முன்னுரை

     புதிய கதை எழுத வேண்டும் என்று, நான் ஓர் குறிப்பிட்ட பொருளைச் சார்ந்த செய்திகளை அறிவதற்காக வெவ்வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்திருக்கிறேன். வெவ்வேறு நிலைகளில் அதற்காகப் பல மனிதர்களைப் பரிச்சயம் செய்து கொண்டு செய்திகள் திரட்டி இருக்கிறேன். ஆதார பூர்வமான தகவல்களைப் பெற அந்தந்தப் பிராந்திய நூல் நிலையங்களுக்குச் சென்று கெஜட்டியர்களையும் பதிவேடுகளையும் மணிக்கணக்காகப் புரட்டிப் பார்த்திருக்கிறேன். இந்தப் புத்தகத்துக்காக நான் அத்தகைய முயற்சி எதையுமே மேற்கொள்ளத் தேவையிருக்கவில்லை. ஏனெனில் தமிழ்நாட்டின் அரசியல் சமுதாய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதோர் மாற்றம் நிகழ்ந்து வந்த ஏழெட்டு ஆண்டுக்கால பின்னணியில் இந்த நவீனம் உருவாகியிருக்கிறது. புதிய அரசியல் சுதந்தரமும் மக்களாட்சி உரிமையும் பெற்ற நாட்டில் சுதந்தரத்துக்கு முன்பு நிலவிய ஒன்றுபட்ட சமுதாய ஒற்றுமையின் கண் இழைகளாகக் கருதப்பட்ட வேற்றுமைகளும் பூசல்களும் ஆழமான பிளவுகளாக வலுப்பெற்றதை யாரும் மறுக்க இயலாது.

     பொதுவாக, பாரத நாட்டில் வருண பேதமும், மேற்குடிப் பிறப்பினன் தாழ்குடிப் பிறப்பினன் என்ற வேற்றுமையும் இருக்கும் வரையிலும் நாடு சிறந்த நாடாவதற்கு வழியில்லை என்பது நிலவி வரும் கருத்து. இந்து மதத்தைப் பொருத்தவரையிலும், ‘சிருஷ்டி’ அல்லது ‘ஆக்கல்’ என்ற நிலையே, பேதத்தைத் தோற்றுவிப்பது என்று கொள்ளற்பாலது. எல்லாம் ஒரே பாங்கை அடைவதும் அழித்தல் என்ற நிலையும் ஒன்று. எனவே, வேற்றுமை இயற்கை. வயதில் குழந்தை, இளைஞன், முதியவன் என்ற வேற்றுமையைப் போல், பாலில் ஆண்பால் பெண்பால் என்ற வேற்றுமையைப் போல், மனப் பக்குவத்திலும், அதற்கிணைய புரிகின்ற செயலிலும் உள்ள வேற்றுமையே வருண பேதமாகிறது.

     எக்குடியிற் பிறந்தவன் என்பதை முன்னிட்டு ஒருவன் அந்தணன் என்பது உலக வழக்கு. ஆனால், மனப்பக்குவமும் வாழ்க்கை முறையுமே ஒருவனை அந்தணனென்று வேதாந்தம் வரையறுக்கிறது. எந்தச் சமுதாயத்திலும் எக்குடியிலும், எக்காலத்திலும் அந்தணன் தோன்றலாம். ஏனெனில் பிறப்பு உரிமையில் பொருள் எதுவுமில்லை. மனப்பக்குவமே முக்கியமானது. வேதாந்தம் விளக்கும் அளவில் அந்தணனுக்குரிய செந்தண்மை பூண்டொழுகும் இயல்பைப் பெற்றவர்களை உலகில் காண்பது அரிது. ஆயினும், அத்தகைய நிலையை அடைய மனிதன் முயற்சி செய்யலாம்.

     அந்தணன் அருளை மறந்து, பொருளைத் தேடித் தன் உலக இன்பங்களையே பெரிதென்று கருதி, மேலாம் ஞானம் பெருவதற்கான அறிவையே வணிகச் சரக்காக்கத் தொடங்கும் போதே வீழ்ச்சியுறுகிறான். பாரதம் முழுவதிலும் இந்த நிலை இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் இந்நிலை ஓர் வலுவான அரசியல் மாற்றத்துக்குக் காரணமாக மக்களிடையே வாழ்வில் விளைவித்த பூசல்களையும் சிக்கல்களையும் நான் என்னைச் சுற்றிய வாழ்விலேயே காண நேர்ந்திருக்கிறது. எனவே, செய்தி தேடிக் கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லாமலேயே இக்கதையை எழுதியுள்ளேன்.

     தமிழ் இலக்கியத்தில், வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் பாதிக்கும் இந்த வேற்றுமையைக் குறிப்பிடவே ஓர் நொய்ம்மையான நிலை என் போன்ற படைப்பாளிகளுக்கு இருந்து வந்திருக்கிறது. சாதிகளும், பிரிவுகளும் நம்மிடையே முன்னெப்போதையும் விட வலுவாக நச்சுப் பொருள் வளர்க்கும் ஊனைத் தின்னும் விலங்குகளாக வளர ஊட்டம் பெற்று வருவதே இன்றைய நிலை. இதை எந்தச் சாராரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் நான் குறிப்பிடவில்லை. எனினும் இலக்கியம் வாழ்க்கையின் உண்மைகள் என்ற மூலப் பொருளினின்றும் வார்க்கப் பெறும் வார்ப்புகளாகும். குறைகளைச் சுட்டும் எண்ணத்துடன் கூட இந்நவீனத்தை நான் உருவாக்கவில்லை. சிந்திக்கச் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். இச்சமுதாயத்தில் நானும் ஓர் பொறுப்பான இடம் பெற்றிருப்பதால் இதைச் சார்ந்த குற்றமும் குறையும் எனக்கும் உரியதேயாகும். தமிழ் வாசகர்கள் இந்நவீனத்தை வரவேற்பார்கள் என்றே எண்ணுகிறேன்.

ராஜம் கிருஷ்ணன்