பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் ... தொடர்ச்சி - 28 ...
2701 வாயொடு கண்டம் இதயம் மருவுந்தி ஆய இலிங்கம் அவற்றின்மேல் அவ்வாய்த் தூயதோர் துண்டம் இருமத் தகம்செல்லல் ஆயதுஈ றாம்ஐந்தோடு ஆம்எழுத்து அஞ்சுமே. 4
2702 கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக் கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும் அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே. 5
2703 ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில் ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார் சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும் வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே. 6
2704 தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும் வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர் துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே. 7
2705 குருவழி யாய குணங்களில் நின்று கருவழி யாய கணக்கை அறுக்க வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே. 8
2706 வெறிக்க வினைத்துயிர் வந்திடும் போது செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும் குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும் குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே. 9
2707 நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று மஞ்சு தவழும் வடவரை மீதுரை அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே. 10
2708 பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர் பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும் அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே. 11 6. சூக்கும பஞ்சாக்கரம்
2709 எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளிய ஒதிச்சிவாயநம என்னும் குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே. 1
2710 சிவன்சத்தி சீவன் செறுமல மாயை அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச் சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே. 2
2711 சிவன்அரு ளாய சிவன்திரு நாமம் சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை சிவன்முத லாகச் சிறந்து நிரோதம் பவமது அகன்று பரசிவன் ஆமே. 3
2712 ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ் ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால் தீதில் சிவஞான யோகமே சித்திக்கும் ஓதும் சிவாய மலமற்ற உண்மையே. 4
2713 நமாதி நனாதி திரோதாயி யாகித் தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச் சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே நமாதி சமாதி * சிவவாதல் எண்ணவே. 5 * சிவமாதல்
2714 அருள்தரு * மாயமும் அத்தனும் தம்மில் ஒருவனை # யீன்றவள் உள்ளுறும் மாயை திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும் அருவினை தீர்ப்பதும் $ அவ்வெழுத் தாமே. 6 * மாயனும் # யீன்றவர் $ அஞ்செழுத்
2715 சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச் சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள் சிவசிவ ஆகும் திருவருள் ஆமே. 7
2716 சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவசிவ என்னச் சிவகதி தானே. 8
2717 நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப் பவமது தீரும் பரிசும்அது அற்றால் * அவமதி தீரும் அறும்பிறப்பு அன்றோ. 9 * அவமது 7. அதிசூக்கும பஞ்சாக்கரம்
2718 சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே. 1
2719 செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம் அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. 2
2720 அங்கமும் ஆகம வேதமது ஓதினும் எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால் அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே. 3
2721 பழுத்தன ஐந்தும் * பழமறை யுள்ளே விழித்துஅங்கு உறங்கும் # வினைஅறி வாரில்லை எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர் எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே. 4 * பாழறை # விளைவறி 8.1 திருக்கூத்து தரிசனம்
2722 எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே. 1
2723 சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச் சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யார்அறி வாரே. 2 8.2 சிவானந்தக் கூத்து
2724 தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல் தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர் ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே. 3
2725 ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் * பல்லியம் ஆனந்தம் வாச்சியம் ஆனந்தம் ஆக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே. 4 * வல்லியம்
2726 ஒளியாம் பரமாம் உளதாம் பரமும் அளியார் சிவகாமி யாகும் சமயக் களியார் பரமும் * கருதுறை யந்தத் தெளிவாம் சிவானந்த # நட்டத்தின் சித்தியே. 5 * கருத்துறை # நடனத்தின்
2727 ஆன நடம்ஐந்து அகள சகளத்தர் ஆன நடமாடி ஐங்கரு மத்தாக ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே தேன்மொழி பாகன் திருநட மாடுமே. 6
2728 பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகண்ட மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட தாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே. 7
2729 வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக் கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப் பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே. 8
2730 பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில் வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில் ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே. 9
2731 * தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர் மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் தாபதர் சத்தர் சமயம் சராசரம் யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. 10 * தேவர சுரர் 8.3 சுந்தரக் கூத்து
2732 அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால் உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல் கண்டம் கரியான் கருணை திருவுருக் கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே. 11
2733 கொடுகொட்டி * பாண்டங் கோடுசங் காரம் நடம் எட்டோடு ஐந்துஆறு நாடியுள் நாடும் திடம்உற்று ஏழும்தேவ தாருவும் தில்லை வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே. 12 * பாண்டரங்
2734 பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம் பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன் பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம் பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே. 13
2735 அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில் தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில் சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல் பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே. 14
2736 ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக் கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே. 15
2737 சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும் முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும் சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும் சுத்திகள் * எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே. 16 * எட்டாஞ் சொல்
2738 மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும் தேகங்கள் சூழும் சிவபாற் கரன் ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே. 17 8.4 பொற்பதிக் கூத்து
2739 தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில் அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும் ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. 18
2740 அடியார் அரனடி யானந்தங் கண்டோர் அடியா ரானவ ரத்தரு ளுற்றோர் * அடியார் பவரே யடியவ ராமால் அடியார் பொன்னம்பலத் தாடல் கண்டாரே. 19 * அடியா ரவரே
2741 அடங்காத என்னை அடக்கி அடிவைத்து இடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டு நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன் படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே. 20
2742 உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச் செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச் சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே. 21
2743 மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப் பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே. 22
2744 விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும் தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும் செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள் அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே. 23
2745 தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள் வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன் ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த நாட்ட முறுக்குறும் நாடகங் * காணவே. 24 * காணுமே
2746 காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக் கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி நாளுற அம்பலத் தேயாடும் நாதனே. 25
2747 மேரு நடுநாடி மிக்கிடை பிங்கனல் கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும் சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு ஏறும் சுழுமுனை இவைசிவ பூமியே. 26
2748 பூதல மேருப் புறத்தான தெக்கணம் ஓதும் இடைபிங் கலைஒண் சுழுமுனையாம் பாதி மதியோன் பயில்திரு அம்பலம் ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே. 27 8.5 பொற்றில்லைக்கூத்து
2749 அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப் பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத் தெண்டினில் சத்தி திருஅம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 28
2750 குரானந்த ரேகையாய்க் கூர்ந்த * குணமாம் சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து புரானந்த போகனாய்ப் பூவையும் தானும் நிரானந்த மாகி நிருத்தஞ் செய் தானே. 29 * குணமாய்ச்
2751 ஆதி பரன்ஆட அங்கைக் கனலாட ஓதும் சடையாட உன்மத்த முற்றாடப் பாதி மதியாடப் பாரண்ட மீதாட நாதமோடு ஆடினான் நாதாந்த நட்டமே. 30
2752 கும்பிட அம்பலத்து ஆடிய கோன்நடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம் செம்பொருள் ஆகும் சிவலோகம் சேர்ந்துற்றால் உம்பரம் மோனஞா ஞானந்தத்தில் உண்மையே. 31
2753 மேதினி மூவேழ் மிகும்அண்டம் ஓரேழு சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு நாதமொடு அந்தம் நடானந்தம் நாற்பதம் பாதியோடு ஆடிடும் பரன்இரு பாதமே. 32
2754 இடைபிங் கலைஇம வானோடு இலங்கை நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை கடவும் திலைவனம் கைகண்ட மூலம் படர்பொன்றி என்னும் பரமாம் பரமே. 33
2755 ஈறான கன்னி குமரியே காவிரி வேறா நவதீர்த்த மிக்குள்ள வெற்புஏழுள் பேறான வேதா கமமே பிறத்தலான் மாறாத தென்திசை வையகம் சுத்தமே. 34
2756 நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி போதத்தில் ஆடி புவனம் முழுதாடும் தீதற்ற தேவாதி தேவர் பிரானே. 35
2757 தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி மூவரோடு ஆடி முனிசனத் தோடு ஆடிப் பாவினுள் ஆடிப் பராசத் தியில் ஆடிக் கோவினுள் ஆடிடும் கூத்தப் பிரானே. 36
2758 ஆறு முகத்தில் அதிபதி நான்என்றும் கூறு சமயக் குருபரன் நானென்றும் தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே. 37
2759 அம்பலம் ஆடரங் காக அதன்மீதே எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள் தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. 38
2760 ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும் பாடிய பாட்டும் பலவான நட்டமும் கூடிய கோலம் குருபரன் கொண்டாடத் தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே. 39
2761 இருதயம் தன்னில் எழுந்த பிராணன் கரசர ணாதி கலக்கும் படியே அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன் குரவனயாய் எங்கணும் கூத்துகந் தானே. 40 8.6 அற்புதக் கூத்து
2762 குருவுரு வன்றிக் குனிக்கும் உருவம் * அருவுரு வாவது அந்த அருவே திரிபுரை யாகித் திகழ்தரு வாளும் உருவரு வாகும் உமையவள் தானே 41 * அருவுருவாவது
2763 திருவழி யாவது சிற்றம் பலத்தே குருவடி வுள்ளாக்குனிக்கும் உருவே உருஅரு வாவதும் உற்றுணர்ந் தோர்க்கு அருள்வழி யாவதும் அவ்வழி தானே. 42
2764 நீரும் சிரிசிடைப் பன்னிரண்டு அங்குலம் * ஓடும் உயிர்எழுந்து ஓங்கி உதித்திட நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்து ஆடும் இடந்திரு அம்பலந் தானே. 43 * ஓடி யுயிரெழுத்
2765 வளிமேகம் மின்வில்லு வானகஓசை தெளிய விசும்பில் திகழ்தரு வாறுபோல் களிஒளி ஆறும் கலந்துடன் வேறாய் ஒளியுரு வாகி ஒளித்துநின் றானே. 44
2766 தீமுதல் ஐந்தும் திசை எட்டும் கீழ்மேலும் ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம் மாயைமா மாயை கடந்துநின் றார்காண நாயகன் நின்று நடஞ் * செய்யு மாறே. 45 * செய்யும் வாறே
2767 கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும் கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக் கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே. 46
2768 இடம்கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலும் தாமாய்நின்று ஆடுகின் றாரே. 47
2769 சத்தி வடிவு சகல ஆனந்தமும் ஒத்த ஆனந்தம் உமையவள் மேனியாம் சத்தி வடிவு சகளத்து எழுந்துஇரண்டு ஒத்த ஆனந்தம் ஒருநட மாமே. 48
2770 நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம் சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே. 49
2771 அண்டங்கள் தத்துவ மாகிச் சதாசிவம் தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம் தெண்டினில் ஏழும் சிவாசன மாகவே கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. 50
2772 மன்று நிறைந்த விளக்கொளி மாமலர் நன்றிது தான்இதழ் நாலொடு நூறவை சென்றுஅது தான்ஒரு பத்திரு நூறுள நின்றது தான்நெடு மண்டல மாமே. 51
2773 அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே. 52
2774 ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன் ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண் மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே. 53
2775 அம்பல மாவது அகில சராசரம் அம்பல மாவது ஆதிப் பிரானடி அம்பல மாவது அப்புத்தீ மண்டலம் அம்பல மாவது அஞ்செழுத் தாமே. 54
2776 கூடிய திண்முழ வம்குழல் ஓமென்று ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன நாடிய நற்கணம் ஆரம்பல் பூதங்கள் பாடிய வாறுஒரு பாண்டரங் காமே. 55
2777 அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள் தெண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள் புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக் கண்டுசே வித்துக் கதிபெறு வார்களே. 56
2778 புளிக்கண்ட வர்க்குப் புனலூறு மாபோல் களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம் * அளிக்கும் அருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும் ஒளிக்குள்ஆ னந்தத்து அமுதூறும் உள்ளத்தே. 57 * துளிக்கும்
2779 திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது உண்டார்க் * குணவுண்டால் உன்மத்தம் சித்திக்கும் கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக் கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே. 58 * குணர்வுண்டாம்
2780 அங்கி தமருகம் அக்குமா லைபாசம் அங்குசம் சூலம் கபாலம் உடன்ஞானம் தங்குஉ பயந்தரு நீல மும்உடன் மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே. 59
2781 ஆடல் பதினோர் உறுப்பும் அடைவாகக் கூடிய பாதம் சிலம்புகைக் கொள்துடி நீடிய நாதம் பராற்பர நேயத்தே ஆடிய நந்தி புறம்அகந் தானே. 60
2782 ஒன்பதும் ஆட ஒருபதி னாறுஆட அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட இன்புறும் ஏழினும் ஏழுஐம்பத் தாறுஆட அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 61
2783 ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந்து ஏழதாய் ஏழினில் ஒன்றாய் இழிந்துஅமைந்து ஒன்றாகி ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி ஏழிசை நாடகத் தேஇசைந் தானே. 62
2784 மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய் மூன்றினில் ஆறாய் முதற்பன்னீர் மூலமாய் மூன்றின்இலக்கம் முடிவாகி முந்தியே மூன்றிலும் ஆடினான் * மோகாந்தக் கூத்தே. 63 * மோனாகந்தக் கூத்தனே
2785 தாமுடி வானவர் தம்முடி மேலுறை மாமணி ஈசன் மலரடித் தாளினை வாமணி அன்புடை யார்மனத் துள்ளெழுங் காமணி ஞாலம் கடந்துநின் றானே. 64
2786 புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும் தெரிந்தவன் ஆடும் அளவுஎங்கள் சிந்தை புரிந்தவன் ஆடில்பல்பூதங்கள் ஆடும் எரிந்தவன் ஆடல்கண்டு இன்புற்ற வாறே. 65
2787 ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள் ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர் ஆதி நடமாடல் ஆரும் அறிந்தபின் ஆதி நடமாட லாம் அருட் சத்தியே. 66
2788 ஒன்பதோடு ஒன்பதாம் உற்ற இருபதத்து அன்புறு கோணம் அதிபதத்து ஆடிடத் துன்புறு சத்தியுள் தோன்றிநின்று ஆடவே அன்புறு எந்தை நின்று ஆடலுற் றானே. 67
2789 தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச் சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட வைத்த சராசரம் ஆட மறையாட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. 68
2790 இருவருங் காண எழில்அம் பலத்தே உருவோடு அருவோடு ஒருபர ரூபமாய்த் திருவருள் சத்திக்குள் சித்தன்ஆ னந்தன் அருளுரு வாகிநின்று ஆடலுற் றானே. 69
2791 சிவமாட சத்தியும் ஆடச் சகத்தில் அவமாட ஆடாத அம்பரம் ஆட நவமான தத்துவம் நாதாந்தம் ஆடச் சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே. 70
2792 நாதத்தின் அந்தமும் * நாற்போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும் தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து நாதப் பிரமம் சிவநாட # மாமே. 71 * நற்போத # மாடுமே
2793 சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத் தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத் தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும் தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே. 72
2794 கூடிநின் றானொடு காலத்துத் தேவர்கள் வீடநின் றான்விகிர் தா என்னும் நாமத்தைத் தேடநின் றான்திக ழுஞ்சுடர் மூன்றொளி ஆடநின் றான்என்னை ஆட்கொண்ட வாறே. 73
2795 நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர் நேதத் துவமும் அவற்றோடு நேதியும் பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே. 74
2796 ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர் ஆனந்த * மாநடம் ஆரும் அறிகிலர் ஆனந்த * மாநடம் ஆரும் அறிந்தபின் தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே. 75 * மாவதை ஆரும்
2797 திருந்துநல் சீஎன்று உதறிய கையும் அருந்தவர் வாஎன்று அணைத்த மலர்க்கையும் பொருந்த அமைப்பில் அவ்வென்ற பொற்கையும் திருந்தநல் தீயாகும் திருநிலை மவ்வே. 76
2798 * மருவும் துடியுடன் மன்னிய வீச்சு மருவிய அப்பும் அனலுடன் கையும் கருவின் மிதித்த கமலப் பதமும் உருவில் சிவாய நமவென வோதே. 77 * மருவு துடியும் மன்னிய வீச்சும்; மருவி யமைப்பும்
2799 அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம் அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே. 78
2800 தீத்திரன் சோதி திகழ்ஒளி உள்ஒளி கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள் மூர்த்திகள் மூவர் முதல்வன் இடைசெல்லப் பார்த்தனன் வேதங்கள் பாடினள் தானே. 79 |