![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
அத்தியாயம் - 34 அன்று இரவு பீற்றர் வீடு வரவில்லை. அவனும் அவனைப் போன்று கட்டுமரங்களிலும், பாய்த்தோணிகளிலும் தொழில் செய்யக் கடலில் பாடுபடுகையில், புற்றீசல் போல் வந்து படகுகளில் இறால் வேட்டையாடும் விசைப்படகுக்காரர்களுடன் போட்டியிட இயலாமல் அலைகளோடு அலைகளாய் இரத்தம் பொங்கி மறியக் குமுறுபவர்கள் எல்லாரும் கடலில் தீபாவளி கொண்டாடத் தீர்மானித்திருக்கின்றனர். அன்றொருநாள் தங்கள் கட்டுமரத்தில் விசைப்படகை ஏற்றி வலையைக் கிழிக்க வந்த போது பீற்றர் படகில் குதித்த போது காலைத் தூக்கிக் கடலில் அந்தப் படகுக்காரன் அவனை எறிந்தானே, அன்று முளைத்த வித்து, பூதாகரமாக வளர்ந்து இன்று கனிகளை உதிர்க்க முதிர்த்திருக்கிறது. முந்நூறுக்கும் மேற்பட்ட நெருப்புக் கனிகள்... பதினைந்து வள்ளங்களில் ஏறி அலைகடலில் வருகின்றனர். டீசல் குழம்பில் முக்கிய பெரிய துணிப் பந்துகள் சுற்றிய குச்சிகளுடன் வீரபாண்டிப் பட்டணத்தை நோக்கி அந்த இரவில் தீபாவளி கொண்டாட அவர்கள் விரைகின்றனர். தீவாளி...! கடலில் தீவாளி! “மடையச் ‘சீர்சாத் துடச்சி’ கூனிப் பையல்லாம் நாச அடிக்கிறா!” “இவனுவளுக்குத்தா கடலா? அது எங்கக்குமிஞ்சித்தா உங்களுக்கு!” “ஒளிச்சிட்டு மறு காரியம் பாப்பம்!” “இவனுவள விட்டுவச்சா, மேலிக்குக் கடலயே துத்துப் போடுவானுவ!” “கொட்ட நண்டு பெருத்து நம்ம தொளிலக் கெடுக்கு!” “தீவாளி... வாங்கலே... ஒங்களத் தீவாளி குளிக்கச் செய்யிறம்!” கரைகளில் பட்டாசு ஒலி கேட்கிறது. திருச்செந்தூர் கோபுர விளக்கும், கரை விளக்குகளும் அருகில் நெருங்குகின்றன. இவர்களுடைய கைகளில் உள்ள பந்தங்கள் டீசலில் குளித்திருக்கின்றன; இன்னும் நெருப்புச் சேலை உடுத்தவில்லை. குருசுகள், பர்னாந்துகள், பீற்றர், ஜயசீலன் என்ற தனிப் பெயரில் இயங்குகிறவர்கள், எல்லோரும் அந்த இரவில் அழிக்கும் சக்திகளாக மாறி, இலட்சக்கணக்கான ரூபாய் கொண்டு முடக்கியிருக்கும் விசைப்படகுகளை நாசம் செய்யப் போகின்றனர். நள்ளிரவு கடந்து தீபாவளித் திருநாள் பிறந்துவிட்டது. முதல் படகிலிருந்து பந்தங்கள் பூப்பந்துகளாய்ச் சுழன்று கரையில் நங்கூரமிட்டு அணியாக நிற்கும் விசைப்படகுகளின் டீசல் தொட்டிகளில் விழுகின்றன. ஒன்று, இரண்டு, மூன்று... கடலைக் கலக்கிக் கொண்டு இவர்கள் பிழைப்பில் மண்ணடிக்கும் அந்த யமன்கள், எதிர்ப்புச் சக்தியற்று, கரைக்கு அக்கினி விளிம்பு கட்டிக் கொண்டு வானில் ஒளிபரவ எரிகின்றன. தம் அலைக்கரங்கலால் கரையைத் தழுவ வரும் கடலை, “தழுவாதீர்” என்று அச்சுறுத்தும் வண்ணம் அக்கினி நாக்குகள் உயர்ந்து கொழுந்து விட்டெரிகின்றன. அந்தச் செவ்வொளியில் குளித்து எட்ட நிற்கும் கட்டுமரக்காரர்களின் முகங்களில் ஒரு குரூரமான மகிழ்ச்சி சுடரிடுகிறது. “ஒழிஞ்சானுவ. இனிமே கடல் நமக்குதா...” டீசல் தொட்டிகளோடு படகுகள் எரிகின்றன என்ற உணர்வு உறைத்துக் காவலர் பரபரக்கையில் வள்ளங்களை வேகமாகப் பின்னுக்குச் செலுத்துகின்றனர் அவர்கள். எனினும் துப்பாக்கிக் குண்டுகள் கடலின் பரப்பில் சீறிச் செல்கின்றன. குலசையிலும் மணப்பாட்டிலும் ஒதுங்க அந்தப் படகுகள் விரைந்து செல்கின்றன. சாலமோன் மாமன் மகளைக் கட்டிக் கொடுத்துவிட்டு மகனோடு செல்வதாகப் போனாலும், ஒத்துக் கொள்ளாமல் திரும்பி வந்து விட்டார். தரகராக இருக்கிறார். பீற்றர் இருளில் கரையேறி, அவர்கள் வீட்டில் வந்து கதவு தட்டுகிறான். இளைஞர் விசைப்படகுகளுக்கு எதிர்ப்புக் கொடி காட்டுவதை அவர் அறிந்திருக்கிறார். எனினும் இந்த இரவில் இவன் ‘அரக்கப்பரக்க’ ஓடிவந்து கதவைத் தட்டுவானேன்? அந்தக் காரிருளிலும் கூதலிலும் கூட இவன் வியர்வை பளபளக்க நிற்கிறான். “என்ன லே?...” அவன் பதிலேதும் கூறவில்லை. உள்ளே சென்று படுத்துக் கொள்கிறான். இவன் மொழியேதும் விளங்கவில்லை யெனினும் இவர்கள் திட்டம் கரச பெரசலாக அவருக்கு எட்டியிருக்கிறது. அந்த ஊரிலிருந்தும் சில விடலைகள் சென்றிருக்கிறார்கள். தெப்பமாக நனைந்தவனுக்கு மாமி வேறு துணி கொடுக்கிறாள். பாயை விரித்துப் படுப்பதுதான் தாமதம். உறங்கிப் போகிறான். போலீசுதான் தன்னை வந்து எழுப்பும் என்ற உள்ளுணர்வில் எழும் அச்சம் மெல்ல மெல்ல உயிர்பெற்று மேல் பரப்புக்கு வருகிறது. கடலின் ஆழத்தில் சஞ்சரிக்கும் ஓங்கல் மீன் மேல் பரப்புக்கு வருகையில் ஏனைய சிறு மீன்களை விரட்டியடிப்பது போல்... அவனுக்கு வேறு உணர்வே தெரியவில்லை. கண்டா ஓங்கல்... ஓங்கல்... மரத்தை முட்டுகிறது. கொம்புவாரிக்கல்லை நெட்டுக்கு உ யர்த்தி அதைக் குத்துகிறான். ஆனால் அது அவன் இலக்குக்கு நழுவிப் போகிறது. “...லே... எந்திரிலே... என்னாத்த அழாவுழாண்ணு பெனாத்துதே பீற்றர்...?” அவன் எழுந்திருக்க மறுத்துத் திரும்பிப்படுக்கிறான். “தண்ணிய அடி...” என்கிற குரல் விழுகிறது. “எந்த மயிரானாலும் எந்திரிக்க மாட்ட” என்று பிடிவாதமாக முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு படுத்திருக்கிறான். அவனுடைய நாவிலிருந்து உருப்புரியாத ஒலிகள் எழும்ப, மாமன் அவனை ஆட்டி உசிப்பி உட்கார்த்தி வைக்கிறார். “எந்திரிலே ஆளு வந்திருக்கி. ஒன்னக்க அப்பெ மரிச்சிட்டா... ஒன்னக்க அப்பெ...” அவன் கண்களைத் துடைத்துக் கொண்டு சுற்று முற்றும் பார்க்கிறான். நல்ல வெளிச்சம்... “போலீசில்ல...!” “அப்பச்சி மரிச்சிட்டாலே? எந்திரி இப்பம் பிறப்பட்டா தூத்துக்குடி நாகர்கோயில் பஸ் போவும்... எந்திரி...” மாமன் மாமி எல்லோரும் சாவு வீட்டுக்குப் புறப்படுகின்றனர். பீற்றர் வெளி உலகைச் சந்தேகப் பார்வையால் பார்த்துக் கொண்டு பஸ்ஸுக்கு நடக்கிறான். அப்பனை இந்துவாக அடக்கம் செய்ய வேண்டுமென்று பஞ்சாட்சரம் நிற்கிறான். அன்றிரவு புதிய இந்துக்கள் யாரும் தீபாவளி கொண்டாடக் கூடாதென்றும் அவன் கட்டளை போல் வற்புறுத்தியிருக்கிறான். இந்து முறையில் சாவு சடங்குகளைப் பற்றிய விவரம் ஏதும் புரியாத இவர்கள் குலசேகர வாத்தியாரைத்தான் நம்பியிருக்கின்றனர். கோயிலுக்குத் தனிப் பூசைக்கு வந்த குருக்கள் காலையில் கோயிலை மூடிவிட்டுத் திருச்செந்தூர் சென்று விட்டார். குலசேகர வாத்தியார் தாளாச் சோகத்துடன் தலை கவிழ்ந்திருக்கும் மணியனிடம் வந்து, “அப்பன் கடைசி வரை உள்ளத்தில் இந்துவாகத்தானிருந்தார். வெளியிட்டுச் சொல்லத் தெரியாத முருக பக்தி இருந்தது. என்னைக் கூப்பிட்டுப் பன்னீர் இலை விபூதி கேட்டார். நான் உடனே போய் வாங்கி வந்தேன். மூணு நாள் கடைசியாக அந்தப் பிரசாதம்தான் அவருக்குப் போயிற்று. ஆனபடியால் நீ யாருக்கும் காத்திருக்க வேண்டாமப்பா?” என்று கரைகிறார். ஆனால் மணியனுக்குப் பஞ்சாட்சரமும் இவரும் முன்னின்று சட்டங்கள் சொல்வது பிடிக்கவில்லை. சாமியார் அவஸ்தைப் பூசலுக்கு வரவில்லை என்றாலும், எல்லோரும் லில்லியின் வரவுக்காகக் காத்திருக்கின்றனர் என்பதில் ஐயமே இல்லை. அவர் மரித்த செய்தியைத் தந்தி மூலம் காலையிலேயே அனுப்பியாயிற்று. கோயிலைச் சேர்ந்தவர் அனைவரும் வந்திருக்கின்றனர்; துக்கமணி ஒலித்திருக்கிறது. மணியன் இந்த நிலையில் தானாக எதையும் வரையறுக்க இயலாமல் இருக்கிறான். அப்பன் உண்மையில் எந்த மாறுதலையும் ஏற்கவில்லை. அவர் தாம் பாதிரியாரின் வீட்டில் சிறையிலிருந்து துன்பப்பட்டார். சுரூபத்தின் கண்ணிலிருந்து நீரொழுகும் என்று எதிர்பார்த்து அந்த அற்புதம் நிகழவில்லை என்று கண்டவர். அவர் உண்மையில் தம் வாழ்நாளில் பிறர்மதிக்க உயர்வாக வாழவேண்டும் என்ற இலக்கில் அவ்வப்போதைய பிரச்னைகளைப் பற்றித்தான் கவலைப்பட்டாரே ஒழிய, மரணத்தைப் பற்றியோ, மரணத்துக்குப் பின் பரலோக ராச்சியத்துக்குப் போவதைப் பற்றியோ சிந்தித்திருக்கவில்லை. அவர் அதனால்தான் இந்து சாமியையும் அவர்கள் சொல்லிக் கொடுத்தபடி வெறுக்கவில்லை. உண்மையில் அவர் மட்டுமல்ல, பொதுவாக எவருமே நடைமுறை வாழ்க்கைப் பிரச்னைகளை அகற்றிக் கொள்வதில் தான் நாட்டமுடையவர்களாக இருக்கிறார்கள். மோட்சத்தைப் பற்றிக் கவலைப்பட்டு, அதற்காகச் சமயத்தைப் பற்றிக் கொண்டு விடவில்லை. அவ்வாறு ஒரு சமயம் என்று தீவிரமாகப் பற்றியிருப்பவர்களாக இருந்தால், இந்துவாகி விட்டோம் என்று பேர் மாறியவர்கள், அந்தக் கோயிலில் பால் பவுடரும் மரிக்கன் மாவும் கொடுக்கிறார்கள் என்று போகமாட்டார்கள்; கணபதி கோயிலில் பொங்கலும் வடையும் பிரசாதம் கொடுக்கின்றனர் என்று கிறிஸ்தவர்களாகத் தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள் வரமாட்டார்கள். வயிற்றுக்குணவும், தங்க இடமும் நல்ல வாழ்வின் வசதிகளும்தான் மனிதனுக்கு இன்றியமையாத தேவைகளாக இருக்கின்றன. இதையொட்டியே அவன் இயங்குகிறான். அப்பன் கோயில் கூட்டங்களில் கூடக் கடை நிலையில் இருப்பதை ஏற்காமல் கடன்பட்டேனும் அந்த ‘ஃபர்ஸ்ட் கிளாஸ்’ நிலையை அனுபவிப்பதைத்தான் இலட்சியமாகக் கொண்டிருந்தார். அது ஒரு வெறியாகுமளவுக்கு அவரிடம் வேரூன்றியிருந்தது... பிற்பகல், ஒரு ஜீப்பில், லில்லி, மேரி, யேசம்மா, ஜான், நசரேன் எல்லோரும் வந்து இறங்குகின்றனர். ஆத்தா மூலையோடு சுருண்டு கிடக்கிறாள். குரலெழுப்பக் கூடச் சக்தியற்று ஓய்ந்திருக்கிறாள். லில்லி அப்பனின் சடலத்தின் பக்கம் சென்று சிலுவைக் குறி செய்து கொண்டு ஜபம் செய்கிறாள். மேரி சேலைத் தலைப்பைச் சுருட்டி வைத்துக் கொண்டு கண்களைக் கசக்கிக் கொள்கிறாள். அவள் அழுகிறாளா, அல்லது துயரக்காட்சிக்காக நிற்கிறாளா என்று தெரியவில்லை. அப்போது... ஒரு பஸ் வந்து நிற்க, பரபரப்பாக ஆட்கள் வருகின்றனர். பஞ்சாட்சரம் பஸ்ஸை எதிர்நோக்கிச் செல்கிறான். அலைவாய்க் கரையில் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
|