உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
விஜயநந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 5 பரப்பிரும்மப் பிரதான் என்ற சிறப்பான பெயரை வைத்துக் கொண்டாலும் குள்ளநரித் தந்திரங்களையே அதிகமாக கையாண்ட காரணத்தினால் மக்களில் புத்தியுள்ள பலருக்கும், அரசாங்கத்தில் அனுபவம் பெற்ற பலருக்கும் அவரைப் பிடிப்பதில்லை. குறுகிய தேசபக்தி வெறியைப் பயன்படுத்திக் கொண்டு அதை வெறியாக மாற்றி சுயநலந் தேடும் சந்தர்ப்ப சமயோசிதப் பேர்வழி என்று கலிங்கர்களில் பலர் நினைக்காமலில்லை. ஆயினும் அவரை நேரிடையாக எதிர்க்கும் துணிவைப் பலர் பெறாததற்குக் காரணம் பாமர மக்களிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கினால்தான். கலிங்க மன்னன், தமது அமைச்சர்களை மதிக்காதவன் என்று கூறுவதற்கில்லை. ஆனால் பரப்பிரம்மத்தினால் சாதிக்க முடிந்ததை இவர்களால் சாதிக்க முடியாது என்று கருதினான். ஆனால் கலிங்கத்தின் பேரமைச்சர் இப்படிக் கருதவில்லை. இன்னும் ஒரு போர் நடக்குமானால் பிறகு கலிங்கம் என்ற ஒரு நாடே இருக்காது என்றே அவரும் மற்றும் சில உண்மையான தேசபக்தர்களும் நினைத்தனர். மற்றொரு போரால் நாடு நாசமான பிறகு அரசன் ஏது, ஆட்சி ஏது, வாழ்க்கை ஏது... மக்கள் கதி என்னாவது...? இப்படி நினைத்த பேரமைச்சர் ‘சோழர்களுடன் இனி போர் இல்லை. எனவே சோழர்கள் கலிங்கத்தின் வாழ்வில் தலையிடுவதில்லை. கலிங்கத்தின் சுயேச்சையை அங்கீகரித்து சரிசமானமாக நடத்த வேண்டியது சோழர் கடமை’ என்று பொருள்படும்படி எழுதிய லிகிதத்தைப் பெற்ற சோழ மன்னர் விக்கிரமன், அதை அப்படியே தன் அருகிலிருந்த பூந்துறை நாயகனிடம் நீட்டினார். கலிங்கப் பேரமைச்சர் மட்டுமில்லை, மற்றும் பலர் அந்த லிகிதத்தில் கையொப்பமிட்டிருப்பதையும் அவர்கள் முந்தைய போர்களில் கலிங்கத்துக்காக படாதபாடுபட்டவர் என்பதையும் இனியும் ஒரு போர் நடக்குமேயானால் அப்பவும் கூட அவர்கள் தங்கள் நாட்டுக்காகவே போராடும் உண்மையான தேசபக்தர்கள் என்பதையும் பூந்துறை நாயகன் ஊகித்துக் கொண்டு “இது உண்மையான நோக்கமுடன் எழுதப்பட்ட கவனத்துக்குரிய லிகிதம்தான்” என்றான். “அப்படியானால் கலிங்கம் மீண்டும் நம்முடன் பொருத முனையாது என்பதற்கு இக்கடிதம் ஒரு அத்தாட்சியா?” என்று விக்கிரம சோழர் கேட்டதும், “அப்படியும் நாம் பொருள் கொள்ளுவதில் தவறில்லை. ஆனால் இதுவே உறுதிப்படுத்துவதும் ஆகிவிடாது. எனவே தலைநகர் திரும்பியதும் நாம் இதற்குப் பதில் அனுப்புவது பற்றி யோசிப்போம். இப்போது நாம் இங்கு வந்திருப்பது பற்றிய முடிவை மேலும் தாமதமின்றி நிறைவேற்றுவதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது” என்று பூந்துறை நாயகன் கூறியதும் விக்கிரம சோழன் “நாட்டுக்காக வாழ வேண்டிய நான், அதே, நாட்டுக்காக நாட்டின் வலுவுக்காக எவ்வாறு செயல்பட வேண்டுமோ அவ்வாறே செயல்பட்டாக வேண்டியதுதான். எனவே நீங்கள் மதுராந்தக மூவேந்த வேளாரின் மகளைச் சோழ மன்னன் தனது அரசியாக்கிக் கொள்ள இசைகிறான் என்று அவர்களுக்கு அறிவித்து விடுங்கள்” என்று சுருக்கமாகச் சொன்னதும் பூந்துறை நாயகன் பெருமகிழ்ச்சி மட்டுமின்றி மட்டற்ற மனநிம்மதியும் அடைந்தான். “சோழ மன்னர்கள் நாட்டுக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்துள்ளனர். நாம் இன்று மூவேந்தவேளார் குலத்தில் பெண் எடுப்பது அவர்களைத் திருப்திப்படுத்துவதுடன் நிற்காது. நம் முன்னோர்கள் காலத்தில் நிலவிய மனக்கசப்பும் நீங்கி நம் நாடு மேலும் வலுப்பெறும் இந்தச் சம்பந்தத்தால் என்பதுதான் உண்மை” என்று கூறியதும் விக்கிரம சோழன் “ஆம்... இதில் மாற்றமும் இல்லை. தயங்கவும் தேவையில்லை” என்றதும் பூந்துறை நாயகன் தனது மெய்யுதவியை அழைத்து ஓலை நாயகத்திடம் சென்று உடன் ஒரு லிகிதம் மூவேந்த வேளாருக்கு எழுத உத்தரவிட்டான். ஏறக்குறைய அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக, மூவேந்த வேளார் குடும்பத்துக்கும் சோழர்களுக்கும் இருந்த பகைமையுணர்ச்சி இந்த ஒரு நல்ல முடிவால் மாறிவிட்டது. சோழ நாட்டு வரலாற்றில் ஒரு சிறந்த மாறுதலாகும் என்று கூறப்பட்டு நாடு முழுமையும் இச்செய்தி பரவி மக்கள் வெகுவாக மகிழ்ந்தனர். சோழ மன்னன் விக்கிரம சோழன் பராந்தக மூவேந்த வேளார் நாட்டுக்குச் சென்ற நோக்கம் வெற்றிகரமாகப் பூர்த்தியானதும் மன்னனும், பூந்துறை நாயகனும் மனநிறைவோடு தலைநகர் திரும்பிய போது நகரமே திரண்டு வரவேற்றது. தலைநகரில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் காத்திருந்தன. கங்க நாட்டு சிம்மநாதன், கூத்துக் கலையரசி, சீனத்திலிருந்து வந்த வணிகக் குழுவினர் என்று பல முக்கிய பயணிகளும், பிரதிநிதிகளும் காத்திருந்தனர். முதலில் சிம்மநாதனை அனுமதிக்கும்படி உத்திரவிட்டான் பூந்துறை நாயகன். கன்னங்கரேலென்ற கரியதோற்றம், ஒளிர்ந்திடும் பல் வரிசை, ஊடுருவி நோக்கும் விழிகள், கட்டுமஸ்தான நெடிது உயர்ந்த தோற்றம் கொண்ட பூந்துறை நாயகன் எதிரில் சிம்மநாதனைக் கொண்டு விட்ட போது சில நொடிகள் அயர்ந்து போய் நின்றான். என்றாலும் சட்டெனச் சுதாரிப்படைந்து தங்கள் நாட்டு முறையில் பணிவாக வணங்கினான் சிம்மநாதன். அவ்வணக்கத்தை சிரக்கம்பத்தால் ஏற்று “கங்கபாடி மக்கள் நலம் சிறப்பாகத்தானே இருக்கிறது?” என்று கம்பீரக் குரலில் கேட்டதும் “அனைவரும் நலமே” என்றான் சிம்மநாதன். . “உங்கள் அரசர், அரசகுரு விஜயகீர்த்தி யாவரும் நலந்தானே?” என்று அடுத்துக் கேட்டதும் சிம்மநாதனும் சுருக்கமாக “அவர்களும் நலமே” என்றான். “நல்லது, நீ வந்த விஷயம்... அதாவது கங்க மன்னருக்கு நிரம்பவும் வேண்டியவரான உங்கள் ராஜரத்ன விஜயகீர்த்தி உன்னை அனுப்பிய நோக்கம்...?” “குவலயபுரத்தின் ஆதிகாலத்திய ஜோதி என்று கூறப்படும் வைரமொன்றை சோழ மன்னருக்கு அரியணை ஏறிய நாள் பரிசாக வழங்க அரசரும் அவையும் குருநாதரும் கூடிச் செய்த முடிவின்படி என்னை இங்கு அனுப்பியுள்ளனர். காலஞ்சென்ற மாமன்னர் குலோத்துங்கர் மரணத்தால் ஆறு திங்கள் வரை நாங்களும் துக்கமனுபவித்து முடிந்ததும் நான் புறப்பட்டு வந்துள்ளேன். ஒரு நல்ல நேரம் பார்த்து நான் அதை மன்னரிடம் சேர்க்க அனுமதி வேண்டும்.” “நல்லது. நாளை மறுதினம் மிகவும் நல்ல நாள்தான். பரிசிலை மன்னரிடம் சேர்ப்பிக்க அனுமதிக்கிறோம். நாளை மறுதினம் காலை பத்து நாழிகையளவில் தயாராயிருந்தால் நம் மெய்யுதவிகள் வந்து அழைத்து வருவர்... சரி, நீ போகலாம்” என்று பூந்துறை நாயகன், பேச்சினை முடித்ததும் சிம்மநாதனும் சட்டெனப் புறப்பட்டுவிட்டான். ‘தன்னை ஒரு பேரரசனின் தூதுவனாகக் கருதவில்லை. உட்காரு என்று கூறவில்லை. ஏக வசனத்தில்தான் பேச்சு. இதெல்லாம் ஏன்? வேண்டுமென்றே அவமதிக்கத்தான் இப்படியா? அல்லது இந்நாட்டில் பூந்துறை நாயகனுக்கு யாரை வேண்டுமானாலும் இப்படிப் பேச உரிமையுண்டா?’ என்று சிந்தித்தபடி தன் மாளிகைக்குத் திரும்பினான் சிம்மநாதன். என்றாலும் ‘தான் இங்கு வந்திருக்கும் இலட்சியம் பெரிது. அதை அடைவது பற்றித்தான் கவலையேயன்றி தனக்கு மரியாதை தனித் தகுதி எல்லாம் எதிர்பார்ப்பது இப்போதைக்கு அவசியமில்லை’ என்று முடிவு செய்தவனாய் உள்ளே மாளிகையினுள் நுழைந்த போது அங்கே ஒரு காவலன், “ஐயா, தங்களைக் காண்பதற்காக ஒரு பெண்மணி நெடுநேரமாகக் காத்திருக்கிறாள். தங்களைக் கண்ட பிறகு திரும்புவேன் என்று கூடத்தில் காத்திருக்கிறாள்” என்றதும் வியப்புற்றவன், ‘இங்கு தன்னைத் தேடி ஒரு பெண்மணி வருவது என்றால்... அது கூத்தழகியின் உதவியாளான அம்மாவாகத்தான் இருக்க வேண்டும்’ என்று ஊகித்துக் காவலனைப் பார்த்து “உலூகன் எங்கே?” என்று கேட்டான். “அவர் சற்று முன்னர் இங்கு வந்து ஒருவருடன் சென்றுள்ளார்” எனக் காவலன் கூறியதும் திடுக்கிட்டான். ‘இங்கு வந்து முழுசாக இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. இதற்குள் ஒரு நண்பனைப் பிடித்துவிட்டானே இவன்?’ என்று வியந்து தனது அறைக்குள் சென்றவன் அங்கே ஒரு நடுவயதுடைய பெண்மணி, வெள்ளை ஆடை தரித்தவள் இருந்ததைக் கண்டு திகைத்து விட்டான். யார் என்று புரியவில்லையாயினும் மதிப்புக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர், மரியாதைக்குகந்த அந்தஸ்து பெற்றவள் என்பதை அவள் தோற்றமே காட்டியதால் சிம்மநாதன் “தங்களைச் சட்டென யார் என்று அறிந்து கொள்ள முடியாத என் பெயர் சிம்மநாதன். நான் கங்க நாட்டு நல்லெண்ணத் தூதுவன்” என்று அறிமுகம் செய்து கொண்டதும், அந்தப் பெண்மணி “நல்லது மகனே! நான் வல்லபியின் தாய். சூரியனார் கோவிலில் தெய்வப் பணியாற்றி வரும் ஒரு சாதாரண நிலையிலுள்ள துரதிர்ஷ்டக் கட்டை” என்று கூறியதும் சிம்மநாதன் “ஓ...! அப்படியா...! முதலில் நீங்கள் அப்படி அமருங்கள். கடந்த சில தினங்களாகத் தங்கள் மகளை இருமுறை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. அவர்கள் நட்பு மதித்தற்குரியது. அவர்களின் தாயான தங்களின் அறிமுகம் பெருமதிப்புக்கு மட்டுமல்ல. பெரும் பயனையும் அளிக்கக் கூடியது” என்று வெகு இங்கிதத்துடன் கூறிவிட்டு அவள் இருக்கையில் அமர்ந்த பிறகே தன் இருக்கையில் அமர்ந்தான். அவள் சோக உருவத்திலும் தனிக் கம்பீரமும், பார்ப்பவரைக் கவரும் பெருந்தன்மைக் களையும் இருப்பதைச் சட்டெனக் கண்ட அவன் “அம்மணி, புகழ்பாடவோ, துதி செய்யவோ நான் கூறவில்லை. தங்கள் மகள் மூலம் தங்களைப் பற்றியும் சிறிது அறிந்தேன். கலிங்கத்தில் உன்னத நிலையில் இருக்க வேண்டிய நீங்கள் இங்கு... இதெல்லாம் விதியின் திருவிளையாடல் என்று எண்ணித் தன்னடக்கத்துடன் முடிவு செய்து இன்று நீங்கள் இறைபணியில் ஈடுபட்டிருப்பது உங்கள் உயரிய பண்பாட்டை, சிறப்பினை, சீரிய மனப்பாங்கினைக் காட்டுகிறது. இவையனைத்துக்கும் முதலில் நான் மரியாதை செலுத்தக் கடமைப்பட்டவன். ஆனால்...” என்று அவன் மேலும் ஏதோ கூற வந்தவன் சட்டென்று மவுனமானதைக் கண்ட அவள், “ஏன் மகனே நிறுத்திவிட்டாய்? நீ சொல்ல வந்ததைத் தயங்காமல் சொல்லலாம்” என்று ஊக்கமூட்டினாள். “சொல்லாமலிருப்பதற்கில்லை. தங்கள் மகள் நாடு போற்றும் நல்ல கூத்தழகி. இசைவாணி, தமிழ் அரசி... இதெல்லாம் பெருமைக்குரிய உண்மை. ஆனால் அந்தப் பெண் மனதில் பதிய வைத்துக் கொண்டுள்ள சில கருத்துக்கள் அவளுடைய பெருந்தன்மைக்கோ, சிறப்புக்கோ அவளுடைய எதிர்காலத்துக்கோ உகந்ததல்ல என்பது என் சொந்தக் கருத்து. நடந்தது நடந்துவிட்டது. இனி ஈசன்தான் நலம் செய்ய வேண்டும் என்று நீங்கள் ஒதுங்கியிருப்பதைப் போல ஒதுங்கி விட்டாளானால்... அது மிக மிகச் சிறப்பு தரக்கூடியது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து தாயே. நான் இப்படிக் கூறுவது தங்களுக்கு அதிகப்பிரசங்கித்தனமாகவும் தோன்றலாம். ஆனால் என் மனதில் பட்டதை நான் மறைப்பவனில்லை. தவிர அவள் நலம் கருதுபவன் நான். எனவே உரிமையுடன் கூறுகிறேன்” என்று நயமும் தெளிவும் கொண்ட முறையில் அவன் தன் கருத்தினைக் கூறியதும் அந்தப் பெண்மணி பொறுமையாகக் கேட்டாளேயன்றி குறுக்கிடவில்லை. சட்டென நிமிர்ந்த அவள் “உன் பெயர் சிம்மநாதன் என்று கூறினாயல்லவா?” என்று கேட்டதும் அவன் “ஆம்” என்றான். “அப்படியானால் நீ கங்க நாட்டின் முன்னாள் மகா சேனாதிபதியான தேவநாதனின் பேரனாக அல்லது...” என்று அவள் தயங்கியதும் திடுக்கிட்ட அவன், “ஆமாம். நான் அவர் மகள் மனோன்மணியின் மகன். என் தந்தையும் அந்நாட்டுச் சேனைத் தலைவராயிருந்தவர்தான். மேகநாதன் என்பது அவர் பெயர்” என்று சோகத்துடன் அவன் கூறியதும் நீண்டதொரு பெருமூச்சுவிடுத்த அந்தப் பெண்மணி “உன் தாயும் நானும் இளம் வயதுத் தோழிகள். உன்னுடைய பாட்டனார் என் தந்தையுடன் நெடுங்காலம் வந்து தங்கியிருந்தார். அதெல்லாம் ஒரு கனவாக, மறந்திட வேண்டிய அக்கால நிகழ்ச்சிகளாகப் போய்விட்டன. நீ சோகிப்பதைப் பார்த்தால் உன்னுடைய பெற்றோர்...” “யாரும் இல்லை. ஐந்து வயது முதல் நான் ராஜரத்ன விஜயகீர்த்தியவர்களின் ஆதரவில் வளர்ந்து ஆளானவன். அவர்தான் எனக்கு எல்லாம்.” “அப்படியா? அவர் மகாமேதை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் கலிங்க நாட்டின் மாமேதையான ராஜகுரு பரப்பிரும்ம பிரதான் அவர்களின் உற்ற நண்பர் இவர். நல்லது மகனே! கங்காதேவி உனக்குச் சகலவிதத்திலும் துணையிருக்கட்டும். உனக்கு இன்னும்...” “திருமணம் ஆகவில்லை. செய்து கொள்ளும் உத்தேசமுமில்லை. உங்கள் மகள் வல்லபி என் தங்கை. அவ்வளவுதான்.” அவனுடைய பதில் அதுவும் சட்டுப்புட்டென்று வருவதைக் கண்ட அந்த நிதானப் பெண்மணி “நல்லது மகனே! புரிந்து கொண்டு விட்டேன் நான். உன்னைத் தேடி வந்த நோக்கம் யாதெனக் கூறிவிடுகிறேன். என் மகள் சோழர்கள் ஆதரவில் வளர்ந்தவள். எனக்கு ஏதோ முன்பு கொடுமை நிகழ்ந்தது என்ற நினைவில் அவள் தன் மனதில் இவர்கள் மீது வளர்த்துக் கொண்டுள்ள வஞ்ச உணர்ச்சியை நீயே இப்போது நல்லதல்ல என்று கூறிவிட்டாய். நானும் இதைக் கூறத்தான் வந்தேன். நேற்று அவளைச் சந்தித்த போது நீ வந்திருப்பது பற்றி உன்னுடன் கலந்து உரையாடியது பற்றியெல்லாம் கூறினாள். அப்போது நான் நினைத்ததெல்லாம் நீயும் அவளைப் போல பழிவாங்கும் உணர்ச்சியுடன் இங்கு வந்திருப்பதாக ஊகித்தேன். இப்போது அது தவறு என்று புரிந்துவிட்டது. சோழர்களைப் பழிவாங்கும் எண்ணத்தை அவள் கைவிட்டால் அதுவே எனக்குப் பெரும் நிம்மதி. எனவேதான் கங்கனாகிய உன்னை அண்மையில் அவளுடைய மதிப்புக்குரிய நண்பனாக வந்துள்ள உன்னை, நேரில் கண்டு அவளுக்கு நற்புத்தி கூறும்படி வேண்டவே வந்தேன். என் வேலை சுளுவாகிவிட்டது. நீயே என் மனப்பாங்கினைக் கொண்டவனாக இருக்கிறாய்.” “ஆம் தாயே! தங்கள் மகள் வாழவேண்டியவள். பழிவாங்கும் பாவையாக அவள் மாறுவது மிகமிகத் தவறு.” “நீ உன்னாலானவரை முயற்சித்து...” “முயற்சிக்கிறேன் தாயே. அவள் என் தங்கை என்று கூறிவிட்டேனே” என்று அவன் சொன்னதும் அவள் இருக்கை விட்டெழுந்தாள். அரச குடும்பத்தினர்களுக்குத் தரவேண்டிய மதிப்பையும் அந்தஸ்தையும் அதற்கு உரிய மரியாதையுடன் தரப்பட வேண்டுமென்பதைச் சிம்மநாதன் நன்கறிவான். எனவே கூத்தழகியானாலும் வல்லபி ஏதோ ஒருவகையில் அரச குடும்பச் சம்பந்தமுள்ளவளாகவே அவனுக்குத் தோன்றியது. ஆகவே அவள் அன்னையை மரியாதையுடன் வழியனுப்பியவன் தன் இருக்கையில் அமர்ந்ததும் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். சத்திரத்தில் அன்று வல்லபியைச் சந்தித்தது முதல் நேற்று அவளுடைய கூத்தில் கலந்து கொண்டது வரை. பிறகு இன்று சோழ நாட்டின் இன்றைய சக்தி என்று மாகுரு விஜயகீர்த்தி அறிவித்த அதே பூந்துறை நாயகனைச் சந்தித்தது முதல் இப்போது வல்லபியின் அன்னையை இங்கு சந்தித்தது வரை நிகழ்ந்தவற்றை வரிசைப்படுத்தி யோசித்தான். ‘இதுவரை மேலோட்டமாகப் பார்த்தால் இவற்றில் யாதொரு சூதும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் ஒவ்வொன்றையும் ஊடுருவிப் பார்த்தால் ஏதோ ஒரு நிழல் படர்ந்துள்ள மாதிரி தோற்றம். இது உண்மையாகவும் இருக்கலாம், பிரமையாகவும் இருக்கலாம். எனினும் திடீரென்று இந்த அம்மாள் சூரியனார் கோயிலிலிருந்து வருவானேன்? ஒருவேளை நேற்றைக் கூத்தைக் காண வந்திருப்பாளோ...? அப்படியும் இருக்கலாம். என்னதான் வாழ்க்கையின் எல்லா ஆசாபாசங்களையும் துறந்து விட்டாலும், அருமை மகள் ஆடற்கலையரசியின் கூத்தினைக் காண வந்திருக்கலாம். வரட்டும் நமக்கு மறுப்பில்லை. ஆனால் இங்கு வந்து மகனே என்பானேன்? தந்தையைத் தெரியும் என்பானேன்? என் தந்தை உன் தாத்தாவுக்கு நட்பினர், நீ என் மகளுக்குச் சகோதரன் என்பானேன். இதெல்லாம் என்ன என்றே புரியவில்லையே. ஒருவேளை இவை சர்வசாதாரண நிகழ்ச்சிகளாகவே இருக்கலாம். நமக்கு இயற்கையாகவே இருந்து வரும் சந்தேக உள்ளத்துக்கு இவையெல்லாம் சந்தேகங்களாகவே எழுந்து இப்படித் தோன்றுகின்றனவா? கங்க நாட்டுக்காரன் என்றதுமே இவர்களுக்கு நம்மிடம் சற்று அதிகமாக உறவு கொள்ள இயல்பாகவே உள் உணர்ச்சி தூண்டி விட்டுள்ளதா? உலூகன் வரட்டும். இவற்றின் உண்மை பொய்களைச் சற்று தீவிரமாக ஆராய்ந்தால் சிறிதாவது புலப்படாமற் போகாது. அப்படிப் புலப்படும் போது மேற்கொண்டு எவ்வகையில் நாம் செயல்பட வேண்டும் என்றும் முடிவாகிவிடும். அத்தனையும் உண்மையானால் நாம் இந்த வல்லபியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லை. பொய், போலி என்றால் இதே வல்லபியை நாம் ஒரு நொடியில் ஊதிவிடவும் முடியும்’ என்று இறுதியாக நினைத்தபடிக் கண்களைத் திறந்தவன் எதிரே உலூகன் நின்றிருந்தான். “நல்ல சமயத்தில்தான் வந்தாய் உலூகா” என்று சிம்மநாதன் சொன்னபடி அவனை உட்காரச் செய்ததும் “ஆமாம், இங்கே உங்களைக் காண அந்தக் கிழவி வந்ததும், அவளுடன் வந்த ஒரு கோயிலாண்டியைப் பிடித்துக் கொண்டு கொஞ்சம் அப்பால் சென்று வந்தேன் நான்” என்றான் அவன். “ஓகோ! அப்படியானால் என்னைப் பார்க்க வந்த அம்மணி...” “சூரியனார் கோயிலுக்குச் சொந்தமான சிவிகையில் வந்தாள். நான்கு சிவிகை தாங்கிகளும், ஒரு மெய்க்காவலரும் உடன் வந்துள்ளனர். அவர்கள் தற்போது, அடுத்தாற் போல் உள்ள ராசராச வீதியில் உள்ள கலைமாளிகையில் தங்கியுள்ள வல்லபியைக் காணச் சென்றுள்ளனர். நேற்று மாலையில் அந்த அம்மாள் இங்கு சோழ இளவரசி ராஜசுந்தரிக்குத் துணையாக வந்ததாக அறியப்படுகிறது.” “சோழ இளவரசி ராஜசுந்தரியா?” “ஆமாம், மாமன்னர் குலோத்துங்கரின் கடைசி மனைவி தஞ்சையில் இருந்தவள் தற்போது கங்கைகொண்ட சோழபுரம் வந்து குடியேறியுள்ளார். அவள் பெற்ற மகள்தான் இந்த ராஜசுந்தரி...” “ஓகோ!” “என்ன ஓகோ! இந்தக் கூத்தழகி வல்லபியைக் காட்டிலும் பேரழகி. ஆடற்கலையில் அவளுக்கு நிகர் இந்நாட்டிலேயே எவரும் இல்லையாம்.” “சரி சரி... வர்ணனையை வீட்டு விஷயத்துக்கு வா...” “மகளைத் திருத்த முயன்று தோல்வியடைந்திருக்கிறாள் வல்லபியின் தாய். அதனால்தான் இன்று உம்மைக் கண்டு பேச வந்திருக்கிறாள்.” “திருத்துவது என்றால்...?” “தன் மனதில் பகையுணர்ச்சியையும் பழி உணர்ச்சியையும் வளர்த்துக் கொண்டு அந்த வல்லபி நாளுக்கு நாள் வஞ்சம் தீர்ப்பவளாக உருவாவதை அவள் தாய் சிறிதும் விரும்பவில்லை.” “வஞ்சந் தீர்ப்பவள் என்றால் சோழ நாடு அவளைப் பற்றி எதுவுமே இதுவரை அறியாமல் தூங்குகிறதா என்ன?” “பெண்கள் மனம் கடலைவிட ஆழமானது. எந்த ஒரு சக்தியும் இந்த ஆழத்தை அளவிட முடியாது.” “இதில் நாம் இன்னும் ஆழ்ந்து ஆராய வேண்டியிருக்கிறது உலூகா. நிதானமாக அதைச் செய்ய வேண்டும்.” “முட்டத்துக் குரங்கணியார் மடம் போக வேண்டுமாக்கும்?” “ஆமாம் உலூகா, நீ நாளையே போக வேண்டும்.” “ஏற்பாடு செய்துவிட்டேன். இரண்டு பொற்காசுகள் பேருதவி புரிந்தன. இங்குள்ள காவலர்களின் தலைவன் அங்கு செல்ல உதவி செய்கிறான்.” “மிக எச்சரிக்கையோடு போய் வா. கங்காதேவியின் பிரசாதங்களைக் கொடுக்கவே நீ அங்கு செல்கிறாய் என்பதைச் சிறிதளவும் மறந்திடக் கூடாது.” “மறக்கமாட்டேன்.” “அடிகளாரைக் குருநாதர் நிரம்பவும் விசாரித்தார். சில தினங்களில் நானே நேரில் என் மரியாதையைச் செலுத்த அங்கு வருகிறேன் என்று அறிவித்து வா.” “உத்தரவு...!” “வெள்ளை மயில் வந்து சேர்ந்ததா என்பதையும் தெரிந்து வா?” “நிச்சயமாக.” “நாம் திரும்பும் போது அவர் நிச்சயமாக ரத்னகிரீடம் காண முடியும் என்றும் உறுதிப்படுத்து” என்று சிம்மநாதன் கூறியதும் உலூகன் சற்றே பதறிவிட்டான். “எந்த உறுதிப்பாட்டில் இந்த முடிவுக்கு வரமுடிந்தது?” “தருணம் வரும் போது பதில் கூறுகிறேன் உலூகா. அதற்குள் நீ இங்கு தெரிந்து கொள்ள முக்கியமான சில தகவல்களை நமக்குச் சேகரித்துத் தர வேண்டும். இந்த வேலையில் இங்கு உனக்கு மிகவும் அந்தரங்கமாக, நேர்மையாக, நம்பிக்கையாக உதவக்கூடிய ஒரு ஆளைப் பிடித்தாக வேண்டும். இயலுமா?” “முயற்சிக்க வேண்டும். தவிர நீங்கள் இன்னொரு வகையிலும் கூத்தழகியை சோதித்துப் பார்க்கலாம்.” “எப்படி உலூகா?” “நமக்கு அந்தரங்கமாக இருக்கக்கூடிய ஒருவனை அவளால் அளிக்க முடிகிறதா என்று சோதித்தால்... நாம் அதில் ஏமாந்துவிடப் போவதில்லை. ஆனால் அவளுடைய உண்மைப் பலம் மனம் இரண்டும் புரியுமல்லவா?” சிம்மநாதன் சட்டெனப் பதில் கூறாமல் சற்றே நிதானித்து யோசித்தான். ‘உலூகன் ஒரு யோசனையைத்தான் கூறுகிறான். நமக்கு அவளால் நம்பிக்கையான ஒரு ஆளைக் கொடுக்க முடியாது போனால், ஆரம்பத்திலேயே நாம் அவளைப் புரிந்து கொண்டுவிட முடியும் என்பது உண்மைதான். பிறகு எச்சரிக்கையாகவும் செயல்படலாம். மாறாக அவள் அப்படி ஒரு ஆளைக் கொடுக்க முடிந்திடுமானால் நாம் கொஞ்சங் கொஞ்சமாக அவளை நம்ப வேண்டியதுதான்’ என்று நினைத்தவன் “சரி உலூகா, நீ சொல்லுவதும் சற்று கவனத்துடன் யோசிக்கப்பட வேண்டியதுதான். இதற்கிடையில் இங்குள்ள சத்திரம் சாவடிகள், சாதாரண மக்கள், அரசினரின் சாதாரண ஊழியரிடையே வல்லபியைப் பற்றிய கருத்து யாதெனப் பராபரியாக அறிய முயற்சி செய். பெரிய அலுவலர்களிடமோ, ஊடுருவி மெய்யுதவிகளிடமோ நாட்டம் வேண்டாம்... புரிகிறதா?” “நன்கு புரிகிறது.” “சரி, நீ புறப்படலாம். நாளை மாலையில் நான் கூத்தழகி வல்லபியைச் சந்திப்பதாக ஒரு காவலன் மூலம் அறிவிப்புக் கொடுத்துவிட்டு நீ உன் வேலையைக் கவனிக்கச் செல்லலாம்” என்று அவன் உத்தரவு கொடுத்ததும் உலூகன் புறப்பட்டுவிட்டான். மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான் சிம்மநாதன். ‘கங்கபாடியிலிருந்து அவன் புறப்பட்டு இன்றோடு ஒன்பது நாட்களாகின்றன. இதுவரை எந்த ஒரு குறுக்கீடும் இல்லை. குருநாதர் கூடப் பல கெடுபிடிகள் இடையில் ஏற்படலாம் என்றார். அதுவும் இல்லை. இங்கு வந்த பிறகு அந்தக் கெடுபிடி நிச்சயமாக இருக்கும் என்று நம்பினால் அதுவும் இந்த நேரம் வரை இல்லை. எனவே அவர்கள் நம்மை ஒன்று விட்டுப்பிடிக்க வேண்டும். அல்லது மிகவும் திறமையாக நிழல் போல மறைந்து கவனிக்க வேண்டும். பூந்துறையார் கூட சர்வசாதாரணமாகத்தான் தன்னை வரவேற்றுப் பேசி அனுப்பினார் என்றாலும் எதிரியைத் தன் பார்வை மூலமே ஊடுருவிப் பார்க்கும் திறமை பெற்ற அவர் கூட நம்மைச் சந்தேகிக்கவில்லை யென்றால்... கங்கர்கள் பல்லாண்டு காலமாக நம்முடன் சேர்ந்து விட்டவர்கள். அரசகுல சம்பந்தமும் ஏற்பட்டிருக்கிறது. எனவே அவர்கள் இனி என்றைக்கும் நம் பகைவர்கள் ஆகமாட்டார்கள் என்று பரிபூரணமாகச் சோழர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதனால்தான் இவ்வாறு நாம் கண்காணிக்கப் படாமலிருக்கிறோமா? ஏனைய தூதுவர்களிடம் கேள்வி போட்ட முறையும் நம்மை அன்யோன்யமாக மக்கள், மன்னர் பற்றி விசாரித்த பாங்கும் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததும் உண்மைதான். சோழர்கள் உண்மையிலேயே நம் மீது சந்தேகங் கொள்ளாமல் நம்பிக்கையுடன் சற்றே அலட்சியமா யிருந்தார்களானால் நாம் வந்த வேலை சுளுவாகி விடவும் கூடும். என்றாலும் அவ்வளவு இலேசாக இவர்களைப் பற்றிக் கருதிவிட முடியாது. குருநாதர் புறத்தோற்றம், இங்கிதப் பேச்சு, அன்பு காட்டும் உறவு முறை கண்டு ஏமாந்துவிடாதே என்று எச்சரித்ததை மறப்பதற்கில்லை. எனவே நாளை கூத்தழகியைப் பார்த்துப் பேசிய பின் அடுத்து செய்ய வேண்டியது பற்றி முடிவு செய்யலாம் என்றெண்ணியபடி எழுந்தான் அவன். |