விஜயநந்தினி

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

4

     சிம்மநாதனுக்குக் கங்கைகொண்ட சோழபுரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஓய்வு கிடைத்திருப்பதால் நாமும் சற்று அந்தப் பகுதிக்கு ஓய்வு கொடுத்துவிட்டுக் கலிங்கம் போய் வந்தால் என்ன என்று நமக்குத் தோன்றுகிறது. பயணம் தேவையில்லை. பயணத்துக்காக குதிரையும் தேவை இல்லை. சிரமம் இல்லை. சங்கடமில்லை. சும்மா நினைத்த மாத்திரத்திலேயே போய்விட வேண்டியதுதானே.

     இதோ கலிங்க நாட்டிலுள்ள பிரேமபுரம் என்ற அழகான பேருள்ள ஊருக்குள் நாம் வந்துவிட்டோம். ஊரின் பேர்தான் அழகேயன்றி ஊரும் அழகில்லை. அந்த ஊரின் மக்களும் அப்படித்தான். அழகில்லையென்றால் ஏதோ தோற்றம் பற்றி என்று நினைக்க வேண்டாம். மனிதர்களைப் பற்றித்தான். அதுவும் குறிப்பாக அதோ பேசிக் கொண்டிருக்கிறார்களே... அந்த இருவரையும் பற்றி அவர்களில் ஒருவனாவது பார்ப்பதற்காவது அழகாயிருக்கிறானா வென்றால் அதுவும் இல்லை. அவர்கள் பேசும் விஷயமாவது நல்லதாயிருக்கிறதா என்றால் அதுவுமில்லை.

     இப்படியே எதுவும் அழகில்லை. நல்லதில்லையென்று கூறிக் கொண்டே போனால் நாம் அவர்களைப் பற்றி, அவர்கள் இந்த நடுநிசியில் என்னதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிய வேண்டாமா?

     பிறர் பேசுவதை உற்றுக் கேட்பது தவறுதான். ஆனால் இந்தத் தவறு ஒரு நன்மையைச் செய்யுமானால் கேட்கலாம் என்பது பெரியோர் வாக்கு.

     நடு வயதைத் தாண்டினாலும் கரடுமுரடாகத் தோற்றமளித்து நம்மை உருட்டிப் பார்க்கும் பெரிய விழிகளையும், ஆட்டுக் கொம்பு மீசையும் கொண்ட அந்த ஆளின் பெயர் வக்கிரன் என்பது. பேரே எவ்வளவு வக்கிரமாயிருக்கிறது. ஏனென்றால் அவன் புத்தியும் அப்படித்தான்.

     “நீ இம்மாதிரி இனியும் பொறுமை பொறுமை என்றால் நாம் சாகும் வரை எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாது. எனக்குத் தெரிந்தவரை அவள் பழிவாங்கத் துணிந்துள்ள பகைமகள்தான் என்பதில் சந்தேகமேயில்லை” என்றான் வக்கிரன் கர்ண கடூரமான குரலில்.

     “எனக்கும் சந்தேகமில்லை வக்கிரா. ஆனால் அவள் ஒரு பெண் என்பதையோ, நாம் ஒரு பெண்ணைக் கொண்டு காரியம் சாதிக்கும் வழிமுறையை விரும்புவாள் என்பதையோ என்னால் நிச்சயிக்க முடியவில்லை. தவிர இந்தப் பெண்ணும் நமக்கு நாளுக்கு நாள் பெரும் பிரச்னையாகி நம்மையே பைத்தியம் பிடிக்க வைத்து விடுகிறதே... என்ன செய்வது?”

     “அவள் கழுத்தில் தொங்கும் அந்தப் பதக்கத்தில் நீ விஷம் இருக்கிறது என்று நம்புகிறாயா?”

     “நம்புவதா? நானே நேரில் கண்டேன். அவள் அதில் துளியெடுத்து ஒரு நாய்க்குப் போட்டு அது செத்துத் தொலைத்ததை” என்று அவன் கூறியதும் வக்கிரனே ஒரு முறை நடுங்கிவிட்டான்.

     “அப்படியானால் இந்த நாலு மாதங்களாக அவள் அந்த விஷத்தைத்தான் நம்பியிருக்கிறாள் இல்லையா?”

     “ஆமாம். அதை எப்படியாவது அவள் கழுத்திலிருந்து நீக்கிவிடவும் முயற்சித்தேன். இதற்காக இரண்டு மூன்று பெண்களையும் அவளிடம் நெருங்கச் செய்தேன், பயனில்லை. இரவும் பகலும் அவள் கொஞ்சமாவது ஏமாறுவாள் என்று எதிர்பார்த்து அவளுடைய வேலைக்காரியாக ஒரு பேய் மகளை வைத்திருக்கிறேன். இதுவும் பயனில்லை. என்னால் எந்த ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை வக்கிரா. பாவி மகள் எப்படியாவது போகட்டும் என்று துரத்திவிடலாம் என்றால்...”

     “முட்டாள்தனமாகப் பேசாதே ஜகன்னாதா. நீ இளைஞன். இந்நாட்டில் உனக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு மகத்தானது. மன்னரே உன்னிடம் அஞ்சுகிறார். நீ முயற்சித்தால் பெரும்படை திரட்ட முடியும் என்று நம்புகிறார். இந்தப் பெண் நம்மிடம் சிக்கியது ஒரு பெரும் சாதனை. அந்தச் சோழத்தடியன் நம்மிடம் மோதியதில் பெற்ற ஈட்டிக் காயங்கள் அனந்தம். எனவே இதற்குள் அவன் செத்திருந்தாலும் அதிசயமில்லை.”

     “நாம் இந்தப் பெண்ணைக் கவர்ந்து வந்து நாலு மாதங்களாகியும் சோழர்கள் எதுவும் செய்யவில்லையே? ஒருவேளை பெருந்தலையின் மகள்தானே, ராஜ குடும்பமா என்ன என்று அலட்சியமாக இருக்கிறார்களோ?”

     “எனக்கு அப்படித் தோன்றவில்லை. இந்தப் பூங்கொடியின் அண்ணன் கடுங்கோன் நல்ல வீரன், முரடன். மெய்யுதவிகளில் முக்கியமானவன். இளவரசருக்கும் நிரம்பவும் வேண்டியவன். தவிர மாவீரகாலிங்கராயர் மகன் மாவலிராயன் இவர்கள் குடும்பத்தின் பெண்ணுக்குக் கணவனாக வரத் தகுதியுள்ள முறைப்பிள்ளை.”

     “ஓகோ! அப்படியானால் அவன் கூட ஏன் தூங்குகிறான்?”

     “தூங்குகிறான் என்று கூற முடியாது. ஏதோ ஒரு காரணம் இருக்கும். கடுங்கோன் செத்திருக்கலாம் என்றால் இதுவரை நமக்குத் தகவல் இல்லை. அவன் உயிருடனிருந்தால் சும்மாயிருக்க மாட்டான். மாவலி எதுவும் செய்யவில்லை என்றால் அவனை வேறு ஏதோ ஒரு இடத்துக்குச் சோழர்கள் அனுப்பியிருக்கலாம் என்று தோன்றுகிறது. வழக்கம் போல நமக்கு அங்கிருந்து செய்திகள் வருவதில்லை. நிரம்பவும் எச்சரிக்கையா யிருக்கிறார்கள் போலிருக்கிறது. இந்தப் பெண்ணைப் பணயமாகக் கொண்டு நமது நாட்டு சேனாதிபதியை மீட்க முயற்சிக்கலாம் என்பது நம் தலைவரின் ஆசை. ஆனால் சோழர்கள் இவளைப் பற்றி யாதொரு நடவடிக்கையும் எடுக்காததனால் அவர் கூட சலித்துப் போய் விட்டார். சோழ ராஜகுமாரி எவளையாவது கொண்டு வந்திருக்கக் கூடாதா என்று குதிக்கிறார். இந்தப் பெண்ணைச் சீரழிக்கவும் முடியவில்லையே என்று புலம்புகிறார். எனக்கு என்ன செய்வதென்றே புலப்படவில்லை” என்று மனம் நொந்து பேசினான் ஜகன்னாதன்.

     வக்கிரன் சில நொடிகள் பேசாதிருந்துவிட்டு “நம் தலைவர் அந்த நந்தினி பற்றி என்ன கூறுகிறார்?” என்று கேட்டான்.

     “அவள் நிச்சயமாய் பழிவாங்கும் பகைமகள்தான். நம் நாட்டுக்கு அவளால் நிச்சயமாக விமோசனம் பிறக்கும் என்றும் பரிபூரணமாக நம்புகிறார்.”

     “அவள் இம்மாதிரி நாட்டியக்காரி வேஷமிட்டு அங்கு கூத்தாடி வருவது பற்றி...”

     “மிகத் தந்திரமான வேலை இது என்று கூறுகிறார். ஏனெனில் இப்போது அவள் குழுவில் உள்ள முப்பது பேர்களில் நம் ஊடுருவிகள் கூத்துக் கலைஞர்கள் என்ற பேரில் இருபது பேருக்கு மேல் இருக்கிறார்கள்.”

     வக்கிரன் இதைக் கேட்டதும் மகிழ்ச்சியடைந்தவனாக மாறி “அப்படியானால் நம் தலைவரின் கையாள்தான். அந்த... அவள் பேர் எனக்கு அடிக்கடி மறந்து விடுகிறது.”

     “இங்கு அவள் பேர் நந்தினி. அங்கு அவள் பெயர் ஏழிசைவல்லபி என்பது.”

     “சோழர்களுக்கு எதுவுமே நீளமாகவும் பெரிதாகவும்தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது. சரி, இந்த நந்தினியிடம் இவளை அனுப்பிவிட்டால் என்ன? அனுப்பி இவளை பணயமாகக் கொண்டு பஹாடியை மீட்கப் பேரம் செய்யும்படி நம் தலைவரே சொன்னால் அவள் மறுப்பாளா என்ன?”

     “அது தெரியாது வக்கிரா. ஆனால் நம் தலைவர் அதை விரும்பவில்லை. கடுங்கோன் சும்மாயிருக்க மாட்டான். மாவலியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். எனவே அவர்கள் இருவருமோ அல்லது யாராவது ஒருவர் இவளை மீட்க வந்து மாட்டிக் கொள்ளுவர். பிறகு அவர்களைக் கொண்டு பேரம் பேசினால் சோழர்கள் வேறு வழியின்றி இசைவர் என்று கூறுகிறார். இது நியாயமான ஊகம்தான்.”

     “அதாவது அவர்களாக வந்து சிக்கிக் கொண்டால்தானே?”

     “நிச்சயம் இங்கு அவர்கள் வந்தால் சிக்காமலிருக்க முடியாது. ஏனெனில் அந்தப் பெண் நம் பாதுகாப்பில் அதாவது கெடுபிடியான காவலில் இருப்பது நம்மிடம் அவர்களாகவே நெருங்கி வந்து சிக்கும்படி செய்துவிடுவது நிச்சயம்.”

     “அப்படியானால் நீங்கள் இன்னமும் அந்தக் கடுங்கோன் உயிருடன் இருப்பதாக நம்புகிறீர்கள்.”

     “ஆமாம். ஏனென்றால் அவன் இறந்து விட்டான் என்ற செய்தி எதுவும் நம் ஊடுருவிகளிடமிருந்து வரவில்லை.”

     “நம் தலைவர் அதுவரை அதாவது அந்தப் பதர்கள் தாமாக நம்மிடம் வந்து சிக்கும் வரை பொறுமையாக இருக்கச் சொல்லுகிறாரா?”

     “ஆமாம் வக்கிரா. அதனால்தான் நான் துவக்கத்திலேயே அப்படி பொறுமை பொறுமை என்று கூறினேன்.”

     “நல்ல பொறுமை, நல்ல நம்பிக்கை... ஜகன்னாதா, நான் இரண்டு போர்களில் கலந்து கொண்டவன். நம்முடைய மாமன்னர் கலிங்க பீமனின் தலைமையிலும் நால்மடிபீமன் தலைமையிலும் நான் சோழர்களுடன் போராடியுள்ளேன்.”

     “அவர்கள் தந்திரசாலிகள். யுக்திபுத்தியுடன் செயல்படுவார்கள். பிடிவாதமானவர்கள். நாம் பதட்டத்தால் செயலற்றுப் போகிறோம் என்பதை அறிந்து நம்மைப் பலவகையிலும் பதட்டமடையச் செய்வார்கள் முதலில். பிறகு நாம் கோபத்தினால் நிலை தடுமாறி போராடும் போது ஏற்படும் குழப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு விடுவார்கள்.”

     “நேருக்கு நேர் மோத வேண்டாம். பதுங்கிப் பாய்வதுதான் அந்தச் சோழர்களை நிலைகுலையச் செய்யும் என்று தலைவர் கூறி எச்சரித்தாலும் நாங்கள் பதற்றத்தால் கோபமடைந்து விடுவோம்.”

     “ஆமாம் வக்கிரா. பதற்றம் கோபத்தின் அடிப்படையாகும். கலிங்கம் இன்று தோல்விகளையே சுமப்பதற்கு இது ஒரு முக்கியமான காரணம். அடுத்து நாம் போகும் போது தந்திரமும் யுக்தி புத்தி நிதானமும் தளர்ச்சி காட்டாத உறுதியும் வேண்டும் என்றுதான் நான் மக்களிடம் கூறி வருகிறேன். ஆனால் நம் அரசர் உடனடியாக போர் நடத்தி சோழரிடம் வெற்றி காண வேண்டுமென்று பதறுகிறார்.”

     “சரி, இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறாய் நீ? பூங்கொடியைப் பற்றி உடனடி முடிவு செய்யாமல் இருந்தால்..”

     “நாம் நம் தலைவரிடம் போவோம். ஏனெனில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கங்கபாடியிலிருந்து சிம்மநாதன் கங்கைகொண்ட சோழபுரத்துக்குப் போயிருப்பதாக ஒரு தகவல். அநேகமாக அவர் அங்கு போய்ச் சேர்ந்திருக்கலாம்...”

     “அவர் நம் தலைவர் பரப்பிரும்ம பிரதானுக்கு நிரம்பவும் வேண்டியவராயிற்றே. தவிர இவர் கூடப் பத்து தினங்களுக்கு முன்னர் கங்கபாடி போயிருந்தார் அல்லவா?”

     “ஆமாம். அங்கு ஏதோ ஒரு முக்கியமான திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று மட்டும்தான் எனக்குத் தெரியும். ஆனால் அது என்னவென்று தலைவரும் கூறவில்லை. நானும் கேட்கவில்லை. ஏனெனில் சில முக்கியமான விஷயங்கள் மர்மமாக இருப்பதே நலம் பயக்கும் என்று நம் தலைவரைப் போல நானும் நம்புகிறேன்” என்று ஜகன்னாதன் கூறிய போது தலைவரிடமிருந்து ஒரு ஆள் வந்து இவர்களை அழைப்பதாக அறிவித்ததும் இருவரும் சட்டெனப் போனார்கள் அங்கு.

     கலிங்க நாட்டின் ராஜதந்திர வீரர்களின் தலைவர் என்று கூறப்பட வேண்டியவர் பரப்பிரும்ம பிரதான் என்னும் முதுபெரும் வீரர். கடந்த ஐம்பது ஆண்டுகளாகக் கலிங்க நாட்டில் இவர் பெரும் புகழுடன் செயல்பட்டாலும் சோழர்களின் முன்னே கலிங்கம் நிற்க முடியாமல் மும்முறை தோற்றது பற்றிப் பெரிதும் வருந்தி ஒரு வகையில் அரசியல் துறவு பூணவும் விழைந்தார்.

     எனினும் ஜகன்னாதனைப் போல பல இளம் வீரர்கள் மீண்டும் கலிங்கம் சுதந்திரமாக, சோழர்களின் பிடியிலிருந்து மட்டுமின்றி, இன்னோர் போர் நிகழ்ந்தால் நிச்சயம் அது வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட முன்வந்ததால் பிரதான் ஒரு மக்கள் அணியைத் தயார் படுத்துவதில் முனைந்தார். போர்தான் என்பதல்ல, எந்த வழிமுறையானாலும் எதிரியின் சக்தியை எப்படியாவது முறித்து விடப் பல தந்திரங்களைக் கையாள வேண்டு மென்பதில் தீவிரமானார் இவர். பிரதானின் தந்திரங்களுக்குப் பலர் உறுதுணையாக நிற்கத் தயங்கவில்லை. அரசினரும் துணை வந்ததும் இவருடைய சக்தி மீண்டும் வலுத்தது.

     பரப்பிரும்ம பிரதான் தம் எதிரே வந்து நின்று வணங்கிய ஜகன்னாதனையும் வக்கிரபதியையும் கண்டதும் சற்றே மகிழ்ச்சியான குரலில், “ஜகன்னாதா, கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று கங்கபாடி சிம்மநாதனும் நந்தினியும் நுழைந்து விட்டார்கள். இருவரும் சந்தித்துப் பேசியும் இருக்கின்றனர். இது நமது முயற்சியில் கணிசமான முன்னேற்றம். சீக்கிரமே நாம் லட்சிய சித்தி பெற இந்த முன்னேற்றம் சரியானதொரு ஊக்க சக்தியாகும்” என்று கூறியதும் ஜகன்னாதன் “நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் இன்றுதான் சற்றே மகிழ்வுடன் பேசுகிறீர்கள் ஸ்வாமி” என்றான்.

     வக்கிரன் மட்டும் “ஸ்வாமி, நாம் ஒரு பெண்ணைக் கவர்ந்து கொண்டு வந்து தவிக்கிறோமே, இதற்கு விமோசனமில்லையா?” என்று வாய்விட்டுக் கேட்டுவிட்டான்.

     அவனை ஒருமுறை ஊன்றி நோக்கிய அவர் “வக்கிரபதி, நீ ஜகன்னாதனை விட வயதில் மூத்தவன். ஆனால் அவனைப் போல நீ பொறுமை காட்டுவதில் உறுதி பெற்றவனில்லை. இந்தச் சோழ நாட்டுப் பெண் நமக்கு ஒரு தூண்டில் மீன் மாதிரி. இதைக் கொண்டு நாம் சாதிக்கப் போவது எத்தனையோ உண்டு. அதுவும் அதிவிரைவிலேயே நிகழப் போகிறது. இதுகாறும் சோழர்கள் போர்முனையில்தான் நம்மை வென்றார்கள். நாம் இப்போது கையாளும் தந்திர முறைகள் அவர்களைத் திணறடித்துத் திக்குமுக்காடச் செய்யும். கொஞ்சம் பொறு. அப்புறம் பார்” என்று சொல்லி விட்டுச் சிரித்ததும் அந்தக் கொடூரச் சிரிப்பைக் கண்டு வக்கிரபதி கூட சற்றே பயந்து விட்டான்.

     பரப்பிரும்ம பிரதான் அசாதாரணமான பேர்வழி. வெளிப்பார்வைக்கு மெத்தவும் சாதுவான அப்பாவித் தோற்றமளிக்கும் அவர் அந்நாட்டின் அரசனைக் கூட ஆட்டிப் படைக்கும் சக்தி படைத்தவர் என்பதை யாவரும் அறிவர்.

     அவர் சிரித்தாலே இவ்வளவு பயம் என்றால் கோபம் கொண்டுவிட்டால் என்ன நேரும் என்று கூட வக்கிரபதி நினைத்து மேலே எதுவும் கேட்காமல் வாய் மூடிக் கொண்டுவிட்டான்.

     “சரி ஜகன்னாதா, நாம் நாளை சந்திப்போம். அந்தப் பெண்ணுக்கு நாம் கூறியபடி...”

     “மிக மிகப் பலமான காவல் போட்டுள்ளேன் ஸ்வாமி.”

     “நல்லது. கண்கள் தென்கிழக்கில் இருக்கட்டும். வக்கிரனை நம் எல்லையிலேயே கண்காணிப்பாளர்களுடன் இருக்கும்படியான ஏற்பாடு செய்துவிட்டு நீ மட்டும் கண்களை மூடாது இங்கேயே சுற்றி வா” என்று அழுத்தமாகக் கூறியதும் அவர்கள் மீண்டும் வணங்கிவிட்டு அப்பால் சென்றனர்.

     வக்கிரபதியைக் குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பிவிட்டு நகரின் பாதுகாப்பான பகுதிக்குச் சென்றான். சிவப்பு மாளிகை ஒன்றில் ஒரு காவல்காரியின் துணையுடன் சிறையில் வைக்கப்பட்டிருந்தாள் கடுங்கோனின் தங்கையான பூங்கொடி.

     “எப்படி இருக்கிறாள் அந்தப் பூங்கொடி?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்றவன் எதிரே அவன் எதிர்பார்த்த காவல்காரிக்குப் பதிலாக பூங்கொடியே நின்றது கண்டு அசந்து போனான் ஜகன்னாதன்.

     “எப்பவும் போலத்தான் இருக்கிறேன் நரலோக நாயகரே!” என்று சிரித்தபடி கூறிய அவள் குரலில் ஏளனமும் அலட்சியமும் இழைந்தோடியதைக் கண்ட அவனுக்கு எங்கே போனாள் இந்தக் காவல்காரி என்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஆனால் அவள் அங்கில்லை.

     “ஐயா நரலோக நாயகா... உங்கள் வேலைக்காரி இரவும் பகலும் கண்களில் எண்ணெய் விட்டுக் கொண்டு விழித்திருந்தாள் அல்லவா? இன்று பகலிலேயே எண்ணெய்ப் பஞ்சம். எனவே அவள் தூங்கி விட்டாள். இனிமேல் நீங்கள் அண்டா நிறைய எண்ணெய் அனுப்பினால்தான் அவளால் விழித்திருக்க முடியும்” என்றாள் குறும்புத்தனமாக.

     ‘எப்படி இந்தப் பெண்ணால் இவ்வளவு அலட்சியமாக இருக்க முடிகிறது? தனக்கு நேர்ந்துள்ள ஆபத்தைக் கண்டு ஒரு சிறிதும் அஞ்சாமல் எவ்வளவு துச்சமாகப் பேசுகிறாள் நம்மை! யாரும் தன்னை எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் தன்னிடம் ‘விஷம்’ இருக்கிறது. ஏதாவது செய்தால் உடனே தன் உயிரை விட்டுவிடலாம் என்று எண்ணியிருப்பதால் தானே!’ என்று நினைத்தவன் மனம் சற்றே நேர்மைப் பாதை திரும்பி, ‘இவ்வளவு அழகும், இளமையும் உள்ள இந்தப் பருவ யுவதியை நம் தலைவர் ஏன் சிறைபிடிக்கச் சொன்னார்...? பாவம்!’ என்று கூட நினைத்து விட்டது.

     ஆனால் அடுத்த நொடியிலே ‘அபசாரம்... அபசாரம்... சோழ நாட்டைச் சேர்ந்த ஒரு ஈ காக்கைக்குக் கூட நாம் கருணை காட்டலாகாது என்று தலைவர் சொல்லியிருப்பதை மறந்து இப்படி முட்டாள்தனமாக நினைத்து விட்டேனே’ என்று நொந்து கொண்டான் தன்னை.

     பூங்கொடி அவன் திகைப்புடன் நிற்பதைக் கண்டு “ஐயா நரலோக நாயகரே..” என்று மீண்டும் அழைத்ததும் அவன் சற்றே கோபங் கொண்டவனாய் “இந்தா பெண்ணே... என்னை ஏன் இப்படி நரலோக நாயகன் என்று நீ அழைக்கிறாய்? இனியும் இம்மாதிரி நீ கேலியாக அழைப்பதை நான் விரும்பவில்லை” என்றான்.

     பூங்கொடி கலகலவென்று சிரித்துவிட்டு “ஐயா நரலோக நாயகரே, இது கேலியல்ல, உண்மையான மதிப்பு. எங்களுடைய நாட்டில் நரலோக வீரர் என்று ஒரு பெரும் படைத்தலைவர் உண்டு. அவரைக் கண்டாலே யாருக்கும் பயம். அதாவது உங்கள் முன்னாள் அரசர் கலிங்கபீமன் மாதிரி இருப்பார்” என்று அவள் கூறியதும் உண்மையிலேயே அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.

     “எங்கள் மாமன்னரைப் பற்றி ஏதாவது கேவலமாகப் பேசினாய்... அப்புறம் நான் உண்மையிலேயே...”

     “நரலோக மகாநாயகராகிவிடுவீர் இல்லையா? நல்லது, நீங்கள் வாழும் இந்த நகரமான நரலோகத்தைக் காட்டிலும் மோசமான ஒரு இடம் இல்லை. எனவே எங்கே நீங்கள் அதாவது மகாவீரரான நீங்கள், ஒரு அபலைப் பெண்ணைக் களவாடி வந்து அவளுக்குக் கட்டுக்காவல் போட்டு இரவும் பகலும் எங்கே இவள் தப்பி விடுவாளோ என்று தவியாகத் தவிக்கும் பெரும் வீரசிகாமணியான நீங்கள், இதைக் காட்டிலும் என்னை அதிகமான தொல்லைக்குட்படுத்தி விட முடியாது. ஆகவே சும்மா சும்மா பயமுறுத்த வேண்டாம். தவிர எங்கள் சோழ நாடு என்னைப் பொறுத்தவரை தூங்குவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். உண்மையான நரலோக வீரர் அங்கு இருக்கிறார். அவர் மட்டும் சற்றே அசைந்து கொடுத்தால் நீங்கள் நரகத்துக்கே போய் விடுவீர்கள். என் அண்ணனைப் பின்புறத்தில் தாக்கிய உங்கள் நரலோகக் களவாணிகளை நாளை என் அண்ணன் பழி வாங்காமல் விட மாட்டார். நீங்கள் இப்போது கொக்கரிக்கிறீர்கள். இது அதிக நாள் ஓடாது” என்று சிரித்தபடியே கூறியதும் அவன் ஆத்திரத்துடன் அப்பால் சென்றான்.



விஜயநந்தினி : 1 2 3 4 5 6