உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
விஜயநந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 2 சோழ நாட்டின், வடதிசை எல்லைப் பகுதியான பூந்துறை நாட்டின் நுழைவாசல் மாதிரி இருந்த சிற்றூர்தான் சேந்தன்குடி. சோழர்களின் சேவையில் நீண்டகாலம் ஈடுபட்டு முன்பு வாழ்ந்திருந்த சேந்தன் என்னும் வேளிர் தலைவனின் நினைவாக இருந்த ஊர் அது. எல்லையில் இருந்ததால் அதற்குரிய முக்கியத்துவம் அதிகம். எனவேதான் அங்கு ஒரு பயண சத்திரம் அமைக்க மன்னர் உத்தரவிட்டு அது உருவாயிருந்தது. வாணிகர்களும், அரசியலாரும் இந்த எல்லையூரைக் கடந்து அடிக்கடி இவ்வழி போவது அவசியம் ஆகிவிட்டதால் சத்திரமும் எப்போதும் நிரம்பி வழியும். பெரிய உணவுக்கூடம், சோழ நாட்டுச் சமையல் புகழ் பெற்றது. எனவே, அந்தச் சத்திரத்தின் உணவுக் கூடத்தில் ஏகப்பட்ட கூட்டம் தங்கும். பயணிகள் தவிர அங்குமிங்கும் பயணம் செய்து கொண்டிருந்தவர்களும் திரண்டிருந்தனர். பெரிய பெரிய வாழை இலைகள், அவற்றில் விதவிதமான பதார்த்தங்கள், இடையே மல்லிகைப் பூப்போன்ற சோறு. உண்டி ருசித்தது. அதன் நறுமணம் வயிறு நிறைய நிறைய இன்னும் கொஞ்சம் கேட்கச் செய்தது. உலூகன் நெடுங்காலமாகச் சோழ நாட்டு உண்டியை ஒரு கை பார்க்க விரும்பினான். இன்று கிடைத்தது அதற்கான சந்தர்ப்பம். எனவே அவன் ஒரு கை என்ன? இரண்டு கைகள் போதாத அளவுக்குச் சாப்பாட்டைக் கவனித்துவிட்டான். சிம்மநாதன், சத்திரக்காரன் தன் அறையிலேயே கொண்டு வந்து வைத்த உண்டியில் ஒரு சிறு பகுதியே உட்கொண்டான். பிரபுக்கள் இப்படித்தான் என்று எண்ணிய சத்திரக்காரன் கையில் இன்னும் ஒரு காசு. நரி முகத்தில் விழிக்கவில்லை அவன். காலையில் கூத்துக் குழுவினர் வந்த போது அந்த வல்லபி முகத்தில் விழித்தான் அவன். எனவே இப்படி ஒரு அதிர்ஷ்டம் இன்று தனக்கு அடிப்பதாகக் கருதிய அவன், தான் அறிந்தவரை வல்லபி பற்றி அவனிடம் விளக்க நினைத்து “ஏழிசை வல்லபி என்ற பெயரை நம் மன்னரே இவளுக்கு வைத்ததாக ஒரு கூற்று. இல்லை, இவளுடைய இயற்பெயரே இதுதான் என்பாரும் உண்டு. ஆனால் இந்தப் பெயர் இவளுக்குப் பொருந்துவது போல எவருக்குமே பொருந்தாது. நூற்றுக்கு நூறு என்பார்களே, அவ்வளவுக்கு மேலே இவளுக்குப் பொருந்தும் பேரழகி என்பது குருடனுக்குக் கூடத் தெரியும்” என்று கூறியதும் சிம்மநாதன் சிரித்துவிட்டான். “உங்கள் நாட்டில் குருடர்கள் ஊனக்கண்களை இழந்தாலும் ஞானக் கண்களைப் பெற்றவர்கள் போல் இருக்கிறது” என்று அவன் கூறியதும் சத்திரத் தலைவன் “நீங்கள் சொல்லுவதும் ஒரு விதத்தில் சரிதான். இந்த அழகி வல்லபி, ஆடற்கலையில் இன்று தன்னை மிஞ்சியவர் யாரும் இல்லை என்று பெற்றுள்ள புகழுக்கும் சரி, இசைக்கலையில் இவளை வெல்லுவார் இல்லை என்று பெருமைக்கும் சரி, ஈடு இணை இல்லை என்று கூறுவதைத் தவிர எனக்கு வேறு எதுவும் கூறத் தெரியவில்லை. இவள் நடத்தும் ராஜராஜ விலாசம் என்னும் அற்புதக் கூத்தினை வருணிக்க ஆயிரம் நாவுகள் போதாதென்றால், இவளுடைய இசை நிகழ்ச்சியைக் கேட்டால் நாம் நம்மை மறந்திட வேண்டியதைத் தவிர வேறு வழியே இல்லையென்று இந்நாட்டின் பெருங் கலைஞர்களே கூறியுள்ளனர்.” “அப்படியா? ஒருமுறை இவர்களை எங்கள் குவலயபுரம் கொண்டு செல்லுதல் வேண்டும்.” “நிச்சயம் செய்ய வேண்டியதுதான். இயல், இசை, கூத்து மூன்றிலும் இவள் பெற்றுள்ள அபார தேர்ச்சியைக் கண்டு நம் மன்னரே இவளைப் பாராட்டி ‘முத்தமிழ்க் கலையரசி ஏழிசைவல்லபி’ என்று விருதளித்துள்ளது பெரும் பெருமையில்லையா?” “ஆமாம்... ஆமாம்.” சத்திரத் தலைவனுக்கு இந்த ஆமாம் ஆமாம் என்ன பொருளைக் குறித்ததோ புரியவில்லை, ஆனால் சிம்மநாதன் உண்டியை முடித்துக் கொண்டுவிட்டான் என்பது மட்டும் புரிந்துவிட்டது. எனவே மேலும் வல்லபி புகழ் பாடாமல் புறப்பட்டுவிட்டான். உண்டி முடிந்ததும் அவரவர்கள் இடத்துக்கு அவரவர்கள் சென்றாலும், சிலர் கூடத்திலேயே அமர்ந்து உரையாடினர். மற்றும் சிலர் வெளியேயிருந்த தோட்டத்தில் அமர்ந்து நிலாக் காய்ந்தபடி பொழுது போக்கினர். வேறு சிலர் இரவு உண்டிக்குப் பிறகு சிறிது தூரம் நடந்து வர வேண்டும் என்ற பழக்கத்திலோ என்னவோ அங்கும் இங்கும் சுற்றினர். எல்லைக் காவலர்கள், வணிகர்கள், பயணிகளில் சிலர் அவ்விரவிலேயே தங்கள் பயணத்தை மேற்கொண்டு விட்டனர். உப்பரிகையின் மேன்மாடம் வெட்டவெளி போன்று இருந்ததால் அங்கு சிறிது நேரம் உலவினால் என்ன என்ற நினைவுடன் சிம்மநாதன் மொட்டை மாடம் சென்றான். ஆனால் தனக்கு முன்னே யாரோ அங்கு நடமாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து சற்றே தயங்கி நின்றான். அப்படி நடந்தவர் இவன் அருகே வந்ததும் அது ஒரு பெண்ணாக அதுவும் வல்லபியாக இருந்ததைக் கண்டு துணுக்குற்று நின்றான் அவன். ‘சரி, இனி இங்கு இருப்பது சரியல்ல’ என்று சட்டென முடிவு செய்து கீழே இறங்க திரும்பியவனை “சற்று இருங்கள்” அன்று கூறியதும் படிகளில் இறங்காமல் நின்றான் அவன் தயங்கி. “நான் இப்படித்தான் இரவு நேரத்தில் அதாவது கூத்து நிகழ்ச்சி இல்லாத நேரத்தில் உலவுவது வழக்கம். தோட்டத்தில் உலாவலாம் என்றால் அங்கு ஒரே கூட்டம். இது அமைதியாகவும் இருக்கிறது. தனிமையாகவும் இருக்கிறது” என்று அவள் சொன்னதும் “ஆமாம்” என்று ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டு மீண்டும் புறப்பட யத்தனித்தான். “பரவாயில்லை. நீங்களும் இங்கே என்னுடன் உலாவலாம்” என்று அவள் அழைப்பு விடுத்ததும் மற்றும் ஒரு முறை அவன் அதிர்ச்சிக்குள்ளானான். ‘சின்னஞ்சிறு பருவத்தினளான இவள், பேரழகியான இவள், இங்கு தன்னந்தனியே இருக்கும் இவள் தன்னை ஏன் வந்தாய் இங்கே என்று கேட்காமல் என்னுடன் உலாவலாம் என்கிறாளே. இதென்ன விந்தை!’ என்று அதிசயித்து நின்றான். ஆனால் அவள் இதைக் கவனியாதது போல “உங்களுடைய பயணச் சிரமம் இன்னும் தீரவில்லை போலும். அதனால் உலவுவதற்குப் பதில் உட்கார விரும்புகிறீர்களாக்கும். நல்லது. இதோ இந்த மேடையில் உட்காருங்கள்...” என்று கூறிவிட்டு அடுத்திருந்த மேடையொன்றில் அவளும் அமர்ந்தாள். சிம்மநாதனுக்கு எல்லாமே அதிசயமாகத்தான் இருந்தது. என்றாலும் சட்டென அம்மேடையில் உட்கார்ந்து விட்டான். சில நொடிகள் அவள் பேசாமல் வானத்தைப் பார்த்தாள். அவனும் பேசவில்லை. ஆனால் தன்னைப் போல ஒரு இளம் வயதினனுடன் இவள் இப்படித் தனித்து இருக்க அல்லது அளவளாவ சற்றும் தயங்கவில்லையே. அது எப்படி இவ்வளவுக்கு அச்சமோ கலக்கமோ இல்லாமல் இவளால் பழக முடிகிறது? சோழப் பெண்களுக்கு இது இயற்கையான குணம் போலும். “சோழப் பெண்கள் இதர நாட்டு பெண்களைவிடக் கொஞ்சம் தைரியம் அதிகம் உடையவர்கள்தான் போலிருக்கிறது” என்றான் அவள் மனோநிலையை அறியும் பான்மையில். அவள் இளநகை பூத்த முகத்துடன் அவனை உற்றுப் பார்த்துவிட்டு, “சோழப் பெண்கள் தைரியம் என்றால் தனித்ததா என்ன? எல்லாப் பெண்களுக்கும்தான் காத்துக் கொள்ளும் தைரியம் இல்லையா என்ன?” என்று சட்டெனக் கேட்டதும் சிம்மநாதன் திகைத்துவிட்டான். ‘இவள் என்ன பொருளில் கேட்கிறாள் இப்படி? இவள் ஒரு சோழ நாட்டுப் பெண்ணாயிருக்கும் போது மகிழ்ச்சி கொள்ள வேண்டியதுதானே.’ “நான் சோழ நாட்டுப் பெண் என்று நினைத்து நீங்கள் இப்படிப் பேசியிருக்க வேண்டும். அப்படித்தானே?” என்று கேட்டாள் அவள். “அப்படியானால் நீங்கள் சோழ நாட்டுப் பெண் இல்லையா?” “இல்லை, ஆனால் நான் யார் எந்த ஊர் என்பதையெல்லாம் விளக்க நெடுநேரம் வேண்டும். அதற்கான சூழ்நிலையும் வேண்டும். ஆனால் ஒன்று; நீங்கள் இந்தச் சோழர்களைப் பற்றி என்ன கருத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என் கருத்து வேறு. சோழர்களிடையே சிசுப் பருவத்திலிருந்து வளர்ந்து வந்திருக்கும் நான் இவர்களைப் பற்றிக் கொண்டுள்ள கருத்து முற்றிலும் வேறாகும்.” சிம்மநாதன் அவளை வியப்புடன் நோக்கிவிட்டு “முற்றிலும் வேறானது என்றால்... அது அவர்களைப் பாராட்டுவதாகத்தானே இருக்க வேண்டும்?” “நான் இன்னும் அதை உங்களிடம் கூறவில்லையே.” சிம்மநாதன் இப்போது உஷாராகிவிட்டான். இந்தப் பெண்ணிடம் மிக மிக ஜாக்கிரதையாகப் பழக வேண்டும் என்று எச்சரிக்கையானான். இவள் எதிலோ துவங்கி எங்கேயோ வந்து நிற்கிறாள். இல்லை, நகர்ந்து கொண்டேயிருக்கிறாள். இவள் உள் மனநிலை நமக்குப் பிடிபடவில்லை. சோழ நாட்டின் கூத்துக்கலையரசி என்று இன்று நாடெங்கும் பெயர் பெற்றுள்ள இவள் சோழர்களைப் பற்றி தனக்கென ஒரு தனிக் கருத்து உண்டு என்று கூறுவது தன் வாயைப் பிடுங்குவதாகக் கூட இருக்கலாம். “நீங்கள் சோழ நாட்டுப் பெண் இல்லையென்று கூறுவதை சட்டென்று நம்ப முடியவில்லை.” “நம்ப முடியாதுதான். ஆனால் அதுதான் உண்மை. நான் கலிங்க நாட்டுப் பெண். என் அன்னைச் சோழர்களால் கலிங்கம் வெல்லப்பட்ட போது சிறை பிடிக்கப்பட்ட மகளிரில் ஒருத்தி.” “அப்படியென்றால்...” “ஓகோ! நீங்கள் கங்கர் அல்லவா? நீங்கள் எங்கள் காலிங்கத்தைப் போல சோழர்களை எதிர்க்கவில்லை, போராடவில்லை. மாறாக அவர்கள் ஆட்சியை ஏற்றுக் கொண்டீர்கள். அவர்களுடன் சம்பந்தமும் கொண்டுவிட்டீர்கள். எனவே நீங்கள் கலிங்கத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டு வந்த பகை மகளிர் வேளம் ஏறுதல் பற்றி அறிய வாய்ப்பில்லை.” “எங்களுக்குச் சோழர்களுடன் என்றுமே வம்புமில்லை, வழக்குமில்லை. தவிர இன்று கங்க நாடு இவர்களுடன் சரி சம அந்தஸ்தில்தான் இருக்கிறதேயன்றி அடங்கி அடிமையாக இல்லை.” “உங்கள் வரை இது சரியான கூற்றுதான் என்றாலும் நாங்கள் அப்படியில்லை.” “கலிங்கம் பற்றி உங்களுக்கு நன்கு தெரியுமா?” “தெரியாது.” “நீங்கள் அங்கே சென்றதுண்டா?” “இல்லை.” “அப்படியானால் சோழர்களிடையே ஒரு சோழப் பெண்ணாகவே வளர்ந்திருக்கிறீர்கள் இல்லையா?” “ஆமாம். ஆனால் சோழர் மனதுடன் அல்ல, கலிங்க உள்ளத்துடன்தான் வளர்ந்தேன். இன்னும் அந்த உள்ளத்துடன்தான் செயல்படுகிறேன்” என்று அவள் தன் வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்துக் கூறியதும் அவன் அவள் விளக்கத்தின் உட்கருத்து புரியாதவன் போல் விழித்தான். ஆனால் அவள் சில நொடிகள் கண்களை மூடியபடி ஏதோ யோசித்துவிட்டு, “சற்று முன் வேளம் ஏறுதல் என்ன என்று கேட்டீர்கள் அல்லவா? அதைச் சொல்லுகிறேன். பகை மகளைச் சிறைப்பிடித்து வந்து அவளை அரசன் முதல் ஆண்டி வரை யாருக்கு வேண்டுமானாலும் அடிமையாக்கலாம். ஒப்புக்கு மன்னர் பிரானுக்குத்தான் இப்படி வேளமேறுபவளிடம் முன்னுரிமை என்பார்கள். உண்மையில் இப்படி இல்லை. வேறொரு முரடன் கூட ஒரு வேளமேறிய மகளிரை ஏலத்தில் எடுப்பது போலத் தன் உடைமையாகப் பெற்றுவிட முடியும். அவள் கலிங்க நாட்டின் அரச வம்சத்தினள் என்றாலும், பிரபுக்கள் குடி என்றாலும், சாதாரண குடிமகள் என்றாலும் சரி. வேளமேற்றப்பட்டால் இங்குள்ளவர்களின் அடிமைப் பொருள் அவள் என்றுதான் அர்த்தமே தவிர வேறில்லை.” “அரச குடும்பப் பெண்கள் கூடவா?” “ஆமாம். பார்க்கப் போனால் இந்தச் சோழர்களுக்கு அந்த அரசகுலப் பெண்கள்தான் முதலாவதாக வேளமேற வேண்டியவர்கள் என்று கருதுவர். இப்படி வேளமேறியவள்தான் என் தாய்.” “அப்படியானால் நீங்கள்...” “கங்க நாட்டின் பிரபுவான நீங்கள் எனக்கு இப்படி ஏகப்பட்ட மரியாதை காட்ட வேண்டியதில்லை. ‘நீ’ என்று அழைத்தால் ஒன்றும் கெட்டுப் போய்விடாது. ஏனென்றால் வேளமேறியவளின் மகளான எனக்கு இனி புதிதாக அந்தஸ்து எதுவும் வரப்போவதில்லை. நான் எதிர்பார்க்கவும் இல்லை...” என்று தன் குரலில் அலாதியான வேகத்தை வரவழைத்துக் கொண்டு அவள் கூறியதும் சிம்மநாதன் ஒன்றும் புரியாதவன் போலவே விழித்தான். இவள் கூத்துக்காரி. எனவே நடிப்பாகவும் இருக்கலாம். தன் வாயைக் கிளறவே இவள் இப்படியெல்லாம் பேசினால் அதில் அதிசயமில்லை. எனவே எச்சரிக்கை, எச்சரிக்கை! “நான் இப்போது ஒரு கூத்துக்காரி. ஏதோ திறமையும் உள்ளவள். ஏன் எனில் நான் சோழ நாட்டின் பந்தநல்லூர்ப் பெரியவரிடம் நாட்டியமும், தஞ்சைப் பெருஞ்சாத்தனாரிடம் இசையும், நல்லூர்ப் புலவரிடம் தமிழும் பயின்றவள். எனவேதான் எனக்கு இங்கு அரசர் முதல் ஆண்டி வரை மதிப்பு. எனக்கு இளமையிருக்கிறது, திறமையிருக்கிறது, கலைப் புலமையிருக்கிறது...” “தவிர பேரழகும் இருக்கிறது என்பதை அல்லவா முதலில் கூற வேண்டும்” என்றான் அவன். “சொல்லலாம். ஆனால் சோழ நாட்டவர் தங்கள் நாட்டு ஆண்கள் அனைவரும் வீரர்கள், பெண்கள் யாவரும் அழகிகள் என்ற பெருமையில் திளைப்பவர்கள். மற்றவர்களை குறிப்பாக என் போன்ற பிற பகுதிப் பெண்களை அவர்கள் சுகபோகக் கருவிகளாகக் கருதுவரேயன்றி மாறாகக் கருதி மதிப்புத் தருவதேயில்லை” என்று கூறிப் பெருமூச்சுவிட்டாள் அவள். சிம்மநாதனும் விடாமல், “உங்களைக் கூடவா?” என்று ஒரு கேள்வி கேட்டான். “ஆமாம். ஆனால் என் பிறப்பு இந்தச் சோழ நாட்டில்... என் பயிற்சி இந்தச் சோழ நாட்டில்... இன்று என் வாழ்வே இந்தச் சோழ நாட்டிலாதலால் நான் சுயமாக இயங்கக் கூடிய நிலையில் இல்லை. எனினும் ஒரு காலம் வராமற் போகாது” என்று அவள் கூறியதும் அவன் இதுவும் புரியாதவன் போல, “எதற்குக் காலம் வர வேண்டும்?” என்று கேட்டான். “எதற்கென்றா கேட்டீர்கள்? காலம் வரும் போது நான் ஒரு பகை மகள் வேளமேற்றப்பட்டுக் கேவலப்படுத்தப்பட்ட ஒருத்தியின் மகள்தான் என்பதைக் காட்டி எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து என் மீதும் என் தாய் மீதும் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட கேட்டை இன்னொரு கேட்டினால்தான் தீர்க்க முடியும் என்றால் அப்படியும் செயல்பட்டுக் கடமையாற்றவே முடிவு செய்திருக்கிறேன்.” சிம்மநாதன் சட்டென எழுந்து “நெடுநேரம் ஆகிவிட்டது. சில நாழிகையாவது உறங்குவோம். பிறகு காலையில் பார்ப்போம்” என்று கூறிவிட்டுச் சரேலென்று கீழே போய்விட்டான். அவன் போகும் வேகத்தையே பார்த்து நின்ற வல்லபியின் முகத்தில் அத்தருணம் பரவிய களையை அவன் பார்த்திருந்தானானால் பழிவாங்கத் துடிக்கும் பயங்கர முகமாகத்தான் தெரிந்திருக்கும். ஆனால் அவன் போய் நெடுநேரம் ஆன பிறகும் அவள் அந்த மேன்மாடத்திலிருந்து இறங்கவில்லை. நடுநிசியும் வந்தது. ஆனால் அவள் அங்கிருந்து இறங்காதிருந்ததுதான் விந்தை. தன் அறைக்குச் சென்ற சிம்மநாதன் உலூகன் எங்கே கிடக்கிறான் என்று அறியக் கீழே கூடத்துக்குச் சென்றதும், அவன் ஒரு மூலையில் சுருண்டு கிடப்பதைப் பார்த்தான். ஆனால் அவன் விட்ட குறட்டை அந்தக் கூடத்தையே கிடுகிடுக்க வைத்தது. சிம்மநாதன் சிரித்துக் கொண்டே தன் அறைக்குத் திரும்பினான். மஞ்சத்தில் படுத்தவனுக்கு நெடுநேரம் தூக்கமே வரவில்லை. ஏழிசை வல்லபி உண்மையா, ஒரு போலியா என்ற ஐயம் அவன் மனதை வெகுநேரம் துளைத்துக் குதறியது. உண்மையாயிருந்தால் அவள் இந்நாட்டின் பெரிய கை ஒன்றின் கருவியாகச் செயல்பட்டுத் தன்னைக் கவர்ந்து அதாவது மனதை ஈர்த்துச் சிக்கிவிடச் செய்து கொண்டு வரும்படி ஏற்பாடு செய்திருக்கலாம். அவளுடைய அழகு, அறிவு, திறமையெல்லாம் போலி இல்லை. உண்மைதான். எனவே இவற்றைக் கொண்டு அவர்கள் தன்னைத் திசை திருப்ப முயற்சித்தாலும் அதிசயமில்லை. என்றாலும் தான் ஒரு பகைவனில்லை. சோழர் நலனுக்கு மாறாக எதையும் செய்யும் ஒரு நோக்கில் இங்கு வரவில்லை என்னும் பகிரங்கமான உண்மை ஊடுருவிகளுக்கோ, அல்லது வேளக் காவல் படைகளுக்கோ தெரியாமலில்லை. தனது அந்தரங்கம் அறிய யாராலும் முடியாது. எனவே தன்னைத் திசைதிருப்ப இவளைப் பயன்படுத்த முயற்சிப்பது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல. ஆனால் இவள் ஒரு போலியாயிருந்தால், சோழர்களை வெறுப்பவள் என்பது நிச்சயமாயிருக்க முடியும். கலிங்கர்களின் சோழப் பகையுணர்ச்சி அசாதாரணமானது. ராஜேந்திர சோழர் காலம் முதல் அவர்கள் சோழர்களை எதிர்த்து நிற்கிறார்கள். எத்தனை முறை தோற்கினும் மனந்தளர்ந்து திரும்பவும் நிமிர்ந்து விடுகின்றனர் அவர்கள். அவள் சொன்னது உண்மைதான். கங்கர்கள் மிருதுவான இதயம் படைத்த சாது மக்கள். எனவே சோழனின் ஆதிக்கத்தை ஏதோ இயற்கையாக நடக்க வேண்டிய ஒன்று என்று நினைத்து அடங்கிவிட்டதுடன் அவர்களுடன் சம்பந்தமும் செய்து கொண்டுள்ளனர். கலிங்கர்கள் அப்படியல்ல. வாழ்ந்தால் சுதந்திரர்களாக வாழ்வோம். இல்லையேல் போரிட்டே மடிவோம் என்று இன்றளவும் துணிந்து விட்டவர்கள். எனவே இவ்வகையில் அவள் நிலை சரியானதேயாகும். தன்னையுமறியாமல் அந்த வல்லபியின் நிலை சரியானதே என்று நினைக்கும்படியான மனமாறுதல் அல்லவா தோன்றுகிறது என்று நினைத்தவன், குருநாதர் விஜயகீர்த்தி ‘எதை நம்பினாலும் நம்பலாம். சோழ நாட்டுப் பெண்களை மட்டும் நம்பிவிடாதே. பிறகு விமோசனமேயில்லை’ என்று குறிப்பிட்டுக் கூறிய புத்திமதியை எளிதில் மறக்க முடியுமா? இவள் கலிங்கப் பெண்ணா அல்லது சோழப் பெண்ணா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இவள் அழகி. நடிப்புக் கலையில் தேர்ந்த கூத்துக்காரி. நமக்கு முன்னே வந்து சத்திரத்தையே பிடித்துக் கொண்டவள். தனக்கு இடமில்லை என்றதும் தாராளமாக ஒரு அறையைக் கொடுத்துதவ முன் வந்தவள். இத்தனையையும் பின்னுக்குத் தள்ளுவது மாதிரி தன்னைப் பற்றிய பல உண்மைகளை நள்ளிரவில், மேன்மாடத்தில் தன்னந்தனியாக ஒரு இளம் ஆடவனிடம் சிறிதும் நாணமோ அச்சமோ காட்டாது புகன்றவள். இவளைப் பற்றி எந்த முடிவுக்கு வருவது? காலையில் இவளும் அவள் குழுவினரும் எழுவதற்கு முன்பே நாம் புறப்பட்டுவிட்டால் மேற்கொண்டு ஒரு பேச்சும் இருப்பதில்லை. ஆனால் அது ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டாலும் விடலாம். இங்கு யாராவது அப்பாவி மாதிரி ஒரு கண்காணி இருக்கலாம், ஊடுருவி இருக்கலாம். எனவே சட்டென எதையும் செய்துவிடக் கூடாது. ஒருவேளை அவள் கலிங்கத்துப் பெண்ணாகவே இருந்து இந்தச் சோழ நாட்டில் பகை மகளாகவே வளர்ந்து பழி வாங்கும் நோக்கத்தையே பிறந்தது முதல் கொண்டவளாய் வளர்ந்திருந்தால்... அதுவும் சாத்தியமேயாதலால் ஏன் நாமும் இவளைப் பயன்படுத்திக் கொள்ளலாகாது. சோழர்களிடம் நமக்குப் பூரண நம்பிக்கையுண்டு, பாசமுண்டு, பரிவுண்டு என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டால் இவளுடைய பழிவாங்கும் நோக்கு நம்மைத் திசை திருப்பும் சூழ்ச்சியாயிருந்தால் மாறிவிடும். இல்லாவிட்டால் ஒவ்வொரு தரமும் அது வெறியை ஏற்றிக் கொண்டு நம் மீது பாய்ந்தாலும் அதாவது நீங்கள் இவ்வளவுக்குத் தாழ்ந்து சோழர்களின் அடிவருடிகளாய் விட்டீர்களே... இது கொடுமையிலும் கொடுமை என்று வெறுத்துப் பேசி ஒதுக்கவும் முயற்சிப்பாள் அவள். எனவே இவளை இந்தச் சத்திரத்து நட்புடன் விடாமல் மேலும் கொஞ்ச காலம் தொடர்பு வைத்துக் கொண்டால் இவளைப் பற்றிய உண்மை புலப்பட்டுவிடும். இந்த உண்மையினால் நமக்குப் பயனுண்டு. அதாவது இவள் பழிவாங்கும் பகைமகளானால் நமது நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாறாக இருக்குமானால் நாம் மிகவும் எச்சரிக்கையுடனேயே சோழ நாட்டில் நம் கடமையைச் செயல்படுத்துவது என்று முடிவு செய்யலாம். இப்படிப் பலபட யோசித்தவன் தன்னையுமறியாமல் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டான். எப்பொழுது உறக்கத்திலாழ்ந்தோம் என்று அறியாமல் அடித்துப் போடப்பட்டவன் போலத் தூங்கியவன் காலைச் சங்கு முழக்கம் நீண்ட நேரம் ஒலியெழுப்பிய பிறகே எழுந்தான். “நல்ல தூக்கத்தில் இருந்தீர் தலைவரே” என்று கூறியபடி எதிரே வந்து நின்றான் உலூகன். “பொழுது புலர்ந்து நெடுநேரமாகிவிட்டதா?” என்று கேட்ட பரபரப்புடன் எழுந்தவன் இரவு நெடுநேரம் தன் மனதைக் குடைந்த சிந்தனைகளை மீண்டும் நினைவூட்டிக் கொள்ளவும் முயன்றான். “ஆமாம் தலைவரே. எல்லாரும் புறப்பட்டுவிட்டார்கள். உங்களிடம் விடைபெற்றுப் போகவோ என்னவோ அந்தக் கூத்துக்காரி சிவிகையின் அருகே நின்று என்னைக் கேட்டாள். அதனால்தான் வந்தேன் உங்களைத் துயில் எழுப்ப...” என்றான் உலூகன். “இதை முன்பே கூறியிருக்கலாம்...” என்றவன் சட்டென நகர்ந்து அருகாமையிலிருந்த ஒரு சிறு தொட்டியில் சுத்தமான நீர் இருப்பதைக் கண்டு, அதனால் முகத்தைக் கழுவிக் கொண்டு, ஆடைகளை சீர் செய்து கொண்டு, இடைவாளைச் செருகி சற்றே நிமிர்ந்து நின்று சட்டெனத் திரும்பி அறையைவிட்டு வெளியே வந்தான். முன் வாயில் முற்றத்தில் வல்லபியும் அவள் உதவியும் நின்றிருந்தார்கள். சிம்மநாதனைக் கண்ட அவள் “சோழ நாட்டு மஞ்சம் நல்ல உறக்கத்தைத் தருவதுதான்” என்று சிலேடையாகக் கூறிவிட்டு, “நாங்கள் கங்கைகொண்ட சோழபுரம் புறப்படுகிறோம். உங்களை அங்கு சந்திக்கும் பாக்கியம் மீண்டும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று அதே தேன் குரலில் கூறியதும் அவன் தயக்கமின்றி, “நான் இன்னும் சில நொடிகளில் புறப்பட்டு விடுவேன். மதியத்திற்குள் தலைநகர் சேர்ந்து விடுவேன். நிச்சயம் நாம் சந்திப்போம். சந்தேகமில்லை” என்றான் கம்பீரம் குறையாத ஆனால் அழுத்தமான குரலில். பரஸ்பர வணக்கம் கூறிக் கொள்ள அவள் சிவிகையில் ஏறினாள். இவன் உணவுக் கூடம் சென்றான். உலூகன் குதிரைகளைத் தயார் செய்து முன் வாயிலில் கொண்டு நிறுத்தும் தருணத்தில் தனது சிற்றுண்டியை முடித்துக் கொண்ட சிம்மநாதன் சத்திரத் தலைவனிடம் அவனுக்குரிய தொகையையும் கொடுத்து காவலனுக்கும் சில காசுகளை வழங்காமலில்லை. மீண்டும் இருவரும் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கிப் புறப்பட்டனர். சோழ நாட்டுக்குள்ளே பயணம் செய்ததால் பல ஊர்களைப் பார்க்க முடிந்தது. பலப் பல மக்களைக் காண முடிந்தது. வானளாவி நிற்கும் கோபுரங்களைக் கொண்ட ஆலயங்களைத் தரிசிக்க முடிந்தது. வீதிகள் தோறும் விதவிதமான வண்ணக் கலவைகளைக் கொண்டு சோழ மகளிர் கோலமிட்டிருந்த அழகொன்றே போதுமே. அதிகாலையில் மக்கள் சாரி சாரியாக ஆலயங்களுக்குப் போவதும், கூட்டங்கூட்டமாகச் சென்று ஆற்றில் நீராடியும், ஒரு பக்கம் தேவாரப் பாசுரங்களை உள்ளமுருகப் பாடி நகரும் குழுவும், மற்றொருபுறம் அன்றாட வேலைகளை அக்கறையுடன் செய்யும் வேகத்தில் பரபரவென்று செல்லும் மக்களும்... வீதிகளில் ஜேஜே என்று இருந்தது என்பார்களே அத்தகைய நிலைதான். சிம்மநாதன் ஒவ்வொன்றையும் ஊன்றி நோக்கினான். அவன் கண்களுக்கும் கருத்துக்கும் அனைத்துமே தப்பவில்லை என்பதும் சரிதான். நீண்ட மஞ்சளங்கியில் சிவப்புப்பட்டை தரித்த கண்காணிப்புப் படையினர் இருவர் தொலைவில் நின்று தங்களைக் கவனிப்பதையும் கண்டும் காணாதவனைப் போலக் குதிரையை நிதானமாகவே நடத்தித் தலைநகர எல்லையை இருவரும் சேர்ந்துவிட்டனர். |