16

     அவன் முரளி என்று தெரிந்தபின் மைத்ரேயிக்கு நிம்மதியாக இருக்கிறது. அவனுக்குப் பெற்றோர் உற்றார் இருக்கின்றனர். அவர்கள் எட்டு பத்து வரதட்சினை ஐம்பதாயிரம் சீர் என்று கல்யாணம் எதிர்பார்க்கிறவர்கள்.

     நினைக்கையில் அவளுக்குச் சிரிப்பு வருகிறது. “எதற்கு இப்ப சிரிக்கறே?” என்று கேட்கிறாள் ஞானம். “ஒன்றுமில்லை. உங்களுடைய எண்ணம், எனக்குச் சிரிப்பை மூட்டுகிறது. இவனுக்குப் பெண் கொடுப்பவர்கள் ஐம்பதாயிரம் செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும்.”

     “அப்படி உன்னிடம் யார் சொன்னார்கள்? ஜானகி சொன்னாளா?”

     “யார் சொல்லவேணும்? எனக்கு இவனுடைய மனிதர்களை எல்லாம் தெரியும் அக்கா. இந்த உலகில் எனக்கும் ஒரு மதிப்பு என்று என்னை ஏற்றி வைத்தவர் நீங்கள். நேற்று ராஜா வந்தது என்னுடன் பேசியது, என்னைக் கட்சியில் சேரவேண்டும் என்று அழைத்தது அதையெல்லாம் நினைக்க நினைக்க, இரவு முழுவதும் உறக்கம் வராத நெகிழ்ச்சியிலும் பரவசத்திலும் சங்கடப்பட்டேன். எனக்கு இவ்வளவு பெருமையைக் கொடுத்த நீங்கள் இப்போது உலகத்து மூடத் தாய்யமாரைப் போல் நினைப்பது கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாதது. அதனால்தான் தோல்வியடைந்தீர்கள்.”

     ஞானம் தோல்வியடைந்ததாகக் கருதவில்லை. அவளுடைய தீவிரமான சிந்தனையும் மாறவில்லை.

     “உன் எதிர்காலத்தைக் குறித்து நீ ஒரு தீர்மானமும் இல்லாமலிருக்கிறாய் என்று எனக்குப் புரிகிறது. உன்னால் ஒருவிதமான முடிவுக்கும் வரமுடியாது என்று எனக்குத் தெரியும்.”

     “அப்படி ஒன்றுமில்லை. என்னுடைய வாழ்க்கை எந்த வகையிலேனும் இந்த சமுதாயத்தின் கூனலை நிமிர்த்தவோ, வறுமையைத் தொலைக்கவோ பயன்படவேண்டும்,” என்று கூறும்போது அவளுக்கு மதுரத்தின் நினைவு பொங்கி வருகிறது. “இந்த நவீனயுகத்தில் பெண்கள் முன்னேற்றம், சமுதாய நலன் என்று பொது வாழ்வில் ஈடுபட்ட ஒருத்தி, ஒரு அபலைப் பெண், தன் கணவனை இழந்து நான்கு குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கையில் ஒரு வருஷம் வீட்டுக்குள் சமையல் வேலை செய்யக்கூட வரக்கூடாது, முடியை எடுத்துவிட்டு வா என்று சொல்லும் இடத்துக்குப் பிழைக்கப் போ... என்று சொன்னால் எப்படி இருக்கும்? மதுரத்தை நான் பார்த்தேன் அக்கா. எனக்கு நெஞ்சு கொதிக்கிறது. இப்போதே படிப்பை விட்டுவிட்டு ஏதேனும் வேலை தேடிக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.”

     “உன்னால் தனிப்பட்ட முறையில் ஒன்றுமே செய்ய முடியாது. மேல்நாட்டில் எல்லாம் பெண்கள் எப்படித் தனித்துச் சுதந்திரமாக எல்லாத் துறைகளிலும் வருகிறார்கள் என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். நேற்றுக் கூட ‘மார்க்ரட் போர்க் வொயிட்’டின் வாழ்க்கையைப் படித்துக் கொண்டிருந்தேன். அவள் இரண்டு முறைகள் கல்யாணம் செய்து கொண்டு விலக்குப் பெறுகிறாள் . ஆனால் என்ன? உலகப் போர்களை எல்லாம் பார்த்தவள். உலகத் தலைவர்களை எல்லாம் தன் புகைப்படத் தொழிலில் சந்தித்துப் பேசுகிறாள். சாகசமான வாழ்க்கை. அப்படி நம்மிடையே, மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து எழும்பும் பெண்மணி, பொது வாழ்வில் வெற்றி பெற முடிவதில்லை. இங்கே ஒரு பெண்ணின் திறமை, அறிவு, செயல்திறன் எல்லாவற்றையும் பாழாக்க ஒரு சிறு அவதூறு போதும். ஒன்றுமில்லை. உன் கடந்த காலக் கரும்புள்ளி, எந்த சமயத்திலும் விசுவரூபம் எடுத்து உன் பொது வாழ்வைப் பாழாக்க முடியும். அவதூறு, எதிர்ப்புக்களை எதிர்த்து எழும்ப முடியாத நொய்ம்மை உன்னை விட்டுப் போய் விட்டதாக நான் கருதவில்லை. அதுசரி, தனராஜை விட்டு நீ ஏன் வந்தாய்?”

     ஆழ்குளத்தில் கைவிட்டு அடியில் கிடக்கும் வேரை எடுத்துப் போடுகிறாள் ஞானம்.

     “ஏன் வந்தேன்? ஏன்? ... அம்மணியம்மாதான் குடும்பத்தில் போய்ச் சேர்ந்துகொள். இது வேண்டாம் என்றாள்.” எத்தனை ஆண்டுகளாகவோ வளர்த்த பந்தங்களை உதறிக் கொண்டு பத்து நாட்கள் ஆசைகாட்டியவனுடன் சென்றவள், ஒரே வார்த்தையில் எப்படி வந்தாள்?

     ஏதோ பூனை துரத்திக் கொண்டு வந்தாற்போல் ஓடி வந்தாள். பிறகு எத்தனையோ துன்பங்கள் நேர்ந்த போதெல்லாம்கூட, அங்கிருந்து ஓடி வந்தது தவறு என்றோ, திரும்ப ஓடிவிடலாம் என்றோ தோன்றவில்லை. அம்மணி அப்படி என்ன பயங்கர உண்மையைச் சொல்லி வைத்தாள்? அவர்களெல்லாரும் கீழ்த்தரமான ஒழுக்கம் உடையவர்கள் என்றாள். ஒழுங்கங்கெட்டு வாழ வேண்டிவரும் என்ற ஊகத்தையே (உண்மை என்று நம்பி) கேட்டு அஞ்சி ஓடி வந்தாள்.

     தன்னுடைய கற்பு என்ற ஒன்றுக்கு ஆபத்து நேராது என்ற பத்திரமான இடத்தை நாடி அவள் வந்திருக்கிறாள். “அப்போதைய நிலை வேறு அக்கா. இப்போது எனக்குத் தன்னம்பிக்கை இருக்கிறது.”

     “என்ன தன்னம்பிக்கை? உன் கல்வி, தானாக நின்று சம்பாதிக்க முடியும் என்ற பிறரை எதிர்பாராத தன்மை இதெல்லாம் வேறு. எதையேனும் ஒன்றைப் பற்றிக் கொள்ளாமல் சில சந்தர்ப்பங்களை வெல்ல முடியாது. இந்த தசை உடலின் இயல்பு வேட்கை. அது எனக்குக் கிடையவே கிடையாது என்று சொல்லி விட்டுத் திரை மறைவில் அதற்கு இரையாகும் சந்தர்ப்பங்களை வெல்ல முடியாமல் தோற்றுப் போவது சரியல்ல. கானகத்திலிருந்த முனிவர்களே இதற்குத் தப்பிவிடவில்லை. எனவே, நீ உன் கடந்த காலப் புள்ளியை அழித்து விட்டதாகக் கருதும் பட்சத்தில் ஏன் மண வாழ்வில் ஈடுபடக்கூடாது? இந்த நாளில் நீ சங்கம் சேர்த்துக் கொண்டு சேரிக் குழந்தைகளை ஒருநாள் குளிப்பாட்டி, பால் வழங்கிச் செய்யும் சேவையைவிட, ஒரு குடும்பத்தில் ஒத்து வாழ்ந்து உன் அறிவையும் திறனையும் ஒரு நல்ல இல்லத்துக்குப் பயன்படுத்தி அதனால் சமுதாய நல மேம்பாடு காண்பது மேல் என்பது என் கருத்து. இந்த நிலையில் நீ கிராமத்துக்குச் சென்று மாமியார் மருமகள் சண்டையைத் தீர்க்கவோ, குடும்பக் கட்டுப்பாட்டு யோசனை சொல்லவோ போனால் ஒருத்தி மதிக்கமாட்டாள். கிராம சேவிகாக்களைப் பற்றிக் கத்தை கத்தையாக எழுதலாம். நீ இருந்த இல்லத்தில் வந்து அறவழியைப் பற்றிப் பேச எனக்குக் கூந்தல் நரைக்க வேண்டியிருந்தது. இவ, மிஸ்ஸா, மிஸஸ்ஸா? என்றுதான் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். மிஸ் என்றால் அவள் மீது எப்போது அவதூறை வீசி எறியலாம் என்று காத்திருக்கிறது நம் சமுதாயம். காரணம் என்னவெனில் ஒழுக்க அளவு கோலை அவ்வளவு கூர்மையாக, துல்லியமாக வைத்திருக்கிறது. மிஸ் என்பதே ஒரு கிளாமர். (கிளாமர் என்றால் யார் வேண்டுமானாலும் எந்த எண்ணத்தோடு வேண்டு மானாலும் உன்னை அணுகி என்ன வேண்டுமானாலும் பேசச் சுதந்திரம் நீ கொடுப்பதாகப் பொருள்) நீ அழகாக இருக்கிறாய். மேடையேறிப் பேசினால் நிறையக் கூட்டம் வரும் என்ற நோக்கு உனக்கு இசைவாகப்படுகிறதா?” என்று கேட்கிறாள் ஞானம்.

     மைத்ரேயிக்கு அவள் எண்ணங்கள் ஒத்துப் போகக் கூடியவையாக இல்லை. மாம்பிஞ்சின் துவர்ப்பைப் போல் அவள் கருத்துக்கு ஒவ்வாததாகப் படுகிறது. ஞானம் ஏன் இப்படி எண்ணுகிறாள்?

     ஞானத்தின் அந்தரங்க வாழ்விலும் பலவீனம் ஏற்பட்டு மேடிட்டிருக்க வேண்டும். அதனாலேயே அவளுடைய கம்பீரம் உள்ளுரச் சிதைந்து போயிருக்கிறது; அதனாலேயே நேருக்கு நேர் என்ற எதிர்ப்புக் களத்தை நோக்கத் துணிவின்றி விலகிக் கொள்கிறாள்.

     முரளியைப் போன்ற ஒருவனை மணந்துகொண்டு ஒரு வீட்டை நிர்வாகம் செய்வது குறித்து மைத்ரேயி கற்பனை செய்து பார்க்கிறாள்.

     அந்தக் கணவனுடன் அந்தரங்கமாக இருக்கும் நேரங்களிலெல்லாம் அவளுக்கு அதுபோல் இன்னொருவனுடன் இருந்த நினைவு வரும் என்ற எண்ணமே அருவருப்பாக இருக்கிறது.

     “நீயே யோசித்துப்பார் மைத்ரேயி, உன்னால் நர்மதா, ஆயிஷா போல் தொண்டு செய்ய முடியுமா என்று. அவர்களெல்லாம் அவர்களுடைய தனிவாழ்க்கையைப் பற்றிப் பிறர் என்ன நினைப்பார்கள் என்று கூச மாட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே சமுதாயத்தின் அதிர்ஷ்டமற்ற அங்கங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று பொதுத் தொண்டில் ஈடுபடவில்லை. பொதுத் தொண்டிலோ அரசியலிலோ ஈடுபடுபவர்கள் அப்பழுக்கில்லாத அந்தரங்க சுத்தம் உடையவர்களாய், இரட்டை வாழ்க்கை நடத்த இயலாதவர்களாய் இருக்க வேண்டும். அப்படி இல்லாததாலேயே இன்று பொது வாழ்வும் அரசியலும் கறை பிடித்துக் கிடக்கிறது...”

     ஞானம் பேசுவது மைத்ரேயிக்கு விசித்திரமாகவே இருக்கிறது.

     இரட்டை வாழ்க்கை நடத்த இயலாதவள் பொது வாழ்வுக்கே போகக் கூடாது என்று ஞானம் கருதுகிறாளா?

     ஆனால் ஞானத்தை, பெரிதும் அவள் மதிக்கும் அந்தத் தாயை அவளால் கருத்து வேற்றுமை கொண்டு எதிராளியாக்கிக் கொள்ள முடியாது.

     “உங்கள் யோசனையை நான் மறுக்கவில்லை அக்கா. ஆனால் கல்யாணமென்று வேறு யாரையும் ஒப்புக்கொள்ளுவது எனக்கு ஒப்புக் கொள்ளக் கூடியதாக இப்போதைக்குப் படவில்லை..”

     “உன் மனசுக்குக் கஷ்டம் கொடுக்கக்கூடிய தொன்றையும் நான் ஒரு நாளும் வற்புறுத்த மாட்டேன். நீ சுதந்திரமாகச் சிந்தனை செய்து முடிவுக்கு வரவேண்டும். உனக்கு யோசனைதான் நான் சொல்கிறேன்...”

     மறுநாள் காலையில் ஞானம் அலுவலகத்துக்குச் சென்ற பின்னரே மைத்ரேயி மெதுவாக வெளிக் கிளம்புகிறாள். ராம சேஷன் வீட்டில்தான் சாவி கொடுப்பது வழக்கம். வாயிலில் கால் வைக்கும் போதே தயக்கமாக இருக்கிறது. முன்னறைச் சாய்வு நாற்காலியில் இருந்த முரளி அவளைக் கண்டதும் எழுந்திருக்கிறான்.

     “...ஒன்றுமில்லை, சாவி...”

     அவள் வாயிலிலேயே நிற்கிறாள். அவன் வெளியே வந்து சாவியை வாங்கிக் கொள்ளுமுன் மிக மெதுவான குரலில், “...உங்களோடு கொஞ்சம் பேச விரும்புகிறேன். எப்போது செளகரியப்படும்?” என்று கேட்கிறான்.

     ஓர் கணம் வெளிக்குப் புலப்படாத பரபரப்பு அவளை ஆட்கொள்கிறது.

     “என்னோடா?”

     “ஆமாம். உங்களுக்கு இன்று மாலையில் வசதி இருக்குமானால் சொல்லுங்கள்...”

     எங்கேனும் மாலையில் சந்தித்துவிட்டு இருட்டிய பிறகு திரும்புவது அவளுக்குப் பிடிக்கவில்லை.

     “நீங்கள், இப்போதே என்னுடன் வந்து பேசலாமே? நான் லைப்ரரிக்குத்தான் போகிறேன்...”

     மூடி மறைத்த சல்லாத் துணிக்கப்பாலுள்ள வெளிச்சம் புலப்படுவது போல் அவளுக்கு அவன் எதைப் பற்றிப் பேசுவான் என்று புரிந்துகொள்ள முடிந்தது.

     “ஒரு நிமிஷம். நீங்கள் மெள்ள நடந்து கொண்டிருங்கள். நான் பஸ் ஸ்டாப்புக்கு வந்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறான்.

     மைத்ரேயியின் நடை மிக மெதுவாக நீண்டு செல்கிறது. பெரிய சாலையில் பஸ் நிறுத்தத்துக்குச் செல்லும் வழியில் மைதானத்தைக் கடந்து அவள் சாலையை எட்டுமுன் முரளி அவளை நெருங்கி வருகிறான்.

     அவன் புன்னகை செய்கிறான். அவளும் சிரிக்கிறாள். அவன் சிரிப்பு மிக இயல்பாக இருக்கிறது. செயற்கையில்லை.

     அவளுடன் கல்லூரியில் படித்த ருக்மணியின் தந்தை ஒரு இராணுவ டாக்டர். அவர்கள் எழும்பூரில் ஓர் அழகிய வீட்டில் இருந்தார்கள். ருக்மணி பார்வையை இழந்த பெண். பிரெய்ல் எழுத்துக்களின் உதவியாலேயே அவள் படித்தாள். அவள் கல்லூரிக்கு வராத நாட்களில் மைத்ரேயி தவறாமல் சென்று பாடங்களைக் கூறி விளக்குவாள்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247