விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

1

     உயர்ந்த இடத்திலிருந்து பார்க்கும் போது அருகில் இருப்பவை மட்டும் நிச்சயமாக இன்னின்னது இவை என்று குறிப்பாகத் தெரியும். அதுமட்டும் அல்ல, தொலைதூரத்தில் இருப்பவைகூட தெளிவாகப் புலப்படும். ஆனால் ஏறிப் பார்க்கும் உயரம் அதிகம் கூடாது. நிதான அளவில் இருப்பதே நல்லது. ரொம்பவும் உயர்ந்த இடத்தில் நின்று பார்த்தால் தெளிவாகத் தெரிபவை கூட இயற்கை சூழ்நிலை காரணமாகவும் வானத்தவிசினாலும் கலவையாகி ஏதோ மாயத்திரையில் மூடப்பட்டவை போலவே தோன்றும்.

     அன்று நிதான உயரத்தைவிட்டுப் பரபரவென்று மிக உயரச் சென்றுவிட்ட உலூகனுக்கு இப்படித்தான் தோன்றிற்று. அவனுடைய எஜமானனான சிம்ம நாதன் ஒரு சிறு குன்றின் மீது ஏறிப்பார்த்த போது, அருகாமையில் அதாவது ஒரு நாழிகை தூரத்தில் ஒரு ஊர் இருப்பது நன்கு தெரிந்தது. ஆனால் உலூகன் அதைவிட மிக உயர்ந்த மலை மீது மிகப் பாடுபட்டு ஏறிப்பார்த்த போது அந்த ஊர் தெரியவில்லை. ஆனால் அதைச் சுற்றியிருந்த பெரும் காடு மட்டும்தான் தெரிந்தது.

     அங்கிருந்தபடியே கத்தினான்; அண்மையில் ஊர் எதுவும் இல்லை. ஒரு பெரும் காடுதான் இருக்கிறது. அங்கு ஏதோ பயங்கரப் பிராணிகள் அசைந்து அசைந்து ஓடுவதாகவும் கத்தினான்.

     சிம்மநாதன் காதில் அவனுடைய காட்டுக் கூச்சல் விழவில்லை. எனவே ‘இறங்கி வா’ என்று சைகை காட்டினான் தன் குதிரை மீது அமர்ந்தபடியே.

     உலூகன் பேச்சுக்களைச் செவிமடுத்துக் கேட்டால் மேற்கொண்டு பயணம் செல்ல முடியாது. அவசரம் அவசரமாக, மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க மலை மீதிருந்து உலூகன் இறங்கி வந்தான். வரும் போதே ஏதேதோ கத்திக் கொண்டே வந்தான்.

     சிம்மநாதன் அவற்றைக் காது கொடுத்துக் கேளாமல் மேற்குத் திசையை மீண்டும் நோக்கினான். பரிதி மேற்றிசையில் அடிவானத்தை எட்டி மறைய முயற்சித்துக் கொண்டிருந்தான். இவர்களுடைய பயணத்துக்காக அவன் தன் கடமையைக் காலா காலத்தில் செய்யாதிருக்க முடியுமா?

     அருகில் தெரியும் ஊர் சிற்றூரோ, பேரூரோ தெரியவில்லை. ஆயினும் அங்கு இரவு தங்கித்தானாக வேண்டும். இதுவரை வந்த பயணத் தொலைவைக் கணக்கிட்டால், கங்கைகொண்ட சோழபுரம் சேர இன்னும் அரைநாள் பயணமாவது செய்தாக வேண்டும். எனவே இரவுப் பயணம் சாத்தியமில்லை. இடையில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நேராதிருக்குமானால், நாளை மதியத்தில் இவர்கள் கங்கைகொண்ட சோழபுரத்திலிருப்பது முற்றிலும் சாத்தியமே!

     இவ்வாறு அவன் சிந்தித்தபடி, சற்றுநேர இடைவெளியில் இளைப்பாறிச் சற்றே சுறுசுறுப்படைந்துள்ள குதிரை மீது ஏறி உட்கார்ந்தவன் காதில், இப்போது உலூகனின் சொற்கள் தெளிவாகக் கேட்டன.

     “தலைவரே, நாம் இனிப் பயணம் செய்தோமானால் புலியோ, யானையோ அல்லது ஓநாயோ ஏதோ ஒன்றுக்கு இரை ஆவது நிச்சயம். மிகப் பெரிய காடு ஒன்று பயங்கரமாகப் பரவி, நம் பாதையில் விரிந்து கிடக்கிறது. சென்னிமலை உச்சியிலிருந்து பார்த்ததால் அது தெரிந்தது. எனவே தயவு செய்து நாம் இந்த இரவை இங்கேயே மலைக்குகையொன்றில் தங்கிக் கழித்துவிடலாம். பசி உண்டாகியிருப்பது உண்மைதான். அது நேரம் ஆக ஆக அதிகமாகி வேதனைப்படுத்தும் என்பதும் உண்மைதான். என்றாலும் உயிர் வாழ்வது அதைவிட முக்கியமானதாயிற்றே. நாம் உயிருடனும் திரும்ப வேண்டும். இடையே நாம் வந்த வேலையிலும் வெற்றி பெற வேண்டுமென்றால் இதைத் தவிர வேறு ஒரு யோசனையும் தோன்றவில்லை” என்று மூச்சுக்கூடவிடாமல் பேசினான்.

     சிம்மநாதன் இலேசாகப் புன்னகைத்துவிட்டு “எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அந்த யோசனைப்படி நீ நடந்தால் உயிரும் தப்பலாம், நன்றாகத் தூங்கலாம். அதாவது வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டுத்தான். பிறகு நாம் வந்த வேலையையும் புதுத் தெம்பு பெற்றுக் கவனிக்க முடியும் உலூகா. ஆனால் நீ மறுப்புக் கூறாமல், ‘சரி’ என்றால்தான் இந்த யோசனையைக் கூறுவேன் உன்னிடம். இல்லாவிட்டால் நீ உன் யோசனைப்படி இங்கேயே இருக்க. வேண்டியதுதான். நான் என்னுடைய யோசனைப்படி முன்னேற வேண்டியதுதான்” என்றான் நிதானமாக.

     “ஐயையோ! அப்படியானால் நாம் எங்காவது மறைந்து தங்காமல் அந்தக் காட்டுவழிதான் போயாக வேண்டுமா? நேரமும் ஓடுகிறது, இதுவரை துணை செய்த வெளிச்சமும் இல்லை. புதிய இடம் வேறு.”

     “போயாக வேண்டுமென்பது என் யோசனை. ஆனால் நீ அதை ஏற்காவிட்டால் கட்டாயமில்லை. இங்கேயே இரு. நான் மட்டும் போகத்தான் வேண்டும்.”

     “தலைவரே, ஏன் என்னை இப்படிப் பயமுறுத்துகிறீர்கள்? நீங்கள் இல்லாமல் நான் இந்த இரவை இங்கு கழித்துச் சாவதைக் காட்டிலும் நான் உங்களுடன், தலைவன் வழிதான் ஊழியன் வழி என்று உடன்வந்து இறந்தாலும் வீரமரணம் கிட்டும். அதைவிட்டு இங்கே இருந்தால் தனியாக ஏதாவது மலைப்பேய் பிடித்து உயிர் உறிஞ்சப்பட வேண்டியதுதான்” என்று அவன் நொந்த மனதுடன் கூறிவிட்டு, தன் குதிரை மீது ஏறினான் உற்சாகமில்லாமல்.

     மரணத்தை நோக்கிச் செல்ல உற்சாகம் வேறு ஒரு கேடாக்கும்.

     சிம்மநாதன் மீண்டும் ஒருமுறை இலேசாகப் புன்னகைத்துவிட்டுத் தன் குதிரையைத் தட்டிவிட்டான். உலூகன் குதிரை சற்றுத் தெளிந்து இருந்தாலும் அவன் சலிப்பும் பீதியும் கொண்ட மனத்தினனாய் அதன் மீது அமர்ந்திருந்ததால் அதன் வேகமும் அப்படித்தானிருந்தது.

     கங்கபாடியிலிருந்து புறப்படும் போதே உலூகனுக்குப் பல பிரச்னைகள் தோன்றாமலில்லை. நீண்ட நெடுந்தூரப் பயணத்தில் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவானதும் முதலில் திகைத்துவிட்டான். பிறகு அவன், வீரத் தலைவனான சிம்மநாதனின் துணைவனாகச் செல்வது தெரிந்ததும் நிரம்பவும் மகிழ்ச்சியும் தைரியமும் கொண்டான். ஆனால் அங்கு, அதாவது சோழ நாட்டில் சிம்மநாதனுக்குக் காத்திருந்த வேலைத் திட்டமறிந்ததும் நடுநடுங்கிவிட்டான்.

     உலூகன் சோழர்களையறிந்தவன். அவர்கள் வெளிப்பார்வைக்கு ஒருமாதிரி தோன்றினாலும் உள்ளூர புலியும் சிங்கமுமாகத் திகழும் ஆசாமிகள். அவர்களுடைய ஊடுருவிப் படைகளின் திறன் இந்த நாடு முழுமையும் அறிந்த உண்மை. அதை மீறி எதுவுமே அங்கு செய்ய வாய்ப்பில்லை. இவர்கள் கங்கபாடியின் தலைநகரான குவலயபுரத்திலிருந்து கிளம்புவது கூட அவர்களுக்குத் தெரியாமலிராது. உண்மை இதுவாயிருக்க ஏதோ பெரியதொரு மர்மத் திட்டம் வகுத்து அதை நிறைவேற்றுவதற்கு சிம்மநாதனை அனுப்பி வைத்தால், இதுமட்டும் அவர்களுக்குத் தெரியாமலிருந்துவிடுமா? என்றெல்லாம் குழம்பினாலும் கங்கன் கட்டளையை அணு மாற்றாது ஏற்றுக் கொண்டுவிட்டான்.

     ஆனால் சிம்மநாதன் கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தன் மனதில் நிலைத்துள்ள ஒரு அபார வேலையைச் செயல்படுத்தும் நாளை மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தவனாதலால், விஜயகீர்த்தியின் கட்டளையைச் சிரமேற்கொண்டு புறப்பட்டான்.

     “சோழ மன்னன் குலோத்துங்கன் இப்போது இல்லை. அவனுடைய மூத்தமகனான அந்த முரட்டு முன்கோபியும் கடல் கடந்து போயிருக்கிறான். சோழகங்கன் மெய்யுதவிப் படையையும் ஊடுருவிப் படையையும் சீர்திருத்தியமைக்க தவித்துக் கொண்டிருக்கிறான். அம்மங்கைதேவி இல்லை. இப்போது முடிசூடியுள்ள விக்கிரமனோ எடுப்பார் கைப்பிள்ளை. எனவே நாம் மிகவும் தந்திரமாகச் செயல்பட்டோமானால் இத்தருணம் முதற்கொண்டு கங்கநாடு விடுதலை பெற்று மீண்டும் முன் போல மதிப்புடைய நாடாக இயங்க முடியும் என்பதுடன் சோழர்களின் அசைக்க முடியாத சக்தியும் சிதைந்து போகும் நம்முடைய இந்தத் திட்டத்தால். எனவே நாம் விடுதலை பெற வேண்டும். பெற்ற விடுதலையை மீண்டும் அவர்களிடம் பறிகொடுக்காதிருக்க வேண்டுமானால் அவர்களுடைய மூலபலமும் அடியோடு அழிந்தாக வேண்டும்.

     இந்த நோக்கத்தில் வகுக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான திட்டத்தைச் செயல்படுத்தும் சக்தி கொண்ட தனிப்பெரும் வீரன் நம் கங்க நாட்டில் நீ ஒருவன்தான் என்று நானும் கங்க மன்னரும் ஒருமனதாகக் கருதி இந்தப் பெரும் பொறுப்பினை உன்னிடம் ஒப்படைத்துள்ளோம். ஒரு மாபெரும் படையினால் சாதிக்க முடியாதவற்றை ஒரு தனி மனிதனால் சாதிக்க முடியும் என்பது ராஜதந்திரிகளின் முடிவு. நீ வீரன் மட்டும் இல்லை. இந்த முப்பது ஆண்டுகளாக எத்தனையோ வகையில் நீ அனுபவம் பெற்றுள்ள ராஜதந்திரியுமாவாய். மேலோட்டமாகப் பார்க்கும் போது நீ ஒரு அலட்சியமான சுகபோகி போலவும், எதிலுமே உறுதியில்லாதவனாக, ‘டம்பத்தையும் உல்லாசத்தையும்’ விரும்பும் வீண் விரயக்காரனாகத்தான் காணப்படுகிறாய். இந்த உன்னுடைய மேற்கவசம், கதம்பர்களை ஏமாற்றியிருக்கிறது. சாளுக்கியர்களைத் திக்குமுக்காடச் செய்திருக்கிறது. எனவே இனி சோழரிடமும் இது செல்லுபடியாகும் என்பதில் ஐயமில்லை. ஒரு சந்தேகமுமில்லாமல் அவர்களிடையே ஊடுருவி நிலைக்கச் சில காலமானாலும் கவலையில்லை. ஆனால் மிகவும், அந்தரங்கமான இடத்தில் ஊடுருவிவிடு. இதுவே நமக்குப் பெரிய பாதுகாப்புமாகும். நம்முடைய திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அவர்களையே சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் கூடும். எனவே நிரம்பவும் எச்சரிக்கையாகச் செயல்பட்டு வெற்றியுடன் திரும்பு. விடுதலை பெற்ற கங்க நாடு உனக்கு வரவேற்பை மட்டும் அல்ல, ராஜ வரவேற்பையும் அளிக்கும்” என்று விஜயகீர்த்தி மிகவும் அழுத்தமாக அதேசமயம் பாராட்டும் முறையிலும் பேசியதும் சிம்மநாதனுக்கு ஏற்பட்ட உற்சாகமும் உறுதியும் வெறியாகக் கூட மாறிவிட்டதில் விந்தையில்லை.

     உலூகனும் அவனும் புறப்படும் காலை குவலயபுரமே. கோலாகலமாக வழியனுப்பியது. மர்மமாகச் செயல்படவிருப்பவன் இம்மாதிரி அமர்க்களமாக வழியனுப்பப்படலாமா? என்றால் சோழ சாம்ராஜ்ய மாமன்னனாக முடிசூடியுள்ள விக்கிரம சோழருக்கு குவலயபுரத்தின் மிக உன்னதமான வைரமுடியை அல்லவா பரிசாக அனுப்புகிறார் கங்க மன்னர்.

     இது சோழர்களுக்கு அவர் செய்யும் மரியாதை மட்டுமல்ல, மதிப்புள்ள பரிசிலைக் கொண்டு செல்ல கங்க நாட்டின் சிறந்த வீரன் சிம்மநாதனையும் அல்லவா அனுப்புகிறார்.எனவே வழியனுப்புவிழா நடத்த வேண்டியதுதானே. ஆனால் சோழ எல்லையை இவ்விருவரும் மிதித்ததும் ஒரு ஈ காக்கை கூட இவர்களை வரவேற்க வரவில்லையே.

     எப்பவுமே குளிரும், ஜிலுஜிலுவென்று வீசும் காற்றும் பரவியுள்ள கங்கபாடியிலிருந்து சோழ நாட்டுக்குப் புறப்பட்டவர்கள் காவிரியைத் தாண்டும் போதுதான் கொங்கு நாட்டெல்லை வந்திருக்கிறோம் என்றறிந்து கொண்டார்கள். அங்கு ஏராளமான மலைகள், கங்கபாடியைப் போல, சிற்றாறுகளும் சிறுசிறு காடுகளும் இல்லாமலில்லை. ஆனால் சோழ நாட்டெல்லையை அவர்கள் மிதித்த போது தங்களை யாரும் வரவேற்காதது கண்டு மகிழ்ச்சியேயடைந்தனராயினும் அந்தப் பருவ நிலையில் பாவம் அவர்கள் திணறிப் போய்விட்டார்கள்.

     அந்நாளில் இம்மாதிரி ஒரு நாட்டைவிட்டு மற்றொரு நாட்டுக்கு பிரயாணம் செய்பவர்களை கண்காணிப்புப் படையினர்தான் வரவேற்பர். ஏனென்றால் இவர்களுக்கு அரசு முறையில் அழைப்புப் பெற்று வருபவர்கள் தவிர மற்ற பயணிகள் யாராயினும் தங்கள் பார்வைக்குத் தப்பவிடமாட்டார்கள். சோழ நாட்டின் கண்காணிப்புப்படை மிகவும் திறன் வாய்ந்த ஒரு இயக்கம் என்றும் கூறப்படுவதுண்டு. தவிர இதை இயக்கிய மூளை சோழகங்கன் என்னும் சோழ இளவரசனுடையது. அண்மையில் சோழ மன்னனான விக்கிரமனின் மூத்தவனான இவன் மும்முடிக்கு இளையவன். மிகவும் தந்திரசாலி மட்டுமில்லை, அனுபவம் வாய்ந்த ராஜதந்திர புத்திசாலியும் கூட.

     எப்படி இந்த புத்திசாலியின் உதவிகள் தங்களை வரவேற்காதிருந்தனர் என்று வியந்த வண்ணம், அந்தச் சிற்றூரில் சிம்மநாதன் நுழையும் போது நன்றாக இருட்டிவிட்டது. எனினும் அழகான வீதிகள், அருகருகே கூண்டு விளக்குகள், வீதிகளில் சுடர்விடும் உடுக்களைப் போல மின்னித் தங்கள் பகுதிகளில் இயன்றவரை ஒளியைப் பரப்பி அவ்வூரை இருட்டிலும் கூட அழகுபடுத்தின.

     ‘எத்தனையோ பேர் போகிறார்கள் வருகிறார்கள். ஆனால் ஒருவர் கூட யார் இந்தப் புதிய பேர்வழிகள் என்று ஒரு நொடி கூட நின்று பார்க்காமல் போகிறார்களே... என்ன இது? சோழரின் கண்காணிப்புப் படையின் திறமை எல்லாம் போய்விட்டதா? அல்லது கண்காணிப்புப் படையே இல்லையா?’ என்று முதலில் எண்ணிய சிம்மநாதன் ‘அப்படி இருக்காது. தங்களைவிட்டுப் பிடிக்கும் தந்திரத்தை அவர்கள் மேற்கொண்டிருக்கலாம்’ என்றும் ஊகித்தான்.

     உலூகனும் இதை ஒப்பினான். எனவே இருவரும் ஒரு சத்திரத்தின் வாயிலில் போயிறங்கினர்.

     அது அவ்வூரில் பயணிகளுக்கான ஒரே சத்திரம்தான் என்றாலும் கொஞ்சம் சிறியதுதான். இவர்கள் குதிரையிலிருந்து இறங்கியதும், ஆளோடியில் நின்ற ஒருவன் ஓடிவந்து வணங்கினான். அயல் நாட்டுப் பிரமுகர் உடையில் டம்பமாக இருந்த சிம்மநாதனின் தோற்றம் அவனை அப்படி ஓடி வந்து வணங்கச் செய்தது போலும்.

     “நாங்கள் வெளியூரிலிருந்து வருகிறோம். சத்திரத்துத் தலைவனைப் பார்க்க வேண்டும்” என்றான் சிம்மநாதன்.

     அவனுடைய அந்தப் பேச்சில் அலாதி கம்பீரமும், சற்றே அதிகாரத் தொனியும் இருப்பதாகத் தோன்றியது வாசல் காவலனுக்கு. உள்ளே ஓடினான். கொஞ்ச நேரத்தில் ஒரு முதிய பிராயத்தினர் வந்து நின்று சிம்மநாதனை உற்றுப் பார்த்தார், பிறகு வணங்கினார். சரி, வந்திருப்பவன் பெரியதொரு செல்வந்தன் என்று ஊகித்தார்.

     “இரவு நாங்கள் இங்கு தங்க வேண்டும். அதற்குரிய தொகை எவ்வளவு?” என்று கேட்டபடி அவன் தன் அங்கிப் பையிலிருந்து ஒரு தங்கக் காசை எடுத்ததும் சத்திரக்காரன் ‘சரி, ஆசாமி பெரிய புள்ளிதான்... சந்தேகமில்லை’ என்று நினைத்துப் பெருமூச்சுவிட்டு நின்றான்.

     அருகில் நின்ற உலூகன் “ஏன் ஐயா சத்திரக்காரரே... இப்படி ஒரு பெருமூச்சு?” என்று கேலியைக் கலந்து ஒரு கேள்வி போட்டதும், “உங்கள் மாதிரி பெருமக்களை இங்கு தங்க வைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்று ஒரு அறை கூட காலியாக இல்லை. ஏதோ ஒரு பெரிய கூத்துக் குழுவினர் வந்து விட்டார்கள். தலைநகருக்குச் செல்லும் அவர்களை நன்கு உபசரித்து அனுப்பும்படி மேலிடத்திலிருந்து உத்திரவும் பிறந்துள்ளது. எனவே மிகவும் வருத்தத்துடன் உங்களுக்கு இடம் இல்லை என்று கூற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாயிருக்கிறேன்” என்று பணிவு கலந்த பாணியில் ஆனால் அழுத்தமாகவே கூறினான்.

     “குதிரைகளுக்குத் தீனி வைத்து இளைப்பாறச் செய்ய என்னால் முடியும்” என்றான் வாயிற்காவலன்.

     சிம்மநாதன், சத்திரக்காரனை மேற்கொண்டு வற்புறுத்துவது பலன் தராது என்பதை அவனுடைய பணிவுப் பாணியைக் கொண்டே ஊகித்து விட்டான். எனினும் தோல்வியடையத் தயாராயில்லாததால், “நானும் இந்த இரவு இங்குத் தங்கிய பிறகே கங்கைகொண்ட சோழபுரம் செல்ல முடியும். அதுவும் நாளைக் காலையில்தான். உம்மால் இடம் அளிக்க முடியாவிட்டால் நான் அந்தக் கூத்துக் குழுவினருடன் பேசி அவர்களுடன் தங்க ஏற்பாடு செய்து கொண்டால் உமக்கு யாதொரு மறுப்பும் இல்லையே?” என்று அதே அழுத்தத் தொனியில் கேட்டதும் சத்திரக்காரன் ‘சரி, ஆசாமி பெரிய பேர்வழி. ஒருவேளை அந்நிய நாட்டின் பெரிய அதிகாரியாயிருந்தாலும் இருக்கலாம். நமக்கு ஏன் வம்பு’ என்று நினைத்து “நீங்கள் அவ்வாறு ஏற்பாடு செய்து கொள்ளுவதை நான் எப்படி மறுக்க முடியும்?” என்று பதில் கேள்வி கேட்டதும் அவன் கையில் ஒரு பொற்காசை வைத்தான் சிம்மநாதன்.

     அந்தப் பொற்காசில் கங்கர்களின் முதல் மன்னனான ஸ்ரீ புருஷன் உருவம் பொறித்திருப்பதைக் கண்ட சத்திரத் தலைவன் தன் ஊகம் தவறல்ல என்று சற்றே நிம்மதி கண்டான்.

     இதற்குள் இரு குதிரைகளையும் நடத்திச் சென்ற காவலனுடன் உலூகனும் சென்றான் தொடர்ந்து.

     இரண்டு உப்பரிகைகளைக் கொண்ட அந்தச் சத்திரத்தில் அன்று ஏகக் கூட்டம்தான். அதுவும் உப்பரிகையில் கூத்துக் குழுவினர் ஒரே அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர்.

     சத்திரக்காரன் அங்கு சென்று ஒருவரிடம் “கங்க நாட்டுப் பிரபு ஒருவர் வந்திருக்கிறார். அவர் உங்கள் தலைவரைப் பார்க்க வேண்டுமாம்” என்று கூறியதும் அவன் இப்போது இயலாது என்று மறுக்க நினைத்தாலும் சத்திரத் தலைவனின் ‘பிரபு’ உச்சரிப்பு அவனை என்னவோ செய்ததால் சட்டென எழுந்து ஒரு அறைக்குள் சென்றான்.

     அங்கிருந்து சில நொடிகளில் ஒரு வயதான அம்மாள் வெளியே வந்து “என்ன வேண்டும்?” என்று கேட்டாள்.

     திரும்பவும் பிரபுவை அழுத்திச் சொன்னான் சத்திரக்காரன்.

     அவள் உள்ளே சென்றாள். திரும்ப வந்து “அவரை யார் என்று தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டாள்.

     “அவர் ஒரு கங்க நாட்டுப் பிரபு” என்றான் அவன்.

     திரும்ப உள்ளே சென்றாள். கொஞ்ச நேரத்தில் அவள் வெளியே வந்து “எங்கள் தலைவி அவரைச் சந்திக்கத் தயாராயிருக்கிறாள்” என்று அறிவித்தாள்.

     சத்திரக்காரன் கீழே இறங்கி ஓடினான். சிம்மநாதன் அவனைத் தொடர்ந்து மேலே வர அதிக நேரம் ஆகவில்லை. ஆனால் அவனைப் பல கண்கள் தீவிரமாக நோட்டமிட்டதை அவன் கவனிக்காமலில்லை. அந்த மெத்தைப் பகுதியின் இரு வரிசையிலும் இருபது அறைகள் இருப்பினும் நடுமையத்தில் ஒரு பெரிய நடு வாசலும் இருந்தது. சிம்மநாதனை முதலில் வரவேற்றவள் அந்த வயதான அம்மாள்தான்.

     “நான் கங்க நாட்டு நல்லெண்ணத் தூதுவன். என் பெயர் சிம்மநாதன்” என்று மிகவும் கம்பீரமான முறையில் அவன் அறிமுகப்படுத்திக் கொண்டதும் அந்த வயதான பெண்மணி சற்றே அச்சமுற்று மரியாதையையும் கொஞ்சம் அதிகமாக்கி “மன்னிக்க வேண்டும். சத்திரத்துத் தலைவர் ஒரு கங்கப் பிரபு என்றார். பரவாயில்லை. ஒருகணம் பொறுங்கள். வல்லபியைத் தயாராயிருக்கும்படி கூறுகிறேன்” என்று ஓடினாள் உள்ளே.

     சிம்மநாதனை இப்போது தீவிரமாகப் பார்த்தவர்கள் சட்டென்று அப்பால் போய்த் தங்கள் அறைக்குள் புகுந்துவிட்டனர். இரண்டொரு பெண்கள் மட்டும் அவனை ஒரு முறைக்கு இரு முறையாக ஏறிட்டுப் பார்த்ததும் அவன் அவர்களைக் கவனிக்காமல் சுவரிலிருந்த ஓவியங்களைப் பார்த்தான்.

     சோழர்களின் அரிய கலைச் சிற்பங்களும் சரி, அழகு ஓவியங்களும் சரி. அற்புதமானவை மட்டுமல்ல, சிரஞ்சீவித் தன்மை பெற்றவை. அவற்றில் ஒன்று நடுமையத்திலிருந்த அறையிலிருந்த திரையை நீக்கிக் கொண்டு வெளியே வந்ததும் அவன் வியப்பால், இப்படிக்கூட ஒரு பேரழகியா...! என்று அயர்ந்து போய்விட்டான்.

     “வாருங்கள்!” என்று அந்த அழகோவியம் தேனின் இனிமையைச் செந்தமிழின் அமுதச் சுவையில் கூட்டி ஒயிலுடன் அழைத்துச் சற்றே ஒசிந்து நின்று வணங்கியதும் சிம்மநாதன் தன்னையே சில நொடிகள் மறந்துவிட்டான்.

     அவள் அவனைப் பார்த்த ஒரு பார்வையில் ஆயிரமாயிரம் பொருள்கள் புதைந்து கிடப்பதாகத் தோன்றியது அவனுக்கு. அது வெறும் பார்வையா? காந்த விழிக்கண்கள் காந்தம் போல் இழுத்துத் தனக்கு, தன் அழகுக்கு அடிமைப்படுத்தி தன்னை மறக்கச் செய்து தன் விருப்பம் போல ஆட்டி வைக்கும் ஆபத்தான பார்வை என்பதையும் அவன் ஊகிக்காமலில்லை. எனினும், அந்தப் பார்வை அலாதியான அழகியின் பார்வை. சோழர்களிடம் எத்தனையோ அரிய பெரிய பொருள்கள் உண்டு என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பொருள்களிலேயே சிறந்தது இந்த அழகோவியம்தான் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமேயில்லை! என்று நினைத்தான் சிம்மநாதன்.

     சிம்மநாதன் கம்பீரமான தோற்றமும், அலட்சியமான பார்வையும், ஆணழகன் இவன் என்று சொல்லும்படியான நடை நொடி பாவனைகளும் பெற்றவன்தான். முப்பது வயதானாலும் முறுக்கேறிய உடலமைப்பும் கொண்டவன்தான். தவிர நாளதுவரை தன் திருமணம் பற்றிய சிந்தனையில்லாதிருந்தவன். ஆதலால் கட்டுத்தளராத காளையைப் போல இருந்தான். ஆயினும் அவன் நாளது வரை பெண்களை ஏறெடுத்துப் பார்க்காத, அதாவது பெண்கள் என்றாலே அலட்சியமாக ஒதுக்கிவிடும் மனப்பான்மை கொண்டவனாகவுமிருந்தான். கங்க நாட்டுப் பெண்கள் தென்னகத்தின் சிறந்த கட்டழகிகள் என்று அக்காலத்தில் கூறப்பட்டு வந்தாலும் சிம்மநாதனைப் பொறுத்தவரை பெண்கள் என்றாலே பிரச்னைதான் என்ற நோக்கில் அவனைக் கவர்ந்ததேயில்லை.

     எனினும் இந்தச் சோழ நாட்டுக் கூத்தழகி சில நொடிகள் அவனை மெய்ம்மறக்கச் செய்துவிட்டாள். சில நொடிகள்தான். சட்டெனச் சுதாரித்துக் கொண்டுவிட்டான்.

     “கூத்தர்கள் குழு என்றதும் அவர்களுக்கு ஒரு தலைவன்தான் இருப்பான் என்ற நினைவில் வேகமாக ஏறி வந்தேன். ஆனால் உங்களைப் போல் ஒரு பேரழகி அதன் தலைவியாயிருப்பது கண்டு சற்று அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சிதான்” என்று கூறியபடி அவளைத் தொடர்ந்து சென்றான்.

     அதைக் கேட்டு ‘கலகல’வென்று அவள் சிரித்ததும் யாழின் நரம்புகள் சுண்டிவிடும் போதுண்டாகும் இனிய நாதம் போலிருந்தது அந்தச் சிரிப்பு.

     “எங்கள் குழுவினரின் தலைவராக இருந்தது என் தந்தையார். அவர் இப்போது உயிருடன் இல்லை. என் தாய் இந்தகைய பெரும் பொறுப்பினை என் மீது சுமத்திவிட்டுக் கோயில் பணியாற்றச் சென்றுவிட்டாள். எனவே வேறு வழியில்லை. இவர்கள் என்னைத் தலைவியாக ஏற்றிருக்கிறார்கள்” என்று அவள் விளக்கிய சமயத்தில் அழகான இருக்கையில் அமர்ந்த சிம்மநாதன் ‘எவ்வளவு பெரிய அறை, எத்தனை வசதிகள், எத்தகைய அழகோவியங்கள்!’ என்று மனதுள் வியந்த வண்ணம் அவள் கூறியதைக் கேட்டான்.

     “சோழ நாட்டுக் கூத்துக்கலைஞர்கள் கலைத்துறையில் வல்லுனர்கள் மட்டுமல்ல, நல்லவர்களும் கூட. ஆகையினால்தான் தங்களுடைய தலைவியாக உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது உங்களுடைய கலைத்திறனுக்கு அவர்கள் அளித்துள்ள தனி மதிப்பாகும்” என்று புகழ்ந்த அவன் தான் வந்த வேலையைச் சீக்கிரமே முடிக்க விரும்பி “நான் கடந்த இரண்டு தினங்களாக இரவு பகல் எங்கும் தங்காது இங்கு வந்தவன். என்னுடைய ஊழியன் ஒருவனும் வந்திருக்கிறான். இங்கு இன்று இரவு மட்டும் தங்கலாம் என்று பார்த்தால் இடம் இல்லை. ஒரு சிறு அறை கூட இல்லை என்று கூறிவிட்டான் சத்திரத்தலைவன். எனவே உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன். அறை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. வெளிக்கூடத்தில் படுக்க இடம் கொடுத்தால் கூடப்போதும்” என்று இங்கிதமாகக் கேட்டதும் வல்லபி சட்டெனத் தன் உதவியாளான வயதான அம்மாளிடம் ஏதோ சொல்ல, அவளும் தலையசைத்துவிட்டு அப்பால் செல்ல, “பரவாயில்லை, உங்களுக்கும் உங்கள் தோழருக்கும் ஒரு அறையை ஒழித்துத் தரும்படி சொல்லிவிட்டேன். அங்கு தங்கியுள்ள பெண்கள் இங்கு வந்துவிடுவர். இதுகூடச் செய்யாது போனால், அதுவும் பல நூறு காதத்திலிருந்து பயணம் வந்து களைத்திருக்கும் உங்களுக்கு கடமையாகச் செய்வதுதான் எங்களுக்கு சிறப்பாகும்” என்று கூறியதும் அவன் உண்மையிலேயே அதிர்ந்து விட்டான் அளப்பரிய வியப்பால்.

     நீ எவ்வளவு பெரிய மனிதனானால் என்ன? எங்களுக்கே போதவில்லை என்றால் இதில் தருமம் வேறா என்று கேட்பாள் என்று அவளைப் பார்த்ததும் நினைத்தவனுக்கு இந்தப் பதில் வியப்பூட்டாமல் வேறென்ன செய்யும்?

     “இது பெரிய உதவி. அதுவும் காலத்தாற் செய்தது. நீங்கள் எங்களுடைய பயணக் களைப்பை...”

     “போதும் நிறுத்துங்கள்.. நானும் சிவிகையில் வந்தாலும் நெடுந்தூரம் பயணம் போய் வந்திருக்கிறேன். தகடூர் நாட்டிலிருந்து இப்போதுதான் திரும்புகிறேன். எனவே பயணச் சிரமம் தெரியாதவள் அல்ல. நன்றி, உபசாரம் எதுவும் இப்போது தேவையில்லை. முதலில் நீங்கள் போய் உண்டி அருந்திவிட்டுச் சிரமபரிகாரம் செய்து கொள்ளுங்கள். காலை விடிந்ததும் அளவளாவலாம்” என்றாள் பாவை.

     சிம்மநாதன் சட்டென எழுந்து “மிக நன்றி. இதற்கு மேல் நான் எதுவும் கூறப்போவதில்லை” என்று புன்னகையுடன் கூறிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்துவிட்டான்.



விஜயநந்தினி : 1 2 3 4 5 6