விஜயநந்தினி (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) 6 சோழ மாமன்னன் குலோத்துங்கனின் அண்மைக்கால மரணம் நாட்டில் ஏற்படுத்திய கொந்தளிப்பு அதிகம் இல்லை என்றாலும், போதுமான அளவுக்குச் சில கிளர்ச்சிகள் நடக்காமலில்லை. நரலோகவீரர், காலிங்கராயர் போன்றவர்களும், காடவர்கோன் போன்ற பெருந்தலைகளும் விக்கிரமன் பட்டமேறுவதற்கு ஒப்புதல் அளித்தாலும் ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்க முன்வரவில்லை. என்றாலும் விக்கிரமன் பட்டமேறியது முறையானதா என்று சில பெருந்தலைகள் முணுமுணுக்காமலில்லை. இலங்கையரசர் கூட மூத்தவன் இருக்க இப்படி ஒரு மாற்றமா? என்று கூட வருந்தியதாக வதந்தி கிளம்பியதுண்டு. ஆனால் வீரசோழனும் சோழகங்கனும் விக்கிரமனுக்குப் பெரும் அளவு துணை செய்ததும், பூந்துறை நாயகன் தனது உற்ற நண்பர்களான கோயில் மயிலைப் பராந்தக மூவேந்த வேளாரும் அவருடைய சகோதரர்களான மதுராந்தக வேளாளன், திரைலோக்கிய மூவேந்த வேளார் ஆகியவர்களையும், தத்தநாட்டு உத்தமசீலியின் பேருதவியையும் பெற்று ஆங்காங்கு ஒரு சில குட்டித் தலைவர் கிளர்ந்தெழுந்ததை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட்டான். எனவே மதுராந்தக வேளார், தமது உறவு முறையை உறுதியாக்கிக் கொள்ளத் தமது மகளை விக்கிரமன் மனைவியாக ஏற்பது நன்மை பயக்கும் என்று வேண்டியதும் அவனும் ஒப்புக்கொண்டு விட்டான். தன்னுடைய வேலைகள் முடிந்ததும் பூந்துறை நாயகன் ஆலோசனை மண்டபத்திலிருந்து வெளியேறி அரசன் மாளிகை சென்றான். அங்கு ராஜசுந்தரி தன் அண்ணனிடம் நேற்றிரவு நடந்த கூத்தின் சிறப்பை மிகக் களிப்புடன் விவரித்துக் கொண்டிருந்தாள். “ராஜசுந்தரியை பேசாமடந்தையாக்கிய கேள்வி என்ன?” என்று கேட்டுக் கொண்டே அங்கே சோழகங்கன் வந்ததும் “நீயும் என்னைக் கேலி செய்தால் நான் சும்மாயிருக்கமாட்டேன். பூந்துறை அண்ணன் பிள்ளை படுசுட்டியாயிருக்கிறான். அவனைப் பிடித்து நான் தூக்கிய போது அவன் சரசரவென்று என் மீது ஏறித் தோள் மீது அமர்ந்து “ஹை...” என்று விரட்டினானே பார்க்கலாம். கெட்டிக்காரப்பிள்ளை... இதைத்தான் நான் சொல்ல வந்தேன். இந்த அண்ணன் அப்படியானால்... அப்படியானால்...” என்று மேலே எதுவும் கூறாமல் குழைந்த போது பூந்துறை நாயகன் இடையில் புகுந்து “அப்படியானால் நான் ஒரு அப்பாவிதான். மக்கு, முட்டாள், மந்தம் என்று பேரெடுத்தால் தவறில்லை; கெட்டவன், கயவன், கிராதகன் என்று பெயரெடுத்தால்தான் தவறு” என்றான் சிரித்தபடி. “ராஜசுந்தரிக்கு இந்த ஆனி வந்தால் பதினாறு. இன்னும் அவள் குழந்தையல்ல. எனவே ஒரு அசடனைப் பிடித்து...” சோழகங்கன் முடிக்கவில்லை. “அண்ணா! நிறுத்தப் போகிறீர்களா இல்லையா?” “எதை நிறுத்தும்படி இந்த சுந்தரி கேட்கிறாள் தம்பி?” என்று கேட்டபடி அங்கே வீரசோழன் வந்ததும் “சரி சரி, நீங்களும் வந்தாயிற்றா...! இனி நான் இங்கே புலிகளிடையே சிக்கிய ஆடுதான்” என்றாள் ராஜசுந்தரி. “நீ ஆடு என்று எந்தப் பொருளில் கூறுகிறாய் சுந்தரி? ஆட்டத்தில் வரும் ஆடு என்றா... அல்லது மெய்யாகவே...” “ஐயா! நீங்கள் கேலி செய்யும் அழகே இவ்வளவு விந்தையாயிருக்கிறதே. ஆடு என்பதற்கும் ஆட்டத்திற்கும் வேற்றுமை தெரியாத உங்களுக்கு ஏன் ஆடலைப் பற்றி என்ன தெரியும்?” “ஏன் தெரியாது? நேற்று இரவு கூத்து அபாரமாயிருந்ததாகச் சொன்னார்கள். அதை இளவரசி ராஜசுந்தரி வெகுவாக ரசித்ததாகவும் சொன்னார்கள். நகர் எங்கும் இதே பேச்சுத்தான்.” “நான் ஊர் வம்பைக் கேட்கவில்லை. உங்களைத்தான் கேட்கிறேன். உங்களுக்கு ஆடற்கலையைப் பற்றி ஏதாவது தெரியுமா? உண்டு இல்லை என்று பதில் வேண்டும்.” “என் அருமைத் தங்கையே. என்னை விட்டுவிடு. இந்த ஆட்டபாட்டமெல்லாம் சோழகங்கனுக்குத்தான்” என்று வீரசோழன் சொல்லி முடிப்பதற்குள்- “அடக் கடவுளே! இதென்ன விபரீதம்?” என்று துள்ளி எழுந்து விட்டான். “அம்மா ராஜசுந்தரி... இனி தாங்காது. வீரசோழன் என்னை உன்னிடம் சிக்க வைத்துவிட்டுத் தப்பியோடப் பார்க்கிறான். அவனைப் பிடித்துக் கொள். என்னை விட்டுவிடு. உன் ஆட்டபாட்டத்துக்கெல்லாம் ஒரு பெரிய கும்பிடு” என்று பயந்தவன் போல கூறிவிட்டு வெளியேறினான். ராஜசுந்தரி கலகலவென்று சிரித்துவிட்டு “ஒரு அண்ணன் ஆட்டத்துக்குப் பதில் ஆடுதேடிப் போய்விட்டார். அடுத்தபடி நீங்கள்” என்று வீரசோழனை விரட்டியதும் “மன்னருடன் நான் சற்றுப் பேச வேண்டும். அதற்காகத்தான் வந்தேன். நீ தயவு செய்து சற்று வெளியேறி எங்களுக்கு விடுதலை தருகிறாயா?” என்று கேலியாகக் கேட்டதும் “ஓகோ! அதுதானே பார்த்தேன். காரியம் இல்லாமல் நீங்கள் இங்கே வரமாட்டீர்களே என்று. நான் விக்கிரம அண்ணனுடன்...” “நிறுத்து ராஜசுந்தரி... இன்னும் உனக்கு அந்தப் பழக்கம் விடவில்லை. விக்கிரமன் நாட்டு மன்னர் என்பதை நீ மறந்து அண்ணன் உறவு கொண்டாடி...” என்று சோழகங்கன் ஏதோ சொல்ல முனைவதற்குள் ராஜசுந்தரி திடுக்கிட்டு நோக்கினாள் சோழகங்கனை. “நீ இன்னும் சிறுமியல்ல ராஜசுந்தரி. நாளை...” என்று மீண்டும் சோழகங்கன் ஏதோ சொல்ல முனைந்ததும் அவள் சட்டென மன்னரை வணங்கிவிட்டுப் பரபரவென்று போய்விட்டாள். “தம் மன்னர் திருமணத்துடன் ராஜசுந்தரியின் திருமணத்தையும் நடத்துவதை உடன்கூட்டமோ, அல்லது அமைச்சரவையோ ஆதரிக்குமா?” என்று பூந்துறை நாயகன் மிக இயல்பாகக் கேட்டதும் விக்கிரமன் திடுக்கிட்டான். வீரசோழனோ ‘இதென்ன... இவர் ஏதோ ஒரு முடிவுக்கு வந்த மாதிரி கேட்கிறார். ராஜசுந்தரிக்கு சோழகுல சம்பந்தத்தில் எவனும் இருப்பதாகத் தெரியவில்லையே. ஒருவேளை நமக்குப் பிறகு கூறலாம் என்று ஏற்கெனவே ஒருவனைக் கண்டுபிடித்துவிட்டாரா என்ன?’ விக்கிரமனுக்கோ வேறு யோசனை. ‘இப்போதுதான் அவன் பூந்துறை நாயகனுடன் மயிலை நாடு, தத்த நாடு, புத்தனூர் நாடு ஆகிய மண்டலங்களுக்கு விஜயம் செய்து திரும்பியிருக்கிறான். மதுராந்தக மூவேந்த வேளாரின் மகளைத் தான் மணம் செய்து கொள்ளும் விஷயத்தைக்கூட இன்னும் பலர் அறியாதிருக்கும் போது இவர் திடீரென்று ராஜசுந்தரியின் திருமணம் பற்றிப் பேசினால்...’ வீரசோழன் ஏற்கெனவே இம்மாதிரி பொறுப்புகளை விக்கிரமனிடமும், பூந்துறையாரிடமும் விட்டுவிட்டதால் பெருங் கவலைப்பட்டு விடவில்லை. ஆனால் ராஜசுந்தரி போன்ற பேரழகிக்கு ஒரு பெரும் வீரக் காளையல்லவா வரவேண்டும். அது யாராயிருக்க முடியும் என்றறிய ஆவல் கொண்டான். “வண்டையூர்த் தொண்டைமான் மகன் வயிரவத் தொண்டைமான் நேற்று ஒரு வேங்கையுடன் மோதி அதைத் தன் கைகளாலேயே சாகடித்ததைப் பார்த்ததாக காடுவெட்டியார் மகன் அறிவித்தான். இவ்வறிவிப்பில் சிறு அளவு மிகைபாடிருக்கலாம். ஆனால் அவன் சிறந்த வீரன். ஈட்டி எறிவதிலும் வாள் போரிலும் என்பதை நான் அண்மையில் நிகழ்ந்த குரங்கணி முட்டத்துக் கலகத்தின் போது கண்டேன். திடந்தோள் படைத்த ஆணழகன். சலியாது குனியாது நிமிர்ந்து நோக்கும் நேர்மையும் கொண்டவன் என்பதையும் அறிந்தேன்.” “அறிந்தேன் என்றால்?” “முட்டத்து ராஜாளியார் கொள்ளிடத்துக்கு அப்பால் இருப்பதாலோ அல்லது ஆத்தூர் நாட்டு மண்டலாதிபதியுரிமை தம்மிடமிருந்து பல்லவரையரிடம் மாறிவிட்டதேயென்று கொண்ட மன உளைச்சலாலோ தெரியவில்லை. நமக்கு உதவ வராது குரங்கணிப் பகுதியில் ஏறிட்ட கிளர்ச்சியின் போது விலகிக் கொண்டார். இதைப் பிறகு கவனிக்கலாம் என்று முடிவு செய்தே நாம் நேரிடையாக கிளர்ச்சியை அடக்க இந்தத் தொண்டைமான் மகன் தலைமையில் ஒரு படையை அனுப்பினேன். ஒரே பகலில் வெற்றி கண்டவன் ஒரு ஆயிரம் பேர்களைச் சிறைப்படுத்தி என் எதிரில் கொண்டு நிறுத்தினான். கலகம் செய்தவர்களாயினும் அவர்களும் வீரர்களேயானதால், அவர்களை என்ன செய்யலாம்? என்று வயிரவனையே கேட்டேன். ‘விடுதலை செய்தீர்களானால் நன்றி’ என்றான். “அவர்கள் கலகம் செய்தவர்களாயிற்றே?” என்றேன். “தூண்டப்பட்டவர்கள்... வஞ்சகர்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள். நீங்கள் வீரர்கள். உங்கள் நாடு சிறிதானாலும் ஒரு காலத்தில் தனி நாடாக சுய உரிமையுள்ளதாக இருந்தது. இன்று சோழர்கள் கையில் சிக்கிச் சீரழிகிறது. அதை மீட்டது உங்கள் கடமையில்லையா? என்று கேட்டால் தேச பக்தியுள்ள இவர்கள் நியாய அநியாயத்தைப் பற்றி சிந்திக்கும் நிலைக்குப் பதில் வெறி கொண்டவர்களாகி விட்டனர். எனவே இதுவே போதும் தண்டனை என்ற வகையில்!” என்று நெஞ்சு நிமிர்ந்து கூறினான் தொண்டைமான். “புள்ளிமானான ராஜசுந்தரிக்கு ஏற்றவன்தான் இந்தத் துள்ளு காளையான தொண்டைமான் என்று அப்பவே நினைத்தேன். வீரசோழனின் கருத்து என்னவோ?” என்று மிகவும் நிதானக் குரலில் பூந்துறை நாயகன் கேட்டதும், ‘சரி, ஏற்கெனவே கரிவர்மன் அதாவது பூந்துறையான் இது பற்றி முடிவு செய்திருக்கிறான். எனவே இதில் மாற்றம் செய்ய முனைவது பயனில்லை. ஆனால் சிற்றன்னையார் இது பற்றி ஒரு முடிவு கூறவேண்டுமல்லவா?’
“சரியான பொருத்தம்தான். ஆனால் சிற்றன்னை...”
“பூந்துறை நாயகனும் நீயும் ஒரு முடிவு செய்தால் அது ராஜசுந்தரிக்கும் சரி, என் மனதுக்கும் சரி, மிக மிகப் பொருத்தமாகவே இருக்கும் என்று என்னிடம் மகிழ்ச்சியுடன் கூறிவிட்டார்” என்றார் சோழ மன்னர் குறுக்கிட்டு. வீரசோழன், குரங்கணிமுட்டத்து ராஜாளியர் பற்றி சிறிது காலமாக வருகின்ற செய்திகள் மனதுக்கு நிம்மதி தருவதாயில்லை என்று பூந்துறையாரிடம் கூற நினைத்த சமயத்தில் இந்தத் திருமணப் பேச்சு வந்ததால் அதைச் சொல்லாமல் “அப்புறம் யோசனை என்ன? வைரவத் தொண்டைமான் சோழர்களின் தொடர்பைத் திருமணம் மூலம் செய்து கொள்ள அரசகுலம் மறுக்காது” என்றான். “உடன் கூட்டம்...” “சட்டெனச் சொல்வதற்கில்லை. முத்தரையர் முனையரையரைப் போலத்தான். காடவர் ஒரு முறைக்கு இருமுறை யோசிப்பார். வேட்டரையர் இதுபோன்ற விஷயங்களில் தலையிடாவிட்டாலும் முனையரையரைக் கலந்துதான் முடிவு கூறுவார். வாணகோவரையர் மட்டும் எந்த மறுப்பையும் கூறமாட்டார்” என்றார் மன்னர். “அது ஏன் அப்படி?” “கோவரையர் மகளைத்தான் இந்த வைரவனுடைய சிற்றப்பன் மணந்திருக்கிறான். தவிர அவர் தொண்டைமான் குடும்பத்திடம் பேரபிமானம் கொண்டவர்.” “ஓகோ! இது ஒரு நல்ல செய்திதான். எனவே இந்தத் தொண்டைமான் சம்பந்தம் வரை பெருந்தலைகளிடையே பெரிய எதிர்ப்பிராது என்று தெரிகிறது. வீரசோழர் சட்டெனச் சொல்லட்டும். நம் அரசர் மதுராந்தக வேளாரின் மகள் மதுராந்தகியை மணப்பதில் தடைகள் ஏதேனும் ஏற்படுமா?” என்று கேட்டதும் வீரசோழன் திடுக்கிட்டான். ‘தம்பி விக்கிரமன் இந்த ஏற்பாட்டுக்காகவா அங்கு போய் வந்தான்? அப்படியானால் ஒரு சாகசமான தந்திரத்தின் மூலம் சோழர்களின் எதிரிகளாகக் கடந்த ஐம்பதாண்டுகளாக இருந்தவர்கள் பூந்துறையார் முயற்சியால் நம்மவராகிறார்களா? மிகவும் போற்றத்தக்க ஒரு சாதனை. முப்பாட்டனார் காலத்தில் ஒரு மதுராந்தக சோழர்களின் பட்டத்தரசியாக இருந்த பெருமையை மீண்டும் புதுப்பிக்க இந்த சம்பந்தம் போலும். மிகவும் மகிழ்ச்சி தரும் முடிவு.’ தான் மன்னன் என்பதையும் மறந்து அண்ணன் அருகே வந்து நின்றான். “தம்பி, சோழர்கள் புத்திசாலிகள்தான். ஆனால் சோழர்களைக் காட்டிலும் புத்திசாலி இந்தப் பூந்துறையார். தென்மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் சோழ நாட்டுக்கு இனி எந்த ஆபத்துமில்லை. அப்பா இருந்த போதே பூந்துறையார் மூவேந்த வேளார்களை நம் பக்கம் திருப்பிவிட்டார். இப்போது அப்படித் திரும்பியவர்களைப் பிணைத்து வைக்கிறார். உண்மையில் இது பெரும் சாதனை. தம்பி, நீயும் அரசியல் தந்திரத்துடன் இசைந்து விட்டதும் பெருமைப்படத் தக்கதுதான். உடன் கூட்டம் என்ன, இந்நாடே, நாட்டு மக்களே இதை எக்காளத்துடன் வரவேற்பர். பூந்துறை நாயகரே” என்று வீரசோழன் அழைத்தபடி திரும்பியதும் அங்கே அவன் இல்லை. “நீங்களும் நானும் அண்ணன் தம்பிகள் என்ற பாசத்தில் நம்மை மறந்திருந்த போது அவர் அப்பால் போய்விட்டார் அண்ணா!” என்று விக்கிரமன் அறிவித்தான். ஆனால் பூந்துறை நாயகன் மண்டபத்தின் இன்னொரு பகுதியில் வேறொருவருடன் பேசவே இப்படிச் சட்டெனப் போனான். தவிர வீரசோழன் ஏதாவது பாராட்டுப் பேச்சுக்களைத் துவங்குவான். எதற்கு அதெல்லாம் என்ற எண்ணம் வேறு. தன்னைப் புகழ்ந்து பேசுவதை எப்பவுமே அவன் விரும்புவதில்லை. ஆனால் இத்தகையவர்களுக்குத்தான் புகழ்ச்சி வார்த்தைகளும் குவியும். தலைநகர் திரும்பியது முதல் ஒரு குறிப்பிட்ட ஆசாமியைச் சந்திப்பதில் பூந்துறை நாயகன் அக்கறை கொண்டானானாலும், வேண்டுமென்றே இந்தச் சந்திப்பு நேரத்தையும் தள்ளிக் கொண்டு வந்தான். இனி தாமதிக்க வேண்டிய அவசியமில்லை என்று நம்பக்கூடிய சூழ்நிலை உருவானதும், அவன் மண்டபத்தின் இன்னொரு பகுதிக்குச் சென்றதும் காடவரின் இளைய மகனான ஆகவமல்லன் அமர்ந்திருந்தான். இப்போது சோழ நாட்டின் மாபெரும் கடற்படையின் மகாநாயகனாக இருக்கும் மல்லன் பூந்துறையாரைக் கண்டதும் இருவரும் தமது அலுவல் மரியாதைகளை மறந்து அன்பாலிங்கனம் செய்து கொண்டனர். “எத்தனையோ காலம் ஓடிவிட்டது, நாம் சந்தித்து. கடலில் ஓடி ஓடிச் சலித்து விட்டாலும் மும்முடிக்கு என்னை விட்டுப் பிரிய விருப்பமில்லாததால் நான் இங்கு வர இயலவில்லை” என்றான் ஆகவமல்லன். பூந்துறை நாயகன் வாய்விட்டுச் சிரித்துவிட்டு, “அப்படியானால் சோழர்களின் முன்னாளைய பட்டத்திளவரசன், அதாவது குலோத்துங்க சோழரின் மூத்த மகன் உங்களிடம் கொண்டிருந்த வர்மமெல்லாம் மாறிவிட்டதா? அன்பும் ஆதரவுமாக மாறியிருக்கிறதா பழைய வர்மமும் கோபமும்?” என்று கேட்டதும் “ஆம் கரிவர்மரே... முன்னைய மும்முடி இல்லை அவன். தவிர அவன் இப்போது இரு குழந்தைகளுக்குத் தந்தையும் ஆகிவிட்டான்.” “ஓகோ! அப்படியா?” “இதன் காரணமாகவோ என்னவோ அவனுடைய முன் கோபம், பரபரப்பு எல்லாம் அடங்கி அங்கே நிதானம், பரிவு எல்லாம் வந்திருக்கிறது.” “இதுவும் போற்றத்தக்க விஷயம்தான். பிறகு...” “சீனத்துக்குப் போகும் வரை நான் துணைபோனேன். இப்போது அவன் நமது கப்பல்களிலேயே பெரிதான கடல் அரசியுடன் அந்நாட்டுக்குப் போயிருக்கிறான். அங்கு மாபெரும் வரவேற்பு. சீன மன்னரே நேரில் வந்து கடல் துறையில் இவனையும் மற்றவர்களையும் மதிப்புடன் வரவேற்று சோழர் நலம் பற்றியும் வெகுவாக விசாரித்துள்ளாராம்.” “அப்படியா? உண்மையில் இதெல்லாம் மிகவும் உற்சாக மூட்டும் செய்திகளாக இருக்கின்றன மல்லரே. சீனத்துடன் நாம் கொண்டுள்ள தொடர்பு மிகவும் பயனளிக்கவல்லது.” “ஆம் கரிவர்மரே. சோழ சாம்ராஜ்யத்திடம் அவர்களுக்குள்ள மதிப்பு அபாரமானது. கீழை நாடுகளிலேயே நமது நாடுதான் மிகப் பிரமாதமான அரசினைப் பெற்றிருக்கிறது. செல்வ வளத்தைப் பெற்றிருக்கிறது. வலிமையையும், வளமான எதிர்காலத்தையும் பெற்றுள்ளது என்று நம்பிக்கையுடன் பாராட்டுகிறார்கள்” என்று ஆகவமல்லன் சொன்னதும் “மிக உற்சாகமாயிருக்கிறது ஆகவமல்லரே. ஊக்க மூட்டும் ஆக்கபூர்வமான செய்திகள் இவை. நல்லது. நீங்கள் திரும்புகையில் இலங்கை சென்றிருந்தீர்களா? அங்கு நம் இளவரசி அதாவது இலங்கையரசி நலமாக இருக்கிறாளா? புதிதாக அரசனாகியுள்ள அவள் கணவன் நமது முன்னைய நண்பன்...” “இருவருமே நலமாக இருக்கிறார்கள். நம்மவர்களை நிரம்பவும் விசாரித்தார்கள். உங்களுக்குப் பிரத்தியேகமாகத் தங்கள் வணக்கத்தைக் கூறும்படி வேண்டினர்.” “மிக்க மகிழ்ச்சி. உறையூரில் ஏதேனும் விசேஷம் உண்டா?” “முக்கியமானது எதுவும் இல்லை. ஆனால் இன்னும் ஒரு திங்களுக்குள் இங்கு சீனத்து வணிகக் குழு ஒன்று வருகிறது. அவர்களை சீனத்தின் கடல் ஓநாய் என்று புகழ்பெற்ற யாங்சின் தன்னுடைய சொந்தக் கப்பலான கடல் வேதாளம் மூலம் கொண்டு வருகிறான்.” “ஓகோ! உலகின் இன்றைய பெருங் கடல் கொள்ளைக்காரனான அந்தச் சீனனுக்கு வணிகர்கள் மரியாதை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனராக்கும். உம்...” “அவர்கள் மட்டும் இல்லை. சீன அரசர்கூட இந்த யாங்சின்னை மதிக்கிறார். இவனுடைய கொள்ளைகளில் அவர் தலையிடுவதேயில்லை. காரணம் இவன் கொள்ளையடிக்கும் பொருள்களையெல்லாம் உள்நாட்டில் அதாவது சீனத்தில் மக்களிடையே வாரி வழங்குவதால் அவர்கள் யாவரும் இவனைத் தெய்வமாகக் கொண்டாடுகின்றனர். எனவே மன்னர் மக்களை ஆதரித்து நிற்க வேண்டியதுதானே?” “இல்லை. ஆனால் வியப்புக்குரியதென்னவென்றால் கங்கர்கள் இடைப்பட்டனர் என்பதுதான்” என்று கூறியதும் சட்டென எழுந்தான் பூந்துறை நாயகன். “என்ன சொன்னீர்... கங்கர்களா? கடலிலா...? கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள் அகவமல்லரே. அவர்கள் யார்? நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்களா? அல்லது புதிய தலைமுறையா?” “கங்கபாடியின் பெரிய வணிகரான பூதநாகர் சாவகம் செல்லுகிறார். ஏராளமான பொன், வைரம், இதர உயர் விலைப் பொருள்களுடன். இவருக்குத் துணையாக நான்கு முக்கியமான படைத்தலைவர்கள் நமக்குத் தெரிந்தவர்கள்தான். ஸ்ரீஹரி, ஸ்ரீபதி, நீதிமார்க்கன், நேசமித்திரன் ஆகியோர். இவர்கள் நம் நாட்டு சேனையில் பலவகையிலும் பலகாலம் பயின்றவர்கள். வேவுப்பணியிலும், ஊடுருவும் பயிற்சியும் பெற்றவர்கள். அவர்கள் நம் மாமன்னர் அமரர் ஆகும் முன்னர், இங்கு அவர்களுடைய மன்னர் தம் உதவியாளர்களாக வந்ததும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.” “நினைவு வருகிறது. நீங்கள் கூறும் அந்த நீதிமார்க்கன் என்பவன் கட்டை குட்டையாக சுருட்டைமயிருடன், சிறிய கண்கள், நல்ல சிவப்பு...” “ஆம். அவனேதான். நிரம்பவும் தந்திரமானவன்.” “இன்னொருவனான அந்த ஸ்ரீபதி சிரித்த முகமும் பரந்து விரிந்த மார்பில் எப்போதும் ஒரு சிவப்புமணி மாலை தரித்திருப்பானே... அவன்...” “சரியாகவே சொன்னீர்கள். அடிக்கடி ஹரி ஹரி என்பான் இவன். ஆனால் இரண்யன்தான் குணத்திலும் செய்கையிலும்.” “நேசமித்திரன் என்பவன் நெடிது உயர்ந்தவன். கூரிய மூக்கு விரித்த சடை.. பார்த்தால் பரமசிவம் மாதிரி...” “பிரமாதம்... பிரமாதம். இந்தப் பரமசிவப் பரதேசி உண்மையில் ஒரு ருத்திராட்சப் பூனை. நீங்கள் பார்த்திருக்க முடியாது. ஆனால் இந்த நால்வரையும் நான் சீனம் சென்ற கலிங்கமரக் கலத்தில் கண்டேன். என்னைக் கண்டதும் அவர்கள் ஒளிய முயன்றனர். ஆனால் அந்தப் பாய்மரக் கப்பல் அவர்களைப் பழிவாங்கி எங்களிடம் வரும்படி செய்துவிட்டது. எதிரிகளோ பகைவர்களோ எவரானாலும் நடுக்கடலில் உதவி கேட்டால் செய்யாதிருக்கக் கூடாது என்பது கடலோடிகளின் விதிமுறைகள். எனவே நம்முடைய மேலாவுக்குட்பட்ட கங்கர்களுக்கு உதவி செய்யாதிருக்கலாமா? செய்தேன். ஆனால் அந்த நன்றி கெட்டவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புகாலில் எங்களைச் சந்திக்க முயலவில்லை.” “எத்தனை நாட்களாயிருக்கும் இந்த நிகழ்ச்சி நடந்து?” “சுமார் மூன்று வாரங்கள் ஆகியிருக்கலாம்.” “அவர்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பிவிட்டது நிச்சயம்தானே?” “கலிங்கம் வழியாகத் திரும்பியிருக்கிறார்கள்” என்று ஆகவமல்லன் கூறியதும் பூந்துறை நாயகன் சிறிது நேரம் மவுனமாயிருந்துவிட்டு “ஆகவமல்லரே, உங்களுக்குச் சிம்மநாதன் என்ற கங்கனைத் தெரியுமா?” “ஓ...! நன்றாகத் தெரியும். கங்கர்களில் அவர் சிறந்த வீரன். அரசியல் சதுரன். ராஜகுரு விஜயகீர்த்தி அவனைத் தன் தத்துப் பிள்ளையாக வளர்த்து மிகக் கெட்டிக்காரனாக மாற்றியிருக்கிறார்.” “சோழர்களைப் பற்றி அவன் கருத்து என்ன?” என்று கரிவர்மன் கேட்டதும், மல்லன் சட்டெனப் பதில் கூறிவிடவில்லை. தயக்கத்துடன் “சோழர்களைப் பற்றி அவன் என்ன கருத்து கொண்டுள்ளானோ தெரியாது. ஆனால் அவனுடைய குருநாதரான அந்த விஜயகீர்த்தி சோழர்களை ஓரளவு மதித்திருப்பவர் என்பது வெளிப்படையான கருத்து. உள்ளூர நேர்மாறானது என்பது நம்மில் சிலர் கருத்து.” “கங்கபாடியை நாம் நேரிடையாக ஆளுவதில்லை. அந்நாட்டு மக்களை நாம் அடிமைகளாகக் கருதுவதில்லை. நாம் அவர்களுடைய ஆட்சியில் அதாவது மன்னர்தம் ஆணையில் குறுக்கிடுவதில்லை. ஏன் தெரியுமா? விஜயகீர்த்தியின் வேண்டுகோளுக்கு மதிப்புக் கொடுத்துத்தான். அதாவது அவருக்கு அந்நாட்டு மக்களிடையே மன்னரைக் காட்டிலும் மதிப்புண்டு என்பதை நாம் அறிந்தும் அவருடைய கோரிக்கையை ஏற்றோம். ஒரு சிறு படையை மட்டும் அவர்கள் உள்நாட்டுப் பாதுகாப்புக்காக வைத்துக் கொள்ளலாம். மற்றபடி வெளிப்பாதுகாப்பு உறவுகள் யாவும் நம்மைக் கலந்து நம் யோசனைப்படியே அவர்கள் செயல்பட முடியும்.” “கங்கர்களை நாம் இப்படிக் கட்டிக் காப்பதை அவர்கள் தங்களுடைய சுயேச்சை பறிபோனதாகக் கருத இடமுண்டாக்குமல்லவா?” “உண்டாக்கியது. இருமுறை கிளர்ந்தெழுந்தார்கள். அடக்கிவிட்டோம். ஆனால் நாம் கங்கர்களை அடக்குவதற்காகவோ, அந்நாட்டு மண் மீது ஆசை கொண்டோ அதைப் பிடிக்கவில்லை. கலிங்கமும் அடிக்கடி கங்க நாட்டை மிரட்டினார்கள். சாளுக்கியர்கள் கங்கர்களைத் தங்கள் விருப்பம் போலப் பிடித்து மிகக் கொடுமைப்படுத்தினர். அப்போது அவர்கள் நம்மிடம் உதவி நாடி வந்தார்கள். முதலில் இது பிறநாட்டு விவகாரம் நாம் தலையிட வேண்டாம் என்றுகூட எண்ணினோம். ஆனால் கலிங்கம் நம்மைத் தமது ஜென்மப் பகைவர்களாகக் கருதி பெரும் போர் நடத்தி நம்மிடம் தோல்வி கண்ட பிறகு இந்தச் சிறு நாட்டை ஆட்டுவிக்கத் தொடங்கினார்கள். மீண்டும் அவர்கள் நம்மிடம் வந்ததும் நாம் வேறு வழியின்றி உதவி செய்யப் போய் முடிவில் அந்த நாட்டுப் பாதுகாப்பையே நாம் ஏற்கும்படியாயிற்று” என்று ஆகவமல்லன் நீண்டதொரு விளக்கம் அளித்ததும் பூந்துறை நாயகன் நெடுநேரம் எதுவும் பேசவில்லை. பிறகு சொன்னான். “ஆகவமல்லரே, அந்தச் சிம்மநாதன் இப்போது இங்கே வந்துள்ளான்” என்று. பூந்துறை நாயகனின் இந்த அறிவிப்பு மல்லனை வியப்பில் ஆழ்த்தியது. பிறகு இருவரும் இது பற்றி நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். |