![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய பரிபாடல் ... தொடர்ச்சி - 2 ... 3. திருமால்
மாஅயோயே! மாஅயோயே! மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி மணி திகழ் உருபின் மாஅயோயே! தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும், 5 ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், திதியின் சிறாரும், விதியின் மக்களும், மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும், தா மா இருவரும், தருமனும், மடங்கலும், மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும், 10 மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதர வலந்து; "வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும், நீ" என மொழியுமால், அந்தணர் அரு மறை. 15 "ஏஎர், வயங்கு பூண் அமரரை வெளவிய அமிழ்தின், பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை; பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின் நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின் சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள் 20 கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; தீ செங்கனலியும், கூற்றமும், ஞமனும், மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம் ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு கேழ லாய் மருப்பின் உழுதோய்? எனவும், 25 "மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்? எனவும், ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர் பாடும் வகையே; எம் பாடல் தாம் அப் 30 பாடுவோர் பாடும் வகை. கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை; நகை அச்சாக நல் அமிர்து கலந்த நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை. 35 இரு கை மாஅல்! முக் கை முனிவ! நாற் கை அண்ணல்! ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்! எழு கையாள! எண் கை ஏந்தல்! ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள! 40 பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் 45 இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ, முன்னை மரபின் முதுமொழி முதல்வ? நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும், வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம் 50 வனப்பு வரம்பு அறியா மரபினோயே! அணி நிழல் வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர், பிறை வளர், நிறை மதி உண்டி. அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ; திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி, 55 நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ அதனால், "பகைவர் இவர்; இவர் நட்டோ ர்" என்னும் வகையும் உண்டோ , நின்மரபு அறிவோர்க்கே? ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட 60 சேவல் ஊர்தியும், "செங் கண் மாஅல்! ஓ!" எனக் கிளக்கும் கால முதல்வனை; ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம் தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ; கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ; 65 அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் அமைந்து நீ; வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ; வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களும் அளியும் நீ; அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், உறைவும் உறைவதும் இலையே; உண்மையும் 70 மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில் பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே. பறவாப் பூவைப் பூவினோயே! அருள் குடையாக, அறம் கோலாக, 75 இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமும் ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ; பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என, இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என, ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என, 80 நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை செங் கட் காரி! கருங் கண் வெள்ளை! பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்! இட வல! குட வல! கோவல! காவல! காணா மரப! நீயா நினைவ! 85 மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண! மாலைச் செல்வ! தோலாக் கோட்ட! பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண! பருதி வலவ! பொரு திறன் மல்ல! 90 திருவின் கணவ! பெரு விறன் மள்ள! மா நிலம் இயலா முதல்முறை அமையத்து, நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! கடவுள் வாழ்த்து
கடுவன் இளவெயினனார் பாட்டு பெட்டனாகனார் இசை பண்ணுப் பாலையாழ் 4. திருமால்
ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்து, தம் ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி, நின் புகழ் விரித்தனர்; கிளக்குங்கால், அவை நினக்கு இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம்ஆயினும், 5 நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப; திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர், வரு மழை இருஞ் சூல் மூன்றும் புரையும் மா மெய்; மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை; நோனார் உயிரொடு முரணிய நேமியை: 10 செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழப் புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின் பிருங்கலாதன் பலபல பிணி பட வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து அலர்ந்த புகழோன், தாதை ஆகலின் 15 இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி, ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின் படிமதம் சாம்ப ஒதுங்கி, இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப, 20 வெடி படா ஒடி தூண் தடியொடு, தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை; புருவத்துக் கரு வல் கந்தத்தால் தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண் ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும் 25 நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; நின் தண்மையும் சாயலும் திங்கள் உள; நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள; நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள; நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள; 30 நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள; நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும், ஏமம் ஆர்ந்த நிற் பிரிந்து. 35 மேவல் சான்றன வெல்லாம் சேவல் ஓங்கு உயர் கொடியோயே! சேவல் ஓங்கு உயர் கொடி நின் ஒன்று உயர் கொடி பனை; நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்; 40 நின் ஒன்று உயர் கொடி யானை; நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்; அவன் மடிமேல் வலந்தது பாம்பு; பாம்பு தொடி; பாம்பு முடிமேலன; 45 பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; பாம்பு சிறை தலையன; பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு; கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும், 50 கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் உள்வழி உடையை; இல்வழி இலையே; போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும், மாற்று ஏமாற்றல் இலையே; "நினக்கு மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்" எனும் 55 வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப பெறினே; மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே; கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி, நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை; பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப! 60 நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை அன்ன நாட்டத்து அளப்பரியவை; நின்னின் சிறந்த நின் தாள் இணையவை; நின்னில் சிறந்த நிறை கடவுளவை; அன்னோர் அல்லா வேறும் உள; அவை 65 நின்ஓர் அன்ஓர் அந்தணர் அரு மறை. அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை ஆலமும், கடம்பும், நல் யாற்று நடுவும், கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும், அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்! 70 எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே; அவரவர் ஏவலாளனும் நீயே; அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. கடவுள் வாழ்த்து.
கடுவன் இளவெயினனார் பாட்டு பெட்டனாகனார் இசை பண்ணுப் பாலையாழ் |