உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
முன்னுரை மீன் பிடிக்கும் தொழில், மனிதன் மண்ணில் தானியம் விதைத்து உண்டு வாழ்வதற்குப் பழகுவதற்கு முன்பே நடைமுறையிலிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இன்றும் கடற்கரையோரங்களிலும் வேறு நீர் நிலைகளின் கரைகளிலும் வாழும் மக்களின் உணவுப் பழக்கங்களை ஆராய்ந்தால், நீர் வாழ் உயிரினங்களே அவர்கள் உணவில் முக்கியத்துவம் பெற்றிருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். உணவுப் பழக்கத்தைப் பொறுத்தே, தொழில், வாழ்வு, கலை, பண்பாடு எல்லாம் அமைந்து விடுகின்றன. தமிழகத்தின் நெய்தல் நில மக்களாக, பரதவர்கள் என்ற பிரிவினரைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதியில் தூத்துக்குடி என்று இந்நாள் வழங்கப்பெறும் முத்துக்குளித் துறைப் பகுதியிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலும் உள்ள கடற்கரையோரங்களில் வாழும் மக்கள், தம்மை அவ்வாறு தொன்மையான ‘பரதவர்’ என்றே கூறிக் கொள்கின்றனர். கடல் மீது கலம் கொண்டு சென்று புதிய நிலம் காணும் ஆர்வத்துடன் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ‘வாஸ்கோடகாமா’ என்ற போர்த்துகீசியர் இந்தியக் கரையில் வந்து இறங்கிய பிறகு, போர்த்துகீசியர் இத் துணைக்கண்டத்தின் மேற்குக் கரையோரங்களில் தமது நிலைகளைத் தோற்றுவித்துக் கொண்டு, கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதில் முழு மூச்சாக ஈடுபட்டனர். கடல் துறைகளில் அவர்கள் அடி வைத்ததும் அவர்கள் தொடர்பு கொள்ளக் கூடிய மக்கள் பரதவ மக்களாகவே இருந்தனர். பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கமாகிய அக்காலத்தில், பாண்டிய நாட்டின் தென்பகுதி முகமதியர் படையெடுப்பின் காரணமாக ஆட்டங்கண்டு, சிறு சிறு குறுநில மன்னர்களின் ஆட்சியிலே பிளவுபட்டுக் கிடந்தது. கடல் ஆதிக்கம் குறித்து, தமிழ்நாட்டு வாணிபத்திலும் அரசியலிலும் செல்வாக்குப் பெற்று வந்த முகமதியர்களுக்கும், பாண்டியப் பேரரசு வீழ்ந்த பின் தம் செல்வாக்கை இழந்த பரதவருக்கும் இடையே வேறுபாடுகளும் பகைமையும் தோன்றின. இந்நிலை முற்றி, பூசல்களும் தகராறுகளும் வன்முறையில் கொண்டு வந்து விடவே, போர்த்துகீசியரிடம் பரதவர் உதவி கோரும் சந்தர்ப்பமும் வாய்த்தது. கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப வந்திருந்த போர்த்துகீசியர் இவ் வாய்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். மெல்ல மெல்ல, கோவாப் பிரதேசத்துடன், தெற்கே கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த பரதவ மக்கள் அனைவரையும் கிறிஸ்தவ மறை தழுவச் செய்தனர். இவ்வாறு சமயம் மாறியவர், பெயரளவில் கத்தோலிக்கராக இருந்தாலும் நடைமுறையில் இந்துக்களாகவே இருந்திருக்கின்றனர். கி.பி. 1542 ஆம் ஆண்டு புனித சவேரியார், யேசு சபைக் குருவாக, பரத குல மக்களிடையே பணியாற்றி வந்த பின்னரே இவர்கள் முறையாகக் கிறிஸ்தவ சமயத்தினராக வாழத் தலைப்பட்டனர். வேற்று நாட்டிலிருந்து, அந்நியக் கலாச்சாரங்களை உள்ளடக்கியதாக இந்திய மக்களிடையே வேரூன்றி நிலைக்க வந்த சமயத் துறையில், அந்நாளைய யேசு சபைப் பெரியோர்களாகிய புனித சவேரியார், ஹென்றிக்கஸ் அடிகளார் ஆகியோர், இவ்வெளிய மக்களுக்காக இந்தியப் பண்பாடுகளைக் கொண்டதாகவே மாற்றம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜனவரி முதல் தேதியை, தை முதல் நாள் என்று கொள்ளுமாறு காலக் கணிப்பு நாட்களை அமைத்தும், தமிழைக் கற்று, கிறிஸ்துவ சமயப் பெரியாரின் வரலாறு போன்ற நூல்களை இப்புதிய சமயக்காரருக்காக இயற்றியும் ஹென்றிக்கஸ் அடிகளார் அருந்தொண்டாற்றியிருக்கிறார். இன்றும், இக்கடற்கரையைச் சார்ந்த பரதவர் கிராமங்களில், கோயில்களில் தேர் - திருவிழாக்கள் போன்ற பண்டிகைகள், மணச்சடங்குகளில் இடம் பெற்றிருக்கும் சில பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை உற்று நோக்கினால், இந்தியப் பண்பின் வேர் நிலைத்திருக்க, சமயம் மட்டுமே மாற்றம் பெற்றிருப்பதை உணரலாம். கோயிலில் நேர்த்திக் கடன் கொடுப்பதிலிருந்து மொட்டையடித்துக் காது குத்துவது வரையிலும், கிறிஸ்துவ சமயம் இந்தியம் தழுவி இருப்பது கண்டு வியப்புத் தோன்றுகிறது. பொதுவாக, மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு, மொழி ஆகியவற்றில் அவர்களில் அந்நியக் கலப்பு இடம் பெறும் போதுதான் ஏற்படுகிறது என்பது தெளிவு. அந்நியக் கலப்பு, ஒரு வகையில் பொருளாதார ரீதியில் மாற்றம் பெறுவதற்கும் வழி வகுக்காமல் இல்லை. முத்துக் குளித்துறைப் பரதவர்கள், தமது பிழைப்புக்காக வேறு இடம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கவில்லை. வடமாநிலங்களில் அந்நியர் படையெடுப்பின் காரணமாக இடம் பெயர்ந்து தென் பகுதிகளில் வந்து குடியேறினாற் போன்றோ, தெற்கு மாநிலங்களிலிருந்து பஞ்சம் காரணமாகப் பிழைப்பை நாடி வடக்கு நகரங்களில் சென்று குடியேறினாற் போன்றோ, இப்பரதவ மக்களுக்குத்தமக்கு வாழ்வளிக்கும் கடல் துறைகளை விட்டு இடம் பெயர்ந்து செல்லும் அவசியம் ஏதும் நேரிட்டிருக்கவில்லை. எனவே, போர்த்துகீசியரின் ஆதிக்கம் நாட்டை விட்டுச் சென்று வெகு நாட்களான பின்னரும், நாட்டின் அரசியல் சமுதாயக் களங்களில் பல்வேறு மாற்றங்கள் வந்து விட்ட பின்னரும், இக்கடல் துறை மக்களின் வாழ்க்கை முறையிலும் நம்பிக்கைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் வந்திருக்கவில்லை. கடலை நம்பி, உடல் வலிமையை நம்பி வாழும் இவர்களிடையே, உலகின் ஏனைய பகுதிகளில் எய்திவிட்ட பல நூற்றாண்டுகளின் அறிவு மலர்ச்சியும், தொழில் நுணுக்க முன்னேற்றங்களும், அண்மைக்காலம் வரையிலும் கேள்விப்பட்டிராத செய்திகளாகவே இருந்திருக்கின்றன. கடல் தொழிலில் இயற்கையோடிணைந்த வாழ்வில் உரம் பெற்று விளங்கும் இப் பரதவரின் கட்டுமரங்கள் சென்னையைச் சார்ந்த கடற்துறைகளில் உள்ள தொழிலாளிகளின் கட்டுமரங்களைக் காட்டிலும் நீண்டும் அகன்றும் ‘கொங்கை’ எனப் பெறும் கீழ்ப் பகுதியில் இரு சிறகுகள் போன்று அழகிய செதுக்கு மரங்கள் இணைக்கப் பெற்றும் விளங்குகின்றன. இக் கட்டுமரங்கள் மூன்று கட்டைகளால் பிணைக்கப் பெற்றவை. இதில் பாய் பொருத்திக் கொண்டு ஆழ்கடலுக்குச் சென்று அந்நாளைய ‘தட்டுமடி’ என்ற கயிற்று நூல் வலை போட்டு, நாற்பது, ஐம்பது மடங்கு எடையுள்ள சுறா மீன்களைப் பிடித்து வந்த நிகழ்ச்சிகளை இன்றும் முதியவரான பரதவர் நினைவு கூறுகின்றனர். அக்காலத்தில், சுறா வகை மீன்களின் செதில்கள் - வால் பகுதிகளை (துவி என்று இவர்கள் வழங்குகின்றனர்) கோயிலுக்கு வரியாக விட்டுக் கொடுத்துவிடும் வழக்கம் இருந்தது. இப்பொருள்கள், கீழை நாடுகளான ஜப்பான், மலேயா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அந்நியச் செலாவணியை ஈட்டித் தரத் தொடங்கியதும், கழிக்கப் பெற்ற ‘துவி’க்கு மீனை விட அதிக மதிப்பு உண்டாயிற்று. கோயிலுக்கு துவியைத் தவிர வேறு வகையிலும் பரதவராகிய கடல் தொழிலாளிகள் வரி செலுத்தி வந்தனர். 1960-க்குப் பிறகு, சில தொழிலாளர், விழிப்புணர்ச்சி பெற்று, கோயில் வரியை எதிர்க்கத் தொடங்கினர். 1965-66 கால கட்டத்தில், சுறா மீன் துவிகளைக் கோயில் வரியாக விட்டுக் கொடுப்பதில்லை என்று ஒரு போராட்டத்தை ‘இடிந்தகரை’ என்ற ஊரில் உள்ள மக்கள் நடத்தினர். அதன் பயனாகச் சில பரதவ மக்கள் சில கிறிஸ்தவக் குருமாரின் கோபத்துக்கு ஆளாகி திருச்சபையிலிருந்து நீக்கம் செய்யப் பெற்றதும், பின்னர் ‘விசுவ ஹிந்து பரிஷத்’ என்ற அமைப்பு அவர்களை இந்துக்களாக மாறச் செய்ததும் வரலாற்று உண்மைகளாகும். அண்மைக் காலங்களில், இறால் மீன் ஏராளமாக அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் பொருளானதும், அரசு இத் தொழிலை இயந்திரமயமாக்குவதற்கு நல்கும் ஆதரவும் உடல் பாடுபடும் மீனவரான பரதவ மக்கள் முன்னேற்றம் காண உதவவில்லை. ஒரு நாவல் என்பது, நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக் கோவைதான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது. நாவல் புனை கதைதான்; ஆனால் மனித வாழ்க்கையின் பல்வேறு பிரச்னைகளிலும் நிலைகளிலும் ‘பிரத்தியட்சங்கள்’ எனப்படும் உண்மை வடிவங்களைத் தரிசித்த பின்னர் அந்த அநுபவங்கள் எனது இதய வீணையில் மீட்டிவிட்ட சுரங்களைக் கொண்டு நான் இசைக்கப் புகும் புதிய வடிவையே நாவல் என்று கருதுகிறேன். இவ்வாறு புதிய புதிய அநுபவங்களை நாடி நான் புதிய களங்களுக்குச் செல்கிறேன். அவ்வாறு இந்த நவீனத்தை நான் உருவாக்குவதற்கு, முதன் முதலில் எனக்குத் தூண்டுதலாக இக்களத்தை நான் தேர்ந்து கொள்ளச் செய்தவர், பேராசிரியர் திரு.சிவ சுப்பிரமணியம் (சிவம்) அவர்கள். பின்னர், ஒவ்வொரு கட்டத்திலும் உவந்து எனக்குப் பல செய்திகளைக் கூறியும், உடன் பயணம் செய்தும் உதவியளித்த அவர், மணப்பாடு, உவரி போன்ற கடற்கரை ஊர்களில் நான் தங்கிச் செய்திகள் சேகரிக்கவும் பல நண்பர்களை எனக்கு அறிமுகமாக்கி வைத்தார். இத்தகைய பேருதவிக்கு எவ்வாறு நான் நன்றி தெரிவித்துக் கொள்வேன்? வெறும் சொற்களாகி விடுமோ என்றஞ்சுகிறேன். தூத்துக்குடி, அமலிநகர், மணப்பாடு, உவரி, புன்னைக்காயல், ஆலந்தலை, போன்ற பல ஊர்ச் சோதரரும் சோதரியரும் மனமுவந்து நான் கேட்ட விவரங்களுக்கெல்லாம் தகவல் தந்து உதவியிருக்கின்றனர். மீன் என்றாலே விலக்கப்பட வேண்டியதொரு சொல் என்ற பழக்கத்தில் வளர்ந்த நான் கவிச்சி வாடையிலேயே மூழ்கினாற் போன்று சில ஆண்டுகள் கோவாவில் வாழ்ந்திருக்கிறேன். என்றாலும் நெருங்கிப் பழகித் தொழிலைப் பற்றிய அறிவும், நுணுக்கங்களும் தெரிந்து கொள்ள, அவர்களிடையே சில காலம் ‘வாழ்ந்து’ இருக்க வேண்டியது அவசியமல்லவா? மணப்பாட்டில் நான் தங்கியிருக்கையில் அன்றாடம் காலையில் கடற்கரை மீன்வாடியில் சென்று நான் நிற்கையில் திரு. பிச்சையா வில்லவராயன் அவர்களும், திரு.குருஸ் பர்னாந்து அவர்களும் ஒவ்வொரு வகை மீனையும் கொண்டு வந்து எனக்குக் காட்டிப் பெயரும் விவரங்களும் எடுத்துக் கூறியதை எவ்வாறு மறக்க இயலும்! தொழில் செய்யும் இளைஞர் எல்லோருமே எனக்கு உற்ற சோதாரராகப் பழகியதையும் மிகக் கருத்துடன், இரவானாலும் எனது இருக்கை தேடி வந்து, விட்டுப் போன செய்தியை அக்கறையுடன் எடுத்துக் கூறியதையும், நினைக்குந்தோறும் நெஞ்சு நெகிழ்ந்து போகிறேன். எனது நாவல் எழுதும் முயற்சிகளில் இத்தகைய மனித உறவுகள் என்றுமே மறக்க இயலாப் பசுமையுடன் நெஞ்சத்தில் நிலைத்திருப்பவையாகும். இவர்களுடைய பேச்சுவழக்கை ஆராய்ந்து அறிவது, மிகவும் உளம் கவர்ந்ததோர் அநுபவமாக அமைந்தது. இந்நாள் நம் பேச்சு வழக்கிலில்லாத தனித்தமிழ் சொற்களும் போர்த்துகீசியம், சிங்களம், மலையாளம் ஆகிய மொழிகளிலிருந்து வந்த சொற்களும் கலந்ததோர் தனி வழக்கு மொழியைப் பேசும் பரதவ சோதரர் தோற்றத்தில் உறுதியும் உரமுமாகக் காட்சியளித்தாலும் சிறிது பழகும் போதே கவடில்லாத குழந்தை உள்ளம் கொண்ட இயல்பினர் என்று தெரிந்து கொள்ளலாம். உவரி, மணப்பாடு, அமலிநகர் போன்ற எல்லாக் கடற்கரை ஊர்களிலும், நான் சந்தித்துப் பேசிய நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் கடல் தொழிலாளிகளும், விசைப்படகை ‘விசப் படகு’ என்றே குறிப்பிட்டனர். கடலின் மீது செல்லும் இம் மக்களிடம், வாழ்வின் முன்னேற்றத்துக்கான நிச்சயமில்லாததொரு நிலையையே நான் காண நேர்ந்தது. கூலியாகத் தொழில் செய்து, கூலிக் காசைக் குடிக்கக் கொண்டு செல்லும் ஆண்கள்; கல்வி பயின்று முன்னேறி நல்வாழ்வு பெற வேண்டும் என்ற ஊக்க மலர்ச்சிக்கு இடம் தராத சூழலில் உருவாகும் ஆண் குழந்தைகள்; ‘சீதனம்’ என்ற கொடுமைப் பேயை விரட்ட வழி தெரியாமலே கன்னிமை பறி கொடுக்கும் இளம் பெண்கள் என்ற நிலை, இக்கடற்கரை ஊர்களில் பரவலாக இருக்கிறது. கடலிலே உடற்பாடுபட்டு வரும் தொழிலாளிக்கு நிச்சயமானதொரு வருவாயில்லை. வாழ்வின் ஏமாற்றங்களையும், நிராசைகளையும் மறக்கப் போதையை நாடுகிறான். மதுவிலக்கு அமுலிலிருப்பதாகப் பெயரளவுக்குத்தானிருக்கிறது. போதைச் சரக்கு எந்த நிலையிலும், எல்லா ஊர்களிலும் கிடைக்கின்றன. உடற்பாடுபட்டு வந்தவனின் சிந்தையை மனங்கவரும் நல்வழியில் செலுத்தவோ இளைப்பாறி தெம்பு கொள்ளச் செய்யும் நோக்குக்கான பொழுது போக்கும், அத்துடன் கல்வி முன்னேற்றத்துக்கான நற்கருத்துக்களை ஊன்றச் செய்யும் சாதனங்களோ இல்லை. பெண் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். ஆணோ வினாத் தெரிந்தும் கடலில் மீன் குட்டியாகத் திளைக்கச் செல்கிறான். பணம் சம்பாதிக்கக் கற்று, பல்வேறு கவர்ச்சிகளுக்கும் அடிமையாகிறான். பெண்களுக்கென்று சில ஊர்களில் கூட்டுறவுத் தொழில் நிலையங்கள், வலை பின்னுதல், பன ஓலைப் பொருள்கள் செய்தல் என்று வாய்ப்புகளைத் தந்து ஓரளவு பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அளித்திருந்தாலும், ‘சீதனம்’ என்ற கொடுமை, இந்துவானாலும், கிறிஸ்தவரானாலும் முறைகேடான வாழ்க்கைக்கே வழி செய்கிறது. உடல் பாடுபட்டு ‘இறால்’ கிடைக்கவில்லை என்று திரும்பும் ஒவ்வொரு பரதவ சோதரனும் பொங்கெழுச்சி கொண்டு செய்வதறியாமல் திகைக்கிறான். இயந்திரமயமாக்கும் படகுத் தொழில் இவர்களுடைய வண்மைக்கே உலை வைப்பதாகக் கருதுகின்றனர். இப்பிரச்னைக்கு எத்தனையோ வகையாகத் தீர்வு காண யோசனைகள் கூறப்பட்ட போதிலும், தீர்வு எளிதாக இல்லை. மீன்பிடித் தொழில் படகுச் சொந்தக்காரர் கையிலும் அதற்கு வேண்டிய பணம் முடக்குபவர் கைகளிலும் இருக்கும் வரையிலும் பாடுபடும் கடல் தொழிலாளிகளின் நியாயமான பிரச்னைகள் தீர்வு காணுமா என்பது ஐயத்துக்குரியது. வலிமையுள்ள பிள்ளையே மேலும் மேலும் அன்னையின் சாரத்தை முட்டி முட்டி அருந்த வாய்ப்பிருக்கிறது. இக்காட்சிகளைக் கண்ட பின்னர், எனது கற்பனையிலே உயிர்த்த மக்களை நான் நடமாடச் செய்து இக் கதையைப் புனைந்துள்ளேன். உண்மையான நிகழ்ச்சிகள் ஆதாரமான புள்ளிகளே; கோலங்கள் முழுதும் கற்பனையே. இறுதியாக நான் எனக்குப் பேருதவி புரிந்த பல நண்பர்களுக்கும் சோதர சோதரியருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முத்துக் குளித்துறை வரலாறு பற்றிய தகவல்களை எனக்களித்து உதவிய பங்குத்திரு அவர்களுக்கும், உவரியூரிலும், மணப்பாடு, ஆலந்தலை, இடிந்தகரை, அமலி ஆகிய இடங்களில் அன்புடன் எனக்குப் பல தகவல்களையும் தந்துதவிய நண்பர்களுக்கெல்லாம் நான் கடமைப்பட்டுள்ளேன். இந்நூலைப் பெருமளவு வரவேற்று நல்ல மதிப்புரைகளையும் விமரிசனக் கட்டுரைகளையும் நல்கி பல ஆய்வாளரும் இலக்கிய நண்பர்களும் என்னை உற்சாகப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். வழக்கமாக எனது நூல்களை வெளியிட்டு நல்லாதரவளிக்கும் தாகம் பதிப்பகத்தார் இந்நூலின் மூன்றாம் பதிப்பையும் இப்போது கொண்டு வந்துள்ளனர். சிறந்த முறையில் மீண்டும் இந்தப் பதிப்பைக் கொண்டு வந்திருக்கும் வெளியீட்டாளர் திரு.கண்ணன் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நூலை வாசகர் முன் வைக்கிறேன். வணக்கம். ராஜம் கிருஷ்ணன். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|