உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
19 வீடு திரும்பும்போது பதினோரு மணியாகி விடுகிறது. ஞானம் படுக்கையிலிருந்து வந்து கதவு திறந்து விட்டுப் படுக்கைக்குப் போய் விடுகிறாள். சீனிவாசனிடம் அவள் மரியாதைக்காகக் கூட ஒரு சொல் பேசவில்லை. மைத்ரேயியிடமும் கூட்டத்தைப் பற்றி ஒரு கேள்வியும் கேட்கவில்லை. மைத்ரேயிக்குத் துயரம் தொண்டையை அடைப்பது போல் முட்டிக் கொண்டு வருகிறது. அங்கே நடந்தவைகளை எல்லாம் கிளர்ச்சிப் பரபரப்புடன் கொட்டும் எண்ணத்துடன் அல்லவா வந்திருக்கிறாள்? ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமலே ஞானத்தின் படுக்கையருகில் வந்து நிற்கிறாள். “தலைவலியா, அக்கா?” “ஆமாம். இவ்வளவு நேரமா கூட்டம் முடிய? போ, போய்ப் படுத்துக் கொள். காலையில் பேசலாம்.” அவளுடைய குரலில் வழக்கமான கனிவுக்குப் பதில் எரிச்சல் மிகுந்திருக்கிறது. மைத்ரேயி தன்னறைக்குள் வந்து நாற்காலியில் அமருகிறாள். படுக்கையில் படுக்கப் பொருந்தவில்லை. ஒரு மணி வரையிலும் படிக்கலாம் என்றெண்ணுகிறாள். படிப்பும் நிலையில் நிற்கவில்லை. உள்ளம் கிளர்ச்சி மிகுந்து அன்று நேர்ந்த சந்திப்பைப் பற்றியே நினைக்கிறது. தனராஜ் எவ்வளவு மரியாதையாக நடந்தான்! அவன் வேறு மணம் புரிந்து கொண்டிருப்பானாக இருக்கும். அந்தக் கட்சியில் இருக்கும் தம்பிகள் எல்லோருமே சுறுசுறுப்பானவர்கள். இந்தக் கட்சியிலோ, வெற்றிலை புகையிலை, வழுக்கை, தொந்தி என்று தான் தென்பட்டார்களே ஒழிய, இளைஞர்கள் இளைஞர்களாகச் சுறுசுறுப்பாகவேயில்லை. ஒருகால் மீண்டும் மீண்டும் அவள் கட்சிக் கூட்டங்களில் பேசப் போவாளா? தனராஜ் வந்து அழைப்பானோ? அழைத்தால் என்ன தவறு? அவள் தன் திறமையை வளர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களே அவை. அன்றையக் கூட்டத்தில் தெளிவும் கம்பீரமும் பொருள் செறிந்தும் கொண்டொலித்த உரை தன்னுடையதுதான் என்று தனக்குத் தானே கணித்துக் கொள்கையில் பெருமை பூரிக்கிறது. அந்த மினுமினுப்பில் தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறாள். பேச்சாளருக்குத் தகுதிக்குத் தக்க கூலி உண்டு என்பதையும் அவள் இப்போது உணர்ந்து கொண்டிருக்கிறாள். அழகிய மணவாளனுக்குத் தேர்தல் கூட்டங்களில், கால் மணிப் பேச்சுக்கு இருபத்தைந்து ரூபாய் என்று வைத்தியநாதன் அவளிடம் தெரிவித்திருந்தான். உண்மையில் சீனிவாசன் தன் தொகுதியில் அவளை எந்தவிதமான நிபந்தனையுமின்றி நிற்க வைக்க மாட்டான். அவன்தான் நிற்கப் போகிறான். அவள் பேச்சாளராகவே மாறி, பொருள் தேடலாம். மக்களைக் கவரும் குரல், வடிவம் எல்லாம் அவளுக்கு இருக்கின்றன. அதில் என்ன தவறு? அவளுடைய சிந்தனைகள் சுற்றிச் சுற்றி வருகின்றன. அவள் அப்படியே உறங்கிப் போகிறாள். ஓர் கனவு. அவள் தனராஜின் வீட்டுக்குப் போகிறாள். தட்டி மறைவுக்கு அப்பாலிருந்து ஒரு பெண் சிவப்புச் சேலை உடுத்திக் கொண்டு எட்டிப் பார்க்கிறாள். “இதுதான் என் சமசாரம். இந்தக் குழந்தைக்கு அண்ணா மைவிழின்னு பேர் வச்சார் நான் ‘மைத்தி’ன்னுதான் கூப்பிடுகிறேன்...” என்று கண்களைச் சிமிட்டுகிறாள். அவளுக்குக் கனவிலேயே சொறேலென்று அடிவயிற்றில் பள்ளம் பறிப்பது போல் இருக்கிறது. “என்ன ஆனாலும் நீ பிராமணப் பொண்ணு. சாதிக்காரன்தான் உனக்குத் தோது. கிளி கூட்டவிட்டுப் பறந்து போயிட்டுதுன்னு அம்மணி சொல்லிச்சு. கூட்டத் திறந்துவுட்டது அதுதான் தெரியும். நான் எங்க சாதியிலேயே கட்டிக் கிட்டேன்...” உடனே அவளுக்கு முரளியின் நினைவு தோன்றுகிறது. உடல் வியர்க்க விழித்துக் கொள்கிறாள். பிறகு அவள் உறங்கவில்லை. விடியற் காலையில் நான்கு மணியாகு முன்பு அவள் எழுந்து சென்று முகம் கழுவிக் கொண்டு வருகிறாள். ஞானத்தின் அறையில் விளக்கு எரிவது தெரிகிறது. கதவைத் தட்டாமலே எட்டிப் பார்க்கிறாள். “வா வா, முழிச்சிட்டுத்தான் படுத்திருக்கிறேன்...” மைத்ரேயி உள்ளே நுழைந்து கட்டில் விளிம்பில் அமர்ந்து கொள்கிறாள். “தலைவலி எப்படி இருக்கக்கா? விளக்குப் போட்டிருக்கவே எதோ படிக்கிறீர்கள், இல்லை எழுதுகிறீர்கள்ன்னு நினைச்சேன்...” அவளுடைய அமைதி குலைந்த நெஞ்சை ஊடுருவிப் பார்ப்பது போல் பார்க்கிறாள் ஞானம். “நீ தூங்கவே இல்லை போலிருக்கிறதே?” “என்னை ரொம்ப மன்னிச்சுக்குங்க ஸிஸ்டர், எனக்குத் தலைக்கணம் ரொம்ப அதிகமாப் போயிடுத்து.” மைத்ரேயி கண்களைத் துடைத்துக் கொள்கிறாள் குனிந்து. என்றாலும் துயரம் விள்ளத் தெரியாமல் கனக்கிறது. “ரொம்பத் தைரியமான பெண்... யாரேனும் இப்போது பார்த்தால் சிரிப்பார்கள். அசடு, என்ன இதெல்லாம்?” “எனக்கு ஏன் இப்படி இருக்கேன்னு தெரியல ஸிஸ்டர். ஒருதரம் தப்புச் செய்ததற்கு மேலே மேலே நான் போய்க் கொண்டே இருக்கிறேன். உங்களுக்கு நான் பேச ஒப்புக் கொண்டது பிடிக்கலேன்னு தெரிஞ்சும் இப்படி வெறும் புகழ்ச்சிக்குக் கண்மூடிப் போனது தப்பு...” “கெட்டிக்காரத்தனம் சொட்டுகிறது. நீ பேச ஒப்புக் கொள்வது எனக்குப் பிடிக்கலேன்னு சொன்னேனா? ஏணிப்படி அசடு போல் கற்பனை செய்து கொண்டு சங்கடப் படுகிறாய், உன் சுதந்திரத்தில் குறுக்கிட நான் யார்?” “நீங்களாகப் பார்த்து ‘மைத்ரேயி, நீ இப்படிச் செய் அதைச் செய்யாதே’ என்று உத்தரவு போடுங்கள். நான் சந்தோஷமாக இருப்பேன். ஐ ஆம் அட் க்ராஸ் ரோட்ஸ், ஸிஸ்டர் (I am at cross roads, sister) நேத்து நீங்க அங்கே என்ன நடந்ததுன்னு கேட்டீங்களா?” “என்ன நடந்தது? கூட்டம் அதிகமா?” “எனக்கு ஒன்றே ஒன்றைத் தவிர மனசில் வேறொன்றும் பதியவில்லை. பூமாலைக் குவியலில் பளிச்சென்று கறுப்பு சிவப்புத் தான் தெரிந்தது....” “அட? மாலையிலேயே கூட்டா?” “நீங்க புரிஞ்சுக்கலே? நான் எதிர்பாராத விதமாக கூட்டம் முடியும் முன்ன தனராஜ் வந்தான். அவன் கொஞ்சம் கூடக் கூசவோ, தெரிந்தாற் போல் காட்டிக் கொள்ளவோ இல்லை. எனக்கு என்னமோ போலாயிட்டது...” ஞானம் உத்தரத்தைப் பார்த்துக் கொண்டு சிரிக்கிறாள். “அரசியல் என்றால் மென்மையான உணர்ச்சிகளுக்கு அங்கே இடமேயில்லை என்றாகிவிட்டது. அவன் கூசவில்லையானால் உனக்கும் பிரச்சனை இல்லையே? இதில் என்ன சங்கடம்?” “நான் இனிமேல் எங்கும் போகப் போவதில்லை. ஆமாம் நான் படித்து கிளாஸ் வாங்கி, ஏதேனும் வேலையில் சேர்ந்து, கஷ்டப்படுபவர்களுக்கு உதவும்படி வாழவேணும். அதைவிட்டு, பிண்ணாக்கு வாசனைக்குத் தடம் புரளும் மாட்டைப் போல் நான் ஏன் போகணும்?” “ரொம்ப சரி. இனிமேல் யார் வந்தாலும் மைத்ரேயி வாமாட்டாளென்று விரட்டியடிக்கிறேன்...” மைத்ரேயிக்குப் பெரிய பளுவை இறக்கி வைத்தாற் போலிருக்கிறது. நாட்கள் நூல் பிடித்த ஒழுங்கில் அவளைக் கொண்டு செல்கின்றன. திருவிழாக் காட்சிகளில், கத்திக்குத்துச் சச்சரவுகளில், கட்சிப் பூசல்களில் புதிய சுலோகங்களில் கருத்து இழுபட்டாலும் ஒட்டாமல் இலங்குகிறாள். சீனிவாசன் தன் தொகுதியில் நிற்கிறான். சுவரொட்டிகள் வகை வகையான வண்ணங்களாய்த் தென்படும் இடங்களிலெல்லாம் மனதை அப்பிக் கொள்ளப் போட்டியிடுகின்றன. தென்படும் முகங்களும் செவியில் விழும் பேச்சொலிகளும் ஒருமனதாகக் குவித்து வருபவைபோல் பிரமையாக இருக்கிறது. “பதினேழு வருஷம் ஆண்டு உருப்படாம அடிச்சதுதான் மிச்சம். இவனுக செய்து காட்டுவேன்றானுகள், பார்ப்பமே? என்ன அழகாய்த் தமிழ் பேசுறானுக!” “ஆமாம். சுவாமிகள் படத்தை வச்சிண்டு செருப்பு மாலை போட்டு ஊர்கோலம் நடத்தினானாமே? ஒரு மந்திரி அதுக்கு வாயைத் திறந்தானா? இவங்க ராஜ்யம் கவுந்துடும். விநாசகாலே விபரீத புத்தி!” “பழைய தஞ்சாவூர்ச் சுவடிலே இருக்காம்! மிலேச்சன் போன பிறகு பதினேழு வருஷம்தான் சுயராஜ்யக் கட்சிக் காரா ராஜ்யத்தை ஆளுவா. அதுக்கப்புறம் உதயசூரியனின் சின்னம் கொண்டவாதான் ராஜ்யத்தை ஆள வருவான்னு இருக்காம். நாம காயத்திரி மந்திரம் சொல்றோம். உதய சூரியனை அவா சின்னமா வச்சிண்டிருக்கான்னு பெரியவரே சொல்லியிருக்காரே?” கோயில் வாசலில் அன்றாடம் தங்கள் பிழைப்புக்காக வந்து கும்பல் ஒன்று பேசிக் கொள்வதை மைத்ரேயி கேட்டும் கேளாமலும் கடந்து செல்கிறாள். அரிசியைக் குவித்துச் சில்லறை வியாபாரம் செய்யும் சந்தை. “ஏம்ப்பா, அரிசி என்ன விலை...?” “ஒண்ணு அறுபது, சாப்பாட்டரிசிம்மா...” “புழுங்கலரிசிதானே? இதுவே இந்த விலையா?” “கழகம் ஆட்சிக்கு வரட்டும்மா, ரூபாய்க்கு மூணு படி போடுவோம்!” அரிசிக்கார இளைஞன் உற்சாகமாகப் பதில் கூறுகிறான். “அப்ப மட்டும் எப்படியய்யா போடுவீங்க? அரிசி உடனடியா விளைஞ்சிடுமா?” “அரிசி இருக்கம்மா. கொண்டுட்டு வரவிடமாட்டேங்கறாங்க?” கழகம் ஆட்சிக்கு வந்தால் சொர்க்க வாழ்வென்று மனப்பால் குடிக்கும் மாறுதல். மைத்ரேயி கோயில் வாயிலில் பூ வாங்குகிறாள். “ஏம்மா, நீ யாருக்கு ஓட்டுப் போடுவே?” “அதென்னாமோ, சொல்லிக்கிறாங்க, யாருக்குப் போடச் சொல்றாங்களோ?” என்று அகன்ற குங்குமப் பொட்டு துலங்க சிரிக்கிறாள் பூக்காரி. “என்னம்மா? பூ வாங்கறேளா? நமஸ்காரம்!” என்று குரல் கேட்கிறது. திடுக்கிட்டாற்போல் மைத்ரேயி திரும்பிப் பார்க்கிறாள். “ஓ... நமஸ்காரம், செளக்யமா? எங்கே இந்தப் பக்கம்?” “உங்களைத் தேடிண்டுதான் வரோம்...” “என்னையா?...” என்று மைத்ரேயி சிரிக்கிறாள். “ஆமாம் முடிச்சாச்சா, கடையில் இன்னும் ஏதானும் வாங்கணுமா?” “ஒண்ணுமில்லே, என்ன விசேஷம்?” “விசேஷம் நிறைய இருக்கு, நீங்க இப்படி காரில் ஏறிக்குங்கோ, சொல்றேன்.” “மன்னிக்கணும், ஸ்டடீஸ் எனக்கு முக்கியமாப்படுகிறது. அதனால் தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள், சீனிவாசன்...” “நான் இப்போது உங்களை விருப்பத்துக்கு விரோதமாக கட்டாயப்படுத்தப் போறதில்லே. நானே நிற்கிறதாக முடிவாயாச்சு. இனி என்ன உங்களுக்கு? அன்னிக்குப் பத்திரிகை பேட்டி வேண்டான்னு காரமாகச் சொன்னேள். ஒப்புக் கொண்டேன். ஆனா உங்க பேச்சு எப்படி எல்லாரையும் இம்ப்ரஸ் பண்ணி இருக்குங்கறது உங்களுக்கே தெரியாது. நான் அதைப் பத்தி எல்லாம் இப்ப பேசப் போறதில்ல. உங்கத்திம்பேர் காரில் உட்கார்ந்திருக்கார். உங்களைப் பார்க்கணும்னு மூணு நாள் அவரைக் கூட்டிண்டுப் போயிருக்கிறேன். அந்தம்மா என்ன அவ்வளவு மோசமா இருக்கா? நீங்க, என்ன, அவ அடிமையா?” அம்மைவடுமுகம் சிவக்கிறது. மைத்ரேயி ஒருகணம் அதிர்ச்சியுற்றாற்போல் நிற்கிறாள். அத்திம்பேர்... அத்திம்பேரா? மனசு கூவுகிறது. “இதோ வரார் பாருங்க...” ஆம். அந்தக் கடைத்தெருக் கூட்டத்திடையே அவள் அவரைப் பார்க்கிறாள். எத்தனை வருஷங்களாகி விட்டன. முன்முடி நன்றாக மறைந்து வழுக்கையாகியிருக்கிறது. அதே நடுங்கல் உடம்பு. மழுமழுத்த முகம், ஒட்டாத சட்டை , வேட்டி, முகமலர்ந்து சிரிக்கிறார். அவளால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயன்றிராத காட்சி. “சௌக்கியமாம்மா மைத்ரேயி? அத்திம்பேரைத் தெரியறதா?” என்று கேட்கிறார். அவரால் எப்படிக் கேட்க முடிகிறது? அவள் கண்களை நீர் படலம் மறைக்கிறது. அன்று அவளைப் படி ஏறாமல் தற்கொலை செய்து கொள்வதை ஆதரித்தவர்; கண்காட்சி மைதானத்தில் அவள் பக்கம் திரும்பினாலே அபவாதம் ஒட்டிவிடும் என்று சென்றவர்... இன்று அவள் மீதுள்ள களங்கம் அகன்று விட்டதா? ஏ, உயர்குலமே? நீ... அந்தச் சிதைவில்தான் நசுக்குண்டு அவள் கண்ணிரைக் கக்குகிறாள். “வைத்தியநாதன், மைத்ரேயின்னு சொன்னபோதே எனக்குச் சந்தேகமாக இருந்தது. நம்மூர் வெங்கிட்டு வேறு அன்னிக்குத் திருச்சின்னபுரம் மீட்டிங்கில் பார்த்துவிட்டு வந்து நீதான்னு சொன்னான். உங்கக்கா என்னைப் பிடுங்கி எடுத்துட்டா. நானும் இவங்ககூட வந்து மூணு நாளா அலையறேன். அந்தம்மா படி ஏறாதீங்கோன்னு சொல்றாப் போல அவ இல்லேன்னு கதவை சாத்தினா...” “அப்படியா? இருக்காதே? நீங்க என்னிக்கு வந்திருந்தீர்கள்?” “முந்தாநாள் காலமே, நேத்துப் பகல், இத இப்ப அங்கே வீட்டில் பார்த்துவிட்டு வரோம். மீட்டிங்குக்கெல்லாம் அவ வரமாட்டான்னா. அதில்ல எங்க பெண் அவ, தவியாத் தவிச்சுத் தேடி வந்திருக்கிறோம்னு சொல்றேன். அவ இருக்கும்போது வாங்கோன்னு முடிச்சுட்டா. அவ இருக்கும் போதுன்னா, எப்ப இருப்பான்னா பதில் கிடையாது.” “அத்திம்பேர், உங்களுக்கு விஷயம் தெரியாது. அவர் எனக்கு எல்லாம். நீங்கள் இப்போது வாருங்கள். வீட்டில் போய்ப் பேசலாம்.” வண்டியில் அவள் ஏறி அமருகிறாள். ஒருமைல் தொலைவுக்குள் உள்ள காலணியை நோக்கி வண்டி விரைகிறது. மைத்ரேயி கணநேர நெகிழ்ச்சியின் விளைவில் பழைய இடிபாடுகளை ஒதுக்கிவிட்டுப் புதிய மாளிகையைச் சமைக்கிறாள். ‘இரத்தத் தொடர்பு’ என்பது இதுதானா? அக்கா...! அந்த வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று மனம் ஏன் கட்டுக் கடங்காமல் குதிக்கிறது. அந்த மாடிக்கூடம்,ஊஞ்சல், மாமரங்கள், இரைவைக் கிணறு... எத்தனை வருஷங்களான பின் இந்த நெகிழ்ச்சி! கார் வீட்டின் முன் வந்து நிற்கையில் வீடு பூட்டி இருப்பதைப் பார்க்கிறாள் மைத்ரேயி. ஞானம் அவர்களுடைய சந்திப்பைத் தவிர்க்க வேண்டும் என்றே போயிருக்கிறாள் என்று புரிகிறது. எதிர் வீட்டிலிருந்து சாவி வாங்கி வந்து கதவைத் திறக்கிறாள். “வாங்க...வாங்க... அத்திம்பேர்...” உள்ளே அவர்கள் வந்தமர்ந்ததும் அத்திம்பேர் சீனிவாசனிடம், “உடனே கூட்டிண்டு வந்துடுங்கோன்னு துடிச்சா ஸார்ர, எதோ ஒரு வார்த்தை சொன்னதுக்கு ரோசப் பட்டுண்டு, இப்படியா வர்மம் வச்சுப்பா? இவளைத் தோள்மேல் போட்டு வளர்த்தவன் ஸார், நான்!” அத்திம்பேருக்குக் கண் கலங்குவதைக் கண்டு அவள் அதிசயிக்கிறாள். சீனிவாசன் உடனே, “ஸார்தான் மாம்பாக்கம் சுதந்திரக் கட்சி கன்வீனர். எனக்கே அவர் உங்க உறவுன்னு சொன்னதும் சர்பிரைஸா இருந்தது. நீங்க இப்ப பொம்பக் கிட்ட வந்துட்டேள்..” என்று விவரிக்கிறான். “அதென்னமோ, இத்தனை நாள் எப்படி எப்படியோ இருந்திருக்கலாம். இனிமேல் உன்னை இப்படி அநாதை போல் விடப் போறதில்லை.” மைத்ரேயி உதட்டைக் கடித்துக் கொள்கிறாள். “எனக்கு எப்படியும் படிப்பை முடிக்கணும். இப்ப எங்கும் வரதுக்கில்லை...” “என்னம்மா, படிப்பு, படிப்புன்னு நீங்க? உங்க புத்திக்கும் திறமைக்கும் பரீட்சை ஒரு பெரிய பிரமாதமா? பரீட்சையைப் பத்தின கவலையை விட்டுத்தள்ளுங்கோ. பிப்ரவரிக்கு மேலே மார்ச் இருக்கு. இந்த வருஷம் இல்லாட்டா அடுத்த வருஷம் ஊதித் தள்ளப் போறேள். அதைவிடப் பெரிய பொறுப்பை உங்களுக்குக் கொடுக்கப் போறோம் நாங்க...” என்று சீனிவாசன் புகழ்ச்சி வீணையை மீட்டி விடுகிறான். அதன் நாதத்தில் மாயம் இருக்கிறது. “அதானே? எதற்கு நீ இங்கிருந்து பஸ்ஸில் காலேஜுக்கு போயிண்டு கஷ்டப்படணும்? ஹாஸ்டலில் சேரலாம், இல்லாட்டா மட்றாஸில் உனக்காக ஒரு குடித்தனம் போட்டுடலாம்ன்னு அப்பவே சொல்லிட்டா உங்கக்கா. எங்களுக்கு பிள்ளையா குட்டியா? உன்னைவிட்டு யாரிருக்கா? யாரோ வந்து உன்மேல் உரிமை வச்சிண்டு எதுக்கு அதிகாரம் பண்ணனும்?” என்று கேட்கிறார் அத்திம்பேர். மைத்ரேயி ஆத்திரத்துடன் இரண்டு சொற்கள் பேசுமுன் வாயிலில் ஞானம் வருவது தெரிகிறது. புன்னகையுடன் உள்ளே வந்து அமருகிறாள். “குழந்தையைக் கூட்டிண்டு போகலான்னு வந்திருக்கேன். உண்மையில் எனக்குப் பார்த்ததும்.” துண்டு நுனியால் அத்திம்பேர் கண்களைத் துடைத்துக் கொள்கிறார். மைத்ரேயி ஆமாம், இல்லை என்று தலையை மட்டும் ஆட்டுகிறாள். “அதற்கென்ன, வீக் எண்ட்ல போய் இருந்துட்டு வாயேன்? எனக்கொண்ணும் ஆட்சேபம் இல்லே. கூட்டிண்டு போங்கோ...” என்று கூறுகிறார் ஞானம். அத்திம்பேர் வெடுக்கென்று, “யாருக்கு யார் ஆட்சேபம் சொல்றது? நான் இப்பவே கூட்டிண்டு போகலேன்னா அவ என்னை இருக்கவிட மாட்டா!” என்று உறுதியாகக் கூறுகிறார். “நான் நாளைக்கு சாயங்காலம் வரேன் அத்திம்பேர், நிச்சயமாக. மிஸ்டர் சீனிவாசன், எனக்குப் பேச்சுத்திறன், மற்றும் சில தகுதிகள் இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு கட்சிக்கு ஏதேனும் நன்மை தேடலாம் என்று நீங்கள் விரும்புவதிலும் தவறில்லை. ஆனால் நான் உங்கள் கட்சியில் ஒட்டி நிற்பேன் என்று மட்டும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது.” “நீங்க என்ன சொல்றேள்னே புரியலே.” “நான் ஒட்டாமல் நின்று தராதரம் பார்க்கணும்னு ஆசைப்படுவதை நீங்கள் வெட்டிவிடக் கூடாது. நான் உங்களுக்காக உங்கள் கட்சிக்காகப் பேசலாம் என்றே நினைக்கிறேன். தார்மீகம் என்று சில கொள்கைகளில் நீங்க சாய்வதாலும் நான் பிறந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மை பெற்றிருப்பதாலும் அந்தக் கட்சியில் சிலரேனும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நான் நினைப்பதால் நிச்சயமாக என் ஒத்துழைப்பைத் தருகிறேன். ஆனால் அதற்காக என்னை விலைக்கு வாங்குவதாக மட்டும் எங்கள் நினைக்கக்கூடாது.” ஞானம் அவளுடைய பேச்சைக் கேட்டு வியப்படைகிறாள். “ஏனம்மா, இப்படி எல்லாம் தப்பாக நீங்க நினைக்கிறேள்? அப்படி யாரும் யாரையும் விலைக்கு வாங்க முடியாது உங்க ஒத்துழைப்பைக் கொடுப்பதாகச் சொல்றேளே, அதுவே சந்தோஷம். அப்ப, நாளைக்குக் கார் கொண்டு வரட்டுமா! நீங்க மாம்பாக்கம் போகலாம்; அப்படியே ஒரு ப்ரோக்ராம் போட்டுக்கலாம்?” “நான் இப்பவே கூட்டிண்டு போலான்னு வந்தேன்...” “இல்லே அத்திம்பேர். நாளைக்கழிச்சு மறுநாள் காலமே பஸ் ஏறி மாம்பாக்கத்துக்குச் சாப்பிடவே வந்துவிடுகிறேன். காரொண்ணும் வேண்டாம். நீங்கள் அங்கே வந்து விடுங்கள் சீனிவாசன் - முடியுமா?” “நான் காலமே இங்கேயே வண்டி எடுத்திண்டு வந்துடறேன். எனக்கென்ன சிரமம். ஒண்ணுமில்ல...” “வண்டி எல்லாம் வேண்டான்னா கேக்கமாட்டீங்க போலிருக்கு!” என்று முணுமுணுக்கிறாள் மைத்ரேயி. அவர்கள் விடைபெற்றுக்கொண்டு செல்கின்றனர். |