10

     நகரில் காங்கிரஸ் கண்காட்சியும் கலை விழாக்களுமாக மக்களை விடுமுறைக் காட்சிகளுக்குக் கவர்ந்திழுக்கும் டிசம்பர் மாசம். அந்த இல்லத்தின் ஆண்டுவிழா. அதோடு, அந்த இல்லத்தில் செய்த கைவினைப் பொருள்களை எல்லாம் கொண்டு வைத்து, சமுதாயத்தின் ஒரு பெரிய சாபக்கேடு போன்ற பிரச்னையை அவர்கள் மாற்றி வைக்கச் செயல்படும் இல்ல நடவடிக்கைகளை எடுத்தியம்பும் சித்திர விளக்கங்களையும் கொண்டு அலங்கரிக்க, அவர்களுக்கென்று கண்காட்சி மைதானத்தில் ஒரு சிறு பகுதி தந்திருக்கின்றனர். ஆண்டுவிழா அவ்வாண்டு பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. மாறாக, வடநாட்டிலிருந்து வெற்றிக் கொடி பிடிக்கும் ஒரு இந்தி சினிமா நடிகர், இல்லத்துக்கு வரப் போவதாக செயற்குழுவிலுள்ள ஒரு உறுப்பினர் நர்மதா தெரிவிக்கிறாள். நர்மதா ஐக்கிய நாடுகளின் அவையில் பொறுப்பான பணியிலிருக்கும் ஒரு ஐ.ஸி.எஸ்.காரரின் புதல்வி. அவள் நகரின் பெருஞ்செல்வர்கள், சினிமா நடிக நடிகையர் எல்லாருடனும் தொடர்புகொண்டு, நன்கொடை வேண்டி அழைத்து வருவாள். அதற்காகக் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்வதற்கு முன் நிற்பாள்.

     காலை பத்துமணியளவில்தான் அவருக்கு வருவதற்கு நேரம் இருக்கிறதென்றும், அவர் வந்து இல்லத்தைப் பார்வையிட்டு, சிற்றுண்டியருந்திச் செல்வாரென்றும், அப்படிச் செல்கையில் ஒரு பெரிய தொகையை நன்கொடையாக அறிவிப்பார் என்றும் பெண்கள் பேசிக் கொண்டிருக்கையில் மைத்ரேயி கண்காட்சிக்கான அட்டைச் சித்திரங்களைத் தயாரிப்பதிலும் எழுதுவதிலும் இரவு பகலாக ஒன்றியிருக்கிறாள். அதனால் சினிமா நடிகரைப் பற்றி அவள் சிந்திக்கவில்லை.

     பிரார்த்தனைக் கூடத்தில் பங்கஜமும் புவனாவும் பெரியநாயகியும் அழகாக கோலங்களிடுகின்றனர். இல்லத்து வாயிலில் காகிதத் தோரணங்களும் தென்னங்குறுத்துத் தோரணங்களும் கட்டித் தொங்க விடுகின்றனர். சித்திரக் கோலங்களில், நடிக வள்ளலே வருக! வருக! என்று பங்கஜம் எழுதியிருப்பதைக் கண்ட மிஸஸ் சிவநேசன் மகிழ்ந்து, இந்தியிலும் ‘ஸுஸ்வாகதம்’ என்று எழுதச் சொல்லிக் கொடுக்கிறாள்.

     பங்கஜத்துக்கு அவர் தன் பாட்டைக் கேட்க ஒரு சந்தர்ப்பம் அளிக்க மாட்டார்களா என்ற ஆவல். தன் குரலைக் கேட்டு அந்த நடிகர் பரவசமடைவது போலும், அப்படியே அவள் அந்த இல்லத்து வாழ்வுக்கு முழுக்குப் போட்டுவிட்டு பம்பாய் செல்வது போலும் பின்னணி உலகத் தாரகையாய், லதா மங்கேஷ்கருக்கு வாரிசாக உலகெங்கும் தன் குரல் ஒலிப்பது போலும் அவள் பொற்கனவுகளில் மிதக்கிறாள்.

     இல்லத்திலிருந்து பிரார்த்தனைக் கூடத்துக்கு வரும் வெட்ட வெளியில் ஒரு சிறுமேடை அமைத்து, அதில் அவனை வரவேற்க ஏற்பாடு செய்கின்றனர். அந்த வெளி முழுவதும் துப்புரவாகப் பெருக்கிச் சுத்தம் செய்கின்றனர். வரும் நடையெல்லாம் தோரணங்கள். மாடியிலுள்ள அறையில் பெரிய மேசையிலமர்ந்து குழுவினருடன் தேநீர அருந்துவான். பிஸ்கோத்து, வறுத்த முந்திரிப் பருப்பு, தோல் ஒட்டி நிற்காத குடகாரஞ்சு, ஆப்பிள் முதலிய பண்டங்களை வாங்கி அங்கேயே அலமாரியில் வைத்திருக்கிறார்கள்.

     ரூப்குமாரைப் பார்க்கப்போகும் கிளர்ச்சியில் ஒவ்வொருத்தியும் அதையே பற்றிப் பேசுவதை மைத்ரேயி செவியில் போட்டுக் கொள்ளவில்லை.

     கண்காட்சி வேலைகளை முடித்துவிட்டு, அவள் பள்ளிப் பரீட்சைக்காக மும்முரமாகப் படிக்கிறாள்.

     முதல் நாள் மாலை, அவள் கூடத்து மூலையில் அமர்ந்து ஒரு கணக்கைப் போட்டுப் போட்டு அடித்துக் கொண்டிருக்கிறாள். கூடம் முழுவதும் துணி, நூல் துண்டுகளும் சாயங்களும் பசையும், பெண்களின் அரட்டையுமாக இரைபடுகிறது. மறுநாள் அந்த நடிகருக்குப் போடப் பெரிய மாலை ஒன்று தயாரிக்கின்றனர். அது பூமாலையுமல்ல; காகித மாலையுமல்ல, நூல்களைப் பூக்கள் போல் கத்திரித்தும் சாயமேற்றியும் மிக நேர்த்தியாக உருவாக்கிய மாலை. அத்தகைய மாலை அந்த இல்லத்தின் சிறப்பான கைவினைப் பொருள். அந்த மாலையை அந்நிய நாட்டுச் செலாவணிப் பொருளாக்கலாம் என்று நர்மதா சொல்வது வழக்கம். அப்போது அந்த இல்லமே பெரிய கைத்தொழிற் கூடமாக மாறிவிடுமாம். அந்த மாலையை முடித்து, அவர்கள் அழகு பார்க்கின்றனர்.

     யாரும் எதிர்பாராவிதமாக, பங்கஜம் அதைத் தன் கழுத்தில் போட்டுக் கொண்டு ஆடுகிறாள்; பாடுகிறாள். வாட்ட சாட்டமான அவள் வடிவுக்கு மாலை சரியாக இருக்கிறது. சரேலென்று ரூப்குமார்போல் நடிப்பதாக ஒரு கேலி இந்தியில் பேசிக்கொண்டு, புவனாவைக் கொஞ்சி அணைத்துக் காதல் புரிகிறாள். இல்லமே கிடுகிடுக்கும்படி குபிர்ச் சிரிப்பு ஒலிக்கிறது. ராசம்மாளும் கூட நின்று பார்த்துச் சிரிக்கிறாள். தன் நடிப்பை ரசிக்கிறார்கள் என்று அவள் புரிந்து கொள்ளும்படி சிரிப்பும் கையொலிகளும் அதிகமாகவே, அவளுக்கும் வெறி தலைக்கேறுவது போல் ஆட்டவேகம் அதிகரிக்கிறது. கேலியிலிருந்து மீறி விரசத்தின் எல்லைக்குள் அவள் பேச்சும், அபிநயங்களும் வருகின்றன. சரேலென்று புவனாவை விட்டுவிட்டு, மூலையில் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கும் மைத்ரேயியிடம் வந்து குனிந்து அவளை வேகமாக எழுப்பித் தழுவி ஒரு முத்தம் வைக்கிறாள். சொல்லொணாச் சீற்றம் கொள்ளும் மைத்ரேயி, “சீ! என்ன இது? மிருகமே!” என்று தன் கழுத்தைப் பற்றிய கையைப் பிய்த்தெறிந்து தள்ளுகிறாள். மாலை எகிற, அவள் சுவரில் மோதிக்கொள்ள விழுகிறாள்.

     உடனே, சொல்லக் கூடாதென்ற வரம்புக்குள் அடைபட்டுக் கிடக்கும் கீழ்த்தரமான வசைச் சொற்கள் அனைத்தும் பொல பொலக்கின்றன.

     “யேய்! யாருடி மிருகம்? நீயா, நானா?”

     “இரு, இரு, எல்லாரிடமும் சொல்லி நான் என்ன பண்றேன் பாரு? என்னைச் சுவரில் வச்சு மோதிறியா? உன் யோக்கியதையை நாற அடிக்கிறேன்? அப்படிச் செய்யாட்டி நான் பங்கசு இல்ல! ஸிஸ்டர் வரட்டும்! எனக்குத் தெரியும் நீ யாரைக் கைக்குள்ளாற போட்டுட்டு இவ்வளவு திமிரோட நடக்கிறேன்னு...”

     மைத்ரேயி அவளுடைய பேச்சைப் பொருட்படுத்தவில்லை. அவளுக்கு வெறுப்பு கிளர்ந்து குமட்டிக் கொண்டு வருகிறது. அவர்களுக்கு எதிராக அவள் கொடி பிடிப்பாளா?... அவர்கள் சேற்றுக் குட்டையில் அழுந்தி நல்ல காற்றையும் வெளிச்சத்தையும் நுகர்ந்து அறியாதவர்கள். எனவே அந்தக் கூடத்திலிருந்தே அகன்று, உணவுகொள்ளும் தாழ்வரையில் சென்று தன் கணக்கைப் போடுகிறாள்.

     அவர்களே கத்தியும் பேசியும் ஒய்ந்து போகிறார்கள். மறுநாட் காலையில் எதை நினைக்கவும் நேரமில்லாத பரபரப்பு.

     காலை எட்டுமணிக்குள் எல்லோரும் நீராடித் தூய்மை பெற்று, கஞ்சி மடிப்புச் சீருடைச் சேலையில் வரிசையாக நிற்கிறார்கள். கைகளில் தட்டு விளக்கேந்தி அவர்கள் ரூப்குமாருக்கு வரவேற்புக் கொடுப்பதை செயற்குழுவின் உறுப்பினர்களான நர்மதா, மிஸஸ் சிவநேசன், ஆயிஷாபேகம், இந்திராகுமார் ஆகியோர் வந்து ஒத்திகை பார்த்துவிட்டுப் போகிறார்கள். காத்துக் காத்து அலுத்த பின் பதினோரு மணியளவில் படகுக் கார் வருகிறது. ரூப்குமாரின் இருமருங்கிலும் மிஸஸ் சிவநேசனும் நர்மதாவும் அணைந்தாற் போன்ற நெருக்கத்துடன் காரை விட்டிறங்கி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுக்கின்றனர். அவர்களுடைய ஒப்பனை மைத்ரேயிக்குக் கண்களைக் குத்துகின்றன. மிஸஸ் சிவநேசன் தான் ஒல்லியாக வேண்டும் என்ற முயற்சியைக் கைவிட்டாலும், முன் புறத்தையும் பின்புறத்தையும் நான்கு விரல் அளவே வரும் அகலத்துக்கு மறைக்கக் கச்சை அணிந்தாற் போல் கையில்லாத சோளி அணிந்திருக்கிறாள். நர்மதாவோ, பூரண கும்பங்கள் மேனியிலேயே தெரியும்படியான மெல்லிய துகிலணிந்திருக்கிறாள். அவள் சட்டென்று ஒரு பெண்ணிடமிருந்து தீப ஆராதியை வாங்கி அவன் முன் சுழற்றி நெற்றியில் பொட்டு வைக்கிறாள். பிறகு அநுசுயா சுருட்டை முடிப் பையன் விநோத்தைக் கூட்டிவர அவன் கைகளால் மாலை அணிவிக்க பையனை அவளே உயரத் தூக்கிக் கொள்கிறாள். புகைப்படக் கருவிகள் பளிச்சிடுகின்றன.

     ராஜாவும் லோகாவும் ஒட்டாமல் நின்று கைத்தட்ட ரூப்குமாரை உள்ளே அழைத்து வருகின்றனர். மாடியில் காப்பியருந்த பங்கஜம், தெய்வநாயகி ஆகியோர் தட்டுக்களைச் சுமந்து படிகளில் விரைகின்றனர். பிறகு பிரார்த்தனை மண்டபத்தின் முன் மேடையில் வரவேற்பு உரை நிகழ்த்துகின்றனர். பங்கஜா பாட்டுப் பாட நிற்கிறாள். அவனுக்கு நேரமில்லை. இரண்டு சொற்கள் இந்தியில் நன்றியாகக் கூறிவிட்டு, இரண்டொரு குழந்தைகளின் கன்னங்களைக் கிள்ளிவிட்டு, பெரிய கும்பிடாகப் போட்டு விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறுகையில் மீனாட்சியும் ரோஸலினும் ‘ஸ்டைலாக’ நடந்து சென்று ‘ஆட்டோகிராஃப்’ வாங்குகின்றனர்.

     அத்துடன் அமர்க்களம் முடிகிறது.

     மைத்ரேயி இப்போது யாருடனும் பேசுவதில்லை.

     அந்த ஞாயிற்றுக்கிழமை அவளுக்குப் பகல் நேரத்துக் கண்காட்சியில் உள்ள ஸ்டாலில் பணி இருக்கிறது.

     அந்த மீட்பு இல்லத்துக் கைவினைப் பொருள்களைப் பார்க்கவோ, விவரம் அறிந்து கொள்ளவோ மக்கள் வரிசை நின்று வருவதில்லை. எவரேனும் உதிரிகளாக வருகிறார்கள். “இங்கே ஒண்ணும் இல்லே...” என்று மற்றவர்களுக்கும் சொல்லி விட்டுப் போகிறார்கள், சுவாரசியமில்லாமல். லோகாவோ மற்ற உறுப்பினர்களோ, யாரையேனும் கூட்டிக் கொண்டு வந்தால்தான் கலகலப்பு. நர்மதா யாரோ சிநேகிதிகளுடன் வந்து அமர்ந்து குளிர்பானம் அருந்தி விட்டுப் போனாள். மைத்ரேயி புத்தகமும் கையுமாக ஒரு மூலையில் அமர்ந்திருக்கையில் வாயிலில் பெரிய வரிசை நீண்டு செல்கிறது. வரிசை, பெருவழித்துறைப் பகுதிக்கோ, அல்லது மின்துறைப் பகுதிக்கோ, அல்லது நெய்வேலிப் பகுதிக்கோ தான் இருக்கும். அந்தப் பகுதிகள் வெகு தொலைவாயிற்றே? அவள் வாயிலில் நின்று வேடிக்கை பார்க்கையில் நெஞ்சு நின்றுவிடும் போன்று துடிக்கிறது. விழிகள் நிலைக்கின்றன.

     சுமதி அக்கா, விச்சு, ஜக்கு; அத்திம்பேர்...

     விச்சு, அவளை, அவளைப் பார்த்துவிடுகிறான்.

     “அம்மா! மைத்தி சித்தி... சித்திம்மா?...”

     மைத்ரேயி விதிர்விதிர்ப்புடன் நகர்ந்து தலைகுனிந்து கொள்கையில், விச்சு ஓடிவந்து அவள் கையையே பற்றிக் கொண்டு குதிக்கிறான். அவள் சட்டென்று அவனை அணைத்துக் கொள்கையில் கண்ணீர் மல்குகிறது. “விடுரா, அசத்து சித்தியுமில்ல ஒண்ணுமில்ல. அவ எங்கே இருக்கா?” என்று கேட்டுவிட்டுச் சுமதி அவளைப் பாராமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவன் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு போகிறாள்.

     அத்திம்பேர் உடனே வரிசையை விட்டு விலகி, “நாளைக்கு வந்து அதைப் பாத்தாப் போச்சு. எத்தனை நாழி ‘க்யூ’ நிற்பது? வாங்க, வேற இடத்துக்குப் போகலாம்!” என்று அவர்களையும் இழுத்துக் கொண்டு செல்கிறார்.

     அவளைப் பளாரென்று மேனி வருந்த அடித்து, “ஏண்டி கழுதை, ஓடிப் போனாய்?” என்று கேட்டிருந்தால் அவளுக்கு இவ்வளவு மனம் நொந்திருக்காது. ‘அக்கா! சுமதி அக்கா? சுமதி அக்கா! உனக்குக்கூட அவள்மீது இரக்கம் இல்லையா? குழந்தை பிறந்திருந்தபோது, உன்னை உட்கார வைத்து அவள் தலையில் எண்ணெய் தேய்த்து, சிகைக்காய் தேய்த்து நீர் ஊற்றிப் பணிவிடை செய்திருக்கிறாளே! சேலை துவைத்துப் போட்டிருக்கிறாள். விச்சுவை தலைச் சிரங்கோடு எத்தனை நாட்கள் ஆஸ்பத்திரிக்குச் சுமந்து சென்றிருக்கிறாள்! குழந்தை காட்டிய அன்பைக் கூட மறுத்து இழுத்துப் போக அவ்வளவு பெரிய குற்றமா செய்திருக்கிறாள்? பதினாறு வருஷங்கள் உங்களோடு தொடர்பு கொண்டிருந்த பாசம் இப்படித் துண்டிக்கப்படுமா? நெஞ்சம் உள்ளுற நெக்குவிட்டுக் கதறுகிறது.

     மனிதன் தன் இயல்பான உறவு வட்டத்தைவிட்டு அகன்று அகன்று வந்தாலும் அந்த உறவு நெருக்கத்துக்குக் கவர்ச்சி அதிகம்; அதில் இரத்தக் கலப்பு இருக்கிறது. தாய், தந்தை, உடன்பிறந்தவர், பிறகு அண்டை அயலார், உடன் படித்து விளையாடியவர், ஒரு ஊர்க்காரர், ஒரு மொழி பேசுபவர் என்று வட்டங்கள் அகன்று சென்றாலும், மனிதன் ஏதேனும் ஒரு தொடர்பு வட்டத்து உறவு கண்டாலும் ஒட்டிக் கொள்ளும் இயல்பு கொண்டவன். அவள் இப்போது எந்த உறவு வட்டத்துக்கும் வராமல் தனித்து நிற்கிறாள், அன்பும் இரக்கமும் அதுதாபமும் வண்மையும் கூடிய இடத்தில் அவள் அடி வைத்திருக்கவில்லை. அறியாமை, வறுமையின் துயரப் பண்புகள், அதிகமான செல்வத்தில் வளரும் சுயநல ஆசைகள் இவற்றையே அவள் பார்க்கிறாள். மனித உறவுகள் இத்தகைய பண்புகளிடையே நிலைப்பதில்லை.

     அவள் அண்டி இருக்கும் விடுதி, சமுதாய வாழ்வின் ஒழுங்கை மீறிச் சந்தர்ப்ப வசத்தாலோ, வேறு வகையாலோ இழிந்த பெண்களின் மறுவாழ்வுக்கு மருந்திட்டு நலஞ்செய்யும் அடைக்கல விடுதிதான்.

     ஆனால், மேலே பார்க்கக் கவர்ச்சியாக இருக்கும் கனி, தோல் நீக்கியதும் அழுகல் வாசனையை வெளியாக்குவது போன்ற அநுபவத்தையே அவள் நுகர்ந்திருக்கிறாள். அந்த விடுதியின் உதவி நிதிக்காக ‘பால் ரூம் டான்ஸ்’ ஏற்பாடு செய்கிறார்கள். ஆயிஷா, நர்மதா, மிஸஸ் சிவநேசன் எல்லோரும் அந்த நடனம் ஆடுபவர்கள் என்று அவள் அறிந்திருக்கிறாள். அதில் கலை இருக்குமோ, என்னவோ. ஆண் பெண் இருபாலரும் மகிழ்ந்து கேளிக்கை அநுபவிக்க வகை செய்யும் அந்த மேநாட்டு முறை நடனம், இந்த விடுதியின் நன்னோக்கத்துக்கு ஒத்ததாக இருக்க முடியுமா என்று மைத்ரேயி நினைத்துப் பார்த்திருக்கிறாள். ஒழுக்கம் என்பது என்ன? அது எந்த எல்லை வரையிலும் இருபாலருக்கும் சில சுதந்திரங்களை அநுமதிக்கிறது என்பதை அவள் சிந்தனை செய்து பார்க்கிறாள். செயற்குழுவினர் இல்லத்தில் கூடும் நாட்களில் புகழ்பெற்ற ஒட்டலில் இருந்து காப்பி, சிற்றுண்டி வருவதை அவள் அறிந்திருக்கிறாள். அவர்கள் சமுதாயத்துக்குச் சேவை செய்கிறார்கள். ஆடம்பரமாக உடுத்தி, அழகாகச் சிரித்து, ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டு உண்ணுகின்றனர்; அங்குமிங்கும் காரில் செல்கின்றனர். அவர்களுடைய நோக்கங்கள், கவலைகளெல்லாம் செல்வாக்கு மிகுந்தவர்கள், சினிமா நடிகர்கள், அரசியலில் முன் நிற்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கி உறவாடுவதைப் பற்றியே இருக்கின்றன.

     அந்த இல்லத்தில் உண்மையில் அநாதைக் குழந்தைகளை அதுசுயா, புவனா போன்ற ஏழைப் பெண்கள்தாம் வளர்க்கின்றனர். கூலிக்காகவும் வாழ்வுக்காகவும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கி வைக்கும் கட்டாயத்துடன் யாரோ பெற்று, வேண்டாம் என்று போட்டு விட்டுப் போன குழந்தைகளை உருவாக்குகின்றனர். இந்தக் குழந்தைகளில் எவரேனும் சிக்கலில்லா மனப்பாங்குடன், தாய் தந்தை அரவணைப்பைப் பெற்றுப் புகழ் பெறும் சிறப்போடு வளருவார்களா?

     ஏழைகளும் அபலைகளுமான பெண்களை வைத்துக் கொண்டு, ஒழுங்கீனமாக வாழ விரும்பும் ஆண்களுடைய ஒத்துழைப்புடன் யாரோ வியாபாரம் செய்தால் அதற்கு அந்த அபலைப் பெண்கள் மட்டுமா குற்றவாளிகள்? வாடிக்கையாளரும் வாடிக்கை இல்லாதவரும் உற்சாகம் நல்கித் தானே பெண்கள் சீரழிந்திருக்கிறார்கள்? அந்தக் குட்டையிலிருந்து மீட்டுவந்து, இங்கே எந்த எதிர்கால வண்மையைக் காட்டி இந்தக் குட்டைக்குள் இவர்களை வைத்திருக்கிறார்கள்? நல்ல வளமும் அழகுமுடைய பெண் ஒருத்தி மனம் விரும்பிக் காதல் கொண்டு ஒருவனைக் கைப்பிடித்திருந்தும் யானை விழுவதற்காகக் கருப்பங் கழிகளை நட்டு வைத்த பள்ளத்தைப்போல் அந்தத் திருமண உறவு முறிந்து போவது நிகழ்கிறது. ஏற்கெனவே தூய்மையில்லாத ஒருத்தியை எவன் வந்து கைபிடித்து, உயரத்துக்கி நல்வாழ்வு கொடுக்கப் போகிறான். அன்றி, இவர்கள் தராசுத்தட்டை ஈடு செய்யத் தங்கள் தங்கள் பங்குக்குப் பத்தாயிரம் பதினைந்தாயிரம் கட்டிக் கொடுத்து இந்த அபலைப் பெண்களுக்கு வாழ்வை வாங்கிக் கொடுக்கப் போகிறார்களா?

     அக்காவின் சுடு சொற்கள், இப்போது நிலாவில் ஒளிர்ந்த சொற்களாகத் தோன்றுகின்றன. அம்மா என்ற ஒருத்தியின் நிலையில் அவள்தான் பால் புகட்டிப் பாராட்டிச் சீராட்டி வளர்த்திருக்கிறாள். அந்த அக்கா அன்று வந்திருக்கவில்லை. அத்தனை நாட்கள் சென்றபின் கருவுற்றிருந்தது உண்மையானால் அக்காவுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்குமே?...

     குழந்தை...

     விடுதியில் தொட்டில் தொட்டிலாக இருக்கும் குழந்தைகளைக் கண்டாலே அவளுக்கு வெறுப்பு. என்றேனும் அவளுக்குச் சில மணி நேரங்களுக்குக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணியை அநுசுயா கொடுப்பதுண்டு. அப்போது அந்தக் குழந்தைகளைத் தொட்டுத் துணி மாற்றக் கூட அவள் கூசியிருக்கிறாள். ஆனால் அக்காவுக்குப் பிறந்திருக்கும் குழந்தையை நினைத்தால் அவளுக்குத் தாபம் மேலிடுகிறது.

     அன்றிரவு அவளுக்கு இரவில் படுக்கை கொள்ளவில்லை, உறக்கம் என்ன முயன்றும் வரவில்லை. ஒரு அறியாத பெண், சொல்லப் போனால் இயல்பூக்கக் கிளர்ச்சியில்தான் தன்னை இழந்தாள். அதற்கு இத்தகைய தண்டனை மிகமிகக் கொடிதென்று தன்மீதே கழுவிரக்கம் கொண்டு கண்ணீர் வடிக்கிறாள். சிறிது நேரம் அழுத பிறகு தன் மீதே அவளுக்கு வெறுப்பு மேலிடுகிறது. இல்லத்துக்கு அவள் எதற்காக வந்தாள்? படிப்புக்கு ஓர் சந்தர்ப்பத்தை நாடி. அந்த சந்தர்ப்பம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது. அவளுடைய இலட்சியம் தொலைவில் தெரியும் விளக்காக இருக்கிறது. அந்த விளக்கை அவள் பெற்றுக் கையிலேந்தும் வரையிலும் இருட்டில் இடறி விழாமலும் குண்டு குழிகளைக் கண்டு சோராமலும் நிதானமாக ஒரே குறியாக அவள் நடக்கத்தான் வேண்டும். கல்வி கற்க வேண்டும், கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற தன்னுடைய இலட்சியம் எங்கிருந்து பிறந்தது என்று தன்னையே ஆராய்ந்து கொள்கையில் சுயநம்பிக்கையுடன் தன் கால்களை ஊன்றியே எழும்பிப் பிழைக்க வேண்டும் என்ற ஆதாரத்திலிருந்து மட்டும் அது பிறக்கவில்லை என்று தெளிகிறாள். கண்ணபிரானின் வீட்டில் அடிவைத்து, அந்தப் பத்திரிகைக் குவியல்களையும், அவர்கள் பேச்சையும், குழந்தையின் மழலை ஈறாக அவர்கள் தெளித்த கருத்துக்களையும் அவள் கண்டு கேட்டு உணர்ந்த பிறகுதான் அவளுக்கு உண்மை தெளியும் ஆர்வம் வளர்ந்தது.

     பர்வதம் பிரசவித்துக் குழந்தை இறந்துவிட்டது. அவள் அதற்குப் பிறகு ஒரு மாசமே அங்கிருந்தாள். அவளுடைய ஒன்றுவிட்ட அத்தை என்று ஒரு அம்மாள் அவளை அழைத்து சென்று விட்டாள். அவள் சென்ற பிறகு அந்த அறையில் அவள் தனியாகவே படுத்திருக்கிறாள். முகம் எரியக் கண்ணீர் விட்டவள் குளியலறைப் பக்கம் இருட்டிலே சென்று முகததைக் கழுவிக் கொண்டு படுக்கவரும்போது, தன் தலையணையில் யாரோ படுத்திருப்பது கண்டு திடுக்கிட்டாற் போல் விழிக்கிறாள்.

     படுத்திருப்பவள் யாரோ? “யாரடி என் படுக்கையில் படுத்திருக்கிறாய்?” என்று அதட்ட அஞ்சி நிற்கிறாள். எவளோ வேண்டுமென்று செய்த செயல் இது. எனவே, தனக்கு ஒரு போர்வையும் தலையணையும் வேறு எடுத்துக் கொண்டு வந்து படுக்கலாம் என்றெண்ணி மைத்ரேயி கூடத்துக்கு வருகிறாள். யார் அங்கே வந்து படுத்திருக்கிறாளோ, அவளுடைய போர்வை தலையணை இருக்குமே?

     அவள் அரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு பார்க்கையில் யார் கையிலோ கால் பட்டுவிடுகிறது.

     மீனாட்சி: “பாதி ராத்திரிலே என்னடி தேடுறே?...”

     “ஒண்ணுமில்லே... ஒரு தலையணை போர்வை... என் படுக்கையிலே யாரோ வந்து படுத்திருக்கிறா...”

     அவள் மறுமொழியேதும் கூறவில்லை. திரும்பிப் படுக்கிறாள். தலையணை போர்வை எதுவும் கிடைக்கவில்லை. மார்கழி மாதமாதலால் சில்லென்று இருக்கிறது. ராசம்மா சமையற்கட்டு வாயிற்படிக்கு நேராகக் குறட்டை விட்டுத் தூங்குகிறாள்.

     மைத்ரேயி அறைக்கு வந்து மெள்ள அந்தத் தலையணையை ஒருபுறம் இழுத்துக்கொண்டு நெருங்கிப் படுக்க முயலுகிறாள். அவள் அப்படி இழுக்கு முன் விருட்டென்று எழுந்து உட்காரும் பங்கஜம் நாவில் நரம்பின்றி வசை பாடுகிறாள்.

     மைத்ரேயி வாயடைத்துப் போகிறாள்.

     “என்ன பங்கஜா, தூக்கக் கலக்கமா? ரொம்பப் பேசாதே. என் படுக்கையில் வந்து படுத்திட்டுப் பேசறே?”

     “மூடுடி வாயை, கேடு கெட்டவளே! உன் யோக்கியதை தெரியாதா எங்களுக்கு? யாருடீ தூக்கத்தில் பேசுறவ, தூக்கமாம்!” என்று கீழ்த்தரமான சொற்களைக் கொட்டுகிறாள் பங்கஜம்.

     மைத்ரேயி அத்தகைய சொற்களை அதற்குமுன் கேட்டதில்லை. இனிமையாகக் குரலெடுத்துப் பாடும் பங்கஜமா இப்படி வெறி கொண்டு வசைபாடுகிறாள். ராசம்மா எழுந்து வருகிறாள் இந்த ரகளையில்,

     “என்ன ஆச்சு இப்ப?...”

     மைத்ரேயி வாய் திறக்குமுன் பங்கஜம் அழுகுரலில் மைத்ரேயி அவளை அவள் படுக்கையிலிருந்து இங்கே இழுத்து வந்ததாகக் கூறும்போது அவள் அதிர்ந்து நிற்கிறாள்.

     “இல்லே ராசம்மா, நான் எதற்காக அப்படிச் செய்யப் போகிறேன்?...” என்று உண்மையைக் கூறினாலும் அதை மறுத்துப் பொய்யை மெய்போல் சாதித்துக் கொண்டு அழுகுரலில் ஊளையிடுகிறாள் பங்கஜம்.

     “பாதி ராவிலே சத்தம் போடாதே. இப்ப உன் இடத்தில் போய்ப்படு...” என்று சமாதானம் கூறி அவளை அனுப்பி விட்டு ராசம்மா தன் படுக்கையை மைத்ரேயியிடம் கொண்டு வந்து போட்டுக் கொள்கிறாள். அன்றிரவு முழுவதும் மைத்ரேயி உறங்காமல் தன் தலைவிதியை நொந்து கண்ணீர் வடிக்கிறாள்.