரையிலும் 3068-3094 (திருவாவடுதுறை ஆதீன வெளியீடு) திருமந்திரம் கயிலாய சித்தர் உரையிலும் காணப்படுவன.)
3048 ஆறு சமய முதலாஞ் சமயங்கள் ஊற தெனவும் உணர்க உணர்பவர் வேற தறவுணர் வார் மெய்க் குருநந்தி ஆறி யமைபவர்க் கண்ணிக்குந் தானே. 1
3049 உடலாங் குகையில் உணர்வாகும் பீடத் தடலார் சமாதி இதயத்த தாக நடமா டியகுகை நாடிய யோகி மிடையாகா வண்ணமே சாதிக்கு மெல்லவே. 2
3050 நிற்றலிருத்தல் கிடத்தல் நடையோடல் பெற்ற வக்காலுந் திருவருள் பேராமல் சற்றியன் ஞானந்தந் தானந்தந் தங்கவே உற்ற பிறப்பற் றொளிர் ஞான நிட்டையே. 3
3051 நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம் நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம் நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி நாயோட்டு மந்திரம் நாமறி யோமே. 4
3052 இணங்க வேண்டா இனியுல கோருடன் நுணங்கு கல்வியும் நூல்களும் என் செயும் வணங்க வேண்டா வடிவை யறிந்த பின் பிணங்க வேண்டா பிதற்றை யொழியுமே. 5
3053 எவ்விடத் துந்தம் பணியின்மை கண்டுளோர் எவ்விடத் தும்பணி யீசன் பணியென்றே அவ்விடத் தைங்கரு மத்தால் அறிதலால் உவ்விடத் தோருக்கோர் உபாய மில்லையே. 6
3054 ஒத்த சமயங்கள் ஓராறு வைத்திடும் அத்த னொருவனாம் என்ப தறிந்திலர் அத்தன் ஒருவனாம் என்ப தறிந்திடின் முத்தி விளைக்கு முதல்வனு மாமே. 7
3055 முதலொன்றா மானை முதுகுடன் வாலுந் திதமுறு கொம்பு செவிதுதிக் கைகால் மதியுடன் அந்தகர் வகை வகை பார்த்தே அது கூறலொக்கும் ஆறு சமயமே. 8
3056 பொங்கும் இருள் நீக்கும் புண்ணியக் கூத்தனை எங்குமாய் நின்றாடும் ஏகம்பக் கூத்தனைக் கங்குல் பகலினுங் காணாத கூத்தனை இங்கென் இடமாக யான் கண்டவாறே. 9
3057 வாயு விருந்திட வாயு விருந்திடு மாயு விருந்திடக் காய மிருந்திடும் காய மிருந்தாற் கருத்து மிருந்திடு மேய வறிவுணர் வுற்றால் வினையின்றே. 10
3058 அரனவன் பாதல மாதி சிவானந்தம் வருமவை சத்திகள் மூன்றாய் வகுத்திட் டுரனுறு சந்நிதி சேட்டிப்ப வென்றிட் டிரனுறத் தோயாச் சிவாநந்தி யாமே. 11
3059 அன்பு சிவமென் றறியார் இரண்டென்பர் அன்பு சிவமென் றறிவார்க் கிரண்டில்லை அன்பு சிவமென் றறிவால் அறிந்த பின் அன்பே சிவமாய் அறிந்து கொண்டேனே. 12
3060 ஆவி இருவகை ஆண்பெண்ண தாகி மேவி இருவர் விருப்புறு மாறுபோல் தேவியுந் தேவனுஞ் சேர்ந்தின்ப ரூபகம் ஆவிக்கும் வேறே ஆனந்த மாமே. 13
3061 எட்டான வுட்சமயம் மினவமா மாயை எட்டாம் புறச்சம யத்துடன் யாவையும் தொட்டான மாயை இருமாயை தோயாது விட்டார் சிவமாவர் வேதாந்தப் போதரே. 14
3062 எந்தை பிரான்குணம் எண்ணிலி கோடிகள் எந்தை பிரான்சத்தி எண்ணிலி யாகினும் எந்தை பிரான்றனை யான்காண வந்துழி எந்தை பிரானலா லியாதொன்றுங் காணேனே. 15
3063 கண்ணின் மணியாடு பாவைஎம் மீசனை உண்ணின் றுணரவல் லாரவர் கட்கு விண்ணின்று தூறும் உலக மது கடந்(து) எண்ணும் பரிசினோ டெண்குண மாமே. 16
3064 குணக்குக் குடக்குத் தெற் குத்தரமேல் கீழ்பால் இணக்கத் தகுஞ்சைவ மாகியா றென்பர் தணக்கத் தகுஞ்சிவாத் துவிதஞ்சம் மேளங் கணக்கொடுமுன் னாறுங் காணவொட்டாமே. 17
3065 தேனுக்குள் இன்பஞ் சிவப்போ கறுப்போ வானுக்குள் ஈசனைத் தேடு மதியிலீர் தேனுக்குள் இன்பஞ் செறிந்திருந் தாற்போல் ஊனுக்குள் ஈசன் ஒளித்திருந் தானே. 18
3066 பண்டங்க ளெண்பத்து நான்குநூ றாயிரம் துண்டஞ் செய்யாரைத் தொடர்ந்துயி ராய்நிற்குங் கண்டவைதன்னிற் கலந்துண்ணேன் நானென்(று) உண்டியு மாகி ஒருங்கி நின்றானே. 19
3067 பவமாம் பரிசு பலபல காட்டுந் தவமா நெறியில் தலைவரு மான நவநாத சித்தரு நந்தி அருளால் சிவமாம் பரிசு திகழ்ந்துசென் றாரே. 20
3068 காணிப் பொன்கொண்டு கடைகடை தோறும் வாணிபஞ் செய்து மயங்கித் திரிவேனை ஆணிப் பொன்னான அறிவை யறிந்தபின் மாணிக்கம் பெற்று மகிழ்ந்திருந் தேனே. 21
3069 வானுக்குள் ஈசனைத் தேடு மருளர்காள் தேனுக்குள் இன்பம் சிவப்போ கறுப்போ தேனுக்குள் இன்பம் சிறந்திருந் தாற்போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே. 22
3070 எட்டும் இரண்டும் அறியாத என்னை எட்டும் இரண்டும் அறிவித்தான் என் நந்தி எட்டும் இரண்டும் அறிவால் அறிந்த பின் எட்டும் இரண்டும் இலிங்கம தாமே. 23
3071 வாழை பழுத்துக் கிடக்குது வையகம் வாழையைச் சூழத் தாழ்கோத்து நிற்குது தாழைத் திறந்து கனியுண்ண மாட்டாதார் தாழம் பழத்துக்குத் தன்னாண்ட வாறே. 24
3072 கள்ள வழியில் விழுந்த விளாங்கனி கொள்ளச் சென் றைவரும் குழியில் விழுந்தனர் தெள்ளிய ஞானி தெளிவுறக் கண்டபின் பிள்ளைகள் ஐவரும் பிதற்றொழிந் தாரே. 25
3073 உலையொக்கக் கொல்லன் ஊதும் துருத்திபோல் கலையொக்கப் பாயும் கருத்தறிவார் இல்லை கலையொக்கப் பாயும் கருத்தறி வாளர்க்கு நிலையொக்கச் சீவன் நிறுத்தலும் ஆமே. 26
3074 ஒன்றே கலப்பை உழவெரு தஞ்சுண்டு ஒன்றைவிட் டொன்று உழன்று திரியாது ஒன்றைவிட் டொன்றை உழுதுண்ண வல்லாருக் கன்றுநட் டன்றே அறுக்கலு மாமே. 27
3075 வேராணி யற்று விளைந்தவித் தின்மரம் பாராணி எங்கும் பரந்தே இருக்குது தேராணிக் குள்ளே தெளிவுற நோக்கினால் ஓராணி யாக உகந்திருந்தானே. 28
3076 தஞ்சாவூர்த் தட்டான் தலத்துக்கு நாயகன் மஞ்சாடி கொள்ளான் வழக்கன்றி மன்றேறான் துஞ்சான் உறங்கான் தொழில் செய்யான் சோம்பான் அஞ்சாறு நாளைக் கவதியிட் டானே. 29
3077 மத்தக மொத்த சிலந்தி வளையத்துள் ஒத்தங் கிருந்து உயிருணும் வாறுபோல் அத்தனும் ஐம்புலத் தாடகத் துள்ளிருந்து சத்த முதலைந்தும் தானுண்ட வாறே. 30
3078 சொன்னம் குகைமூன்று தானஞ்சு பச்சிலை மின்ன அரைத்துவை வெள்ளிபொன் னாயிடும் வன்னம் பதியிந்த வாசிகொண் டூதிடில் சொன்னம் வாஞ்சித் தொன்றுமென் சிந்தையே. 31
3079 இருவர் இருந்திடம் எண்டிசை அண்டம் அரிபிர மாதிகள் ஆரும் அறிந்திவர் பரிதியும் சோமனும் பாருமும் மிடத்தே கருதி முடிந்திடம் சொல்லவொண்ணாதே. 32
3080 கோத்த கோவை குலையக் குருபரன் சேர்த்த சேவடி சென்னியில் வைத்தொரு வார்த்தை சொல்லி வழக்கறுத் தாண்டவன் பார்த்த பார்வை பசுமரத் தாணியே. 33
3081 வேதாந்தஞ் சித்தாந்தம் என்னும் இரண்டுக்கும் போதாந்த மான புரந்தரன் வாழ்வொன்று நாதாந்த மான ஞானங்கை கூடாதேல் சேதாந்த மான செனனம் ஒழியாதே. 34
3082 ஆதாரம் ஆறல்ல அப்பால் நடமல்ல ஓதா ஒளியல்ல உன்மந் திரமல்ல வேதா கமத்தில் விளங்கும் பொருளல்ல சூதான நந்தி சொல்லுப தேசமே. 35
3083 உருகிப் புறப்பட் டுலகை வலம்வந்து சொருகிக் கிடக்கும் துறையறி வாரில்லை சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு உருகிக் கிடக்குமென் உள்ளன்பு தானே. 36
3084 எட்டினில் எட்டு மதிலொட் டிரட்டியும் கட்டியை விட்டுக் கலந்துண்ண மாட்டாமல் பட்டினி விட்டும் பலவிதம் தேடியும் எட்டும் இரண்டும் அறியாத மாக்களே. 37
3085 கோயிலும் அஞ்சுன கோபுரம் மூன்றுள கோயில் அடைக்கக் கதவோ ரிரண்டுள கோயில் திறந்து கும்பிட வல்லார்க்குக் கோயிலுக் குள்ளே குடியிருந் தானே. 38
3086 நாதன் இருக்கும் நடுமண்ட பத்துள்ளே நாதாங்கி இல்லாமல் நாலஞ்சு வாசல் ஆதார மேதென் றறியவல் லார்க்கு வேதாவின் ஓலை வீணோலை யாமே. 39
3087 அநாதி சொரூபி யாகிய ஆன்மாத் தனாதி மலத்தால் தடைப்பட்டு நின்றன தனாதி மலமும் தடையற நீங்கிடில் அநாதி சிவத்துடன் ஒன்றான வாறே. 40
3088 போக்கு வரவற்ற பூரண காரணன் நோக்க வரிய நுண்ணியன் நுண்ணியன் தேக்கு மலத்தன் சிவனுக் குரியவன் பாக்கில் வியாபி பலவணுத் தானே. 41
3089 கரடிகள் ஐந்தும் கடுங்கானம் வாழ்வன திருடி இராப்பகல் தின்று திரிவன கரடிகள் ஐந்தும் கடைத்தலைப் பட்டால் குருடியர் குத்தினும் குண்டுர லாமே. 42
3090 உச்சிக்கு மேலே உணர்வுக்கும் கீழே வைச்ச பொருளின் வகையறிவார் இல்லை வைச்ச பொருளின் வகையறி வாளர்க்கு எச்ச எருதும் இளவெரு தாமே. 43
3091 வாசலின் கீழே படுகுழி மூன்றுள ஊசி யிருக்கும் பழஞ்சோற் றிருங்குழி ஊசி யிருக்கும் பழஞ்சோற்றை நாய்தின்ன வாசல் இருந்தவர் வாய்திற வாரே. 44
3092 முத்துப் பவளம் பச்சையென் றிவை மூன்றும் ஒத்துப் புணரும் உணர்வை அறியார் ஒத்துப் புணரும் உணர்வை அறிந்தபின் கொத்துப் படுங்கொக்குப் போற்குரு வாமே. 45
3093 பண்ணாத பேரொளிக் கப்புறத் தப்புறம் எண்ணா யகனார் இசைந்தங் கிருந்திடம் உன்னா வெளிய துரைசெயா மந்திரம் சொன்னான் கழல்முன் னறிந்தமர்ந் தோமே. 46
3094 ஆரை பழுத்துக் கிடக்குது வையகம் ஆரையைச் சூழ நீர்கோத்து நிற்குது ஆரை பறித்துக் கறியுண்ண மாட்டாமல் கீரைக்கு நெல்லிட்டுக் கெடுகின்ற வாறே. 47 2. ஏட்டுப் பிரதியில் காணப்பட்ட பாடல்கள் (3095 முதல் 3108 வரையுள்ள செய்யுட்கள், கையேட்டுப் பிரதிகளில் காணப்பட்டவை என்று சென்னை சைவ சித்தாந்த மகாசமாஜம் திருமந்திரம் 3-ம் பதிப்பில் கண்டவையாகும்)
3095 அத்தாளத் தாள மதிலசை விற்கால் ஒத்தாட வோவாதி யாவேத மூடுற வைத்தாடி கூடல் தினமான மாகவே சித்தான நந்திதென் னம்பலத் தாடுமே. 48
3096 ஆகஞ் சிவானந்த வைவொளி பூரிக்கி லேக வொளியா மிதய கமலத்தே தாகமுஞ் சோகமுஞ் சார்கலை யுன்னி லாக மனங்கசிந் தானந்த மாகுமே. 49
3097 ஆணவ மூலத் தகார முதித்திடப் பேணி யுகாரங் கலாதி பிறிவிக்கத் தாணு மகாரஞ் சதாசிவ மாகவே ஆணவ பாச மடர்தல் செய்யாவே. 50
3098 உண்ண லுறங்க லுலாவ லுயிர் போதல் நண்ணல் நரக சுவர்க்கத்து நாட்டிடப் பண்ண லவன் பணி யாலிவன் பாலிடை திண்ணிதிற் செய்கை சிவன் பணியாமே. 51
3099 ஓடும் இருக்குங் கிடக்கும் உடனெழுந் தாடும் பறக்கு மகண்டமும் பேசிடும் பாடும் புறத்தெழும் பல்லுயி ரானந்தம் கூடும் பொழுதிற் குறிப்பிவை தானே. 52
3100 சித்தஞ் சிவமாம் சிவஞானி சேர்விடம் சுத்தச் சிவாலயம் தொல்பாவ நாசமாம் அத்த மழையக மானந்த மேலிடும் முத்தம் பெருகும் முழுப்பொரு ளாகுமே. 53
3101 திருமந் திரமே சிதம்பரந் தானுந் திருமந் திரமே சிறந்த உபாங்கந் திருமந் திரமே திருக்கூத்தின் செய்கை திருமந் திரமே திருமேனி தானே. 54
3102 திருமேனி தானே திருவரு ளாகுந் திருமேனி தானே திருஞான மாகுந் திருமேனி தானே சிவநேய மாகுந் திருமேனி தானே தெளிந்தார்க்குச் சித்தியே. 55
3103 நெற்றி நடுவுள் நினைவெழு கண்டமு முற்ற விதையமு மோதிய நாபிக்கீழ்ப் பெற்ற துரியமும் பேசிய மூலத்தை யுற்ற வதீத மொடுங்கு முடனே. 56
3104 பத்தி விதையிற் பயிரொன்று நாணத்தைச் சித்தி தருவை ராக்கத்தாற் செய்தறுத் துய்த்த சமாதி சிவானந்த முண்டிடச் சித்தி திகழ்முத்தி யானந்தஞ் சித்தியே. 57
3105 பள்ள முதுநீர் பழகிய மீனினம் வெள்ளம் புதியவை காண விருப்புறும் கள்ளவர் கோதையர் காமனோ டாடினும் உள்ளம் பிரியா ஒருவனைக் காணுமே. 58
3106 பாசம தாகும் பழமலம் பற்றற நேசம தாய் நின்ற வாறாறு நீங்கிடக் காசமி லாத குணங்கே வலசுத்த மாசற நிற்ற லதுசுத்த சைவமே. 59
3107 மனவு நனவு கனவது புந்தி நினைவி லகந்தை சுழுனையுள் நிற்றல் அதனை யறிசித்தந் துரியமிம் மூன்றின் நினைவறல் மற்றது நேயத் தளவே. 60
3108 மேலைத் திருவம் பலத்தா மிகுகலை கோலிப் பரானந்த நாதாந்தக் கூத்தநிற் சீலித்த சித்தர் சிவயோக சித்தராய் மாலற்ற வர்சுத்த சைவத்து வாழ்வரே. 61 திருமூலர் திருமந்திரம் முற்றிற்று திருச்சிற்றம்பலம் நம்பிரான் திருமூலன் திருவடிகளே வாழ்க திருமூல நாயனார் துதி
ஐய மாக்கடல் ஆழ்ந்த உயிர்க்கெலாம் கையில் ஆமல கம்மெனக் காட்டுவான் மையல் தீர்திரு மந்திரஞ் செப்பிய செய்ய பொற்றிரு மூலனைச் சிந்திப்பாம். - பதிபசுபாச விளக்கம்
திருமூல தேவனையே சிந்தைசெய் வார்க்குக் கருமூலம் இல்லையே காண். - தனிப் பாடல் |